அத்தியாயம் 25 :
தன் வீட்டை விட்டு வெளியேறும் விஸ்வநாதனை பார்த்துக்கொண்டே,
“கேஸ் எப்போ கோர்ட்டுக்கு வருது ஆதி?” எனக் கேட்டார் ஆர்.கே.
“வர வெள்ளிக்கிழமை சார்.”
“அப்போ இன்னும் இரண்டு நாளில் என் பொண்ணு என்னோடு இருப்பான்னு சொல்லு.”
“இல்லை சார். உங்க பொண்ணு யாருன்னு தெரிந்துவிடும். ஆனால் உங்களோடு இருப்பாங்களா தெரியல” என்று அவர் சொல்லியதற்கு மறுத்து பேசிய ஆதியை கேள்வியாக நோக்கினார் ஆர்.கே.
“நான் தான் அன்னைக்கே சொன்னனே சார் இப்போ அவங்க உங்க பொண்ணா மட்டும் இல்லைன்னு…”
“விச் மீன்ஸ்…”
“அவங்க இன்னொருத்தரோட மனைவி சார்.”
“ஹோ… கல்யாணம் ஆகிருச்சா?” தன் மகளுக்காக எந்தவொரு கடமையும் தன்னால் செய்ய இயலாது போனதே என்கிற வருத்தம் அவரிடத்தில் மேலோங்கியிருந்தது.
“ம்ம்ம்” என்று பதிலளித்த ஆதி,
“உங்க மனைவி உயிரோடு இருக்காங்கன்னு தெரிந்தும் ஒன்றும் கேட்கவில்லையே?” என்றான்.
“எப்படி கேட்டாலும் நீ சொல்லமாட்ட, ஜஸ்ட் டூ டேஸ் சார்… வெயிட் பண்ணுங்க சொல்லுவ, அதான் ஆர்வத்தை கட்டுப்படுத்திட்டு அமைதியா இருக்கிறேன்.”
ஆதியிடத்தில் அர்த்தமாக ஒரு புன்னகை.
“இப்படி சிரிச்சே எல்லாரையும் காலி பண்ணிடு” என்றவருக்கு தன்னுடைய சிஷ்யனின் திறமையை கண்டு அவ்வளவு பெருமை.
“இந்த இரண்டு நாளில் விஸ்வநாதன் எதுவும் செய்யக்கூடும். அதற்கு நாம்
கவனமாக இருக்க வேண்டும்” என்ற ஆதி, பானுக்காவை அழைத்து ஆர்.கே’வின் பாதுகாப்பை முன்னிறுத்தி அவருடனே இருக்குமாறு கேட்டுக்கொண்டான்.
ஆர்.கே நீதிமன்றம் கிளம்பும் வரை அவர் மீது கண்ணிருக்க வேண்டுமென்று வலியுறுத்தினான்.
ஆர்.கே இல்லையென்றால் விஸ்வநாதனுக்கு இந்த வழக்கே இல்லாமல் போய்விடுமே. அதன்படி ஒருமுறை உடன் பிறந்தவன் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் விஸ்வநாதன் செய்த விபத்தினால் தான் ஆர்.கே தன் நடையை இழந்தார்.
சொந்த தம்பியே அண்ணனை கொல்ல முயற்சித்தான் என்று யாரும் விஸ்வநாதனை தவறாக பேசிவிடக் கூடாதென்பதற்காகவே உடல்நிலை சரியில்லாமல் போனபோது கால் தன்னுடைய இயக்கத்தை நிறுத்திக் கொண்டதென்று அனைவரிடம் சொல்லி வைத்தார்.
அதன் பிறகு ஆர்.கே தன் பாதுகாப்பில் கவனமாக இருக்க, விஸ்வநாதனால் அவரை நெருங்க முடியாது போனது.
தன்னனுடைய இடத்திற்காகத்தான் விஸ்வநாதன் இப்படியெல்லாம் செய்கின்றானென்று புரிந்த அன்று தொழிலிலிருந்தும் விடுபட்டுக் கொண்டார்.
அவனின் குடும்பத்தையும் இல்லாமல் செய்தாயிற்று… இப்போது அவனின் தொழிலும் இல்லை, இனி தான்தானென்று நினைத்த விஸ்வநாதன் ஆர்.கே’வை செத்த பாம்பாக எண்ணி அமைதியாக இருக்க, அவருக்கு பெரிய குடைச்சலாக வந்து சேர்ந்திருந்தான் ஆதி.
ஆர்.கே’வை ஒன்றுமில்லாமல் செய்த விஸ்வநாதனால் ஆதியை நெருங்கக் கூட முடியவில்லை. அதன் விளைவு இன்று விஸ்வநாதனின் மொத்த குடுமியும் ஆதியின் கையில்.
“நீயிருக்கும் போது எனக்கென்ன ஆதி.”
பானுக்காவிடம் ஆதி அவ்வளவு தூரம் சொல்லிக் கொண்டிருக்க ஆர்.கே அவ்வாறு கூறினார்.
“நானிருக்கும் போதே தான் சார் என் ராகவை தூக்கினான். இன்னும் அந்த கோபம் எனக்குள் இருக்கிறது. இதற்கும் சேர்த்து அந்த விஸ்வநாதன் அனுபவிப்பான்” என்ற ஆதி மீண்டும் ஒருமுறை பானுக்காவிடம் அறிவுறுத்து விட்டே சென்றான்.
****
தன்னுடைய வீட்டில் அலுவலக அறையின் சாய்வு நாற்காலியில் நன்கு சரிந்து அமர்ந்திருந்த ஆதியின் கண்கள் மூடியிருந்தன. ஆனால் அவனின் கருவிழிகள் அவனின் அமைதியின்மையை பறைசாற்றின.
நடந்த மற்றும் நடக்கப்போவைகளை எப்படி தன் உயிரானவளிடம் சொல்வதென்று மார்க்கம் அறியாது தவித்தான்.
நிச்சயம் அனைத்தும் அறிந்த பின்னர் அவளின் மனநிலை எப்படி இருக்குமென்று அவனால் கணிக்க முடிந்தது. கணித்ததை எண்ணி தான் துவண்டிருந்தான்.
அவனால் அவனின் உயிரானவளின் கண்ணீரை கண் கொண்டு கண்டிட முடியாதென்று மருகினான்.
பல குற்றவாளிகளை தைரியமாக எதிர்க்க துணிந்தவனுக்கு, மனைவியின் கண்ணீரை நோக்கும் துணிவில்லை.
உலகமே இருண்ட நிலையில் இருந்தான்.
“ஆதிப்பா.”
கதவை தட்டிவிட்டு உள்ளே செல்வதற்காக அவனின் அனுமதி வேண்டி நின்ற வேலு, ஆதியிடம் எவ்வித அசைவுமின்றி இருக்க பெயர் சொல்லி விளித்தார்.
வேலுவின் குரல் கேட்டு கண் திறந்த ஆதி அமைதியாக அவரையே பார்த்திருக்க, உள்ளே சென்றவர்,
“என்னப்பா யோசனை?” என்றார்.
“பேபிகிட்ட எல்லாம் சொல்லணும் மாமா…”
அடுத்து சொல்லாது அவன் வாக்கியத்தை நிறுத்த,
“எப்படி சொல்லுறது தெரியலையா?” என்று அவர் கேட்க… ஆதியின் மௌனமே அது தானென்று கூறியது.
“நான் வேணுமுன்னா சொல்லட்டுமாப்பா?”
“இல்லை மாமா… நானே சொல்லுறேன். நான் தான் சொல்லணும். சொன்னா அவள் எப்படி ரியாக்ட் பண்ணுவாள் தெரியல… கண்டிப்பா அப்போ நான் பக்கத்தில் இருக்கணும்” என்றவன் மேற்கொண்டு எதுவும் பேசும் நிலையில் இல்லாது மீண்டும் கண்களை மூடிக்கொண்டான்.
ஆதியின் அருகில் நெருங்கி வந்த வேலு, அவனின் சிகை கோதி…
“எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ஆதிப்பா… மனைவி மனசு கலங்க இருப்பதையே தாங்கிக்கொள்ள முடியாது தவிக்கின்றாயே! நீ கிடைக்க என் பொண்ணு புண்ணியம் செஞ்சிருக்கணும் ப்பா” என நெகிழ்வோடு சொல்ல…
“பேபி என் வாழ்க்கையில் வந்தது வரம் மாமா.” மூடிய விழிகள் அலைப்புற, தொண்டை கமறியது.
ஆதியின் தோளை தட்டிக் கொடுத்தவர் அங்கிருந்து நகர்ந்தார்.
வேலு உள்ளே செல்லும்போது கையில் அலைபேசியுடன் நிரலி வெளி வாயிலை நோக்கி வந்தாள்.
நிரலி யாருக்கோ அலைபேசியில் அழைத்துக் கொண்டிருந்தாள்.
“என்னம்மா எங்க போற?”
“மாமா இன்னும் காணோம் ப்பா!”
ஆதிக்காக மகளின் காத்திருப்பு எத்தகையதென்று உடன் இருந்து பார்த்தவர் என்பதால் அவளின் சிறு நேர தேடலுக்கான காரணம் கூட புரிந்தது.
“ஆபீஸ் ரூமில் இருக்காரும்மா” என்றவர் மகளின் கன்னம் தட்டி செல்ல, நிரலி வேகமாக அலுவலக அறை நோக்கிச் சென்றாள்.
கொலுசின் மெல்லொலியினிலே மனைவியின் வருகையை உணர்ந்தவன், இமை அவிழ்த்து வாவென்று கண்களாலே அழைத்தான்.
அருகில் வந்தவளை தன் மடியில் இறுத்திக் கொண்டான்.
“மாமா… என்னதிது, யாராவது வரப்போறாங்க” என்றவள் அவன் மடிமீதே நெளிய…
“ப்ளீஸ் பேபி…” என்றவனின் குரல் பேதத்தில், அவனது அணைப்பை காதலாக ஏற்று அமைதி காத்தாள்.
நிமிடங்கள் பல கடந்தன. அங்கிருந்த கடிகாரத்தின் ஓசையில் தானிங்கு வந்து நேரமாகிவிட்டதை உணர்ந்தவள், அப்போது தான் தான் ஆதியை எதற்காக தேடி, அவனுக்கு அழைக்க முயற்சித்தோம் என்பதே அவளுக்கு நினைவு வந்தது.
அதேநேரம் அவளின் முகமும் செம்மை பூசியது.
கையிலிருந்த ஒன்றை விரல் பிரித்து பார்த்து… மீண்டும் அழுந்த பற்றிக்கொண்டாள். மனமெல்லாம் இன்பத்தில் திளைத்தது.
“மாமா.”
அவனிடம் அமைதியே!
“தேவா!”
மனைவியின் பிரத்யேக அழைப்பிற்கு அவனிடம் பிரதிபலிப்பு இருந்தது.
“பேபி…”
“நான் உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்” என்றவள் தன் முகத்தை திருப்ப, அவனின் சோர்ந்த முகத்தைக் கண்டு பதட்டம் கொண்டவளாக…
“உடம்ப சரியில்லையா மாமா” எனக் கேட்டுக்கொண்டே அவனின் கழுத்து மற்றும் நெற்றியில் கை வைத்து பரிசோதித்தாள்.
மனைவியின் சிறு பதட்டத்தையும் தாங்காதவன்,
“பேபி… எனக்கொன்றுமில்லை” அவளின் முகத்தை தன் கையில் ஏந்தியிருந்தான்.
“அப்புறம் ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு?”
“உன்கிட்ட ஒன்னு சொல்லணும். அதை எப்படி சொல்றதுன்னு தெரியல பேபி.” இனியும் எதையும் மறைக்கக்கூடாதென்று நினைத்தான்.
“எப்படி சொல்றதுன்னு நீங்க யோசிக்கிறீங்கன்னா… நிச்சயம் எனக்காக தான் இருக்கும். நீங்க இவ்வளவு கஷ்டப்பட்டு அதை நான் தெரிஞ்சிக்க எந்த அவசியமும் இல்லை மாமா. எனக்கு அது தெரியாமலே இருக்கட்டும். நீங்க முகத்தை இப்படி வைக்காதீங்க, எனக்கு என்னவோ போலிருக்கு.”
எப்போதும் போல் அவளின் காதலில் இப்போதும் தலைக்குப்புற கவிழ்ந்தான்.
“உனக்கு இப்போ இது தெரிந்தே ஆக வேண்டும் பேபி” என்றவன்,
“நான் சொல்லுறதை கேட்டு அழ மட்டும் செய்திடாதே பேபி. உன் கண்ணீரை பார்க்கும் திடம் எனக்கில்லை” என்றான்.
கணவனின் நடுக்கம் உணர்ந்தவள், வரும் பூதம் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் கண்ணீரை மட்டும் சுரந்திடக் கூடாதென்று மனதிற்குள் உருப்போட்டாள்.
“நீ யாருன்னு தெரியுமா பேபி” என ஆரம்பித்தவன் அவளின் வாழ்வில் அவளுக்கே தெரியாமல் அவளைச்சுற்றி நடந்தவற்றை அவளின் முகம் பார்த்து கூறினான்.
மனைவியை தன் அணைப்பிலேயே வைத்திருந்தான்.
தான் சொல்லும்போது அவளின் முகத்தில் எங்கேனும் மாறுதல் தெரிகிறதா என்று கூர்ந்து பார்த்தவனுக்கு அவளிடம் சிறு சலனம் கூடத் தென்படவில்லை.
ஆதிக்கு புரிந்துதான் இருந்தது. தனக்காக தன்னுடைய உணர்வுகளை அடக்குகிறாள் என்று. அப்போதே அவளின் முகம் முழுக்க இதழ் கொண்டு தீண்டும் பேராவல் எழ, சொல்லிக் கொண்டிருப்பதன் முக்கியம் அறிந்தவன், தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான்.
சில இடங்களில் ஆதியே தடுமாற, அப்படியொரு மாற்றமே இன்றி நிர்மலமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள் நிரலி.
நிரலியின் திடம் கண்டு ஆதிக்கே ஆச்சர்யமாக இருந்தது. இந்த திடம் தனக்காக, தான் வருந்திவிடக் கூடாதென்று அவள் தன் வலி உணர்வுகளை மறைக்கின்றாள் என்று அந்நிலையில் கூட அவளின் காதலை எண்ணி கர்வம் கொண்டான்.
ஆதி சொல்லி முடித்ததும் அவ்வளவு தானா என்பது போல் ஒரு பார்வை பார்த்தவள், அவனின் மடியிலிருந்து இறங்கினாள்.
‘அவள் அழுதிருந்தாலே தேவலாம்’ என்று எண்ண வைத்தது அவளின் இந்த பேரமைதி. உணர்வுகளற்ற தோற்றம்.
“பேபி.”
எழுந்து நின்றவனை இறுக்கி அணைத்தவள்,
“ஸ்டவ்வில் பால் வைத்தேன். பார்த்துட்டு வறேன்” எனக்கூறி சென்றவள் நேராக தங்களது அறைக்குள் நுழைந்து கதவடைத்து வெடித்து கதறினாள்.
இவ்வளவு நேரமும் ஆதிக்காக கட்டுப்படுத்திய வலிகள் பெரும் கேவளாக வெளிவந்தன.
மூடிய கதவை தாண்டியும் அவளின் அலறல் வெளியே கேட்டது.
ஆதி நிரலியிடம் சொல்லும் போதே, வேலுவும் தன் குடும்பத்தாரிடம் சொல்லியிருந்தார். அதிர்வில் இருந்த அவர்களும் நிரலியின் அழுகுரல் கேட்டு வரவேற்பறைக்கு வந்து மேல் பார்க்க, ஆதி வெளியிலிருந்து ஓடி வந்தான்.
எதற்கு பயந்தானோ அது நடந்து விட்டது. அப்படியே கல்லென சமைந்து நின்றுவிட்டான்.
நிரலி எதற்காக கதருகிறாள் என்றறிந்தவர்களும் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் கைகளை பிசைந்துகொண்டு நிற்க, வேலு ஆதியை தொட்டு அவனை மீட்டார்.
அடுத்த கணம் சூரியனிலிருந்து பாயும் கதிராக தன் மனைவியை நோக்கி பாய்ந்தான்.
கதவு உள்பக்கம் தாலிடாமல் இருக்க, அவன் கை வைத்ததும் திறந்து கொண்டது.
தரையில் குத்திட்டு அமர்ந்து, மடியில் முகம் புதைத்து நிரலி அழுகையில் குலுங்கிக் கொண்டிருக்க… முதல் முறை உடலில் அப்பட்டமான நடுக்கத்தை உணர்ந்தான் ஆதி.
மனைவியை இந்த கோலத்தில் காண அவனின் இதயம் வலித்தது. மனம் ரணமாகியது.
அறைக்குள் வந்தவனால் அவளின் அருகில் செல்ல முடியவில்லை. கால்கள் நகர மறுத்தன. கண்கள் பனித்தன.
பெரும் பிரயத்தனப்பட்டு, அசைய மறுத்த கால்களை கடினப்பட்டு நகர்த்தி நிரலியின் அருகில் சென்றவன், கவிழ்ந்திருந்தவளின் தலையில் கரம் பதிக்க,
கணவனின் தொடுகை உணர்ந்து நிமிர்ந்தவளின் முகம் உணர்வற்று சலனமின்றி நிர்மலமாகக் காட்சியளித்தது.
கலைந்திருந்த முன்னெற்றி கேசமும், சிவந்த விழிகள் மட்டுமே அவள் அழுததற்கு சான்று.
அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தவன்,
தனக்காகக் கட்டுப்படுத்தி மனம் அழுத்தம் அடைந்திடுமோ என்று அஞ்சினான்.
“அழுதிடு பேபி.”
இதனை சொல்வதற்குள் அவனின் கண்ணிலிருந்து ஒற்றை துளி கன்னத்தில் உருண்டோடியது.
“ம்ஹூம்” என்று தலையசைத்தவள், வாயினை இரு கைகள் கொண்டு பொத்திக்கொண்டாள். கண்கள் இரண்டும் நீரினால் நிரம்பியிருக்க, கண்ணீரை கட்டுப்படுத்துவதால் முகம் முழுக்க ரத்தமாக சிவந்திருந்தது.
அவளின் முகம் பார்க்கவே அச்சம் கொண்டவன்,
“ப்ளீஸ் பேபி அழுதிடுடா” என்றான். இப்போது வெளிப்படையாகவே அவனின் குரல் அழுகையை வெளிப்படுத்தும் வகையில் தடுமாறி ஒலித்தது.
கணவனின் குரலில் அழுகையின் சாயலை கேட்டவளுக்கு… அப்போதுதான் அவளின் கண்ணில் பட்டது ஆதியின் கன்னத்தில் வழிந்திருந்த கண்ணீர்.
நொடியில் தன்னை நிலைப்படுத்தியவள், கண்களை அழுந்த துடைத்தவளாக…
“உனக்கு அழக்கூடத் தெரியுமா மாமா?” என்றாள்.
“என்னவோ நீ அழுறதை பார்க்க முடியல பேபி. உள்ளுக்குள்ள அவ்வளவு வலிக்குது” எனக் கூறினான்.
யாருக்காகவும் எந்நிலையிலும் கலங்கிடாதவன் தனக்காகக் கண்ணீர் சிந்துவது ஒருபக்கம் மகிழ்வை கொடுத்த போதிலும், கணவன் கலங்குவது காண பிடிக்காதவள்…
“நான் அழல மாமா… அழல, நீங்க சொன்னதை கேட்டதும் கொஞ்சம் தடுமாறிட்டேன்.
இப்போ அம் ஓகே” என்றவள் புன்னகைக்க முயல,
மனைவியைத் தாவி அணைத்துக் கொண்டான். தன் நெஞ்சிற்குள் பொத்தி வைத்தான். ஆழப் புதைத்தான்.
திடப்படுத்திய வலி நிறைந்த உணர்வுகளெல்லாம் கணவனின் அணைப்பில் கட்டுடைய அவனின் நெஞ்சிலே கண்ணீர் சிந்தினாள்.
அழுவது ஒன்றே அவளை அமைதிப்படுத்தும் என்று நினைத்தவன், அழும் மனைவியை சேயாய் தாங்கினான்.
அவள் அழுது ஓயும் வரை, தன் நெஞ்சத்தால் அவளுக்கு ஆறுதல் வழங்கினான். அவனின் கைகள் தன்னைப்போல் மனைவியின் முதுகை நீவிக் கொடுத்தது.
எவ்வளவு நேரம் அழுதாளோ கேட்ட செய்தியை மூளை கிரகித்து இதுதான் நிதர்சனம், உண்மையென்று மனதில் பதியும் வரை அழுதவளின் அழுகை விசும்பலாகக் குறைந்து தேம்பாலாக முடிவுக்கு வந்தது.
கண்ணீர் வழிவது நின்றதும், தன்னிடம் பிரிந்து விலகி அமர்ந்தவளை மீண்டும் தன்மீது சாய்த்துக் கொண்டான்.
“இனி ஒருமுறை நீ அழுவதை நான் பார்க்கக் கூடாது பேபி” என்றவனின் குரலில் என்ன இருந்ததோ. கட்டளையா, கெஞ்சலா என்று பிரித்தறிய முடியவில்லை.
“நான் இந்த வீட்டு…”
அவள் கேட்க வந்ததை யூகித்தவள், சொல்ல விடாது அவளின் இதழை சிறை பிடித்திருந்தான்.
முத்தம் முற்று பெற இதழை விலக்கியவன்,
“நீ இந்த ஆதிதேவின் மனைவி,
தேவாவின் பேபி…
இது மட்டும் தான் இனி உன் மனதில் இருக்க வேண்டும்” என்றவன் காற்றுககூட புக முடியாத அளவிற்கு அணைத்திருந்தான்.
எந்நிலையிலும் உனக்கு நானிருக்கின்றேன் என்று தன் நெருக்கத்தில் உணர்த்தினான்.
கணவனின் அன்பில் நெஞ்சத்தில் இதம் உணர்ந்தவள், அடுத்து நடக்கயிருப்பதை இப்போதே எதிர்கொள்ள மனதை திடப்படுத்தினாள்.
‘தன்னுடைய தைரியமே கணவனின் அருகாமையும், அவனின் காதலும் தான்’ என்று எண்ணியவள் ‘எத்தகைய பெரிய புயலையும் இவனுடன் எளிதாகக் கடந்து விடலாம்’ என்று அசாத்திய துணிவு கொண்டாள்.
அத்தியாயம் 26 :
நிரலி வெளியில் தன்னை திடமாக எவ்வித வருத்தமுமின்றி காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் அவ்வளவு வேதனையை கொண்டிருந்தாள்.
நிரலியின் முகம் ஒன்றே போதும்… ஆதி அவளின் நிலையை நொடியில் யூகித்திடுவான். அதனாலே அவன் கண்ணில் படாது மறைந்து மறைந்து வீட்டில் தன் வேலைகளை தன் போக்கில் செய்து கொண்டிருந்தாள்.
கைகள் தான் வேலைகளை செய்தனவே தவிர மனம் இரவு ஆதி சொல்லிய செய்திகளிலேயே உழன்றது.
அவனிடம் “எதுவுமில்லை நான் சரியாகிவிட்டேன்” என்றாலும் மனதின் குடைச்சலை வெளியேற்ற முடியாது தவித்தாள்.
இரவு ஆதி முயன்று அவளை உறங்க வைத்திருக்க, அவன் ஆழ்ந்த நித்திரைக்கு சென்ற அடுத்த கணம் இவள் கண் விழித்திருந்தாள். தன்னுடைய அசைவு அவனின் உறக்கத்தையும் குலைத்துவிடுமென்று கருதியவள் அவனின் அணைப்பிற்குள் இருந்தவாறே விட்டத்தை வெறித்தாள்.
இரவு அழுகைக்கு பிறகு நிரலி கீழே செல்லவில்லை. மேற்கொண்டு ஆறுதல் சொல்கிறேனென்று அவளின் மனம் காயப்படுவதை தவிர்க்க குடும்பத்தார் யாரையும் அவளிடம் பேச ஆதி அனுமதிக்கவில்லை.
உணவும் தானே அறைக்கு கொண்டு வந்தவன், அவள் மறுக்க மறுக்க ஊட்டி முடித்திருந்தான்.
அவன் உறக்கம் வேண்டுமென்பதற்காகவே வராத உறக்கத்தை வந்தது போல் பாவனை செய்தவள் இப்போது கொட்ட கொட்ட முழித்திருந்தாள்.
‘காலை தன் உறவுகளை எப்படி பார்ப்பேன். தான் பேசினால், உண்மை தெரிந்த நிலையில் தன்னை எப்போதும் போலவே நடத்துவார்களா, பழகுவார்களா இல்லை தள்ளி வைத்து விடுவார்களா?’ மனதில் பல கேள்விகள் முளைத்தன. கண்கள் மூட கூட முடியாது கண்ணீரில்லாது மனதோடு அழுகையில் கரைந்தாள்.
ஆதியின் முகம் பார்த்தே இரவை போக்கியவள், அதிகாலை அவனிடம் அசைவு தெரியவும் உறங்குவதைப்போல் கண்ணை மூடிக்கொண்டாள்.
‘என்கிட்டவே நல்லா நடிக்கிறாய் பேபி’ என்று மனதில் சொல்லிக் கொண்டவன், அவளின் நெற்றியில் இதழொற்றி அவள் விழித்திருப்பது தெரியாததை போல் தன் காலை நேர பணிகளை செய்ய சென்றுவிட்டான்.
இரவு அவள் விழித்து அவனின் முகம் பார்த்திருந்த போதே ஆதி உறக்கம் கலைந்துவிட்டான். அதுவுமில்லாமல் தன் உயிரானவள் வேதனையில் மூழ்கியிருக்கும் போது அவனெப்படி நிம்மதியாக உறக்கம் கொள்வான்.
‘தனக்காக அவள் தன்னுடைய வலிகளை மறைக்கும் போது… விழித்திருப்பதுதான் அவளுக்கு ஆறுதலென்றால் துணையாக நானும் விழித்திருக்கின்றேன்’ என அவளுடன் அமைதியாக உறங்காது இரவை கடத்தினான்.
ஆதி குளியலறைக்குள் நுழைந்த கணம், மற்றொரு குளியலறைக்குள் புகுந்தவள் ஆதி வருவதற்குள் கீழிறங்கி சென்று விட்டாள்.
நிரலி கீழே செல்லும்போது அவளுக்காக காத்திருந்தான் சூர்யா. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து நிற்க, யாருக்கு முதலில் எப்படி பேச்சினை ஆரமிப்பது என்றே தெரியவில்லை.
“அம்மு.”
சூர்யாவின் தழுதழுத்த குரலில் நிரலி உடைந்தே விட்டாள். வேகமாக சென்று சூர்யாவின் கை வளைவிற்குள் தன்னை புகுத்திக் கொண்டவள்,
“எனக்கு கத்தி சத்தமா அழணும் போலிருக்கு சூர்யா” என்றாள்.
“அம்மு.” இந்த வார்த்தை தவிர வேறொன்றும் அவனது வாயில் வரவில்லை.
அவள் அழ வேண்டுமென்றதும், என்ன செய்வதென்று புரியாது அவனிருக்க,
“நான் அழ மாட்டேன் சூர்யா… நான் அழுதால் மாமாவும் அழுவாங்க” என சொல்லி…
“உனக்கு காபி வேண்டுமா” என்று எதுவுமே நடவாததை போல் கிச்சனிற்குள் சென்றாள்.
நிரலியின் திடம் கண்டு ஆறுதல் அடையவா அல்லது அவளின் இந்த அமைதியில் பயம் கொள்வதா என்று தெரியாமல் தங்கைக்காக கலங்கி நின்றான் அந்த அண்ணன்.
மூர்த்தியும் வேலுவும் ஒன்றாக வந்து வரவேற்பறையில் அமர,
“எப்போ கோர்ட்டுக்கு போகணும்?” என்று கேட்டான் சூர்யா.
“இன்னைக்குத்தான் கேஸ், ஆதிப்பா எப்போ போகணும் நேரம் சொல்லும்” என்று சூர்யாவுக்கு பதிலளித்த வேலு அடுப்பறை பக்கமே தன் பார்வையை பதித்திருந்தார்.
அனைவருக்கும் தேநீர் கலந்து கொண்டு வந்தவள், யாரின் முகத்தையும் பாராது பார்வை கவிழ்ந்த நிலையிலேயே ட்ரேவை அவர்கள் முன் நீட்டினாள்.
தனக்கு முன் யார் இருக்கின்றார்கள் என்பது கூட தெரியாத அளவிற்கு விழித்திரையை கண்ணீர் நிறைத்திருந்தது.
“அம்மாடி நிரலி…” காமாட்சியின் குரலில் நிமிர்ந்தவள், அவருக்கு அருகிலிருந்த செல்வியின் கசங்கி அழுது வீங்கியிருந்த முகத்தை கண்டதும் தன் கண்ணீரை உள்ளுக்குள் இழுத்துக் கொண்டாள்.
‘தான் சோகமாக இருக்கும் வரை இவர்களும் இப்படித்தான் இருப்பார்கள்’ என்று எண்ணியவள் முயன்று தன்னை சாதரணமாகக் காட்டிக்க முயற்சித்தாள்.
“அம்…மா காபி எடுத்துக்கோ!”
அம்மா என்ற வார்த்தையில் நிரலி தடுமாறியதும் செல்வி உள்ளுக்குள் மரித்தே விட்டார்.
அனைவரையும் சகஜமாக்க நிரலி ஏதேதோ பேச… அவர்களும் அவளை பேசி வருத்தப்பட வைக்கக்கூடாதென்று நடந்ததைப் பற்றி எதுவும் பேசாது தாங்கள் எப்போதும் உனக்கு உடனிருப்போம். இதுதான் உன் குடும்பமென்று வார்த்தைகளற்று அவளுக்கு உணர்த்திக் கொண்டிருந்தனர்.
நிரலி பேசியதற்கெல்லாம் ஆமென்று தலையாட்டிக் கொண்டிருந்தனர். அனைவரின் மனமும் கனத்திருந்த போதிலும் நிரலிக்காக அவர்களும், குடும்பத்தாருக்காக அவளும் ஒன்றுமேயில்லை என்பதை போலிருந்தனர்.
ஒருவருக்கொருவர் அன்பினால் தாங்கிக்கொள்வதை கண்ட கற்பகம், “தன்னைவிட சிறியவர்களுக்கு இருக்கும் மனப்பக்குவம் தனக்கில்லாமல் போயிற்றே’ என்று தன்னையே நினைத்து வெட்கினார்.
மேலிருந்து ஆதி கீழிறங்கி வருவதைக் கண்ட நிரலி வேக வேகமாக கிச்சனிற்குள் சென்றுவிட்டாள். ஆதிக்கு அவளின் செயல் வலியை கொடுத்தது.
மனைவியின் மனம் புரிந்த போதும் அதனை அவனால் ஏற்க முடியவில்லை.
“சரியா பதினொரு மணிக்கு கோர்ட்டில் இருக்க வேண்டும்.”
பொதுவாக அனைவரையும் பார்த்து சொல்லியவன் அலுவலக அறை நோக்கி நகர்ந்தான்.
மணியை பார்த்த வேலு, “ஏழு தான் ஆகிறது. எவ்வளவு நேரத்திற்கு இப்படியே ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்திட்டு சோகமாக உட்கார்ந்து இருப்பீங்க? நமக்காக அவ்வளவு வேதனையையும் மறைச்சிக்கிட்டு எம் பொண்ணு வளைய வறாள். அவளுக்காக நீங்களும் சகஜமாக இருங்கள்” என்றவர் அடுத்து என்னவென்று நகர, அனைவரையும் தங்களது வேதனைகளை விழுங்கிக் கொண்டு இருக்கும் வேலைகளை கவனிக்கச் சென்றனர்.
காலையில் வள்ளி அக்கா வரும்போது வீடே அமைதியாக இருக்க, எதுவோ சரியில்லை என்று அவருக்கு பட்டது.
தன்னை கண்டதும் முகம் மலர்ந்து சிரிக்கும் நிரலி, இன்று தருவிக்கப்பட்ட புன்னகையோடு வரவேற்க, எதுவும் கேட்காது சமைக்க ஆயத்தமாகியவரை தடுத்த நிரலி, இன்று தானே சமைப்பதாகக் கூறி வேறு வேலை ஏதேனும் இருந்தால் பார்க்கக் கூறினாள்.
‘என்ன வேலை இருக்கு… துணி மிஷின் துவைச்சிடும். நேற்று போகும் போதுதான் மாப் போட்டேன். இப்போ இருந்த ஒரு வேலையையும் இந்த பாப்பா எடுத்துகிச்சு’ என்று யோசனை செய்தவர்,
ஆதியின் அலுவலக அறையை கூட்டி சுத்தம் செய்யலாமென்று சென்றிருந்தார்.
வள்ளி அக்கா அறையை துடைப்பம் வைத்து தள்ளிக் கொண்டிருக்க, ஆதி அங்கு வந்தான்.
அறை வாயிலின் நிலைப் படியின் மீது ஆதி கால் வைக்க… அவன் அமரும் இருக்கைக்கு கீழ் வள்ளி துடைப்பத்தை வைத்து தள்ள, ஏதோ ஒன்று அவனின் பாதத்தில் வந்து விழுந்தது.
நேற்று நிரலி அங்கு ஆதியின் மடியில் அமர்ந்திருந்த போது தன் கையில் வைத்திருந்ததை, ஆதி சொல்லியதில் ஏற்பட்ட அதிர்வில் கீழே விட்டிருந்தாள். அது நாற்காலிக்கு கீழ் சென்று தங்கியது. இப்போது வள்ளி அக்காவின் உபயத்தால் சேர வேண்டிய இடத்தை அடைந்திருந்தது.
குனிந்து அதனை எடுத்து பார்த்த ஆதி முதலில் அது என்னவென்று புரியாது ஆராய… புரிந்த பின்னர் அவன் காற்றில் மிதப்பதை போல் உணர்ந்தான். சிறகில்லாமாலே வானோக்கி பறந்தான்.
இவ்வளவு நேரமும் கடினப்பட்டு கொண்டிருந்த அவன் மனம் ஒரு நொடியில் ஆனந்தம் அடைந்திருந்தது. அதற்கான காரணம் அவனின் வாழ்வையே அர்த்தமுள்ளதாக மாற்றியது.
“பேபி.” ஓயாது வாய் முணுமுணுத்தது.
‘இதைத்தான் நேற்று சொல்ல வந்தியா பேபி.’ நினைத்தவனின் கண்கள் மகிழ்வில் கண்ணீரை சொறிந்தது. ஆனந்த கூத்தாடியது மனம்.
‘எப்படி அனுபவித்திருக்க வேண்டிய நொடிகள்…’
அப்போதுதான் தற்போதைய சூழல் நினைவிற்கு வர,
“எல்லாம் சரியாகட்டும் பேபி… நீயே வந்து சொல்லுவதற்கு காத்திருக்கின்றேன்… ஐ லவ் யூ டா” என்று வெளிப்படையாக சொல்லிக் கொண்டவன், தான் கொண்ட சந்தோஷத்தால் “இனி நடக்கவிருப்பதை எப்படியும் சமாளித்து சரி செய்து தன் பேபியின் முகத்தில் பழைய சந்தோஷத்தை கொண்டு வந்திட முடியும்” என்று புது தெம்பை உணர்ந்தான்.
“நீ சொல்லி நான் கேட்கணும் பேபி.”
கையிலிருப்பதை பார்த்துக்கொண்டே இருந்தவனின் கண்கள் மகிழ்வில் கலங்கியிருக்க… உதடுகள் நன்கு விரிந்து அவனின் ஆனந்தத்தினை பறை சாற்றியது.
சுத்தம் செய்து நிமிர்ந்த வள்ளி அக்கா, வாயிலிலேயே ஆதி நிற்பதைக் கண்டு அவசரமாக வெளியேற முயல மேசையிலிருந்த புத்தகங்கள் அவர் கைப்பட்டு கீழே விழ, அந்த சத்தத்தில் தன்னை மீட்டு நிலை நிறுத்தியவன் சாதாரணமாக உள்ளே செல்வது போல் சென்று விழுந்த புத்தகங்களை எடுக்க ஆரம்பித்தான்.
“மன்னிச்சிடுங்க தம்பி… தெரியாமல்…”
“நோ பிரோப்ளேம் க்கா. நீங்க போங்க.”
வள்ளி அக்கா வெளியேறியதும் ஆதி இருக்கையில் அமர்ந்து, கண்கள் மூடி தன்னுடைய மகிழ்வை ஆழ்ந்து அனுபவித்தான்.
அந்நேரம் அங்கு ராகவ் வருகை தந்தான்.
இப்போது ராகவிற்கு நன்கு குணமாகியிருந்தது. தலையை சுற்றி போடப்பட்டிருந்த பெரிய கட்டு அவிழ்க்கப்பட்டு… காயமிருந்த இடத்தில் மட்டும் மருந்து வைத்து பேன்டெய்ட் போடப்பட்டிருந்தது.
“என்னடா கோர்ட்டுக்கு போகாமல் இங்க வந்திருக்க?”
“நான் வரக்கூடாதா சீனியர்?”
“யூ ஆர் ஆல்வேஸ் வெல்கம் டா. ஆனால் இப்போ கேஸ் பேப்பர் சப்மிட் பண்ண நீ அங்க இருக்கணுமே!” என்றான் ஆதி.
“அதுக்கு டைம் இருக்கு சீனியர்” என்ற ராகவ் ஏதோ சொல்லத் தயங்கி… ஆரம்பித்ததை விடுத்து, “நிருவிடம் எல்லாம் சொல்லியாச்சா சீனியர்” எனக் கேட்டான்.
“ம்.” என்று பதிலளித்த ஆதி,
“ஸ்வேவுக்கு ஓகே சொல்ல உனக்கென்ன தயக்கம்?” எனக் கேட்டிருந்தான்.
முக்கியமான வேலை நேரத்தில் கூட ராகவ் இங்கு வந்திருக்கின்றான் என்றால் அது எதற்காக இருக்குமென்று ஆதிக்கா தெரியாது. அதுவும் நேற்று தான் ஸ்வேதா அவளின் மனதை ராகவிடம் சொல்லியிருக்க, இன்று விடிந்ததும் அவன் வந்து நிற்பதோடு… சொல்ல தயங்கவுமே அதுதானென்று கண்டுபிடித்து விட்டான் ஆதி.
“உங்களுக்குத் தெரியுமா?”
“எனக்குத் தெரிந்ததில் உனக்கு என்ன பிரோப்ளேம்?”
“அய்யோ சீனியர் அப்போ உங்களுக்கு ஓகேவா?”
“டேய் நான் ஏன்டா ஓகே சொல்லணும். நீதான் சொல்லணும்.”
“அது வந்து…”
“என்ன வந்து… எல்லாம் முடிஞ்சு நம்ம வீடு நார்மல் ஆனப்பிறகு உனக்கும் ஸ்வேதாவுக்கும் கல்யாணம். நானும் உன் தங்கச்சியுமே போய் பொண்ணு கேட்கிறோம் போதுமா?” என்றான் ஆதி.
இதற்குத்தானே ராகவ் ஆசைப்பட்டான். அதை தான் கேட்பதற்கு முன்பே, நீயும் என் குடும்பம் தானென்று மறைமுக வார்த்தையால் சொல்லிவிட்டானே! இது போதுமே!
“சீனியர்” என்ற ராகவ் நெகிழ்ந்திருந்தான்.
“போடா போய் வேலையப்பாரு” என்று ராகவை அனுப்பி வைத்த ஆதி தனது கையிலிருந்ததை ஒருமுறை பார்த்துவிட்டு பத்திரப்படுத்தினான்.
ராகவ் நிரலியை பார்த்துவிட்டு செல்லலாமென்று உள்ளே வர மொத்த குடும்பமும் அவனின் நலன் விசாரித்தது.
“இங்கவே தங்கிக்கோ சொன்னால் கேட்காமல், போய் தனியா இருக்க. நாங்கயெல்லாம் இருந்து என்ன பிரயோஜனம்.” காமாட்சி தன் மனதில் இருந்த வருத்தத்தை வெளிப்படையாகக் கூறினான்.
“விடுங்கம்மா… இன்னும் கொஞ்ச நாள் தான் அவன் இஷ்டத்திற்கு அவனால் இருக்க முடியும். அப்புறம் நினைத்தாலும் முடியாது” என்று சொல்லிக்கொண்டே வந்த ஆதி, அவனுக்கும் ஸ்வேதாவுக்கும் இடையேயான காதலை சொல்ல…
“ரொம்ப சந்தோஷம்ப்பா” என்று ராகவின் கன்னம் வழித்தார் காமாட்சி.
“அண்ணா சொல்லவே இல்லையே?” ஆச்சரியமாகக் கேட்ட நிரலி ஆதியின் பார்வை உணர்ந்து தலை கவிழ்ந்து கொண்டாள்.
“நான் எப்போ சீனியர் அவளை லவ் பண்ணேன்…” ராகவ் அப்பாவியாக வினவ,
“லவ் பண்ணாமலா அவளுக்கு ஓகே சொல்லலாமா வேண்டாமான்னு கேட்க வந்த” என்ற ஆதிக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாது ராகவ் திருட்டு முழி முழிக்க அனைவரும் துக்கம் மறந்து சிரித்திருந்தனர்.
“ஆனால் ஒன்னு சீனியர், ஸ்வேதா எனக்கு பிரண்ட் வேற… என்னைப்பற்றி எல்லாம் தெரியும். எதாவதுன்னா பொய் சொல்லிக்கூட சமாளிக்க முடியாது” என்று பாவமாக சொல்லியதில் மீண்டும் சிரிப்பொலி எழுந்து அடங்கியது.
காலை உணவை அங்கேயே முடித்த ராகவ், கோர்டிற்கு செல்ல கிளம்ப…
“பார்த்து கவனமாக இரு ராகவ்” என்ற ஆதி, “விச்சு இதுவரை அமைதியாக இருக்கின்றான் என்றால் கடைசி நொடியில் உன்னை தான் ஏதேனும் செய்ய திட்டம் போட்டிருப்பான்” என்றான்.
அப்போதுதான் அங்கிருக்கும் அனைவருக்கும் ஒன்று விளங்கிற்று… ராகவ் செய்த செயல் எத்தகையதென்று.
“நிரலி ரொம்ப நன்றிண்ணா” என்க, சூர்யா அவனை அணைத்துக் கொண்டான்.
“என் தங்கைக்காக நான் செய்தேன். சீனியருக்காக என்னவும் செய்வேன்” என்றவன் ஆதியிடம் சொல்லிக்கொண்டு நீதிமன்றம் நோக்கி செல்ல… அவர்கள் எதிர்பார்த்ததை போலவே விஸ்வநாதன் தன் ஆட்களை வைத்து மீண்டும் ராகவை கடத்தியிருந்தார்.
ராகவும் மயங்குவதைப்போல் மயங்கி, தடியர்கள் அசந்த நேரம் ஆதிக்கு குறுஞ்செய்தி அனுப்ப…
“நீ அங்கேயே இரு… விச்சுவால் உன்னை ஒன்றும் செய்ய முடியாது. விச்சு கையில் நீயிருக்கும் வரை பயமில்லாமல் அடுத்து எந்த தகிடுத்ததமும் செய்யாது விச்சு அமைதியாக இருப்பான்.
சரியாக கேஸ் விசாரணைக்கு வரும் போது, விச்சு கோர்ட்டில் இருக்க ராஜீவ் வந்து உன்னை மீட்பான்” என்று ஆதி பதிலனுப்பியிருந்தான்.
“ராகவை கடத்திவிட்டேன் இனி உன்னால் என்ன செய்ய முடியும்” என்று எள்ளி நகையாட ஆதிக்கு அழைப்பு விடுக்க இருந்த நேரம், விஸ்வநாதனுக்கு ஆதியே அழைத்திருந்தான்.
“என்ன விச்சு ராகவை தூக்கிட்ட போலிருக்கே!”
‘தான் சொல்ல வேண்டியதை இவன் சொல்லுகிறானே’ என்று விச்சு நினைக்க,
ஆதியே அதனை கேட்டும் இருந்தான்.
“ராகவ் நேரில் வராமல் எப்படி ஆர்.கே வாரிசினை கோர்ட்டில் காட்டப்போகிறாய் ஏ.டி.” விஸ்வநாதனிடத்தில் அவ்வளவு நக்கல்.
“எப்படியோ விச்சு… தோல்வியை சந்திக்க தயாராக இரு.”
“என்ன ஏ.டி ராகவை மீட்டு விடலாமென்று நினைக்கின்றாயா? அது கனவிலும் நடக்காது. இன்னும் பத்து நிமிடத்தில் அவன் மொத்தமாக போய் சேர்ந்திருப்பான்” என்று கொக்கரித்தார்.
“சும்மா காமெடி பண்ணாத விச்சு… ஒருமுறை அவனை ஈஸியா தூக்கிட்ட அதற்கு பிறகும் நான் சும்மா இருப்பேனென்றா நினைத்தாய்” என்ற ஆதி,
“ராகவிற்கு நடக்கும்போது கல் குத்தினால் கூட அதுக்கு காரணம் நீதானென்று பெரிய போலீஸிடம் புகார் கொடுத்திருக்கிறேன் விச்சு… ராகவை நீ ஏதேனும் செய்தால், இந்த வழக்கிற்காக இல்லையென்றாலும் ராகவ் விடயத்திற்காக நிச்சயம் ஜெயிலுக்கு போவது உறுதி” என்றான்.
ஆதியிடத்தில் அவ்வளவு விஷமம்.
“ஏ.டி…”
“சும்மா என் பெயரை ஏலம் போடாதே விச்சு… சீக்கிரம் கோர்ட்டுக்கு வா! சுருங்கி போன உன் முகம் பார்க்க ரொம்ப ஏக்கமா இருக்கு” என்று கிண்டல் செய்த ஆதி இணைப்பை வைத்துவிட்டான்.
இப்போது விச்சுவின் நிலை என்னவாக இருக்குமென்று நினைத்த ஆதி சிறு புன்னகையுடன் திரும்ப அவனுக்கு பின்னால் நிரலி நின்றிருந்தாள்.
அவளை கண்டு கொள்ளாது ஆதி கடந்து சென்றிட, விக்கித்து நின்றாள் அவள்.
Epi 27 and 28
https://thoorigaitamilnovels.com/%e0%ae%8f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-27/
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
40
+1
1
+1
1
செம
Thank you kaa 🩷