அத்தியாயம் 35 :
“ஹாய் நிரலி… இப்போ எப்படி இருக்க?”
குரலுக்கு சொந்தகாரரின் முகம் தெளிவில்லாமல் கண்களில் கசங்கிய பிம்பமாக விழ… திறக்க முடியாத கண்களின் இமைகளை மிகவும் கடினப்பட்டு பிரித்தெடுத்து பார்த்த நிரலிக்கு… தனக்கு முன்னால் நின்று கோணலாக இளித்துக் கொண்டிருந்த சந்தியாவை பார்த்து சிறிதும் அதிர்வில்லை.
தான் கட்டப்பட்டிருக்கும் நிலையை உணர்ந்தவள், சில மணி நேரங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வை நினைத்து பார்த்தாள். தான் செய்த தவறை நினைத்து வருத்தம் கொண்டாள்.
ஐஸ்கிரீம் பார்லரில் வட்ட மேசைகள் பல இருக்க, ஒன்றின் முன்னிருந்த இருக்கையில் சென்று நிரலி அமர்ந்தாள்.
“சோர்வா இருக்கா பேபி? காலையிலிருந்து காரில் சுற்றிக்கொண்டே இருக்கோம்.” அவளின் சோர்வின் சாயல் அவனிடத்தில்.
“இப்படியே ஐஸ்க்ரீம் வாங்கித்தராமல் வீட்டுக்கு கூட்டிட்டு போயிடலாம் பிளான் பண்றீங்களா? போங்க போங்க எல்லா ஃபிளேவரிலும் ஒவ்வொரு ஐஸ்கிரீம் வாங்கிட்டு வாங்க” என்று அவள் அவனை விரட்ட, அவனோ இருக்கையில் அமர்ந்து தன்னுடைய அலைபேசியை எடுத்து ஸ்வேதாவிற்கு அழைப்பு விடுத்தான்.
“இப்போ எதுக்கு மாமா அவங்களுக்கு கால் பண்றீங்க?”
ஆதி நிரலிக்கு பதில் சொல்ல வர, ஸ்வேதா அழைப்பை ஏற்றிருந்தாள்.
“சொல்லுங்க ஆதி.”
“ஸ்வே, பேபி ஐஸ்கிரீம் சாப்பிடலாமா?”
நிரலிக்கு அய்யோ என்றானது. கன்னத்தில் கை வைத்துக்கொண்டாள்.
“அளவா சாப்பிடலாம். கோல்டு (cold) ஆகாமல் பார்த்துக்கோங்கா.”
“ஷுயர்?”
“யா…”
“தேன்க் யூ ஸ்வே.”
ஆதி அலைபேசியை வைத்ததும், கன்னத்தில் கை வைத்து தன்னை பாவமாக ஏறிடும் மனைவியிடம் என்னவென்று பார்வையாலேயே வினவினான்.
“ஸ்வேதாவை நினைத்தால் எனக்கு பாவமா இருக்கு.” ஒருவித மலைப்புடன் கூறினாள்.
“ஏன் பேபி? ஸ்வேதாவுக்கு என்ன?”
“பின்ன… உங்ககிட்ட இன்னும் ஒன்பது மாதங்களுக்கு அவங்க படப்போகும் பாடை நினைத்தேன்” என்றவள் மேல்நோக்கி பார்த்து இரு கையையும் விரித்தாள்.
“பேபி…”
“என்ன பேபி… ஹ்ம்… இனி ஒவ்வொன்னுக்கும் அவங்களை கேள்வி கேட்டு தொல்லை பண்ணப்போறீங்க? அவங்க கிளினிக்கை மூடிட்டு ஓடப்போறங்கா!” கணவனின் அக்கறையில் உவகைக் கொண்டாலும், தனக்காக ரொம்ப மெனக்கெடுக்கிறானென்று கவலையும் கொண்டாள். சற்று அலுப்பாகக் கூடத் தோன்றியது.
“உன் விடயத்தில் எந்தவொரு ரிஸ்க் எடுக்கவும் நான் தயாராக இல்லை. அது ஐஸ்கிரீம் சாப்பிடுவதாக இருந்தாலும் சரி” என்றவன் “உனக்காக எந்தளவு ரிஸ்க்கும் எடுக்க என்னால் முடியும்” எனக் கூறினான்.
“எனக்காக எனக்காகன்னு ஸ்வேதாவை கஷ்டப்படுத்த போறீங்கன்னு இப்பவே தெரியுது!”
“இது அவளோட வொர்க் தானே பேபி.”
சொல்லியவன் அவளை ஆர்டர் செய்ய சொல்லிவிட்டு, வாஷ் ரூம் சென்று வருவதாகக் கூறிச் சென்றான்.
ஆதி நிரலியிடமிருந்து நகர்ந்த அடுத்த நொடி அவளின் முன்னே வந்து நின்றாள் சந்தியா.
நிரலி இப்போ யாரென்பது வரை நடந்த நிகழ்வுகள் அனைத்தும் சந்தியா தெரிந்து வைத்திருந்தாள். அன்று தன்னை அவமானப்படுத்தியதோடு ஆதி மற்றும் தன் குடும்பத்தின் முன்னிலையில் நிரலி அடித்ததை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இன்று வரை அதன் கோபம் அவளுள் கணன்றது.
தோழிகளுடன் மாலிற்குள் நுழைந்த சந்தியாவின் கண்களில் முதலில் பட்டது எஸ்கலேட்டரில் தனக்குள் அணைவாக நிரலியை வைத்தவாறு மேலேறி செல்லும் ஆதியைத்தான்.
“இந்த அணைப்பிற்குள் நானிருக்க வேண்டியது.” ஏக்கமாக பெருமூச்சு விட்டாலும் சந்தியாவிற்குள் வன்மம் மட்டுமே பிரதானமாக இருந்தது.
‘இவளை ஒழித்தால் போதும்!’ அவளின் மனம் பலமாக திட்டம் வகுத்தது.
வேறு வேலையிருப்பதாக சொல்லி தோழியரின் கூட்டத்திலிருந்து நழுவிக்கொண்ட சந்தியா நிரலியை சந்திப்பதற்கு சரியான தருணத்தை எதிர்பார்த்து மறைந்து நின்றாள்.
அவளின் எண்ணப்படியே ஆதி விலகிச்செல்ல, சந்தியா நிரலி முன் சென்றாள்.
சந்தியாவை பார்த்தும் பார்க்காததைப்போல், நிரலி மௌனமாக இருக்க…
“என் முகம் பார்க்கக்கூட உனக்கு பிடிக்கவில்லையா அம்மு” என்றாள். சந்தியாவின் குரலில் அவ்வளவு தன்மை. இருப்பினும் நிரலி சந்தேகக்கண் கொண்டு பார்த்தாள்.
“எனக்குத் தெரியும் அம்மு. நான் மன்னிக்கும்படியான தவறு ஒன்றும் செய்யவில்லை. எவ்வளவு பெரிய தவறென்று இப்போதுதான் யாருமில்லாமல் உணறுகிறேன்” என்ற சந்தியாக பொய்யாக கண்ணீர் சிந்தினாள்.
போலியாக கன்னங்களில் வழிய விட்ட நீருடன், “உன்னால் முடிந்தால் என்னை மன்னித்துவிடு அம்மு” என்று நிரலியின் கையை பிடித்துக்கொண்டு சந்தியா அழ, அவளின் கண்ணீரில் நிரலியின் மனம் ஆட்டம் கண்டது. உடன் பிறக்காவிட்டாலும், சகோதரி என்ற உறவில் சிறுவயதிலிருந்து உடன் வளர்ந்தவளாயிற்றே! அந்த பாசம் இன்றளவும் நிரலிக்கு உண்டு. சந்தேகத்தை பாசம் வென்றிட…
“அழாதே க்கா… ஏதோ நடக்க வேண்டும் நடந்துவிட்டது” என்ற நிரலி மேலும் சில பல ஆறுதல் வார்த்தைகள் பேசி சந்தியாவை சமாதானம் செய்தாள்.
ஆதி சென்று சில நிமிடங்கள் ஆகியிருக்க, அவன் வந்தால் காரியம் கெட்டுது என நினைத்த சந்தியா,
“தேன்க்ஸ் அம்மு என்னை மன்னித்தற்கு” எனக்கூறி, “பிரண்ட்ஸ் கூட வந்தேன். உன்னை பார்த்ததும் மன்னிப்பு கேட்கலாமென்று அவர்களிடம் சொல்லாமல் கூட வந்துவிட்டேன். என்னைத் தேடுவார்கள் வருகிறேன்” என்று வேகமாக நிரலியின் கண்ணிலிருந்து அகன்று மறைந்து நின்றாள்.
ஆதி வரும் போது நிரலி ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். ஆதி அவளருகில் அமர்ந்ததும், சந்தியா வந்ததை சொல்ல ஆதி மௌனமாகக் கேட்டுக்கொண்டான். ஆனால் சந்தியாவை நிரலியைப்போல் நம்ப அவன் தயாராக இல்லை.
நிரலி சொன்னதுக்கு, தான் கேட்டுக்கொண்டேன் எனும் விதமாக சிறு தலையசைப்பு மட்டுமே!
‘சந்தியா எதற்கோ அடி போடுகிறாள்.’ யோசித்துக்கொண்டே மனைவி ஐஸ்கிரீம் சாப்பிடும் அழகை ஆதி பார்த்துக் கொண்டிருக்கும் போது அவனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் சொல்லப்பட்ட விடயம் அறிந்து அதிர்ந்தவன் உடனடியாக வருவதாக சொல்லி வைத்தான்.
“பேபி” என்றழைத்தவன், அவனின் குரல் மாற்றத்தை வைத்தே, குனிந்து சாப்பிட்டவள் பட்டென்று வேகமாக நிமிர்ந்தாள்.
இந்நேரத்தில் மனைவிக்கு அதிர்வுகள் ஏற்படக் கூடாதென்று கருதியவன் என்ன விடயமென்று சொல்லாது, “நான் உடனடியாக செல்ல வேண்டும்” என்று மட்டும் சொல்லி, அவளிடம் காரினை கொடுத்து “மெதுவாகத்தான் செல்ல வேண்டும்” என ஆயிரமுறை வலியுறுத்தினாலும், அவளை செல்லவிடாது நின்றிருந்தான்.
ஆதியின் பதட்டத்தை உணர்ந்தவள், இந்த சென்னை சாலையில் வண்டியை ஓட்ட நினைத்து பயம் எழுந்தாலும் அதனை மறைத்தபடி, தான் கவனமாக செல்வதாகக் கூறினாள்.
ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த நிரலியை தனியாக அனுப்ப ஆதிக்கு மனமே இல்லை. ஆனால் இப்போது அவன் விரைந்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றான்.
“நீங்க போங்க மாமா. நான் வீட்டுக்கு போயிட்டு கால் செய்கிறேன்.”
“இல்லை பேபி… நீயிறங்கு, நான் உன்னை வீட்டில் விட்டுச் செல்கிறேன்.” ஆதி சொல்லிக் கொண்டிருக்கும் போதே மீண்டும் அழைப்பு வந்தது.
பேசி முடித்தவன் தயக்கத்தோடு மனைவியை பார்த்தான்.
“மாமா நீங்க போங்க” என்றாள்.
“ஆர் யூ ஷ்யர் பேபி.” ஆமென்று வேகமாக தலையாட்டினாள்.
மனமே இல்லாது சம்மதித்தவன்,
“எங்கும் நிறுத்தக் கூடாது. வீட்டிற்கு சென்ற பிறகு தான் வண்டியிலிருந்து இறங்க வேண்டும்” என்று சற்று கட்டளையாகவேக் கூறினான்.
நிரலி வண்டியை கிளப்ப, அவள் செல்லும் வேகத்தை கார் மறையும் வரை நின்று பார்த்து உறுதி செய்த பின்னரே ஆட்டோ ஒன்றை பிடித்து சென்ட்ரல் ஜெயில் நோக்கி சென்றான்.
ஏனோ தேவையில்லாது சந்தியாவின் முகம் கண் முன் தோன்றி மறைந்தது.
இன்று சந்தியாவின் தினம் போலும். அவளுக்கு சாதகமாக அனைத்தும் நடந்தது.
நிரலி தனியாக செல்வதை பார்த்திருந்த சந்தியா, அவள் செல்லும் பாதையில் அவளுக்கு முன்பாக சில தூரம் சென்று தன்னுடைய ஸ்கூட்டி நின்று விட்டதாக பெயர் பண்ணிக்கொண்டு சாலையில் போவோரிடம் லிப்ட் கேட்டுக்கொண்டு இருப்பதாக நடித்தாள்.
சந்தியாவை சாலையோரம் கண்டதும் நிரலி வண்டியை நிறுத்தி என்னவென்று விசாரித்து தானே அழைத்துச்சென்று விடுவதாகக் கூறி சந்தியாவை ஏற்றிக்கொண்டாள்.
தான் செல்ல வேண்டிய இடம் பற்றி சந்தியா சொல்ல… நிரலி தன் வீட்டிற்கு எதிர் புறமாக பயணிக்கத் தொடங்கினாள்.
அடுத்த சில நிமிடங்கள் நிரலியிடம் குடும்பத்தைப்பற்றி ஏதேதோ பேசிக்கொண்டே வந்த சந்தியா ஆளரவமற்ற தான் நினைத்த பகுதிக்கு வந்ததும் திடீரென ஸ்ப்ரே ஒன்றை எடுத்து, தன் மூக்கினை பொத்திக்கொண்டு நிரலியின் முகத்திற்கு நேரே அடித்தாள். நொடிப்பொழுதில் நிரலி மயங்கி சரிய, கார் சாலையில் தடுமாறியது. உடனடியாக எக்கி காரினை சீராக்கிய சந்தியா ஓரமாக நிறுத்திவிட்டு, முன்னேற்பாடாக அங்கு வர வைத்திருந்த… தன் ஆண் தோழன் உதவியோடு நிரலியை சலையோரக் காட்டுப்பகுதிக்கு நடுவில் இருக்கும் பாழடைந்த வீட்டில் இருக்கையில் கட்டி போட்டுவிட்டு நிரலி கண் விழிக்க காத்திருந்தாள்.
மாலில் இருந்து வீட்டிற்கு செல்ல இருபது நிமிடங்கள் ஆகும் என்று சரியாக கணித்த ஆதி… இன்னும் நிரலியிடமிருந்து அழைப்பு வரவில்லை என்று அவளின் எண்ணிற்கு அழைக்க அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
அடுத்து வள்ளி அக்காவிற்கு அழைத்து விசாரிக்க… நிரலி இன்னும் வரவில்லை என்பதை அறிந்து ஆதி தன்னுடைய நிதானத்தை இழந்தான். நொடியில் பித்து பிடித்தவன் போல் மாறியிருந்தான்.
தேவையில்லாது சந்தியாவின் நினைவு வேறு முரண்டியது.
நிரலியின் பாதுகாப்பை எண்ணி உள்ளுக்குள் பயந்தவன் வியர்வையால் குளித்திருந்தான். ஆதியும் முதல்முறையாக நடுக்கத்தை உணர்ந்தான்.
ஆதியின் அருகிலிருந்த ஆர்.கே “ஆதி என்னாச்சுப்பா?” என்று வினவ, ஒரு நொடி தயங்கியவன், “பேபி இன்னும் வீட்டுக்கு போகல” என்றான்.
“அதற்கா இவ்வளவு பதட்டம். பாரு எப்படி வியர்த்திருக்கு, டிராஃபிக் இருந்திருக்கும். இன்னும் கொஞ்ச நேரத்தில் அவளே கால் பண்ணுவாள்.”
ஆர்.கே சொல்லிய எந்த வார்த்தைகளிலும் ஆதி சமாதானம் ஆகவில்லை. அவனின் எண்ணமெல்லாம் நிரலி சந்தியாவைப் பற்றி பேசியதே நினைவிலாடியது.
“என் விடயத்தில் நீங்க பலவீனமாக இருக்கக்கூடாது மாமா. எனக்கொன்றென்றாலும் நிதானமாக யோசியுங்கள் வழி புலப்படும். நான் உங்கள் பலமாகத்தான் இருக்க வேண்டும். உங்களை தடுமாறச் செய்யும் ஆளாகா நானிருக்கக் கூடாது.” நிரலி சொல்லியது காதில் எதிரொலிக்க கண்களை இறுக மூடி தன்னை நிலைப்படுத்தினான்.
அந்நேரம் ஜெயில் வார்டன், “சார் பாடி” என்று வர,
“அவரின் அண்ணன் ஆர்.கே’விடமே கையெழுத்து வாங்கிவிட்டு கொடுங்கள்” என்றவன் கண்களை திறக்கவே இல்லை.
பிணமாக ஸ்ட்ரெச்சரில் கொண்டு வரப்பட்ட விஸ்வநாதனின் உடலைக் கண்டு ஆர்.கே சிறிதும் கலங்கவில்லை.
ஆம் விஸ்வநாதன் இறந்திருந்தார். அதுவும் கொலை செய்யப்பட்டு தன் மரணத்தை அடைந்திருந்தார்.
முன்னாள் அமைச்சரின் மகன் ரித்தேஷ் ஜெயிலுக்கு போக விஸ்வநாதன் ஒழுங்காக வழக்கை நடத்தாதது தான் காரணம். அத்தோடு அவ்வளவு பணம் வாங்கிக்கொண்டு தன்னை ஏமாற்றி விட்டதாக எண்ணிய அமைச்சர் ஜெயிலுக்குள்ளே ஆள் வைத்து விஸ்வநாதனை கொலை செய்தார்.
‘கூட பிறந்த நினைப்பு ஒன்றிற்காகத்தான் உன் உடலை வாங்குகிறேன்.’ மனதில் சொல்லிக்கொண்ட ஆர்.கே கையெழுத்திட்டு விஸ்வநாதனின் உடலை பெற்றுக் கொண்டார்.
“ஆதி போகலாம்.”
அதிர்ந்து கண் திறந்த ஆதி…
“எனக்கு ஏதோ உள்ளுக்குள் நெருடலாகவே இருக்கு” என்று கூறி வள்ளி அக்காவிற்கு மீண்டும் அழைத்து விசாரிக்க. நிரலி வரவில்லை என்கிற பதிலே கிடைத்தது.
ஆனால் இம்முறை ஆதி பதட்டம் கொள்ளவில்லை. நிறுத்தி நிதானாமாக சிந்திக்கத் துவங்கினான்.
“ஆதி நிருக்கு ஒன்றுமில்லையே?” இப்போது ஆர்.கே’விற்கும் பய உணர்வு ஆட்கொண்டது.
“நானிருக்கின்றேன் என்றால் என் பேபியும் நலமாக இருக்கின்றாள் என்று அர்த்தம்” என்றவனின் வார்த்தையில் அவனின் காதலின் ஆழம் கண்டு சிலிர்த்து அடக்கினார்.
“நீங்க விச்சுவிற்கு ஆக வேண்டியதை பாருங்கள். பேபியை நான் கூட்டி வருகிறேன்” என்ற ஆதி நேராகச் சென்றது தன்னுடைய காவல்துறை நண்பன் ராஜீவ் இடம்.
அவன் மூலமாக நிரலியின் அலைபேசி எண்ணை டிராக் செய்ய முயற்சிக்க பலன் பூஜ்ஜியம் தான்.
அப்போது தான் நினைவு வந்தவனாக தன் காரில் ஜிபிஎஸ் பொறுத்தப்பட்டிருப்பதை ஆதி சொல்ல அதனை வைத்து ஏதாவது செய்ய முடியுமா என்று பார்த்தான் ராஜீவ்.
சந்தியா காரினை நிறுதியிருந்த பகுதி சுற்றி காடு என்பதால் சிக்னலின்றி இருக்க… காவல்துறைக்கு இம்முயற்சியும் தோல்வியே! அனைத்து கதவுகளும் அடைக்கப் பட்டிருந்தன.
ஆதி கொஞ்சம் கொஞ்சமாக தன் நிதானத்தை இழந்து கொண்டிருந்தான். நிரலியின் வார்த்தைக்காக மட்டுமே அவள் விடயத்தில் பொறுமையை கையாளுகிறான்.
நேரம் இருள் பூசத் தொடங்கியது. அன்று பௌர்ணமி என்பதால் அந்த இருள் நேரமும் நன்கு வெளிச்சமாகத்தான் இருந்தது.
விஸ்வநாதனின் உடலை மின் தகனம் செய்து சாம்பல் கூட வேண்டாமென்று வாங்காது ஆதியைத் தேடி வந்துவிட்டார்.
ஆர்.கே காவல் நிலையம் வரும் போது இரு கைகளையும் கோர்த்து நெற்றியை தாங்கியவாறு தலை கவிழ்ந்திருந்த ஆதியைத்தான் அவர் காண நேர்ந்தது.
“ஆதி.” அவனின் அருகில் ஆர்.கே சென்றதும் அவரைக் கட்டிக்கொண்டு கதறிவிட்டான்.
“எனக்கு என் பேபி வேண்டும்.” சிறுப்பிள்ளையென அழுதான்.
நேரமாக ஆக ஆதி தன் சுயம் இழந்திருந்தான்.
இதற்கிடையில் ராஜீவ் தன் ஆட்களை அனுப்பி பல இடங்களில் தேட சொல்லியிருக்க எதற்கும் பலனில்லை.
“ஆதியாக இல்லாமல் ஏ.டி’யாக யோசி.” ஆர்.கே கூற, இதயத்தில் பேபி பேபி என்று ஜெபித்து தன்னை மீட்டவன் நிமிர்ந்து நின்றான்.
ஆர்.கே’வின் காரினை எடுத்துக்கொண்டு மாலிற்கு சென்றான். அங்கிருந்து நிரலி சென்ற பாதையில் பொறுமையாக கவனமாக பார்வையை பதித்தவாறு சென்று கொண்டிருந்தான்.
சாலையோரம் ஸ்கூட்டி ஒன்று ஆளின்றி தென்பட்டது. அருகில் சென்ற போதுதான் அது சந்தியாவுடையது என்பதை அடையாளம் கண்டு கொண்டான். சந்தியாவின் ஸ்கூட்டியை ஓரிரு முறை கவனித்திருக்கிறான். இருப்பினும் இது அவளுடையதென்று நம்ப எந்த தடயமும் இல்லை.
சிறிது நேரம் அங்கேயே காரினை நிறுத்திவிட்டு ஆதி பார்வையை சூழல விட, சில அடிகள் தூரத்திலிருந்த பேருந்து நிலையமும், அங்கு பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி காமிராவும் புலப்பட்டது.
உடனடியாக ராஜீவிற்கு அழைத்து அவ்விடத்தை சொல்லி… காமிரா புட்டேஜை ஆராய்ந்து பார்க்க நிரலி வண்டியை நிறுத்தியதும்… சில நொடி பேச்சு வார்த்தைக்குப் பின் சந்தியா காரில் ஏறுவதும் பதிவாகியிருந்தது. ஆனால் எந்தப்பக்கம் சென்றார்கள் என்று தெரியவில்லை.
அந்நேரம் மாமியிடமிருந்து ஆதிக்கு அழைப்பு வந்தது.
“என்னடா அம்பி… எத்தனைவாட்டி காட்டுக்குள்ளிருக்கும் அம்மனுக்கு பௌர்ணமி அன்னைக்கு விளக்கு போட்டால், பிரிஞ்சிருக்கும் புருஷன் பொண்டாட்டி ஒன்னு சேருவாங்கன்னு கூப்பிட்டு இருப்பேன். வந்திருக்கியா?” என்று ஆதியை பேசவே விடாது பேசிக்கொண்டே போனார்.
“இன்னைக்கு மட்டும் எப்படி வந்த. நேற்று தான் உன் பேபிகிட்ட இந்த கோவிலைப்பற்றி சொன்னேன். இன்று உன்னை கூட்டிட்டு வந்துட்டாளா?” என்றார்.
ஆதி அவரின் பேச்சு புரியாது குழம்பினான்.
“மாமி என்ன சொல்றீங்க?”
“என்னடா சொல்றேன் நான். கோவிலுக்குள் தான் இருக்கீங்களா? உன் காரை ரோட்டில் பார்த்துட்டு தான் சொல்லுறேன்” என்றார்.
****
“இந்தா இந்த மருந்தை குடிச்சிட்டு வலியில்லாமல் நீயா செத்துப்போயிடு” என்ற சந்தியா நிரலியின் முன் விஷம் அடங்கிய பாட்டிலை ஆட்டிக் காண்பித்தாள்.
நிரலி வாய் திறக்கவில்லை.
“என்னடி சம்மதமா?”
‘மாமா எதாவது ஆகுமுன் வந்துடுங்க.’ நிரலியின் மனம் ஆதியின் வரவை எதிர்பார்த்தது.
“விஷம் குடின்னா எப்படி குடிப்பாள். நீயே வாயில் ஊற்றிவிடு.” சந்தியாவுடன் இருந்த ஆண் தோழனில் ஒருவன் சொல்ல…
“கரெக்ட்” என்றவள்,
சந்தியா நிரலியின் இரண்டு கன்னத்தையும் அழுத்தி பிடிக்க, வாயினை இறுக பற்றியவாறு திறக்காது இட வலமாக தலையை ஆட்டினாள் நிரலி.
நிரலி வாய் திறக்காது அடம்பிடிக்க… நிரலியின் இரு கன்னங்களிலும் மாற்றி மாற்றி அறைந்தாள் சந்தியா.
“குடிடி… குடி, உன்னை ஒழித்தால் தான் நான் நிம்மதி.”
“வேண்டாம் சந்தியா என்னை விட்டுடு.”
“உன்னை விடுவதற்காகவா இவ்வளவு மெனக்கெட்டேன்.”
“எனக்காக இல்லையென்றாலும் என் வயிற்றிலிருக்கும் குழந்தைக்காகவாவது என்னை விட்டுடு ப்ளீஸ்.” நிரலி சந்தியாவிடம் கெஞ்சினாள்.
“நீ பிரக்னென்ட்டா இருக்கியா?” என்று அதிர்ந்த சந்தியா, “அப்போ முதலில் அதைத்தான் கொல்ல வேண்டும்” என்க நிரலி அரண்டு விட்டாள்.
“வேண்டாம் சந்தியா வேண்டாம்.” நிரலியின் கண்கள் கண்ணீரை வடிய விட்டன.
“பாருடா குழந்தை மேலிருக்கும் பாசத்தை. இவ்வளவு நேரம் கல்லு மாதிரி இருந்தவ இப்போ அழுறியே! எனக்கு எவ்வளவு சந்தோஷம் தருது தெரியுமா உன் அழுகை” என்ற சந்தியா அருகில் கிடந்த உருளையான கட்டை ஒன்றை கையில் எடுத்தாள்.
“அவள் கட்டை அவுறுங்கடா?”
சந்தியா சொல்லவும் ஒருவன் நிரலியின் கட்டை பிரித்து எழுப்பி நிறுத்தினான். நிரலியின் மற்றொரு புறம் இன்னொருவன் வந்து இருபுறமும் இரண்டு பேரும் பிடித்துக்கொள்ள…
நிரலியின் வயிற்றை நோக்கி கட்டையை ஓங்கினாள் சந்தியா.
“ப்ளீஸ்… ப்ளீஸ்… வேண்டாம்… சந்தியா ப்ளீஸ்…” நிரலி அழுகையில் வெடித்தாள்.
“நீ அழுவுறது எனக்கு பிடிச்சிருக்கே! குழந்தைக்கு ஒன்றும் ஆகக்கூடாதுன்னு நீ துடிக்கிறது சுகமா இருக்கு. குழந்தை மொத்தமா போயிட்டால் எப்படி அழுவ!” என்ற சந்தியா இம்முறை நிரலியின் வயிற்றில் கட்டையை இறக்கி விடும் எண்ணத்தில், கட்டையை ஓங்கி தன் கையின் விசையை பின்னோக்கிக் கொண்டு சென்று அதீத வேகத்துடன் நிரலியின் வயிற்றை நோக்கி கட்டையை இறக்கினாள்.
“மாமா.” நிரலியின் பெருங்குரல் அவ்வனமே அதிர எதிரொலித்தது.
அத்தியாயம் 36 :
ஒன்பது மாதங்களுக்குப் பிறகு,
“பேபி போதும்டா!”
“இன்னும் கொஞ்ச நேரம் மாமா… ப்ளீஸ்…”
அவனது பேபி முகம் சுருக்கி சிணுங்கினாள் அவனால் மறுக்க முடியுமோ!
உப்பு வாடை கலந்து வீசும் மாலை நேரத் தென்றல் மேனியை தழுவிச் செல்ல… கணவனின் தோள் அணைப்பில் வாகாக பொருந்தி… அலை நீர் பாதத்தை தொட்டு முத்தமிட்டுச் செல்ல கடற்கரையில் நடந்து கொண்டிருந்தாள் நிரலி.
“அலையோரம் போகாதே பேபி…”
மெல்ல அலை தீண்டும் எல்லையை கடந்து அழைத்து வந்தான்.
“ரொம்ப பண்றீங்க மாமா.”
“இப்போ என்ன பண்ணீட்டாங்களாம்… ஹ்ம்ம்…” விஷமப்புன்னகை அவனிடம்.
கணவனின் இத்தகைய புன்னகைக்கு அவளுக்கு அர்த்தம் விளங்காது. அவனின் நெஞ்சினிலே சிணுங்களாய் சாய்ந்தவளின் முகம் அந்தி வானுக்கு நிகராக நாணத்தில் சிவந்திருந்தது.
“இப்படியெல்லாம் டெம்ப்ட் பண்ணாத பேபி… அப்புறம் இப்பவே வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுவேன்.” காதலாய் மிரட்டினான்.
“வீட்டுக்கு போனாலும் ஒன்னும் நடக்காது மாமா. பேபி… பேபின்னு… உங்க ரெண்டு பேபியை நினைச்சே தள்ளி இருந்திடுவீங்க!” கேலியாக சொன்னாலோ அல்லது சிறு ஏக்கத்தோடு சொன்னாலோ… புரிய வேண்டிய அவனுக்கு நன்கு புரிந்தது.
“இன்னும் பத்தே நாள்… குட்டி பேபி வந்ததும், பெரிய பேபியை கவனிக்க வேண்டியதுதான்” என்றவன் அவளின் நெற்றியில் லேசாக முட்டினான். அதில் தெரிந்தது அவனின் அடக்கப்பட்ட காதல். அந்நேரம் அவர்களது பேபியும் தன்னிருப்பை அன்னையின் வயிற்றை உதைத்து காட்ட… அத்தீண்டலை நிரலியை அவளின் வயிற்றோடு சேர்த்து அணைவாக பிடித்திருந்த ஆதியின் கரமும் உணர்ந்தது.
கடந்த நான்கு மாதங்களில் தங்கள் மகவின் ஸ்பரிசத்தை உணர்ந்திருந்த போதிலும்… ஒவ்வொரு முறையும் தந்தையாக புதுவித உணர்வினை அனுபவித்தான் ஆதி.
“இந்த சந்தோஷத்திற்காகவே உனக்கு நிறைய செய்யணும் பேபி.” மிகுந்த உற்சாகத்தோடுக் கூறினான்.
“அப்போ நான் என்ன கேட்டாலும் செய்வீங்களா மாமா?” ஆர்வமாக வினவினாள்.
“நீ என்னை விட்டு ஊரில் சென்று இருக்கின்றேன் என்பதைத் தவிர வேறென்ன வேண்டுமானாலும் கேளு பேபி” என்றான். அவனுக்காத் தெரியாது அவளின் ராஜ தந்திரங்கள்.
“லவ் பண்ணுகிறேன் என்ற பெயரில் ரொம்ப பண்றீங்க மாமா. இப்படித்தான் வளைகாப்பு முடிந்தும் என்னை ஊரில் இருக்க விடல, அவ்வளவு அடம். இப்போ குழந்தை பிறந்த பிறகும் நானேதான் வச்சிப்பேன்னு இப்போலயிருந்தே அம்மம்மா, அம்மத்தா எல்லோரிடமும் சண்டை போட்டிட்டு இருக்கீங்க!” வருத்தமாகக் கூறினாலும் மிதமிஞ்சிய மகிழ்ச்சியே அவளுக்கு. தரையில் கால் பதிக்க விடாது தாங்கும் கணவனின் அன்பில் கரைந்திருப்பவளுக்கு மற்ற விருப்பங்கள் யாவும் அவனுக்கு பின் என்றானது.
ஏழாம் மாதம் ஊரில் அவர்களின் கிராமமே வாயில் விரல் வைக்கும் அளவிற்கு வெகு விமர்சையாக தங்கள் மகவின் வரவுக்கான வளைகாப்பு நிகழ்வினை செய்திருந்தான். பெயருக்கு வேலுவின் வீட்டிற்கு நிரலியை அனுப்பி வைத்தவன்,
“என்னால் என் பேபியை விட்டு இருக்க முடியாது” என்று வெளிப்படையாகவே தன் குடும்பத்தாரிடம் சொல்லி அடுத்த நாளே மனைவியைக் கூட்டிக்கொண்டு கிளம்பிவிட்டான்.
“இவ்வளவு தூரம் தான் உன் பொண்டாட்டியை விட்டு உன்னால் இருக்க முடியாது. அங்க அவளை பெத்தவங்க வீட்டிலாவது இருக்கட்டும். உனக்கு பக்கம் தானே நீ தினமும் போய் பார்த்துக்கோ! இந்த மாதிரி நேரத்தில் பெரியவங்க பக்குவம் தாய் சேய் ரெண்டு பேருக்கும் ரொம்ப முக்கியம். தெய்வா நிரலியை பார்த்துப்பாள். அத்தோடு ஸ்வேதாவும் நிரலி கூடவே இருப்பாள்.”
கற்பகம் பேரனுக்கு கட்டளை போல் சொல்ல… சம்மதம் என்பது போல் தலையை ஆட்டினாலும் நிரலியை ஆர்.கே வீட்டில் விட்டு வந்த இரண்டு மணி நேரத்தில் அங்கு மனைவியை காண சென்றுவிட்டான்.
ஆர்.கே’வும் குழந்தை பிறக்கும் வரை ஆதியை அங்கேயே தங்கிக்கொள்ள சொன்னாலும்… இவ்வளவு தன்னுடைய குருவாக பார்த்தவர் முன்பு சகஜமாக இருக்க முடியாது என்பதை உணர்ந்தவன் அதனை மறுத்துவிட்டான்.
“என்னால் இங்கு இயல்பாக வந்து போக முடியல பேபி. ஆர்.கே சார் முன்பு உன்னிடம் பேசக்கூட வரமாட்டேங்குது!” ஆதி புலம்பி கெஞ்சியே நிரலியை அவனுடன் அழைத்துச் சென்று விட்டான். இப்போது தெய்வா தான் இரண்டு நாளுக்கு ஒருமுறை ஆதி வீட்டிற்கு மகளை காண சென்று வருகிறார்.
நினைத்து பார்த்தவளுக்கு சிரிப்பு வர,
“ரொம்பத்தான்… போடா” என்றவள் மணற்பரப்பில் மெல்ல அமர்ந்தாள். அவளின் முகத்தில் சோர்வு. வேக மூச்சுக்கள் வெளி வந்தன.
“என்னாச்சு பேபி?” அவளிடத்தில் மட்டும் அவன் கொள்ளும் பதட்டமும், பயமும் அவனை விட்டு செல்லவில்லை. எவ்வளவு முயற்சித்தும் அவனின் பேபி என்கிற நிலை வரும்போது, தான் பலர் நடுங்கும் ஏ.டி என்பதெல்லாம் போய்த்துப்போக… நிரலியின் தேவாவாக மட்டுமே இருக்கின்றான்.
“அச்சோ மாமா… ஒன்னுமில்லை. ரொம்ப நடந்துட்டேன் போல! அதான், வேறொன்னுமில்லை.”
“நிஜமாவா பேபி?”
ஆமென்று வேகமாக தலையாட்டினாள்.
“நான் சொன்னப்பவே வந்து உட்கார்ந்திருக்கலாம். இப்போ பாரு எவ்வளவு ஸ்வெட் ஆகுது.” தன் கைக்குட்டையால் அவளின் நெற்றி கன்னம் என துடைத்து விட்டான்.
பருக நீர் கொடுத்தான். பாட்டிலை பிடித்திருந்தவனின் கையில் லேசான நடுக்கம்.
பிரசவ தேதிக்கு இன்னும் பத்து நாட்கள் இருக்க… “வலி எப்போ வேண்டுமானாலும் வரலாம். அப்போது தாமதிக்காது உடனடியாக கூட்டு வந்திருங்க ஆதி” என்று ஸ்வேதா சொல்லியது ஆதியின் செவிகளில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. அதனாலே அவளின் சிறு சோர்வும் அவனை பதட்டப்படுத்தியது.
ஒருவரின் கை ஒருவர் கோர்த்தபடி ஆதியின் தோளில் தலை சாய்ந்திருந்தாள் நிரலி. அலைகளின் ஆர்பரிப்பை அவள் ரசித்திருக்க. ஆதியின் பார்வை முழுக்க அவனது பேபியிடம்.
“உனக்கு எதாவது வேணுமா பேபி.”
“புரியல?”
“நீயா இதுவரை என்னிடம் எதுவும் கேட்டதில்லை.”
“அதான் நான் கேட்பதற்கு முன்பு நீங்க செய்துவிடுகிறீர்களே மாமா!”
“எனக்கு நீ உரிமையாகக் கேட்டு ஏதேனும் செய்யணும் தோணுது பேபி.”
“அப்படியா?” என்றவள் சிறிது யோசித்தாள்.
“யோசனையெல்லாம் பலமாக இருக்கே!”
“எனக்கு எதுவும் வேண்டாம். ஆனால் ஒன்னு தெரிஞ்சிக்கணும்.”
ஆதியிடம் கேள்வியான பார்வை.
“சந்தியாவுக்கு என்னாச்சு?”
ஆதியிடம் பேரமைதி. இமைக்காது நிரலியின் கேள்வியை தாங்கியவாறு அவளின் கண்களை ஆழ்ந்து நோக்கினான்.
“இப்படி பார்த்தால் என்ன? பதில் சொல்லுங்க மாமா?”
“எனக்கு தெரியணும் நினைத்தால் நீங்களே சொல்லுவீங்க. இதை நீதான் பலமுறை சொல்லியிருக்க பேபி.”
“அப்போ சொல்ல மாட்டீங்க! இது எனக்கு தெரியக்கூடாது அவ்வளவுதானே!” என்றவள் பார்வையை திருப்பிக்கொண்டாள்.
ஆனால் உள்ளுக்குள் சிறு அச்சம் மேலெழும்ப பட்டென்று அவன் புறம் திரும்பினாள்.
நிரலி ஏதோ கேட்க வரும் வேளை ஆதியின் அலைபேசி அழைத்தது.
“மாமா நாங்க வந்துட்டோம். நீங்க எங்க இருக்கீங்க?”
“சும்மா வாக் வந்தோம்டா. இதோ வறோம்.”
நிரலியின் பிரசவத்தின் போது அனைவரும் உடனிருக்க விருப்பம் கொண்டு ஒரு வாரம் முன்னதாகவே வந்திருந்தனர்.
“ஊரிலிருந்து வந்துட்டாங்க பேபி போகலாம்” என்றவன் எழுந்து நின்று நிரலி எழ கை நீட்டினான்.
காரில் செல்லும் போது நிரலி ஆதியையே பார்த்தபடி இருக்க… ஆதியின் நினைவு அன்றைய தினத்திற்கு சென்று நடந்ததை நினைத்து பார்த்தது.
*****
நிரலியின் வயிற்றில் அடிக்க அதிக விசையுடன் சந்தியா கட்டையை ஓங்க… அடுத்த நொடி, பயத்தில் கண்களை இறுக மூடியிருந்த நிரலிக்கு கேட்டது சந்தியாவின் அலறல் தான்.
சந்தியா கட்டையை ஓங்கியதும் சரியாக அங்கு வந்து சேர்ந்த ஆதி, கீழே கிடந்த மற்றொரு கட்டையை எடுத்து சந்தியாவுக்கு முன் கட்டையுடன் நீண்ட கையில் குறி பார்த்து எறிய, ஆதி எறிந்த கட்டை சந்தியாவின் மணிக்கட்டை பலமாக தாக்கியது. அதில் ஏற்பட்ட வலியால் அலறியவள் கட்டையை கீழே போட்டிருந்தாள்.
கண்களை திறந்த நிரலி ஆதியை கண்டதும் திடம் பெற்றவளாக அழுத விழிகளை துடைக்க… தன் பேபியின் கண்களில் நீர் வரவழைத்த அவர்களை அவன் சும்மா விட்டுவிடுவானா என்ன? அத்தோடு அவனின் மகவை அல்லவா அவள் அழிக்க பார்த்தாள்.
தான் வந்துவிட்டதாக பார்வையாலேயே மனைவிக்கு தைரியம் சொல்லியவன் மெல்ல அவர்களை நோக்கி அடியெடுத்து வைக்க,
ஆதியை நோக்கி பாய்ந்து வந்த சந்தியாவின் ஆண் நண்பர்கள் இருவரையும் கண் இமைக்கும் நேரத்தில் தரையில் வீழ்த்திருந்தான் ஆதி. அவர்கள் இருவரும் எழவே சக்தியற்று தரையில் நெளிந்து கிடந்தனர்.
‘இனி தான் தப்ப முடியாது’ என எண்ணி,
தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து நிரலியின் வயிற்றின் மீது வைத்தாள் சந்தியா.
வழக்கம்போல் நிரலிக்கு ஒன்றென்றதும் தன்னை சூழவிருந்த பதட்டத்தை முயன்று புறம் தள்ளியவன், சூழலை கையாளும் விதத்தை சிந்தித்து செயல்பட்டான்.
சந்தியாவின் கவனத்தை சிதறச் செய்ய ஆதி பேச்சு கொடுத்தான். ராஜீவ் வருவதற்கு முன் எவ்வித அசம்பாவிதமும் நடந்திடக் கூடாதென்று நினைத்தான்.
“இரண்டு வருடத்திற்கு முன்பு நீ எப்படி இருந்தாய் நினைவிருக்கா சந்தியா?”
“ரொம்ப நல்லா நினைவிருக்கே!” அப்படியொரு சிரிப்பு அவளிடத்தில்.
இருவர் பேசுவதும் புரியாது பார்த்திருந்தால் நிரலி.
“இப்போ நீ இப்படியிருக்க காரணம் நான் தான்.”
“என்ன சொல்லிக் காட்டுறீங்களா?”
“ச்ச… ச்ச… உனக்கு ஞாபகப்படுத்துறேன்.”
“நீங்க எனக்கு ஞாபகப்படுத்த வேண்டாம். அதற்கு அவசியமில்லை.”
“அப்போ வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைக்கப்போகிறாய் அப்படித்தானே!”
மெல்ல சந்தியாவை பேச்சினூடே நெருங்கியிருந்தான் ஆதி.
“கல்வி வரம் தான். அதுக்காகத்தான் உங்களை திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லாது ஓடி வந்தேன். ஆனால் வந்து என்ன புண்ணியம், பாயிண்ட் மார்க்கில் ஸ்காலர்ஷிப் கிடைக்காமல் போய்… சரியான பிராக்டிஸ் இல்லாமல் ஒரு சின்ன கிளினிக்கில் வேலை பார்க்கும் சூழல். ரெண்டு வருடம் நான் பட்ட கஷ்டம் போதுமென்று அந்த கடவுள் உங்க கண்ணில் என்னை காண்பித்து என் படிப்பிற்கு வழி செய்து தந்தார். இப்போ நான் ஒரு டாக்டர் அப்படின்னா அதுக்கு நீங்களும் ஒரு காரணம்.”
சந்தியா சொல்லி முடிக்க… அவள் எப்படி ஆதியிடம் என்ற நிரலியின் உள்ளுக்குள் இருந்த கேள்விக்கு பதில் கிடைத்திருந்தது.
“நீ டாக்டர் இல்லை சந்தியா.”
“அதை நீங்க சொல்ல வேண்டாம்.”
“எந்தவொரு டாக்டரும் ஒரு உயிரை கொல்லனும் நினைக்க மாட்டாங்க!”
“ஆனால் நான் நினைப்பேன். என் வாழ்வை இவள் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். இவளை கொன்னால் தான் எனக்கு நிம்மதி.” வெறி பிடித்தவள் போல் கத்திய சந்தியா துப்பாகியினை நிரலியின் வயிற்றில் அழுத்தி பிடிக்க…
“அன்னைக்கு நீ கிணற்றில் விழாமல் போயிருந்தாலும், நான் உன்னை கல்யாணம் செய்திருக்க மாட்டேன்.”
ஆதியின் அவ்வார்த்தைகளில் சந்தியா மொத்தமாக அதிர்ந்தாள்.
“என்றும் என் காதல் நிரலி மீது மட்டும் தான்.”
‘தான் வேண்டாமென்று வந்ததால் தான் ஆதி நிரலியை கல்யாணம் செய்து கொள்ளும்படி ஆனது’ என்று நினைத்திருந்த சந்தியாவின் எண்ணம் பொய்த்து போக கல்லென சமைந்து நின்றாள்.
அந்நொடியை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட ஆதி, சந்தியாவை பற்றி… அவளின் கையிலிருந்த துப்பாக்கியினை தன் வசப்படுத்தியிருந்தான்.
வெளியில் நின்றிருந்த மாமியை அழைத்தவன் நிரலியை அழைத்து போகுமாறு சொல்ல… மறுத்த நிரலியை தன் பார்வையாலேயே அவருடன் செல்ல வைத்தான் ஆதி.
மாமி ஒவ்வொரு மாதமும் நகருக்கு வெளிப்புறத்தில் சற்று தள்ளி அமைந்திருக்கும் காட்டில் உள்ள அம்மன் கோவிலுக்கு பௌர்ணமி இரவில் வந்து செல்வது வழக்கம். அன்றும் அதுபோல் வந்தவர் ஆதியின் கார் சாலையில் நிற்பதைக்கண்டு அவனுக்கு அழைத்து பேச…
நிரலியைத் தேடி அலைந்து கொண்டிருந்தவனுக்கு வெளிச்சம். உடனடியாக மாமி சொல்லிய இடத்திற்கு வந்தவன் நிரலியை காணவில்லை என்று சொல்லி அப்பகுதியை மாமியின் துணையுடன் அலச… கோவிலுக்கு பின்புறம் சற்று தொலைவில் ஒரு பாழடைந்த வீடு இருப்பதாக மாமி சொல்ல… உடனடியாக அவருடன் அங்கு விரைந்தான்.
மாமி தவறாது அக்கோவிலுக்கு வருவதால் அவருக்கு அவ்விடம் அத்துபடி.
அவ்வீட்டை நெருங்கும்போதே நிசப்தத்தில் பேச்சுக்குரல்கள் நன்கு கேட்க, மாமியை வெளியவே நிற்க வைத்துவிட்டு ஆதி மட்டும் உள் நுழைந்தான்.
தாங்கள் எப்படி இங்கு வந்தோமென்று மாமி சொல்லியவாறு நிரலியை அழைத்துச் செல்ல…
“மாமி பார்த்து… இப்போ அவள் ரெண்டு உயிர்” என்ற ஆதியின் வார்த்தையில் மகிழ்ந்தவர் நிரலியைக் கூட்டிக்கொண்டு கோவில் பக்கம் சென்றார்.
ஆதி மாமியிடம் சொன்னதில் சுயம் பெற்ற சந்தியா ஆதியின் பிடியிலிருந்து திமிரி விலக முயற்சி செய்ய அந்நேரம் சரியாக ராஜீவ் அங்கு வந்து சேர்ந்தான்.
ராஜீவின் காக்கி உடையை கண்ட சந்தியா ஆவேசமாக ஆதியை கீழே தள்ளிவிட்டு தப்பிக்க வீட்டின் பின் பக்கமாக ஓட, அவளை பிடிக்க ஆதியும் ராஜீவும் ஓடினர்.
இருட்டில் பாதை தெரியாது ஓடிக்கொண்டிருந்த சந்தியா பருத்து தடித்த மரத்தின் தண்டில் பலமாக தலை மோதி கீழே விழ… பின்னந்தலை கல்லில் இடித்து ரத்தம் வழிய மயக்கத்திற்குச் சென்றாள்.
அவள் கண் விழித்த போது அவளுக்கு அவளையே அடையாளம் தெரியாது போனது. மனநல காப்பகத்தில் தன்னை முழுமையாக மறந்த நிலையில் அவள்.
சந்தியாவின் இந்நிலையை அவளின் பெற்றோரான அம்பிகா மற்றும் தங்கமணிக்கு மட்டும் ஆதி சொல்லியிருந்தான்.
மகளின் நிலையை கண்டு அவர்களால் அழ மட்டும் தான் முடிந்தது.
மகளின் கோலத்தில் தன் தவறு உணர்ந்த தங்கமணி அன்று ஒருநாள் தான் பேசியதற்காக தன் தம்பி வேலுவிடம் மனம் உணர்ந்து மன்னிப்பு கேட்டிருந்தார்.
“குடும்பத்தில் யாருக்கும் சந்தியாவின் நிலை தெரிய வேண்டாம். அவள் விருப்பப்படி வெளிநாட்டில் நன்றாக இருக்கிறாளென்று இவர்கள் சந்தோஷமாக இருக்கட்டும்” என்று அம்பிகா கேட்டுக்கொள்ள ஆதியும் அதற்கு சம்மதித்தான்.
எந்த தாய்க்குத்தான் பிறர் தன் பிள்ளையை பைத்தியம் என்று சொல்லுவது பிடிக்கும்.
நினைத்து பார்த்தவன் தன் அக்காவிற்காக இதுநாள் வரை நிரலியிடம் கூட சந்தியாவைப்பற்றி சொல்லவில்லை.
“சந்தியா உயிரோடு தான் இருக்கிறாளா?”
நிரலியின் அக்கேள்வியில் நிகழ்காலம் திரும்பிய ஆதி…
“என் மேல் எவ்வளவு நம்பிக்கை உனக்கு” என்று அவளின் தலையில் வலிக்காது கொட்டினான்.
“நான் கேட்டதுக்கு பதில்?”
“உன்மேல் சத்தியம் பேபி. நான் சந்தியாவை ஒன்றும் செய்யவில்லை.”
நிரலி அமைதியாகக் கண் மூடிக்கொண்டாள்.
******
நான்கு நாட்களுக்குப் பிறகு,
நள்ளிரவில் ஆதியின் அணைப்பில் ஆழ்ந்த நித்திரையில் நிரலி.
உறக்கத்தில் நிரலியின் முகம் கசங்கியது. அவளின் வலியை அவளுக்கு முன்பு உணர்ந்தவன் சட்டென்று இமை திறந்தான்.
நிரலியின் உடல் முழுக்க வியர்வை பொங்கி வழிந்தது.
“பேபி.”
அவனின் அழைப்பில் அவள் முகம் சுருங்கியது. உதடுகள் பற்களில் கடிப்பட்டன. மெல்ல கண் திறந்தவள் ஆதியின் டீஷர்டை பிடித்துக்கொண்டு…
“மாமா வலிக்குது…” என்று மூச்சு வாங்கினாள்.
அவளின் வலி அவனுக்கு அழுகை வரும் போலானாது.
“பேபி… பேபி…” என்றவன் தன்னை நிதானப்படுத்தி… மனைவியை கைகளில் ஏந்தியவன், அந்நேரத்தில் யாரிடமும் சொல்லாது மருத்துவமனைக்கு விரைந்தான்.
செல்லும்போதே ஸ்வேதாவை அழைத்து சொல்லியிருக்க… எல்லாம் தயார் நிலையில் வைத்திருந்தாள். அந்நேரத்தில் ராகவும் அங்கு வந்திருந்தான். ராகவிற்கும் ஸ்வேதாவுக்கும் அவனின் விருப்படி ஆதி நிரலியே முன்னின்று இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்திருந்தது.
ஆதியின் காரினை கண்டதும் வாயிலிலேயே நின்றிருந்த ராகவ்…
“அத்தான்” என்ற அழைப்போடு அருகில் செல்ல, ஆதியின் அழும் விழிகளைக் கண்டு ராகவ் பதறிவிட்டான்.
ஆதியின் உடலில் நடுக்கத்தை கண்ட ராகவ் தானே நிரலியை தூக்க செல்ல, அவனைத் தடுத்த ஆதி தானே தன் மனைவியை தூக்கிச்சென்றான்.
நிரலியின் அழுத்தமான பிடியில் அவள் எத்தகைய வலியை அனுபவிக்கின்றாள் என்பதை உணர்ந்த ஆதி முற்றிலும் உடைந்து போனான்.
நிரலி லேபர் வார்டில் அனுமதிக்கப்பட… ஆதி அனைத்தும் மறந்த நிலையில் தன் பேபியின் நலன் ஒன்றை மட்டும் மனதில் நிறுத்தி கலங்கிய முகத்தோடு நின்றிருக்க ராகவ் தான் சூர்யாவுக்கு அழைத்து தகவல் சொன்னான். அடுத்த அரை மணி நேரத்தில் மொத்த குடும்பமும் மருத்துவமனையில் இருந்தனர்.
அனைவருக்கும் பதட்டம் இருந்தாலும், ஆதியின் கண்ணீர் சிந்தும் விழிகளையே அதிசயித்து பார்த்திருந்தனர். அவனின் தவிப்பு அங்கிருந்த அனைவருக்கும் புரிந்தது. ஆண்கள் அனைவரும் ஆறுதல் சொல்ல யாருக்கும் ஆதி செவி மடுக்கவில்லை.
குறுக்கும் நெடுக்குமாக நடந்தவன், கதவில் இருக்கும் கண்ணாடி துளை வழியாக அவனின் பேபி இருக்கும் அறையை தவிப்புடன் எட்டி பார்த்தவாறு இருந்தான்.
ஒரு கட்டத்தில் தன் பொறுமையை இழந்தவன், வேகமாக கதவை திறந்துகொண்டு உள்ளே செல்ல… அவனின் அழுத முகத்தை செவிலி விநோதமாகப் பார்த்தாள்.
“ஆதி.”
ஸ்வேதா அதிர்வோடு விளிக்க…
“என்ன பண்ணிட்டிருக்க ஸ்வே… மிட் நைட் வந்தோம். இப்போ மணி காலை ஏழு. இன்னமும் பேபி பிறக்கல” என்று கத்தினான்.
“பேபி கத்துவது அங்கு வெளியில் வரை கேட்கிறது.” ஆதியின் குரல் கமறியது.
“இதெல்லாம் சாதாரணம் ஆதி.”
“எது என் பேபி வலியில் துடிப்பது சாதாரணமா?” ஆதி கேட்ட தோரணையில் ஸ்வேதா மிரண்டு போனாள்.
ஆதி அழுகிறான் என்றதுமே நிரலி தன் வலியை கட்டுப்படுத்தி கத்துவதை நிறுத்தியிருந்தாள்.
“மாமா.”
நிரலியின் அழைப்பில் மனைவியின் அருகில் சென்றவன், அவளின் கரத்தினை தன் கரத்திற்குள் பொத்திக்கொண்டு…
“நமக்கு ஒரு பேபி போதும் பேபி… இன்னொரு முறை உன்னை இந்நிலையில் என்னால் பார்க்க முடியாது” என்றான். கண்ணீர் கன்னம் தாண்டி உருண்டோடியது.
ஸ்வேதாவிடம் திரும்பிய ஆதி…
“சி’செக்ஷன் பண்ணிடலாம் ஸ்வே. என்னால் என் பேபி வலியை தாங்க முடியவில்லை” என்றான்.
ஸ்வேதாவிற்கு அய்யோ என்றானது.
வெளியில் வந்த ஸ்வேதா ராகவையும், சூர்யாவையும் முறைத்து பார்த்து,
“ஒழுங்கா உங்க அத்தானை வெளியில் கொண்டு போங்க… நிருவைவிட ஆதி தான் ரொம்ப கத்துறான்” என்று எரிந்து விழுந்தாள்.
ஆதியின் செயலில் மனைவி மீது அவன் கொண்டுள்ள காதல் புரிய குடும்பத்தாருக்கு மன நிறைவு. முகத்தில் புன்னகை தானாக அரும்பியது.
ஆதியாவது வெளியில் தன் உணர்வை காட்டிவிட்டான். ஆனால் நிரலியின் ஒவ்வொரு கத்தலுக்கும் சூர்யா தங்கையை எண்ணி உள்ளுக்குள் மருகிக் கொண்டிருந்தான். தங்கையை ஒருமுறையேனும் பார்த்திட தவித்தான்.
இப்போது ஸ்வேதா வந்து சொல்லவும் ஆதியை வெளியில் கூட்டி வருகிறேனென்று உள்ளே நுழைந்தவன், நிரலியின் மற்றொரு காரத்தை பிடித்துக்கொண்டு…
“ரொம்ப வலிக்குதா அம்மு” என்று துடிப்புடன் கேட்டான்.
“இல்லை இனிக்குது.” ஏற்கனவே ஆதிக்காக வலியை பொறுத்துக் கொண்டிருந்தவள், சூர்யாவின் கேள்வியில் சிடுசிடுத்தாள்.
ராகவ் இருவரையும் பார்த்து தலையில் தட்டிக்கொண்டு சூர்யாவையும் ஆதியையும் பெரும்பாடுப்பட்டு வெளியில் இழுத்து வந்தான்.
ஆதி சென்ற நொடி வலி தாங்காது கட்டுப்படுத்தி வைத்திருந்த அழுகையை வெடித்து கதறினாள். வெளியில் வந்த ஆதி மீண்டும் உள்ளே ஓடி சென்று பார்க்க… அவர்களின் மகவு இவ்வுலகில் ஜனித்திருந்தது.
குழந்தையை கையில் தூக்கிய ஸ்வேதா,
“ஆதி பொண்ணு பிறந்திருக்காள்” என்று மகிழ்வோடு சொல்ல… ஆதியோ குழந்தையை ஏறிட்டும் பார்க்காது அவனது பேபியிடம் சென்றான்.
“லவ் யூ சோ மச் பேபி.” நிரலியின் நெற்றியில் இதழ் பதித்தான்.
“ஆர் யூ ஓகேடாம்மா?” புன்னகையும் கண்ணீரும் போட்டிபோட ம் என்று தலையசைத்தாள்.
“மாமா குழந்தை?”
நிரலி குழந்தை பற்றி வினவியதும் தான் ஆதியின் கவனம் மகவின் பக்கம் திரும்பியது.
ஸ்வேதா குழந்தையை ஆதியிடம் கொடுக்க… பூவின் மென்மையை கைகளில் உணர்ந்தவனின் தேகம் சிலிர்த்தது.
தன் மகளை கண்களில் ரசித்தவன், நிரலியின் முகத்தருகே கொண்டு சென்று காட்ட… நிரலி மற்றும் ஆதியின் தலை இணைந்திருக்க அவர்களுக்கு நடுவில் பூக்குவியலாய் குழந்தை. அக்காட்சி பார்ப்பதற்கே சிலிர்ப்பை உண்டாக்க, தன் வெண்ணிற கோர்ட் பாக்கெட்டில் இருந்த தன்னுடைய அலைபேசியை எடுத்து அக்காட்சியை புகைப்படமாக சேமித்தாள் ஸ்வேதா.
அதன் பின்னர் தாயும் சேயும் தனியறைக்கு மாற்றப்பட மொத்த குடும்பமும் குழந்தையை கொண்டாடித் தீர்த்தனர். ஆனால் ஆதியின் மொத்த கவனமும் நிரலி மீது மட்டுமே!
“மாமா இது ஹாஸ்பிட்டல்.” சூர்யா ஆதியை கேலி செய்ய,
“புது பேபி வந்ததும் என் பேபியை எல்லாரும் மறந்துட்டீங்க. அதான் என் பேபியை நான் கவனிக்கின்றேன்” என்றவன் நிரலியை காதலாய் பார்க்க… குடும்பத்தின் முன் என்ன பார்வையென நிரலி நாணம் கொள்ள மொத்த குடும்பமும் சிரிப்பில் ஆர்பரித்தது.
அவர்கள் அனைவரும் மனதால் நிறைவு கொண்டு… ஆழமான சந்தோஷத்தில் திளைத்திருந்தனர்.
அவர்களின் சந்தோஷம் இன்றும் போல் என்றும் நிலைத்திருக்க வாழ்த்தி விடைபெறுவோம்.
எல்லாத் தருணங்களிலும் தன் ஏந்திழையவளுக்கு ஏற்படும் துன்பங்களில் ரட்சகனாக அரண் அமைத்து காத்தவன் தன் வாழ்நாள் முழுக்க தன்னிரு பேபிகளையும் இதயத்தில் மகிழ்வாய் சுமப்பான்.
*இவள் ரட்சகனின் எந்திழை.*
*தேவாவின் நிரலி.*
முற்றும்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
12
+1
59
+1
3
+1
1
ஆதி சூர்யா ராகவ் நிரலி அழகு.
மனமார்ந்த நன்றி அக்கா 💜🩷💕