அத்தியாயம் 23 :
உணவை முடித்துக்கொண்டு இருவரும் தங்களது அறைக்குள் சென்றனர்.
நிரலி மெத்தையின் படுக்கை விரிப்பை மாற்றி போட்டுக் கொண்டிருக்க, கதிரையில் அமர்ந்திருந்த ஆதியின் நெற்றி முடிச்சிட்டு காணப்பட்டது.
ஆதியின் அருகில் வந்தமர்ந்தவள்,
“என்ன யோசனை மாமா?” என்று அவனின் முகம் பார்த்து வினவினாள்.
ஆதி பதிலேதும் சொல்லாது நிரலியின் முகத்தையே பார்த்திருந்தான். ஆதியின் மனம் ராகவை நினைத்து கலக்கம் கொண்டது. அதன் விளைவால், நிகழ்வை உணராது தனக்குள் உழன்றான். அதனாலே நிரலியின் கேள்வி அவனின் கருத்தை அடையவில்லை.
ஆதியின் பார்வை நிரலியின் மீது பதிந்திருந்த போதிலும், அவனின் எண்ணம் முழுக்க ராகவே ஆக்கிரமித்திருந்தான். அபாய கட்டத்தில் ராகவ் இருந்த போதுகூட ஆதியின் மனம் அவனை நினைத்து இவ்வளவு சஞ்சலம் கொள்ளவில்லை. ஆனால் இப்போது! ஏனென்று அவனுக்கே விளங்கவில்லை.
“மாமா.” அவனின் தோள் தொட்டு உலுக்கினாள் நிரலி.
“ஆங்க்…” தூக்கத்திலிருந்து விழிப்பவன் போல் நிகழ் புரியாது ஒரு நொடி தடுமாறினான்.
“மாமா என்னாச்சு.”
“ஒன்னுமில்லை பேபி.”
ஆதி ஒன்றுமில்லையென சொன்னாலும் ஏதோ இருக்கிறது என்பதை அவனின் முகத்தை வைத்தே யூகித்தவள் அவனாக சொல்லும்போது சொல்லட்டுமென்று மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை.
சில நிமிட அமைதிக்கு பிறகு, தயங்கியவாறு சந்தியா அனுப்பிய புகைப்படத்தைப் பற்றி சொல்லி தனக்கும் சூர்யாவுக்கும் இடையேயான பேச்சுக்களை கூறினாளேத் தவிர அந்த பெண் யாரென்று அவள் கேட்கவில்லை.
“உனக்கு அந்த ஃபோட்டோ பார்த்த பிறகும் என் மேல் சின்னதா கூட டவுட் வரலையா பேபி?”
“உங்களை சந்தேகப்பட்டால் நான் என்னையே அசிங்கப்படுத்திக்கிறதுக்கு சமம் மாமா. அதுக்கப்புறம் என்னாலே என்னை மன்னிக்க முடியாது.”
நிரலியின் பேச்சில், அவன் மீதான அவளின் காதல், நம்பிக்கை கண்டு மனைவியின் மீது ஏற்கனவே பெருக்கெடுத்து பாய்ந்து கொண்டிருந்த காதல் நதி… பேராழியென மேலும் பரந்து விரிந்தது.
இமைக்காது மனைவியையே பார்வையால் வருடியிருந்தான்.
“சந்தியாவை எதாவது செய்யனும் மாமா… இனிமேலும் அவள் விளையாட்டை நிறுத்தாமல் இருக்கக் கூடாது.” நிரலியின் முகத்தில் அப்படியொரு தீவிரம்.
“அவளெல்லாம் ஒரு ஆளா பேபி. அக்கா பொண்ணுன்னு அமைதியாக இருந்தேன்.
அவள் மட்டும் கிணத்தில் விழாமல் போயிருந்தால் என் பேபி எனக்கு கிடைத்திருக்க மாட்டாளே. அதான் கொஞ்சம் விட்டு பிடித்தேன். அவள் செய்ததை நினைத்து வீணாக உன்னைக் குழப்பிக்கொள்ளாதே பேபி. நான் பார்த்துக்கிறேன்.”
“நீங்க இருக்கும்போது எனக்கென்ன கவலை மாமா” என்றவள் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.
ராகவிற்கு விபத்தென்றால் நிரலி வருத்தப்படுவாள் என்றே ஆதி சொல்லாமல் இருந்தான். ஆனால் அதையே காரணமாக பயன்படுத்தி சந்தியா ஆட்டம் ஆடுவாளென்று ஆதி எதிர்பார்க்கவில்லை. அதனால் இனியும் சொல்லாமல் இருக்கக்கூடாதென்று நினைத்த ஆதி மெல்ல ராகவிற்கு விபத்தென்று மட்டும் கூறி, இப்போது சரியாகிவிட்டான் எனக்கூறினான்.
“ஏன் என்னிடம் முன்பே கூறவில்லை” என்று நிரலி ஆதியிடம் சண்டையிட்டாள். அந்த சிறு சண்டையை கூட ஆதி காதலாக ரசித்தான்.
“நீ பதறுவன்னு தான் சொல்லவில்லை” என்றவன், ஸ்வேதாவைப் பற்றி சொல்லி… “என்னுடன் போட்டோவில் இருந்தது அனேகமாக ஸ்வேதாவாகத் தான் இருக்கும் என்றான். அத்தோடு அவள் ராகவை விரும்புவதையும் சொல்லியிருந்தான்.
“எனக்கென்னவோ இப்போவே ராகவை பார்க்கணும் போலிருக்கு பேபி. அத்தோடு ராகவ் கண் விழித்தபோது நடந்துகொண்ட விதத்தை கண்டு ஸ்வே கொஞ்சம் பயந்துட்டாள். அவளை தனியா விட்டு வந்ததே உன்னை பார்க்கத்தான். ஆனால், இங்கு வந்த பிறகு அங்கேயே இருந்திருக்கலாமோன்னு தோணுது. நான் போகட்டும்மா” என்று தயங்கியவாறு தான் கேட்டான்.
ஆனால் நிரலி உடனே, “நானும் உடன் வருகிறேன்” என்று கிளம்பினாள்.
“வேண்டாம் பேபி” என்றவன் காலை வந்து அழைத்து செல்வதாகக் கூறி சென்று விட்டான்.
தனது இருசக்கர வாகனத்தை மருத்துவமனை வளாகத்தில் நிறுத்திய ஆதி ஒருமுறை மருத்துவமனை கட்டிடத்தை தன் முழு உயரத்திற்கு நிமிர்ந்து நின்று நோட்டம் விட்டான்.
நள்ளிரவு நேரம் என்பதால் மக்களின் கூட்டம் குறைந்து பரபரப்பின்றி அவ்வளாகமே அமைதியாகக் காட்சியளித்தது. காற்றின் சலசலப்பு மட்டுமே எல்லா திசைகளிலும் பரவியிருந்தது. இந்த அமைதிக்கு பின்னால் ஏதோ தவறாக நடப்பது போன்றே அவனுக்கு பட்டது.
தன் பார்வையால் அவ்விடத்தையே அலசியவாறு உள்ளே சென்றான். அவனின் ஒவ்வொரு அடியும் மிகுந்த கவனத்துடன் வைத்தான்.
வரவேற்பில் இருந்த பெண்கள், யாருமில்லை என்பதால் இருக்கையில் அமர்ந்த நிலையிலேயே உறங்கிக் கொண்டிருந்தனர்.
இரவு நேரம் என்பதால் நோயாளிகள் மற்றும் உடனிருப்போர் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.
ராகவை வைத்திருக்கும் மூன்றாம் தளத்திற்கு ஆதி வந்த போது அத்தளமே இருட்டில் மூழ்கியிருந்தது. ஆதி படிகளிலேயே ஏறி வந்திருந்தான்.
‘பவர் போயிருந்தால் இன்வென்டர் ஆன் ஆகியிருக்குமே… அதுவும் இங்கு மட்டும் எப்படி பவர் கட்’ என்று சிந்தித்தவாறு ஆதி ராகவின் அறை பக்கம் செல்ல… அங்கு கதவின் பக்கத்திலேயே ஸ்வேதா மயங்கி கிடந்தாள். நெற்றியில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.
வேகமாக ஓடிச் சென்று ஸ்வேதாவை தூக்கி கன்னம் தட்டியவன்,
“ஸ்வேதா என்னாச்சு?” என்று வினவினான்.
இமைகளை பிரிக்க முடியாது கண்களை திறந்த ஸ்வேதா…
“ஆதி, ராகவ்…” என்று மின்தூக்கியை நோக்கி கை காண்பித்தாள்.
“ராகவ் எங்கே?” என்றவாறு அவளின் கை நீண்ட திசையில் ஆதி பார்க்க, அத்தளத்தின் இறுதியில் இருந்த மின் தூக்கியில் யாரோ நால்வர் ஸ்ட்ரெச்சரோடு உள் நுழைவதை கண்ட ஆதி அங்கு பாய்ந்திருந்தான்.
ஸ்ட்ரெச்சரில் இருப்பது ராகவ் என்பது ஆதிக்கு நன்கு தெரிந்தது.
“டேய் சீக்கிரம் மூடுடா… அவன் வந்துட்டான்.” தடியர்களில் ஒருவன் கத்தினான்.
பத்தடி தூரத்தை நான்கே எட்டில் கடந்த ஆதி, மின்தூக்கியின் கதவு மூடும் நேரம் சரியாக தனது காலினை குறுக்கே வைத்து தடை செய்திருந்தான்.
“யாருடா நீங்க” என்று ஆதி கேட்பதற்கு அவசியமே இன்றி, அவர்கள் விச்சுவின் ஆட்கள் என்பது அவனுக்கு நன்கு தெரிந்தது.
ஒருவன் நீண்ட பட்டா கத்தியை ஆதியின் முகம் நோக்கி நீட்ட… ஆதி ஒருபக்கமாக சாய்ந்து அக்கத்தியை அவனிடமிருந்து உருவியிருந்தான்.
“கத்தியை திடமாக பிடிக்க தெரியாதவனெல்லாம் அடியாள்” என்று நக்கல் செய்தான் ஆதி.
அதில் கோபம் வரப்பெற்று அவன் ஆதியை அடிக்க வர, சரியாக அவனின் மூக்கில் ஆதி விட்ட ஒரே குத்தில் ரத்தம் கொட்ட அவன் சுருண்டு விழுந்திருந்தான்.
மற்ற மூவரில் ஒருவன் ஆதியின் மீது பாய, அவனின் கழுத்து பகுதியில் ஆதி கொடுத்த ஒரு அடிக்கே அவனின் தலை தொங்கியது.
அடுத்த இருவரும் ஒரே நேரத்தில் ஒன்றாக சேர்ந்து வர, ஒருவன் ஆதியின் வயிற்றை நோக்கியும் மற்றொருவன் ஆதியின் கழுத்தை நோக்கியும் கத்தியை இறக்க, இரண்டையும் பின்னோக்கி சரிந்து ஒரே சமயம் தன்னிரு கைகளாலும் பிடித்து இழுத்திருந்தான். ஆதி இழுத்த வேகத்திற்கு அவ்விருவரும் ஆதிக்கு பின்னால் பல்டி அடித்தவாறு சென்று விழுந்தனர்.
மின்தூக்கியிலிருந்து ராகவ் இருந்த ஸ்ட்ரெச்சரை வெளியில் தள்ளிய ஆதி… மீண்டும் எழுந்து நின்ற அவ்விருவரையும் தனது அடிகளால் தரையில் சரிய செய்திருந்தான்.
எழ முடியாது கிடந்த நால்வரையும் இழுத்து ஒன்றாக போட்டவன், தனது காவல்துறை நண்பனுக்கு அழைத்து எப்.ஐ.ஆர் போடாது ரகசியமாக பதுக்கி வைத்தான்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் ஸ்வேதாவிற்கு மருந்து கொடுக்கப்பட்டு நெற்றியில் கட்டிடப்பட்டது.
மருத்துவர்கள் எவ்வளவோ கூறியும், விடிந்ததும் ராகவை தனது வீட்டிற்கு கொண்டு வந்துவிட்டான். ராகவினை தங்க வைக்க, தன் வீட்டில் ஒரு அறையையே குட்டி மருத்துவமனையாக மாற்றியிருந்தான்.
அரை இரவிற்குள் இதெப்படி சாத்தியமென்று மருத்துவர் வியந்தார்.
அன்றைய பரிசோதனையை முடித்த மருத்துவர், “இனி எல்லாம் ஸ்வேதாவே பார்த்துப்பாங்க… உங்களுக்கு நர்ஸ் வேண்டுமென்றால் சொல்லுங்கள் ஏற்பாடு செய்கிறேன். நான் காலை மாலை தினமும் வந்து பார்க்கிறேன்” என்று சொல்லிச் சென்றார்.
ஸ்வேதா செவிலியை தவிர்த்து விட்டாள்.
மருத்துவர் சென்றதும் நிரலி சென்று ராகவை பார்க்க… அந்நேரம் சரியாக கண் விழித்தான் ராகவ்.
இரவு ஆதி சொல்லியபோது கூட சாதாரண விபத்தென்றுதான் சொல்லியிருந்தான். ஆதலால் இவ்வளவு பெரிய நிலையை நிரலி எதிர்பார்க்கவில்லை.
“அண்ணா…” என்று கண்கள் கலங்க அழைத்த நிரலியின் கையை பற்றியவன், “எனக்கு ஒன்றுமில்லை சரியாகிவிடும்” என்று ஆறுதல் படுத்தினான்.
“பேபி அழாதே… திடமாக இருப்பவனை நீயே சோர்வடைய செய்திடாதே” என்றவாறு உள்வந்த ஆதியிடம் ராகவ் ஏதோ கூற முற்பட வேண்டாமென்று கண்களாலே ஜாடை செய்த ஆதி உள்ளே வந்த தன் குடும்ப உறுப்பினர்களை அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.
“உன்னை முதன் முதலில் இந்த நிலையிலா பார்க்க வேண்டும்” எனக்கேட்டு செல்வி அழுதே விட்டார். பின் தங்கள் பிள்ளைக்கு பாசக்கரம் நீட்டியவன் அவர்களுக்கு பிள்ளையல்லவோ.
வேலு, மூர்த்தி, காமாட்சி என்று ஒருவர் பின் ஒருவராக பார்த்து பேசி அவனுக்கு தாங்கள் இருப்பதாகக் கூறி ராகவை ஆளாளுக்கு தாங்கினார். ஆதியே ராகவின் மீது அவ்வளவு அக்கறை காட்டும் போது அவனின் குடும்பத்தாருக்கு சொல்லவும் வேண்டுமோ ராகவை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டனர்.
பகலில் ஸ்வேதாவும், நிரலியும் பார்த்துக்கொண்டால், இரவில் சூர்யா ராகவுடனே அவ்வறையிலேயே இருந்துகொள்வான்.
குடும்பமற்ற சூழலில் வளர்ந்த ராகவிற்கு அவ்வளவு மகிழ்ச்சி. தனக்கு ஒன்றென்றால் தன்னுடைய சீனியர் இருக்கின்றாரென்று அந்நிலையிலும் சந்தோஷம் கொண்டான். இது விச்சு செய்த செயலினாலே சாத்தியமென்று. அவருக்கு மானசீகமாக நன்றி கூட சொல்லிக் கொண்டான்.
ஒரு வாரத்தில் ராகவின் உடல் நல்ல முன்னேற்றம் கண்டது. இப்போது எழுந்து நடக்குமளவிற்கு தேறியிருந்தான். தலையில் தான் அடி என்பதால், முடிந்தளவு தன் வேலைகளை தானே செய்ய முயற்சி செய்தான்.
இந்த ஒரு வாரத்திற்குள் ஆதி விச்சுவிற்கு எதிராக பல காய்கள் நகர்த்தியிருந்தான்.
விச்சுவுக்கு எதிரான ஆதியின் முதல் காய் கற்பகம்.
ராகவை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு கொண்டு வந்த அன்று,
ராகவ் நிரலி மீது காட்டிய அன்பிற்காக தனது மொத்த குடும்பமும் அவனின் நலன் வேண்டி சேவகம் செய்வதை கண்ட கற்பகத்திற்கு ஒன்று புரிந்தது.
பிறர் நம்மை மதிப்பதற்கும், அன்பு செலுத்துவதற்கு தன் ரத்தமாக தங்களுடைய வம்சமாக இருக்க வேண்டியதில்லை. அவர்களின் சிறு செயல் போதும். அதை தாங்கள் உணராமலே கற்பகத்திற்கு காட்டியிருந்தனர்.
‘இனியும் தானிங்கு அந்நியப்பட்டு இருக்க வேண்டுமா?’
குடும்பத்தார் உடன் இருந்தும் தனிமையை உணர்ந்த கற்பகம், ஒதுக்கத்தை ஒருநாள் கூட தாக்கு பிடிக்க முடியாது அன்றிரவே ஊருக்கு செல்ல ஆயத்தமாக, அவரை தனியாக அழைத்துச் சென்று பேசினான் ஆதி.
ஆதி பேச பேச கற்பகத்தின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்து கொண்டே போனது.
இருபத்திரண்டு வருடங்களாக அவர் பொத்தி பொத்தி காத்து வைத்த ரகசியத்தை தன் பேரன் ஆணி வேரிலிருந்து சொன்னால் அவருக்கு அதிர்ச்சியாகத்தானே இருக்கும்.
“உண்மை வெளிய தெரிய வேண்டிய நேரம் வந்தாச்சு அம்மம்மா. அதனால் நீங்க இப்போ இங்கு என்னுடன் இருப்பது அவசியம்” என்றான்.
“என்னை மீறி நீங்கள் செல்ல முடியாது” என்ற மறைமுக செய்தி அவனிடம்.
கற்பகம் செய்தது தவறென்று சொல்லிவிட முடியாது. தன் உறவு ஒன்றின் வாழ்க்கைக்காக அவர் செய்தது. சொல்லப்போனால் அந்த செயலால் தான் இன்று ஒரு உயிர் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டும் இருக்கிறது. ஆனால், அதற்கு பிறகான அவரின் நடத்தையை தான் ஆதி வெறுத்தான்.
“நீங்கள் கொஞ்சம் அன்பு காட்டியிருந்தாலும், உங்களின் மதிப்பு பலபடி உயர்ந்திருக்கும் அம்மச்சி. ஆனால் நீங்கள் காட்டிய அப்பட்டமான வெறுப்பில் இறங்கி போயிட்டீங்க” என்ற பேரனின் நேரடியான குற்றச்சாட்டில் வயதில் மூத்தவர் குன்றிப்போனார்.
தந்தைக்கு பாடம் சொல்லிய மகனென்பதை மாற்றி… மூன்று தலைமுறை மூத்தவருக்கு பாடம் சொல்லிக் கொண்டிருந்தான் பேரன்.
“என்னை மன்னித்து விடு ஆதி.”
பேரனின் கற்றலில் தன் தவறுகளை உணர்ந்தாரோ! தானென்பது மறந்து முதல் முறையாக தன் செயல்களுக்கு மன்னிப்பு வேண்டினார்.
“உங்களை மன்னிக்க வேண்டிய ஆளே வேறு” என்றவன் “இனியாவது வயதிற்கு தகுந்தாற்போல் நடந்துகொள்ளுங்கள்” என்று அவ்வறையிலிருந்து வெளியேறினான்.
*****
விஸ்வநாதனுக்கு அழைத்த ஆதி, அழைப்பை அவரெடுத்ததும் பேசாமல் மௌனம் காத்தான்.
சில மணித்துளிகள் கடந்திருக்க விச்சுவே தன்னிருப்பை தெரிவிக்க தொண்டையை செறும அதற்காகவே காத்திருந்தவன் போல்…
“விக்ஸ் மாத்திரை சாப்பிடுங்க கிச்கிச் போக்குங்க…” என்று ராகம் பாடினான் ஆதி.
“டேய்…”
காதிலிருந்து போனை நகர்த்தி பிடித்தவன் தன் சுண்டு விரல் விட்டு காதினை தேய்த்துக் கொண்டான்.
“நோ சவுண்ட் விச்சு… வயசாச்சுல… இப்படி கத்தினால் ஹார்ட் அட்டாக் வரும். பொட்டுன்னு போய்டுவ. அப்புறம் நான் யார்கிட்ட மோதுறது” என்று விளையாட்டாய் கூறியவன்,
“என்னுடைய மோதலில் நீ காலியாகனும் விச்சு… அதை நான் ரசிக்கனும்” என்று ஒருவித வெறியுடன் கூறினான்.
“ஏ.டி…”
“எஸ்…”
“என்ன அந்த ராகவ் பய பொழைச்சிட்டான்னு திமிரா… அவனை கடைசி நொடியில் கூட என்னால் தூக்க முடியும்.” தன் சறுக்களை விஸ்வநாதனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
“தூக்கு விச்சு தூக்கு…” என்ற ஆதி “முடிந்தால் தூக்கி பாரு” என்றான்.
“வேண்டாம் ஏ.டி என்னை ரொம்ப சீண்டுற…”
“ஹஹா… நீ ஏற்கனவே என்னை சீண்டிட்ட விச்சு,
ராகவை தூக்கி என்னை என் ஈகோவை ரொம்பவே சீண்டிட்ட, யூ வில் பே ஃபார் இட்.”
“ஆர்.கேவுக்கு வாரிசே இல்லைன்னு நம்ப வைத்த என்னால், அவனை அழிக்க முடியாதா என்ன. உன்னால என்னை ஒன்னும் புடு** முடியாதுடா… நான் விஸ்வநாதன் டா!”
“நான் ஏ.டி.”
விஸ்வநாதன் முடிப்பதற்கு முன் ஆதி கத்தாது அதே சமயம் அதிக அழுத்தத்துடன் கூறியிருந்தான்.
அந்த அழுத்தத்தில் விஸ்வநாதனுக்கும் சற்று பயம் எட்டி பார்த்தது. நீதிமன்ற வளாகம் அவரின் கோட்டை. அங்கு ராஜாவாக வலம் வர அவர் செய்தவை பல. அதற்கு ஆப்பாக என்றோ தான் செய்த சிறு தவறு இன்று விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.
சொத்திற்காக உடன் பிறப்பையே பதம் பார்த்த விஸ்வநாதன் இன்று ஆதியை கண்டு அச்சம் அடைந்தார்.
இந்த ஒரு வழக்கில் தன் மொத்த வாழ்க்கையும் நிர்மூலமாக போவதை உணர்ந்தார்.
“என்ன விச்சு சைலண்ட் ஆகிட்ட…
எனக்கு உன்னோட இந்த அமைதி ரொம்ப பிடிச்சிருக்கு விச்சு.
மொத்தமா உன்னை அமைதியாக்கிடுறேன்” என்ற ஆதி,
“நானெதுக்கு உனக்கு கால் பண்ணேன்னா… ராகவை கடத்தி விபத்தாக்கி திரும்ப கடத்த முயற்சி செய்து என் பக்கம் வலு சேர்த்திருக்க விச்சு. அதுக்கு தேன்க்ஸ் சொல்லத்தான் கூப்பிட்டேன்” என்றான்.
“ரொம்ப ஆடாத ஏ.டி.”
“சாரி விச்சு… எனக்கு டான்ஸ் வராதே!” பாவம் போல் கூறினான் ஆதி.
“ஹாங்… அப்புறம் விச்சு, ஒரு முக்கியமான விடயம்” என்று ரகசிய குரலில் பேசியவன்,
“அவர் கேம் இஸ் ஸ்டார்ட் நௌ” என்றதோடு,
“வீ வில் பிளே இன் அவர் ரிங்/கோர்ட் விச்சு” என்று அழைப்பை துண்டித்தான்.
விஸ்வநாதனை கலக்கம் கொள்ள செய்திருந்தாலும் ஆதியால் ராகவிற்கு அவர் செய்த செயலை ஏற்க முடியவில்லை.
எப்போதும் யாராவது ஒருவர் ராகவுடனே இருப்பதால் ஆதியால் அவனிடம் பேச இயலாது போனது. ராகவும் நடந்ததை ஆதியிடம் சொல்ல முயன்று கொண்டிருந்தான். இரண்டு நாட்களுக்கு முன் ஸ்வேதா ராகவுடன் இருந்த சமயம் சென்ற ஆதி, ஸ்வேதாவை வெளியேற்றி விட்டு ராகவிடம் நடந்ததை அறிந்து கொண்டான்.
அன்று இரவு தங்களது அலுவலகத்திலிருந்து தன்னுடைய அறைக்கு ராகவ் சென்று கொண்டிருக்கும் போது அவனின் வாகனத்திற்கு குறுக்கே கட்டையை விட்டு ராகவை கீழே தடுமாறச் செய்து அவனை கடத்தியிருந்தனர்.
அடுத்த அரை மணி நேரத்தில் ராகவ் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் விஸ்வநாதனின் முன் நிறுத்தப்பட்டிருந்தான்.
“உன்னை எதுக்கு கடத்தியிருக்குத் தெரியுமா?”
விஸ்வநாதனின் கேள்வியில் ராகவ் புரியாது பார்த்தான்.
“ஆர்.கே வாரிசு யாருன்னு உனக்குத் தெரிந்திருக்குமே! யாரது?” என்றார்.
விஸ்வநாதனின் செயல்கள் அனைத்தையும் அறிந்த ராகவ்… இவ்வழக்கில் அவர் ஜெயிக்க எதுவும் செய்வார் என்பது தெரிந்ததால்… வாரிசை அவரிடமிருந்து காக்க எண்ணி, நொடியில் தோன்றிய யோசனையின் படி…
“அதை ஆர்.கே வாரிசுகிட்டவே கேட்குறியே” என்று கூறியிருந்தான்.
“என்னுடைய அருகில், என் பார்வையில், என்னுடனே இருக்கும்போது உன்னால் எதுவும் செய்ய முடியாது விச்சு” என்று ஆதி சொல்லியது நினைவிற்கு வர, ‘அவனோடவே இருப்பது இவன் தான்’ என்று ராகவ் சொல்லியதை நம்பிய விஸ்வநாதன் ராகவை கொன்றிட முடிவு செய்து… ராகவிற்கு பழக்கமே இல்லாத ஹாட் ட்ரிங்க்ஸை அவன் திணற திணற வாயில் ஊற்றி, முற்றிலும் போதையேறி நடக்கவே சிரமப்பட்ட நிலையில் ராகவை நெடுஞ்சாலையில் நடக்க விட்டு லாரியை வைத்து தூக்கி எறிய வைத்திருந்தார்.
லாரி மோதி தூக்கி வீசப்பட்ட ராகவின் தலை அங்கிருந்த மின் கம்பத்தில் இடிக்கப்பட்டு… கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் மிதந்தான்.
“இந்நிலையில் ஒரு பத்து நிமிடங்கள் இருந்தால் உயிர் போய்விடும்” என்று ராகவ் துடிப்பதை ஒருவித ரசனையோடு பார்த்த விஸ்வநாதன் சென்றுவிட, அவ்வழியே தனது இரவு நேர பணி முடிந்து ஆட்டோவில் வந்து கொண்டிருந்த ஸ்வேதா… யாரோ சாலையில் அடிபட்டு இருப்பதாக எண்ணி ஆட்டோவை நிறுத்தி அருகில் சென்று பார்க்க அது ராகவ்.
அதிர்ச்சியில் உறைந்து நின்றது ஒரு கணம் தான். தன்னவனை மீட்க வேண்டும் என்ற எண்ணம் தோன்ற உடனே தான் வந்த ஆட்டோவிலேயே ஏற்றி மருத்துவமனை வந்து சேர்ந்திருந்தாள்.
அதை கேட்ட ஆதிக்கு விஸ்வநாதனை கொன்றுவிடும் கோபம் வந்தது. ஆனால் இதையெல்லாம் எதற்காக செய்தாரோ அதெல்லாம் இல்லாமல் அவர் அனுபவிக்கும் வலி அவருக்கு இறப்பதைவிட மேலென்று கருதிய ஆதி வேகத்தை விடுத்து மதியால் வெல்ல பொறுமை காத்தான்.
தன் வெற்றிக்காக… அப்பெண்ணிற்காக தனது உயிரையே பணயம் வைத்த ராகவினை தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டான் ஆதி.
அங்கு சொல்லப்படாதா இரு ஆண்களின் அன்பு மனதால் பருகப்பட்டது.
Epi 24
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
13
+1
1
+1
ராகவ் ஆதி செம