அத்தியாயம் 2 :
சந்தியாவை பார்க்கும் போதெல்லாம் நிரலியின் உள்ளே சிறு பொறாமை எட்டி பார்த்தது. அது எதனால் என்று நன்கு அறிந்தும் அதனை அடக்கும் வழி அவளுக்கு தெரியவில்லை.
தனக்கு சொந்தமான இடம் அக்காவுக்கு கிடைப்பதில் நிரலிக்கு அதீத வருத்தம். என்ன செய்து அவ்விடத்தை தக்க வைத்துக் கொள்வதென்று அவளுக்குத் தெரியவில்லை. அது தனக்கு சொந்தமான இடம்தானா என்றும் அவளுக்கு தெரியவில்லை. சந்தியாவுக்கும் ஆதிக்கும் திருமண பேச்சு எழுந்த முதல் நாள் தான் அவளே புதிதான ஓர் உணர்வுக்குள் ஆட்பட்டாள். அன்று முழுவதும் அவள் பார்வை எங்கும் ஆதியே நிறைந்திருந்தான். கைபொருள் ஒன்று கை நழுவி செல்லும் வலி அவளுள் எழுந்தது.
‘அக்காவுக்கு நல்வாழ்வு அமைகிறதே’ என்று மனம் மகிழ்ந்தாலும், அவளால் தன் இடத்தை விட்டுக்கொடுக்க முடியவில்லை. மனதின் ஓரத்தில் முனுக்கென்று தைத்துக் கொண்டிருக்கும் வலியை அவளால் ஒதுக்க முடியவில்லை. ஒரு மாதமாக நடைபெற்ற திருமண பேச்சு வார்த்தை இன்று நிச்சயம் என்ற நிலையில் வந்து நிற்க, நிரலிக்கு நிதர்சனம் புரிந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் தனக்குள் எழுந்த உணர்வு ஈர்ப்பைத் தாண்டி வேறொன்று என்று அவளால் புரிந்துகொள்ள முடிந்தது.
அதனாலே அதிகாலையில் அவளின் விருப்பமான கடவுளான பிள்ளையாருக்கு லஞ்சம் கொடுத்திருந்தாள். பிள்ளையார் அவளுக்கு அருள் பாலிப்பாரா? அது அவருக்கே வெளிச்சம்.
‘கடவுளை மட்டுமே நம்பினால் தனது ஆசை நிறைவேறிடுமா?’ ஆயிரமாவது முறையாக கேட்ட மனதின் கேள்வியை புறம் தள்ள முடியாது, ‘என்ன செய்து நடக்கவிருக்கும் நிகழ்வை தடுப்பது’ என்று மூளை, மனம் இரண்டையும் போட்டு உடைத்துக் கொண்டிருந்தாள் நிரலி. வலது கை பெருவிரல் நகம் அவளின் பற்களுக்கு நடுவில் சிக்கி தவித்தது.
“என்ன ஏதோ தீவிர யோசனையில் இருக்க போலிருக்கே…!”
மொட்டை மாடி திண்டின் விளிம்பில் அமர்ந்திருந்த நிரலி சூர்யாவின் கேள்வியில் சுவரிலிருந்து குதித்து இறங்கினாள்.
“அப்புறம் டா அண்ணா, காலையில நீ ஓடின ஓட்டத்தை பார்த்து இந்த நிச்சயம் முடியுற வரை என் பக்கத்துல கூட வரமாட்டேன் நினைச்சேன்.” கேலியாக அவனை வாறினாள்.
“அது இருக்கட்டும் என்ன சிந்தனை?”
“இந்த நிச்சயத்தை எப்படியாவது நிறுத்தனும்.”
இம்முறையும் சூர்யாவிடம் உண்மையைக் கூறி அவனை அதிர வைத்தாள்.
“அம்மு ஆர் யூ சீரியஸ்?”
“ம்”. ஒற்றை வார்த்தையில் அவளது பதில் இருந்தாலும், அதிலிருந்த அழுத்தம் அவளின் மனதை அவனுக்கு தெளிவாய் எடுத்துக்காட்டியது.
“நீ… நீ ஆதி மாமாவை விரும்புறியா அம்மு. ஐ மீன் ஆர் யூ இன் லவ்…” சிறு இடைவெளிவிட்டு “வித் மாமா?” எனக் கேட்டிருந்தான்.
இவ்வளவு நேரம் குழம்பிக் கொண்டிருந்தவள், மன உணர்வினை யோசிக்கவே பயந்து இருந்தவள், சூர்யாவின் கேள்வியில் தெள்ளென தன் மனம் புரிய “ஆமாம்” என்று வாய் திறந்து சொல்லியிருந்தாள்.
அதில் அப்பட்டமாக தன் அதிர்வை காட்டியவன், தலையில் கை வைத்தவாறு காலை நேர இளஞ்சூரியனின் கதிர் பட்டு சூடேறியிருந்த தரையையும் பொருட்படுத்தாமல் கீழே அமர்ந்து விட்டான்.
“என்னலே என்னாச்சு… மயக்கம் வருதாலே?”
சூர்யா அப்படி அமர்ந்ததும், நிரலி பதட்டம் கொண்டவளாக குனிந்து அவனின் தோளில் கரம் பதித்து அக்கறையாக வினவ, அவனோ அவளை பார்த்து இரு கரங்களையும் தலைக்கு மேல் தூக்கி கும்பிடுவதை போல் செய்து,
“போது(ம்)த்தா… போதும். மயக்கம் மட்டும் தான் வரல, உன் சங்காத்தமே வேணாம்… இனி உனக்கும் எனக்கும் பேச்சு வார்த்தையே கிடையாது” எனக்கூறி எழுந்து கீழே இறங்க படிகளில் கால் வைக்க அவனின் நடையை நிரலியின் ஏக்கமான குரல் தடை செய்தது.
“எனக்கு மாமா வேணும்.
இது எப்போ எப்படின்னு எனக்குத் தெரியல. ஆனால் அக்காக்கும் மாமாக்கும் கல்யாணம் பண்ண பேச ஆரம்பிச்சதுல இருந்து நான் நானா இல்லண்ணா…!
மாமாவோட சேர்த்து அக்கா பேரை சொல்லும் போதே, எனக்கு அவ்வளவு வலிக்குது. எனக்கு அக்கா மேல பொறாமையா இருக்கு. அவ(ள்) இடத்துல நான் இருந்திருக்கக் கூடாதா தோணுது.
மாமா என் மேல அக்கா பொண்ணுன்னு காட்டின அக்கறை, பாசம் இதெல்லாம் எப்பவோ அவரு மேல் எனக்கு விருப்பத்தை வரவச்சிடுச்சு. அதோடு அம்மத்தா என்னை திட்டும் போதெல்லாம் எனக்காக அவரு சண்டை போட்டிருக்காரு. அந்த நேரத்துல நான் உணர்ந்த பாதுகாப்பு உணர்வுக்கான அர்த்தம் அப்போ விளங்கல, ஆனால் இப்போ… இப்… இப்போ… என்னால முடியலண்ணா…!
மாமாவை யாருக்கும் என்னால் விட்டுக்கொடுக்க முடியாதுண்ணா…
ரொம்ப வலிக்குது…!”
முகத்தை மூடிக்கொண்டு கதறினாள்.
“அம்மு… அழாதடா…!” தங்கையை தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்ட சூர்யாவின் கண்களும் கலங்கியது.
இதுவரை அழுது பார்த்திடாத தனது தங்கையின் கண்ணீரை கண்டதும் எப்படியேனும் ஏதேனும் செய்தாவது அவளின் ஆசையை நிறைவேற்றிட வேண்டுமென்று அக்கணம் சூர்யாவுக்குத் தோன்றியது.
தங்கையை மெல்ல தேற்றியவன், நிரலியின் அழுகை ஓய்ந்ததும்… அவளின் முகத்தை தன் கரம் கொண்டு அழுந்த துடைத்தவன்,
“நீ எப்பவும் சிரிச்சிட்டே இருக்கணும் அம்மு. இங்கிருந்தால் உன்னால் இங்கு நடப்பதை பார்க்க முடியாது. அதனால் நீ கல்லூரிக்கு கிளம்பு” என்றான்.
எதுவும் மறுத்து பேசக்கூடாது என்கிற சூர்யாவின் அழுத்தம் நிரலிக்கு புதிது. ஆதலால் கல்லூரிக்கு கிளம்பத் தயாரானாள். அவளுக்கும் இங்கிருந்து எங்காவது சென்றுவிட வேண்டுமென்று இருந்தது.
சந்தியாவின் அறையை கடந்து தான் நிரலி தனது அறைக்குச் செல்ல வேண்டும். புத்தக பையினை எடுக்க நிரலி தன்னறைக்கு செல்ல, சன்னல் வழியாக சந்தியாவின் அறைக்குள் நிரலியின் விழிகள் தொட்டு மீண்டன.
சந்தியா கண்ணாடி முன்பு அமர்ந்து ஏதோ யோசித்துக் கொண்டிருந்தாள். அவளின் கண்கள் அலைப்புற்றுக் கொண்டிருந்தன. அவளின் முகத்தில் ஏனோ தடுமாற்றம்.
‘இது நமக்குத் தேவையில்லாத ஒன்று’ என்று நிரலியும் கண்டுகொள்ளாது சென்றுவிட்டாள். இங்கு அவளுக்கு மூச்சு முட்டுவதை போலிருந்தது.
தாய், தந்தையிடம் சென்று கல்லூரிக்கு செல்வதாக சொல்லவும் அவர்கள் எதுவும் மறுப்புத் தெரிவிக்கவில்லை.
ஆனால், காமாட்சி “இன்னைக்கு நீ கல்லூரிக்கு போக வேண்டாம்” என்று பிடிவாதமாகக் கூற நிரலி சூர்யாவை பார்த்தாள்.
“அம்மச்சி அவ(ள்) போகட்டும் விடுங்க, அம்மு ஏதோ பரீட்சை இருக்கு சொன்னா(ள்)… அதெல்லாம் கல்யாணத்துக்கு அவ(ள்) உடனிருப்பாள்.” தங்கைக்கு துணைக்கு வந்தான் சூர்யா.
“வளந்ததும் உங்க இஷ்டத்துக்கு எல்லாம் செய்யுதீ(றீ)க” என்று புலம்பியவராக காமாட்சி வேறு வேலையாக உள்ளே சென்றுவிட நிரலி சூர்யாவிடம் சொல்லிக்கொண்டு கல்லூரிக்கு புறப்பட்டாள்.
நிரலி வாசலைத் தாண்டி வெளியே செல்லும்போது எதிரே ஆதி வந்தான்.
ஆதியை காதலாக பார்த்தவள், ‘இன்று மாலையோடு அவனை இப்படி காதல் பார்வை பார்க்க முடியாது’ என மனம் கூக்குரலிட விழி அகற்றாது அவனின் பிம்பத்தை தனது அடி மனதில் சேமித்தாள்.
நிரலியை பார்த்துக் கொண்டே வந்த ஆதி,
‘காலையில் ஆற்றங்கரையிலும் இப்படித்தான் பார்த்தால் இப்பவும் இப்படித்தான் பார்க்கிறாள்’ என நினைத்தவன் தன்னை ஒருமுறை முழுதாய் குனிந்து பார்த்துக் கொண்டான்.
அவளின் பார்வை அவனை கட்டி ஈர்ப்பதை அவன் உணர்ந்தே இருந்தான். இருந்தபோதும் அதன் பொருள் ஆதிக்கு விளங்கவில்லை. காதலின் முதல் படியில் அனைவரும் தத்தி தானோ…!
‘அக்காவிற்கு கணவனாக போகிறவரை இப்படி பார்க்கிறாயே அவர் என்ன நினைப்பார்.’ நிரலியின் மனம் இடித்துரைத்தது.
‘அவரு முதலில் எனக்கு மாமா அப்புறம் தான் எல்லாம். என் மாமா நான் பார்க்கிறேன்’ என மனதிற்கு கொட்டு வைத்தவள் கொஞ்சமும் தனது பார்வையை மாற்றிக் கொள்ளவில்லை.
அவளின் பார்வை வீச்சு உள்ளுக்குள் ஏதோ செய்ய அவன்தான் பார்வையை மாற்றிக் கொள்ளும்படி ஆனது.
“எங்கு கிளம்பிட்ட… காலேஜ்’க்கா?”
“ம்.”
“உன் மாமாக்கு ஒரு நல்லது நடக்குது நீ இருப்பது இல்லையா நிரலி.” ஆதி அவ்வாறு கேட்டதும்,
‘என்னுடைய இடம் பறிப்போவதை என்னால் கண் கொண்டு பார்த்திட முடியாது மாமா’ என்று மனதோடு பதில் வழங்கினாள்.
“உங்களுக்கு சந்தியா அக்காவை பிடிச்சிருக்கா மாமா?” இந்த கேள்வியை எதற்காக அவனிடம் கேட்டாள் என்று அவளுக்கேத் தெரியவில்லை.
சற்று யோசித்த ஆதி,
“நீ எந்த அர்த்தத்தில் கேட்கிறாய் தெரியல, ஆனால் என்னுடைய அக்கா மகளாக சந்தியாவை பிடிக்கும். இதுவரை மனைவி எனும் இடத்தில் வைத்து நினைத்தது கூட இல்லை” என்றான்.
“அப்புறம் எதுக்கு இந்த கல்யாணம் மாமா?”
‘ஆமாம் இப்போ என்னதான் அவன்கிட்ட இருந்து நீ எதிர் பார்க்கிற?’ மனதின் கேள்வியை புறம் தள்ளினாள்.
ஆதிக்கும் மனதில் இந்த கேள்வி எழுந்தது. ஆனால் பெரியவர்களின் பேச்சினை தட்டக்கூடாது என்பதற்காகவும், தனது உடன் பிறப்பின் மகள் என்பதற்காகவுமே இந்த கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவித்திருந்தான். ஆதலால் நிரலியின் இந்த கேள்விக்கு அவனிடம் பதிலில்லை. அமைதியாக நின்றிருந்தான்.
“உங்களுக்கு காதல் மேல் நம்பிக்கை இருக்கா?”
“என்ன, நீ… கேள்வியா கேட்டுட்டு இருக்க… காதல் அப்படி இப்படின்னு, ஒழுங்கா பாடத்தை படிக்கும் வழியை பார்” என்றவன் அவளை கடந்து வீட்டிற்குள் நுழைய அவனின் கையை பிடித்து தடுத்து நிறுத்தியிருந்தாள்.
அவளின் முதல் தொடுகை… இனம் புரியா ஒன்று அவனுள் பாய்ந்தது. சிறு வயதில் அவளைத் தூக்கி இருக்கின்றான். அவளுடன் விளையாடி இருக்கின்றான். ஆனால் அவள் வளர வளர பெண் பிள்ளையென்று ஆதியே தொட்டு பேசுவதை தவிர்த்திருந்தான்.
நீண்ட வருடங்களுக்கு பிறகான அவளின் உரிமையான செய்கை அவனுக்கு பிடித்துதான் இருந்தது. ஆனால் இந்த பிடித்தம் எதில் சேர்த்தியென்று அவனுக்கு புரியவில்லை.
காதலில் மக்காக இருப்பதே ஒரு சுகம் தான். புரிந்தும் புரியாத நிலையில் மனம் படும் இன்ப அவஸ்த்தையும் ஆழ்ந்த சுகம் தரும். அதில் திளைப்போருக்கே அதன் அடி தித்திப்பு தெரியும்.
ஆதி என்ன எனும் விதமாக ஏறிட்டு நிரலியை ஒற்றை புருவம் உயர்த்தி பார்க்க,
“நீங்க யாரையும் காதலிக்கலையா…?” என்று கேட்டிருந்தாள்.
“90’ஸ் கிட்… சோ, லவ் எதுவும் செட் ஆகல” எனக்கூறி அவன் அட்டகாசமாக சிரிக்க,
“90’ஸ் கிட்… அப்டிங்கிறதால தான் என்னையும் புரியலையா மாமா” என அவனின் பதிலுக்கு கேட்டவள் தன் பிடியிலிருந்த அவனின் கையை விட்டுவிட்டு விடுவிடுவென திரும்பியும் பாராது சென்று விட்டாள்.
“என்ன சொல்லிட்டுப் போறா(ள்) இவ(ள்).”
நிரலி கேட்டுச் சென்றது புரியாது ஆதி குழம்பி நின்றான்.
“என்ன புரியல எனக்கு” என்று வாய்விட்டேக் கேட்டவனை, ‘நீயெல்லாம் என்னத்த வக்கீலுக்கு படிச்சியோ’ என்று க்யூபிட்(Cupid) அவனின் தலையில் தட்டியது. பாவம் அந்த தட்டலை கூட அவன் உணரவில்லை. காதலில் இவன் முழு சாம்பிராணி போல.
நிரலி கல்லூரிக்கு சென்ற பின் அவள் சொல்லியதைப்பற்றி யோசித்த சூர்யா ஆதியை தேடிச் சென்றான்.
இன்னும் சில மணி நேரத்தில் நிச்சயம் நடக்கவிருக்கும் இந்நிலையில் “உங்களை அம்மு காதலிக்கின்றாள்” என்று அவனால்(சூர்யா) சொல்ல முடியாது. ஆதிக்கு பார்த்திருக்கும் பெண் வேறு யாரோவாக இருந்தாலும் பரவாயில்லை அவளும் அவனின் சகோதரியாயிற்றே. அக்காவா, தங்கையா…? யாருக்காக யோசிப்பதென்று அவனுக்கு தெரியவில்லை.
எதிரே வந்த வருணிடம் “ஆதி மாமா எங்கே?” என்று வினவினான்.
வருணோ பதில் சொல்லாது உம்மென்று முகத்தை வைத்திருந்தான்.
“நீ ஏன்டா இப்படியிருக்க?”
“அண்ணா சந்தியா அக்காவை கட்டிக்கிட்டு அப்புறம் ஆதி மாமாவும் அவுகல மாதிரியே நம்மகிட்ட ஒதுங்கி ஒதுங்கியே இருப்பாகளா. இப்போ மாதிரி மாமா என்னோடு விளையாட மாட்டாரா சிரிச்சு பேச மாட்டாரா?” என்று அப்பாவியாகக் கேட்டான்.
சந்தியா யாருடனும் ஒட்ட மாட்டாள். அவள் வீட்டில் சகஜமாக பேசும் ஒரே ஆள் கற்பகம் தான். தனது தம்பி தங்கையுடன் கூட அதிகமாக பேச மாட்டாள். எப்போதும் அவளுண்டு அவள் வேலையுண்டு என்றிருப்பாள். விளையாட அழைத்தால் கூட வராது தனித்து ஏதேனும் செய்து கொண்டிருப்பாள்.
எப்போதும் ஒதுங்கியே உம்மென்று இறுக்கத்துடன் இருப்பதால் வருணுக்கு சந்தியா என்றால் சிறு பயம். அந்த பயம் தான் கல்யாணத்திற்கு பிறகு தன் மீது அன்பு வைத்திருக்கும் மாமாவும் அவள் போல் அகிவிடுவாரோ என அவ்வாறு கேட்டிருந்தான்.
“நீ ஏன் வருண் இப்படி யோசிக்கிற, மாமா மாதிரி ஜாலியா அக்கா மாறிடுவாங்கன்னு நினை” என்ற சூர்யாவின் பேச்சில் தன் கலக்கம் நீங்கியவனாக வருண் சென்றிட சூர்யாவுக்கு குழப்பம் பிடித்தது.
‘உண்மையிலேயே இவுக ரெண்டு பேருக்கும் பொருத்தமா இருக்குமா? மாமா யாருன்னே தேரியாதவங்கிட்ட கூட நல்லா பேசுவாறு… சந்தியா, பேசுவதற்கே கடன் கேட்பாள், ஹ்ம்…’ என்று பிதற்றியவன் ஒரு வழியாக ஆதி இருக்கும் இடத்தை கண்டு பிடித்து அவன் முன் நின்றான்.
“என்னலே, வந்து அஞ்சு நிமிசமாச்சு என்னையவே உத்து உத்து பார்த்திட்டு கிடக்க” என்ற ஆதியின் கேள்வியில்
“எனக்கே உங்களை சைட் அடிக்கணும் போல தோணுதே… காலேஜ்ல உங்களை யாரும் பொண்ணுங்க சுத்தி வரலையா? இந்த காலத்துளையும் அம்மா, அப்பா பார்த்து வைக்குற பொண்ணை கட்டிக்குறீங்களே” என்று கலாய்ப்பதை போல் ஆதியின் மனதினை தெரிந்துகொள்ள விரும்பினான் சூர்யா.
தனது அக்கா மகனை ஏறயிறங்க பார்த்த ஆதி,
“என்னைய விட எட்டு, ஒன்பது வயசு சின்ன பசங்க… அண்ணனும் தங்கச்சியும் இதையவே கேட்குறீங்க? என்னலே பேச்செல்லாம் தினுசா இருக்கு” என்றான்.
“பெத்தவங்க பார்த்து பண்றாங்களேன்னு காதலில்லாமல் பண்ணிக்கிட்டா(ல்) நல்லாயிருக்குமா?” என சூர்யா அடுத்து கேட்க,
“உனக்கு என்னலே வயசாகுது… நம்ம அம்மா அப்பாயெல்லாம் பெத்தவங்க பார்த்து கல்யாணம் கட்டிக்கிட்டவக தான். என்ன நல்லாயில்லாம போயிட்டா(ங்)க” என்ற ஆதிக்கும் உள்ளுக்குள் இதேதான் உருட்டிக்கொண்டிருந்தது. ஆனாலும் சின்ன பையனிடம் என்ன பேசவதென்று அறியாதவன் இல்லையே அவன்.
“நீ கேட்குறத பார்த்தால் யாரையோ விரும்புற மாதிரி தெரியுது… ஆத்தா(கற்பகம்) கிட்ட போட்டு கொடுக்கணுமோ…!” என்றது தான் ஆதிக்கு பெரிய கும்பிடாக போட்ட சூர்யா தன் வாயினை மூடிக்கொண்டு சென்று விட்டான்.
சூர்யா சென்றதும் தோட்டத்து பக்கம் வந்த ஆதி மர நிழலில் அமர்ந்து தூரத்து வானினை வெறித்தான்.
முதல் முறையாக தனக்கும் சந்தியாவுக்கும் ஒத்து வருமா என்று சிந்தித்தான். சம்மந்தமே இல்லாது சந்தியாவோடு நிரலியை ஒப்பிட்டு பார்த்தான்.
“சந்தியா தன்னை பார்க்கும் போது வெறும் கல்லையும் மண்ணையும் பார்ப்பது போலிருக்கும். இதுவே நிரலி கண்களில் ஏதோ… ஏதோ இருக்கு” என்று ஆராய்ந்தவன்,
“இதுயென்ன வேண்டாத ஒப்பீடு” என்று தன்னையே கடிந்து கொண்டான்.
“இதுக்கு முன்பு நான் அவளுக்கு(சந்தியா) மாமா மட்டும் தான். இனி கணவனாகப் போகும் உறவு, இன்னைக்காவது சந்தியா பார்வையில் நமக்கு உள்ளுக்குள் ஏதாவது உருளுதா பார்ப்போம்” என்று ஆராய்ந்து ஒரு முடிவை எடுத்தான்.
“இந்த சின்ன கழுதைங்க ரெண்டும் சேர்ந்து காதல் கீதலுன்னு கேட்டு என்னையவே குழப்பிடுச்சுங்க. ஆனால் ரெண்டும் ஏதோ சொல்ல வருதுங்க என்னான்னு தான் புரியல” என்று தனக்குத்தானே பேசிக்கொண்டவன் “நடப்பது யாவும் நன்மைக்கே, சந்தியா தான் என் மனைவி அப்படின்னா அது யாராலையும் மாற்ற முடியாது” என்று கூறிக்கொண்டான்.
தன் பெற்றோர் தனக்கு ஏற்ற துணையை தான் தேர்ந்தெடுப்பரென்று உறுதியாக நம்பினான். இதில் நிரலி மற்றும் சூர்யாவின் கேள்விகளுக்கான ஆராய்ச்சினை பின்னுக்கு தள்ளியிருந்தான்.
“லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணனுமா? கல்யாணம் பண்ணிக்கிட்டு லவ் பண்ணக் கூடாதா” என்று கேட்டுக்கொண்டவன், “நான் எனக்கு மனைவியாக வரப் போகிறவளையே காதலித்துக் கொள்கிறேன்” என்று முடிவெடுத்தவனின் மனதில் ‘இப்போது தன் மனைவியாகப் போகும் நிலையிலிருக்கும் சந்தியாவையே காதலிக்கத் துவங்குகிறேன்’ என்கிற எண்ணம் எழவில்லை.
“என்னய்யா வெயில் நேரத்துல இங்னக்குள்ள வந்து உட்கார்ந்திருக்கீக, முகம் கருத்துப்போகுமே…! பொறவு நிச்சயத்துல மூஞ்சி கலையா எப்படித் தெரியும்.”
தனக்கு பின்னால் ஒலித்த கற்பகத்தின் குரலில் தனது யோசனையை மறந்தவன்,
“சும்மா அப்படியே காத்து வாங்க வந்தத்தா” என்றான்.
“ஓ” என்ற கற்பகம் “ஏதோ யோசனையில இருந்தீக என்ன விடயம்” என அறிந்து கொள்ளும் நோக்கத்தோடு வினவினார்.
“அதெல்லாம் ஒன்றுமில்லை” என சமாளித்த ஆதியை “போய்யா போ… ரெண்டு மூணு தரம் சோப்பு போட்டு குளிச்சிட்டு பவுடரு, சென்(ட்)டுலாம் போட்டுக்கிட்டு ஜம்முன்னு மாப்பிள்ளை கணக்கா ரெடியாகி வா…! நேரமாச்சி, எல்லோரும் வர ஆரம்பிச்சிட்டாக” என்று ஆதியை துரத்தாத குறையாக அங்கிருந்து கிளப்பிக் கொண்டு வந்து அவனது அறையில் விட்டுச் சென்றார்.
கற்பகத்திற்கு தனது பேரனுக்கும், ஆசை கொள்ளு பேத்திக்கும் திருமணம் நடக்கப் போவதில் கொள்ளை ஆசை. அதனாலே இவ்வளவு உற்சாகம்.
ஆனால் தெய்வம் வேறொன்றை நினைத்திருக்கிறதே…!
நிரலியின் காதல் உண்மை எனில்… அவளின் பார்வை ஆதியை தனது காதலை நோக்கி ஈர்க்குமா? அவளுக்கு ஆதியோடு வாழ்வது மட்டுமே ஆனந்தம். அந்த ஆனந்தம் அவளுக்கு கிட்டுமா?
குழப்ப நிலையில் பெற்றோரின் விருப்பத்திற்கு மதிப்பளித்து திருமணத்திற்கு தயாராகும் ஆதி. நடப்பது எதையும் கருத்தில் கொள்ளாது தனது ஆசையை எண்ணி தனக்குள் உழன்று கொண்டிருக்கும் சந்தியா. தன் காதல் ஒன்றை மட்டும் நம்பும் நிரலி. யாருக்கும் துணை நிற்க முடியாது கையாளாகத் தனத்துடன் நிற்கும் சூர்யா.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையில் மனம் வேறுபட்டு நிற்க யாருக்கு சாதகமாக சூழ்நிலை அமையும் என்ற கேள்வியோடு விதி தனது பயணத்தை துவங்குகிறது.
Epi 3
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
23
+1
1
+1
நிரலிக்குத்தான் ஆதி
Ama kaa