Loading

அத்தியாயம் 5 :

முகூர்த்தம் காலை ஆறு முப்பதிலிருந்து ஏழு. 

விடியற்காலை ஐந்து மணியளவில் எல்லாம் தயாராக இருந்தது. முழு கல்யாணத் தோற்றத்தில் இருந்த சந்தியாவை கண்டு கற்பகம் பூரித்துப்போனார். தன் எண்ணப்படி பேரனுக்கும் பேத்திக்கும் திருமணம் நடக்கயிருப்பதில் அவ்வளவு மகிழ்ச்சி அவருக்கு.

சந்தியாவுடன் இருந்த அனைவரையும் அனுப்பிவிட்டு, அவளுக்கு சில அறிவுரைகள் வழங்கியவராக கற்பகம் மட்டும் உடனிருந்தார்.

மணமேடையில் ஆதி அமர வைக்கப்பட, ஐயர் தனது மந்திரங்களை கர்ம சிரத்தையாக சொல்லிக் கொண்டிருந்தார்.

அப்போதும் அவனை துளைக்கும் பார்வையை உணர்ந்தவன் தனக்கு முன்னாலிருக்கும் கூட்டத்தை கண்களால் துழாவினான். பார்வையின் குறுகுறுப்பை உணர முடிந்ததே தவிர பார்வைக்கான சொந்தக்காரியை அவனால் கண்டுகொள்ள முடியவில்லை. 

“என்ன உணர்வு இது என்னைப்போட்டு இந்த பாடு படுத்துது.” ஆதியால் முனக மட்டுமே முடிந்தது. அவள் தான் சூர்யாவிற்கு பின்னாலிருந்து அவனவனை வெறித்துக் கொண்டிருந்தாளே!

‘அவ்வளவுதான் எல்லாம் முடிய போகுது. என் மாமா எனக்கில்லை.’ 

தங்கையின் மனகுரல் அண்ணனை எட்டியதோ… “என்ன நிரலி தாவணி போட்டிருக்க, போ புடவை கட்டிட்டு வா!” என்றான். அவன் உணர்த்த நினைத்த உள்ளர்த்தம் அவளுக்கு புரியவில்லை.

“அது ஒன்னுதான் குறைச்சல்.” அலுத்துக்கொண்டவளை பார்த்து மென்னகை புரிந்தான்.

“எனக்கு அழணும் போல இருக்கு சூர்யா! என்னால் இதை பார்க்க முடியல.”

நிரலி அவ்வாறு சொல்லியதும் பதறிய சூர்யா, “உனக்கும் ஆதி மாமாவுக்கும் தான் கல்யாணம்” என்க, அவனை நம்பாத பார்வை பார்த்து வைத்தாள்.

“பாட்டி பசிக்குது பாட்டி.” சந்தியா அவ்வாறு சொல்லியதும் கற்பகம் அவளின் குமட்டிலே ஒரு குத்து குத்தினார்.

“பாட்டி பிளீஸ்.” கண்களில் கண்ணீர் இல்லை. ஆனால் அவளின் குரலில் கலங்கிய ஒலி. நடிப்பு தான். பின் அவளும் என்ன தான் செய்வாள் அரை மணிநேரமாக அங்கிருந்து நகர சமயம் பார்த்துக் கொண்டிருக்கிறாள். முடியவில்லை. அரணாக கற்பகம் இருந்தார். கழிவறைக்கு கூட அவளை செல்ல அனுமதிக்கவில்லை.

அவளுக்கும் அவரை எப்படி அப்புறப்படுத்துவது என்று தெரியாமல், பசியை காரணமாகக் கூறினாள். அப்போதும் அவர் அசைந்தாரில்லை. சந்தியாவுக்கு ஆத்திரமாக வந்தது.

“எனக்கு இப்பவே கிறுகிறுன்னு வருது. பசி தாங்காமல் மயக்கம் போட்டு மேடையிலே விழுந்துட்டால் கல்யாணம் தான் தடைபடும்.” அலுங்காமல் கற்பகத்தின் தலையில் குண்டை போட்டாள்.

“ஆத்தே… இந்த கல்யாணம் தடைபடவா இம்புட்டு நாள் காத்திருந்தேன்” என்ற கற்பகம்,

“சரி சரி நீ பாத்ரூம் போகணும் சொன்னியே, போயிட்டு வா. நான் அதுக்குள்ள சூசு (ஜூஸ்) கொண்டாறேன்” என்றவர் அறையை விட்டு வெளியே செல்ல, மீண்டும் திரும்பி வந்து… “ஏதாவது திருக்குத்தாளம் பண்ண கொன்னுபோட்டுருவேன்” என எச்சரித்துவிட்டே நகர்ந்தார்.

கற்பகம் அகன்றதும் மூச்சை இழுத்து விட்டு தன்னை நிலைப்படுத்தியவள் யாருக்கும் தெரியாது வீட்டிற்கு பின்னாலிருக்கும் தோட்டத்து பக்கம் சென்றாள்.

“பொண்ணை அழைச்சாங்கோ!” ஐயர் குரல் கொடுக்கவும், கற்பகம் பழச்சாறு அடங்கிய குவளையுடன் சந்தியாவின் அறைக்குள் நுழையவும் சரியாக இருந்தது.

அறைக்குள் சந்தியா இல்லையென்றதும் அதிர்ச்சியில் கற்பகம் கையில் வைத்திருந்த கண்ணாடி குவளை தரையில் விழுந்து சிதற… அவர் முகத்தில் பட்டுத் தெறித்த பழச்சாற்றில் சுயம் பெற்றவர் அடுத்து என்ன செய்வதென்று தெரியாது பயத்தில் கைகளை பிசைந்துகொண்டு நின்றார். அவரின் பயத்திற்கான காரணம் ஆதி. அதைவிட நிரலி. சந்தியா இல்லாதபட்சத்தில் என்ன நடக்குமென்று எண்ணியவர் கலங்கித்தான் போனார். அந்நிலையிலும் நிரலியை ஆதிக்கு கட்டி வைத்திடக் கூடாதென்று உறுதியாக எண்ணினார்.

ஐந்து நிமிடங்கள் கடந்திருக்க, இன்னும் பொண்ணு வரவில்லையென ஐயர் சத்தம் போட்டுக்கொண்டே இருக்க, அம்பிகா மேலேறி வந்தார். அறைக்குள் மெத்தையில் வெளிறிப்போய் அமர்ந்திருந்த அம்மத்தாவை கண்டதும், 

“அம்மத்தா உடம்பு என்ன பண்ணுது” ஓடி ஓடி வேலை பார்த்ததால் ஏதேனும் உடல் உபாதை வந்துவிட்டதோ என்று எண்ணி அவ்வாறு கேட்டார்.

“எனக்கென்ன நான் நல்லாத்தேன் இருக்கேன்” என்று தன் கணீர் குரலால் கூறிய கற்பகம், “உம் மகள காணாலடி” என்று மெல்லக் கூறினார்.

“ஆத்தே!”

அம்பிகா இடிந்து போனவராய் நெஞ்சில் கை வைத்து தரையில் அமர்ந்துவிட்டார்.

ஐயர் பொண்ணு இன்னும் வரவில்லையென முதல் முறை குரல் கொடுத்த போதே, மணமேடைக்கு பக்கவாட்டில் இருந்த, மேலே செல்லும் படிக்கு அருகில் சூர்யா நின்று கொண்டான். நொடிக்கு ஒருதரம் அவனின் பார்வை மேலே தொட்டு மீண்டது. கற்பகத்தின் குரல் எந்நேரமும் ஒலிக்கலாமென்று எதிர்பார்த்திருந்தான்.

நேரம் சென்றதே தவிர பெண் வருவதைப்போல் தெரியவில்லை. மேடையை விட்டு எழ முயற்சி செய்த ஆதியை மூர்த்தி தடுக்க, காமாட்சி மேலே சென்றார்.

போன அடுத்த நிமிடம் முகத்தில் எவ்வித உணர்வையும் பிரதிபலிக்காது அமைதியாக வந்த காமாட்சி மகனை ஏறிட்டு பார்க்க, அவரின் ஒற்றை கண்ணில் நீர் கோடென கன்னம் தாண்டி வழிந்தோடியது. அதிலேயே ஆதிக்கு அனைத்தும் விளங்கிட நொடியில் ருத்ர மூர்த்தியாக மாறியிருந்தான்.

காமாட்சிக்கு பின்னால் வந்த கற்பகத்தை தீயாய் பார்வையாலே எரித்தான்.

“என்ன அம்பிகா மேல போன எல்லாரும் வந்துட்டீங்க சந்தியா எங்கே?” தங்கமணி மனைவியிடம் சற்று அழுத்தி கேட்க, அம்பிகாவின் கண்களில் குளம் கட்டிவிட்டது.

“மாப்பிள்ளை கேட்கிறாரே பதில் சொல்லும்மா?” மூர்த்தி அம்பிகாவிடம் பதட்டத்துடன் பேசினார். அவருக்கும் உள்ளுணர்வோ ஏதோ உணர்த்தியிருந்தது.

“அப்பா இன்னும்மா உங்களுக்கு புரியல… பொண்ணு ஓடிப்போயிருச்சு.” ஆதி வார்த்தையில் காய்ந்தான்.

“அய்யோ தம்பி அப்படி சொல்லாதாப்பா”… அம்பிகா தலையில் அடித்துக்கொண்டு கதறினார்.

சுற்றம் அனைவரும் தங்களுக்குள் கிசுகிசுக்க ஆரம்பித்தனர்.

“பொண்ணுக்கு விருப்பமில்லையா.”

“டவுனுக்கு போய் படிச்சிதுல்ல ஏதாவது விவகாரமா இருக்கும்.”

“ஆதி நல்ல பையனாச்சே, இவனை ஏன் பிடிக்காமல் போச்சு.”

“பையன் வெளியில நல்லாயிருந்தால் ஆச்சா… உள்ளுக்குள்ள என்ன குறைய கண்டாளோ, இப்படி போயிட்டாள்.”

ஆளுக்கு ஒருவிதம் பேச, அனைத்து வீட்டு உறுப்பினர்களுக்கும் நன்கு கேட்கத்தான் செய்தது.

ஆட்கள் மட்டும் இல்லையென்றால் ஆதி கற்பகத்தை ஒருவழி செய்திருப்பான். இப்பவும் பார்வையால் அவரை பொசுக்கிக் கொண்டுதான் இருக்கின்றான்.

“பொண்ணு மாப்பிள்ளையை பிடிக்கலன்னு ஓடிப்போச்சே… இனி எந்த பொண்ணு கட்டிக்கும்.” கூட்டத்தில் ஒருவர் வேண்டுமென்றே சத்தமாக பேச, அதில் ஆதியின் சுயமரியாதை சீண்டபட்டது. இவ்வளவு நேரமும் கூட்டம் இருப்பதால் பொறுமையாக இருந்தவன் இப்போது வெடித்திருந்தான்.

“நான் அன்னைக்கே கேட்டேன் தானே?” விரல் நீட்டி கற்பகத்திடம் கேள்வி கேட்டவன், மாலையை கழட்ட போக…

“ஆதி கொஞ்சம் பொறுமையா இருப்பா” என்று மகனின் கோபம் உணர்ந்த காமாட்சி அவனின் கரம் பற்றி பிடித்துக்கொண்டார்.

“அவ(ள்) இப்படி பண்ணுவான்னு சத்தியமா நினைக்கல தம்பி” என்று அழுத அம்பிகாவிடம்,

“என்ன எல்லாம் சேர்ந்து ட்ராம பண்ணுறீகளோ… இந்த கெழவி தான் இயக்குனரா?” படு நக்கலாகக் கேட்டிருந்தான்.

பல பேர் முன்னிலையில் தன்னுடைய ஆசைப்பேரன் தன்னை கெழவி என்று சொன்னதை தாங்காமல் விலுக்கென்று நிமிர்ந்து அவர் ஆதியை பார்க்க,

“இம்புட்டு நேரம் தலை கவுந்துதானே நின்ன, இப்போ மட்டுமென்ன… கெழவியை கெழவின்னு தான் சொல்ல முடியும்” என்றான்.

“ஆதி என்னப்பா பெரியவங்களை மரியாதையில்லாமல்” மூர்த்தி மகனை அதட்டினார்.

“யாரு இவங்க பெரியவங்களா” என்றவாறு கற்பகத்தை மேலிருந்து கீழ் பார்த்தவனின் பார்வையில் அவர்மீது அவ்வளவு கோபம்.

ஆதிக்கு அவர் மீது வேறொரு கோபமும் உள்ளது. அதனை இப்போது காட்டிடவும் முடியாது. அறிந்த உண்மை அவரின் மீது ஆத்திரத்தை உருவாக்கிய போதும், கடினப்பட்டு பொறுமை காக்கின்றான். மூலம் அறிந்திட கால அவகாசம் வேண்டும் அவனுக்கு.

நொடிக்கு குறைவாக வேலுவை அவனின் பார்வை தொட்டு மீண்டது. அவரின் மீதும் அவனுக்கு சிறு வருத்தம்.

“நான் கேட்டப்போ எப்படி சொல்லி சமாளிச்சிருக்கீங்க… அவன் இஷ்டத்துக்கு படிச்சான், வேலைக்குபோறான்… அதான் அவன் இஷ்டத்துக்கு கல்யாணமும் பண்ணிக்கிட்டான்னு யாரும் ஒருவார்த்தை சொல்லிடக்கூடாதுன்னு தான் மனசுல சந்தேகம் வந்த பிறகும், பெரியவங்க உங்க பேச்சை மீறாமல் அன்னைக்கு நீங்க சொன்னதை உண்மைன்னு நம்பி இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன். உங்க மரியாதையை காப்பாத்த நினைச்ச என் மரியாதையை இப்படி கெடுத்துட்டிங்களே!” 

கற்பகத்தால் வாய் திறக்க முடியவில்லை. சந்தியா இப்படி பண்ணுவாளென்று அவரும் எதிர்பார்க்கவில்லை.

“அன்னைக்கு வேலு மாமா சொன்னதுக்கு அவர் வாய் மட்டும் தானே உங்களால அடைக்க முடிஞ்சுது. அவர் சொல்லியிருந்த மாதிரி செஞ்சிருந்தால் இப்போ எனக்கு இந்த தலையிறக்கம் வந்திருக்குமா?” ஆதியால் நடந்ததை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. மனம் உலைக்கலனாக கொதித்தது. தன்மீதே கோபம், ஆத்திரம். தெரிந்தும் பெரியவர்கள் மீது நம்பிக்கை வைத்து சாதாரணமாக இருந்துவிட்டோமே! அவன் மனம் ஆறவேயில்லை.

“மாப்பிள்ளை கொஞ்சம் பொறுமையாக இருங்க, இங்கேதான் இருப்பாள். ஒருவாட்டி தேடி பார்க்கலாம்.” 

வேலுவை வைத்து பேசியது தங்கமணிக்கு பிடிக்கவில்லை. அதனால் ஆதியை சமாதானம் செய்ய தங்கமணி முயற்சித்தார்.

மூர்த்தியும், காமாட்சியும் தான் தன் மகனுக்கா இப்படி நடக்க வேண்டுமென்று மௌனமாக கண்ணீர் வடித்தனர்.

அம்பிகா கூட, ஆதியின் கோபத்தை பார்த்து வாய் திறக்கவில்லை.

“அவள் திரும்ப வந்தாலும், எனக்கு தேவையில்லை.” ஆதியின் உறுதியான வார்த்தையில் தங்கமணி அதிர்ந்து நிற்க,

“அக்கா கிணத்துல விழுந்துட்டால்” என்று கத்திக்கொண்டே வீட்டின் தோட்டத்திலிருந்து நிரலி ஓடிவந்தாள்.

“அய்யோ என் மகள்” என்று தங்கமணியும், அம்பிகாவும் ஓட ஆதியும் விரைந்தான்.

ஆதியே செல்லும்போது தாங்களும் போக வேண்டுமே என்று மனமேயில்லாது, அனைவரும் கிணற்று பக்கம் சென்றனர்.

கிணற்றில் எட்டிப்பார்க்கும் போது,

நீரில் மிதந்துகொண்டிருந்த இறுதி படியை கெட்டியாக பிடித்துக்கொண்டு யாராவது காப்பாற்ற மாட்டார்களா என மேலே பார்த்துக்கொண்டிருந்தாள் சந்தியா.

தங்கமணி கூட அதிர்ச்சியில் அப்படியே நின்றுவிட, வேலு தான் கீழிறங்கி சந்தியாவை அழைத்து வந்தார்.

மேல வந்த சந்தியாவின் கன்னம் தீப்பற்றி எரிந்தது. ஆதி அடித்திருந்தான். கன்னத்தை தாங்கி பிடித்து நின்றவளின் மற்றொரு கன்னத்திலும் ஆதியின் கை இடியென இறங்கியது.

“ஏன் இப்படி பண்ண?” கற்பகம் கேட்க,

“எனக்கு கல்யாணத்தில் விருப்பமில்லை” என பட்டென்று அனைவர் முன்னிலையிலும் கூறினாள் சந்தியா.

“கல்யாணம் பிடிக்கலன்னு தான் சாக கிணத்துல குதிச்சியா?”

ஆதியின் கேள்வியில் ஆமென்று ஆடிய சந்தியாவின் தலையை பிடித்து ஆதி தள்ள, கீழே விழுந்திருந்தாள் சந்தியா.

“சாகணுமுன்னு விழுந்தவ, நடு கிணத்துல குதிக்க வேண்டியது தானே… அப்புறம் எதுக்குடி படியை பிடிச்சிட்டு தொங்கிட்டு கிடந்த, என்னமா நடிக்கற… உனக்கு விருப்பம் இல்லைன்னா அன்னைக்கே நான் கேட்டேனே சொல்ல வேண்டியது தானே?”

ஆதியின் கேள்வியில் சந்தியா கற்பகத்தை பார்க்க,

பேரன் எந்நேரமும் தன் பக்கம் திரும்பலாமென்று நினைத்த கற்பகம்,

“அதான் பொண்ணு கிடைச்சிருச்சே, முகூர்த்த நேரம் முடியறதுக்குள்ள தாலி கட்டிடலாமே! ஏதோ கண்ணாரு ஆகிப்போச்சு” என்ற கற்பகத்தை பார்த்து… 

“ச்சீ” என்ற ஆதி,

“இனி என் கல்யாணத்தை பற்றி பேசன உனக்கு வாய் இருக்காது பார்த்துக்கோ” என எச்சரித்தவனாக வீட்டிற்குள் செல்லும் மகனின் திருமணத்தை எப்படி நடத்துவது என்று மூர்த்தி கலங்கி போயிருந்தார்.

இன்னும் வந்தவர்கள் யாரும் செல்லாது நடப்பதை வேடிக்கை பார்த்தவாறு அங்கு தான் இருந்தனர்.

“இனி தன் மகன் கல்யாணம் என்றாலே கசந்து போவானே. அவனுக்கொரு நல்லது எப்படி செய்வேன்” காமாட்சி புலம்பிக் கொண்டிருக்க அவருக்கு ஆதரவாக செல்வி நின்றிருந்தார்.

“அம்மா இவள் ஏதோ கிறுக்குத்தானமா பண்ணிபுட்டா(ள்), எதாவது செய்து தம்பியை தாலிகட்ட சொல்லும்மா!” அம்பிகா காமாட்சியிடம் மன்றாடினார்.

இப்போது ஆதியை திறக்கும் ஒரே சாவி காமாட்சி மட்டும்தான் என்று நினைத்த கற்பகமும், ஆதிக்கு சந்தியாவை கட்டி வைத்திட வேண்டுமென காமாட்சியிடம் நயமாக பேச அவரும் தன் மகனை இப்போது விட்டால் வேறெப்போதும் பிடிக்க முடியாதென்று நினைத்து ஒரு முடிவுடன் வீட்டிற்குள் சென்றார். மற்றவர்களும் உள்ளே செல்ல, சூர்யா நிரலியை பிடித்துக் கொண்டான்.

“ஹேய் அம்மு, நான் அவ்வளவு சொல்லியும் நீயெதுக்கு அதுக்குள்ள சந்தியா கிணத்துல இருக்கான்னு கத்துன.

இப்போ பாரு திரும்ப சந்தியாவையே கட்டி வைக்க போறாங்க, 

எப்படியும் பொண்ணு காணாமல் போச்சுன்னு இருக்கும்போது, அம்மம்மா(காமாட்சி) கிட்ட ஹின்ட் மாதிரி கொடுத்து உன்னை மணமேடையில் உட்கார வைக்கலான்னு இருந்தேன்.

கல்யாணம் நடக்குறவரை கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாமே!”

தலையில் தட்டிக்கொண்டான். இவ்வளவு செய்தும் கடைசியில் இந்த திருமணம் நடக்கப் போகிறதே என்கிற கோபம் சூர்யாவுக்கு.

சூர்யாவுக்கு எந்த பதிலும் சொல்லாது நிரலியும் உள் சென்றாள். வேறுவழியின்றி அவளோடு சூர்யாவும் இணைந்து கொண்டான்.

நடந்து கொண்டிருந்த களேபரத்தால் எங்கு வார்த்தைகள் தடித்து குடும்பத்திற்குள் பிரிவு வந்துவிடுமோ என்று அஞ்சிய நிரலி சூர்யாவிடமிருந்து எப்படியோ தெரிந்துகொண்டு சந்தியா கிணற்றில் விழுந்திருப்பதை சொல்லி நடந்து கொண்டிருந்த சண்டையை திசை திருப்பினாள்.

ஆனால் மீண்டும் சந்தியாவின் கழுத்திலே ஆதியை தாலி கட்ட வைக்க முயல்வார்கள் என்று அவளும் எதிர் பார்க்கவில்லை.

வீட்டிற்குள் காமாட்சி வந்த போது, ஆதி தன் பேக்கினை எடுத்துக்கொண்டு வெளியே செல்ல மேலிருந்து படியிறங்கி வந்து கொண்டிருந்தான்.

வேகமாக அவனின் கையிலிருந்த பையை பிடுங்கிய காமாட்சி,

“ஒழுங்கா தாலியை கட்டிட்டு எங்க வேணாலும் போ” என்று கத்தினார்.

“அம்மா விளையாடாதீங்க… எனக்கு கல்யாணமே வேண்டாம். பையை கொடுங்க.”

“எனக்கு என் மகனுக்கு கல்யாணம் நடந்தே இருக்கணும்.”

தாயும் பிள்ளையும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லையென பிடிவாதமாக நின்றிருந்தனர்.

“என்னை வேண்டான்னு சொல்லுறவள நான் எப்படிம்மா கட்ட முடியும். இந்த பையன் வேண்டான்னு பொண்ணு சாகவே முடிவெடுத்துட்டான்னு என் காதுபடவே பேசுறாங்க. அசிங்கமா இருக்கும்மா!” தன் அன்னை தன் மனதை புரிந்து கொள்ளவில்லையென மருகினான்.

“பொண்ணு நிரலி.”

காமாட்சி சொல்லியதில் ஆதியை விட கற்பகத்திற்கு தான் பேரதிர்வு. எது நடந்துவிடக் கூடாதென்று நினைத்தாரோ அது நடக்கப் போகிறது.

சூர்யாவுக்கு உள்ளுக்குள் கொண்டாட்டம். 

“அம்மா, அவ சின்னப்பொண்ணு.”

“எல்லாம் கல்யாணம் கட்டுற வயசு தான்.”

“எனக்கு கல்யாணமே வேண்டாம். என்னை விடுங்க.” இதனை சொல்லும் போது ஆதியின் பார்வை வேலுவின் மீதுதான்.

“ஆதி அம்மா சொல்லுறதை கேளு.”

“அப்பா நீங்களும்மா?”

“எனக்கும் என் பையன் வாழ்க்கை முக்கியமாச்சே!” மூர்த்தியின் கண்கள் கலங்கிவிட்டன.

“நீங்க ஏங்க கண்ணு கலங்குறீங்க, நம்ம பையன் கல்யாணம் இன்னைக்கு நடக்கும்.” காமாட்சியின் குரலில் அவ்வளவு உறுதி.

“இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்.” கற்பகம் வெகுண்டார்.

“நீங்க ஏன் ஒத்துக்கணும். பொண்ணோட அப்பா, அம்மா ஒத்துகிட்டால் போதும்.” தன்னை மீறி வாய் திறக்காத மருமகள் இன்று எதிர்த்து பேசவும் கற்பகம் ஆடிப்போய்விட்டார்.

“என்ன வாய் நீளுது.” காமாட்சியை கற்பகம் அடக்கப் பார்த்தார்.

“அம்மா இது என் பையன் வாழ்க்கை கொஞ்சம் சும்மா இரு.” தன் மகனும் தன்னை அதட்டியதில் கற்பகத்தின் முகம் விழுந்துவிட்டது.

“செல்வி உனக்கு சம்மதம் தானே?”

“இன்னும் நான் ஒத்துக்கவேயில்லை.”

காமாட்சி தன் இரண்டாவது மகளிடம் சம்மதம் கேட்க, ஆதி தன் விருப்பமின்மையை காண்பித்தான்.

“இப்போ நீ மணவறையில் போய் உட்காரலன்னா, நீ என்னை பார்க்குறது இதுதான் கடைசி” என்ற காமாட்சி தன் சேலையில் மறைத்து வைத்திருந்த சிறு கத்தியை எடுத்து கையை நன்கு ஆழமாக அறுத்துக் கொண்டார். ரத்தம் குபுக்கென்று வெளியேறியது.

ஆதி மட்டுமல்ல யாருமே காமாட்சியின் இச்செயலை எதிர்பார்க்கவில்லை. 

மனம் இக்கல்யாணம் நடக்காதென்று சொல்லிக்கொண்டே இருக்க, சந்தியா இல்லையென்றால் எப்படியாவது நிரலியை மணம் முடித்து வைத்துவிட வேண்டுமென்று காமாட்சி எப்பவோ எடுத்த முடிவுதான் இது. தன் மகன் நிச்சயம் ஒப்புக்கொள்ள மாட்டானென்று அவருக்குத் தெரியும். அதற்காகத்தான் முன்கூட்டியே சிறு கத்தியை தனக்குள் மறைத்து வைத்திருந்தார்.

எல்லோரும் அதிர்ந்து நிற்க, நிரலி தான் ஓடி வந்து, ரத்தம் அதிகம் வெளியேறாது இருக்க அவரின் கையை அழுத்தி பிடித்தாள்.

“அய்யோ அத்தை ஏன் இப்படி பண்ணீங்க?” 

“உனக்கு உன் மாமாவை கட்டிக்க சம்மதம்மா கண்ணு?”

நேரடியாக தன்னிடம் இப்படி கேட்பாரென்று நிரலி நினைக்கவில்லை. இந்நிலையில் என்ன பதில் சொல்வதென்று சுத்தமாக அவளுக்குத் தெரியவில்லை.

அவள் ஆதியை நிமிர்ந்து பார்க்க அவன் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

“நீ அவனை ஏன் பாக்குற,”

“அம்மா மொத ஆஸ்பத்திரிக்கு போவோம் வாங்க,” ஆதி படப்படத்தான். முதன்முறையாக மனதின் செண்ட்டிமென்ட்டை வெறுத்தான்.

“அத்தை நீங்க ஆஸ்பத்திரிக்கு வாங்க, பின்னால பேசிக்கலாம்.” வேலு முன்வந்தார். அவருக்கும் அவசரத்தில் எடுக்கும் இந்த முடிவில் விருப்பமில்லை.

அதிலும் முன்னிரவு தெரிந்துகொண்ட உண்மை, இந்த திருமணம் மகளுக்கு எமனாக வந்திடுமோ என்று அஞ்சினார். தந்தையாய் அவரின் பயம் நியாமானது. அறிந்து கொண்டிருந்த உண்மை அப்படியானது.

“மாமா நீங்களாவது கொஞ்சம் சொல்லுங்க?”

“அவளே போனப்பிறகு நான் மட்டும் இருந்து என்ன பண்ணப்போறேன்.” மூர்த்தி அழுகையை வாய்க்குள் அடக்கினார்.

தந்தையின் நிலயை கண்ட பிறகும் மனம் இறங்காமல் இருக்க ஆதியின் மனம் கல் இல்லையே. ரத்தம் வெளியேறியதால் அரை மயக்க நிலையில் இருந்த தாயையும், நெஞ்சம் விம்மி நிற்கும் தந்தையையும் அழுத்தமாக பார்த்தவன் எதுவும் சொல்லாது மணவறையில் சென்று அமர்ந்தான்.

அப்போது வேலுவின் மீது அழுத்தமான பார்வை ஒன்றை வீசினான் ஆதி.

ஆதி எத்தகைய மன அழுத்தத்தில் இருக்கிறான் என்பது வேலுவுக்கு நன்கு புரிந்தது. தன் ஒற்றை கண்ணசைவு ஆதியை நிம்மதியாக்கிவிடும் என்று அறிந்தும், அவருக்கு மனம் வரவில்லை. மருமகனா? மகளா? என்னயிருந்தாலும் தந்தைப் பாசம் வேறல்லவா? அவரும் அதில் விதிவிலக்கு அல்லவே!

வேலு தன் சிந்தையில் உழன்று கொண்டிருக்க, செல்வி சம்மதம் சொல்லியிருந்தார்.

கற்பகத்தின் வசவு சொற்களில் இருந்து தன் மகளை காப்பதற்காகவே செல்வி இத்திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார்.

தனக்கும் கற்பகத்திற்கு மட்டுமே தெரிந்த உண்மை எல்லோருக்கும் தெரிய வரும்போது, நிரலிக்கு துணையாக ஆதி இருந்தால் மட்டுமே மற்றவரின் பார்வையிலிருந்து தன் மகளை காக்க முடியுமென்று செல்வி நினைத்தார். அதுவே இத்திருமணத்திற்கு அவர் ஒப்புக்கொள்ள காரணமாக அமைந்தது.

“போடா, மாமா போயிட்டான் பாரு. அவன் பக்கத்துல போய் உட்காரு.” காமாட்சி சொன்னதை செய்யாது நிரலி தன் தந்தையை பார்த்தாள்.

“உங்களுக்கும் என் உயிர் மேல் அக்கறையில்லையா மாப்பிள்ளை?”

காமாட்சியின் வார்த்தையில் பதறியவர், செல்விக்கு கண் காட்ட, செல்வி தன் மகளை அழைத்துச் சென்று ஆதிக்கு அருகில் அமர வைத்தார்.

கற்பகம் கையாளாகாத நிலையில் நடப்பதை வேடிக்கை பார்த்தார். அவர் மனம் சந்தியாவை உள்ளுக்குள் தாளித்து எடுத்தது. அனைவரும் உள்ளே வந்ததுமே, பின் வழியாகவே அவள் அப்போதே வெளியேறியிருந்தாள். தன் மேல் படிப்பு கனவுக்காக, குடும்பத்தையே நிலை குலைய செய்திருந்த வருத்தம் அவளிடத்தில் கொஞ்சமும் இல்லை.

மகள் செய்த காரியத்தால் வாய் திறக்க முடியாத நிலையில் தங்கமணி.

கை பொம்மையாக தான் ஆட்டி வைக்கப்படுவதாக ஆதியின் மனம் எண்ணியது.

நிரலிக்கு காதலில்லாமல் வாழ்க்கை துவங்குகிறதே என்கிற வருத்தம்.

சூர்யாவுக்கு, இறுதியில் தன் தங்கையின் காதல் கை சேர்கிறதே என்கிற நிறைவு.

இதில் அதிக மகிழ்வு தருணுக்கு மட்டும் தான். தனக்கு பிடித்த மாமா இனி தன் அக்காவின் கணவர். இனி எனக்கு மட்டுமே அவரிடம் உரிமை அதிகம் என்ற அதீத மகிழ்வு. குழந்தையின் மனம் நல்லதை மட்டுமே நினைத்து மகிழ்ந்தது.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் உழன்று கொண்டிருக்க, கவிதாவும், ராசுவும் தான் அடுத்தடுத்த காரியங்களை நடைமுறை படுத்தினர். 

“என்ன ஐயரே பார்த்துட்டே இருக்கீங்க தாலியை எடுத்து கொடுங்க.” ராசு சொல்ல, அட்சதை அடங்கிய தட்டினை எடுத்து அனைவருக்கும் நீட்டினார் கவிதா.

ராசு கையசைக்க மேளங்கள் முழங்க, முடுக்கிவிட்ட பொம்மை போல் நிரலியின் கழுத்தில் தாலியை கட்டியவன்… வேலுவின் முகத்தை சில கணங்கள் ஆழ்ந்து நோக்கிவிட்டு, யாரையும்… ஏன் அரை மயக்கத்தில் மகனின் திருமணத்தை பார்த்து மகிழ்ந்தவாறு சரிந்திருந்த அன்னையை கூட ஏறிட்டு பார்க்காது… யாரும் உணரும் முன்னர் அங்கிருந்து வெளியேறிவிட்டான்.

ஆம் ஆதி சென்றுவிட்டான். மற்றவரின் சொல்லுக்காக இயந்திரம் போல் தாலி கட்டியவன், மனதில் கொதித்துக் கொண்டிருக்கும் தணலை அணைக்கும் வழி தெரியாது, தன் மனதின் நிம்மதிக்காக… பெற்றோருக்காக தன் கடமை முடிந்து விட்டதென எண்ணி அங்கிருந்து சென்றுவிட்டான்.

தன் மனமே வெந்துக்கொண்டிருக்கும் போது மற்றவரின் மனநிலையை யோசிக்கும் நிலையில் ஆதி இல்லை. அவனின் கண்ணுக்கு யாரும் தெரியவில்லை. 

ஒரேயடியாக சென்றுவிட்டான். தன்னை நிலையில்லா தவிக்க செய்யும் உறவுகளின் அழுத்தம் வேண்டாமென்று மொத்தமாக விலகிச் சென்றுவிட்டான்.

 

Epi 6

ஏந்திழையின் ரட்சகன் 6

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
29
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்