அத்தியாயம் 24 :
வழக்கம்போல் ஆதி தன் வீட்டு தோட்டத்தைச் சுற்றி காலை நேர ஓட்டத்தில் இருக்க… ருக்கு மாமி அவனிடம் பேச்சு கொடுத்தவாறே பூக்கள் பறித்துக் கொண்டிருந்தார்.
ஓட்டத்தை முடித்தவன் அங்கிருந்த கல் மேடையில் அமர்ந்தான்.
“ரொம்ப நன்றி மாமி.”
“எதுக்குப்பா.”
“அன்னைக்கு நீங்க கால் பண்ணாமல் இருந்திருந்தால் என் பேபியோட அதிரடியை நான் மிஸ் பண்ணியிருப்பேன். அதுக்குத்தான் இந்த நன்றி.”
ஆம் அன்று சந்தியாவும் கற்பகமும் பேசியதும், வெளியே சென்ற மாமி… அவர்கள் அவ்வளவு பேசியும் நிரலி அமைதியாக இருந்ததால், அவளை இவர்கள் வார்த்தையால் வதைத்தே ஏப்பம் விட்டுவிடுவார்கள் என்று எண்ணி இருவரிடமுமிருந்து நிரலியை காப்பாற்ற நினைத்து ஆதிக்கு அழைத்து இங்கு நடப்பதைக்கூறி விரைந்து வருமாறு கூறினார்.
ஏற்கனவே வீட்டிற்கு கிளம்பி கொண்டிருந்தவன், ‘கற்பகத்தை ஏறெடுத்து பார்ப்பதற்கே அவள் அஞ்சுவாள்… இதுல இதுங்க பேசுற பேச்சுக்கு நிச்சயம் அழுது கொண்டு இருப்பாளே’ என்று காரை புயல் போல் செலுத்தினான். எப்போதும் விதிகளை மதிப்பவன் போக்குவரத்து சமிக்கையில் கூட நிற்காது ஆதித வேகத்தில் வீட்டிற்கு வந்திருந்தான்.
அப்படி வந்தவனுக்கு அவனின் மனைவி தனது அமைதியை உடைத்து அதிரடியை காட்டி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருந்தாள்.
ஆதி நினைத்தது போல் நிரலி வழக்கம்போல் அழுது கொண்டு நின்றிருந்தால் நிச்சயம் அங்கு ஆதி தன் வார்த்தைகளை உபயோகித்திருப்பான். ஆனால் அதற்கு அவன் மனைவி இடமளிக்காது தானே பேசியதால் அமைதியாக தனது பேபியின் அதிரடியை ரசித்தவனாக வெளியவே நின்றுவிட்டான்.
“இதுகெதுக்குடா அம்பி நன்றியெல்லாம்… நானே அவர்களை எதிர்த்து பேசியிருப்பேன். ஆனால், நீங்க யாருன்னு அவா கேட்டால் என்ன செய்வதென்று தெரியாமல் தான் உனக்கு போன் போட்டேன்” என்றார் மாமி.
“இப்போ நினைத்தால் கூட மனசுல ஏதோ சந்தோஷம் பரவுது மாமி. அன்னைக்கு அவள் பேச்சில் என்மேல் வைத்திருக்கும் காதல் தான் என் கண்ணுக்கு தெரிந்தது. ஐ லவ் ஹெர் லாட் மாமி.”
“நான் மிஸ் பண்ணிட்டேன்டா!” மாமி வருத்தமாகக் கூறினார்.
“வேணுன்னா பேபியை இன்னொரு முறை மாஸ் காட்டிட சொல்லலாம் மாமி.”
“நான் அதை சொல்லலடா… அவள் பேசும்போது நீ அப்படியே காதல் சொட்ட ரசிச்சிருப்பியே! உன் கண்ணுல ஒரு ஸ்பார்க் தெரிஞ்சிருக்குமே! அதை மிஸ் பண்ணிட்டேன்னு சொன்னேன்.”
“மாமி…” ஆதி அழகாய் சிரித்தான். வெட்கம் எட்டி பார்த்ததோ!
“என்னடா புதுசா எதோ உன் முகத்துல எட்டி பார்க்குது.”
“அய்யோ மாமி.” ஆதி முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான்.
“பாருடா ஏ.டி’க்கு வெட்கமெல்லாம் வருது.” மாமி அவனை விடுவதாக இல்லை.
“ச்சு… போங்க மாமி” என்றவன் எழுந்து உள்ளே சென்றுவிட்டான்.
எப்பவும் முகத்தில் ஒருவித இறுக்கத்துடனே வலம் வரும் ஆதியின் இந்த முகம் கண்டு மாமிக்கு நிறைவாக இருந்தது.
“இதனை எப்போதும் நிலைக்கச்செய் இறைவா” என்று வானோக்கி கூறியவர் பூக்களை எடுத்துக்கொண்டு தன் வீடு நோக்கி சென்றார்.
இருவரும் பேசிக் கொண்டிருந்ததை புதர் மறைவில் யாருடனோ அலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த சூர்யா கேட்க நேர்ந்தது.
இதுவரை நிரலி சொல்லி மட்டுமே கேட்டிருந்த ஆதியின் காதலை இன்று முதன் முதலாக அவன் வாய் மொழியாகவே கேட்ட சூர்யாவுக்கு அவ்வளவு ஆச்சர்யம். அதுவும் ஆதியின் முகத்தில் விரவி கிடந்த ஒளியை கண்டவன் ‘இது தன்னுடைய மாமா தானா’ என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டான்.
“காதல் வந்தால் புயல் கூட தென்றலாகி விடும் போல” என்றவன் திருமணத்தன்று ஆதியின் செயலால் அவன் மீது தொடர்ந்து கொண்டிருந்த நூலிழை அதிருப்தியை உதறி தள்ளியவனாக நிரலியை தேடிச் சென்றான்.
“குட்மார்னிங் அம்மு…”
“குட்மார்னிங் டா பையா!”
“என்ன காலையிலே ஈஈஈன்னு மூஞ்சு முழுக்க பல்லா இருக்க?” வெகு நாட்களுக்கு பிறகு சூர்யாவின் முகத்தில் நிறைவான புன்னகையை கண்டதால் அவ்வாறு வினவினாள்.
“அப்படியா தெரியுது?” எனக் கேட்ட சூர்யா, கையிலிருந்த அலைபேசியில் தன்னை சயமி எடுத்து பார்த்து, “தங்கச்சி வாழ்க்கை நூறு சதவீதம் நல்லா இருக்கும் நம்பிக்கை வந்ததால் இருக்கலாம்” என்றான்.
“பாருடா… இவ்வளவு நாள் நாங்க சொன்னப்போ வராத நம்பிக்கை இப்போ எப்புடி வந்துச்சாம்.” கேட்டுக்கொண்டே அவன் கையில் தேநீர் குவளையை வைத்தாள்.
“சொல்ல வேண்டியவங்களே சொன்னதால்.”
“மாமாவா சூர்யா.”
“ம்.” தேநீர் அவனின் தொண்டையில் இறங்கிக் கொண்டிருந்தது.
“என்ன சொன்னார்?” நிரலியிடத்தில் ஆர்வம்.
“என்னவோ சொன்னார்!” அவளிடம் விளையாட நினைத்து வேண்டுமென்றே சொல்லாது போக்குக் காட்டினான்.
“ப்ளீஸ் டா அண்ணா… சொல்லு… சொல்லு… சொல்லுஊஊஊஊ…”
“பாருடா காரியம் ஆகணுமுன்னா அண்ணான்னுலாம் வாயில வருது.”
“இப்போ சொல்லுவியா மாட்டியா?”
“அதுவா…?”
“ம்.” சொல்லென்று நிரலியின் தலை வேகமாக ஆடியது.
“சொல்ல முடியாது என்ன பண்ணுவ?” மிதப்பாகக் கேட்டான்.
“ப்ளீஸ்… சூர்யா…” கிட்டத்தட்ட கெஞ்சினாள்.
தான் நேரடியாக பலமுறை சொல்லியும் ஆதியுடனான தன் வாழ்க்கை சீராகப்போவதில்லை என்று அச்சம் கொண்டிருந்தவன் திடீரென சந்தோஷம் பொங்க நம்பிக்கை வந்துவிட்டதென்று சொல்லுமளவுக்கு ஆதி அவன் வாய் மொழியாக என்ன சொல்லியிருப்பான். அவள் மீதான காதலைத்தான் சொல்லியிருப்பான். அது தெரிந்த போதிலும் ஆதி சொல்லிய வார்த்தைகளை தெரிந்துகொள்ள அண்ணனிடம் போராடினாள். அவனோ நான் சொல்வேனா என்று அவளுக்கு மேல் பிடிவாதம் பிடித்தான்.
கிச்சனில் வைத்து இருவரும் சொல்… மாட்டேன்… என்று மாற்றி மாற்றி சொல்லிக் கொண்டிருக்க, அப்போதுதான் பணிக்கு வந்த வள்ளி அக்கா அவர்களின் சிறு பிள்ளைத்தனமான விளையாட்டை முதலில் ரசித்தாலும் சில நிமிடங்களில் எரிச்சல் மண்ட,
“அப்படி ஓரமா போய் உட்கார்ந்து சொன்னதையே சொல்லிட்டு இருங்க… உங்களுக்கு வாய் வலிக்கலனாலும் கேட்குற என் காது வலிக்குது. வேலையை செய்ய விடுங்க” என்று கத்தினார்.
இருவரும் நகர்வதாகவும் தெரியவில்லை. தங்களின் பிடியை விடுவதாகவும் தெரியவில்லை.
வள்ளி அக்கா தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டார்.
காலை உணவிற்காக அங்கு வந்த ஆதி, அலுவலகம் செல்ல தயாராக வந்திருந்தான்.
ஆதியை இருவருமே கவனிக்கவில்லை.
என்ன என்று கவனித்த ஆதிக்கு, “இன்னும்மாடா முடியல” என்று இருந்தது.
மாமியிடம் பேசிவிட்டு அலுவலக அறைக்குள் நுழைந்த ஆதி, வீட்டிற்குள் வரும்போது தான் சூர்யா நிரலியிடம் சொல்லிக் கொண்டிருந்தான். அதனை தற்செயலாகக் கேட்ட ஆதி, ‘மாமிக்கிட்ட பேசியதை பயபுள்ள கேட்டிருக்கும் போல’ என்று நினைத்து மேலே சென்று குளித்து முடித்து கிளம்பியும் வந்துவிட்டான். ஆனால் இவர்கள் பேச்சு முடியவில்லை.
என்னவென்று சூர்யாவும் சொல்ல போவதில்லை. தெரிந்து கொள்ளாமல் நிரலியும் விடப்போவதில்லை. ஆதிக்கு இருவரின் பிடிவாதமும் நன்கு தெரிந்தது.
“ஐ லவ் யூ பேபி.”
ஆதியின் குரலில் இருவரும் ஒன்றாகத் திரும்பி அவனை பார்க்க,
“இதைத்தான் நான் மாமிக்கிட்ட ‘ஐ லவ் ஹெர் லாட்’ மாமின்னு சொன்னேன்” என்றான்.
ஆதி அங்கிருப்போர் யாரையும் பொருட்படுத்தாது காதலை சொல்லியது ஒருவித வெட்கத்தை நிரலிக்கு தோற்றுவிக்க,
“அச்சோ மாமா அதுக்குன்னு இப்படியா எல்லார் முன்னாடியும் சொல்லுவீங்க” என்று கடிந்தவள், “அங்க பாருங்க வள்ளி அக்கா உறைஞ்சு போயிட்டாங்க” என்றாள்.
“நீ இதைத்தானே பேபி சூர்யாவிடம் கேட்டுக்கொண்டு இருந்தாய்!”
“அதுக்கு.”
“அவன் சொல்லுற மாதிரி தெரியல, அதான் நானே சொல்லிட்டேன்.” சாதாரணமாக சொல்லியவன் சூர்யாவை பார்த்து ஒற்றை கண்ணடித்து புன்னகைத்தான்.
“சாரி மாமா” என்ற சூர்யா ஆதியை அணைத்துக் கொண்டான்.
“தேவையில்லாமல் உங்க மேல் கோபமாக இருந்தேன்.”
“ஒரு அண்ணனா உன் கோபம் நியாயமானது தான் சூர்யா. இந்த சாரிலாம் வேண்டாம்” என்ற ஆதி அவனை தட்டிக் கொடுத்தான்.
“ம்க்கும்… போதும் போதும்.” இருவரும் அணைத்து நின்றதில் நிரலிக்கு பொறாமை எட்டி பார்த்ததோ!
“என்ன அம்மு போதும்.”
“நீ என்னை ஹக் பண்ணியிருக்கல, அதான் பேபிக்கு ஸ்டமக் பர்னிங்” எனக்கூறி ஆதி சிரித்தான்.
“அப்படியா அம்மு?”
“அப்டித்தாண்டா தடியா” என்றவள் சூர்யாவை பிடித்து இழுத்துவிட்டு தான் சென்று தன் கணவனின் நெஞ்சில் உரிமையாக சாய்ந்து கொண்டாள். முகம் கொள்ளா புன்னகையுடன் ஆதியும் மனைவியை தாங்கிக்கொண்டான்.
நிரலி எத்தனை நாள் தன் காதலை நினைத்து நினைத்து மருகியிருப்பாள். அழுகையில் கரைந்திருப்பாள். அதையெல்லாம் கண்கூடாக நேரில் கண்டவனாயிற்றே சூர்யா.
‘தன் தங்கைக்கு அவள் ஆசைப்பட்ட வாழ்க்கை அமைந்திடவே அமைந்திடாதோ’ என்று தவித்திருந்தவனுக்கு கண் முன்னே தங்கையின் காதல் சீராட்டப்படுவதைக் கண்டு கண்கள் பனித்தன.
நடப்பதை கண்டும் காணாது கவனித்துக் கொண்டிருந்த பெரியவர்களின் மனமும் இக்காட்சியில் பேர் உவகைக் கொண்டது.
கற்பகத்தால் நிரலியிடம் சட்டென்று பாசத்தை காண்பிக்க முடியவில்லை என்றாலும், தன் பேரனின் முகத்தில் பூத்திருந்த புன்னகை எப்போதும் வாடிடாது இருக்க வேண்டுமென்று நினைத்தார்.
“இப்போதான் மாமா என் பயமெல்லாம் நீங்கி, நிம்மதியா இருக்கு.” நெகிழ்வுடன் சூர்யா கூற,
‘ஒரு பெரும் புயல் நம் குடும்பத்தில் வீசப்போகிறது சூர்யா… அதில் யார் நிம்மதி எப்படி மாற்றம் பெறுமென்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான் ஆதி.
அன்று அனைவரும் மனநிறைவோடு ஒன்றாக அமர்ந்து பேசி உணவு உண்டனர். நாளை அறிய நேர்படும் விடயத்தால் குடும்பமே ஆழ்ந்த வருத்தத்தில் மூழ்கவிருப்பது தெரியாது மனநிறைவு கொண்டனர்.
நடக்கவிருக்கும் நிகழ்வு தெரிந் வேலு, கற்பகம் ஆதியை அர்த்தத்தோடு பார்க்க… அனைத்தையும் தான் பார்த்துக்கொள்வதாக ஆதி கண் மூடி திறந்தான்.
இவர்களின் சமிக்கைகளை கண்ட சூர்யா… ‘பூனைக்குட்டி வெளிய வரப்போகுது… தெரியாத பல கேள்விகளுக்கு விடையறியும் நேரம் வந்துவிட்டது’ என நினைத்தான்.
ஆனால் அவன் கனவிலும் நினைத்திடாத ஒன்று நடக்கவிருப்பதை முற்றிலும் எதிர்பார்த்திருக்க மாட்டான்.
***
நீதிமன்ற வளாகம்…
விஸ்வநாதன் தன்னுடைய அலுவலக அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார்.
அவரின் மூளை பல்வேறு வகையில் ஆதியை எப்படி எதிர்ப்பதென்று யோசித்துக் கொண்டிருந்தது.
இதுவரை தான் செய்ததெல்லாம் ஒன்றுமில்லை என்பதை விட அனைத்தையும் ஆதி பூஜ்ஜியமாக்கியிருந்தான் என்று சொல்வதே சரியாக இருக்கும். நினைக்கும் போதே அவருள் ஆதியை கொல்லும் வெறி.
‘ஏ.டி’யின் மூவ் என்னவாக இருக்கும்.’
யோசிக்க யோசிக்க தலை வெடிப்பதை போல் உணர்ந்தார். இந்த வழக்கில் தோற்றால் மொத்தமும் காலி என்ற நிலை.
ஆதியை கவனிக்க ஆட்கள் வைத்தும் அவருக்கு எந்தவொரு தகவலும் பயனுள்ளதாகக் கிடைக்கவில்லை. எந்த பக்கம் திரும்பினாலும் ஆதி வந்து நின்றான். ஆதியை எதிர்ப்பது அவ்வளவு எளிதல்ல என்பதை ராகவ் விடயத்தில் தெரிந்து கொண்டார்.
ராகவை தொட்டு ஆதியின் வேகத்தை தானே அதிகரித்துவிட்டோமோ என்று இப்போது வருந்தினார்.
ராகவை அழித்தால் மட்டுமே தான் தப்ப முடியும் என்கிற நிலையில் விஸ்வநாதன். ஆனால் அவர் எதிர்பார்த்த நபர் ராகவ் இல்லை என்று தெரிய வரும் போது என்ன செய்வாரோ!
ஆதியின் கையால் அவருக்கு பலமான அடி நிச்சயம். அது அவரை மொத்தமாக தாக்கவிருக்கிறது.
யாரை நிர்மூலமாக்க ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தாரோ… இன்று அவரே நிர்மூலமாகப்போகிறார்.
“ஏ.டி.” வாய்விட்டு உரக்கக் கத்தினார்.
அவரின் ஜூனியர்கள் என்னவோ ஏதோவென்று பார்க்க,
“அந்த வழக்கில் எந்த வகையிலெல்லாம் நாம் தப்பிக்க வாய்பிருக்கிறதோ அனைத்தையும் குறிப்பெடுங்கள்” என்றவர் தன்னிருக்கையில் சென்று அமர்ந்தார்.
அனுபவம் வாய்ந்த விஸ்வநாதனாலே ஏ.டி’யை எதிர்க்க வழி தெரியவில்லை. பாவம் அவர்கள் ஜூனியர்கள் என்ன செய்வார்கள். அவர்களுக்கும் தெரிந்துதான் இருந்தது. ஆர்.கே’வின் வாரிசு வந்துவிட்டால் இந்த வழக்கு ஒன்றுமில்லாது ஆகிவிடும். அதற்கு பின்னர் வாதிடல் கூட தேவையில்லை. இருந்தும் என்ன செய்ய, விஸ்வநாதனுக்கு பயந்து குறிப்பு எடுப்பதை போல் பாவனை செய்து கொண்டிருந்தனர்.
சில நிமிடங்களுக்கு அங்கு காற்றில் சலசலக்கும் காகிதங்களின் ஓசை மட்டுமே ஒலித்தது.
‘சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல்’ என்ற முடிவிற்கு வந்த விஸ்வநாதன் பல வருடங்களுக்கு பிறகு ஆர்.கே’வை நேரில் சந்திக்க புறப்பட்டார்.
***
“வாங்க மிஸ்டர்.விஸ்வநாதன்.”
சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த போதும் ஆர்.கே கம்பீரமாகவே இருந்தார்.
தன்னை கண்டதும் அதிர்வார் என்று விஸ்வநாதன் எதிர்பார்த்து அங்கு வர… வாயிலை கடந்து உள்ளே கால் வைத்த நொடி விஸ்வநாதனை கர்ஜனையான குரலில் வரவேற்று அவருக்கே அதிர்வை கொடுத்தார் ஆர்.கே.
“என்ன அப்படியே நின்னுட்ட… பார்த்து பல வருடம் ஆகிருச்சுல… அடையாளம் தெரியலையா விஸ்வா.”
ஒரு நொடி ஆர்.கே’வின் விஸ்வா என்றழைப்பில் கட்டுண்ட விஸ்வநாதன் தோரணையாக ஆர்.கே’விற்கு முன்னிருந்த இருக்கையில் அமர்ந்தார்.
“அதெப்படி என்னை நீ மறப்பாய்… மறந்து நிம்மதியாக தூக்கம் கொள்ளும் செயலா நீ எனக்கு செய்திருக்கின்றாய்” என்று ஆர்.கே நக்கலாகக் கேட்டதில் விஸ்வநாதன் வெகுண்டார்.
“கண்டதை பேசி நேரத்தை போக்க நானிங்கு வரவில்லை.”
“தெரியும்” என்ற ஆர்.கே, “இன்னும் கொஞ்சம் முன்பே உன்னை எதிர்பார்த்தேன்” என்றார்.
“அப்போ என் வேலை சுலபமாகிருச்சு” என்ற விஸ்வநாதன், “உன் பையன் அந்த ராகவ் கோர்ட்டுக்கு வரக்கூடாது” என்று கட்டளையாகக் கூறினார்.
“வந்தால்…”
“அவனுக்கு நடந்தது உனக்குத் தெரிந்திருக்குமே!” விஸ்வநாதனிடத்தில் ஒருவித அலட்டல் உடல் மொழி.
“உன்னால் அவனை கொல்ல முயற்சிக்கத்தானே முடிந்தது… கொல்ல முடியவில்லையே!” ஆர்.கே’விடம் ‘உன்னால் இனி ஒன்றும் செய்ய முடியாது’ என்கிற தொணி.
விஸ்வநாதனின் முகம் சிறுத்து விட்டது.
“என்ன விஸ்வா… சிலகாலம் வெற்றியையே பார்த்து வந்த உனக்கு தோல்வி வலியை கொடுக்கிறதா? உனக்கு இந்த வலியை கொடுப்பதற்கே, என் வலியை நான் தாங்கிக்கொண்டேன்.” அவ்வளவு திடம்.
“அந்த ஏ.டி இருக்க தைரியமா?”
“ஆமாம்.”
“உன்னையே ஒன்றுமில்லாதவன் ஆக்கியவன் நான்.”
“ஆதி குருவை மிஞ்சும் சிஷ்யன்.”
“முடிவா என்ன சொல்கிறாய் ஆர்.கே.”
“கட்டாந்தரையில் படுக்க பழகிக்கொள் விஸ்வா.”
“உன் மனைவி இன்னும் உயிரோடு தான் இருக்கின்றாள்.” தன்னுடைய கடைசி ஆயுதத்தை இறக்கினார் விஸ்வநாதன்.
“பரவாயில்லை.” எதற்கும் துணிந்துவிட்டார் ஆர்.கே.
“உன் மனைவி உயிரோடு வேண்டுமென்றால் ராகவ் உன் மகனாகக் கோர்ட்டிற்கு வரக்கூடாது.” நேரடியாகவே மிரட்டலை கையிலெடுத்தார் விஸ்வநாதன்.
“முடிஞ்சா கொல்லு விச்சு.” கிண்டலாகக் கூறிய ஆதி, ஒய்யாரமாக நடந்து வந்து… தெனாவட்டாக கதிரையில் அமர்ந்தான்.
நிச்சயம் அங்கு ஆதியை விஸ்வநாதன் எதிர்பார்க்கவில்லை என்பதை அவரின் முகமே காட்டிக் கொடுத்தது.
“அப்புறம் விச்சு… உன் அண்ணனை பார்க்க வந்திருக்க போலிருக்கு.” அவனின் குரலில் நக்கல் டன் கணக்கில் வழிந்தது.
ஆம் ஆர்.கே’வும் விஸ்வநாதனும் உடன் பிறப்புகள்.
“பார்த்தாச்சா… முன்பைவிட ரொம்ப நல்லாவே இருக்கின்றார் உன் அண்ணன்.” அண்ணன் என்கிற வார்த்தையில் வேண்டுமென்றே அழுத்தம் கொடுத்து கூறினான்.
“ம்… ஏதோ சொன்னியே… ஆங், உன் அண்ணி! முடிஞ்சா அவங்க இருக்கும் இடத்தை சொல்லு பார்ப்போம்” என்ற ஆதி விஸ்வநாதனை பேசவே விடவில்லை.
“உனக்கு அவங்க உயிரோடு இருக்கும் விடயமே நேற்று தான் தெரியும் என்பது எனக்குத் தெரியும். அதை உனக்கு தெரியப்படுத்தியதே நான் தான்” என்றவன், “மறைஞ்சு ஒளிஞ்சு ஆடுவதில் என்ன கிக் விச்சு… அதான், இப்போ அவங்களை வேறு தேடி நீ அலையோ அலையோன்னு அலைவ, அதில் எனக்கு கொஞ்சம் சந்தோஷம்” எனக்கூறி விஸ்வநாதனை கண்டுகொள்ளாது ஆர்.கே’விடம் பேசத் துவங்கிவிட்டான்.
இருவரும் விஸ்வநாதன் என்பவர் அங்கில்லவே இல்லை என்னும் விதமாக… இன்றோடு பேச்சே நின்றுவிடுவதை போல் பழங்கால கதைகள் தொட்டு இன்றைய அரசியல் வரை படு சுவாரஸ்யமாக பேசிக்கொண்டனர்.
அதில் விஸ்வநாதனுக்கு ஏகபோக கடுப்பு.
எண்ணி வந்த காரியம் நடக்காதென்று தெளிவாக தெரிந்த பின்னர் அங்கென்ன செய்வதென்று… பெருத்த ஏமாற்றத்தோடு, முதல் அடியை ஏற்றுக்கொண்டவராக அங்கிருந்து வெளியேறினார் விஸ்வநாதன்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
20
+1
61
+1
+1
1 Comment