அத்தியாயம் 6 :
இன்று…
*திருமணம் முடிந்து நான்கு வருடத்திற்கு பின்னர்.*
உயர் நீதி மன்ற வளாகம்.
மிகுந்த பரபரப்புகளுக்கு நடுவில், தன் முழு உயரத்திற்கு ஏற்ற மிடுக்குடன் கண்களுக்கு ரேபான் அணிவித்தவாறு நீண்ட எட்டுக்கள் வைத்து விசாரணை அறையிலிருந்து வெளியில் வந்தான் ‘ஏ.டி’.
அவனை கண்டதும் ஊடகவியலாளர்களும், பத்திரிக்கைக்காரர்களும் சூழ்ந்து கொள்ள, “சம் அதர் டைம்” என்றதோடு நகர்ந்துவிட்டான்.
இன்றாவது அவனிடம் ஒன்றிரண்டு கேள்விகளை கேட்டு பதில் வாங்கி… அதோடு தங்களது கற்பனையையும் சேர்த்து எழுதி, அவன் மூலமாக தங்களது டி.ஆர்.பி’யை உயர்த்தலாம் என்று நினைத்து வந்த அனைவரும் ஏமார்ந்து நின்றனர்.
ஏ.டி என்றால் வெற்றி என்று அங்கிருக்கும் அனைவருக்கும் தெரியும். ஒரு வழக்கென்றால் அதன் ஆதியிலிருந்து அந்தம் வரை ஆராய்ந்து அடி வேர் வரை சென்று வாதாடுவான். அவனுக்கு நிகர் அவனே. வாதாடும் வித்தைக்காரன். எதிராளியின் சூட்சமம் அறிந்து களம் இறங்குபவன். அவனிடம் போட்டி போடவே முடியாது என அங்கிருக்கும் அனைவரும் அறிந்தது. ஆனால் அவனும் போட்டியிட விரும்பும் ஒரு நபர் விஸ்வநாதன்.
விஸ்வநாதன் மிகப்பெரிய வக்கீல். பல பெரும்புள்ளிகளின் ஆஸ்தான வாதாடி இவர் தான். இவர் ஒரு வழக்கில் ஆஜராகின்றார் என்றால் அதில் பலகோடி பண வர்த்தனை நடக்கிறதென்று அர்த்தம். பணமின்றி களத்தில் இறங்கமாட்டார். இதில் அவரின் அனுபவமும் அதிகம்.
தான் கை வைத்தால் வெற்றி நிச்சயம் என்று தலைகணத்தோடு மிதந்து கொண்டிருப்பவருக்கு ஆப்படிக்கும் ஒரே ஆள் ஏ.டி. அவருக்கும் ஏ.டி என்றால் பயம். பின்னே அவருக்கு முதல் முறையாக தோல்வியை பரிசாக அளித்தவனாயிற்றே இந்த ஏ.டி.
அவனுக்கு பின்னால் விசாரணை அறையிலிருந்து வெளிவந்த விஸ்வநாதனின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. அவர் முகத்தில் பரவும் சூட்டில் தோசையே வார்த்திடலாம். ஏ.டி’யின் மீது கடுகடுவென்று இருந்தார்.
தொடர்ந்து மூன்றாவது முறையாக அவனிடம் தோல்வியை தழுவி நிற்கின்றார். வெற்றி செருக்கோடு வலம் வந்த இடத்தில் அவமானமாக உணர்ந்தார். அதற்கு காரணமானவன் மீது கொலைவெறியே உண்டாகியது. ஆனால் அவனின் சுண்டு விரலை கூட யாரும் நெருங்கிட முடியாது என்பதும் அவர் அறிந்த ஒன்று.
ஏ.டி’யிடம் கிடைக்காத தகவல் ஏதேனும் விஸ்வநாதனிடம் கிடைக்கும் என்று பத்திரிகை மற்றும் ஊடகங்கள் அவரை சூழ்ந்து கொண்டனர்.
யாரும் அவரை நெருங்கி விடாதவாறு விஸ்வநாதனின் உடன் எப்போதும் இருக்கும் அவரின் பத்து, பனிரெண்டு ஜூனியர்கள் அவரை சூழ்ந்து அரண் போல் நின்றனர்.
“பிறகு பார்க்கலாம்.”
அவ்வாறு சொல்லி நகர முயற்சித்த விஸ்வநாதனிடம்,
“என்ன சார் ஜெயிக்கும் போதெல்லாம் பேட்டிக்கொடுத்துட்டு… இப்போ தோத்துட்டீங்கன்னு பேட்டி கொடுக்காமல் போறீங்களா?” நிருபர் ஒருவர் கேட்க, விஸ்வநாதன் தன் பல்லை கடித்தார்.
“யாருடா அது. தைரியம் இருந்தால் முன்னாடி வந்து கேளுடா?”
“என்ன சார் மரியாதையில்லாமல் பேசுறீங்க?”
“நான் அப்டித்தான்டா பேசுவேன்.”
விஸ்வநாதன் கோபமாக பேசி அவர்களை திசை திருப்ப முயற்சித்தார்.
அதனை ஒருவர் கண்டு கொண்ட விதமாக,
“கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரலையே” என்று காரியத்தில் கண்ணாக வினவினார்.
“காம் டவுன் சார். உங்களை கோபப்படுத்தி நியூஸ் பரபரப்பாக்க ட்ரை பண்றாங்க.” ஜுனியர் ஒருவன் விஸ்வநாதனின் காதில் கிசுகிசுத்தான். உடனே அவர் சுதாரித்தார்.
“நான் நிறைய வெற்றியை பார்த்துட்டேன். இப்போ திறமை வாய்ந்த யங் லாயர்ஸ் நிறைய பேர் வராங்க. சோ, வெற்றி ஒருத்தர்கிட்டவே நிலையா இருக்க முடியாதே. தோல்வியும் வந்து தானே ஆகணும்.” தீப்பிழம்பாய் உள்ளம் கொதிக்க, வெளியில் இழுத்து வைத்த புன்னகையுடன் பதில் கூறினார்.
“அப்போ இனி உங்களுக்கு தோல்வி பழகிடும் சொல்றீங்களா சார்?”
“நீங்க சொல்லுற யங் லாயர் மிஸ்டர்.ஏ.டி தானே சார்?”
“இவ்வளவு நாளா திறமையான லாயர்ஸ் யாரோடவும் நீங்க மோதியது இல்லை அதனால் தான் தொடர்ந்து வெற்றி மட்டுமே சந்திச்சிட்டு வந்தீங்கன்னு ஒத்துக்கிறீங்களா?”
அவர் பேசியதை வைத்தே ஆளாளுக்கு மடக்கி மடக்கி கேள்வி கேட்க, விஸ்வநாதன் திணறித்தான் போய்விட்டார்.
“நீங்க சும்மா இல்லாமல் ஏ.டி’யை சீண்டிவிட்டு, இப்போ தொடர் தோல்விகளை சந்திக்கிறீங்களே! தோல்வி அனுபவம் எப்படியிருக்கு சார்.?” வேண்டுமென்றே ஒருவர் நக்கலாகக் கேட்க,
அதுவரை அடக்கப்பட்ட அவரின் கோபம் வெளியே குதித்தது. தனக்கு முன்னால் நீட்டப்பட்டிருந்த ஒலி வாங்கிகளை தட்டி விட்டவர், இறுதியாக கேள்வி கேட்டவனின் கையிலிருந்த ரெக்கார்டரை பிடுங்கி தூக்கியேறிந்தபடி அங்கிருந்து நகர்ந்தார்.
நடப்பது அனைத்தையும் மரத்தடியில், கையில் ஜூஸ் டின்னுடன் நின்று பார்த்திருந்த ஏ.டி சத்தமாக சிரித்தான். அவன் சிரித்ததில் காரில் ஏறப்போன விஸ்வநாதன், ஏ.டி’யை திரும்பி பார்த்து முறைத்தார்.
“அச்சோ சார் வேண்டாமே! வம்பு எதுக்கு, அவரை பார்த்தாலே பயமாயிருக்கு.” ஏ.டி’யின் அருகில் உடன் நின்றிருந்த அவனின் ஜூனியரான ராகவ் சொல்ல ஏ.டி’யின் சிரிப்பு சத்தம் இன்னும் அதிகமாகியாயது.
ஏ.டி’யின் சிரித்த முகம் எரிந்து கொண்டிருந்த விஸ்வநாதனின் கோபத்திற்கு எண்ணெய் ஊற்றுவது போலிருக்க, ஏ.டி’யின் அருகில் வந்தார்.
அவர் கிட்ட வருவது தெரிந்ததும்… “ஜூஸ் குடிச்சு தொண்டை கட்டுற மாதிரி இருக்கு, உன் கிட்ட விக்ஸ் மிட்டாய் இருக்கா ராகவ்” என்று படு சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டான்.
“டேய் என்ன திமிரா?”
“என்ன சார் என்னாச்சு, யாருக்கு திமிர்?.”
அப்போதுதான் அவரை பார்ப்பதாக, ஏ.டி தெரியாததை போல் பவ்யமாக பேச, விஸ்வநாதனுக்கு ஆத்திரமாக வந்தது. அவரின் ஆத்திரம் அவனுக்கு மகிழ்வை கொடுத்தது.
“ரொம்ப ஆடாதே!”
“வெற்றி களிப்பு…” என சிரித்த ஏ.டி, “விச்சு… ச்ச, விக்ஸ் மிட்டாய் சாப்பிடு வெற்றியை கொண்டாடு” என்றதோடு அவர் முன்பே அதனை பிரித்து வாயில் போட்டு சுவைத்தான்.
விஸ்வநாதனுக்கு தன்னையே அவன் மென்று விழுங்குவதை போலிருந்தது.
“டேய் வேண்டாம்.”
“என்ன விச்சு, எனக்கு வேணுமே!”
“என்னடா கிண்டலா?”
“இல்லையே… தொண்டையில் கிச்கிச். விக்ஸ் மிட்டாய் சாப்பிடுங்க, கிச்கிச் போக்குங்க.”
“ரொம்ப துள்ளாத ஏ.டி, ஏதோ ஒருமுறை என்னை ஜெயிச்சிட்டால் நீ பெரிய இவனா?”
“எதே… ஒருமுறையா!” என்ற ஏ.டி, “தொடர்ந்து மூன்று முறை விச்சு செல்லம். மறந்துப்போச்சா?” என கிண்டல் செய்தான்.
அதற்கு பல்லை கடித்த விஸ்வநாதன், “எல்லாம் அந்த ஆளு கொடுக்கும் தைரியம்” என்று சொன்னவராக நகரப்போக,
“அவரால் தான் இன்னைக்கு நீங்க பெரிய லாயருன்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க”… அவனின் குரல் உணர்வை பிரித்தறிய முடியவில்லை.
“டேய்…”
“சும்மா கத்தாத விச்சு… வயசாகிப்போச்சுல்ல, பிபி ரைஸ் ஆகப்போகுது. அப்புறம் உன்னை விட்டால் என்னோட போட்டிபோட யார் இருக்கா?”
‘சும்மா இருந்தவனை சொறிஞ்சிவிட்ட கதையாகிப்போச்சே.’ மனதில் நினைக்க மட்டுமே முடிந்தது அவரால்.
விஸ்வநாதனால் தான் இந்த போட்டி கூட. வெற்றி தோல்வியும்.
இந்த நான்கு வருடத்தில் ஏ.டி’யின், அதாவது ஆதி தேவ்வின் வளர்ச்சி மிக அதிகம். அவன் அடைந்த உயரம் யாரும் எளிதில் அடைந்திட முடியாது. குடும்பத்தின் மீதிருந்த மொத்த கோபத்தையும் தன் தொழிலில் காண்பித்தான். அவனுக்கு பக்க பலமாக அவனின் சீனியர் ராஜ் கிருஷ்ணா(ஆர்.கே) துணை நின்றார்.
ஆதி வீட்டை விட்டு வந்த இரண்டாவது வருட துவக்கத்தில் ஆர்.கே’க்கு உடல் நல குறைவு ஏற்பட, அவர் முற்றிலும் தன் வக்கீல் தொழிலிருந்து விடுபட… அதுவரை அவர் பார்த்துக் கொண்டிருந்த பெரிய பெரிய வழக்குகள் அனைத்தும் ஆதியின் வசம் ஒப்படைக்கப்பட்டது. அவ்வழக்குகளில் எல்லாம் ஆதிக்கு வெற்றியே. அதுவும் அவனின் வளர்ச்சி பாதைக்கு படியாக அமைந்தது. இப்போது முடிக்க முடியாது சிக்கல் வாய்ந்த வழக்குகள் என்று ஒதுக்கப்படும் வழக்குகள் கூட ஆதியிடம் வந்தால் வெற்றி என்ற நிலை. அதற்கு ஆதியின் கடின உழைப்பே காரணம்.
நீதிமன்ற வளாகம் முழுக்க ஆதி பற்றியே பேச்சாக இருக்க அதில் கடுப்பாகிப் போனார் விஸ்வநாதன்.
விஸ்வநாதனும், ஆர்.கே’யும் இணைந்து பார்ட்னர்ஷிப்பில் வழக்குகளை கையாண்டு வந்தனர். ஆர்.கே’க்கு எப்போதும் வெற்றி தான். அது விஸ்வநாதனுக்கு புகைச்சலை கொடுத்தது. அது பல குறுக்கு புத்திகளை உருவாக்கியது.
ஒருமுறை ஆர்.கே சேகரித்து வைத்த ஒரு பெரிய வழக்கின் ஆதாரங்களையெல்லாம் திருட்டுத்தனமாக கைப்பற்றி விஸ்வநாதன் வெற்றி பெற்றார். இதனை அறிந்த ஆர்.கே விஸ்வநாதனை ஒன்றும் சொல்லாது தான் தனித்து செயலப்படத் தொடங்கினார். அதோடு விஸ்வநாதன் எடுக்கும் வழக்குகளுக்கு எதிராக கூட வாதாடுவதை ஆர்.கே தவிர்த்துவிட்டார்.
ஒருவேளை விஸ்வநாதனுக்கு எதிராக ஆர்.கே களமிறங்கியிருந்திருந்தால் இன்று விஸ்வநாதன் வக்கீல் தொழிலில் இல்லாமலே போயிருந்திருக்கலாம்.
என்ன தான் குறுக்கு வழியில் வெற்றிகளை பெற்றாலும், ஆர்கே’க்கு கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் அவருக்கு கிடைக்கவில்லை. அந்த வெறி இன்றளவும் அவருக்கு இருக்க, ஆர்.கே படுக்கையில் விழுந்ததும்… இனி இந்த நீதிமன்ற வளாகத்தில் முதலிடம் தனக்குத்தான் என்கிற அவரின் இறுமாப்பிற்கு பெரும் அடியாக வந்து சேர்ந்தான் ஏ.டி.
குருவை மிஞ்சிய சிஷ்யன் என்று குறுகிய காலத்தில் தன் குருவிற்கு பெருமையை தேடித் தந்தான்.
ஏ.டி’யின் வளர்ச்சி… அதோடு ஆர்.கே’வின் இடம் தனக்கு என்று நினைத்த அவரின் எண்ணம் பொய்யாக போனதில் ஏமாற்றம் அடைந்தவர்… ஏ.டி’ன் மீது பொறாமையோடு சேர்த்து வன்மமும் கொண்டார்.
ஒருமுறை பெரிய அரசியல்வாதியின் வழக்கில், ஏ.டி வெற்றி பெற… அந்த வழக்கில் அவனின் வாதத் திறமையை நீதிபதியே பாராட்டவும் விஸ்வநாதனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. சக வழக்கறிஞர்களும் ஏ.டி’யை சிலாகித்துப் பேச, பொங்கி விட்டார்.
“என்னய்யா பெருசா அவன் ஜெயிச்சுட்டான். வாதாடவே தெரியாத மொக்கை லாயர்ஸ் கூட போட்டி போட்டு ஜெயிச்சிட்டால் அதெல்லாம் வெற்றி ஆகிடுமா?”
தன் ஜூனியர்களின் புடை சூழ நின்று மற்ற லாயர்ஸிடம் விஸ்வநாதன் கூற, அங்கு தற்செயலாக வந்த ஏ.டி கேட்டு விட்டான்.
ஏ.டி’யை பார்த்ததும், விஸ்வநாதனிடம் இகழ்ச்சியான புன்னகை. ஆனால் அதையெல்லாம் ஏ.டி கண்டுகொள்ளவே இல்லை. கண்டுகொள்ளாத போது கருத்தில் மட்டும் எப்படி பதியும்.
“ஹாய் விச்சு…” அட்டகாசமாகக் கூறியவன்,
“உனக்கு எம்மேல இம்புட்டு பாசம் இருக்குமுன்னு தெரியாமல் போச்சே” என்றான்.
ஏ.டி என்ன சொல்ல வருகிறான் என்பது விஸ்வநாதனுக்கு புரியவில்லை.
“என்ன விச்சு புரியலையா?” என்றவன், “நீ எனக்கு எதிரா வாதாடனுமுன்னு உனக்கு ஆசையிருந்தால் என்கிட்ட நேராக சொல்ல வேண்டியது தானே! அதற்கெதற்கு இவ்வளவு வருத்தம் உனக்கு” என்றவன், “அடுத்து நீ ஆஜராகும் வழக்கில் சந்திப்போம்” என்றதோடு அவரின் கன்னம் பிடித்துக்கிள்ளி அவரின் கையில் விக்ஸ் மிட்டாயினை வைத்து சென்றான்.
“இனி உன்னை ஜெயிப்பது தான் எனக்கு வேலையே” என சொல்லுவதை போலிருந்தது அவனின் பேச்சு செயல்.
சென்ற ஏ.டி மீண்டும் வந்து, “இந்த விச்சு… ச்ச சாரி, விக்ஸ் மிட்டாய் எதுக்குன்னா, எந்த ஆரம்பத்துக்கும் இனிப்பு முதலாக இருக்கனுமுன்னு ஒரு சாக்லேட் விளம்பரத்துல சொல்லியிருக்காங்க” என்று வெட்கப்பட்டுக் கொண்டே சொல்லியவனின் முகம் அடுத்த நொடி இறுகியது.
“தன் வினை தன்னைச் சுடும். நீ செய்த வினையை அறுக்கக் காத்திரு” என்று குரலில் மட்டும் கடுமையை காட்டியவன் சென்றுவிட்டான்.
சொன்னதை போல் ஒன்று அல்ல தொடர்ந்து மூன்று முறை விஸ்வநாதனுக்கு தோல்வியைக் காட்டினான்.
‘இந்நிலை நீடித்தால் தன் மதிப்பு முற்றிலும் குறைந்துவிடும், இப்படி வேலியில் போன ஓணானை வேட்டிக்குள் விட்ட கதையாகிப் போச்சே’ என்று மனதால் வருந்த மட்டுமே முடிந்தது. வெளியில் காட்டிக்கொண்டால் அவரின் கெத்து என்னாவது.
நடந்ததை எண்ணிக் கொண்டிருந்த விஸ்வநாதன் நேரம் கடப்பதை அறியாது ஏ.டி’யை முறைத்து பார்த்திருக்க,
“எம்புட்டு இருக்குது ஆசை உம்மேல” என்று ஏ.டி பாட்டு பாட, விஸ்வநாதன் என்னென்று தெரியாது விழிக்க,
“என்னை சைட் அடிக்குற அளவுக்கு எம்மலே ஆசையா விச்சு” என்று அவன் கூற, அவனிடமிருந்து சென்றால் போதுமென்று விஸ்வநாதன் தலையில் அடித்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக அவனின் பார்வையிலிருந்து மறைந்தார். ஏ.டி’யின் அட்டகாசமான சிரிப்பொலி அவ்விடமெங்கும் எதிரொலித்தது.
“இருந்தாலும் நீங்க அவரை இந்தளவுக்கு ஓடவிடக் கூடாது சீனியர்.”
ராகவின் பேச்சில் “ஆஹாங்” என்ற ஆதி, “அவருக்கும் எனக்கும் நல்ல கெமிஸ்ட்ரில டா” என்க, ராகவ் தன் வாயினை கை வைத்து மூடிக்கொண்டான்.
அந்நேரம் ஏ.டி’யின் அலைபேசி சிணுங்க அதை காதில் ஏற்றியவன், அந்த பக்கம் என்ன சொல்லப்பட்டதோ எதுவும் பேசாது வைத்த அடுத்த நொடி அங்கிருந்து கிளம்பினான்.
“என்ன சீனியர் அதுக்குள்ள கிளம்பிட்டிங்க?”
“என் பொண்டாட்டி வந்திருக்கா(ள்)டா!”
“எதே, பொண்டாட்டியா!” அதிர்ச்சியாகிய ராகவ், “உங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சா சீனியர்?” என்று கேட்டவன் ஆதியின் பதிலில் திறந்த வாய் மூடவில்லை.
“அது ஆச்சு நாலு வருஷம்.”
சொல்லிய ஆதி தனது வண்டியிலேறி காற்றின் வேகத்திற்கு உற்சாகமாக பறந்திருந்தான்.
இந்த ஆதி ராகவிற்கு புதிது. எப்போதும் கடுமையாக இறுகிய முகத்துடன் இருப்பவன், இளகிய முகம் காட்டுவது ஆர்.கே’யிடம் மட்டுமே. விஸ்வநாதனிடம் என்னதான் கிண்டலாக விளையாடினாலும், அது வெறும் குரலளிவில் தான்.
பெண்களிடம் பேசினாலும் அவனுக்கென்று எல்லை வகுத்து பேசுவான், பழகுவான். ராகவே பலமுறை ஆதியிடம் சொல்லியதுண்டு, “உங்களோட ஜூனியர்ன்னு தெரிஞ்சாலே என்ன எந்த பெண்ணும் பார்க்க மாட்டேங்குது சீனியர்” என்று அதற்கெல்லாம் ஆதியிடம் முறைப்பு மட்டுமே பதிலாகக் கிடைக்கும்.
அப்படியும், “உங்களோட சேர்ந்து நானும் சாமியார் தான்” என்று சொல்லுவான் ராகவ்.
ஆனால் அதையெல்லாம் பொய்யாக்கியது ஆதி சொல்லிய “என் பொண்டாட்டி” என்ற வார்த்தை. அதோடு விடலை பையன் போல் உற்சாகமாகச் சென்றது ராகவிற்கு அதிர்ச்சி தான். இருந்தாலும் ஆதியின் இந்த முகம் அவனுக்கு மகிழ்வை கொடுத்தது.
***
அன்று கோபத்தில் தாலி கட்டியதும் கிளம்பி வந்துவிட்டான் தான். தன் கோபத்தை யாரிடம் எப்படி காட்டுவதென்று தெரியாமல் இப்படி காட்டிவிட்டான். அவன் செய்த செயலில் அவனுக்கே உடன்பாடில்லை. மேலும் தன் மீது தன் செயலின் மீதே அதிக கோபம் கொண்டான். இருப்பினும் தானாகச் சென்று நிரலியை அழைத்துவர அவனுக்கு விருப்பமில்லை. விட்டுச்சென்ற நிலையிலேயே இருந்தான்.
தன் குடும்பமாகவே இருந்தாலும் சுய மரியாதையை விட்டுக்கொடுக்க அவனுக்கு விருப்பமில்லை. அதனாலே அவளாக வந்தால் வரட்டும். இல்லையெனில் தன் குடும்ப உறுப்பினர் யாராவது இதைப்பற்றி பேச தன்னிடம் வரட்டும் என்று அமைதியாக இருந்து விட்டான்.
ஆதி இந்நிலையில் இருக்க, தாலி கட்டியதும்… கட்டியவளின் நினைப்பு சிறிதுமின்றி அதோடு தன் அன்னை ரத்தம் வழிய உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும்போது சென்றான் என்றால் தங்கள் மீதான கோபம் அவனிடத்தில் எந்தளவிற்கு இருக்குமென்று பயந்து மூர்த்தி, காமாட்சி உட்பட மௌனமாக இருக்க.
‘இப்படியே இருக்கட்டும் தன் பேத்தி மீண்டும் வந்துவிட்டால் நிரலியை ஓர்ம்கட்ட இதுதான் சரியாக இருக்கும்’ என்று கற்பகம் தனக்குள் கணக்கிட்டவாறு அமைதியாக இருந்துவிட்டார்.
இதில் எல்லோருக்கும் பெருத்த வியப்பு என்னவென்றால், செல்வி ஆதியை பார்த்துவரலாம் என்று எவ்வளவோ முறை சொல்லியும் நிரலியின் படிப்பு முடியாட்டுமென்று வேலு பொறுமையாக இருந்தது தான்.
இதோ நிரலி தன் மேல் படிப்பையும் முடித்து இரண்டு வாரங்கள் ஆகியிருக்கும் நிலையில், தன் மகளை அவளின் கணவனிடத்தில் சேர்ப்பதற்கு அழத்துக்கொண்டு வந்துவிட்டார்.
அன்று அவள் நினைவே இல்லாது சென்றவன் தான், இன்று தன்னவளை பார்க்க போகிறோம் என்கிற அதீத மகிழ்வோடு தன் வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றான்.
Epi 7
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
12
+1
1
+1
ஆதி செமடா
நன்றி அக்கா