அத்தியாயம் 20 :
“இப்போ எதுக்கு சூர்யா சென்னைக்கு போகிறோம்.”
காரணம் எதுவும் சொல்லாது அவசரமாகத் தங்களை கிளப்பிக்கொண்டு சென்னை நோக்கி தங்களை இழுத்துச் செல்லும் சூர்யாவிடம் புரியாது வினவினார் மூர்த்தி. காமாட்சியும் அதே வினா அடங்கிய முகத்துடன் வேலுவை பார்க்க,
என்னவென்று சொல்வது தெரியாது,
“நிரலி பிரச்சனை சொன்னாலாப்பா” என்றார் சூர்யாவிடம்.
அப்போதும் சூர்யா பதிலேதும் பேசாது, காரினை செலுத்திக் கொண்டே, மௌனமாக யோசனையில் இருக்க…
“இப்போ சொல்லப் போறீயா இல்லையா சூர்யா?” என அவனின் தோளை குளுக்கிக் கேட்டார் செல்வி.
“அங்கு, ஆதி மாமா வீட்டில் சந்தியா!”
வேறெதுவும் அவன் சொல்லவில்லை. மீண்டும் யோசனைக்கு சென்று விட்டான்.
‘மாமாவை கட்டிக்கவே முடியாதென்று வீட்டை விட்டு வெளியில் போனவள், இப்போ அங்கெப்படி?
கிழவி எப்போ அவளோடு சேர்ந்துச்சு?
ரெண்டு பேரோட திட்டமும் என்னவாக இருக்கும்.’
மனதில் நினைத்தவனுக்கு பதில் கிடைக்கவில்லை. ஆனால் கற்பகத்தின் திட்டம் பெரியதென்று மட்டும் அவனின் உள்ளுணர்வு அறிவுறுத்தியது.
“சந்தியா அங்க வந்திருக்கான்னா, நீ தங்கமணியையும், அம்பிகாவையும் தானடா முதலில் கூப்பிட்டிருக்கணும்.” மூர்த்தி கேட்க,
“எதுக்கு? அம்மு வாழ்க்கையை புதை குழியாக்க அவங்களும் சேர்ந்து திட்டம் போடுவதற்கா?” அவன் கேட்ட காட்டத்தில் மூர்த்தியே அரண்டு விட்டார்.
“அப்போவே அந்த கிழவிக்கு ஆதி மாமா முகவரி கொடுக்காதீங்க சொன்னேன். கேட்டீங்களா?” வேலுவை பார்த்து உறுமியவன், “அதுங்களால என் அம்முக்கு எதாவது ஒன்னு ஆச்சு, அவ்வளவுதான்.”முயன்று தன் கோபத்தை அடக்கினான்.
“சந்தியாவால் நிரலிக்கு என்னப்பா பிரச்சனை வந்திடும்.” செல்வி அப்பாவியாக வினவினார்.
“உன் மருமகன் மேல் சந்தியா ஆசைப்படுறாள். கட்டி வைக்கிறியா?” அவனின் குரலில் நக்கல் இருந்ததோ!
“என்னப்பா சொல்லுற?”
“செல்விம்மா உனக்கு நிஜமாவே புரியலையா?” என்று ஆற்றாமையுடன் கேட்டவன்,
“இந்த கிழவி அங்கு போனதே அம்முவை விரட்டிட்டு சந்தியாவை மாமாக்கு ஜோடி சேர்க்கத்தான்” என்றவன், நிரலியுடன் பேசும்போது தன் செவியில் விழுந்த சந்தியா மற்றும் கற்பகத்தின் வரிகளைக் கூற,
வேலுவைத் தவிர மற்ற மூவரும் அதிர்ந்தனர்.
“ஆதியை பிடிக்காமத்தானே சூர்யா, சந்தியா போனாள். இப்போ எப்படி?” காமாட்சியின் கேள்விக்கு சூர்யா பதிலளிக்கும் முன் வேலு பதிலளித்திருந்தார்.
“ஆதியை வேண்டாமென்று சொன்னவளுக்கு ஏ.டி’யை பிடித்திருக்கலாம்.”
“யாரிந்த ஏ.டி?”
சூர்யா உட்பட நால்வரும் ஒரு சேர கேட்க…
சீரியல்களில் காண்பிப்பதை போல் ஒவ்வொருவரின் முகத்தின் மீது மூன்று மணித்துகள்களுக்கு தன் பார்வையை நிலைக்கச் செய்த வேலு,
“ஆதி தேவ்” என்று அழுத்தமாக சொல்ல… ‘ஏ.டி’க்கான விளக்கம் சூர்யாவுக்கு புரிந்தது.
மற்ற மூவரும் விளங்கா பார்வை பார்க்க,
ஆதியின் முழுப்பெயரின் சுருக்கம் தான் ஏ.டி என்பதையும், தொழிலில் அவனின் உயரத்தையும், வளத்தில் அவனின் செழுமையையும் வேலு கூறினார்.
ஆதியின் நிலையை அரிந்தவர்களுக்கு பிரமிப்பு.
அப்படி உயர்ந்த நிலையில் இருப்பவனின் அன்றைய கோபம் அவர்களுக்கு இப்போது நியாமாகவே பட்டது. ஆதி அன்று அவமானமென்று ஆடிய தாண்டவம் கூட இப்போது சரியெனவேத் தோன்றியது.
“என்ன உசந்த நிலையிலிருந்து என்ன புண்ணியம்… கட்டனவக்கூட வாழத் தெரியலையே!” காமாட்சி வருத்தமாகக் கூறினார்.
“அதெல்லாம் என் மருமகன், என் மகளை உள்ளங்கையில் வைத்து தாங்கு தாங்குன்னு தங்குவார்” எனச் சொல்லிய வேலுவை சூர்யா அர்த்தமாக பார்க்க,
‘இவன் எதுக்கு நம்மை இப்படி குறுகுறுன்னு பார்க்குறான். எதாவது போட்டு வாங்கிடுவானோ?’ எண்ணியவர் இருக்கையில் நன்கு சாய்ந்து கண்ணை மூடிக்கொண்டார்.
வேலுவின் செயலில் சூர்யாவின் சந்தேகம் ஊர்ஜிதமாகியது.
‘மாமா, பெரியப்பா… இவங்க ரெண்டு பேருக்குள்ள ஏதோ ரகசியம் அடங்கியிருக்கு.’ நினைத்தவன் சாலையில் கவனமானான்.
வீட்டிற்கு ஆதி சென்று கொண்டிருக்கையில் அவனின் அலைபேசி தன்னுடைய இருப்பை தெரிவித்தது.
அழைத்தது வேலு என்றதும், அலைபேசியை காதில் வைத்தவன்…
“சொல்லுங்க மாமா?” என்றான்.
“ஆதிப்பா… இன்னும் ஒரு மணி நேரத்தில் நாங்க அங்கிருப்போம்.”
“நாங்கன்னா?”
“என்னோடு மாமா, அத்தை, செல்வி, சூர்யா.”
“ஓகே மாமா… நானும் வீட்டிக்குத் தான் போயிட்டு இருக்கேன். வாங்க!” என்ற ஆதி, நிரலியுடன் இணைந்த பிறகு பெற்றோரின் மீதுள்ள கோபம் நியாயமற்றதாக நினைத்து… நீண்ட மாதங்களாக பார்த்திட தவித்த உறவுகளின் வருகையை சந்தோஷமாகவே ஏற்றான். அதனால் என்ன திடிரென்று என்ற காரணத்தை கேட்காது விட்டுவிட்டான். அவர்கள் பையன் வீட்டிற்கு வருகைத்தர காரணம் வேண்டுமோ!
அந்நேரம் கூட நிரலியின் முகம் மனதில் தோன்ற, லவ் யூ சொல்லிக்கொண்டான். அவளுக்கு கேட்டிருக்குமென்று அவனின் இதயம் சொல்லியது.
அப்போது நிரலியும் ஆதி வந்து விட்டதாக எண்ணி மேலிருந்து கீழிறங்கி வந்து வாயிலை நோக்க, ஆதியின் வருகையின்றி ஏமாற்றம் அடைந்தாள்.
மாலை ஆகியிருந்தது.
வரவேற்பறை நீள்விருக்கையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த சந்தியாவும், கற்பகமும்… நிரலி ஓடிச்சென்று வெளியில் பார்த்ததையும், பின் முகம் வாடி வருவதையும் ஒருவருக்கொருவர் அர்த்தமாக பார்த்துக் கொண்டனர்.
நேராக கிச்சனிற்குள் வள்ளியிடம் சென்று நிற்க,
“பேசாமல் தம்பிக்கு ஒரு போன் போடு பாப்பா” என்றார் வள்ளி.
மறுத்து தலையசைத்தவள் மேடை மீது ஏறி அமர்ந்து வள்ளி செய்வதை பார்த்திருந்திருந்தாள். சில நிமிடங்களுக்கு பிறகு இரும்பு கேட்டினை திறக்கும் சத்தம் கேட்க,
மேடையிலிருந்து குதித்து இறங்கியவள், ஆதியை எதிர்பார்த்து வேகமாக ஓடினாள். ஆதி வந்தால் காரின் ஒலி கேட்கும் என்பதை மறந்து போனாள்.
ஓடிச் சென்றவளின் முகம், அங்கு மாமி வருவதை கண்டதும் சுருங்கி விட்டது.
“ஏண்டீம்மா உன் முகம் அப்படி போகுது… நான் வந்தது பிடிக்கலையோ?” என்ற மாமிக்கு மறுத்து தலையசைத்தவள்,
“மாமா வந்துட்டாங்கன்னு நினைச்சேன் மாமி” என்றவள், “நீங்க வாங்க உள்ளே” என அவரையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றாள்.
“பால் பாயாசம் பண்ணேண்டிம்மா… அதான் கொடுத்துட்டு போலாமேன்னு வந்தேன்.” மாமி நிரலியிடம் சொல்லிக்கொண்டே வள்ளியிடம் கிண்ணத்தை கொடுத்தார்.
கற்பகத்தை பார்த்த மாமி, “நான் அப்புறம் வரேன்” என்றவர், “ஆதி வரான்னு ஒவ்வொரு முறையும் இப்படி ஓடிண்டு இருக்காதே! கீழே விழுந்து வைக்கப்போற” என்றவர் வெளி நோக்கி நகர,
“கட்டினவ நினைப்பு இருந்தாத்தானே, ஆம்பளைக்கு வீட்டுக்கு போகணும் நினைப்பு வரும்.” கற்பகம் ஜாடை பேசினார்.
நிரலிக்கோ பதில் பேச வேண்டுமா வேண்டாமா ஒன்றும் தெரியவில்லை. மௌனமாக மாமியை ஏறிட்டாள். மாமியோ நிரலியை சங்கடமாகப் பார்த்தார்.
“ராத்திரிக்கு போன புருஷன்… இன்னைய ராத்திரி வரப்போவுது இன்னும் வரலன்னா என்ன அர்த்தம், இவ(ள்) நினைப்பே இல்லைன்னு தானே அர்த்தம்” என்ற கற்பகம், சந்தியாவை பார்த்து… “இதே என் பேத்தியை கட்டியிருந்தால் இப்படி கண்ட நேரத்தில் கிளம்பி வெளிய போயிருப்பானா? பொண்டாட்டி, புருஷன் மனசறிஞ்சு நடந்திருந்தால் அவன் ஏன் நேரம்கெட்ட நேரத்துல வெளியில போறான்” என்றவர் மேற்கொண்டு ஏதோ பேச வரும்முன் அவரின் பேச்சை நிரலியின் குரல் தடுத்து நிறுத்தியிருந்தது.
“அம்மத்தா…”
ஆதி எதற்காக வெளியில் சென்றான் என்கிற உண்மையான காரணம் தெரியாமலே, கற்பகம் வேறொன்றை அர்த்தமாக வைத்து பேச… தங்களின் தாம்பத்யத்தையே அவர் கேலி செய்வதை சகிக்காத நிரலி வீடே அதிர கத்தியிருந்தாள்.
கற்பகத்தின் பேச்சினால் முகம் சுளித்தபடி இருந்த மாமி நிரலியின் அருகில் வந்து அவளை ஆசுவாசப்படுத்த முயற்சித்தார். நிரலியின் சத்தம் கேட்டு கிச்சனிலிருந்து வெளிவந்த வள்ளி நடப்பது புரியாது பார்த்தார்.
“என்ன சத்தம் எல்லாம் பலமா இருக்கு?” கற்பகம் எகிறினார்.
“என் புருஷனை பற்றி பேசினால் அப்படித்தான் சத்தம் போடுவேன். அவர் எங்க வேணாமானாலும் போயிருக்கலாம். அதைப்பற்றி கவலைப்பட நானிருக்கேன்.”
நிரலியின் வார்த்தையில் கற்பகத்தின் கோபம் அதிகரித்தது.
நிரலி பேசியதை வைத்து ஆதி எங்கு சென்றானென்று அவளுக்கு தெரியாதென்பதை தெரிந்து கொண்ட சந்தியா புதிய திட்டம் ஒன்றைத் தீட்டினாள்.
ஏற்கனவே ஆதி இரவு பேசியது அவ்வளவும் நிரலியால் தானென்று அவள் மீது கோபமாக இருக்கும் சந்தியா இச்சந்தர்பத்தை பயன்படுத்தி, ஆதியின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தி அவளை வீட்டை விட்டு வெளியேற்ற நினைத்தாள்.
“இம்புட்டு பேசுறியே… அவன் எங்கு போனான்னு உனக்குத் தெரியுமா?”
கற்பகத்தின் கேள்வியில் நிரலி பதில் தெரியாது அமைதியாக நிற்க,
“புருஷன் போன இடம் தெரியல, இதுல வாய் மட்டும் நீளுது. அடுத்தவ வாழ்க்கையை வாழ நினைச்சா இப்படித்தான்” என்று நொடித்தவரிடம்,
“ஏம்மா இப்படியெல்லாம் பேசறீங்க, நிரலியும் உங்க பேத்திதானே?” என மாமி ஆற்றாமையாக வினவினார்.
“யார் யாருக்கு…” வேகத்தில் சொல்ல வந்த கற்பகத்தின் முன் செல்வியின் முகம் நினைவுவர, தான் பேச வந்ததை நிறுத்தி… “இது சந்தியா வாழ வேண்டிய வாழ்க்கை, இவ பறிச்சிக்கிட்டா(ள்)” என்றாள்.
“இருந்தாலும் இப்போ ஆதியின் மனைவி நிரலி தானே!” என்ற மாமியை உருத்து விழித்த கற்பகம்,
“பாயசம் தானே கொடுக்க வந்த… அந்த வேலையை மட்டும் பார்” என்க, நிரலியின் கையை அழுத்தி பிடித்த மாமி அடுத்த கணம் வெளியேறியிருந்தார். போவதற்கு முன் வள்ளியை அர்த்தமாக பார்த்துச் சென்றார். வள்ளியும் புரிந்தது எனும் விதமாக, நிரலியின் அருகில் அவளுக்குத் துணையாக நின்றார்.
அடுத்த சில நிமிடங்கள் அமைதி நிலவ, அறைக்கு செல்ல முனைந்த நிரலியின் முன் கை நீட்டி தடுத்த கற்பகம்,
“அது சந்தியா வாழ வேண்டிய அறை, நீயெதுக்கு போற” என்க, அவரின் கேள்வியில் நிரலி விக்கித்து நின்றாள்.
“மாமா என் கணவர்.” நிரலி திணரலுடன் மொழிய,
“அப்புறம் எதுக்கு அவர் என்னைத்தேடி ராத்திரி வேளையில் வந்தார்” என்ற சந்தியா, இரவு மருத்துவமனையில் சந்தியா ஆதியின் அருகில் நெருங்கி அமர்ந்திருந்த போது அவளின் தோழியால் தெரியாமல் எடுக்கப்பட்ட புகைப்படத்தை அலைபேசியின் வழியாக நிரலியின் முன் நீட்டினாள்.
புகைப்படத்தில் குறிப்பிட்டிருந்த நேரம் மற்றும் தேதியை சந்தியா சுட்டிக்காட்டிட நிரலி அதிரவெல்லாம் இல்லை.
மார்பிற்கு குறுக்கே கையினை கட்டிக்கொண்டு சந்தியாவை பார்த்து நிமிர்ந்து நின்றாள் நிரலி.
அவளின் தோரணையை கண்டு அதிசயத்த கற்பகம்,
“தாலி கட்டுனவன் இன்னொரு பொண்ணு கூட இருக்கான் தெரிஞ்சும் இப்படி திமிரா நிக்கிறியே நீயெல்லாம் என்ன பொண்ணு” என்றார்.
அந்த வார்த்தை நிரலியை நிலைகுலையச் செய்யுமென்று கற்பகம் எண்ண, நிரலியிடத்தில் சிறு புன்னகைத் தோன்றி மறைந்தது.
“இங்க பாரு நிரலி… மாமா என்னைத்தான் கட்டிக்க விருப்பப்பட்டார். இப்பவும் தினமும் என்னை பார்க்க வந்துட்டு தான் இருக்கார். நைட் வந்தவர் காலையில் அப்படியே ஆபீஸ் போயிட்டார். இன்னைக்கு நைட்டும் கண்டிப்பா என்னைத்தேடி வருவார்.”
ராகவின் நிலைப்பற்றி அறிந்திருந்த சந்தியா இன்று இரவும் ஆதி வீட்டுக்கு வர மாட்டான் என நினைத்துப் பேசினாள். அப்படி வராமல் இருந்தால், தான் சொல்வது உண்மையென்று எண்ணி நிரலி சென்றிடுவாளென்று தப்பு கணக்கு போட்டாள். ஆனால் சந்தியா புகைப்படத்தை நிரலியின் முன் காட்டிய போதே ஆதி வந்துவிட்டான் என்பதை அங்கு யாரும் அறியவில்லை. சுவற்றில் சாய்ந்து நின்ற ஆதியை கவனிக்காத சந்தியா மேற்கொண்டு பேசினாள்.
“மாமா மனசில் நான்தான் இருக்கேன். அதனால, நீ இப்பவே இங்கிருந்து கிளம்பிடு.” சந்தியாவின் குரலில் அதிகாரம் தூள் பறந்தது.
“வாழ வேண்டியவங்களை இனியாவது வாழ விடு… சும்மா அவுங்க ரெண்டு பேத்துக்கும் ஊடால நிக்காதே!” சொல்லிய கற்பகத்தை நக்கலாக ஏறிட்ட நிரலி…
“அவ்வளவுதானா பேசியாச்சா” என இருவரையும் மாற்றி மாற்றி பார்த்து கேட்க,
“உன்னைவிட்டு அவளைத்தேடி அவன் போயிருக்கான் சொல்லுறோம். இப்போக்கூட கலங்காமல் அப்படியே இருக்க” என்றார் கற்பகம்.
“நான் ஏன் கலங்கனும்?”
நிரலியின் கேள்வியில் சந்தியாவும் கற்பகமும் ஆடிப்போயினர்.
சந்தியாவின் புறம் திரும்பிய நிரலி,
“மாமாவுக்கு உன்னை பிடிச்சிருக்கு… அதானே?” எனக் கேட்டதோடு, “அப்போ மாமா வந்ததும் என்னை பார்த்து சொல்ல சொல்லு நான் அடுத்த நொடியே இங்கிருந்து போயிடுறேன்” என்றாள்.
அதில் சந்தியாவுக்குத்தான் கிலி பிடித்தது.
‘ஆதி வந்தால் தான் இங்கிருக்க முடியாதே. அப்புறம் எப்படி அவரை சொல்ல வைப்பது. என்னைக் கண்டாலே கொன்னுடுவார்.’ சந்தியா மனதில் நினைக்க,
“மாமா உன் மேல் ஆசைப்படும் போது நீயெதுக்கு பயப்படுற… உனக்காக உன்னை பிடிச்சிருக்குன்னு என்கிட்ட சொல்லமாட்டாரா?” என எள்ளலாகக் கேட்ட நிரலி, “நிச்சயம் சொல்ல மாட்டார்” என்றாள். அவளின் குரலில் தான் எத்தனை அழுத்தம்.
“ஏன் சொல்ல மாட்டான்…?” என்ற கற்பகம், சந்தியாவிடம் “சொல்ல மாட்டானா?” என வினவினார்.
நேற்றிரவு நடந்த விடயம் தெரியாத கற்பகம், சந்தியா காட்டிய புகைப்படத்தை உண்மையென்றே நம்பினார். அதனால் வேகமாக வினவினார்.
“சொல்லுவார் அம்மத்தா… ஆனால், சந்தியாவை பிடிச்சிருக்குன்னு இல்லை… இந்த நிரலியை பிடிச்சிருக்குன்னு தான் சொல்லுவார்.”
நிரலியின் பதிலில், கற்பகம் “நினைப்புத்தான்” என்க…
“நினைப்புத்தான் அம்மத்தா” என்று அவருக்கே திருப்பி கொடுத்தவள்,
“மாமா உன்னைத்தேடி வந்ததாகவே இருக்கட்டும்…
உன்னைத்தேடி அவர் வராருன்னா… அது அக்கா பொண்ணுங்கிற நினைப்பில் மட்டும் தான் இருக்கும்.
மாமா உன் மேல் பிரியம் வச்சிருக்காருல்ல… அப்புறம் ஏன் அவர் வீடு எங்கிருக்குன்னு கூட உனக்குத் தெரியல?”
நிரலியின் கேள்வியில் சந்தியாவின் முகம் கருமை படர்ந்தது.
“சரி அதைவிடு… மாமா தான் உன்னை படிக்க வைக்கிறார் அம்மத்தா சொன்னாங்க, அப்போ உன் மேல் கோபம் எதுவுமில்லை… இன்னமும் விருப்பம் இருக்கிறதாலதான் செய்யிறாருன்னு அவங்க நினைப்பு.
ஆனால், நீயென்றில்லை… உன்னிடத்தில் வேறு யாராக இருந்தாலும் மாமா படிக்க உதவி செய்திருப்பார். அதுவும் நீ அவருடைய அக்கா பொண்ணு. படிப்பு மீதான உன்னுடைய ஆர்வத்தை அறிந்தவர், உன் மேல் கோபம் இருந்தாலும் இல்லையென்றாலும்… படிக்க வைத்திருப்பார்.”
நேற்று ஆதி சொல்லிய அதே பதில். வார்த்தைகள் தான் வேறு. அர்த்தம் ஒன்று தான். சந்தியாவுக்கு அவர்களின் மன ஒற்றுமை ஆத்திரத்தையே உண்டாக்கியது.
“அப்புறம்…” யோசிப்பது போல் பாவனை செய்த நிரலி,
“ஆங்க்… நீ காட்டிய ஃபோட்டோ உண்மையாகவே இருக்கட்டும்… அதனால எனக்கென்ன!” அசால்ட்டாக தோளை குலுக்கினாள்.
“புருஷன் பொண்டாட்டியா வாழ்ந்திருந்தால் தானே. அப்படியில்லைன்னா இப்படித்தான் எவக்கூட போனாலும் கண்டுக்காமல் இருக்கத் தோணும்.” கற்பகம் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்த நினைத்தார். ஆனால் அவரின் எண்ணம் ஈடேறபோவதில்லை.
இவ்வளவு நேரமும், ஒரு கால் பாத்தினை பின்னோக்கி சுவற்றில் பதித்து, கைகளைக் கட்டிக்கொண்டு மனைவியின் பதிலடியை ரசனையாக பார்த்துக் கொண்டிருந்த ஆதியிடம், அடுத்து அவள் என்ன பதில் கொடுப்பாளென்று சுவாரஸ்யம் மேலோங்க பார்த்திருந்தான்.
கற்பகத்தின் வார்த்தைக்கு மென்மையாக புன்னகைத்த நிரலி, அவரை நோக்கி…
“கணவன் மேல் அன்பில்லாமல் வந்த அசட்டுத்தனமில்லை இது… அவர் என் மேல் வைத்திருக்கும் காதலினால் வந்த நம்பிக்கை… இது மத்தவங்களுக்கு சாதரணாமாகத்தான் தோன்றும்.”
இவ்விடத்தில் மனைவியை கைவளைவிற்குள் வைத்துக்கொள்ளும் வேகம் துளிர்த்தது ஆதியிடம்.
சந்தியாவை பார்த்தவள்,
“நீ ஒருத்தி மட்டுமல்ல, நூறு பொண்ணுங்க கூட மாமா இருந்தாலும்… அவர் நினைப்பு முழுக்க எம்மேலத்தான் இருக்கும். அவர் கண்ணு என்னை மட்டும் தான் தேடும். அவர் பக்கத்தில் நானிருந்தால் மட்டும் தான் நல்லாயிருக்குமென்று தோணும்.
நீ சொன்னதை அவரே வந்து சொன்னாலும் நான் இப்படித்தான் அமைதியா சிரிப்பேன்.
ஏன்னா மாமா மனசு முழுக்க நான் மட்டும் தான் இருக்கேன். என்னைத்தவிர இன்னொரு பொண்ணு நிழலைக்கூட அவரால் வேற கண்ணோட்டத்தில் பார்க்க முடியாது” என்று அழுத்தமாக, ஒவ்வொரு வார்த்தையிலும் உறுதி தெறிக்கும் வகையில் மொழிந்தாள்.
“இனி இந்த மாதிரி சப்பையா எதையாவது காட்டி என்னை ஏமாற்றலாமென்று நினைக்காதே… நான் ஆதிதேவ் மனைவி” என சந்தியாவிடம் கூறிய நிரலி, கற்பகத்திடம் திரும்பி, “ஏய் கிழவி உனக்கும் தான்” என்றாள்.
மூன்று நாள் சேர்ந்து வாழ்ந்ததிலேயே, ஆதியின் காதலை உணர்ந்து அவன்மீது அவள் கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கையை கண்டு வாய் பிளந்து நின்றிருந்த கற்பகம் நிரலியின் கிழவியில் வெகுண்டு,
“ஏய்” என்று கத்த…
“உனக்கு ஒவ்வொரு வாட்டியும் சொல்லணுமா? அன்று மாமா சொன்னது நினைவில்லையா?
கிழவியை கிழவின்னு தான் சொல்ல முடியும்” என்ற நிரலி,
“நீ செய்துகிட்டு இருக்க காரியத்துக்கு கிழவின்னு சொல்லுறதே என்னை பொறுத்தவரை அதிகம் தான்” எனக் கூறி கற்பகத்தை ஏளனமாக பார்க்க, அவர் அப்பார்வையில் கூசிப்போனார்.
வாயிலுக்கு அருகே நின்றிருந்த ஆதியையே பார்த்துக்கொண்டு உள்நுழைந்த வேலு, சூர்யா, செல்வி, மூர்த்தி, காமாட்சி…
நிரலி “ஏய் கிழவி” என்று சொல்லியது காதில் விழ ஆச்சரியத்தில் சிலையாகி நின்றனர்.
வந்தவர்களை வரவேற்கக்கூடத் தோன்றாது ஆதி மனைவியையே பார்த்திருக்க,
அடுத்து நிரலி பேசிய அனைத்தும் கேட்ட சூர்யா…
“இது உண்மையாவே அம்மு தானா?” என்று தனக்குத்தானே வாய்விட்டு கேட்டுக்கொள்ள,
“ஆதிதேவ் மனைவி” என்று தன்னைப்போல் கூறினான் ஆதி.
நிரலி, சந்தியா மற்றும் கற்பகத்தின் மீதே கவனம் வைத்திருக்க… அவர்களும் நிரலி மீதே கண்ணாக இருக்க வந்தவர்களை மூவருமே கவனிக்கவில்லை. கவனித்த வள்ளியையும் பார்வையாலே அமைதியாக இருக்கும்படி தடுத்துவிட்டான் ஆதி.
“உன் பேத்தி வாழ்க்கையை பறிச்சிக்கிட்டதா சொன்னல நீ…” கற்பகத்திடம் விரல் நீட்டி கேட்டவள்,
“நீங்க ரெண்டு பேரும் தான்… தாலி கட்டிய என் புருஷனை என்கிட்ட இருந்து பறிச்சிக்க முயற்சி செய்றீங்க.
ஆனால், உங்களுடையது எப்பவும் முயற்சியாக மட்டும் தான் இருக்கும்.”
“ஏன் அம்மத்தா தாத்தாவோட முப்பது வருஷத்துக்கு மேல வாழ்ந்தும், அவர் நினைப்பு போகாமல் மாமாவுக்கு தாத்தா பெயரை தான் வைக்கணும் பிடிவாதம் பிடித்த உனக்குத் தெரியலையா, புருஷன் கிட்ட இருந்து பொண்டாட்டியை பிரிப்பது பாவமென்று.”
நிரலியின் கேள்வியில் கற்பகத்தின் மனம் சுடுபட்டது. அவள் கேட்டதின் அர்த்தம் விளங்க தொப்பென்று கதிரையில் அமர்ந்தார். அவரின் தவறு புரிய ஆரம்பித்ததோ!
நிரலி இவ்வளவு பேசியும் சந்தியாவின் எண்ணம் மட்டும் மாறவில்லை.
“இதோ பார் நிரலி… முதலில் எனக்கும் மாமாவுக்கும் தான் கல்யாணம் பேசுனாங்க, நடுவுல என்னென்னவோ ஆகிப்போச்சு…
இந்த மூணு நாளில் அப்படி என்னத்த வாழ்ந்திருக்க போற, எனக்கும் மாமாவுக்கும் குறுக்கே நிற்காமல் போய்விடு” என்று சற்று கட்டளையாகவேக் கூறினாள் சந்தியா.
சந்தியாவின் பேச்சில் சூர்யாவிற்கே அவளை அடித்துவிடும் கோபம் எழுந்தது. ஆனால் ஆதியோ அதே அமைதி நிலையில் தான் இருந்தான்.
கற்பகத்திற்கு நிரலியை பிடிக்காதென்று செல்விக்குத் தெரியும். ஆனால் அவளுக்கு கிடைத்த வாழ்வையே அழிக்க நினைப்பாரென்று நினைத்ததில்லை. அதனால் நடப்பதை நம்ப முடியாது பார்த்திருந்தார்.
மூர்த்தியும், காமாட்சியும் நடப்பதை ஏற்க முடியாது… கற்பகம், சந்தியாவின் குணம் அறிந்து வருந்தி நின்றிருந்தனர்.
“என்னால் மாமாவை விட்டுக்கொடுக்க முடியாது.” சந்தியா சொல்லும்போது அவள் கண்கள் பளபளத்தது.
“மாமைவையா இல்லை இந்த வளமையையா?”
நிரலி கேட்டதில் சந்தியா திகைத்துப்போனாள்.
“என்ன பார்க்குற… உன்னைப் பற்றி எனக்குத் தெரியும்.
நிச்சய ஏற்பாட்டன்று மாமாவை பற்றி நீ பேசிய அனைத்தும் தெரியும். அது தெரிந்துமா உன்னை மாமாவுக்கு ஜோடி சேர்ப்பேன் நான்.
ஆதிக்கு ஜோடி நிரலி தான்.
உன் மண்டையில் நல்லா ஏத்திக்கோ!
மாமா மேல் அப்போ வராத அன்பு இப்போ வரக்காரணம், அவருடைய பெயர், இந்த வளமை தானே… மாமாகிட்ட சொல்லி எல்லாத்தையும் உனக்கேத் தர சொல்லுறேன்.
என் மாமா நான் சொன்னால் கேட்பார்.
ஆனால், மாமா மட்டும் எப்பவும் எனக்குத்தான்.
அதனால நீ என்ன பண்றன்னா, உன் மனசுல… இல்லை இல்லை, எங்கேயாவது ஆதிங்கிற பெயர் இருந்தால் கூட உன் கண்ணு அதை பார்க்கக்கூடாது. புரிஞ்சுதா?” என்றாள் நிரலி.
சந்தியாவின் தலை தானாக ஆடியது.
“இனியொரு முறை உன்னை நான் பார்க்கவே கூடாது. அதனால்,” சந்தியாவை பார்த்துக்கொண்டே வாயிலை நோக்கி நிரலி கை காட்ட, அவளின் கை சென்ற திசையை பார்த்த சந்தியா, அங்கு நின்றிருந்த அனைவரையும் பார்த்து அதிர்ந்ததோடு தலை கவிழ்ந்தாள்.
அந்நிலையிலேயே வெளியே செல்ல அடி வைத்தவளை ஓங்கி அறைந்தாள் நிரலி. அடியென்றால் அப்படியொரு அடி, இடி மாதிரி. மென்மைக்குள்ளும் வலிமை இருக்கும்.
கன்னத்தில் கை வைத்தபடி சந்தியா கலங்கிய கண்களால் நிரலியை பார்க்க,
“இந்த அடி, என் மாமாவை உன்னோடு சேர்த்து தவறா பேசியதற்கு” என்றாள் நிரலி.
கைத்தட்டும் ஓசை கேட்டு நிரலி வாயிற்புறம் திரும்ப, அங்கே ஆதி அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான்.
நான்கே எட்டில் மனையிடம் வந்தவன், சுற்றி இருப்பவர்களை மறந்து, தன்னவளின் நெற்றியில் இதழ் பதித்து தனது கை வளைவிற்குள் நிறுத்திக்கொண்டான்.
ஆதி எதுவும் பேசவில்லை. ஆனால் அவன் பார்த்த பார்வையில் சந்தியா கூனிக்குறுகிப் போனாள். சந்தியா சிறுத்துப்போக ஆதியின் ஒற்றை பார்வை போதுமானதாக இருந்தது.
‘சந்தியாவை ஒரு அடி அடித்தாலாவது தேவலாம்’ என சினந்த மனதை கடினப்பட்டு அடக்கினான். தன் கோபத்தைக்கூட தன்னுடைய பேபியைத் தவிர வேறெந்த பெண்ணிடமும் உரிமையாக வெளிப்படுத்திடக் கூடாதென்பதில் திண்ணமாக இருந்தான்.
ஆதியின் பார்வையில் ஏற்பட்ட குன்றலோடு யாரையும் நிமிர்ந்து பாராது வெளியேறினாள் சந்தியா.
Epi 21
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
11
+1
45
+1
2
+1
நிரலி செம. ஸ்வே நிரலி அக்கா தங்கை.