அத்தியாயம் 21 :
சந்தியா வெளியேறிய பின்னரே நிரலியின் கண்களில் அவளின் குடும்பத்தார் பதிந்தனர். அனைவரையும் வரவேற்றவள், அவர்களுக்கான அறையை காண்பித்து ரெஃபிரஷ் செய்து வருமாறு பணித்தவள், அங்கு நடந்தவற்றை பற்றி பேச யாரையும் அனுமதிக்கவில்லை.
முடிந்ததை பேசும் நிலையில் அவளில்லை. அத்தோடு சந்தியா இதோடு நிறுத்திக்கொள்வாளா என்ற கலக்கம் வேறு. ஆதலால் அவற்றை பற்றி பேசி மேலும் தன்னுடைய கலக்கத்தை அதிகரிக்க விரும்பவில்லை நிரலி.
அருகில் நின்றிருந்த கணவனின் ஊடுருவும் பார்வையை உணர்ந்தவள்,
“உங்களுக்கு மட்டும் தனியா சொல்லணுமா? போங்க போய் குளிச்சிட்டு வாங்க” என்று ஆதியை விரட்டினாள்.
மனைவியின் அதட்டலினை ரசித்தவன், அவளின் கன்னத்தில் வேகமாக இதழொற்றி… விடுவிடுவென மாடியேறியிருந்தான். கணவனின் செயலில் சிவந்தவளின் கலக்கம் நீங்கியிருந்தது.
கற்பகம் தானமர்ந்த கதிரையிலிருந்து அசையாது ஏதோ தீவிர யோசனையில் ஆழ்ந்திருந்தார். அவரின் முகம் வருத்தமாகக் காணப்பட்டது.
நிரலி அவரை பார்த்து கேட்டது… வந்த குடும்பத்தினர் தன்னிடம் ஒரு வார்த்தைகூட பேசிடாது… ஏன் கற்பகம் என்றொருவர் அங்கிருப்பதையே மறந்தவர்களாக தங்களின் வேலைகளை பார்த்திருப்பது அவரை உள்ளுக்குள் ஏதோ செய்தது.
இவ்வளவு நாள் அதிகாரமாக தலை நிமிர்ந்து வலம் வந்த தன்னுடைய குடும்பத்தார் முன்னிலையில் தன் செயலால் மதிப்பிழந்து போய்விட்டதாகக் கருதினார். திருந்தி விடலாமென்று சிந்திக்கின்றாரோ. ஆனால், மிருகங்கள் ஒருபோதும் தங்களின் குணங்களை மாற்றிக்கொள்வதில்லை. கற்பகத்தின் நிலை அவர் மட்டுமே அறிந்தது.
அத்தோடு அவரின் ஆசை பேரன் ஆதி அவர் புறம் தன் முகத்தைக் கூட திருப்பவில்லை. அதிலேயே அவனின் வெறுப்பின் அளவை உணர்ந்தவருக்கு கண்களோடு சேர்த்து மனம் கலங்கிற்று.
முதன் முறையாக தான் செய்தது தவறோ என்ற முறையில் அலச ஆரம்பித்தார்.
மேலே அறைக்குள் சென்ற ஆதி குளியலறைக்குள் புகுவதற்கு முன்பு வேகவேகமாக வந்த நிரலி, அவனின் கையில் பெரிய கண்ணாடி குவளை நிறைய ததும்ப அடங்கியிருந்த பழரசத்தை திணித்தாள்.
“இதை குடிச்சிட்டு போய் குளிங்க மாமா.”
தம்ளரையும், அவளையையும் மாற்றி மாற்றி பார்த்த ஆதி,
சிரியாது, “இது கொஞ்சம் கொஞ்சமா இருக்கே பேபி” என்க,
“அய்யோ! போதாதா மாமா… இதை குடிச்சிட்டே இருங்க, இன்னொன்னு கொண்டுவரேன்” என்று திரும்பிய நிரலியின் கை பிடித்து இழுத்து தனக்குள் நிறுத்தியவன், அவளை ஒற்றை கையால் அணைத்து பிடித்தான்.
“என்ன மாமா?”
“நான் கிண்டல் பண்றது உனக்கு புரியலையா பேபி?”
அப்போதுதான் ஆதி சொல்லியதை நினைத்து பார்த்தவள் அவனின் கேலி புரிந்து அசடு வழிய,
“மை கியூட் பேபி” என்று அவளின் மூக்கை பிடித்து ஆட்டினான்.
“நீங்க எதுவும் சாப்பிடலன்னு உங்களை பார்த்ததும் தெரிஞ்சுது, அதான் குளிப்பதற்கு முன் இதை குடித்தால், கொஞ்சம் சோர்வு போகும். பிறகு வந்து சாப்பிடலாமேன்னு கொண்டு வந்தேன்.”
மெல்லொலியில் முகம் சுருக்கி அவள் கூறிய அழகில் அவன் சொக்கி நிற்க,
“குடிக்க முடியாதா மாமா! அவ்வளவு அதிகமாக இல்லையே?” என்று வருத்தமாக வினவினாள்.
அவளின் இத்தகைய தோற்றம், ‘சற்று நேரத்திற்கு முன்பு சந்தியாவிடம் பொங்கிய நிரலியா’ இதென்று ஆதிக்கே ஆச்சரியமாக இருந்தது.
மனைவியின் சிறு வருத்தத்தையும் தாங்க முடியாத ஆதி… ஒரே மூச்சில் குவளையை காலி செய்து அவளின் கையில் வைத்தான்.
‘கொஞ்சம் அதிகம் தான் பேபி.’ மனதோடு சொல்லிக்கொண்டான். உள்ளுக்குள் பழரசத்தில் நீச்சலடிப்பது அவனுக்குத்தானே தெரியும்.
மலர்ந்த முகத்துடன் அவனிடமிருந்து விலகி நடந்தவளின் பின், “லவ் யூ சோ மச் பேபி” என ஆதியின் குரல் ஒலித்தது.
ஆதியின் காதல் மொழியில் மயங்கியவள், அதனை வெளிக்காட்டாது அவன் புறம் திரும்பி…
“என்ன இப்போ திடீரென?” என்று வினவினாள்.
“கீழே நீ பேசியதுக்கு… சொல்லணும் தோணுச்சு.”
“அப்படியா… சரி, நான் போலாமா?”
“ம்… போலாமே!”
நிரலி திரும்பி நடக்க மீண்டும் காதலை மொழிந்தான்.
“மாமா…” இடுப்பில் கை வைத்து அவனை பார்த்து முறைத்து நின்றாள்.
“என்னன்னு தெரியல பேபி… சொல்லிட்டே இருக்கணும் போலிருக்கே!”
“ஆஹாங்…, சரி சொல்லிட்டே இருங்க” என்றவள், ஆதியை சொல்ல விடாது அவனின் இதழ்களை தன் இதழ் கொண்டு மூடியிருந்தாள்.
அவளாக முன்வந்து கொடுக்கும் முதல் முத்தம். ஆதி மொத்தமாக கரைந்து போனான்.
மெல்ல விலகியவள் நேர் பார்வையாக அவனை நோக்கி காதல் அம்பு வீசிட,
“தேன்க்ஸ் பேபி” என்றான் ஆதி.
“எதுக்கு?”
“என்மீது உனக்கிருக்கும் நம்பிக்கைக்கு.”
“ஹோ…” என்றவள் அமைதியாக வெளியேற முனைய,
“என்ன பேபி எதுவும் சொல்லாமல் போகிறாய்” எனக் கேட்டான் ஆதி.
“உங்களுக்குள் என்னை பார்க்கிறேன் மாமா. அதனால் நீங்க வேறு, நான் வேறென என்னால் பிரித்து பார்க்க முடியவில்லை. உடல் இரண்டாக இருந்தாலும், நம்ம உயிர் ஒன்னுன்னு நினைக்கிறேன் மாமா. அதனால் தான் சந்தியாவும், அம்மத்தாவும் அவ்வளவு சொல்லியும்… என்னால் உங்களை சந்தேகிக்க முடியவில்லை.
ஏன்? நீங்களே சொல்லியிருந்தாலும். சொல்லுவது உண்மையாயென்று ஒருநொடி யோசித்திருப்பேன்.
உங்களை ஒரு நொடி கூட தவறாக எண்ண மாட்டேன்.
ஆனால், நீங்க… எனக்கு நன்றியெல்லாம் சொல்லி…
போடா தேவா!” என்று ஒரு மாதிரியான கலங்கிய குரலில் கூறி அங்கிருந்து வேகமாக வெளியேறியிருந்தாள்.
நிரலியின் அன்பின் ஆழம் கண்டு ஆதி ஸ்தம்பித்து விட்டான்.
‘என்ன மாதிரியான அன்பு இது.’ நீதான் நானென பார்க்கும் துணை கிடைப்பது அரிதல்லவா! தன்னைப்போல் எண்ணி நம்பும் மனைவியின் அன்பின் ஆழம் உணர்ந்தான்.
மனைவியிடத்தில் கொள்ளை கொள்ளையாய் காதல் ஊற்று பெருக்கெடுத்தது. அவளின் காதல் இதயத்தை மலைக்கச் செய்தது.
‘லவ் யூ பேபி.’ அவனின் இதயம் ஒவ்வொரு துடிப்பிற்கும் காதலை மொழிந்தது.
நேராக கிச்சனிற்குள் சென்ற நிரலி, வள்ளி அக்கா என்ன செய்கிறார் என்று பார்க்க… அவரோ வீட்டிற்கு ஆட்கள் வந்திருப்பதால் கடைக்குச் சென்று, நடப்பது, ஓடுவது, பறப்பது, நீந்துவது என அனைத்தையும் அள்ளி போட்டுக்கொண்டு வந்திருந்தார்.
“என்ன வள்ளி அக்கா, யாருக்கும் மிச்சம் வைக்கலை போலிருக்கே!”
நிரலியின் கிண்டல் புரிந்த வள்ளி,
“முதல்முறையா இந்த வீடு நிறைஞ்சிருக்கு பாப்பா… அதான் சந்தோஷத்தில், யாருக்கு என்ன பிடிக்குமோன்னு எல்லாமே வாங்கிட்டு வந்துட்டேன்” என்றார்.
ஆதி என்ற ஒருவன் மீது கொண்ட விஸ்வாசத்திற்காக அவனின் மொத்த குடும்பத்தின் மீது வைத்த அவரின் பற்றை நினைத்து நிரலி ஆச்சர்யம் கொண்டாள்.
“சரிங்கக்கா… எல்லாம் நீங்களே செஞ்சிடுங்க, மீன் குழம்பு மட்டும் நான் சமைக்கிறேன்” என்ற நிரலியிடம், “அதிலென்ன ஸ்பெஷல் பாப்பா?” என்று வினவினார் வள்ளி.
“மாமாக்கு மீன் குழம்புன்னா அம்புட்டு பிடித்தம் அக்கா” என்ற நிரலி, “ஆவி பறக்கும் சாதத்தில் சூடான மணக்கும் குழம்பை நல்லெண்ணெய் மிதக்க ஊற்றி, அதுக்கு தோதா வாழை இலை சுற்றி பொரித்த மீன் வறுவலை வைத்து சாப்பிடுவதென்றால் மாமாவுக்கு அவ்வளவு விருப்பம் வள்ளிக்கா… அவர் சாப்பிடுவதை பார்க்கவே செமய இருக்கும்” என்று ரசித்துக் கூறினாள்.
“அட போ பாப்பா… மீன் குழம்புன்னாவே தம்பி தொடாது. ஒருநாள் நான் செஞ்சு வைக்க, தம்பி தயிர் போட்டு சாப்பிட்டு போயிடுச்சு.” வருத்தமாக சொல்லிய வள்ளி தன்னுடைய வேலையில் கவனமானார்.
அவ்வளவு பிடித்த மீன் இப்போது ஏன் ஆதி சாப்பிடுவதில்லை என்று அறிந்திருந்த நிரலி, தன் கையினாலே ஆசை ஆசையாக கணவனுக்கு ஏற்றவாறு காரசாரமாக அம்மியில் அரைத்த மசாலா கலந்து குழம்பு வைத்தாள்.
“என்னடா அம்மு மீன் குழம்பு வாசம் தெருவே மணக்குது.”
தங்கையின் மகிழ்வான வாழ்க்கையை நேரில் கண்ட உற்சாகத்தோடு குரலிட்டவாறு நிரலியிடம் வந்தான் சூர்யா.
“இல்லையே” என்று அவசரமாக மொழிந்த நிரலி அடுப்பில் கலக்கிக் கொண்டிருந்த மீன் குழம்பு நிறைந்த கடாயினை வேகமாக மூடி போட்டு மறைத்தாள்.
அதனை கண்டுகொண்ட சூர்யா…
“நான் பங்கெல்லாம் கேட்கமாட்டேன். உன் மாமாவுக்கே மொத்த குழம்பையும் ஊத்து” என்றவன் மூச்சினை நன்கு இழுத்து வாசம் பிடித்து,
“வாசனையையும் மூடி வை… இல்லைன்னா தாத்தாவும், பெரியப்பாவும் ஒரு சொட்டு மிச்சம் வைக்காதுங்க” என்றான்.
“நீ சொல்லுறது சரிதான் சூர்யா” என்றவள், கொதித்து சுண்டிய குழம்பினை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி மறைத்து வைத்தாள்.
“எனக்கு ரொம்ப நல்லா தெரியுது அம்மு.”
“என்னடா?”
“பின்னால நீ நல்லா கஞ்சி ஊத்துவத்தா… தங்கச்சி வீடுன்னு நாளை பின்ன வந்தால் தண்ணீகூட மிஞ்சாது போலிருக்கே!” என்று அந்த காலத்து நடிகைகள் போல் வாயில் கை வைத்து வராத கண்ணீர் குரலில் கூறினான் சூர்யா.
“கிண்டலாடா பண்ற…” என சூர்யாவின் தோளில் அடி வைத்த நிரலி, “எல்லாம் உனக்கு பிச்சதும்தான் செஞ்சு வச்சிருக்கு. ஒருமுறை மீன் முள் தொண்டையில் மாட்டி, தாத்தா விரல்விட்டு எடுத்ததிலிருந்து மாமா மீனே சாப்பிடுவதில்லை போல்… வள்ளிக்கா சொன்னதுல தெரிஞ்சிகிட்டேன். அதான் அவருக்கு ரொம்ப பிடிச்சதேன்னு பார்த்து பார்த்து செய்து எடுத்து வைத்தேன்” என்றாள்.
“அவருக்கு மீன் முள்ளெடுத்து சாப்பிடத் தெரியாமல் தானே சாப்பிடுவதே இல்லை. இப்போ மட்டும் எப்படி சாப்பிடுவார்?”
“அதெல்லாம் சாப்பிடுவார். அதை சாப்பிடும்போது பார்” என்ற நிரலி, அனைவருக்கும் தன் கையினால் பரிமாறி உணவு உண்ண வைத்தாள்.
மகள் வாழப்போகிற வளமான வாழ்க்கை கண் முன்னேத் தெரிய செல்வியின் தாய் உள்ளம் வயிரோடு சேர்ந்து நிறைந்தது. வேலுவிற்கு ஆதியை பற்றி, அவனின் செயல்களுக்கு பின்னாலிருக்கும் அனைத்து காரண காரியங்களும் தெரியுமென்பதால் அவருக்கு எவ்வித கலக்கமோ வருத்தமோ இல்லை. ஆனால், மகளின் மகிழ்வு… மாலை தான் கண்ட அவளின் மற்றொரு பரிமாணம் ஆகியவற்றை எண்ணி ‘அவளின் வாழ்வை அவள் பார்த்துக்கொள்வாள்’ என தந்தையாய் நம்பிக்கை கொண்டார்.
அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேச்சோடு கலகலப்பாக உணவு உண்டு கொண்டிருக்க… அங்கு தான் மட்டும் அந்நியப்பட்டு தனித்து ஒதுக்கப்பட்ட தனிமையை உணர்ந்தார் கற்பகம்.
அந்த கூட்டிலிருந்து திசைமாறி நின்ற பறவையாக தவித்தார். அவரின் செயல்களின் வீரியம் தன் குடும்பத்தாரின் ஒதுக்கத்தில் புரிந்து கொண்டார்.
கடைசி கால தனிமையின் கொடுமையை அந்த சில நிமிடங்களிலேயே தெரிந்துகொண்ட கற்பகம் தன் குடும்பத்துக்கு எதிராக தான் செய்ய நினைத்த காரியத்தை நினைத்து வெட்கியவராக தன்னனுடைய அறைக்குள் புகுந்து கொண்டார்.
அனைவரும் உண்டு முடிக்கும் வரையில் கூட ஆதி கீழிறங்கி வரவில்லை. நிரலியின் கண்கள் நொடிக்கு ஒருமுறை படிகளை கடந்து அவளின் மூடிய அறை கதவில் படிந்து மீண்டது.
அவளை அவதானித்த சூர்யா,
“எங்களோடு சேர்ந்து சாப்பிட்டால் ரொமான்ஸ் இருக்காதுன்னு மாமா நாங்களெல்லாம் ரூமுக்குள் போறதுக்காக காத்திருக்காரோ என்னவோ!” என்க, “ச்சீ… போடா” என்று அழகாய் வெட்கினாள் நிரலி.
கை கழுவி வந்த வேலு, சூர்யாவின் தந்தைக்கு அழைத்து வருணை அவர்களோடு தங்க வைத்துக்கொள்ளுமாறு கூறி, இங்கு நடந்தவற்றை அவரோடு பகிர்ந்து கொண்டவாறு அறைக்கு சென்றிட, செல்வியும் அவர் பின்னோடு சென்றுவிட்டார்.
“கற்பகமா இப்படி… இப்பவே சந்தியாவை பற்றி தங்கமணியிடம் சொல்லி அவனை நாலு கேள்வி கேட்கிறேன். நம்ம நிரலியை, அவன் பொண்ணு வாழ வேண்டிய இடமுன்னு எம்புட்டு பேச்சு பேசியிருப்பான்” என்று வேலு சொல்லியதை கேட்ட ராசு கொதித்து விட்டார். விடயமறிந்த கவிதாவுக்கும் தன் அம்மம்மா மீது கோபம் எழுந்தது.
ஆனால் வேலு, “அனைத்தையும் ஆதி பார்த்துக்கொள்வான்” என்று அவர்களை அமைதி படுத்தினார்.
வரவேற்பறையில் அமர்ந்து சூர்யா டிவி பார்த்துக்கொண்டிருக்க, சாப்பிட்ட பிறகு சற்று நடந்து வரலாமென தோட்டத்திற்கு சென்ற மூர்த்தியும், காமாட்சியும் அப்போதுதான் உள் வந்தனர்.
சூர்யாவின் அருகில் அமரச்சென்ற மூர்த்தியின் கையில் உணவு அடங்கிய தட்டினை அளித்த நிரலி,
“அம்மத்தாவை சாப்பிட வையுங்கள் தாத்தா” எனக் கூறினாள்.
“நீ திருந்தவே மாட்டியா அம்மு.” சூர்யா கத்தியிருந்தான்.
அப்போதும் நிரலி கற்பகத்திற்கு சாப்பாடு கொண்டு போய் கொடுக்க சொல்ல,
“உன் வாழ்க்கையையே அழிக்க நினைச்சவங்க… உன்னை வார்த்தையாலே வதைத்தவங்க, அவங்களுக்கு பாவம் பார்க்குற” என்று வெடித்தான் சூர்யா.
“அவங்க பெரியவங்க சூர்யா… விட்டுக்கொடுக்கிறதால நான் குறைந்துவிட மாட்டேன்.”
“அப்போ மாமாவை அவங்க சொல்லுறங்கன்னு சந்தியாவுக்கு விட்டுத்தறியா?”
சூர்யா கேட்டு முடிப்பதற்குள் நிரலியின் கை அவன் கன்னத்தில் பதிந்திருந்தது.
“யாராவது கேட்டால் யோசிக்காமல் என் உயிரைக்கூட கொடுப்பேன். ஆனால், என் மாமாவை… ம்ஹூம்…” ஒரு விரல் நீட்டி சொல்லியவள் முடியாது எனும் விதமாக விரலை இடவலமாக ஆட்டிக் காண்பித்தாள்.
“இதை அடிக்காமல் சொல்லியிருக்கலாம்.” சூர்யா கன்னத்தை தேய்த்துக் கொண்டான்.
“திரும்ப நீ இதை சொல்லக்கூடாதில்ல அதுக்குத்தான்” என்ற நிரலி மூர்த்தியை கற்பகத்தின் அறைக்கு அனுப்பிய பின்னர் மாடி நோக்கி நகர்ந்தாள்.
பாதி படிகளிலேயே ஆதி கீழிறங்கி வர,
“குளிச்சிட்டு வர இவ்வளவு நேரமா?” என்றவாறு நிரலியும் அவனுடன் சேர்ந்து இறங்கி வந்தாள்.
“ஆர்.கே சாரிடமிருந்து போன்… பேசிட்டு வர டைம் ஆகிருச்சு.”
“ஹோ… சரி வாங்க மாமா, சாப்பிடலாம்” என்றவள் ஆதியை கையோடு அழைத்துச் சென்று உணவு மேசை இருக்கையில் அமர வைத்தாள்.
“எல்லாரும் சாப்பிட்டாச்சா?”
“ஹ்ம்… ஆச்சு மாமா, மணி பாருங்க. இந்நேரம் நம்ம கிராமத்தில் எல்லோரும் கதவடைச்சிருப்பாங்க.”
“8.30 ஆச்சா?”
“ம்.”
கிச்சனிற்குள் சென்ற நிரலி ஆதிக்கென்று எடுத்து வைத்த மீன் குழம்பை கொண்டு வந்து மேசையில் வைக்க,
“என்ன அம்மு ரொமான்ஸ் ஆரம்பம்மா” என்ற சூர்யாவை, தன் வலது உள்ளங்கையை காண்பித்து அடக்கினாள்.
சற்று நேரத்திற்கு முன்பு தங்கையிடம் வாங்கிய அடி நினைவுக்கு வர சூர்யாவும் நல்ல பிள்ளையாக டிவியில் கண் வைத்துக் கொண்டான்.
“சின்னஞ்சிறுசுங்க ஏதோ பண்ணுதுங்க உனக்கு என்னடா” என்ற காமாட்சி, “அத்தை அறையிலிருந்து அவங்க(மூர்த்தி) வந்ததும் பிடிச்சு வச்சு அரட்டை அடிக்காமல் தூங்க அனுப்பு” என்று உறங்கச் சென்றார்.
ஆதி அலைபேசியையே நோண்டிக் கொண்டிருக்க,
“சாப்பிடும் நேரத்திலும் இது தேவையா” என்றாள் நிரலி.
“மாமா உன்னை பார்க்கலன்னு வருத்தமா அம்மு.” காதை இவர்கள் பக்கம் வைத்திருந்த சூர்யா கேட்க,
“என்ன சூர்யா, அடி பத்தலை போலிருக்கே” எனக்கூறி ஆதி சிரித்தான்.
“விட்டால் நீங்க இன்னொன்னு கொடுப்பீங்க போல” என்ற சூர்யா, “நான் இங்கு ஆளேயில்லை” என்று அறைக்குள் ஓடி விட்டான். ஆதியின் சிரிப்பொலி அதிகரித்தது.
“லவ் யூ பேபி.”
“இப்போ இதெதுக்கு, சூர்யாவை அடிச்சதுக்கா?”
“ம்ஹூம்… சூர்யாவிடம் நீ சொன்ன பதிலுக்கு” என்றவன் வீட்டை சுற்றி ஒரு பார்வை பார்த்து, “பேபி கொஞ்சம் கிட்ட வா” என்றான்.
“ஏதோ ரகசியமாக சொல்ல நினைக்கிறான்” என்று நிரலியும் அமர்ந்திருந்தவனுக்கு வாகாக குனிய, மனைவியின் கன்னத்தில் தன் இதழ் கொண்டு நச்சென்று ஒன்று வைத்தான்.
தண்ணீர் கொண்டு போகலாமென்று அறைக்குள் சென்ற சூர்யா மீண்டும் அங்கு வர, தான் கண்ட காட்சியில்…
“நானிங்கு எதுவும் பார்க்கவில்லை” என்று சத்தமாக சொல்லி ஓடிவிட்டான்.
“அச்சோ போங்க மாமா, சூர்யா இதை சொல்லியே ஓட்டுவான்” என்று சிணுங்கியவளை தன் முத்தத்தால் மேலும் சிணுங்க வைத்தான்.
“முதலில் சாப்பிடுங்க” என்றவள் அவன் முன் தட்டினை எடுத்து வைக்க, ஸ்வேதாவிடமிருந்து அழைப்பு வந்தது.
அழைப்பிற்கு செவி மடுத்தவன், ஸ்வேதாவால் சொல்லப்பட்ட செய்தியால் உணவினை மறுத்தவனாக இருக்கையிலிருந்து எழுந்துவிட்டான்.
“பேபி நான் வந்து சாப்பிடுகிறேன்” என்றவன் அவளை பாராது வெளியேறினான்.
Epi 22
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
13
+1
1
+1
நிரலி டெரர்
Thank you kaa 🩷