அத்தியாயம் 22 :
“எள்ளுவய பூக்கலையே!
ஏறெடுத்தும் பார்க்கலையே!
மீன் குழம்பு வாசம் என்னை தாக்குதய்யா!
உச்சுகொட்டி சாப்பிடத்தான் ஏங்குதய்யாஆஆஆ…!
ஆதி சென்றதையே பார்த்தபடி நின்றிருந்த நிரலியின் அருகில் வந்த சூர்யா விளையாட்டாய் பாடினான்.
சூர்யாவின் விலாவிலே கை முட்டியால் குத்தியவள்,
“மாமா சாப்பிடுவாருடா… அதுக்குள்ள ஓவரா ஓட்டாதே…!” என்றவாறு உணவு பாத்திரங்களை கிச்சனிற்குள் கொண்டு சென்றாள்.
“நீ சாப்பிட்டு எடுத்து வை அம்மு.”
“மாமாக்கு ஏதோ பிரச்சனை சூர்யா. அதை என்னால் உணர முடியுது. அதனால் அவர் இன்னும் சாப்பிடவேயில்லை. அவருக்கு பிடிச்சதை செய்தால், கொஞ்சம் சாப்பிடுவாருன்னு தான் மீன் சமைத்தேன். இப்போ அவரே சாப்பிடல, நானெப்படி சாப்பிட…”
“இப்போவே மணி ஒன்பது. இனி அவர் எப்போ வந்து, நீ சாப்பிட்டு…” ஒருவாறு வார்த்தையை இழுத்தான் சூர்யா.
“ம்ப்ச்… மாமா வரட்டும், அவரோடு சேர்ந்தே சாப்பிட்டுக்கிறேன். அது எந்நேரமாக இருந்தாலும்.” அழுத்தமாகக் கூறினாள்.
“உன் காதலை பார்க்கும் போது எனக்கு பிரமிப்பா இருக்கு அம்மு” என்ற சூர்யா, “உன் அளவு மாமாவுக்கும் உன் மேல் காதல் இருக்கா அம்மு?” எனத் தெரிந்துகொண்டே கேட்டான்.
“காதல்’ன்னா என்ன சூர்யா?”
“நீயே பெட்டரா சொல்லு. எனக்கும் காதலுக்கும் ரொம்ப தூரம்” என்ற சூர்யா, உணவு மேசையின் மீது அமர… நிரலி இருக்கையில் அமர்ந்தாள்.
“காதல்’ங்கிறதே அன்பை கொடுப்பதுன்னு தான் அர்த்தம் சூர்யா. சோ, எதிர்பார்ப்பில்லாமல் இதயத்திலிருந்து உண்மையா அன்பை கொடு அது உனக்கு நிச்சயம் இரண்டு மடங்கா திருப்பி கிடைக்கும்.”
சூர்யாவே நிரலியின் காதல் பற்றிய அர்ததத்தில் சிலாகித்துப் போனான்.
“உனக்கு திருப்பி கிடைக்குதா அம்மு?”
“இன்னமுமா சந்தேகம் சூர்யா உனக்கு.”
“உன் வாயால் ஒருமுறை சொல்லு அம்மு… நான் ரொம்ப ஹேப்பி.”
“ரெண்டு இல்லை… பத்து மடங்கா திருப்பி கிடைக்குது போதுமா!”
மேசையிலிருந்தவாறே தங்கையை தன் இடையோடு அணைத்துக் கொண்டான்.
“சந்தியா அமைதியாக போனதை என்னால் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியல அம்மு… சோ, அவ விடயத்தில் கொஞ்சம் கவனமாக இரு” என்றான் சூர்யா.
அந்நேரம் அலைபேசி ஒலித்தது.
“போன் எடுடா பக்கி.” அவனின் அணைப்பிலிருந்து விலகியவள் கூறினாள்.
“ஹலோ மேடம்… கத்துறது உங்க ஃபோன்” என்ற சூர்யா, மேசையின் ஓரமிருந்த நிரலியின் அலைபேசியை எடுத்து பார்க்க ஏதோ புது எண்ணிலிருந்து அழைப்பு.
சூர்யாவே ஏற்று காதில் வைக்க,
“என்னவோ என்கிட்ட அந்த குதி குதிச்ச… இப்போ உன் புருஷன் எங்க இருக்காருன்னு உனக்குத் தெரியுமா?”
எதிர்முனையில் பேசுவதற்கு முன்பே பேசிய சந்தியா வில்லி போல் சிரித்தாள்.
சந்தியாவை கண்டுகொண்ட சூர்யா,
“நீயெல்லாம் திருந்தவே மாட்டியா?” என்றான்.
“ஹோ, பேசுவது பாசமலரா?” எனக் கேட்ட சந்தியா “திருந்துவதற்கு நானென்ன தவறு செய்தேன், ஆசைப்படுவது தப்புன்னா… இங்கு எல்லோருமே தப்பு தான். சரி அதைவிடு, வேண்டாத பேச்சு நமக்கெதற்கு” என்றதோடு,
“உன் தொங்க….ச்சி புருஷன் இங்கு வேறொரு பொண்ணை கட்டிபிடிச்சிட்டு நிக்குறான். போட்டா அனுப்பியிருக்கேன் பாரு. இப்போவாவது அவரோட லட்சணத்தை தெரிஞ்சிக்கோங்க” எனக்கூறி வைத்துவிட்டாள்.
தன் ஆசை நிறைவேறவில்லையே என்கிற கோபம் சந்தியாவிடத்தில். அந்த கோபம் மொத்தமும் நிரலியிடம் திரும்பியிருந்தது. அதுவும் நிரலி கொடுத்த அடியை நினைத்த பார்த்தவளுக்கு, தான் வாழவிட்டாலும் ஆதியுடன் அவள் வாழக் கூடாதென்கிற வெறி தரம் தாழ்ந்த செயல்களை செய்ய வைத்தது. அதன் விளைவாக ஒரு புகைப்படத்தையும் நிரலிக்கு அனுப்பியிருக்கின்றாள்.
பேசுவது சந்தியா என்றதுமே சூர்யா ஸ்பீக்கர் ஆன் செய்திருந்தான். ஆதலால், சந்தியா பேசியதை நிரலியும் கேட்க நேர்ந்தது.
இணைப்பு துண்டிக்கப்பட்டதுமே, ஒருவித படப்படப்புடனும் வேகத்துடனும் அலைபேசியில் உள்ள புலனம் (whatsapp {பகிரி, புலனம், கட்செவி அஞ்சல்}) செயலியை திறந்தான்.
நேராகிவிட்டது என்று நினைத்த தங்கையின் வாழ்க்கை கோணலாகத்தான் உள்ளதோ என்கிற தவிப்பு சூர்யாவிடம்.
ஆனால் நிரலிக்கு சூர்யாவிடம் காணப்பட்ட தவிப்பு, பதட்டம் எதுவுமில்லை. சூர்யா காட்டப்போகும் பொய்யான சித்தரிப்புக் கொண்ட புகைப்படத்தினை பார்க்க நிர்மலமான முகத்துடன் அமர்ந்திருந்தாள்.
புலனம் செயலியை திறந்ததும்… ஆதியின் அணைப்பில் ஒரு பெண் நிற்பதை போன்ற புகைப்படம் எம்பி குதித்தது. சூர்யா அதிர்ந்து போனான். இருப்பினும் தன்னுடைய ஹீரோவை தவறான நிலையில் அவனால் நினைத்து பார்க்க முடியவில்லை.
பொய்யாக இருக்குமோ என்றும் அவனால் சிந்திக்க முடியவில்லை.
ஏனென்றால், புகைப்படத்தில் இருப்பதைப்போல் தான் ஆதி தற்போது இருந்தான்.
ஆதியின் தோள் வளைவிற்குள் நாகரிகமான அணைப்பிலிருந்தது ஸ்வேதா.
ஆதி உணவு உண்ண அமரும் போது அவனுக்கு வந்த அழைப்பு ஸ்வேதாவுடையது.
ஸ்வேதாவின் அழைப்பிற்கு இரண்டு நிமிடத்திற்கு முன்பு தான் ராகவ் கண் திறந்திருந்தான். கண் விழித்தவன் முதலில் கேட்டது ஆதியை தான். உணர்ச்சிவசப்பட்டு ஆதியை கேட்டவனின் இதயத்துடிப்பு அதிகரிக்க ரத்த அழுத்தம் ஏகத்துக்கும் எகுறியது.
ஸ்வேதா எவ்வளவு முயன்றும் ராகவை கட்டுபடுத்த முடியாமல் போனது.
ராகவிற்கு ஆதியை பார்த்து நடந்தவற்றை நேரில் சொல்ல வேண்டும். அத்தோடு ஆர்.கே’வின் உண்மையான வாரிசின் நலன் அறிய வேண்டிய துடித்தான்.
“நான் சீனியரை பார்க்கணும்.”
“ப்ளீஸ் ஸ்வே, ப்ளீஸ் சீனியரை வர சொல்லு.”
விஸ்வநாதனால் நேர்ந்த விபத்தினால் மனதால் வெகுவாக துவண்டிருந்தான் ராகவ். அவனிடம், ஆதியை நேரில் பார்த்தால் தான் மனம் சமன்படும் நிலை.
“ஸ்வே சீனியரை கூப்பிடு.” கையில் போடப்பட்டிருந்த ஐவி’யை கழுற்ற முயன்றவாறே படுக்கையிலிருந்து எழ போராடினான்.
“ராகவ் காம் டவுன்… நீ இப்படி ஹைப்பர் ஆகக் கூடாது. இப்போதான் ஆப்ரேஷன் பண்ணியிருக்கு.”
ஸ்வேதா ராகவுடன் திண்டாடினாள்.
“ஸ்வேதா… சீனியர்.”
“நான் இப்போவே கால் செய்யுறேன் ராகவ். ப்ளீஸ் யூ பீ காம் மேன்” என்றவள், ஆதிக்கு அழைக்க… மருத்துவர் உறக்கத்திற்கான ஊசி செலுத்தி ராகவை உறங்க வைத்தார்.
“இனியொரு முறை ராகவ் இப்படி ரியாக்ட் செய்தால், ஸ்டிச்செஸ் பிரிய வாய்ப்பிருக்கு… அஸ் அ டாக்டர் நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை” என்று ஸ்வேதாவிடம் சொல்லிய மருத்துவர் அடுத்த நோயாளியை கவனிக்கச் செல்ல ஸ்வேதா ஓய்ந்து போனவளாக இருக்கையில் அமர்ந்தாள்.
முதல் அழைப்பு அலைவரிசை கோளாறு காரணமாக இணைப்பு சொல்லாமலே துண்டித்துப்போக மீண்டும் அழைக்க… இம்முறை அழைப்பு சென்று ஆதியும் அதனை ஏற்றிருந்தான்.
“ஆதி கொஞ்சம் சீக்கிரம் வா… ராகவ்… ராகவ்…” என்றவளின் அழுகுரல் மட்டுமே அடுத்து ஒலித்தது.
ஸ்வேதாவின் அழுகையில் என்னவோ ஏதோவென்று பதறியவன் நிரலியிடம் சரியாகக் கூட சொல்லாது உணவை மறுத்து மருத்துவமனைக்கு விரைந்து வந்திருந்தான்.
ராகவின் நிலையில் ஏற்கனவே துவண்டிருந்த ஸ்வேதா, கண் விழிப்பிற்கு பின்னான ராகவின் செயலால் முற்றிலும் உடைந்து போனாள். அதன் வெளிப்பாடே இந்த அழுகை.
சந்தியா கல்வி கற்கும் அறக்கட்டளை என்பதால், அரசு மருத்துவமனையில் அன்றைய பயிற்சிக்கான குறிப்புகளை தன்னுடைய மருத்துவ பேராசிரியரிடம் சமர்ப்பிக்க வந்தவள், மிகுந்த பதட்டத்துடன் அங்கு வந்த ஆதியை கண்டு பின் தொடர்ந்தாள்.
அவளுக்கு ராகவ் இங்கு சிகிச்சை பெறுவது தெரியும். இருப்பினும் ஆதியின் இநேரத்திலான வருகையால் நிரலியின் மனதை கலைக்க தனக்கேதுனும் வழி கிடைக்குமோ என்ற தீய எண்ணத்தினாலே ஆதியை தொடர்ந்து வந்தாள்.
மனம் நலிந்து மொத்தமாக ஓய்ந்திருந்த ஸ்வேதா ஆறுதலுக்காக தற்போது தனக்கிருக்கும் ஒரே துணையான ஆதியை கண்டதும் அவன் தோள் சாய்ந்தாள்.
அவளின் செயல் ராகவிற்கோ ஏதோ என்று ஆதியை அஞ்ச செய்ய…
“ஸ்வே… ராகவ்வ்வ்வ்…” என்று இழுக்க,
அழுகையினூடே ராகவ் நடந்துகொண்டதை ஸ்வே விளக்க… அதில் ராகவை நினைத்து மிகவும் பயந்துள்ளாள் என்பது புரிந்து கொண்டு, அவளை ஆறுதல் படுத்தும் விதமாக… ஸ்வேதாவின் தோளைச்சுற்றி கை போட்டவன் தட்டிக்கொடுத்தான்.
ஆதி, ஸ்வேதா இருவரையும் பொறுத்தவரை… அவர்களுக்குள் நட்பு அவ்வளவு பரிசுத்தமாக இருந்தது. அதனால் அவர்களின் நிலை தவறான ஒன்றாகத் தெரியவில்லை.
இதனை சந்தியா அறிந்த போதும், நிரலிக்குத் தெரியாதே! அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்த எண்ணிய சந்தியா புகைப்படம் எடுத்து நிரலிக்கு அனுப்பி வைத்தாள்.
ஆதியின் மீது நிரலி வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையில் ஆட்டம் காணச் செய்ய, நீரினை கலங்கச் செய்ய குளத்தில் எறியப்படும் கல் போன்று இந்த புகைப்படத்தை பயன்படுத்தினாள்.
இதனால் ஆதியின் மீது தவறான கண்ணோட்டம் நிரலிக்கு வருமென்பது சந்தியாவின் எண்ணம்.
ஆனால் நிரலி ஆதியின் மீது வைத்துள்ள நம்பிக்கை, அவன் அவள் மீது கொண்ட காதலால் பிணைக்கப்பட்டது. அதனை தகர்ப்பதென்பது யாராலும் முடியாதது என்பது சந்தியா அறியவில்லை.
சந்தியாவின் எண்ணம் பொய்யாக்கும் விதத்தில் தான் நிரலியும் நடந்து கொண்டாள்.
புகைப்படத்தை பார்த்து… அதிர்ந்த சூர்யாவின் முகத்தை கண்ட நிரலி, எக்கி அவன் கையிலிருந்த அலைபேசியின் திரையை பார்க்க… அவனுக்கு ஏற்பட்ட அதிர்வு அவளுக்கில்லை.
“அந்த பக்கமிருந்து எடுத்திருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும்’ல சூர்யா. மாமா முகம் சரியா தெரியலடா” என்ற நிரலியை வெட்டவா குத்தவா என பார்த்தான் சூர்யா.
“அம்மு…”
“என்னடா இவ்வளவு கூலா இருக்கனேன்னு பார்க்குறியா?”
ஆமாமென்று சூர்யாவின் தலை தன்னைப்போல் ஆடியது.
“என்னைத்தவிர ஒரு பொண்ணு மாமா பக்கத்துல நிக்குறா(ள்)ன்னா அவள் நிச்சயம் அவருக்கு சகோதரி உறவகாத்தான் இருக்கும்.” அவ்வளவு திடம் நிரலியின் பேச்சில்.
“இப்படி கண் மூடித்தனமாக இருக்காதே அம்மு.” அண்ணனாக கவலைக் கொண்டான் சூர்யா.
“அவர் என் மீது வைத்திருக்கும் காதல் அப்படிப்பட்டது சூர்யா… நிச்சயம் இது எனக்கு தீங்கு நிகழ்த்தும் செயலல்ல. சந்தியா அனுப்பினான்னு நீயும் நம்புறியா?”
சூர்யாவுக்கு சந்தியாவின் மீது துளியும் நம்பிக்கையில்லை. ஆனால், நிரலியின் வார்த்தையின் மீது நம்பிக்கை உள்ளதே. அதனால் அடுத்த நொடியே மனதின் கலக்கத்தை ஒதுக்கினான்.
சந்தியா அனுப்பிய புகைப்படத்தினை அழித்துவிட்டு அலைபேசியை நிரலியின் கையில் கொடுத்தான்.
“தேன்க்ஸ் சூர்யா.”
“உன்னோட நம்பிக்கை அளவிற்கு எனக்கும் இருக்கு அம்மு. ஆனால் மாமா உன் கணவராக ஆன பின்பு என்னால் அவரை, உன் அண்ணன் என்கிற நிலையிலிருந்துதான் பார்க்க முடியுது” என்று தன்னிலையை விளக்கிய சூர்யா அறைக்குள் சென்று விட்டான்.
வள்ளியும் எப்பவோ சென்றிருக்க,
சந்தியாவை ‘எப்படி தன் வாழ்விலிருந்து அப்புற படுத்துவது’ என்கிற யோசனையோடு ஆதியின் வருகையை எதிர் பார்த்து வரவேற்பறையில் அமர்ந்து கொண்டாள் நிரலி.
*****
“ஆர் யூ ஓகே நவ் ஸ்வே?” என்ற ஆதி அவளை இருக்கையில் அமர வைத்தான்.
“பெட்டர் நவ்” என்றவளிடம் தண்ணீர் கொடுத்து குடிக்கச் செய்தவன்,
“ராகவை இப்போ பார்க்கலாமா?” எனக் கேட்டான்.
“தூங்குவதற்கு மருந்து கொடுத்திருக்கு ஆதி, எப்படியும் கண் விழிக்க காலை ஆகிவிடும்” என்று பதில் சொல்லியவள் தன் மன்னிப்பை வேண்டினாள்.
“சாரி ஆதி… ராகவ் ரியாக்ட் பண்ணத்துல கொஞ்சம் பதட்டமாகிட்டேன். அதான் கால் செய்தேன்.”
“ஹேய்… இட்ஸ் ஓகே. நான் போயிருந்திருக்கக் கூடாது” என்றவன் “பேபி நினைவு வந்தாலே நான் எல்லாத்தையும் மறந்துவிடுகிறேன்” என்றவனுக்கு , தான் உண்ணாமல் வந்ததால் மனைவியும் உணவை தவிர்த்திருப்பாள் என்று நன்கு தெரிந்தது.
அதனால் வீட்டிற்கு சென்று வரலாமென நினைத்தவன்,
ராகவின் தற்போதைய நிலையை ஸ்வேதாவிடமும், சிகிச்சையளிக்கும் மருத்துவரிடமும் ஒன்றிற்கு இருமுறை கேட்டு தெளிவு பெற்றான்.
“ஹீ இஸ் பேர்பெக்ட்லி ஆல்ரைட்… கண் விழிக்காமல் இருந்திருந்தால் தான் கொஞ்சம் க்ரிடிக்கில் ஆகியிருக்கும்… நௌ ஹீ இஸ் ஓகே.” மருத்துவர் சொல்லிய பதிலில் தான் ஆதிக்கு நிம்மதியானது.
“ஆதி நான் தேவையில்லாமல் உன்னை டென்சன் பண்ணிட்டேன் நினைக்கிறேன்.”
“அப்படியில்லை ஸ்வே, எனக்கு ராகவ் ரொம்ப முக்கியம். எனக்கிருக்கும் ஒரே நல்ல ஃபிரண்ட். அவனுக்கு தவறா எதாவது ஆகியிருந்தால், என்னால் அதை தாங்கியிருக்கவே முடியாது. ஆதியின் குரல் தழுதழுத்ததோ!
“பாருடா… தி கிரேட் ஏ.டி உணர்ச்சியை வெளியேயெல்லாம் காட்டுறார்.” அவனின் மனதை மாற்றும் பொருட்டு ஸ்வேதா கிண்டல் செய்தாள்.
“நானும் மனுஷன் தான் ஸ்வே… என்னுடைய இறுக்கமும் அழுத்தமும் என் வேலையினால் உண்டானது. உணர்ச்சியை வெளிக்காட்டாமல் இருந்தால் தான் இங்கு எதிராளியை அடக்க முடியும்.”
“ப்பா போதும்… விட்டால் இதையே கோர்ட்டா மாற்றிடுவ போல.”
ஆதியிடத்தில் வழக்கமான புன்னகை.
“ராகவ் கண் விழிக்க மார்னிங் ஆகிடுமா?”
“ம்.”
“இப்போ நீ நார்மல் தானே ஸ்வே.”
“ம்.”
“ம்.
ஆர் யூ ஷ்யர்.”
“அய்யோ ஆதி என்னாச்சு… எதுவாயிருந்தாலும் ஓப்பனா சொல்லு.” ஆதி எதுவோ சொல்ல வந்து தயங்குவதாகத் தோன்றியது.
“இனி ராகவுக்கு ஆபத்தில்லை தானே.”
“அச்சோ ஆதி இப்போ அவன் தூங்கிட்டு தான் இருக்கான். இனி எந்த பயமுமில்லை. நீ ஏன் திரும்ப திரும்ப இதையே கேட்குற?”
“நான் வீட்டுக்கு போயிட்டு வரட்டுமா ஸ்வே? நீ தனியா மேனேஜ் பண்ணிப்பியா?”
“ஏன் பேபி நியாபாகமா?”
இதழில் மென்னகை படரவிட்ட ஆதி, “பேபிகிட்ட இன்னும் எதுவும் சொல்லலை ஸ்வே. இனி தான் சொல்லணும்” என்றவன், தான் சொல்லாமல் விட்டதை பயன்படுத்தி கற்பகம் மற்றும் சந்தியா நடத்திய நாடகத்தோடு மாலை வீட்டில் நடந்த நிகழ்வை மேலோட்டமாகக் கூறி, “வெளியக்காட்டிக்கலனாலும் நடந்ததை நினைத்து எதாவது மண்டைக்குள்ள உருட்டிட்டி இருப்பாள். இப்போ அவளோடு நான் இருக்கணும்” என்று தன் மனநிலையை எடுத்துக் கூறினான்.
“இப்படியும் இருப்பார்களா ஆதி.” கற்பகம் மற்றும் சந்தியாவின் செயலை எண்ணி வினவினாள்.
“இருக்கத்தானே செய்கிறார்கள்.” சலிப்பாக மொழிந்தான்.
“ஆனால் இதெல்லாம் இன்னும் சில நாட்களில் சரியாகிவிடும்” என்று நம்பிக்கையாகக் கூறினான்.
“ஓகே ஆதி நீ போயிட்டு வா.”
“ஏர்லி மார்னிங் வந்துடுறேன் ஸ்வே. ராகவ் கண் விழிக்கும் போது நானிங்கு இருப்பேன்” என்ற ஆதி ராகவை அறைக்குள் சென்று பார்த்துவிட்டு, ஸ்வேதாவிற்கு உணவு வாங்கி வந்து கொடுத்தவன்… அவள் உண்டு முடித்ததும், அவசரமென்றால் தன்னை அழைக்குமாறு சொல்லி தன் வீட்டை நோக்கிச் சென்றான்.
ஆதி மருத்துவமனையிலிருந்து வெளியேறிய ஒருமணி நேரத்திற்கு பிறகு விஸ்வநாதனின் ஆட்கள் மருத்துவமனைக்குள் புகுந்தனர்.
***
ஆதி வீட்டிற்கு வந்த போது நேரம் பதினொன்றை கடந்திருந்தது.
கதிரையில் அமர்ந்திருந்த நிலையிலேயே நிரலி தூங்கிக் கொண்டிருந்தாள்.
மனைவி உறங்கும் அழகை ரசித்தவன், அவளை இரு கைகளாலும் மழலையை ஏந்துவது போல் தூக்க… தூக்கத்திலும் தன்னவனின் ஸ்பரிசம் உணர்ந்தவள், “மாமா” என்று அவன் மார்புக்கூட்டில் ஒண்டினாள்.
அவளின் நெற்றியில் செல்லமாக முட்டியவன், “பேபி” என்று ஹஸ்கி குரலில் அழைக்க, தூக்கம் கலைந்தவள் முழுதாக விழி மலர்ந்தாள்.
“வந்துட்டீங்களா மாமா? வாங்க சாப்பிடலாம்” என்றழைத்தவள் எழ முயற்சிக்க, அப்போதான் அவன் தன்னை ஏந்தியிருப்பதையே உணர்ந்தாள் பேதை.
“இறக்கி விடுங்க மாமா.”
“இறக்கி விடவா தூக்கியிருக்கேன்?” என்றவன் நேராக உணவு மேசைக்குச் சென்றான்.
“ரொம்ப பசிக்குது பேபி” என்றான்.
அவன் இறக்கி விடுவதுபோல் தெரியாததால் தானே துள்ளி இறங்கினாள்.
“சாப்பிடாமல் அப்படியாரு வேலை பார்க்க சொல்லுறது.” ஆதியை கடிந்து கொண்டவள், வேகமாக உணவுகளை சூடு செய்து அவன் முன் வைத்தாள்.
தட்டு எடுத்து வைத்தவள், அதில் சூடாக சாதம் வைத்து அவனுக்கு பிடித்த வகையில் மீன் குழம்பினை ஊற்றினாள்.
உணவின் வாசனை நாசி சேர்ந்த பின்தான் ஆதிக்கு பசியே தெரிந்தது. சாப்பிட ஆவலாக தட்டினை பார்த்தவனின் முகம் மீனை பார்த்ததும் விளக்கெண்ணெய் குடித்தவனை போல் மாறியது.
“என்னாச்சு மாமா?”
“பேபி… இது, வேற குழம்பு எதுவுமில்லையா?” எனக் கேட்டான்.
அவனின் பாவமான முகம் சிரிப்பினை வரவழைக்க, முயன்று அடக்கியவள்… “ஏன்? இல்லையே மாமா, உங்களுக்குத்தான் மீன் ரொம்ப பிடிக்குமே” என வேண்டுமென்றேக் கூறினாள்.
“அது வந்து… பேபி எனக்கு பால் மட்டும் போதும்” என்று எழுந்தவனை தடுத்து…
சத்தமாக சிரித்தவள்,
“பேரு தான் பெரிய வக்கீலு, ஒரு மீன் சாப்பிடத் தெரியல. உங்க மீன் முள்ளு கதை எனக்கும் தெரியும். உட்காருங்க, நான் ஊட்டி விடுறேன்” என்றுக்கூறி, தானே அவனுக்கு ஊட்டி விட்டாள்.
நீண்ட நாட்களுக்குப்பின், வயிறு நிறைய பிடித்த உணவை உண்டவனின் மனமும் நிறைந்திருந்தது.
மனைவியின் கையால் ரசித்து உண்டவன், தானும் மனைவிக்கு ஊட்டி விட்டான்.
உறக்கம் வராது வெளியில் வந்த கற்பகம் இருவரின் அந்நியோந்நியமான அன்பை பார்த்து, தான் செய்த செயலை நினைத்து வருந்தினார்.
ஆதியின் முகத்தில் விரவியிருந்த மகிழ்ச்சியை கண்டவர்,
தன் பேரனின் சந்தோஷம் நிரலியிடத்தில் இருப்பதை புரிந்து கொண்டார். ஆசை பேரனின் மன நிறைவான வாழ்விற்காகவாவது தான் நிரலியை ஏற்க முயற்சிக்க வேண்டுமென்று தீர்மானித்தார். வந்த சுவடு தெரியாது அறைக்குள் சென்றுவிட்டார்.
தங்களது அறைக்குள் வந்த ஆதி மெல்ல நிரலியிடம் ராகவிற்கு விபத்தானதை கூற, “தன்னிடம் ஏன் முன்பே சொல்லவில்லை” என பதறியவளை ஆசுவாசப்படுத்தி… அவனின் தற்போதைய நிலையை சொல்லி அமைதி படுத்தினான்.
சந்தியா தோற்றுவிக்க நினைத்த சந்தேகக் கேள்விகள் அனைத்திற்கும் நிரலிக்கு இப்போது பதில் கிடைத்திருந்தது.
“ராகவை அங்கு விட்டு இங்கு என்னால் இருக்க முடியாது பேபி. ஸ்வேதாவும் ரொம்ப உடைஞ்சு போயிருக்காள். நான் ஹாஸ்பிட்டல் போகட்டுமா?” என்று கேட்டான். மருத்துவமனையில் ஸ்வேதாவிடம் வீட்டிற்கு செல்கிறேன் என்று சொன்னபோது கூட அவனுக்குள் எதுவும் தோன்றவில்லை.
ஆனால் வீட்டிற்கு வந்த பிறகு ஆதியின் மனம் ராகவை நினைத்து சுழன்றது. ஒருமுறை ராகவை பார்த்துவிட்டால் போதுமென மனம் அடித்துக்கொண்டது. அதனாலே, ஸ்வேதாவிடம் காலை வருகிறேன் என்று சொல்லி வந்தவன் வீட்டிற்கு வந்த ஒரு மணி நேரத்தில் மீண்டும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமென நிரலியிடம் கூறினான்.
தானும் உடன் வருகிறேன் என்றவளை மறுத்தவன், நாளை வந்து அழைத்துச் செல்வதாகக் கூறி மருத்துவமனைச் சென்றான்.
ஆதி மருத்துவமனைக்கு சென்ற சமயம், நெற்றியின் ஓரம் ரத்தம் வழிய ஸ்வேதா கீழே மயங்கி கிடக்க… ராகவின் படுக்கை காலியாக காட்சியளித்தது.
Epi 23
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
11
+1
30
+1
2
+1
வக்கீல் ஓவர்
அவனே பாவம் க்கா…