அத்தியாயம் 31 :
அனைவரும் கிளம்பிச் சென்றிட வீடே வெறிச்சோடி காணப்பட்டது.
ஆதி மற்றும் நிரலி மட்டுமே!
அவர்களுக்கான தனிமை கிட்டியும் அதனை ஏற்காது இருவரும் அப்படியே வரவேற்பறையில் அமர்ந்திருந்தனர்.
இரவு உணவும் முடித்திருக்க உறங்க வேண்டியது தான்.
அப்போதுதான் தான் உண்டாகியிருப்பதை தானே நேரடியாக அவனிடம் சொல்லவில்லை என்று தன்மீது தன்னுடைய மாமன் வருத்தத்தில் இருக்கின்றான் என்பது நினைவில் எழ எதையோத் தேட தங்களது அறை நோக்கி எழுந்து ஓடினாள்.
படிகளிலும் அவ்வளவு வேகத்தில் ஏறியிருந்தாள்.
“பேபி…!”
நிரலியின் வேகத்தில் ஆதிதான் பதறிப்போனான்.
அவளின் பின்னே ஆதியும் அறைக்குள் நுழைய,
நொடி நேரத்தில் அறையையே புரட்டிப் போட்டு தேடிக் கொண்டிருந்தாள்.
“அறிவிருக்காடி உனக்கு?”
ஆதியின் முதல் கோபமான அதட்டலில், செய்து கொண்டிருப்பதை விடுத்து நிரலி அதிர்ந்து திரும்ப, தன்னையே நிந்தித்தவனாக தலையில் தட்டிக்கொண்டான்.
“சாரி பேபி” என்றவன், “முன்பு மாதிரி இனி நீ அதிர்ந்து கூட நடக்கக்கூடாது” எனக்கூறி இரவு நேர குளியலுக்காக குளியலறைக்குள் புகுந்தான்.
இதுவரை அவனுக்குத் தன்னிடம் காதலை மட்டுமே காட்டத் தெரியும் என்றிருந்தவளுக்கு அவனின் சத்தமான குரலே சற்று பயத்தை தோற்றுவிக்க மிரட்சியுடன் நின்றிருக்க, அவளின் நிலையை மனதில் வைத்து, தன் செயலுக்கு உடனே மன்னிப்பையும் வேண்டியவன்… மனைவி மற்றும் மகவின் நலன் வேண்டி அக்கறையாக சொல்லிச்சென்ற வார்த்தைகளிலேயே சுயம் பெற்றாள்.
அதன் பின்னரே தான் தேடிக்கொண்டிருந்த ஒன்றின் நினைவு மீண்டும் மூளையை எட்ட விரைந்து தேடத் தொடங்கினாள்.
ஆதி குளித்து முடித்து இலகுவான இரவு உடை அணிந்து வெளியில் வரும் வரையிலும் நிரலியின் தேடல் தொடர்ந்தது.
மனைவி எதைத் தேடிகிறாள் என்று கணவனுக்குத் தெரிந்துதான் இருந்தது.
‘தன்னிடம் சொல்லும் நினைவே இல்லாது இருந்தாளில்லையா! நன்றாகத் தேடட்டும். இதுதான் தண்டனை’ என மனதோடு சொல்லிக் கொண்டவன் நிரலியை கண்டுகொள்ளாது தொலைக்காட்சியை உயிர்ப்பித்து பாடல் சேனல் ஒன்றை வைத்தவன் அதில் மூழ்கிப்போனதை போன்று தன்னைக் காட்டிக்கொண்டான்.
தன்னிடம் சொல்ல வந்தவளிடம் பழையதை கூறி தான்தான் அவளின் மனநிலையை மாற்றிவிட்டோம் என்று வசதியாக மறந்து போனான்.
அறைக்குள் பாடல் ஒலிக்கவும், வார்ட்ரோபிற்குள் தலையைவிட்டு தன் துணிகளுக்கு நடுவில் தேடியபடி இருந்தவள் கணவனை எட்டிப் பார்த்தாள்.
“என்ன ஏ.டி சார் ரெமோவா மாறி உட்கார்ந்திருக்கார். எப்பவும் செய்திச் சேனல் தானே பார்க்கும். இன்னைக்கென்ன இளையராஜாவும், ரஹ்மானும் மாறி மாறி ஒலிக்குறாங்க” என்று முணுமுணுத்தவள் தன் வேலையைத் தொடர்ந்தாள்.
நிரலியின் முணுமுணுப்பில் அவள் புறம் பார்வையை பதித்த ஆதி,
“என்ன தேடிட்டு இருக்க?” என்றான். ஒன்றும் அறியாதவனாக.
“அது…” எப்படி சொல்வதென்று தெரியாது, “ஒன்னுமில்லை மாமா” என காற்றில் கைகளால் வரைந்துவிட்டு மீண்டும் துணிகளை புரட்டினாள்.
“எங்கு தொலைந்ததோ அங்கு தேடினால் தான் கிடைக்கும்” என்று மறைமுகமாகக் கூற, அவன் எதிர்பார்த்தபடியே நிரலிக்கு நினைவில் எட்டியது.
“அச்சோ” என்று முகம் சுளித்து நெற்றியில் தட்டிக் கொண்டவள் ஆதியின் அலுவலக அறை நோக்கி விரைந்தாள்.
மனைவியின் சிணுங்களான முகச் சுழிப்பில் கிறங்கியிருந்தவன் அவளின் வேகமான நடையில்,
“பேபி” என்று அழுத்தமாக விளிக்க, நின்று அவன் பக்கம் திரும்பியவள், தலைக்கு மேல் கைக்கூப்பி கும்பிட்டு… “இனி அடி பிரதக்ஷணம் மட்டும் தான்” என்றாள்.
ஆதி வந்த சிரிப்பை வாய்க்குள் புதைத்தான்.
சொன்னது போலவே அடி மேல் அடி வைத்து, ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் கடக்கும் படிகளை இரண்டு நிமிடங்கள் முடிந்த பின்னரே கடந்திருந்தாள்.
ஆதியின் பார்வையிலிருந்து விலகியதும் வேகமாக சாவியை எடுத்துக்கொண்டு சென்றவள் அலுவலக அறையைத் திறந்து, மின் விளக்கை ஒளிரச் செய்து எதிலும் கண்களை ஓட்டாது ஆதி அமரும் இருக்கைக்கு கீழ் சென்று குனிந்து தேடினாள்.
“தான் குனிந்திருப்பதை பார்த்தால் இதுக்கும் திட்டுவார்” என்று வாய்விட்டே சொன்னவள் கணவனின் அன்பில் தனக்குள் புன்னகைத்தவளாக தரையில் அமர்ந்து இருக்கை மற்றும் மேசைக்கு கீழ் கண்களை செலுத்தினாள்.
எதுவும் கிட்டாது போக ஏமாந்து சோர்ந்து போனவளாக எழும்பி இடுப்பில் கை வைத்து நின்றாள்.
“அன்னைக்கு மாமா மடியில் இங்கு தானே உட்கார்ந்து இருந்தோம்! அப்போ கையில் தானே இருந்தது” என்று சொல்லியவாறு அறை முழுக்க பார்வையால் வலம் வந்தவளின் கண்கள் மேசையின் மீது நிலைகுத்தி நின்றது.
இதய வடிவிலான மிகச்சிறிய அளவிலான பெட்டி. சிவப்பு நிறத்தில் பளபளக்கும் வண்ண காகிதம் பெட்டியின் வடிவத்திற்கு ஏற்றவாறே சுற்றப்பட்டிருந்தது.
மேலே “டூ மை பேபி” என்ற எழுத்துக்களை கண்டவளின் விழிகளில் ஒரு எதிர்பார்ப்பு.
முதல் முதலாக ஆதி அவளுக்கு அளிக்கும் பரிசு. இரண்டாவது பரிசென்று சொல்ல வேண்டுமோ! அதான் அவளின் சிப்பியில் தன் முத்தை சேர்த்திருந்தானே!
மிகக் கவனமாக பொறுமையாக கவரினை பிரித்தவள் பெட்டியை திறக்க, அவள் தேடியது அதனுள் அழகாய் வீற்றிருந்தது.
கர்ப்பத்தினை உறுதி செய்யும் கிட்.
மெல்லிய தங்கச் சங்கலியால் சுற்றப்பட்டிருந்தது. அதில் டி.என் (DN-தேவா, நிரலி) என்ற ஆங்கில எழுத்துக்கள் இரண்டு சிறு சிறு இதயங்களில் தொங்கிக் கொண்டிருந்தன. அந்த சங்கிலி பிறந்த குழந்தைக்கு ஏற்ற வகையில் அமைந்திருந்தது.
அதனை பார்த்ததுமே யாருக்கென்று நிரலிக்கு புரிந்தது. கண்கள் தானாக அளவில்லாத மகிழ்வில் பனித்தன.
கிட் மற்றும் சங்கிலியை கையில் எடுக்க அதற்கடியில் சிறு அட்டை ஒன்று இருந்தது.
அதில்,
“என்னை அப்பாவாக்கியதற்கு நன்றிடி பொண்டாட்டி” என்ற வரியோடு, “என் பேபிக்குள் என் பேபி… லவ் யூ பேபி. இந்த நொடியை கடக்கவே அவ்வளவு சந்தோஷமா இருக்கு. இன் திஸ் மொமெண்ட் அம் தி ஹேப்பியெஸ்ட் பெர்சன் இன் திஸ் வோர்ல்டு. இந்த சந்தோஷத்தை பரிசாகக் கொடுத்த என் பேபிக்கான பரிசு என்னிடம் உள்ளது” என்று எழுதியிருந்தது.
கட்டுக்குள் அடக்கிடாத மகிழ்வு இதயத்தில் பேரலைகொண்டு ஆர்பரித்திருக்க… கணவனின் எழுத்துக்களில் விளைந்த உவகையால் கன்னங்களில் சந்தோஷ மழை சடசடக்க நிமிர்ந்தவளின் எதிரே அறை வாயிலின் கதவில் சாய்ந்து நெஞ்சுக்கு குறுக்காக கைகளைக் கட்டிக்கொண்டு அவளையே பார்த்து நின்றிருந்தான் அவளவன்.
நீர் ததும்பும் விழிகளோடு உதடுகள் துடிக்க நின்றிருந்தவளை அள்ளி அணைக்க பேராவல் எழுந்திட, நின்ற இடத்திலிருந்தே இரு கை நீட்டி வாவென்று கண்ணசைவில் அழைத்தான்.
பறவையின் அலகு பட்டு சூல் வெடிக்கும் மலராக விரைந்து கணவனின் நெஞ்சத்தில் சாய்ந்திருந்தாள்.
தன் பேபிக்கள் இருவருக்கும் நோகாது அணைத்தவன், அவனிடமிருக்கும் அவளுக்கான பரிசை தன் இதழ் வழியே அவளின் இதழுக்கு அளிக்கத் துவங்கினான்.
இருவரும் தங்கள் இணையின் காதலை உணர்ந்த நொடி கொண்ட மகிழ்வை சற்றும் குறைவில்லாது தங்கள் மகவின் வருகை அறிந்த தருணத்தில் கொண்டிருந்தனர்.
எப்போது அவளை தன் கைகளில் ஏந்தி தங்களது அறைக்குள் வந்திருந்தானோ, ஒருவரின் அணைப்பில் ஒருவர் கட்டுண்டு இருந்தனர்.
ஆதியின் உதடுகள் பேபியென்றும், நிரலியின் செவ்விதழ்கள் தேவாவென்றும் இசைத்துக் கொண்டிருந்தன. இருவருக்கும் விலகும் எண்ணம் சிறிதும் இல்லை.
கடந்து சென்ற பரபரப்பான நாட்களில், அவனின் வேலைப்பளு காரணமாக இருவரும் பேசிக்கொள்வதே அரிதாக இருந்த நிலையில் இந்த கணம் தங்களின் மகிழ்வு, தவிப்பு, காதல், ஏக்கம் அனைத்தையும் ஒருவருக்கொருவர் செயல்களால் சொல்லிக் கொண்டிருப்பதோடு, புரிய வைக்கும் நோக்கில் முனைப்பாக இருக்க…
‘நடந்தவற்றை சொல்லும் தருணம் இதுவே’ என்று ஆதியின் மனம் சொல்ல, அவனுக்கும் அதுவே சரியென்று பட… நிரலியை தன் அணைப்பிலிருந்து விலக்கும் எண்ணமே இன்றி கையில் ஏந்தியவன் மஞ்சத்தை நோக்கி நகர,
“மாமா… இப்போ இது” என்று படுக்கையை சுட்டி அர்த்தமாக அவள் கண் காட்டினாள்.
மனைவியின் நெற்றியில் தன் நெற்றி கொண்டு செல்லமாக முட்டியவன்,
“எனக்கும் தெரியும் பேபி… ஸ்வேதாவை பார்த்திட்டு அப்புறம் மத்ததெல்லாம்” என்று ஆதியும் அவள் மொழிந்த அர்த்தத்திலேயே பதிலும் சொல்லியிருந்தான்.
மெத்தையில் நன்கு வசதியாக அமர்நதவன் தன் பேபியை தூக்கி தன்னுடைய மடியில் அமர்த்தினான்.
“மாமா…” அழகாய் நாணம் கொண்டாள் மங்கை.
“பேபி டெம்ப்ட் பண்ணாத… நீ இந்த நிலையில்… வேண்டாம். நான் ரொம்பவே கட்டுப்படுத்திட்டு இருக்கேன்” என்றான்.
உண்மையில் மனைவியின் பூரித்த முகப்பொலிவில் பொங்கி வரும் உணர்வு பிரலயங்களை அடக்கிக்கொண்டு தான் மனைவியின் அருகாமையை விட்டுக்கொடுக்க முடியாது அமர்ந்திருக்கின்றான்.
“அப்போ நான் பெட்டிலே (bed) உட்காருறேனே மாமா!” என்றவள் சொன்னதை செய்ய,
“அதெல்லாம் வேண்டாம். உன்கிட்ட நான் நிறைய பேசணும் அதற்கு இதுதான் வசதி” என்று சொல்லி மீண்டும் தன்னவளை தன் மடி சேர்த்தான்.
பேச வேண்டுமென்று சொல்லிவிட்டான். ஆனால் அவனிடம் துவக்கம் என்பது தடைபட்டிருந்தது.
‘மீண்டும் ஒரு அதிர்வு தன் வாழ்வில் வரப்போகிறதோ?’
ஆதியின் அமைதி அவளுக்குள் நடந்து முடிந்த நிகழ்வுப்போல் வேறொன்றும் வந்திடுமோ என்ற எண்ணத்தை தோற்றுவித்தது.
“என்ன விடயம் மாமா? உங்களுடைய அமைதி எனக்கு பயத்தை கொடுக்குது மாமா.”
மனைவியின் குரலில் கலக்கத்தைக் கண்டவன்,
“அச்சோ பேபி நீ பயம் கொள்ளும் அளவிற்கு ஒன்றுமில்லை. இது நான்கு வருடங்களுக்கு முன்பானது. இப்போ உன்னிடம் எல்லாம் சொல்லிவிட வேண்டுமென்று தோன்றுகிறது. அவ்வளவுதான்” என்றான்.
“உங்க காதல்… சந்தியா… என்னை விட்டு வந்ததன் காரணம். அதானே?”
நிரலியின் வார்த்தைகள் முடிவடையா பல கேள்விகளுக்கு ஆமான்று பதில் வழங்கிய ஆதி அவளின் நெற்றியில் அழுந்த, முத்தம் ஒன்றை வைத்து அவளின் கண்களை பார்த்து நேருக்கு நேராக சொல்லத் துவங்கினான்.
“உனக்குத் தெரியுமா பேபி…
விடிந்தால் சந்தியாவுடன் திருமணம், ஆனால் அன்றிரவு என் காதலை நான் அறிகிறேன். உணர்கிறேன் எப்படி வேணாலும் வைத்துக் கொள்ளலாம்” என்றவன் ஒரு கணம் கண்களை மூடி அந்நாளுக்கு தங்களது நிகழ்வுகளை மீட்டுகிறான்.
திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு… உறவினர்கள் வருவதுமாக இருந்தனர். வேலைகள் முடிந்து அனைவரும் உறங்கச் சென்றிட, உறக்கம் வராமல் நாளை நடைபெற இருக்கும் கல்யாண கனவுகள் எதுவுமின்றி ஏதோ அலைக்கழிப்பில் கட்டிலில் உருண்டு புரண்டு கொண்டிருந்த ஆதி பொறுமை நீங்கியவனாக அறைக்கு வெளியில் வந்து நின்று மேலிருந்தவாறே கீழே கூடத்தின் நடுவில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டுக் கொண்டிருந்த திருமண மேடையை கவனிக்கத் தொடங்கினான்.
பல வண்ணங்களில் மலர்கள் அங்கே வீற்றிருக்க… அப்பூக்கள் யாவும் நிரலியின் மலர்ந்த முகத்தையே ஆதியின் கண் முன் காட்டின.
“என்ன இந்த வாலு முகமே கண்ணுல வந்து நிக்குது” என்று காரணம் புரியாது கேட்டுக்கொண்டவனுக்கு, நாளை திருமணம் இருக்கும் நிலையில் இன்று அவனின் காதல் யாரென்பதை அவனுக்கு காட்டிட அவனின் மனம் துடித்தது.
அவனுக்குத்தான் மனதின் பாஷைகள் விளங்கவில்லை.
அந்நேரம் எங்கிருந்தோ இதமான பார்வை ஒன்று அவனின் முதுகை துளைப்பதை உணர்ந்தவனுக்கு நிரலி அவனை பார்த்து ஏதோ ஒன்றை கேட்கும் பார்வை பொதிந்த கண்கள் தான் நினைவுக்கு வந்தன.
“என்னடா இது திரும்பத்திரும்ப இந்த வாலு ஞாபகமாவே இருக்கே!” என்றவன் யார் தன்னை மறைந்திருந்து பார்ப்பதென்று பார்வையால் அத்தளம் முழுக்க அலச,
ஆதியின் அறைக்கு நேரெதிர் முற்றத்தின் இடைவெளி கடந்து இருக்கும் சந்தியாவின் அறைக்கு முன்னிருக்கும் தூணுக்கு பின்னால் நின்று ஆதியையே பார்த்திருந்த நிரலி சட்டென்று தன்னை முழுவதுமாக மறைத்துக் கொண்டாள்.
உடலை மறைத்தவள் தூணை சுற்றி பிடித்திருந்த கையினை எடுக்க மறந்திருக்க, அவளின் விரலில் அணிந்திருந்த மோதிரம் அது யாரென்பதை ஆதிக்கு காட்டிக் கொடுத்தது.
அந்த மோதிரம் ஆதியின் பள்ளி வயதில் காமாட்சி ஆசையாக செய்து போட்டது. விரலினிலேயே இருக்கவும், ஆதி தேகம் விரிவடைய விரலோடு இறுகிப்போனது. கல்லூரி காலம் முடிந்த சமயம் பெரும்பாடு பட்டு குடும்பமே சேர்ந்து அந்த மோதிரத்தை கழட்டியது. அதனால் அந்நிகழ்வையும் அந்த மோதிரத்தையும் ஆதியால் என்றுமே மறக்க முடியாது.
அன்றே ஆதியிடம் கேட்டு அந்த மோதிரத்தை தனதாக்கியிருந்தாள் நிரலி.
இப்போது வீடு முழுக்க விளக்குகள் ஒளிர்வதால், அதன் வெளிச்சத்தில் மோதிரம் நன்கு பிரகாசிக்க ஆதியின் கண்கள் சரியாக கண்டுகொண்டது.
“எதற்கு ஒளிந்து நின்று பார்க்கிறாள்?”
கேள்வி எழுந்த நொடி நிரலியிடமே கேட்க நினைத்து நகர்ந்த வேளையில் தான் அது சந்தியாவின் அறை இருக்கும் பகுதியென்று அறிந்து கீழே இறங்கிச் சென்று அங்கு தனியாக அமர்ந்திருந்த வேலுவின் அருகில் அமர்ந்து அவரிடம் பேசிக்கொண்டிருக்க… மீண்டும் அவனை ஆழ்ந்து துளைக்கும் பார்வை.
இம்முறை ஆராயாது அது யாரென்று உணர்ந்தவனுக்கு ஏனென்று தான் புரியவில்லை.
எவ்வளவு நேரம் அமர்ந்திருப்பதென்று வேலுவும், ஆதியும் அப்படியே வீட்டைச் சுற்றிக்கொண்டு பின்பக்கமிருக்கும் தோட்டப்பகுதிக்கு சென்று சற்று காலார காற்றோட்டமாக நடக்கலாமென செல்ல ஒரு அறையிலிருந்து பேச்சுக்குரல் கேட்டது.
இரவு நேர நிசப்தத்திற்கே சற்று சன்னமாகத்தான் கேட்டது.
உறவினர்கள் ஒன்று சேர்ந்திருக்கும் வேளையில் யாரேனும் கதை பேசுவதாக இருக்குமென்று இருவரும் அவ்வறையை கடக்க இருந்த சமயம், கற்பகத்தின் குரல் அமைதியை கிழித்துக்கொண்டு வெளிவந்தது.
“இங்கப்பாரு செல்வி நிரலி உனக்கு மகளாக இருக்கலாம். ஆனால், அவள் இந்த வம்சத்தோட வாரிசு இல்லை. அதை நல்லா நினைவில் வைத்துக்கொள்.”
வேலு அப்பேச்சில் ஸ்தம்பித்து நின்றுவிட, அவரின் அதிர்ந்த தோற்றத்தில் ஆதியும் கற்பகத்தின் பேச்சினை உள்வாங்கியவாறு அங்கேயே நின்று விட்டான்.
“அப்பத்தா இப்போ நான் என்ன கேட்டேன். சந்தியாவை நீங்க கட்டாயப்படுத்தி சம்மதிக்க வச்சிருக்கீங்களான்னு கேட்டேன் அதுக்கெதுக்கு என் பொண்ணை இழுக்குறீங்க” என்று செல்வியும் கற்பகத்திடம் கோபத்தைக் காட்டினார்.
“என்னடி சத்தமெல்லாம் பலமா இருக்கு… சந்தியாவை ஓரங்கட்டிட்டால் உன் மகளை இந்த வீட்டுக்கு கொண்டு வந்திடலாம் பார்க்குறியா? அது ஒரு நாளும் நடக்காது” என்ற கற்பகம்,
“நிரலி எப்படி இந்த வீட்டுக்கு வந்தா(ள்)ன்னு நினைத்துப்பார்” என்று செல்வி மற்றும் கற்பகம் சேர்ந்து செய்த நிகழ்வையெல்லாம் ஒன்றுவிடாமல் சொல்லி…
“யாரென்றே தெரியாத அனாதை என் பேரனுக்கு பொண்டாட்டி ஆகிட முடியுமா? அந்த எண்ணத்தை அழிச்சிடு” என்று ஆங்காரமாகக் கூறிய கற்பகம் படுத்ததும் உறங்கிப் போனார்.
“எனக்கு அப்படியொரு எண்ணமே இல்லையே! தேவையில்லாமல் இப்போ இதையெதுக்கு பேசினார்” என்று புரியாது சற்று சத்தமாகவே புலம்பிய செல்வியும் அவ்வறையிலேயே படுத்துக் கொண்டார்.
உண்மை அறிந்த வேலு செல்வியின் மீது கோபம் கொள்ள,
“என்கிட்டவே எவ்வளவு பெரிய உண்மையை மறைத்திருக்கிறாள் பாரு ஆதிப்பா” என்றவர் அவ்வறைக்குள் நுழையப்போக, அவரை ஆதி தடுத்திருந்தான்.
“இப்போ தான் அப்பாத்தா நிரலியை நடத்திய விதத்திற்கு காரணம் புரியுது மாமா” என்ற ஆதி,
“நிரலி உங்க பொண்ணு தான் அப்டிங்கிறதுல இப்போ உங்களுக்கு ஏதேனும் மாற்று கருத்து இருக்கா மாமா?” என வினவினான்.
உடனடியாக இல்லையென்று தலையாட்டிவர், “நிரலி என் பொண்ணு ஆதிப்பா” என்றார். அவரின் கண்கள் கசிந்தன.
“அப்புறம் எதுக்கு மாமா கோபம். அக்காவுக்கு பயம். எங்கே உங்களை உங்க அம்மா சொன்னது போல் இன்னொரு பெண்ணுக்கு விட்டுக்கொடுக்கணுமோ அப்படிங்கிற பயம், அதான் இப்படி செய்துட்டாங்க. இதில் உங்களை பிரியக் கூடாதுங்கிற அக்காவோட காதல் தான் எனக்குத் தெரியுது.
உங்களுக்கும் அந்த காதல் தெரிந்தால், அக்காவா இதை சொல்லும் வரை உங்களுக்கு தெரிந்ததைப்போல் காட்டிக்காதீங்க” என்ற ஆதி தன்னறைக்கு வந்து விட்டான்.
யோசித்த வேலுவுக்கும் ஆதி சொல்லியது புரிய மனைவியின் காதலில் அவர் செய்த தவற்றை மன்னித்து விட்டார். ஆனால் மறைத்த வருத்தம் இருந்தது.
படுக்கையில் விழுந்த ஆதி கண்களை மூட நிரலியின் முகம் தான் வந்து போனது.
‘எந்நிலையிலும் நிரலிக்கு தான் துணையாக இருக்க வேண்டும்’ என்று அவனின் மனம் சொல்ல, அதனின் முழு பொருள் விளங்காது எழுந்து அமர்ந்தான்.
“தன் குடும்பத்தினிலேயே வளர்ந்ததால், இப்போது அவள் யாரென்று அறிந்தும் தன்னால் பிரித்துப் பார்க்க முடியவில்லை. அதனால் தான் அப்படித் தோன்றியிருக்கும்.” தனக்குத்தானே ஒரு விளக்கத்தையும் சொல்லிக்கொண்டவன், தன்னறை நோக்கி வரும் நிரலியை… காற்றில் திரை விலகிய சன்னல் வழியாகக் கண்ட ஆதி படுக்கையில் சரிந்து உறங்குவதைப்போல் பாசாங்கு செய்தான்.
ஆதிக்கு தெரிய வேண்டி இருந்தது… நிரலியின் பார்வைக்கான பொருள் மற்றும் இந்நேரத்தில் அவனைத் தேடி அவள் வருவதற்கான காரணம்.
அவன் விழித்திருப்பது தெரிந்தால் அப்படியே அவள் சென்றிடக்கூடும் என்பதாலாயே இந்த உறக்க நாடகம்.
ஆதி நினைத்தது போலவே, சன்னலுக்கு அருகில் நின்ற நிரலி உள்ளே எட்டிப்பார்த்து, ஆதியின் உறக்கத்தை உறுதி செய்துகொண்டு… மெல்ல கதவை சத்தம் வராமல் திறந்து தன் கொலுசின் ஒலி கூட வெளிவராது அடி வைத்து அறைக்குள் நுழைந்து கதவை சாற்றியிருந்தாள்.
அத்தியாயம் 32 :
ஆதியின் அறைக்குள் நிரலி.
ஆதி அறிந்து இதுவே முதல்முறை. நிரலி மற்றும் சூர்யா சிறு வயதில் பாடம் படிக்க ஆதியின் அறைக்குள் வந்தது. அதன் பின்னர் வந்ததாக அவனுக்கே நினைவிலில்லை.
கல்லூரியில் படிக்க ஆதி சென்ற பிறகு… அவனின் வரவும் குறைந்திருந்தது. ஆனால் எப்போது அவன் வந்தாலும் அறை புத்தம் புதியது போலவே இருக்கும்.
“நானில்லாத போது யாராவது எனது அறையை உபயோகிக்கிறார்களா என்ன…? பூட்டி கிடக்கும் அறை போல் இல்லையே!”
வரும் போதெல்லாம் காமாட்சியிடம் ஆதி கேட்கும் கேள்வி. ஆனால் ஒருமுறை கூட காமாட்சி உண்மையான பதிலை சொல்லியது இல்லை.
அவர் சொல்ல வாய் திறக்கும் போதெல்லாம் நிரலி வேண்டாமென்று செய்கையாலேயே தடுத்திடுவள். தன்னையே பார்த்திருக்கும் மகனுக்கு பதில் சொல்ல வேண்டுமே என்று சொல்லுவார்.
“எப்பவும் கூட்டி ஒட்டடையெல்லாம் துடைச்சு வச்சால் புதுசு போலவே இருக்க போகுது… இது ஒரு கேள்வின்னு வரும் போதெல்லாம் கேட்டுட்டு.” எப்பவும் அவரின் பதில் இதுதான்.
ஆதி இல்லையென்றாலும் அவனின் வாசம் அங்கிருப்பதாக எண்ணி வாரம் ஒருமுறை வந்து துடைத்து கழுவி பளிச்சென்று சுத்தம் செய்துவிட்டு… அவன் உறங்கும் மெத்தையை தன் கையால் வருடுவாள்.
ஏதோ ஆதியையே தீண்டியது போல் சிலிர்த்திடுவாள்.
ஆனால், இதுவரை ஒருமுறை கூட அதில் அமர்ந்ததில்லை. அருகில் இருக்கும் நாற்காலியில் அமர்ந்து, அவனே கேட்டுக்கொண்டு இருப்பதைப்போல் அந்த வாரம் அவள் செய்தது பார்த்ததென அனைத்து நிகழ்வுகளையும் சொல்லுவாள்.
அப்படி சொல்வது, அவனுடனான பகிர்தல் அவளுக்கு ஏதோ ஒருவகையில் இதம் அளித்தது.
அவ்வறையில் இருக்கும் ஒவ்வொரு பொருளிலும் நிரலியின் கைத்தடம் இருக்கும்.
ஆதியின் சிறுவயது நினைவாக காமாட்சி எடுத்து வைத்திருந்ததெல்லாம் அழுக்கு படிந்து இருப்பதை ஸ்டோர் ரூமில் பார்த்தவளுக்கு தன்னிடம் வைத்துக்கொள்ள கொள்ளை ஆசை. இருப்பினும் கற்பகத்திற்கு பயந்து ஆதியின் அறை ஷோ கேஸில் அழகாக அடுக்கி வைத்து நினைக்கும் போதெல்லாம் வந்து தொட்டு ரசிப்பாள்.
ஆதி முதன் முதலில் போட்ட பருத்தி ஆடையை கூட காமாட்சி பத்திரப்படுத்தி வைத்திருந்தார். அதை கூட சட்டத்தில் அடைத்து கடைகளில் ஷோவிற்காக வைப்பது போல் சுவற்றில் மாட்டியிருந்தாள். அம்முறை ஊருக்கு வந்த ஆதிக்கே ஆச்சர்யம். குழந்தையில் தான் உபயோகித்த பொருட்கள் எல்லாவற்றையும் கண்டு அவனின் முகத்தில் அவ்வளவு உவகை.
ஆதியின் அக்கறையுடன் கூடிய கடினமான முகத்தையே பார்த்திருந்த நிரலிக்கு முதன் முதலாக அவன் முகத்தில் கண்ட பூரிப்பு அத்தனை பிடித்தது.
அப்போதுதான் ஆதிக்கு சந்தேகம் வந்தது…
‘இந்தளவுக்கு செய்ய அம்மாவிற்கு தெரியாதே?’
எழுந்த கேள்வியை காமாட்சியிடம் கேட்டும் விட்டான். இதற்கு அவரால் பொய் சொல்ல இயலவில்லை.
“அம்மு தான்ப்பா அழுக்கு படிந்து ஸ்டோர் ரூமிலிருந்ததை இப்படி செய்தாள்.”
“ஹ்ம்…” அவ்வளவு தான் ஆதியின் பிரதிபலிப்பு. அப்போது கூட நிரலி எல்லாம் தயார் செய்திருப்பாள் காமாட்சி தான் அறையில் வைத்திருப்பார் என்றே எண்ணினான்.
ஆனால் இன்று,
அறைக்குள் வந்த நிரலி அவ்விருட்டிலும் அவ்வறை மிக பரிட்சயம் என்பது போல் நடையில் எவ்வித தடுமாற்றமும் இன்றி மேசையின் அருகில் நடந்து சென்று அதில் அவளால் வைக்கப்பட்ட ஆதியின் சிறு வயது புகைப்படத்தினை கையில் எடுத்து மெல்ல விரல்களால் தீண்டினாள்.
அவளின் கண்களின் ஒளி அந்த மங்கிய வெளிச்சத்திலும் ஆதிக்கு நன்கு தெரிந்தது.
‘என்ன செய்கிறாள்?’
கண்களுக்கு மேல் வைத்திருந்த வலது கையின் மறைவில் ஆதி நோட்டமிட,
சட்டென்று அவனின் புகைப்படத்தில் தன் இதழொற்றி எடுத்தாள். அதில் ஆதி குறுகுறுப்பை உணர்ந்தான்.
‘என்ன உணர்விது?’ கன்னத்தை தேய்த்து விட்டுக்கொண்டான்.
அடுத்து அதனை கீழே வைத்துவிட்டு, ஆதியின் தற்போதைய புகைப்படத்தை எடுத்து முன்பு போலே வருடி…
“சாரி மாமா…” என்று மெல்லொளியில் புகைப்படத்திலிருந்த ஆதியிடம் பேசத் துவங்கியிருந்தாள்.
கிசுகிசுப்பான நிரலியின் குரல் அந்த நிசப்த நேரத்தில் விழித்திருந்த ஆதிக்கு நன்றாகவே கேட்டது.
‘எதுக்கு சாரி சொல்கிறாள்?’
வந்ததிலிருந்து நிரலியின் செய்கைகள் எதற்கும் ஆதிக்கு அர்த்தம் விளங்கவில்லை. இருப்பினும் அமைதி காத்தான். சில நேரங்களில் பொறுமைக்கு இருக்கும் வலிமை நம்மை ஆச்சரியப்படுத்தும். உண்மைகளை தெளிவாக்கும். இங்கு ஆதியின் பொறுமை அவனின் காதலை காட்டிக்கொடுத்தது.
“உங்களுக்கு தெரியாது என்றாலும் இந்த அறைக்குள் உரிமையாக வருவது இன்று தான் கடைசி.
நீங்க பக்கம் இருந்தால் உங்களை பார்த்துக்கிட்டே இருக்கத் தோணும். பார்த்துட்டே இருப்பேன். உள்ளுக்குள்ள சாரல் வீசுற மாதிரி இருக்கும். இனி அப்படி பார்க்க முடியாதுன்னு நினைக்கும் போது இங்க அதிகமா வலிக்குது மாமா!”
இதயப்பகுதியை தொட்டுக் காண்பித்தாள்.
அவளின் காதல் அந்நொடி ஆதியின் கண்களுக்கு தெரிந்தது. அவளின் வலி தனக்கே வலியை கொடுப்பதைப்போல் உணர்ந்தான்.
“உங்களை நேருக்கு நேர் பார்த்தும் என் பார்வைக்கான பொருள் உங்களுக்கு புரியவே இல்லையா மாமா?”
ஆதிக்கு அப்போது புரிந்தது.
‘அம்மு என்னை காதலிக்கின்றாளா? இவ்வளவு நாள் இது எனக்கு எப்படித் தெரியாமல் போனது?’ ஆதியின் இதயத்தில் சிறு அதிர்வு.
நான் ஏன் மாமா உங்களைவிட ரொம்ப சின்ன பொண்ணா பிறந்தேன்? சந்தியாவுக்கு முன்பு நான் பிறந்திருக்கலாம்.”
அவனிடம் கேள்வி கேட்டவள், தான் நினைத்து வருந்தும் செய்தியையும் கூறினாள்.
“அட்லீஸ்ட் அவ்வளவு லேட்டா பிறந்த நீங்க சந்தியாவுக்கு பிறகு பிறந்திருக்கலாமில்லையா? நான் இவ்வளவு வேதனை பட்டிருக்க வேண்டாம்.
உங்களுக்கும் எனக்கும் திருமணம் ஆகியிருக்கும். இப்போது குடும்பமே சேர்ந்து சந்தியாவுக்கும் உங்களுக்கும் கல்யாணம் செய்து வைக்க முடிவு செய்ததைப்போல் எனக்கும் உங்களுக்கும் ஏற்பாடு செய்திருப்பார்கள்.” கற்பகத்தின் எண்ணம் தன் பிறப்பு பற்றி தெரியாது சிறுபிள்ளையென பேசினாள்.
வார்த்தையில் சொல்லிட முடியாத வருத்தம், சோகம் அவளிடத்தில்.
அதற்கு மேலும் ஆதியால் கேட்க முடியுமென்று தெரியவில்லை. மூச்சு முட்டுவதைப் போல் உணர்ந்தான். இதயத்தை யாரோ கீறுவது போலிருந்தது.
“என்னால் இங்கு நடப்பதெல்லாம் சுத்தமாக ஏற்க முடியவில்லை மாமா.”
புகைப்படத்தை இருந்த இடத்தில் வைத்துவிட்டு, அவனின் புறம் பார்வை பதித்துக் கூறினாள்.
நிரலி தன் புறம் திரும்பியதுமே கையினை நன்றாக இறக்கி கண்களை நன்கு மூடிக்கொண்டான்.
மெல்ல அவனருகில் வந்தவள்,
“லவ் யூ மாமா!” காதலும் ஏக்கமும் அந்தக் குரலில் அவ்வளவு போட்டிபோட்டது.
ஆதியின் மனதில் இடியும் மழையும் ஒருங்கே கொட்டியது.
இதுவரை சந்தியாவிடம் எழுந்திடாத ஒன்று நிரலியின் மீது தோன்றியது.
“இதற்கு பிறகு என்றுமே சொல்லிட முடியாது மாமா… அதான் முதலும் கடைசியாக ஒருமுறை சொல்லணும் ஆசை. சொல்லிட்டேன்.”
மீண்டும் ஒருமுறை கூறினாள்.
“லவ் யூ தேவா!”
ஆதியின் உடலெல்லாம் சிலிர்த்து அடங்கியது.
வெறும் வார்த்தைகளில் இவ்வளவு காதலை காட்டிட முடியுமா? நிரலி காட்டிக் கொண்டிருந்தாள் அவளின் தேவாவிற்கு.
இந்த அழைப்பை கேட்பதற்காகவே அன்று தங்களுக்கான இரவில் தனது பெயரை சொல்ல அவளை ஊக்கினான்.
“இந்த அறைக்குள் வாரம் ஒருமுறை வந்திடுவேன். ஆனால் இந்த கட்டிலில் நான் அமர்ந்ததே இல்லை. இதை பார்க்கும் போதெல்லாம் நீங்க இதில் அமர்ந்திருக்கும் தோற்றம். உங்களுக்கு உரிமை உள்ளவளாக அமர வேண்டுமென்று எண்ணம். இனி எப்போதும் அந்த எண்ணம் ஈடேறப் போவதில்லை.”
“சாரி மாமா… நீங்க சந்தியாவுக்கு…”
வார்த்தைகளை முடிக்க முடியாது கைகளால் முகம் மூடி விசும்பினாள். அவளின் அழுகை ஆதியின் இதயத்தை பிசைந்தது.
எழுந்து அமர்ந்து நிரலியை தன்னுடைய மார்பில் சாய்த்துக் கொள்ளும் எண்ணம். தோன்றிய நொடி கண்களிலிருந்து கையினை விலக்கியவன், எழ முயலும் போது மொத்த குடும்பமும் கண் முன் வர தன் இயலாமையை ஏற்க முடியாது மீண்டும் பழைய நிலையில் படுத்துக் கொண்டான்.
“இனி எப்பவுமே உங்களை தேவா சொல்லி அழைக்க முடியாதில்லையா மாமா? லவ் யூ’வும் சொல்ல முடியாது. என் காதல் உங்களுக்கு தெரியாமலே போகட்டும்.”
சில நிமிடங்கள் காற்றின் ஓசை மட்டுமே…
“எப்போ எப்படின்னு தெரியல மாமா. உங்களை அவ்வளோ பிடிக்கும். அப்படி பிடிக்கும். காரணமெல்லாம் இல்லை.
ஏன் எதுக்குன்னு தெரியாமலே உங்க மேல் அதிகமா ஆசை வச்சுட்டேனா அதான் இப்போ ரொம்ப வலிக்குது. தாங்கிக்க முடியல.”
கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது. கட்டுப்படுத்த முடியாது விசும்பினாள்.
“இனி உங்களை பார்க்கும் உரிமை கூட எனக்கில்லைல மாமா?”
கேட்டவள் பட்டென்று அவனின் நெற்றியில் முத்தமிட்டு
“ஐ மிஸ் யூ மாமா… மிஸ் யூ” என சொல்லிவிட்டு ஓடி விட்டாள். அவள் சென்ற பின்பும் அவளின் அழுகையின் ஒலி ஆதியின் செவி நிறைத்தது.
வேகமாக எழுந்தமர்ந்தவன் தன்னை மறந்து,
“பேபி” என விளித்திருந்தான்.
அவனின் மனம் அவனே உணர்வதாய்.
“நீ ஏன் பேபி முன்பே வந்து சொல்லவில்லை. எனக்கு உணர்த்த முயன்ற நீ, ஒருமுறை இப்போது சொல்லியதை போன்று வாய் திறந்து சொல்லியிருக்கலாமே?
உன் பார்வை சொல்லிய மொழி எனக்கு விளங்கவில்லையே!
உன்னை கண்டால் தானாக ஒரு இதம் உள்ளுக்குள் ஊடுருவுமே. அதுதான் காதல் என்று தெரியாது இருந்து விட்டேனே!”
தன் கன்னத்தில் தானே அறைந்து கொண்டான்.
“நீ அருகில் வரும் போதெல்லாம் மனம் ஏதோ சொல்ல விழையுமே! அதனை ஆராயும் எண்ணமின்றி இருந்து விட்டேனே.”
ஆதிக்கே அவன் மீது அவ்வளவு கோபம் கனன்றது. தன்னையே நிந்தித்துக் கொண்டான்.
“உன்னை என் மனம் விரும்பியதை நானே உணராது போனேனே!
நீ என் மனதில் இருந்ததால் தான் எனக்கு உரிமை உள்ளவளாக மாறவிருக்கும் சந்தியாவின் மீது சிறு ஈர்ப்பும் ஏற்படவில்லையோ!
நீ ஒருமுறை சொல்லியிருக்கலாமே பேபி.”
அவனது புலம்பலே நிரலி தன் மனதின் ஆழத்தில் எவ்வளவு இறங்கியிருக்கிறாள் என்பதை அவனுக்குத் தெளிவாக்கியது.
“என் இதயத்தில் நிரலி மீது இவ்வளவு காதலா?”
கேட்டுக் கொண்டவனுக்குத்தான் பதில் நன்கு தெரிந்திருந்ததே!
“வெறும் வாலாக மட்டும் தெரிந்தவள் எப்படி எப்போது என்னுள் இவ்வளவு கலந்தாள்?”
இதற்கான பதில் அவனின் மனதிடத்திலும் இல்லை. காதல் அதுவாக இதயத்தை மலரச் செய்யும். பூ பூக்கும் ஓசையின் தடம் அதன் செடியே அறிந்திடாது. அது போல் காதல் அரும்பும் நேரம் எப்போது எப்படியென்று மனமும் அறிந்திடாது.
“என்ன செய்வது?”
அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்தான். எவ்வளவு நேரம் தன் நடையால் அறையின் நீள அகலங்களை அளந்தானோ? மனதில் என்ன திட்டம் உருவானதோ! அறைக்கதவினை வேகமாக திறந்து கொண்டு வேலுவை தேடிச் சென்றான்.
“இனி நொடியும் தாமதிக்கக் கூடாது. தாமதித்தால் என் பேபி எனக்கில்லை.”
சொல்லிக்கொண்டவன் அப்போது தான், தான் நிரலியை பேபியென்று ஒவ்வொரு முறை விளிக்கும் போதும் இதயத்தின் துடிப்பு சிலிர்த்து அதிர்வதை அறிந்தான்.
“பேபி… பேபி… பேபி…”
ஆதிக்கு அந்த பெரிய வீடே அதிர்ந்திட கத்த வேண்டும் போலிருந்தது.
கற்பகத்தின் அறையிலேயே செல்வி உறங்கியது நினைவு வர, வேலுவை அவரின் அறையினிலேயே சந்தித்து விடலாமென்று கதவின் முன் வந்து நின்றவன்… ஒருமுறை ஆழ்ந்து சுவாசித்து… சீராக மூச்சினை வெளியேற்றி படபடத்திருக்கும் தன்னை சமன் செய்துகொண்டு கதவினை மெல்லத் தட்டினான்.
உறவினர்கள் ஆளுக்கொரு இடத்தில் உறங்கிக் கொண்டிருக்க வேகமாக தட்ட முடியவில்லை.
இரண்டு நிமிடங்களுக்கு பிறகே வேலு கதவினை திறந்திருந்தார்.
“ஆதிப்பா… என்னப்பா…? இந்நேரத்தில்… இப்போது தானே பேசிவிட்டு வந்தோம்.”
ஆதியின் முகத்தில் சொல்லப்படாத வேதனை முகிழ்த்திருக்கவே வேலு படபடத்தார்.
“உங்கக்கிட்ட கொஞ்சம் பேசணும் மாமா” என்று ஆதி சொல்ல… அவன் உள்ளே வர சற்று நகர்ந்து வழிவிட்டார்.
ஆதி உள்ளே வந்து கதவினை அடைக்கும் வரை அமைதியாக இருந்தவர்…
“என்ன ஆதிப்பா எதாவது பிரச்சனையா?” எனக் கேட்டார்.
“எனக்கு நிரலி வேணும் மாமா. கட்டிக்கொடு.”
எவ்வித மேல் பூட்சுமின்றி, வார்த்தையில் சிறு தடுமாற்றமும் இன்றி பட்டென்று கேட்டிருந்தான்.
ஆதியின் வார்த்தைகளில் வேலு தான் தடுமாறி நின்றார்.
“என்ன ஆதிப்பா… இப்போ வந்து இப்படி?” அவர் பதில் சொல்லத் தெரியாது விழித்தார்.
ஏற்கனவே தங்கமணி வார்த்தையால் குத்தியிருக்க… இப்போது ஆதி வந்து இப்படி கேட்டது தெரிந்தால் அவ்வளவு தான். செல்வியிடம் கற்பகம் சொல்லியது நினைவில் வந்து போக தன் செல்ல மருமகனிடம் முடியாதென்று சொல்ல முடியாது தவித்து நின்றார்.
“அப்போ சந்தியா வாழ்க்கை? விடிந்தால் கல்யாணம் என்கிற நிலையில் நின்று போனாள் அந்த பெண்ணின் நிலை என்னவாகுமென்று உனக்குத் தெரியும் தானே ஆதிப்பா?”
“எனக்கு எவ்வித விளக்கமும் தேவையில்லை மாமா! நிரலியை எனக்கு கொடுப்பியா மாட்டியா?”
உரிமையாகத் தன்னிடம் கேட்கும் இந்த ஆதி அவருக்கு சிறு வயதில் தன்னிடம் எதற்கும் மல்லுக்கு நிற்கும் ஆதியை ஞாபகப்படுத்த புன்னகைத்துக் கொண்டார்.
“இவ்வளவு நாள் நிரலி உனக்குத் தெரியலையா ஆதிப்பா?”
“அய்யோ மாமா என் பேபி மேல் எனக்கு இவ்வளவு காதல் இருக்குமென்று அவளின் காதலை பார்த்த பிறகு தானே எனக்கேத் தெரிந்தது.”
‘அம்மு காதலிக்கின்றாளா?’
மகளின் காதல் அவருக்கு அதிர்ச்சி இல்லை. தன்னிடம் கூட சொல்லவில்லையே என்கிற ஏமாற்றம்.
“என் பேபி அழுகையை என்னால் பார்க்க முடியல மாமா.
இந்த சில மணி நேரத்திற்கே எனக்கு இவ்வளவு வலிக்கிறதே! என் பேபிக்கு எவ்வளவு வலிக்கும். இனியும் அவளுக்கு வலிக்கும் தானே!”
சொல்லியவனின் முகத்தில் தென்படும் வருத்தம் அவர் உணர்வதாய். ஆனால் தங்கமணியின் பேச்சு… கற்பகத்தின் குணம் அறிந்தவருக்கு சம்மதிக்க மனம் வரவில்லை.
அத்தோடு சந்தியாவின் நிலை. அவளும் தனக்கு மகள் தானே என்கிற அவரின் எண்ணம் ஒப்புக்கொள்ள விடவில்லை.
“ஆதிப்பா கொஞ்சம் குடும்பத்தின் மரியாதையையும், சந்தியாவையும் நினைத்து பார்…
இத்திருமணம் நின்றால் சந்தியாவின் நிலையென்ன?”
“எனக்கு எந்த விளக்கமும் வேண்டாம். உங்களின் விருப்பமின்மைக்கு காரணம் எனக்குத் தெரியும்.
அப்பத்தா தானே?”
தன் மனதின் உண்மையை சொல்லிவிட்டானே என்று வேலு தலை கவிழ்ந்தார்.
“அப்பத்தாவால் நிரலிக்கு ஏதேனும் ஏற்பட்டு விடுமென்று பயம் கொள்ளும் உங்களுக்கு, என்னால் அவளை பார்த்துக்கொள்ள முடியுமென்கிற நம்பிக்கை இல்லையா?”
இதற்கு என்ன பதில் சொல்வதாம். இருப்பினும் அந்நொடி ஏனோ அவருக்கு ஆதியின் மீதான நம்பிக்கையை விட செல்வியை மிரட்டிய கற்பகத்தின் வார்த்தைகளின் மீதான பயம் தான் அதிகமாக இருந்தது.
அவர் வாய் திறப்பதாக இல்லை.
“எனக்கும் குடும்பத்தின் மரியாதை மீதும், சந்தியா மீதும் அக்கறை இருக்கும் மாமா… அதுக்காக என் பேபியை இழக்கும் துணிவில்லை.”
ஆதியின் குரலில் நடுக்கம்.
“இன்று தெரிந்த உண்மை நாளை சந்தியாவின் கழுத்தில் தாலி கட்டிய பிறகு தெரிந்திருந்தாலும் இப்படித்தான் வந்து கேட்டிருப்பியா ஆதிப்பா?”
அந்த கேள்வியில் ஆதி மொத்தமாக அடி வாங்கினான்.
‘அவர் கேட்பதும் உண்மை தானே!’
ஏற்கனவே இத்திருமணத்தை நிறுத்தினால் சந்தியாவின் நிலையென்ன என்று யோசித்திருந்தான் தான். ஆனால் அதற்காகவெல்லாம் அவனின் பேபியை இழந்திட முடியாதே!
அதனாலேயே ஒருமுறை கேட்டு பார்ப்போம் என்றே வேலுவிடம் வாதிட்டான்.
ஆனால் இப்போது அவருக்கு தன் மீது நம்பிக்கையே இல்லையெனும் போது நிரலியை மணம் முடித்தால் தனக்கு இழுக்கென்று மௌனமாகத் திரும்பிச் சென்றான்.
ஆதியை ஒருநாளும் இந்நிலையில் வேலு பார்த்ததில்லை. தன் இயலாமையை எண்ணி அவரால் வருந்த மட்டுமே முடிந்தது.
இதில் யாரை நொந்து கொள்வது?
நிரலியாவது தன்னுடைய காதலை முன்பே வெளிப்படித்தியிருக்க வேண்டும். அல்லது ஆதியாவது உணர்ந்திருக்க வேண்டும். தங்களின் காதலுக்கு அவர்களே அல்லவா இங்கு எதிரியாகிப் போனார்கள்.
ஆதி முதல்முறையாக ஒன்றை மனம் திறந்து உரிமையாகக் கேட்டு அதனை தன்னால் நிறைவேற்ற முடியவில்லையே என்று மனதிற்குள் மருகினார் வேலு.
நிரலி யாரென்று தெரிவதற்கு முன்பு கேட்டிருந்தாலும் ஒப்புக்கொண்டு இருப்பாரோ என்னவோ! கற்பகத்தின் வார்த்தைகளை கேட்ட பின்னர் யாரையும் நம்ப அவருக்கு துணிவில்லை.
ஆதியை நம்பி நிரலியை கஷ்டப்பட வைக்க அவருக்கு விருப்பமில்லை.
ஆதிக்கு அவ்வளவு வலித்தது. ‘தன் மீது நம்பிக்கை இல்லையா?’
அந்நிலையில் கூட சந்தியாவைப் பற்றி சிந்தித்தான்.
‘சந்தியாவும் தன் அக்கா மகள் தானே! அவள் வாழ்வு தன்னால் வீணாகியதாக இருக்கக் கூடாது. எது நடக்க வேண்டுமோ அது நடக்கட்டும்.’ சிந்தித்தவன் மனதை திடப்படுத்திக் கொண்டு நடந்தான்.
குழப்பத்திலிருந்தவன் தவறுதலாக சந்தியாவின் அறை பக்கமாக இருக்கும் படிகளில் ஏறிவிட, சூர்யாவும் சந்தியாவும் திருமணத்தை நிறுத்த பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டு அவனுக்கு துளியும் கோபம் வரவில்லை.
மாறாக அவ்வளவு மகிழ்வு. அந்த மகிழ்வுடனே கட்டிலினில் வந்து படுத்துக் கொண்டான்.
ஆதியிருக்கும் நிலையில் இப்போதைக்கு திருமணம் நின்றால் போதுமென்றே நினைத்தான். பின்னாளில் வேலுவை சம்மதிக்க வைத்து தன்னுடைய பேபியை தனக்கு உரிமை உள்ளவளாக மாற்றிக் கொள்ள வேண்டுமென்று எண்ணி, சூர்யா மற்றும் சந்தியாவின் திட்டத்தை நினைத்து அந்நிலையிலும் சிரித்துக் கொண்டான்.
அதன் பிறகு நடந்ததெல்லாம் ஆதியே எதிர்பாராதது.
சந்தியா கிணற்றில் குதிக்கும் நிகழ்வு அவன் அறிந்தது தான். அதனால் தான் தைரியமாக மணமேடையில் வந்தமர்ந்தான். அவனின் கண்கள் நிரலியைத்தான் தேடியது. அவளிருக்கும் அரவமே இல்லை.
வேண்டா வெறுப்பாக ஐயர் சொல்லுவதை செய்து கொண்டு இருந்தான்.
சிறிது நேரத்திற்கெல்லாம் நிரலியின் பார்வையை உணர்ந்தவன்,
“நான் உனக்குத்தான் பேபி” என்று சொல்லிக்கொண்டான்.
சில நிமிடங்களுக்குப் பின்னர் சந்தியா கிணற்றில் விழுந்த செய்தி இன்பமாய் ஒலித்தது அவன் காதில். அப்போது மனதில் எழுந்த அவனின் நிம்மதிக்கு வார்த்தைகள் இல்லை.
அந்நொடி மகிழ்ந்திருந்தாலும், கிணற்றில் விழுந்த சந்தியாவிற்கு விளையாட்டு ஆபத்தாகிவிடக் கூடாதென்ற எண்ணத்தில் அவளைக் காப்பாற்ற விரைந்து ஓடினான்.
அது மற்றவர்களின் கண்களுக்கு கோபமாகவே தெரிந்தது.
அன்று நிச்சயத்தின் போதே சந்தியாவின் விருப்பமின்மையின் மீது சந்தேகம் கொண்டு அந்த குதி குதித்தவன் இன்று அமைதியாக இருந்தால் தன்மீது சந்தேகம் வருமென்று அவளை திட்டியதோடு தன் குடும்பதாரிடமும் கோபத்தைக் காட்டினான்.
அந்நேரம் வேலுவிற்கு திருமணத்தை நிறுத்த ஆதி தான் ஏதோ திட்டம் போட்டிருப்பதாக நினைத்தார். இதற்கு சந்தியாவும் உடந்தை என எண்ணினார்.
மீண்டும் சந்தியாவையே கட்டிக்க சொல்லி கற்பகம் சொல்ல… இங்கிருந்தால் எப்படியும் தன்னை பணிய வைத்து விடுவார்களென்று அங்கிருந்து கிளம்ப எத்தனித்த வேலையில் காமாட்சியின் செயல் சற்றும் அவனின் எண்ணங்களுக்கு அப்பாற்பட்டது.
காமாட்சி கையினை அறுத்துக்கொண்டு நிரலியை திருமணம் செய்துகொள்ள சொல்லிய போது நிரலி மீது கொண்ட காதலை விட வேலுவின் சம்மதம்… அதைவிட அவருக்கு தன்மீதான நம்பிக்கை முக்கியமென்று எண்ணி தயங்கினான்.
வேலுவும் கற்பகத்தின் மீதான எண்ணத்தில் காமாட்சி கேட்டும் மௌனம் காக்க… ஆதி அவரின் நம்பிக்கையின்மையால் பெருத்த அடி வாங்கினான்.
அதன் பின்னர் வேலு வேண்டா வெறுப்பாக ஒப்புக்கொண்டு திருமணம் நடந்திருந்தாலும், அவருக்கு நம்பிக்கை வராது நிரலியுடன் சேர்ந்து வாழக்கூடாதென தாலி கட்டும் போதே முடிவெடுத்திருந்தான்.
நம்பிக்கை இல்லாத நிலையில், சிறிதாக என்ன நடந்தாலும் அது பூதாகரமாக தெரிய வாய்ப்புள்ளது. அதற்கு வாய்ப்பளித்திடக் கூடாதென்று எண்ணி தாலி கட்டிய பிறகு ஆதி வேலுவை பார்க்க…
“நீ நினைத்தது நடந்தாலும்… கஷ்டம் என்பது என் மகளுக்குத்தானே!” அவரின் பார்வையின் பொருள் புரிந்தவன்…
“உங்களுக்கு என்மீது நம்பிக்கை வரும்போது என் மனைவியை அனுப்பி வையுங்கள் அதுவரை உங்கள் மகளாகவே இருக்கட்டும்” என்று அதே பார்வையால் அவருக்கு பதிலளித்துவிட்டு யாரையும் திரும்பியும் பாராது சென்றுவிட்டான்.
குடும்பமே ஆதியின் அச்செயலில் விக்கித்து நிற்க, அதில் வேலுவுக்கு நிம்மதியாக இருந்தாலும், ஏதோ ஒரு வகையில் சிறு வருத்தம் இழையோடியது.
இரண்டு நாட்களுக்குப் பின்னர் ஆதியே வேலுவை அழைத்து…
“உங்களுக்கு எவ்வித குற்றவுணர்வும் வேண்டாம் மாமா… என்னால் எல்லாவற்றிலிருந்தும் என் மனைவியை காக்க முடியுமென்று உங்களுக்கு நம்பிக்கை வரும்போது அனுப்பி வையுங்கள்” என்று ஆதி சொல்ல… வேலு தன்னை நினைத்தே வெட்கினார்.
“அத்தோடு இடையில் கல்லூரியை மாற்ற வேண்டாம். அவள் படிப்பும் வீணாகிவிடும். அவள் படிக்கட்டும். நான் காத்திருக்கிறேன்” என்றவன் தினமும் வேலுவிற்கு அழைத்து நிரலியை பற்றி அனைத்தும் தெரிந்து கொள்வான்.
நிரலியைப் பற்றி தெரிந்து கொண்ட பின் வேலு கற்பகத்தின் எல்லாவற்றையும் கண்காணித்தார். நிரலியை கஷ்டப்படுத்தவே அவர் வீட்டிற்கு வருவது அறிந்து… இதில் ஆதியுடன் இணைந்திருந்தால் இன்னும் தன் மகளுக்கு வேதனை தான் என எண்ணி தன் முடிவில் நிலையாக இருந்து விட்டார்.
அவருக்கு நிரலி மீதான ஆதியின் காதல் புரியாமல் இல்லை. ஆனால், அதற்காக தன் மகளை கஷ்டப்பட வைக்க அவரால் முடியாதே. அவர் உணராத ஒன்று நிரலியும் ஆதியின் மீது கொள்ளை கொள்ளையாய் காதல் கொண்டுள்ளாள். எத்தைகைய கஷ்டத்தையும் அவனுடன் எளிதில் கடந்து விடுவாளென்று.
மனைவியைப்பற்றி தினமும் கேட்டு அறிந்து கொண்டாலும், நேரில் வராததற்கு காரணம்… நிரலியை பார்த்துவிட்டு அவள் இல்லாமல் அவனால் வர முடியாது என்பதே! அதனாலே நான்கு வருடங்களாக தாய் தந்தையை காணவும் ஊர் பக்கம் ஆதி தலை காட்டவில்லை.
நிரலி மேற்கொண்டு படிக்க விரும்புகிறாளென்று வேலு சொல்லிய போது கூட, அவளை சட்டம் படிக்க வையுங்கள் என்று சொன்னானேத் தவிர அனுப்பி வையுங்கள் என்று கேட்கவில்லை.
‘நம்பிக்கை என்பது தானாக வரவேண்டும்.’ அதுவே அவனின் எண்ணம்.
இதற்கிடையில் ஆர்.கே தன் வாரிசினை பற்றிக் கூற… தேடத் துவங்கியவனின் தேடலின் முடிவு அவன் மனைவியிடம் வந்து நிற்க, வேலுவிடம் எதையும் மறைக்காது சொல்லிவிட்டான்.
வேலு வருத்தம் கொள்ளத்தான் செய்தார். ஆனால் நிரலியை அனுப்பி வைக்கும் எண்ணம் அவருக்கு வரவில்லை.
நிரலியின் மீதான ஏக்கமே ஆதியை கடினமானவனாக மாற்றியது. நிரலியின் மீதான காதலால் தகிக்கும் மனதை அமைதி படுத்த தெரியாமலேயே வேகமாக ஓடிக்கொண்டிருந்த தன் தொழிலில் அசுர வேகத்தை கையிலெடுத்து ஓடினான். தவிப்பை விரட்ட தொழிலை கையிலெடுத்தான். அதில் பிறர் பேசவே தயங்கும் தன்னிடம் பார்க்கவே யோசிக்கும் ஏ.டி’யாகத் தன்னை முற்றிலும் மாற்றிக்கொண்டான்.
நிரலி படிப்பை முடித்த நிலையில்,
“அவருக்கு(வேலு) நம்பிக்கை வரும்போது வரட்டும். இனியும் என் மனைவியை விட்டு விலகியிருப்பதாக இல்லை” என நினைத்தவன் வேலுவை அழைத்து,
“உங்களுக்கு என்மீது நம்பிக்கை வரவழைக்க ஒரே வழிதான் உள்ளது. அது நான் என் மனைவியோடு வாழ்ந்து காட்டுவது. என் வார்த்தையிலாவது நம்பிக்கை இருந்தால் என் பேபியை அனுப்பி வையுங்கள்” என்றவன் அவர் பேசவே வாய்ப்பளிக்காது வைத்துவிட்டான்.
அதன் பின்னரும் வேலு யோசிக்கத்தான் செய்தார். ஆனால் அன்றே, கற்பகம் சந்தியாவிடம் பேசிக் கொண்டிருப்பதை கேட்க நேர்ந்தது.
“இந்த நிரலி ஆதிகூட சேர வாய்ப்பே இல்லை. அவன் உனக்குத்தான். அன்று மட்டும் நீ கொஞ்சம் பொறுமையாக இருந்திருந்தால் நீதான் அவனுக்கு பொண்டாட்டி ஆகியிருப்ப. இப்பவும் ஒன்னுமில்லை பார்த்துக்கலாம். முடிஞ்சா நிரலியை வீட்டை விட்டு துரத்தப் பார்க்கிறேன்.”
அப்போதுதான் வேலு தன் தலையில் இடி விழுந்ததை உணர்ந்தார்.
‘தவறு செய்துவிட்டோமா? ஆதியுடன் அனுப்பியிருக்க வேண்டுமோ? நாம் ஒன்று நினைத்து பிரித்து வைக்க, அதுவே நிரந்தரமாகிவிடும் போலிருக்கே!’
மகளின் வாழ்வை விடவா வேறொன்று முக்கியமாகிவிடப் போகிறது அவருக்கு,
‘இனியும் சும்மா இருந்தால் மகளின் வாழ்வு வீணாகிவிடும்’ என்று மகளைக் கூட்டிக்கொண்டு ஆதியிடம் விட்டுவரப் புறப்பட்டுவிட்டார்.
Epi 33 and 34
https://thoorigaitamilnovels.com/%e0%ae%8f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-33-%e0%ae%ae-34/
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
12
+1
40
+1
2
+1
2