அத்தியாயம் 4
கல்லூரி முடித்து மாலை வீடு வந்த நிரலிக்கு வீட்டின் அமைதி ஆச்சர்யமாக இருந்தது. விசேடம் நடந்த வீடு போல் இல்லாமல் கலையின்றி இருந்தது.
அங்கே விளையாடிக்கொண்டிருந்த வருணிடம் “எல்லாரும் எங்கேடா?” என்று அவள் கேட்ட நேரம்,
“சரி விடு அம்பிகா, ஏதோ கண் திருஷ்டி நினைச்சு விடுவிய்யா” என மூத்த மகளிடம் காமாட்சி பேசி வந்தது நிரலிக்கு நன்கு கேட்டது.
‘ம், ஏதோ நடந்திருக்கும் போல.’ மனதில் நினைத்தவள் சூர்யாவை தேட, வேலுமணி மகள் முன் வந்தார்.
“நீ வரத்தான் காத்திருந்தேன்டா… போலாமா!” என்க, தந்தையை புரியாது பார்த்தாள் அவள்.
“வருண் அம்மாவை கூட்டிவா” என்றவர் நிரலியை அழைத்துக்கொண்டு பெரிய வீட்டை விட்டு வெளியேற,
“என்ன மாமா கிளம்பியாச்சா?” என்றவாறு வந்தான் ஆதி.
“ஆமாம் மாப்பிள்ளை விசேடம் முடிந்தது. போய் சோலியை பாக்கலாமுன்னு.” அவர் வார்த்தைகளை மென்று விழுங்கினார்.
எதனால் இந்த திடீர் ஒதுக்கமென்று ஆதியால் புரிந்துகொள்ள முடிந்தது. தங்கமணி சொல்லிய வார்த்தை தான் காரணமென்று நொடியில் யூகிக்க முடிந்தது.
“அப்போ உங்களுக்கு நான் முக்கியமில்லாமல் போயிட்டேனா?” ஆதியின் பார்வை அவரிடம் அதைத்தான் கேட்டது. ஆதிக்கு மற்றவர்களை காட்டிலும் அவரிடம் சற்று ஒட்டுதல் அதிகம். மற்ற இரண்டு மாமாக்களிடமும் பேசவே யோசிப்பவன், வேலுவிடம் உரிமையாக பழகுவான்.
அந்த உரிமையான பார்வையில் வேலு செல்வி வருகிறாரா என கவனிப்பது போல் முகத்தை வேறு பக்கம் வைத்துக்கொண்டார்.
“கல்யாணத்துக்கு இன்னும் இருவது நாளுதானே இருக்குது. அதுவரை எல்லாரும் ஒன்னா இருக்கணுமுன்னு தானே பேச்சு.” சலம்பிக்கொண்டே ஒய்யாரமாக வந்த கற்பகம் வேலுவை சற்று மிதப்பாக பார்த்தார்.
நிரலியின் பிறப்பிற்கு பிறகு தான் அவரின் இந்த பார்வை மாற்றமெல்லாம். அதுவரை “என் ரெண்டாவது பேத்தி வீட்டுக்காரர் மாதிரி யாரும் வர முடியாது” என்று வேலுவை தாங்கியவர் தான். ஏனோ நிரலியின் வருகைக்குப் பின்னர், செல்வியும், வேலுவும் கற்பகம் பாட்டிக்கு கசந்து போனார்கள்.
“இந்த கல்யாணத்திலிருந்து நான் ஒதுங்கியிருக்கிறது தான் ஆதிப்பா சரி” என்று தனது அண்ணன் தங்கமணியை பார்த்துக்கொண்டே சொல்லிய வேலு தன் மக்களோடு கிளம்பிவிட்டார்.
ஒருவருக்கு சுயமரியாதை எவ்வளவு முக்கியமென்று நன்கு அறிந்திருந்த ஆதியும் மேற்கொண்டு அவரை தடுக்கவில்லை.
“நீயில்லைன்னா தான்டா எம்பொண்ணு கல்யாணம் நல்லா நடக்கும்.” தங்கமணி சொல்லியது கற்பகத்திற்கே பிடிக்கவில்லை தான். இருப்பினும் தன் ஆசை பேரனின் வாழ்வில் நிரலி மட்டும் வந்துவிடக் கூடாதென்றே மறுத்து அடம் பிடிக்கும் சந்தியாவை உருட்டி மிரட்டி அதட்டி சம்மதிக்க வைத்திருக்கிறார்.
“உன் பொண்ணை கட்டிக்கொடுக்கலாமுன்னு நினைக்குதி(றி)யோ?.”
மாலை நிகழ்வின் போது தங்கமணி அவ்வாறு கேட்ட பிறகே, சந்தியா இல்லையென்றால் நிரலி என்ற முடிவிற்குத்தான் மூர்த்தி செல்வார் என்பது கற்பகத்திற்கு புரிந்தது. ‘அப்படி மட்டும் ஒன்று நடந்திடவேக் கூடாது.’ உறுதியாக மனதில் உருப்போட்டவர் அதற்கு பிறகும் சந்தியாவை மிரட்டி விட்டு வந்தார்.
அவளின் சம்மதமும் பயத்தால் தானே அன்றி காதலால் இல்லை. கற்பகத்தின் பிடிவாதத்தால் பலர் முன்னிலையில் அவமானமாக நிற்கப்போவது அவரின் பேரன் ஆதி தான்.
‘சந்தியா இல்லையென்றால் நிரலி.’
இதுவே கற்பகத்தின் மண்டையை வண்டாய் குடைய, செல்லும் வேலு குடும்பத்தை போகட்டுமென்று விட்டுவிட்டார்.
******
நடந்த நிகழ்வுகளை சூர்யா மூலம் அறிந்துகொண்ட நிரலி மௌனமாகவே இருந்தால். கையில் கொட்டை வடிநீர் அடங்கிய கோப்பை இடம்பெற்றிருக்க, அவளின் சிந்தனை ஆதியிடம் நிலைத்திருந்தது.
‘எப்படியிருந்தாலும், உன் காதல்… உன் மாமா உனக்குத்தான்’ என்று அவளின் மனம் ஓலமிட்டுக் கொண்டேயிருந்தது.
“எனக்கென்னவோ சந்தியா அமைதிக்கு பின்னால் ஏதோ திட்டமிருக்குன்னு தோணுது அம்மு.”
சூர்யா சொல்ல நிரலியிடத்தில் எவ்வித சலனமும் இல்லை.
“நம்ம குடும்பத்தில் பிறந்த சந்தியா இப்படியொரு குணம் கொண்டிருப்பா நான் நினைத்தது கூடயில்லை.
காலையில் அவள், அவளையும் மாமாவையும் ஒப்பிட்டு சொல்லும்போது அவள் முகத்தை பார்க்க வேண்டுமே! அப்பப்பா, என்னவொரு திமிர்.
பெரியம்மா அழுவதை கூட மதிக்கவில்லை.
இந்த கெழவி போய் என்ன பேசியிருக்கும் தெரியல, அமைதியா வந்து மாமா பக்கத்துல உட்கார்ந்தாள்.
இதெல்லாம்விட, மாமாவை அவ்வளவு கீழிறக்கி பேசிட்டு, படிப்பு வீணாகிவிடுமோன்னு கவலை அவ்வளவுதான்னு சொன்னா(ள்) பாரு, அதை என்னால் ஜீரணிக்கவே முடியல அம்மு.”
சூர்யா தன் மனத்தாங்கல் எல்லாம் கொட்டிக்கொண்டிருந்தான்.
“கல்யாணம் எப்போ வச்சிருக்காங்க?”
நிரலியின் அமைதியான கேள்வியில் சூர்யா குழம்பி நின்றான்.
“அப்போ இந்த கல்யாணம் நடக்கட்டும் நினைக்குறியா அம்மு.”
சந்தியா அவ்வளவு பேசிய பிறகும், தன் மாமனிடத்தில் அவளை பொறுத்தி பார்க்க ஏனோ சூர்யாவிற்கு மனம் ஒப்பவில்லை. சிறுத்தை எப்போதும் தன் புள்ளிகளை மாற்றிக்கொள்வதில்லை என்னும் வாக்கியம் தான் சூர்யாவிற்கு நினைவு வந்தது. பல பேர் வீட்டில் கூடியிருக்க ஒரு அவமானம் வேண்டாம், அப்போதைக்கு நிச்சயம் நடந்தால் போதும், அதன் பிறகு அவளின் மனதினை ஆதியிடம் சொல்லிவிட வேண்டுமென்று நினைத்திருந்த சூர்யாவிற்கு கற்பகத்தின் நாடகம் வெறுப்பை கொடுத்தது.
“இப்போது நடந்ததை சொன்னால், கல்யாணத்தை நிறுத்த நான் ஏதோ பிளான் பண்ணுறேன்னு என்னையே கெழவி கோர்த்துவிட்டாலும் விடும்.” இவ்வாறு நினைத்தவன் மனதில் தெரிந்தே மாமாவின் வாழ்க்கைக்கு சற்றும் தகுதியில்லாத சந்தியாவை விலக்க வேண்டுமென்ற எண்ணமே மேலோங்கியது.
சூர்யா கேட்டதற்கு பதில் சொல்லாது, அவன் புலம்பலுக்கும் செவி மடுக்காது கையிலிருக்கும் கொட்டை வடிநீரின் சுவையை நன்கு உறிஞ்சி தொண்டைக்குள் செலுத்திக் கொண்டிருந்தாள் நிரலி.
கோப்பை காலியானதும் தான் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“அவரு என் மாமாடா… அவர் தாலி கட்டுற கழுத்து என்னுடையதாதான் இருக்கும்.” ஆழ்ந்து கூறியவளின் திடத்தில், ‘தான்தான் ஏதாவது செய்ய வேண்டும்’ என்று சூர்யா நினைக்க அதையே அவளும் கூறினாள்.
“தங்கச்சிக்காக இந்த கல்யாணத்தை நீ நிறுத்த மாட்டியா அண்ணா!” அவளின் வார்த்தை இழுவையே தினுசாக இருந்தது.
“அந்த கெழவியை மீறி நம்மால் என்ன செய்ய முடியும் நினைக்குற?” நிரலியிடம் முடியாது எனும் விதமாக சூர்யா கேட்டிருந்தாலும், சந்தியாவின் குழப்ப மனதால் எதுவும் செய்து அவளை சுலபமாக பின்வாங்க வைத்துவிடலாம் என உள்ளுக்குள் கூறிக்கொண்டான்.
தான் நினைப்பதை நிரலியிடம் கூட சொல்லக்கூடாதென்று நினைத்தான். ஒருவேளை தன் திட்டத்தால் சந்தியாவுடனான திருமணம் நின்று போனால், பின்னாளில் ஏதேனும் சூழலில் உண்மை தெரிய வரும் போது ஆதிக்கும், நிரலிக்கும் இடையில் இதனால் கசப்பு ஏற்பட்டு விடக்கூடாதென்று எண்ணினான்.
நிரலியிடம் பேசிவிட்டு பெரிய வீட்டிற்கு வந்த சூர்யா நேராக சென்றது சந்தியாவின் அறைக்குத்தான்.
****
நாட்கள் ஓடிய வேகம் தெரியாது கல்யாணத்திற்கு முந்தைய நாள் வந்து நின்றது.
பெரிய வீட்டிலேயே திருமணம் என்பதால், பெண் அழைப்போ, மாப்பிள்ளை அழைப்போ இல்லை. வீடு கல்யாண கலை கட்டியிருந்தபோதும், காமாட்சிக்கு மகனின் திருமணம் நல்லமுறையில் நடைபெற வேண்டுமே என்று கலக்கமாக இருந்தது.
அவர் தான் கடந்த இரண்டு நாட்களாக சந்தியாவை கவனித்துக் கொண்டிருக்கிறாரே! கல்யாண பெண்ணுக்குரிய நாணமோ மகிழ்வோ அவளின் முகத்தில் கிஞ்சித்துக்கும் இல்லை. எப்போதும் ஏதோ யோசனை. முகத்தில் அப்பட்டமான கலக்கம். கற்பகத்தை தவிர யாரிடமும் அவள் பேசுவதில்லை. அதைவிட கற்பகம் யாரும் சந்தியாவின் பக்கம் செல்லவிடாது மதிலாக குறுக்க நின்றார்.
சந்தியாவின் முகம் வைத்து, “நிசமாவே அவளுக்கு விருப்பமில்லை போலிருக்கே அத்தை” என்ற காமாட்சியை தன் நாவினால் சுழட்டி எடுத்துவிட்டார்.
“அது கல்யாண பயந்தேன், வேற யார்கிட்டயும் உளறி வைக்காதே” என்றவர் தன் சேலை தலைப்பை ஒரு உதறு உதறிச் சென்றார்.
‘ஒருவேளை அப்படியும் இருக்குமோ’ என்று சிந்தித்த காமாட்சிக்கு இல்லையென்றே உள்ளுணர்வு உறுத்தியது.
மனம் சொல்லுவதை போல் அப்படி எதுவும் நடந்துவிட்டால் உடனே என்ன செய்ய வேண்டுமென்றும் மனதில் உருப்போட்டவர் அப்போதே ஒரு முடிவெடுத்திருந்தார். அதன் பிறகே நிம்மதியாக அவரால் வலம் வர முடிந்தது.
மூர்த்திக்கும் அதே நிலை தான். மகனின் வாழ்வு நன்றாக அமைய வேண்டும் என்கிற பெற்றோரின் எண்ணம்.
திருமணம் முடிந்த பிறகு வரவேற்பு வைத்துக்கொள்ள முடிவெடுத்ததால், அன்றைய இரவு பெரிய வீடு உறவினர்கள் சூழாது வெறுமையின்றி காட்சியளித்தது.
“உன் கூட்டாளி பசங்க யாரும் வரலையா ஆதி?”
“கல்யாணம் நடக்குமான்னே தெரியல, வீணா அவர்களுக்கெல்லாம் எதுக்கு அலைச்சல். அதான் அழைக்கவில்லை.”
தந்தையின் கேள்விக்கு விட்டேற்றியாக பதிலளித்தான். அவனின் பதிலால் மேற்கொண்டு என்ன பேசுவதென்றும் தெரியாது மூர்த்தி சென்றுவிட்டார்.
ஏனோ ஆதிக்கு அடிமனதில் தோன்றி கொண்டேயிருந்தது. உனக்கானவள் சந்தியாயில்லை என்று ஓலமிட்டபடியே இருந்தது. அதனால் தான் தந்தையிடம் தன்னையும் அறியாமல் வார்த்தை விட்டிருந்தான்.
‘எவ்வளவு நேரம் தான் அறைக்குள்ளே இருப்பது’ என நினைத்தவன் தன்னுடைய அறைக்கு வெளியில் வந்து நின்று, கீழே நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தான். கூடத்தின் நடுவில் மணமேடை தயாராகிக் கொண்டிருக்க, பூக்களால் அலங்கரிக்கப்பட இருந்தன. தங்கமணியும், கற்பகமும் தான் ஓடி ஓடி என்னென்னவோ செய்தபடி இருந்தனர்.
எப்போதும் ஆதிக்கென்றால் பம்பரமாக சுழலும் வேலு, திருமணத்திற்கு முந்தைய நாளான அன்று மாலை தான் அங்கு வந்தார். வந்தவர் ஒரு இருக்கையை கூட நகர்த்தவில்லை. தங்கமணி மீண்டும் ஏதேனும் கொடுக்காக சொல்லிவிடுவாரோ என்று விலகியே இருந்தார். ஆதியும் அவரை கவனித்துதான் இருந்தான்.
ஆதி எவ்வளவு நேரம் அங்கேயே நின்று கொண்டிருந்தானோ… குளிரென இதமாக தன்னை துளைக்கும் பார்வையை உணர்ந்தவன் யாரென அறிய சுற்றி கண்களை வட்டமிட அவனறைக்கு நேரெதிர் அறையின் முன்னால் இருந்த தூணுக்கு பின்னால் யாரோ மறைவது தெரிந்தது.
அது சந்தியாவின் அறை இருக்கும் பகுதி என்பதால், அங்கு சென்று பார்க்கும் எண்ணத்தை கைவிட்டவன், கீழே இறங்கி வந்து வேலுவின் அருகில் அமர்ந்து அவரோட பேசிக்கொண்டிருந்தான். இருவருமே திருமணத்தை பற்றி ஒற்றை வார்த்தைக்கூட பேசிக்கொள்ளவும் இல்லை, கேட்டுக்கொள்ளவும் இல்லை.
அப்போதும் அதே பார்க்கும் உணர்வு, பேச்சினூடே பார்வையால் சுழன்றவனுக்கு யாரும் தென்படவில்லை.
“விடிஞ்சா முகூர்த்தம் இந்நேரம் இங்கன உட்கார்ந்து கதை பேசணுமா!” ஆதியிடம் கேட்ட கற்பகம் வேலுவை பார்த்து நொடித்துவிட்டு சென்றார்.
“சரி மாப்… ஆதிப்பா தூக்கம் வருது” என்று எழுந்து கொண்டவர் சொல்லாமல் விட்ட பாதி வார்த்தையை உள்வாங்கிய ஆதி,
“நான் எப்பவும் உங்க மாப்பிள்ளை தான் மாமா” என்றான். மாமா என்ற வார்த்தையில் அவ்வளவு அழுத்தம். ஆதியை நெருங்கி அணைத்து விடுவித்தவர் எதுவும் சொல்லாது சென்றுவிட்டார். மீண்டும் ஆதி அறைக்குள் வந்து முடங்கும் வரை குத்தும் பார்வையை உணர்ந்தே இருந்தான்.
“அப்படி யாரு நம்மள வச்ச கண்ணு வாங்காமல் பார்க்குறது தெரியலையே” என்று வாய்விட்டுக் கேட்டுக் கொண்டவனின் மனக்கண் முன் நிரலியின் செய்தி சொல்லும் பார்வை வந்து போனது.
‘விடிஞ்சா கல்யாணம். கட்டிக்கப்போற பொண்ணு நினைப்பே வர மாட்டேங்குது, ஆனால் பொசுக்கு பொசுக்குன்னு அந்த வாலு என்னை பார்க்கும் பார்வை மட்டும் கண்ணு முன்னாடி வருது.’ மனதில் நினைத்தவன் அடுத்த நிமிடம் உறங்கியும் போனான்.
“மாமா தூங்கப்போயாச்சா… இந்நேரம் தூங்கியும் இருப்பார்.”
சூர்யா சொல்லியதை கேட்டவள் “இதை என்னிடம் ஏன் சொல்லுகிறாய்” எனும் விதமாக பார்த்து வைத்தாள்.
“காலையில் அவருக்கு கல்யாணம். அந்த வருத்தமோ வலியோ கொஞ்சம்கூட இல்லாமல் இப்பவும் இந்நேரம் வரை அவரை பார்த்துகிட்டு மட்டும் இருக்கியே, என்னால் உன்னை புரிந்துகொள்ளவே முடியல” என்ற சூர்யாவிடம்,
“உன் மேல் எனக்கு நம்பிக்கையிருக்குடா அண்ணா” எனக்கூறி ஓடிவிட்டாள்.
“எதே எம்மேலயா” என்று அதிர்ந்த சூர்யா வீட்டை ஒரு பார்வை பார்த்தான்.
தன்னறைக்குள் வந்த நிரலி கதறி துடித்தாள். என்னதான் கடைசியாக தனது மாமாவாக, காதலனாக நினைத்து ஆதியை பார்வைக்குள் விழுங்கி மனப்பெட்டகத்தில் சேமித்து வைத்தாலும், நிதர்சனம் புரிய அவளின் திடம் காணாமல் போனது.
“நீ எனக்கில்லையா மாமா?” ஆயிரமாவது முறையாக தன்னவனிடம் கேட்டிருந்தாள். பதில் சொல்ல வேண்டியவனுக்கோ கேள்வி சென்றடையவில்லை.
என்னதான் இந்த திருமணம் நின்றுவிட வேண்டுமென நினைத்தாலும், தன்னுடைய அக்காவின் திருமணத்தை எப்படி நிறுத்துவதென்று எந்தவொரு முயற்சியும் எடுக்காது நடப்பது நடக்கட்டுமென்று மௌனமாக கண்ணீரில் கரைந்து கொண்டு மட்டுமே இருந்தாள்.
***
நள்ளிரவு நெருங்கிய வேளையில் வீட்டு உறுப்பினர்கள் மற்றும் வருகை தந்திருந்த சுற்றம் அனைவரும் உறக்கத்திற்கு சென்ற பின் வீடே இருளில் மூழ்கியது. அந்நேரம் ஒரு உருவம் சத்தமில்லாது அடி வைத்து சந்தியாவின் அறைக்கு முன் நின்றது.
மெல்ல கதவில் கைவிக்க, தாழிடப்படாத கதவு திறந்து கொண்டது.
அந்நேரம் குளியலறைக்குள் இருந்து வந்த சந்தியா அறைக்குள் நின்றிருந்த சூர்யாவை கண்டு ஒருநொடி பயந்துவிட்டாள். அடுத்த நொடி தன்னை மீட்டவள், கண்ணாடி முன்பு அமர்ந்து மாய்ஸ்டரைசரை உள்ளங்கையில் கொட்டியவள் முகத்தில் தேய்க்க ஆரம்பித்தாள்.
அவளுக்கு பின்னால் நின்றிருந்த சூர்யா, கண்ணாடி வழியாக சந்தியாவை பார்த்து…
“என்ன முடிவு பண்ணியிருக்க?” எனக் கேட்டான்.
சந்தியாவும் ஒன்றும் தெரியாததை போல், “எதைப்பற்றி” என்று கேட்க, பற்களை கடித்தான் சூர்யா.
“பிடிக்காமல், வேண்டான்னு நினைக்குற இந்த கல்யாணத்தை நிறுத்த என்ன பிளான் பண்ணியிருக்க” என்று இம்முறை தெளிவாகக் கேட்டான்.
“இப்படி விவரமா சொன்னாத்தானே விளங்கும்” என்ற சந்தியா, “அதை உன்னிடம் ஏன் சொல்லவேண்டும்” என்றாள்.
“அப்போ நீ ஏதோ பண்ணப்போற, ஐ மீன் இந்த கல்யாணம் நடக்காது.”
“எஸ்.”
“ஃபைன்.”
கல்யாணத்தை நிறுத்தப்போகிறேன் என்றால் அவன் அதிர்வான் என்று நினைக்க, அவனோ நல்லது என்று சொல்லுகிறான் என சந்தியா சூர்யாவை ஆராய…
“எனக்கும் இந்த கல்யாணம் நடக்கக்கூடாது” என்றான்.
“ஏன்?”
“பின்ன உன் மனசுல மாமாவைப்பற்றி ஒரு நன் மதிப்பும் இல்லை. கல்யாணத்திற்கு முன்பே ஒப்பிட்டு பார்த்து, பணம் பேரசையில் இருக்கும் உன்னை அவர் கட்டிக்கிட்டு நிம்மதியாகவா இருக்க முடியும். நிச்சயத்து அன்னைக்கே எல்லாம் முடிஞ்சிடும் பார்த்தால், அந்த கெழவி எப்படியோ சமாளிச்சிடுச்சு” என்றவனிடம் சந்தியாவுக்கு கோபம் வரவில்லை. மாறாக தன் திட்டத்திற்கு தனக்கு துணைக்கு ஆள் கிடைத்துவிட்டது என்றுதான் நினைத்தாள்.
மேசை ட்ராயரிலிருந்து சிறு கண்ணாடி குப்பியை எடுத்தவள், அதனின் வேதியியல் பெயரை சொல்லி… “இதை குடித்த பத்து நிமிடங்களில் நான் மயங்கிவிடுவேன், கல்யாணம் பிடிக்காமல் பொண்ணு விசம் சாப்பிட்டான்னு கல்யாணம் நின்னுப்போகும்” என்று சர்வ சாதாரணமாக சொல்லிய சந்தியாவை இம்முறை அதிர்ச்சியோடு பார்த்தான்.
‘உயிரை பணயம் வைத்து அப்படியெதற்கு கல்யாணத்தை நிறுத்த வேண்டும். இவள் நினைப்பதை போன்று மாமா அந்த அளவிற்கு கீழில்லையே. ஏன் இப்படி?’ மனதில் மட்டுமே நினைத்தான்.
“உண்மையாவே மாமாவை உனக்கு பிடிக்கலையா?” தங்கள் வீட்டு ஹீரோவை பிடிக்கவில்லை என்று இவ்வளவு கீழிறங்கி யோசிக்கிறாளே என தன்னையும் அறியாது கேட்டிருந்தான்.
“இதற்கான பதில் நிச்சயம் அன்றே உனக்கு தெரிந்திருக்கும்” என்றவள், சரியான நேரத்திற்குள் என்னை ஹாஸ்பிட்டலில் சேர்த்துட்டால் எவ்வித சேதாரமுமின்றி பிழைத்திடுவேன். அதை நீதான் பார்த்துக்கணும்” என்க, சூர்யா சற்று சிந்தித்தான்.
“கொஞ்சம் தாமதமானாலும் உன் உயிருக்கு ஏதாவது ஆகிடும். நாம வேறு எதாவது செய்யலாம்?”
“அதற்கு நேரமில்லை. எனக்கு இந்த கல்யாணம் நின்னே ஆகணும். நான் இப்போ டாக்டர். மேல படிச்சால் இன்னும் எந்நிலையிலும் மேல போயிடுவேன். அதற்கு சாகலர்ஷிப்பும் எனக்கு கிடைச்சிருக்கு. உன் மாமா சாதாரண வக்கீல், அதுவுமில்லாமல் அந்த முரடனிடம் என் வாழ்க்கையை நான் அடகு வைப்பதற்கு செத்தே போயிடலாம்” என்றவளை கன்னம் கன்னமாக அறைய வேண்டுமென்றுதான் சூர்யாவுக்கு தோன்றியது.
“அன்னைக்கு நடந்ததை வைத்து முரடன் அது இதுன்னு சொல்லாதே… அவரைப்பற்றி உனக்கு முழுசா தெரியல” என்ற செல்வம், “இனி தெரிஞ்சும் பலனில்லை. நீ தெரிஞ்சிக்கவும் வேண்டாம்” எனக்கூறி அவளின் திட்டத்திற்கு பதில் வேறொன்றைக் கூறினான்.
“இது சரி வருமா சூர்யா?”
“உயிரையே பணயம் வைக்க ரெடியாகிட்ட இது முடியாதா? எல்லாம் சரிவரும்” என்ற சூர்யா மனதில் எழுந்த நிம்மதியோடு உறங்கச் சென்றான்.
Epi 5
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
24
+1
2
+1
சூர்யா சூப்பர்
Thank you kaa