அத்தியாயம் 29 :
“உங்களது வழக்கு விசாரணையை தொடரலாம்.”
ஆதி வழக்கின் சாராம்சத்தை சொல்லி முடித்ததும் விஸ்வநாதனை பார்த்துக்கொண்டே ஆதியை நீதிபதி வழக்கு விசாரணை செய்ய உத்தரவிட்டார்.
“மை லார்ட்…”
ஊசி விழுந்தால் கூட இடியெனக் கேட்கும் அமைதி நிறைந்த அவ்வறையில் ஆதியின் குரல் சிம்மமென எதிரொலித்தது. கர்ஜித்தது என்று சொல்ல வேண்டுமோ?
ஆதியின் இந்த ஏ.டி அவதாரம் கண்டு… அவனின் கம்பீரத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆச்சரியம் கலந்த முக பாவனையோடு ஆதியை உயர்வாக அதிசயத்துப் பார்த்தனர்.
“முதலில் வேதாச்சலம் அவர்களால் நிறுவனம் செய்யப்பட்ட ட்ரெஸ்ட் எதுவென்பதை நிரூபிக்க இருக்கிறேன்” என்ற ஆதி இரண்டு பத்திரங்களை நீதிபதியின் முன் வைத்தான்.
“ஒன்று வேதாச்சலம் ட்ரெஸ்ட் ஆரமிப்பதற்காக சட்டம் அவருக்கு அனுமதி அளித்த பத்திரம், அத்தோடு தொடங்கப்பட்ட நாளன்று நிர்வாகத்திற்காக அவரால் தயார் செய்யப்பட்ட ட்ரெஸ்ட் நிறுவியதற்கான பத்திரம்.”
ஆதி அடுத்து கூறுவதற்கு முன் விஸ்வநாதன் குறுக்கிட்டார்.
“அவர் தொடங்கிய ட்ரெஸ்ட் என்பது எப்போதோ பொய் என்று நிரூபித்தாகிற்று. இன்னமும் அதனை அவர் தான் தொடங்கியது என்று சொல்லுவது தவறு.”
அவ்வாறு இடைவெட்டிய விஸ்வநாதனை பார்த்து ஏ.டி ‘அப்படியா’ எனும் விதமாக கள்ளப்புன்னகை புரிய,
“பய விஸ்வாவை வச்சு செய்யப் போகிறான் போல” என்று நடப்பதை பார்வையாளராக பார்த்துக் கொண்டிருந்த ஆர்.கே எண்ணினார்.
“ஹோ உங்களால் உருவாக்கப்பட்ட பொய்யென்று சொல்ல வருகிறீர்களா மிஸ்டர்.விஸ்வநாதன்.”
எப்போதும் விச்சு என்று ஆதி கலாய்க்கும் போது கூட அவருக்கு தன்னை கேலி செய்கிறானேயென்று எவ்வித உணர்வும் தோன்றியதில்லை ஆனால், இன்று முதன்முறையாக அவரின் முழுப்பெயரும் சொல்லும் போது உள்ளுக்குள் ஏதோ கிலி பிடித்தது. இதற்கு அவன் விச்சு என்று அழைத்திருந்தாலே தேவலாம் போலிருந்தது.
“என்னால்… என்னால் என்ன பொய்…?”
ஏ.டி’யை பார்த்தது முதல் உள்ளுக்குள் வியாபிக்கத் தொடங்கிய பதட்டம், ஆதி நடந்ததை விளக்கிய போது அதிகரித்திருக்க, இப்போது வார்த்தையில் தடுமாறினார்.
“விஸ்வநாதன் உங்களுக்கு வாய்ப்பளிக்கும் போது உங்கள் கருத்தை சொல்லுங்கள். குறுக்கே டிஸ்டர்ப் செய்யாதீங்க.” நீதிபதி விஸ்வநாதனை மேற்கொண்டு பேசாது அடக்கினார்.
அவரும் அமைதியாக அமர்ந்து கொண்டார்.
“யூ மே ப்ரொசீட் மிஸ்டர்.ஏ.டி.”
நீதிபதி சொல்ல, ஆதி மீண்டும் தொடங்கினான்.
“மற்றொன்று வேதவள்ளி ட்ரெஸ்டின் பத்திரம் மற்றும் ஆவணங்கள்” என்ற ஏ.டி, இரண்டிலுமே வேதாச்சலம் அவர்களின் கையெழுத்து நிறுவனர் என்ற இடத்தில் உள்ளது.
“பல வருடங்களுக்கு முன்பு நடந்த விசாரணையில் இதனை விஸ்வநாதன் தன்னுடைய பொய்யான வாதத் திறமையால் தவிர்த்திருந்தார். மறைக்கப்பட்டது என்பதே உண்மையாக இருக்கும்” என்ற ஏ.டி மேலும் சில பத்திரங்கள் மற்றும் வங்கி கணக்கு ஆவணங்களை நீதிபதியிடம் அளித்தான்.
விஸ்வநாதனுக்கு வியர்த்துவிட்டது.
“இதில் அனைத்திலும் வேதாச்சலம் அவர்களின் கையெழுத்து உள்ளது. இதை மற்ற ட்ரெஸ்டின் பத்திரங்களோடு ஒப்பிட்டு எது உண்மையானது என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் யுவரானர்” என்றவன் விஸ்வநாதனை நோக்கி ஏளனமான பார்வை ஒன்றை வீசினான்.
“இதிலிருப்பது அனைத்தும் தற்போது உருவாக்கப்பட்ட போலி பத்திரங்களாக இருப்பின் எப்படி உண்மையை கண்டறிய முடியும்.”
எப்படியும் பொய்யை உண்மையாக்கிவிடத் துடித்தார் விஸ்வநாதன்.
“நீங்க இப்படி சொல்லுவீங்கன்னு நான் எதிர்பார்த்தேன் மிஸ்டர்.விஸ்வநாதன்” என்ற ஏ.டி நீதிபதியின் புறம் திரும்பி, “அன்று வேதாச்சலத்தின் ஆஸ்தான வக்கீலாக இருந்த குருமூர்த்தியை விசாரிக்க வேண்டும் லார்ட்” என்றான்.
நீதிபதியின் ஒப்புதலோடு குருமூர்த்தி என்ற பெயர் அங்கு மூன்று முறை அழைக்கப்பட, வயது முதிர்ந்த ஒருவர் கூண்டில் வந்து நின்றார்.
“இதெல்லாமே என்னிடமிருந்த வேதாச்சலம் அய்யாவின் சொத்து பத்திரங்கள் மற்றும் வங்கி கணக்கு வழக்குகள் அடங்கிய ஆவணங்கள் சார்.
இவ்வளவு நாளும் நான் தான் பாதுகாத்து வந்தேன்.
என் மூத்த மகன் வந்து கேட்டால் மட்டுமே பத்திரங்கள் அனைத்தையும் கொடுக்க வேண்டுமென்று வேதாச்சலம் சொல்லியிருந்தார். மற்றபடி அனைத்தும் ட்ரெஸ்டின் கீழ் செயல்படட்டும் என்று சொல்லியிருந்தார்.
ஆர்.கே என்னிடம் வந்து தந்தையின் சொத்துக்களைப் பற்றி கேட்காததால் நானும் அவரிடம் இதுவரை கொடுக்கவில்லை” என்றவரின் கருத்துக்களை எழுதிக்கொண்ட நீதிபதி அவரை செல்லுமாறு சொல்ல அவரும் தான் வந்த வேலை முடிந்ததென்று சென்று இருக்கையில் அமர்ந்து கொண்டார்.
‘இது போதுமா?’
ஏ.டி’யின் பார்வையில் அவ்வளவு விஷமம்.
“மிஸ்டர்.குருமூர்த்தி சொல்லியதிலிருந்தே வேதாச்சலம் அவர்கள் தன்னுடைய மூத்த மகனான ஆர்.கே’வை மட்டும் தான் நம்பியிருக்கிறார் என்பது தெளிவாகிறது யுவரானர்.”
“அதை நீ சொல்ல வேண்டாம்.” தோற்றுவிடுவோமோ என்கிற பயத்தில் விஸ்வநாதன் படபடத்தார்.
“ஆர்டர்… ஆர்டர்… ஆர்டர்…”
“நீங்க சொல்லுங்க ஏ.டி.”
விஸ்வநாதனை அடக்கிய நீதிபதி ஆதியை தொடரக் கூறினார்.
“எழுத்து புலனாய்வுத் துறையிடம் பரிசோதனை செய்ய கேட்டுக்கொள்கிறேன் யுவரானர்.”
“அதற்கு வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே அனுமதி வாங்கியிருக்க வேண்டும். இது ஏ.டி’க்கு தெரியவில்லையே!” விஸ்வநாதன் ஆதியை மட்டம் தட்டப் பார்த்தார். ஆனால் அவன் ஏ.டி’யாயிற்றே!
“ஒரு வாரத்திற்கு முன்பே அனுமதி கேட்டு பேப்பர் சப்மிட் செய்திருக்கிறேன் லார்ட்” என்ற ஆதி அனுமதி அளித்த பேப்பரையும் காட்டினான்.
“நீங்க முதலில் உட்காருங்க விஸ்வநாதன். அவர் தன்னுடைய வாதத்தை முடிக்கட்டும். உங்களால் தான் விசாரணை தாமதப்படுத்தப்படுகிறது.”
ஆதி வந்த சிரிப்பை வாய்க்குள் புதைத்தான்.
விஸ்வநாதன் கையாலாகாத் தனத்துடன் இருக்கையில் அமர்ந்தார்.
அடுத்தபடியாக அங்கேயே எழுத்து பரிசோதனை நிபுணர் வரவழைக்கப்பட்டு வேதாச்சலத்தின் கையெழுத்து ஒப்பிட்டு பார்த்து எது உண்மையான கையெழுத்து என்றும், பத்திரங்களின் வயதும் பரிசோதனை செய்யப்பட்டு கணக்கிடப்பட்டது.
அதன்படி வேதாச்சலம் ட்ரெஸ்டே வேதாசலத்தால் நிறுவப்பட்டதென்றும், வேதவல்லி ட்ரெஸ்ட் பொய்யாக உருவாக்கப்பட்டதென்றும், அதிலிருக்கும் வேதாச்சலத்தின் கையொப்பம் கூட போலியானது என்று நிரூபணமானது.
இருந்த போதும் அதனை விஸ்வநாதன் ஒப்புக்கொள்ள மறுத்தார்.
“நீதிமன்றத்திற்கு ஆதாரங்கள் தான் முக்கியம் விஸ்வநாதன்” என்ற தயாளன் “அவை அனைத்தும் இப்போதுதான் உண்மைக்கு ஆதரவாக இருக்கின்றன” என்றார்.
அவரின் பேச்சில் விஸ்வநாதனால் அடுத்து பேச முடியாது போனது.
“அதுமட்டுமில்லாது வேதவல்லி ட்ரெஸ்ட் பெயரளவில் மட்டுமே உள்ளது. அதன் மூலம் எவ்வித நற்செயல்கலும் பலன்களும் மக்களுக்கு செய்யப்படவில்லை. வேதாச்சலத்தின் சொத்துக்கள் மூலம் வரும் லாபங்கள் அனைத்தும் வேதவல்லி ட்ரெஸ்டின் மூலமாக விஸ்வநாதனையே சேர்கிறது” என்று ஏ.டி உண்மையை பிட்டு வைக்க விஸ்வநாதன் உண்மையில் அரண்டு தான் போனார்.
ஆர்.கே தன் நெஞ்சை நிமிர்த்தி அமர்ந்தார்.
ஏ.டி சொல்லியது யாவும் தகுந்த ஆதாரங்களுடன் உண்மையென கண்டறியப்பட்டது. தனக்கு தேவையானவற்றை நீதிபதி தயாளன் குறிப்பெடுத்துக் கொண்டார்.
“அடுத்து என்ன ஏ.டி?” நீதிபதி ஆதியிடம் கேட்க,
“ஆர்.கே’வின் வாரிசு யார்?” என்றவன் விஸ்வநாதனின் அதிர்ந்த மற்றும் அச்சத்தில் ரத்தபசை இழந்து வெளிறிய முகத்தைக் கண்டு திருப்தி உற்றவனாக, “இப்போது முடிந்த வாதத்தில் எதிர் தரப்பு தன் கருத்தை கூறலாம்” என்றான்.
“விஸ்வநாதன் உங்களுக்கு எதேனும் மாற்று அல்லது ஒப்பற்ற கருத்து இருக்கிறதா?” என்ற நீதிபதியின் கேள்விக்கு தானாக இல்லையென்று ஆடியது விஸ்வநாதனின் தலை.
“ஓகே ஃபைன்… யூ கேன் கண்டினிய்யூ” என்று ஆதிக்கு அனுமதி அளித்தார்.
“ஆர்.கே’வின் வாரிசு…” என்று இழுத்த ஏ.டி இடது கை ஆள்காட்டி விரலால் தன்னுடைய வலது புருவத்தை கீறியவனாக விஸ்வநாதனை பார்க்க,
அவரோ பட்டென்று இருக்கையிலிருந்து எழுந்து “ஆர்.கே’விற்கு மகனே இல்லை” என்று மொழிந்தார்.
இதுதானே ஆதியும் எதிர்பார்த்தான்.
“எஸ் லார்ட்… ஆர்.கே’விற்கு மகனில்லை தான்” என்று நீதிபதியிடம் கூறியவன்,
தான் சொன்னதில் சற்று நிம்மதி பாவனையைக் காட்டிய விஸ்வநாதனிடம் திரும்பி,
“அவருக்கு மகனில்லை மகள் விச்சு” என்று அசராமல் சொல்லி அடித்தான்.
பேயறைந்தவன் முகம் கூட பார்த்துவிடலாம் போல். ஆனால் இப்போது விச்சுவின் முகம் கர்ண கொடூரமாகக் காட்சியளித்தது.
அப்போது ஆர்.கே’வும், தெய்வநாயகியும் தங்களது கையினை கோர்த்துக் கொண்டு, தங்களுடைய மகளை காண ஆர்வமாக… ஆதியின் வாயிலிருந்து வரவிருக்கும் வார்த்தைக்காகக் காத்திருந்தனர்.
வேலு தான் கைக்கோர்த்திருந்த தன் மகளின் கையின் பிடியை இறுக பற்றினார்.
“என்னது மகளா?”
அதிர்ச்சியில் விஸ்வநாதன் வாய்விட்டே கேட்டார்.
“எஸ் விச்சு” என்ற ஏ.டி,
“அதற்கு முன்னால் எனக்கு இங்கு சில கணக்குகள் தீர்க்கப்பட வேண்டியிருக்கு யுவரானர்” என்றவன்,
“போன மாதம், ஆர்.கே’வின் மகளை கோர்ட்டில் ஆஜர்படுத்த அனுமதி கேட்டு விண்ணப்பத்ததோடு, மரபணு பரிசோதனை செய்யவும் அனுமதி பெற்றிருந்தேன்” என்று அதன் பின்னர் நடந்ததை விவரிக்கத் தொடங்கினான்.
விஸ்வநாதனுக்கு மரபணு பரிசோதனை என்கிற செய்தி புதிது. அன்று ஆர்.கே’வின் வாரிசு ஆஜர் படுத்துவதை மட்டுமே அறிந்தவர்… இன்று இதனை கேட்டு ஸ்தம்பித்து விட்டார். அதன் பின்னர் ஆதி சொல்லியவை யாவும் அவர் செவிகளில் நுழையவில்லை.
ஆர்.கே’வின் வாரிசு யாரென்பதை தெரிந்துகொள்ள ராகவை கடத்தியது. ராகவ், தான் தான் அவரின் மகனென்று பொய் சொல்லியது, ராகவை ஆர்.கே’வின் மகனாக கருதிய விஸ்வநாதன் அவனை மது பருகச் செய்து சாலையில் நடக்கவிட்டு விபத்தைப்போன்று அடித்து வீசியது. அதில் உயிருக்கு போராடிய ராகவ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்ற நிலையில் அவன் உயிர் பிழைத்துவிட்டான் என்பதை அறிந்து மீண்டும் ராகவை கடத்த முயற்சித்தது என்று அனைத்தும் கூறிய ஆதி, அன்று ராகவை கடத்த மருத்துவமனைக்கு வந்த தடியர்கள் நால்வரையும் ராஜீவின் உதவியோடு நீதிபதியின் முன் ஆஜர்படுத்தினான்.
ராகவும் தனக்கு விஸ்வநாதனால் நடந்த நிகழ்வுகளை சொல்ல, தடியர்களும் விஸ்வநாதனுக்கு எதிராக உண்மையைக் கூறினர்.
அடுத்தபடியாக இன்றும் ராகவை ஆர்.கே’வின் மகனாக நினைத்த விஸ்வநாதன் ராகவை கோர்டிற்கு வரவிடாமல் செய்ய கடத்தியது ராஜீவின் மூலம் அவனை பாதுகாப்பாக மீட்டது என்று அனைத்தும் விஸ்வநாதனுக்கு எதிராக அமைந்ததோடு, அவை யாவும் உண்மையென தகுந்த ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களோடு நிரூபிக்கப்பட்டது.
அடுத்து ஆர்.கே’வின் மகள் யாரென்ற கேள்விக்கு விடை தெரிந்தால் அவ்வழக்கு முற்றும் முதலாக முடிவடைந்துவிடும்.
அந்த கணம் ஆதி தன் மனைவியை ஆழ்ந்து பார்த்தான். அவளின் சிறு பதட்டமும் பயமும் அவனின் கண்ணில் தப்பவில்லை. தன் பார்வையாலே அவளுக்கு தைரியத்தை கடத்தியவன், நானிருக்கின்றேன் எனும் விதமாக தன் கண்களை அழுந்த மூடித் திறந்தான்.
“கண்ணாலே ரொமான்ஸ் நடக்குது போல.” சூர்யா தன் தங்கையின் மனநிலையை மாற்ற, இலகுவாக பேசினான். முழுவதுமாக இல்லையென்றாலும் ஓரளவிற்கு நிரலி தெளிந்து சூர்யாவை பார்த்து புன்னகைத்தாள்.
நீதிபதி தயாளன் ஏ.டி’யை அர்த்தமாக பார்த்துவிட்டு, தன்னருகில் நின்றிருக்கும் குமஸ்தாவிடம் பேச…
“திருமதி.நிரலி ஆதிதேவ்” என்கிற பெயர் அங்கே மூன்று முறை எதிரொலித்து அடங்கியது.
நிரலியின் பெயர் சொல்லப்பட்டதும் அங்கிருந்தோர் அனைவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர்.
தயக்கத்துடனும், நடுக்கத்துடனும் மெல்ல அடிவைத்து சென்று கூண்டில் ஏறி நின்றாள் நிரலி.
அப்போதுதான் விஸ்வநாதன் தன் அதிர்ந்த நிலையிலிருந்து மீண்டிருந்தார்.
“இவளா?” கேள்வி கேட்டுக்கொண்டவருக்கு தான் உருவாக்கி வைத்திருக்கும் தன் மொத்த சாம்ராஜ்யத்தையும் கலைக்க வந்தவளாக மட்டுமே நிரலியை பார்த்தார்.
இவ்வளவு நாளும் அவளுக்கு உரித்தானவைகளையே தாம் ஆண்டு வந்தோம் என்பதை வசமாக அந்நேரம் மறந்து போனார்.
நிரலியை பார்க்க பார்க்க விஸ்வநாதனுக்கு ஒன்றுமில்லாத தன்னுடைய பூஜ்ஜிய நிலை நினைவுக்குள் ஆட்டி வைத்தது. கனன்றும் கோபத்தை விழி பார்வையால் மொத்தமாக நிரலியின் மீது இறக்கிக் கொண்டிருந்தார்.
ஆதி நடந்துகொண்டே பேசுவதை போல் விஸ்வநாதனின் அருகில் சென்று, யாரும் கவனியாதபடி, மெல்ல அவர் காதருகே குனிந்து…
“நானிருக்கும் வரை உன் பார்வை கூட என் மனைவி மீது விழ நான் விடமாட்டேன் விச்சு” என்றதோடு, “நீ இப்படியே என் மனைவியை முறைத்துக்கொண்டு அவளுக்கு தீங்கு விளைவிக்க ஏதேனும் திட்டம் வகுத்தாயென்றால்…” சிறிது இடைவெளிவிட்டு “உன் மனைவியின் கொலை வழக்கை நான் கையிலெடுக்க வேண்டியிருக்கும். அதற்கு தகுந்த ஆதாரங்களும் என்னிடம் இருக்கின்றன” என்று சிறு கவரை ஆதி அவரின் முன்னால் ஆட்டி காண்பிக்க… விஸ்வநாதன் மொத்தமாக தன் தோல்வியை ஒப்புக்கொண்டு தலை கவிழ்ந்தார்.
விஸ்வநாதன் எதிர்த்து வாதிடுவதற்கே ஏ.டி வாய்ப்பளிக்கவில்லை.
அவரின் குனிந்த தலை ஆதிக்கு அத்தனை மகிழ்வை கொடுத்தது.
ஆர்.கே மற்றும் தெய்வாவின் பார்வைகள் நிரலி மீதே பதிந்திருந்தது. அவர்களின் கண்கள் ஆனந்தத்தில் கசிந்தது. பல வருடங்களாகக் காண ஏங்கித் தவித்த முகம் கண்டு அசைவின்றி சிலையாகி இருந்தனர்.
“நிரலி என் மகளா?” ஆர்.கே’வின் மனம் திரும்பத் திரும்ப அக்கேள்வியை கேட்டபடி இருக்க, அதற்கு ஏ.டி பதில் சொல்லத் துவங்கியிருந்தான்.
“மை லார்ட், திருமதி.நிரலி ஆதிதேவ் தான் ஆர்.கே’வின் மகள். அதற்கான மரபணு பரிசோதனை அறிக்கையை ஏற்கனவே உங்கள் பார்வைக்கு வைத்துவிட்டேன்” என்றான்.
ஆதியின் கூற்றை ஆமோதித்த தயாளன் மருத்துவ படிவத்தை ஒருமுறை ஆராய்ந்து விட்டு ஆதியை பார்த்தார்.
“ராஜ்கண்ணா மற்றும் தெய்வநாயகியின் மகளாக பிறந்த நிரலி, வேலுமணி மற்றும் செல்வி தம்பதியினருக்கு எப்படி மகளாயினார் என்பதை இந்நேரத்தில் இங்கு சொல்ல கடமை பட்டிருக்கிறேன் யுவரானர்” என்ற ஆதி தன் மனைவியை பார்த்துக்கொண்டே நடந்ததை விவரித்தான்.
வேலுமணி மற்றும் செல்வி தம்பதியினருக்கு திருமணமாகியும் வெகு நாட்களாக குழந்தை பேறு கிட்டவில்லை. வேலுமணியின் அம்மா, அதாவது செல்வியின் மாமியார் பிள்ளை உண்டாகாததை சொல்லி சொல்லி செல்வியை கொடுமை செய்ததோடு தன் மகனான வேலுவிற்கு மறுமணம் செய்ய ஏற்பாடு செய்ய… இதனை தாங்கிக்கொள்ள முடியாத செல்வி தன் அப்பத்தாவான கற்பகத்திடம் கூறி அழ, அவர் யோசனையின்படி தான் உண்டாகிவிட்டதாக அனைவரையும் நம்ப வைத்தார் செல்வி.
மாதங்கள் ஆக ஆக வயிற்றில் துணி மூட்டையை வைத்து சமாளித்த செல்விக்கு பக்க ஆதரவாக இருந்தது கற்பகம். அவருக்கு தன் பேத்தியின் வாழ்வு முக்கியமாக பட்டது. அதற்காகவே இப்படியொரு நாடகத்தை நடத்தினார்.
ஒன்பது மாதங்கள் முடிவடைந்த நிலையில் குடும்பமாக அனைவரும் கோவிலுக்கு செல்ல முடிவெடுத்த சமயம், அதனை பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்த கற்பகம் அன்றே செல்வியை அழைத்துக் கொண்டு தெரிந்தவரின் மூலமாக யாருக்கும் தெரியாத ஊருக்கு செல்ல வேண்டுமென்று அப்போது சென்னைக்கு வந்து சேர்ந்தார்.
தனக்கு உடல்நிலை சரியில்லை என்பதை காரணம் காட்டி, அரசு மருத்துவமனையில் படுத்துக்கொண்ட கற்பகம்… அங்கு பிறக்கும் குழந்தைகளை நோட்டம் விட்டுக் கொண்டே இருந்தார்.
ஆனால், ஒரு தாயிடமிருந்து குழந்தையை பிரிக்கும் செயலை செய்ய அவரின் மனம் ஒப்பவில்லை. அதனால், பிறந்த குழந்தை இறந்து விட்டது… இவ்வளவு தூரம் கொண்டு வர முடியாதென்று அங்கேயே அடக்கம் செய்துவிட்டதாக சொல்லிக்கொள்ளலாம்… அப்படியில்லை என்றால் விடிந்ததும் எங்கேனும் ஆசிரமத்தில் பிறந்த குழந்தை கிடைத்தால் தத்தெடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்திருக்க அன்றே நள்ளிரவில் அவரின் கைகளுக்கு நிரலி வந்து சேர்ந்தாள்.
விஸ்வநாதன் தன் குழந்தையை கொன்று விடுவான் என்பதற்கு பயந்து ஆர்.கே’வை விட்டு விலகிச்சென்ற தெய்வா நகருக்கு வெளியிலிருந்த ஆசிரமத்தில் தஞ்சம் அடைந்தார்.
அங்கு, ஒருநாள் இரவில் அவருக்கு பிரசவவலி எடுக்கவே விரைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரையே கண்காணித்துக் கொண்டிருந்த விஸ்வநாதன், அவருக்கு குழந்தை பிறந்ததும் என்ன பிள்ளையென்று சொல்ல வந்த செவிலியை தடுத்து… தன்னுடன் வந்திருந்த தடியன் ஒருவனின் கையில் அதனை கொடுத்துவிட்டு செல்லச் சொல்ல, செவிலியும் விஸ்வநாதனை தெய்வாவின் கணவரென்று எண்ணி பிள்ளையை தடியனிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.
அச்சமயம் தற்செயலாக அங்கு வந்த கற்பகம் விஸ்வநாதனின் முகத்தை சரியாக பார்க்கவில்லை என்றாலும், அவர் அடியாளிடம் பேசியதை உண்ணிப்பாக கேட்டார்.
விஸ்வநாதன் கத்தை பணத்தை அடியாளின் கையில் வைத்து,
“இந்த குழந்தை இன்னும் சில நிமிடங்களில் இறந்திருக்க வேண்டும்” என்று கட்டளையாகக் கூறிச் சென்றிட, கற்பகத்தால் குழந்தையை கொலை செய்யச் சொன்னதை தாங்கிக்கொள்ள முடியவில்லை.
அடியாளின் பின்னாலேச் சென்று அவன் குழந்தையை ஒரு குட்டையில் வீச இருந்த சமயம் அவனின் தலையில் பின்னால் அடித்து போட்டுவிட்டு குழந்தையை தூக்கி வந்துவிட்டார்.
“திடீரென வலி ஏற்பட்டு மருத்துவமனை சென்றால், அங்கு பிரசவத்தில் சிக்கலென்று சொல்லி மருத்துவரே ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து தங்களை பெரிய மருத்துவமனைக்கு வெளியூருக்கு அனுப்பி வைத்ததாகவும், பிரசவம் நல்ல முறையில் முடிந்தது” என்றும் வீட்டிற்கு திரும்பி வந்த கற்பகம் தன் குடும்பத்தாரை நம்ப வைத்திருந்தார்.
விஸ்வநாதனுக்கு பயந்து அந்த அடியாளும் குழந்தையை கொன்று விட்டதாக சொல்லிவிட்டான். அதனை நம்பிய விஸ்வநாதனும் தனக்கு எவ்வித வில்லங்கமும் இனியில்லை என்று சொத்துக்களை தன் இஷ்டம் போல் அனுபவித்து வந்தார்.
“கற்பகம் தூக்கி வந்த அந்த குழந்தை நிரலி தான் ஆர்.கே’வின் மகள் யுவரானர்.”
உண்மையை ஆதி சொல்ல கேட்டிருந்த அனைவருக்கும் அவனின் இறுதி வரியில் தான் உயிர் வந்தது.
செல்வி வேலுவிடம் கைகூப்ப அவர் தன் மனைவியின் கையை கீழே இறக்கி விட்டார்.
ஏற்கனவே அனைவருக்கும் நடந்தது தெரிந்திருக்க அனைவரும் உண்மையை ஏற்க முயன்றனர்.
ஆர்.கே தன் தம்பியின் செயலை பொறுக்க முடியாது மனம் வருந்தினார்.
அதன் பின்னர் கற்பகம் கூண்டிலேறி ஆதி சொல்லியவை உண்மை எனும் விதமாக சாட்சியளிக்க, அன்று விஸ்வநாதன் பிள்ளையை கொலை செய்யச்சொல்லிய அந்த அடியாளையும் ஆதி தேடி கண்டுபிடித்து கூண்டிலேற்றியிருக்க, அவனும் நடந்ததை கூற அங்கு விஸ்வநாதன் குற்றமற்றவர் என்று சொல்ல ஒரு சிறு துரும்பும் இல்லாமல் போனது.
சாட்சி சொல்லிவிட்டு வந்தமர்ந்த கற்பகத்தின் கையை கட்டிக்கொண்டு நீதிமன்றம் என்பதையும் மறந்து தெய்வா கதறிவிட்டார். தன் கண்ணீரால் அவருக்கு நன்றியைத் தெரிவித்தார்.
அந்நேரம் கற்பகம் மட்டும் இல்லையென்றால் இன்று அவர்களுக்கு அவர்கள் மகளில்லையே.
இந்த ஒரு செயலுக்காக மட்டும் தான், கற்பகம் இப்போது எப்படி நடந்து கொண்டிருந்தாலும் அவரை ஆதி உட்பட அனைவரும் மன்னித்தது.
தன்னுடைய வாதம் விவாதம் அனைத்தையும் முடித்துக்கொண்ட ஏ.டி தன்னிருக்கைக்குச் சென்று நீதிபதியின் வார்த்தைக்காகக் காத்திருந்தான்.
அங்கிருந்தோர் அனைவருமே தீர்ப்பை எதிர்நோக்கி இருந்தனர்.
விசாரணை மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களை வைத்து தானெடுத்த குறிப்புகளையும் மறு பரிசீலனை செய்த தயாளன், “ஆர்.கே’வின் வாரிசு நிரலி, அத்தோடு வேதாச்சலத்தின் அனைத்து சொத்துக்களும் நிரலியையே சாரும்” என்றுகூறி வேதவல்லி ட்ரெஸ்டிற்கு வழங்கியிருந்த உரிமத்தை ரத்து செய்தார்.
குழந்தை கொலை முயற்சி, சொத்து அபகரிப்பு, பொய் ஆவணங்கள் தயாரித்தில், உடன் பிறந்த அண்ணனையே விபத்திற்குள்ளாகியது, ராகவ் கடத்தல்… ராகவ் கொலை முயற்சி என்று பல வழக்குகள் விஸ்வநாதனின் மீதி நிரூபிக்கப்பட்டதால் விஸ்வநாதனுக்கு பதினான்கு வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
சிங்கமாக வலம் வந்த இடத்தில் கூனிக்குறுகிப் போனார் விஸ்வநாதன்.
தன்னை கண்டு அஞ்சியவனெல்லாம் தன்னை ஏளனம் செய்வதாக உணர்ந்தவர் யாரையும் பார்க்க முடியாது, யாரின் முகத்தையும் நிமிர்ந்து பார்த்திடாது காவல்துறை வாகனத்தில் ஏறியிருந்தார்.
அவரின் மனதில் ஆதியை விட நிரலியின் மீது பழியுணர்வு அதிகமாக வளர்ந்தது. அவரின் பழிவெறி நிறைவேற போவதில்லை என்பதை அவர் அறியவில்லை.
தீர்ப்பு அனைவருக்கும் ஏற்புடையதாக இருந்தது.
அன்று நீதிமன்றம் மட்டுமல்லாது பல ஊடகங்களின் முக்கிய மற்றும் பரபரப்பு செய்தி இதுவாகத்தான் இருந்தது.
‘டாக் ஆஃப் தி டவுன்… ஆதிதேவ்.’
அத்தியாயம் 30 :
கோர்ட்டில் மேலும் தன் குடும்ப செய்தி காட்சிப்பொருளாக வேண்டாமென்று கருதிய ஆதி… அங்கு வைத்து எவ்வித பேச்சுக்களும் வேண்டாமென்று அனைவரையும் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான். ஆர்.கே, தெய்வா உட்பட.
எல்லோரும் வரவேற்பறை இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். யாருக்கு என்ன பேசுவதென்று ஒன்றும் தெரியவில்லை.
கிச்சனிற்குள் வந்த ஆதி வள்ளியக்காவிடம் சொல்லி தேநீர் வார்த்து அதனை ட்ரேயில் அடுக்கிக் கொண்டு வந்து ஒருவித மரத்தை நிலையிலிருந்த நிரலியின் கைகளில் அளித்து அனைவருக்கும் கொடுக்கக் கூறினான்.
மோனை நிலையில் ஆதிக்கு தலையாட்டியவள், எல்லோருக்கும் தேநீர் கொடுக்க… ஆர்.கே’வின் முறை வரும் போது தானாகவே அவளிடம் ஒரு நடுக்கம் வந்து ஒட்டிக்கொண்டது.
ஆர்.கே, தான் பெற்றெடுத்த தகப்பன் என்று கூறி வேலு மற்றும் செல்வியின் உரிமையை பரித்திடுவாரோ என்று அஞ்சிய அந்த நடுக்கம்.
அந்த பயம் நிரலிக்கு மட்டுமில்லை ஆதியின் குடும்பத்தார் அனைவருக்குமே இருந்தது. அதனாலே மௌனமாக அமர்ந்திருக்கின்றனர்.
உரிமைக்காரன் கேட்கும் போது கொடுப்பதுதானே நியாயம். ஆனால் இதுவொன்றும் பொருளிலல்லவே! கேட்டதும் எவ்வித தயக்கமுமின்றி எடுத்துக் கொடுத்திட. ரத்தமும், சதையுமாக உணர்வுகள் யாவும் ஒருங்கே பெற்ற உயிராயிற்றே!
இருபது வருடங்களுக்கு மேல் பொத்தி வைத்த பாசத்தை எளிதில் விட்டுக்கொடுத்திட முடியுமா என்ன?
சிறுவயதில் நிரலி தன் கைக்குள் வந்தது முதல் இன்றுவரை யாவற்றையும், அவள் அம்மா என்றழைத்த முதல் விளிப்பு முதல் செல்வி என்று விளையாட்டாய் அழைப்பது வரை மனதில் எண்ணி எண்ணி மருகியவர் தம் வேதனை தாங்காது யாரையும் பொருட்படுத்தாது அனைவர் முன்பும் வெடித்துக் கதறினார்.
செல்வியின் சத்தமான கேவலில் கையிலிருந்த ட்ரே நழுவி விழ, மின்னல் வேகத்தில் செல்விக்கு அருகில் வந்த நிரலி அம்மா என்று தாவி அணைத்துக் கொண்டாள்.
தெய்வாவிற்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது. அவருக்கும் மகள் மீது பாசம் உள்ளது. அதற்காக பெற்றடுத்தேன் என்ற ஒரு காரணத்திற்காக தான் இன்று வந்து உரிமை கொண்டாட முடியுமா எனும் வகையில் சிந்தித்தே ஆர்.கே பேசாது தானெதுவும் பேசிவிடக் கூடாதென்று மௌனமாக இருந்தார்.
ஆனால் இப்போது செல்வியின் அழுகையை கண்டவருக்கு தான் பேச வேண்டுமென்று தோன்றவே தன் கருத்துக்களை கூறினார்.
மெல்ல செல்வியின் அருகில் சென்றவர், நிரலி மற்றும் செல்வி இருவரின் கரங்களையும் தன்னிரு கரங்களால் பிடித்துக் கொண்டவர்,
“நான் என் கணவரின் தம்பியின் மிரட்டலுக்கு பயந்து அவரைவிட்டு போகும் போது இவள் என் வயிற்றில் எட்டு மாதம் முடிவுற்ற குழந்தை.”
அப்போது நிரலியைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்.
“எனக்கு அந்த நொடி என் குழந்தையை உயிருடன் இந்த பூமிக்கு கொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்ததால் சிந்திக்க மறந்து பயந்து ஓடினான்.
கையில் ஒரு பைசா இல்லை. எனக்காக இல்லையென்றாலும் வயிற்றில் இருந்த இவளுக்காக ஏதேனும் உணவு உண்டாக வேண்டிய கட்டாயம்.
யாரிடம் கேட்பது. கையேந்துவதற்கு மிகுந்த தயக்கம்.
பின்பு மரியாதை பார்க்காது கிடைத்த வேலை செய்து கிடைத்த இடத்தில் உறங்கி ஏதோ நாட்கள் நகர்ந்தன.
அப்படியொரு நாள் சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்த போதுதான், ஆதரவற்று சாலைகளில் வசிப்பவர்களை அழைத்துச் சென்று தங்களது இல்லத்தில் பாதுகாத்து சுய தொழில் செய்ய கற்றுக்கொடுத்து… அவர்கள் தனித்து தொழில் செய்து முன்னேற முடியுமென்ற நம்பிக்கை வளர்த்து இந்த சமுதாயத்தில் வாழ அனுப்புவதை சேவையாக செய்து வந்த துளசி என்கிற உயர்ந்த உள்ளம் கொண்ட பெண்மணி என்னை அவர்களது ஆதரவற்றோர் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்.
அவர் மகள் போல் என்னை பார்த்துக் கொண்டார்.
அப்படியிருக்க, அவர் இல்லாத நாள் இரவில் எனக்கு பிரசவ வலி எடுக்க… அங்கிருப்போர் அனைவரும் என்னை போன்று வெளியுலகம் தெரியாதவர்கள். அவர்களுக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. அதனால் என்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
வலியால் துடித்த நான்… என் குழந்தையின் சத்தம் கேட்டு மயங்கினேன். கண் விழித்தபோது பிள்ளை என்னருகில் இல்லை. கேட்டதில் பிள்ளை இறந்தே பிறந்ததாகக் கூறினர். நான் நம்பவில்லை. பிள்ளையின் அழுகுரல் எனக்கு கேட்டதே என்று வாதாடினேன். ஆனால் அங்கு என்பேச்சு எடுபடவில்லை.
நாளாக நாளாக குழந்தை இறந்து விட்டது என்ற செய்தி என்னை மனதளவில் ரொம்பவே பாதிப்பிற்குள்ளாக்கியது. அதனால் சித்தம் தொலைத்து என்னையே யாரென்று அறியாத நிலைக்குச் சென்று விட்டேன்.
அப்போது அந்த இல்லத்திற்கு இரண்டு வயது குழந்தையாக வந்தவள் தான் ஸ்வேதா.
ஸ்வேதாவை வைத்து என்னை குணமாக்க நினைத்த துளசி அம்மா, ஸ்வேதா தான் என் இறந்து போன குழந்தையென்று சொல்லி… எப்போதும் எங்கோ பார்த்தபடி வெறித்திருந்த என் கவனத்தை ஸ்வேதா புறம் திரும்பினார்கள்.
குணமாகியிருந்தாலும் எனக்கு எதுவும் நினைவில் இல்லை. ஸ்வேதா மட்டுமே என் உலகில் இருந்தாள்.
சென்ற மாதம் ஆதி வழக்கில் விஸ்வநாதனை தோற்கடித்ததாக செய்தி இருவரின் புகைப்படத்துடன் வந்திருந்தது. அதில் விஸ்வநாதனை பார்த்த நான் மயங்கிவிட்டேன்.
கண் விழித்தபோது விஸ்வநாதனால் தான் கணவன் குழந்தையென்று அனைத்தும் இழந்து நிற்கிறேன் என்ற எண்ணம் என் அனைத்து நினைவுகளையும் மீட்டிருந்தது.
எல்லாவற்றையும் ஸ்வேதாவிடம் சொல்ல… அவள் என் கணவரை பற்றி தெரிந்துகொண்டு வருவதாக சொன்னாளேத் தவிர, அவளுக்கு ஏற்கனவே ராகவ், ஆதியின் மூலம் அவரைத் தெரியுமென்று சொல்லவில்லை.
அதன் பின்னர் நான்கு தினங்களுக்குப் பின்னர் ஆதியுடன் என்னை வந்து பார்த்தாள்.
அப்போதுதான் நடந்த அனைத்தும் எனக்கு தெரிந்தது.
நான் பெற்றது மகளென்றும், உயிருடன் உள்ளதென்பதே ஆதி சொல்லித்தான் தெரியும்.
இருபத்திரண்டு வருடங்கள் என் குழந்தையின் நினைவின்றியே இருந்த எனக்கு அவளை உரிமை கொண்டாடி என்னுடன் வைத்துக் கொள்ளும் எண்ணம் நிச்சயம் இல்லை.
அத்தோடு பத்து மாதங்கள் சுமந்த என்னாலேயே பிரிவின் வலி தாங்காது பிரம்மை பிடித்து இருந்தேன் என்றால்… இருபத்தி மூன்று ஆண்டுகள் கைகளிலும் நெஞ்சிலும் தாங்கிய உங்களுக்கு மனதால் என்ன நிலை ஏற்படுமென்று என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
அதனால் நிச்சயம் நானோ என் கணவரோ நிரலியை உங்களிடமிருந்து பிரித்து சொந்தம் கொண்டாட மாட்டோம். அவள் எப்போதும் உங்கள் மகள் தான்.
ஆனால் எங்களையும் அவள் பெற்றோராக ஏற்றுக்கொண்டால் அதுவே போதும்.”
நீளமாக பேசி முடித்தவர் இறுதியில் நிரலியிடம் கை கூப்பி கண்ணீர் வடித்தார்.
தெய்வா பேசி முடிக்கும் வரை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தோரின் நெஞ்சம் அவரின் அழுகையில் விம்மியது.
என்ன இருந்தாலும் பெற்ற அன்னையாயிற்றே, அவர் அழுவது… அதைவிட தன்னிடம் கைக்கூப்பி வேண்டி நிற்பது பிடிக்காது. அவரை அணைத்துக்கொண்டு அம்மா என்று கதறினாள்.
நிரலியின் அழுகையில் ஆதிக்குத்தான் பயம் பீடித்தது.
‘இவளுக்கு உண்மையில் நினைவிலேயே இல்லையா’ என்று மனதில் மனைவியை கடிந்து கொண்டவன், அவளருகில் சென்று தெய்வாவிடமிருந்து நிரலியை பிரித்து தன் தோளில் சாய்த்துக் கொண்டவன், அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்,
“உள்ள நம்ம பேபி இருக்கு… நீ இப்படி அழுதால் பேபி பயம் கொள்ளும் பேபி” என்று ஆதுரமாக தன் பேபிக்கு எடுத்துக் கூறினான்.
அப்போதுதான் நிரலிக்கு தான் தாய்மை அடைந்ததே நினைவிற்கு வந்தது.
நொடியில் தன்னை அழுகையிலிருந்து மீட்டவள், “உங்களுக்கு எப்படித் தெரியும்?” எனக் கேட்டிருந்தாள்.
“அதை அப்புறம் பார்த்துக்கலாம். இப்போ இவங்களை பாரு” என்றான்.
“பொண்டாட்டி அழுவது கூட இவருக்கு வலிக்கும் போல. உடனே வந்து தாங்குறார்.”
அங்கிருந்த இறுக்கமான சூழல் சூர்யாவின் பேச்சால் சற்று தளர்ந்தது.
தெய்வாவும் தன் கண்களைத் துடைத்துக்கொள்ள… செல்வி அவரை அணைத்துக் கொண்டார்.
“நிரலி உங்களுக்கும் மகள் தான். ஒரு அன்னையாக நீங்கள் ஆசைப்படும் அனைத்தும் உங்கள் மகளுக்கு நீங்க செய்யலாம்.”
செல்வி வேலுவை பார்த்துக்கொண்டே சொல்ல அவரும் ஆமோதிப்பாக தலையசைத்தார்.
வேலுவிற்கும் மனைவி தன்னிடம் இத்தனை வருடங்கள் இதனை மறைத்து விட்டாளே என்கிற வருத்தம் அவர் தெரிந்து கொண்ட அன்று இருந்தது தான். ஆனால் தன்னை காத்துக்கொள்ளவே செல்வி இவ்வாறு செய்திருக்கிறார் என்று ஆதி விளக்க… இந்த வயதிலும் மனைவியின் மீது காதல் அலை வேகமெடுப்பதை அவரால் உணர முடிந்தது.
அதனாலேயே இப்போது மனைவியின் சொல்லுக்கு எவ்வித வருத்தமுமின்றி தலையசைக்க அவரால் முடிந்தது.
இவ்வளவு நடந்தும் ஆர்.கே ஒரு வார்த்தை கூட பேசிடவில்லை. நிரலியை விட்டு அவரின் பார்வை அகலவும் இல்லை.
அதனை கவனித்த வேலு ஆர்.கே’வின் அருகில் சென்று…
“உங்க பெண்ணையே உங்களுக்கு விட்டுக்கொடுக்கிறோம் என்று நாங்கள் சொல்லுவது சரியாக இருக்காதுண்ணே! அதனால் நீங்களே உரிமையை எடுத்துக்கோங்க!” என்றிட, ஆர்.கே வேலுவின் கையை அழுந்த பற்றிக்கொண்டார்.
வேலுவின் அண்ணன் என்கிற விளிப்பு ஆர்.கே’வை நெகிழ்த்தியிருந்தது.
ஆதி நிரலியிடம் ஜாடை காட்டிட, ஒருவித தயக்கத்துடனேயே ஆர்.கே’விடம் சென்றவள்… வேலுவின் பார்வையில் தன் தயக்கம் விடுத்து, ஆர்.கே’வின் முன் மண்டியிட்டு அப்பா என்றழைக்க… ஆர்.கே’விற்கு அது ஒன்றே போதுமென்று இருந்தது.
இவர்களின் பரஸ்பர புரிதலில் சூர்யாவுக்குத்தான் மிகுந்த நிம்மதி. அவனின் அம்மு அவனின் உறவுகளோடு.
சூர்யாவின் மனம் ஆதிக்கு புரிந்ததோ!
“யார் வந்தாலும் அவள் என் மனைவிடா. இனி எனக்கு பிறகு தான் எல்லோரும்” என்று சூர்யாவிடம் மெல்லிய குரலில் சொல்லியவன் தன் மீசையை முறுக்கிவிட்டான்.
“ம்க்கும்… ரொம்பத்தான்” என்ற சூர்யா, “அண்ணனாக தங்கை கணவனிடத்தில் அதிக அன்போடு இருப்பதுதான் மகிழ்வு. அதனால் உங்களுக்கே விட்டுத் தருகிறேன்” என்று சொல்ல…
“பெருந்தன்மையா… போடா டேய்” என்று சிரித்துக்கொண்டே அவனின் வயிற்றிலே ஒரு குத்து வைத்தான் ஆதி.
இரு ஜோடி பெற்றோரும் தங்களுக்குள் நிறைய கலந்து பேசி… ஒருவரைப்பற்றி ஒருவர் முழுவதுமாக அறிந்த பின்னரே பேச்சினை விட்டனர்.
விஸ்வநாதனிடம் கிடைக்காத சகோதர உணர்வை ஆர்.கே வேலுவிடம் உணர்ந்தார். அதனால் அவருக்கு தன் மகள் வேறொருவரிடம் உரிமையாக இருப்பதை கண்டு வேற்றுமை உணர்வு எழவில்லை.
இறுதியில் நால்வரும் நன்றி சொல்லியது கற்பகத்திற்குத்தான்.
அப்போதுதான் நன்மை செய்வதினால் உண்டாகும் மகிழ்விற்கு சுவை அதிகம் என்பதை அவர் அறிந்து கொண்டார்.
இதுநாள் வரை செய்த தவறை உணர்ந்த பின்னரும்… யாரிடமும் மன்னிப்பை வேண்டாது தானென்று இருந்தவர்… அந்த நொடி தன் குடும்பத்தாரிடம் தன் தவறை நினைத்து உணர்ந்து மன்னிப்பு வேண்டினார்.
கற்பகத்தால் தான் நிரலி என்பதால்… அவரின் தவறுகள் கூட அங்கு இருப்பவர்களால் மறக்கப்பட்டிருக்க மன்னிப்பிற்கு இடமின்றி போனது.
அனைவரும் மகிழ்ந்திருந்த தருணம், சூர்யாவால் புகைப்படமாக எடுக்கப்பட்டது.
கோர்ட்டில் மற்ற பார்மாலிட்டிஸ்கள் அனைத்தும் முடித்து அப்போதுதான் அங்கு வந்த ராகவ் ஆதியிடம் சென்று சில பேப்பர்களை கொடுக்க… அதனை ஆதி ஆர்.கே’விடம் அளித்தான்.
“இது அனைத்தும் உங்கள் சொத்து பத்திரங்கள் சார்.”
அதனை வாங்கிய ஆர்.கே பிரித்துக்கூட பார்க்காது நிரலியின் கைகளில் திணிக்க அவளோ திகைப்புடன் ஆதியை பார்த்தாள்.
அவனோ, ‘இது உனக்கானது… இதில் நான் சொல்லுவதற்கு ஒன்றுமில்லை. முடிவு உன்னுடையது’ என்பதைப்போல் அமைதியாகவே இருந்தான்.
“போடா” என்று வாய் மட்டும் அசைத்தவள், பத்திரங்கள் எல்லாவற்றையும் ஆர்.கே’விடமே அளித்து…
“நமக்கு இருப்பதே போதும் ப்பா… இது தாத்தாவின் விருப்பப்படி ட்ரெஸ்டிற்கே சேரட்டும்” என்றாள்.
எல்லோருக்கும் அவளுடைய முடிவு சரியெனபட சந்தோஷமாகவே ஒப்புக்கொண்டனர்.
அந்த கணம் கற்பகத்திற்கு தேவையில்லாது… நிரலியையும் சந்தியாவையும் ஒப்பிட்டு பார்க்கத் தோன்றியது.
பணத்தை அடிப்படையாகக் கொண்டு முதலில் சந்தியா ஆதியை மறுத்து பேசியவைகளையும்… ஆதியின் வளமை அறிந்து அவனை நெருங்க முயற்சித்ததையும்… இங்கு வந்த அன்று வீட்டின் செழுமையை மட்டுமே கருத்தாக பார்த்திருந்தததையும் நினைத்த கற்பகத்திற்கு இன்று முகச்சுளிப்பாக இருந்தது.
அத்தனை சொத்துக்களையும் என்னவென்று பிரித்துக்கூட பார்க்காது… வலியோருக்கு கொடுத்த நிரலி அவர் மனதில் பல படிகள் உயர்ந்து நின்றாள்.
‘ஆதிக்கு நிரலிதான் பொருத்தமென்று அவரின் மனமே ஒப்புக்கொண்டது.’
அன்றிரவே ஊருக்கு கிளம்புவதாக மூர்த்தி சொல்லிட… பண்ணைகளும், கால்நடைகளையும் கவனிக்க வேண்டுமேயென்று ஆதியும் நிரலியும் மறுத்து எதுவும் கூறாது அவர்கள் கிளம்ப சம்மதம் தெரிவித்தனர். அதனால் அன்றிரவு உணவு அமர்க்களப்பட்டது.
வேலு ராகவைத் தங்களுடன் அழைத்துச் செல்வதாகக் கூற, ராகவின் கண்கள் சட்டென்று கலங்கிவிட்டது.
“அங்கு வந்து கொஞ்ச நாள் இருக்கட்டும் ஆதி. நம்ம சொந்த பந்தங்களோடு இருந்தால் அவனுக்கும் ஒட்டுதல் வருமில்லையா… என்னதான் நாம பிள்ளைன்னு சொன்னாலும் அவன் ஒதுங்கியே தான் நிக்குறான்” என்று குறைப்பட்டுக் கொண்டார் காமாட்சி.
“சரிம்மா” என்ற ஆதி ராகவை பார்க்க,
அவனோ கண்ணீர் நிறைந்திட்ட விழிகளோடு,
“நான் இனி இங்கு திரும்ப வருவதாகவே இல்லை சீனியர்” என சொல்ல…
“இன்னும் எண்ணன்னா சீனியர், மாமான்னு சொல்லுங்க” என்று சூர்யா கேலி செய்தான்.
“என்னது சீனியரை நான் மாமான்னா” என்ற ராகவ் திருதிருவென விழிக்க…
“மாமான்னு சொல்றது அவ்வளவு கஷ்டமா என்ன?” என்று மேலும் அவனை கிண்டல் செய்தாள் நிரலி.
அவ்வாறே அவர்களின் பேச்சும் சிரிப்புமாய் நேரம் நகர்ந்திட, ஊருக்கு செல்ல ஆயத்தமாகினர்.
அப்போது ஆதியிடம் தனியாக வந்த நிரலி…
“மாமா எல்லோரும் இருக்கும் போதே சொல்லிடலாமா?” எனக் கேட்க,
“எதை?” என்று தெரியாதவன் போல் வினவினான் ஆதி.
நிரலி தன் வயிற்றில் கை வைத்து காண்பிக்க,
“என்கிட்ட முதலில் சொன்னியாடி” என்று சற்று அழுத்தமாகக் கேட்டவன்,
“புருஷன் கிட்ட சொல்லணும் தோணலை. மத்தவங்ககிட்ட சொல்லறதுக்கு மட்டும் தோணுது” என்றவனாக அனைவரின் அருகிலும் சென்று நின்று கொண்டான்.
ஆதியின் வார்த்தைகளில் தான், தானாக சொல்லவேண்டும் என்று அவன் எவ்வளவு எதிர்பார்த்திருப்பான் என்கிற எதிர்பார்ப்பே அவளுக்கு புரிந்தது.
தன்னைத்தானே குட்டிக்கொண்டவளிடம் திரும்பி வந்தவன்… அவளின் தலையை தேய்த்தவாறு,
“என் பேபி தலையில் எதுக்குடி கொட்டிக்கிற… என் பேபிக்குத்தான் வலிக்கும்” என்றவனாக சென்றுவிட்டான்.
தனக்கு ஒன்றென்றால் துடிக்கும் அவனின் காதலில் எப்போதும் போல் இப்போதும் பிரமித்து நின்றாள்.
அனைவரும் நிறைந்த மனதுடன், ஆதி மற்றும் நிரலியிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டனர். சூர்யா நிரலியை சில கணங்கள் அணைத்துவிட்டே விடைபெற்றான். அவனின் அன்பை வார்த்தைகளால் அவனுக்கு காட்டத் தெரியவில்லை. நிரலியை அணைப்பதற்கு முன்பு அவன் ஆதியை முறைக்கவும் தவறவில்லை.
சூர்யாவின் முறைப்பில் ஆதிக்கு சிரிப்புத்தான் வந்தது.
சூர்யா நிரலியிடமிருந்து விலகியதும்,
“என்னைவிடவே அவளிடம் உனக்கு உரிமை அதிகம்டா… இதைத்தானே நான் சொல்லணும் எதிர்பார்த்த” என்று ஆதி சொல்லிக்கொண்டிருக்கும் போதே சூர்யா அவனின் கன்னத்தில் முத்தம் வைத்திருந்தான்.
“தேன்க்ஸ் மாமா… உங்களை பலமுறை சைட் அடிச்சிருக்கேன். ஆனால் இன்னைக்கு கோர்ட்டில் உங்களை பார்த்துட்டு அப்படியே பிரீஸ் அகிட்டேன். சும்மா என்ன கெத்து அதுக்குத்தான் இது” என்றவன் அடிக்க வந்த ஆதியிடம் மாட்டாது வண்டியில் ஏறியிருந்தான்.
ஆதியின் குடும்பம் சென்ற பின்னர், ஆர்.கே’வும் தெய்வாவும் மேலும் சில மணி நேரம் நிரலியுடன் செல்வழித்துவிட்டேச் சென்றனர்.
ஆதி எவ்வளவோ இங்கேயே இருக்குமாறு கேட்டும்,
“இதற்கு முன்பு எப்படியோ… ஆனால் இனி மகளின் புகுந்த வீட்டில் தங்குவது சரிவராது” என்று நேரடியாகவே சொல்லியவர்… அவர்கள் அடிக்கடி வரவேண்டுமென்கிற வேண்டுதலோடு சென்றிருந்தார்.
அனைவரும் மகிழ்ந்திருக்க…
நடந்த யாவும் அறிந்த சந்தியா… நிரலியின் மீதிருந்த கோபத்தை மேலும் அதிகரித்துக் கொண்டாள்.
நிரலியை ஏதேனும் செய்தாக வேண்டுமென்கிற பழியுணர்வு… நிரலிக்கு நடக்கும் நல்லதெல்லாம் கண்டு பொறுக்காது அவளின் மனதில் வன்மமாக மாறியது.
‘தானிருக்க வேண்டிய இடம் அது’ என்கிற எண்ணமே அவளின் மூளையை மழுங்கச் செய்து… வெறுப்பினை உண்டாக்கியிருந்தது.
கொஞ்சம் யோசித்து பார்த்தாலும் தான் தனித்து ஆதரவற்று நிற்பதற்கும் நிரலிக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லையென்று அவளுக்கு புரிந்திருக்கும்.
ஆனால் யோசித்து பார்க்கும் அளவிற்கு மனதில் நல்லெண்ணம் வாய்ந்தவள் இல்லையே சந்தியா.
நிரலியின் மீதான பழியுணர்வே சந்தியாவை மொத்தமாக அழிக்கக் காத்திருக்கிறது.
Epi 31 and 32
https://thoorigaitamilnovels.com/%e0%ae%8f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-31-%e0%ae%ae-32/
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
12
+1
48
+1
1
+1
செமடா
Thank you kaa 🩷❤️