அத்தியாயம் 7:
“பெரியப்பா இப்போ நாம அங்கு போயே ஆகணுமா?” சூர்யாவின் குரல் சலிப்பாக வந்தது.
இரண்டு நாட்களுக்கு முன், “உன்னை மாப்பிள்ளைக்கிட்ட விட்டுவிட்டு வரேன். கிளம்பும்மா, உனக்கு என்னெல்லாம் வேண்டுமோ எடுத்துக்கோ! நாளை மறுநாள் ரயில், டிக்கெட் முன்பதிவு செய்துட்டேன்.”
தகவலாக சொல்லிய வேலு தன் அடுத்த வேலையை கவனிக்கச் சென்றுவிட்டார்.
செல்வி, தான் வேண்டுதல் வைத்த அனைத்து கடவுளுக்கும் நன்றி சொல்ல பூஜையறைக்குள் புகுந்துகொண்டார்.
“இந்த மனுஷன் மனசுல என்னயிருக்குன்னே தெரியலையே! நாலு வருஷம் சும்மா இருந்த ஆளு, இப்போ அவரே மகளை, தம்பிகிட்ட விடுறேன்னு சொல்லுறாரு. இந்த கடவுளுக்கு தான் நன்றி சொல்லனும்.”
இவ்விடயம் அறிந்ததில் இருந்து, ஆளாளுக்கு ஒவ்வொரு நிலையில் இருந்தனர்.
“அவன் அவ்வளவு வீம்பா எம்புள்ளைய விட்டுட்டு போனால் போவட்டும், என்னைவிட இளையவன்கிட்ட நான் இறங்கி போவணுமா?” என்று அனைவரின் வாயையும் அடைத்த வேலுவே நிரலியை அழைத்துச் செல்கிறேன் என்றதும் மூர்த்திக்கும் காமாட்சிக்கும் அவ்வளவு மகிழ்ச்சி.
கற்பகம் மட்டும் தனது பிடித்தமின்மையை வார்த்தையால் காட்டியிருக்க, இது கடந்த நான்கு வருடங்களாக நடப்பது தானே என்று யாரும் அவரை கண்டுகொள்ளவில்லை.
அதுவே அவருக்கு மேலும் ஆத்திரத்தை கிளப்ப, “தாலியை கட்டியதும் என்ன குறைய கண்டானோ விட்டுட்டு போயிட்டான். இத்தனை வருசத்துல ஒரு தடவை கூட எம்பேரன் இங்க வந்து அவளை எட்டி பார்க்கல, இதுலேருந்தே தெரியலையா அவனுக்கு அவளோட வாழ விருப்பமில்லைன்னு. அவன் கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்டது எம்பேத்தியை, அவ இல்லைன்னதும் இன்னொருத்திய ஏத்துக்க அவன் மனசு இடம் கொடுக்கல, அதான் தாலி கட்டுனவ நினைப்பே இல்லாமல் இருக்கான்” என்று தன் இஷ்டத்திற்கு பேச காமாட்சி சீறி விட்டார்.
“வேண்டான்னு சொல்லிட்டு ஓடிபோனவளை மனசுல நினைச்சிட்டு இருக்க அளவுக்கு எம் புள்ளை தரம் தாழ்ந்து போயிடல, அவனுக்கு என்னவோ மனசு விட்டுப்போச்சு… ஒருவேளை அவன் பொண்டாட்டியே அவனை தேடி வரணுமுன்னு நினைக்குதான்னோ என்னவோ. ஆதிக்கு நிரலித்தான். நடுவுல கலகம் பண்ண வரை போதும். நீங்க செத்த சும்மா இருங்க.”
அதன்பிறகு மூர்த்தியிடம் கூட கற்பகத்தால் பேச முடியவில்லை. எம்பேத்தி வரட்டும் இவுளுகளுக்கு இருக்கு என்று நினைத்து அமைதி காத்தார்.
நிரலி சென்னை போவதை அறிந்த சூர்யா,
“நீ போக வேண்டாம்” என்று சொல்ல நிரலிக்கு அதிர்ச்சி.
“இது அப்பா எடுத்த முடிவு சூர்யா.”
“யார் முடிவாக இருந்தாலும் நீ போக வேண்டாம். இந்த நாலு வருசமா நீ எவ்வளவு வலி தாங்கியிருக்க, உள்ளுக்குள்ள எவ்வளவு அழுது இருக்கன்னு எனக்குத்தான் தெரியும்.
உன்னை வேண்டான்னு விட்டுட்டு போனவருக்காக நீ ஏன் இவ்வளவு ஏங்குறன்னு எனக்கு தெரியல.”
“நீயும் காதலிச்சு பார் சூர்யா. வலி கூட சுகமாகத் தெரியும். காதல் சுகமான சுமை. அவஸ்தையான இன்பம்.”
“என்ன காதலோ! எனக்கு இதெல்லாம் வேண்டாம். நீ ஒருத்தி காதலிச்சிட்டு படறது பார்த்துமா நான் அந்த தப்பை செய்வேன்.”
சூர்யா இவ்வளவு வெறுப்பாக பேசவும் காரணம் உள்ளது. தாலி கட்டியதும் திரும்பியும் பாராது ஆதி சென்றுவிட்டான். ஆனால் அதன் தாக்கத்தை முழுதாக அனுபவித்தவள் நிரலி. ஊர் மக்கள் ஆதியின் செயலுக்கு கண் காது வைத்து பேசியது போதாதென்று, ஒட்டு மொத்த ஊர் வாயாக கற்பகம் ஏசிக் கொண்டே இருந்தார். ஏற்கனவே நிரலியை அவலாக மெல்லுபவர் இதுதான் சமயமென்று நான்கு வருடங்களாகக் குறைக் கூறிக்கொண்டுதான் இருந்தார். மற்றவர்களுக்காக நிரலி முகம் மாறாது காட்டிக்கொண்டாலும் அவளின் உள்ளத்து வேதனையை முழுதாக உணர்ந்தவன் சூர்யா.
அவனுக்கு ஆதியை மிகவும் பிடிக்கும். சொல்லப்போனால் சூர்யாவுக்கு ஆதி ஹீரோ வெர்ஷிப். ஆனால் அவனின் செயலை சூர்யாவால் ஏற்றுக்கொள்ளத்தான் முடியவில்லை. என்னதான் வேண்டாத விருப்பமற்ற திருமணமாக இருந்தாலும், நிரலியை விட்டுச்சென்றதை இன்றளவிலும் சூர்யாவால் ஜீரணிக்க இயலவில்லை. அதனாலே நிரலியை அவனுக்கு ஆதியிடம் அனுப்ப விருப்பமில்லை.
இருவரிடமும் மௌனம் மட்டுமே.
நிரலி உள்ளுக்குள் எப்போடா ஆதியை பார்ப்போமென்று தவித்துக் கொண்டிருக்கின்றாள். இந்த நான்கு வருடத்தில் ஆதி ஒருமுறை கூட ஊர் பக்கம் வரவில்லை.
மூர்த்தி சென்று ஒருமுறை பார்த்தபோது கூட,
“நான் இங்கையும் இருக்கக் கூடாதுன்னு நீங்க நினைச்சா வாங்க” என்ற ஆதியின் வார்த்தையால் அடுத்து யாரும் அவனிருப்பிடம் செல்லவில்லை.
அலைபேசியில் கூட பேச மறுத்துவிட்டான். மீறி யாரேனும் அழைத்தால் அவர்களை வார்த்தையால் வதைத்தான். அவனின் கோபம் நியாயமாக அனைவருக்கும் பட, ஆதி மனதளவில் இறங்கி வரும்வரை பொறுமையாக காத்திருக்கத் தொடங்கினர். இன்றுவரை காத்திருப்பு தொடர்கிறது.
ஆனால் அதியின் இந்த கோபத்திற்கு காரணம் வேலு. அவனிடம் அவருக்கான மனத்தாங்கல் ஒன்று உள்ளது. அதனால் தான் அவனது பிரிவும் கூட.
எல்லோரும் ஒரு நிலையில் இருக்க வேலு என்ன நினைப்புடன் இருந்தார் என்பது யாருமே அறிந்திடாதது. செல்வி உட்பட.
ஒருவேளை நிரலி படித்து முடிக்கட்டுமென்று இருந்திருப்பாரோ!
“இங்க பாரு அம்மு, ஆதி மாமாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுக்காக அவர் செய்தது சரின்னு எல்லோர் மாதிரி என்னால் ஏத்துக்க முடியல. அதனால விட்டுட்டு போன அவரே வரட்டும்.” உள்ளத்து உணர்வை மறைக்காது வெளிப்படுத்தினான் சூர்யா.
“சரி, கடைசி வரை வரவேயில்லைன்னா?”
நிரலியின் கேள்விக்கு என்ன பதில் கொடுப்பதென்று சூர்யாவுக்கு தெரியவில்லை.
“இங்க பாரு சூர்யா… கணவன், மனைவிக்குள்ள நீ, நான் போட்டி இருக்கக்கூடாது. பிரச்சினையை சரி செய்ய யாராவது ஒரு அடி முன்னால் எடுத்து வைக்க வேண்டும். அதை நான் எடுத்து வைப்பதில் எனக்கெந்த ஈகோவும் கிடையாது. நீ மாமா நிலையிலிருந்து கொஞ்சம் யோசி சூர்யா” என்ற தங்கையை பார்த்து,
“நீ மாமாவை விட்டு கொடுத்தால் தான் அதிசயம்” என்றான். என்ன தான் காரணங்கள் சொல்லிக்கொண்டாலும் அதனை ஏற்க ஏனோ சூர்யாவின் மனம் மறுத்தது.
“எனக்கு மாமாவோடு வாழனும் சூர்யா.”
நிரலியின் இவ்வார்த்தைக்கு பிறகு சூர்யாவால் மறுக்க முடிந்திடுமா? அடுத்து வேறெதுவும் விவாதம் செய்யாது, “நானும் உடன் வருகிறேன்” என்றதோடு இன்று வேலு மற்றும் நிரலியுடன் சென்னை வந்து ஆதியின் வீட்டு கேட்டிற்குள் நின்று கொண்டிருக்கின்றான்.
“நாம் வரோமுன்னு அவருக்கிட்ட நீங்க சொல்லலையா?” சூர்யா சற்று கோபத்தோடு வினவினான்.
“கிளம்பும்போதே நான் போன் போட்டேன் அவரு எடுக்கலை.
அதான் வந்ததும் திரும்ப போன் போட்டு சொல்லிட்டேன். வாறேன்னு சொன்னாரு.” வேலு அமைதியாக பதிலளித்தார்.
“உன்னால் நிற்க முடியலனா அங்கிருக்க கல் மேடையில் போய் உட்காரு அம்மு.” தோட்டத்தில் ஒரு மரத்திற்கு கீழிருக்கும் இருக்கையை காண்பித்தான் சூர்யா.
அப்போதுதான் வீட்டின் வெளிப்புறத் தோற்றத்தையே சரியாக கவனித்தாள் நிரலி.
வீடு குட்டி பங்களா எனும் அளவிற்கு இருந்தது. வீட்டைச் சுற்றி மதில் சுவர் இருக்க, வீட்டின் மூன்று பக்கங்களும் தோட்டம் அமைத்து அழகாக இருந்தது. தோட்டத்தின் நேர்த்தியே அது தினமும் பராமரிக்கப்படுகிறது என்று சொல்லியது.
ஆங்காங்கே பல வண்ணங்களில் மலர்கள் பூத்து ரம்மியமாக காட்சியளித்தன. வலது புறத் தோட்டத்தின் மூலையில் முல்லை செடிகளும், சந்தன மல்லி கொடியும் பந்தலிட்டு கூடாரம் போல் இருந்தது. பந்தலுக்கு கீழே இரண்டு கூடை வடிவுடைய இரண்டு இருக்கைகளும், சிறு டீபாயும் இருந்தது. மூன்று நான்கு கல் மேடைகள்.
வீட்டைச் சுற்றி தோட்டத்திற்கு நடுவில் வட்ட வடிவில் நடை பாதை.
இடது பக்க தோட்டத்தில் மதில் சுவற்றிலிருந்து இரண்டடி தள்ளி பார்ப்பதற்கு தென்னை மரம் போன்று இருக்கும் ஒரு வகை குரோட்டான்ஸ் ஒரே நேர் வரிசையில் வளர்க்கப்பட்டிருந்தது. தோட்டத்தின் மையத்தில் காப்பர் பாட் என்றழைக்கப்படும் பெருங்கொன்றை மரம் அடர்ந்து படர்ந்து விரிந்திருக்க, பச்சையே தெரியாத அளவிற்கு மஞ்சள் வர்ண மலர்கள் பூத்திருந்தது. அதற்கு கீழே ஒரு ஊஞ்சலும் இருக்க, நிரலியே அறியாது அவளின் கால்கள் அங்கு சென்றன.
அப்போதுதான் சூர்யாவும் வீட்டைச் சுற்றி ஆராய்ந்தான். அவனுக்கும் அச்சூழல் மிகவும் பிடித்திருந்தது. பல வண்ணங்களில் பூத்திருந்த பெயர் தெரியாத மலர்கள் அவனின் மனதிற்கு இதமளிக்க, சற்றே அவனின் கோபம் மட்டுபட்டது.
வீட்டின் போர்டிக்கோவிற்கு வலது புறம் ஒரு அறை பூட்டிருக்க, அதன் முன் நீண்ட இருக்கையும், இரண்டு ஒற்றை சோஃபாக்களும் இருந்தது. வெளிப்புறம் பார்த்ததுமே அது ஆதியின் அலுவலக அறையென்று தெரிந்தது.
(வீட்டை பற்றிய விளக்கம், சந்தியா ஆதியின் வீட்டை புறா கூண்டோடு ஒப்பிட்டு பேசியதால்… அந்த மாதிரி இல்லாது ஆதியின் வளமையை குறிப்பிடுவதற்காகவே!)
‘சென்னையில் இவ்வளவு பெரிய வீடு வாங்கியிருக்காருன்னா, நல்ல வருமானம் தான் போல… அதான் ஊர் பக்கம் வராமல் கெத்தா இருந்திருக்காரு.’ மனதுக்குள் சொல்லிக்கொண்டான்.
அவர்கள் வந்து அரை மணி நேரத்திற்கு மேலாகியது. வேலு சென்று தோட்டத்தில் அமர்ந்துகொண்டார்.
“வீட்டை பூட்டிட்டு போன மாதிரி, இந்த வெளி கேட்டையும் பூட்டிட்டு போயிருந்திருக்கலாம். ஆளில்லை போலன்னு சொல்லி திரும்ப ஊருக்கே கூட்டிட்டு கிளம்பியிருக்கலாம்.” சூர்யா சத்தமாக புலம்பியபடி இருக்க,
“பக்கத்து வீட்டு குட்டி பசங்க ஊஞ்சல் விளையாட வருவாங்க சோ கேட் பூட்டாமல் போயிடுவேன்” என்று அவனின் புலம்பலுக்கு பதில் சொல்லியவாறு சூர்யாவின் பின்னால் கம்பீரமாக நின்றிருந்தான் ஆதிதேவ்.
ஆதியின் கம்பீரமான குரலில் அதிர்ந்து திரும்பிய சூர்யா, ஆதியின் தோற்றத்தில் தன்னை மறந்து நின்றான்.
“அது வந்து மாமா….” என்ன சொல்வதென்று தெரியாமல் திணறிய சூர்யா, ஆதியின் கூர் பார்வையில்… “நீங்க முன்னவிட இப்போ இன்னும் மாஸ்ஸா இருக்கீங்க” என்று மனதில் நினைத்ததை தன் கட்டுப்பாடின்றி சொல்லியிருந்தான்.
“ஆஹாங்” என்று சத்தமாக சிரித்த சூர்யா, தோட்டத்திலிருந்து வந்த வேலுவுக்கு சிறு தலையசைப்பை கொடுத்துவிட்டு வீட்டைத் திறந்தான்.
நிரலியை பார்க்க அவனின் கண்கள் ஏங்கினாலும், மனம் பரபரத்தாலும் முயன்று கட்டுப்படுத்தி உள் சென்றான்.
ஆதியின் சிரிப்பு சத்தத்திலேயே அவனை திரும்பி பார்த்த நிரலிக்கு கண்கள் நிறைந்துவிட்டன. உடல் முழுக்க சிலிர்க்க அடியெடுத்து வைக்க முடியாது சிலையாகிப் போனாள். காண ஏங்கி தவித்த முகத்தை கண்டுவிட்ட மகிழ்வில் அவளின் கண்கள் உடைப்பெடுத்தன. முழுதாக அவனை ரசிப்பதற்குள் உள் சென்றிருந்தான்.
“அம்மு.”
சூர்யாவின் அழைப்பில் தன்னை சமாளித்தவள், வீட்டிற்குள் நுழைந்தாள். தன்னிச்சையாக வலது காலை எடுத்து வைத்திருந்தாள். வேலு ஹாலின் இருக்கையில் அமர்ந்திருக்க, ஆதியை காணவில்லை. அவளின் பார்வை அவளவனைத் தேடி சுழன்றது.
வீட்டின் உள்ளமைப்பும் பார்ப்பதற்கு நன்றாகவே இருந்தது.
ஆதி மேலே சென்றிருப்பானா என்று நிரலி மேலே உள்ள அறைகளை நோட்டமிட,
“எடுத்துக்கோ” என்று தனக்கு அருகில் கேட்ட அவனின் குரலில் தூக்கிவாரிப்போட்டது.
கைகளில் பழச்சாறு அடங்கிய குவளையுடன் அவளுக்கு எதிரே நின்றிருந்தான் ஆதிதேவ். கையில் சிறு நடுக்கத்துடன் கோப்பையை அவனின் கையிலிருந்து வாங்கியவள் நின்றுகொண்டே இருக்க, நிரலியின் கை பிடித்து தானமர்ந்த நீள் இருக்கையில் தனக்கு பக்கத்தில் அமர்த்தினான்.
ஆதியின் செயல்கள் வேலுவுக்கு சாதரணாமாகத்தான் இருந்தது. சூர்யாவுக்கும் நிரலிக்கும் தான் வியப்பாக இருந்தது.
“அப்புறம் சூர்யா எம்மேல உனக்கு ஏதோ கோபம் கேள்விப்பட்டேன்.”
“அதெல்லாம் ஒன்னுமில்லை மாமா.” சூர்யாவின் தடுமாற்றமான பதிலில் நிரலிக்கு சிரிப்பு வந்தது. அதனை தனக்கு அருகில் அமர்ந்திருப்பவனிடமிருந்து மறைக்க பெரும்பாடு பட்டாள்.
“ரெப்ரெஷ் ஆகணுமுன்னா அந்த ரூம் யூஸ் பண்ணிக்கோ சூர்யா” என்ற ஆதி நிரலியிடம் திரும்பி “நம்ம ரூம் மேலயிருக்கு” என கை காட்டிவிட்டு அவர்கள் ஜூஸ் அருந்திய குவலைகளை எடுத்துக்கொண்டு கிச்சனிற்கு சென்றான்.
ஆதியை தொடர்ந்து வேலுவும் அவன் பின்னே செல்ல, சூர்யா நிரலியின் அருகில் வந்தமர்ந்தான்.
“அம்மு உனக்கெதாவது புரியுதா?”
நிரலி இல்லை எனும் விதமாக உதடு பிதுக்கினாள்.
“பெரியப்பா மாமாவை ஏதாவது நாலு வார்த்தை நறுக்குன்னு கேட்பாருன்னு பார்த்தாக்கா, அவருபாட்டுக்கு பின்னால போறாரு. என்ன நடக்குது இங்க?”
“பிளீஸ் டா அண்ணா… நானே குழம்பி போயிருக்கேன்” என்ற நிரலி ஆதியின் செயல்களை மெல்ல அசை போட்டாள்.
ஆதியும், வேலுவும் சென்று நிமிடங்கள் பல கடந்திருக்க சூர்யா அவர்களை தேடிச்சென்ற சமயம்,
“நன்றி மாப்பிள்ளை” எனக்கூறி ஆதியை வேலு அணைத்து விடுவித்தார்.
“என்னடா நடக்குது இங்க!” என்று ஆச்சர்யமாக பார்த்து நின்ற சூர்யா, ஆதியின் என்னவென்ற கேள்வியில் தண்ணீர் என்று சொல்லி அங்கிருந்த பிரிட்ஜை திறந்து குளிர்ந்த நீர் அடங்கிய பாட்டிலை எடுத்தவன், மொத்தமாக வாய்க்குள் சரித்தான்.
சூர்யாவின் நிலை ஆதிக்கு புரிந்தபோதும் அவனெதுவும் விளக்கம் கொடுக்க முற்படவில்லை. அவனைத் தாண்டி வரவேற்பறைக்கு வர, நிரலி இன்னும் தனக்குள் உழன்றவளாக அமர்ந்திருந்தாள்.
“நிரலி…”
ஆதியின் விளிப்பில் விலுக்கென நிமிர்ந்தவளின் பதட்டத்தில் அலைப்புறும் விழிகளில் தன்னை தொலைத்தவன் நொடிப்பொழுதில் மீண்டு, “ஆர் யூ ஓகே?” என்றான்.
நொடிநேரத்தில் அவனின் முகத்தில் தோன்றிய உணர்வில் பதில் சொல்ல முடியாது அவள் தடுமாற, அவர்களின் அருகே வேலு வந்தார்.
“அப்போ நாங்க கிளம்புறோம் மாப்பிள்ளை.”
“ஏன் மாமா வந்ததும் கிளம்புறீங்க?”
உண்மையில் சூர்யாவுக்கு மண்டை குழம்பியது. இவன் தான் நான்கு வருடங்களாக யாரையும் அண்ட விடாது இருந்தவனா என்று இப்போது நம்ப முடியவில்லை. இந்த அனுமதி வேலுவுக்கு மட்டுமென்று சூர்யாவுக்கு தெரியவில்லை.
“இவுங்க ரெண்டு பேருக்கும் நடுவுல என்னவோ இருக்கு!” தனக்குத்தானே கூறிக்கொண்டவன் இருவரையும் ஆராய்ந்து கொண்டிருந்தான். ஆனால் ஒன்றும் அவனின் சிறு மூளைக்கு புலப்படவில்லை.
“செல்வி அங்க தனியா இருப்பா(ள்) மாப்பிள்ளை. என்னை எதிர்பார்த்திட்டு இருப்பாள்.”
“சரிங்க மாமா. சாப்பிட்டாவது போகலாமே!”
“நாலு வருசத்துக்கு அப்புறம் இப்போ என் மனசு ரொம்ப நிறைஞ்சிருக்கு மாப்பிள்ளை. அதுல பசியே தெரியல. சாப்பிட்டாலும் உள்ள இறங்காது” என்றவர் “பார்த்து சூதானமா இருந்துக்கோமா” என மகளிடம் சொல்லிவிட்டு சூர்யாவை அழைத்துக்கொண்டு கிளம்பினார்.
ஆதியும், நிரலியும் வாசல் வரை சென்று வழியனுப்ப,
“போயிட்டு வறோம் மாப்பிள்ளை” என்று வேலு சொல்லியதில் அப்போதுதான் கவனித்தவனாக,
“நான் எப்பவும் உங்க ஆதிப்பா தான் மாமா… இந்த மாப்பிள்ளை நல்லாவேயில்லை” என்றான்.
அதில் நன்றாக முகம் மலர்ந்த வேலு, “வரேன் ஆதிப்பா” என்க சூர்யாவையும், அவரையும் இன்முகமாக அனுப்பி வைத்தான். செல்லும்போது மகளை பார்த்து சிறு தலையசைப்பு மட்டுமே.
சூர்யா தான் நிரலியின் அருகில் சென்று, “எதாவதுன்னா கால் பண்ணு அம்மு” என்று அர்த்தமாகக் கூறிச் சென்றான். அதில் ஆதிக்கு புன்னகைக்கூட வந்தது.
தந்தையும், சகோதரனும் கண்ணை விட்டு மறையும் வரை பார்த்திருந்தவள் உள்ளே செல்ல திரும்ப, மார்பிற்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு அவளையேதான் பார்த்திருந்தான் ஆதி.
அவன் பார்வையை அவளால் எதிர்கொள்ள முடியாது போக, அவனை தாண்டி வேகமாக வீட்டிற்குள் சென்றுவிட்டாள்.
செல்லும் தன்னவளை ஏக்கத்தோடு பார்த்திருந்தவன்,
“உன் காதலை எப்போ சொல்லுவ பேபி” என்று மௌனமாக தன்னவளிடம் கேட்டிருந்தான்.
ஆதி வரும்போது நிரலி ஹாலில் கைகளை பிசைந்துகொண்டு நின்றிருந்தாள், அவளை பாராது கிச்சனிற்குள் புகுந்தவன் இரவு உணவை தயாரிக்க ஆயத்தமாகினான்.
தயக்கத்தோடு அவன் பின்னால் சென்றவள்,
கிச்சன் வாசலில் நின்று “நான் சமைக்கட்டுமா?” என்றாள்.
திரும்பி அவளை பார்த்தவன், “உனக்கு ட்ராவலிங் டயர்ட் இருக்கும்… நானே செய்றேன்” என்றதோடு அடுத்த அரை மணி நேரத்தில் சப்பாத்தியும், பச்சைப்பயிரு மசாலாவும் செய்து முடித்தான். அவன் சமையலை முடிக்கும் வரையிலும் நிரலி அங்கேதான் நின்றுகொண்டு நீண்ட நெடு நாட்களுக்கு பிறகு தன்னவனை கண்ணார கண்டு ரசித்தபடி இருந்தாள்.
நிரலியின் பார்வை உணர்ந்த போதும், ஆதி அதனை காட்டிக்கொள்ளவில்லை.
‘இந்த பார்வைக்கான அர்த்தம் எனக்கு புரிஞ்சு ரொம்ப நாளாகுது பேபி.’ மனதோடு சொல்லியவன்,
“சைட் அடிச்சது போதும், டின்னர் ரெடி. வா சாப்பிடலாம்” என்றவாறு உணவு மேசையை நோக்கி சென்றான்.
“அச்சோ நிரலி, நீ உன் மாமா மேல கோபமா இருக்க… இப்படியெல்லாம் பார்த்து வைக்கக் கூடாது” என்று தலையில் தட்டிக் கொண்டவள் அவனின் பின்னோடு வந்து உணவு உண்ண அமர்ந்தாள்.
அவள் மெதுவாக சொல்லியிருந்தாலும், அது நன்றாகவே ஆதியின் செவிகளில் விழுந்தது.
‘ஹோ மேடம் கோபமா இருக்காங்களாம்… இருக்கட்டும் இருக்கட்டும்’ என்று தன் மனதிடம் சொல்லியவன் அவளுக்கும் தனக்குமாய் உணவினை எடுத்து வைத்து எதுவும் பேசாது உண்டு முடித்து… வரவேற்பறையில் இருந்த தொலைக்காட்சியை உயிர்ப்பித்து அமர்ந்துவிட்டான்.
மெதுவாக உணவினை விழுங்கி நேரத்தை கடத்தியவள், பாத்திரங்களை கிச்சனிற்கு எடுத்துச்சென்று கழுவி வைத்துவிட்டு வந்தபோது ஆதி அங்கில்லை. தொலைக்காட்சி அணைக்கப்பட்டிருந்தது.
வீடே இருட்டில் மூழ்கியிருந்தது.
“தூங்க போயிட்டாங்களா? இப்போ நான் என்ன பண்றது?” துப்பட்டாவின் நுனியை திருகியவளாக பேந்தபேந்த விழித்தவாறு சிறுமியின் தோற்றத்தில் நின்றிருந்தவளை மேலிருந்து ரசித்தவன்,
“என்னோடு வாழணும் வந்துட்டு அங்கேயே நின்னுட்டு இருந்தால் எப்படி?” என்று கேட்க,
நிசப்தமான இரவில், அவனின் குரல் உரக்க எதிரொலித்தது. அதில் திடுக்கிட்டவள், அவனின் வார்த்தைகளை கிரகித்து மெல்ல அடி மேல் அடி வைத்து மேலேறினாள்.
Epi 8
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
28
+1
1
+1
ஆதி வேலு உறவு சூப்பர்
Thank you kaa 🩷