Loading

அத்தியாயம் 3 :

உற்றார் உறவினர்கள் அனைவரும் ஆதியின் பரம்பரை வீட்டில் கூடியிருந்தனர். தவமிருந்து வரம் வாங்கி பெற்ற பிள்ளையின் திருமணத்திற்கான அத்தியாய துவக்க நிகழ்வு.

மூர்த்தி மற்றும் காமாட்சி தம்பதியினருக்கு விவரிக்க முடியாத மகிழ்வினை கொடுத்தது. சிறுமியை போல் இந்த வயதிலும் தனது ஆசை பேரனின் நிகழ்வில் ஓடியாடி வேலை செய்தார் கற்பகம்.

ஆதியின் தமக்கைகள் அனைவரும் ஒரே நிறத்தில் ஒரே மாதிரியான புடவை அணிந்து தாங்கள் இவ்வீட்டின் செல்ல மகள்கள் என்று பெருமையுடன் வலம் வந்தனர்.

“டேய் சூர்யா உன் அக்கா ரெடியாகிட்டாளா பார்த்துட்டு வாடா, என்னால இந்த மாடி படி ஏறி இறங்க முடியல” என்று கற்பகம் கூற வேண்டா வெறுப்பாக சூர்யா சந்தியாவின் அறைக்குச் சென்றான்.

அவளோ தயாராகாது பாவாடை தாவிணியில் அமர்ந்திருந்தாள்.

“அக்கா புடவை கட்டலையா…! இப்படியா வர போகிறாய், கெழவி ஆடி தீர்த்திடும்” என்றவனாக சந்தியாவின் அருகில் அமர்ந்த சூர்யா அப்போதுதான் கவனித்தான் அவளின் கண்கள் கலங்கி இருப்பதை.

“அக்கா என்னாச்சு?” சூர்யா பதறியவனாக வினவினான்.

சந்தியா பதில் சொல்லாது அமைதியாகவே இருக்க,

“நான் போய் பெரியம்மாவை அழைத்து வறேன்” என்றவன் வெளியே செல்ல முயல,

“எனக்கு இது பிடிக்கலடா சூர்யா” என்றாள் சந்தியா.

“எதுக்கா?” அவள் எதை குறிப்பிடுகின்றாள் என்பது அவனுக்கு புரியவில்லை.

“இந்த கல்யாணம். இன்னைக்கு நடக்கப்போகிற நிச்சயதார்த்தம்.”

சந்தியா அவ்வாறு சொல்லியதும் சூர்யா அதிர்ந்து விடவில்லை, கவலையும் கொள்ளவில்லை. மாறாக அதிக சந்தோஷம் கொண்டான். குத்தாட்டம் போட வேண்டும் எனத் துள்ளிய மனதை அடக்கி முகத்தை சோகமாக வைத்துக் கொண்டான்.

சந்தியாவின் அருகில் சென்று, 

“ஏன் பிடிக்கல, மாமாவை உனக்கு பிடிக்கலையா?” எனக் கேட்டான்.

“தெரியலடா” என்றவள், “எனக்கு இப்போ திருமணத்தில் விருப்பமில்லை. நிறைய படிக்கணும்” என்றாள்.

“அக்கா இப்போவே நீ டாக்டருக்கு படிச்சு முடிச்சிட்ட, இதுதான் மேரேஜ் பண்ண பொண்ணுங்களுக்கு சரியான வயசு” என்ற சூர்யாவை முறைத்தவள்,

“உன்கிட்ட எப்படி சொல்வது” எனத் தயங்கி, “எனக்கு மாமாவை பார்க்கும்போது ஒரு இது வரலடா” என்றாள் எங்கோ பார்த்துக்கொண்டு.

“உனக்கு இது மட்டும் தான் பிரச்சினை அப்படின்னா, அந்த இது இனிமேல் உனக்கு மாமா மேல் வரலாமில்லையா” எனக் கேட்டு அவளை ஆழம் பார்த்தான்.

அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை கேட்டபடி உள்ளே வந்த அம்பிகா தன் மகளின் முதுகினிலே ரெண்டு அடி போட்டார்.

“ஒரு வாரமா இதைத்தேன் சொல்லிட்டு திரியுற. வேணான்னு சொல்லுறதுக்கு என் தம்பிக்கிட்ட அப்படி என்ன குறைடி கண்டுட்ட?”

‘கிடைக்கயிருக்கும் நல்வாழ்வினை தன் மகள் கெடுத்துக் கொள்கிறாளே’ என்று ஆதங்கப்பட்டார் அம்பிகா.

“என்ன குறையா… நான் இப்போ ஒரு டாக்டர். நான் இன்னும் மேல படிக்கப் போறேன், ஆனால் மாமா சாதாரண வக்கீல். நான் வாங்கும் சம்பளத்தில் பாதியாவது அவருக்கு வருமானம் வருமா” ஏதோ ஆதி அவளுக்கு கீழ் எனும் பாவனையில் மொழிந்தாள். அவளுக்கென்ன தெரியும் ஆதியின் நிலையும் அவனின் வருமானமும். ஆதி ஒரு வழக்கை எடுத்தால் எதிராளி மொத்தமாக காலி என்பது இங்கிருக்கும் அவளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சந்தியாவின் முகச் சுளிப்பில் அம்பிகாவுக்கு இன்னும் நாலு அவளின் கன்னத்திலேயே போட வேண்டும் போலிருந்தது.

“நீ டாக்டருக்கு படிக்க காரணமே மாமா தான். நீ  காலேஜ் போய் படிக்கவே கூடாதுன்னு பிடிவாதமாக இருந்த பெரியப்பாவை சரிகட்டி, அன்னைக்கு உனக்கு துணையாக மாமா இல்லாமல் போயிருந்தால் நீ இன்னைக்கு இப்படி கம்பேர் பண்ணி பார்த்திருக்க மாட்டாய்.” சூர்யா உண்மையை சொன்னதும் சந்தியாவின் முகம் கருத்தது.

“நீ படிச்சதெல்லாம் அவன் சொத்துலடி.” அம்பிகா தலையில் அடித்துக் கொண்டார்.

“அவரு சம்பாதிச்ச சொத்து இல்லையே!” என அகங்காரமாக பட்டென்று சொன்ன சந்தியா,

“படிக்க வச்சாலும், படிச்சது நானு. அப்படி என்ன அவர் சொத்தை நான் படிச்சு அழிச்சிட்டேன். ஆன செலவு எம்புட்டுன்னு கேட்டு சொல்லுங்க, வட்டியோட திருப்பி தாறேன்” என்றாள்.

“என்ன இவ(ள்) இப்படி ராங்கித் தனமா பேசுறா(ள்)” என்ற அம்பிகா நெஞ்சில் கை வைத்து அமர்ந்து கொண்டார்.

“அப்போ உனக்கு பணம் தான் முக்கியமில்லையா?” சூர்யா அர்த்தத்தோடு வினவினான்.

“ஆமாம்… பணம் தாம்லே எல்லாம். அது தெரியாம உன் மாமன் பிழைக்கத் தெரியாத ஆள் கணக்கா, இருக்க சொத்த விட்டுப்போட்டு சொந்தக் காலுல நிக்குதேன்னு எவனோ ஒருத்தன்கிட்ட கைகட்டி நிக்குறாரு… அவரை கட்டிக்கிட்டு கூடால போயி அங்கன நானும் கஷ்டப்படனுமோ” என்று பேசியவளின் பேச்சில் பணமே பிரதானமாக இருந்தது.

“இம்புட்டு திடமாக இருப்பவளிடம் என்னத்த பேச” என அம்பிகா அடுத்து வாய் திறக்கவே இல்லை. 

சூர்யா தான் சந்தியாவிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான்.

“நிச்சயத்துக்கு மட்டும் ஒத்துக்க, சொந்த பந்தம் முன்னக்க தலையிறக்கமா ஆகிப்போவும். எல்லாரும் போன பொறவு பேசி முடிவு பண்ணலாம்” என மன்றாடினான்.

சூர்யாவுக்கு பின்னால் அம்பிகாவை அனுப்பி வைத்ததும் கற்பகம் தான். மகளை அழைத்து வரலாமென ஆசையோடு வந்த அம்பிகாவுக்கு மகளின் கூத்து வேதனையை கொடுத்தது.

திருமணப்பேச்சு ஆரம்பிக்கும் போது நன்றாக இருந்தவள் கடந்த ஒரு வாரமாக வேண்டாமென்று சொல்ல… “திருமணம் பற்றிய பயத்தில் உளறுகிறாள்” என்று அம்பிகா சாதாரணமாக இருந்துவிட, இன்று தன்னிலையில் திடமாக நிற்கும் சந்தியாவை கண்டு “அன்று அவள் வேண்டாமென்று சொல்லியபோதே பெரியவர்களிடம் சொல்லியிருக்க வேண்டுமோ” என்று காலம் கடந்து யோசனை செய்தார்.

“உன் காலில் கூட விழுகுறே(ன்)ட்டி, கீழ வந்து தலை குனிஞ்சு செத்த நேரம் உட்கார்ந்திரட்டி.” மகளிடம் அம்பிகா மன்றாடினார். மகன் போல் வளர்த்த தம்பிக்கு தன் மகளால் தலையிறக்கமாகி விடுமோ என்று அவர் கவலை கொண்டார்.

“அக்கா நீ சம்மதம் சொன்ன பொறவு தானே, மாமாகிட்ட கூட பேசுனாங்க.” சூர்யா சந்தியாவின் மனதை முற்றிலும் அறிந்துகொள்ள முயன்றான்.

“நான் ஏன் டாக்டருக்கு படிச்சிட்டு ஒரு வக்கீலை கட்டிக்கிடனும்.”

“அக்கா வக்கீல் கூட ரொம்ப நல்ல படிப்புத்தான். மாமா எவ்வளவு பெரிய ஆளு தெரியாம(ல்) பேசாதே!”

“அப்புறம் ஏன்டா இன்னமும் ஒரு வக்கீலுகிட்ட ஜூனியரா பிராக்டிஸ் பண்ணிட்டு இருக்காங்க?”

சந்தியாவின் இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று சூர்யாவுக்கு தெரியவில்லை. தெரிந்தால்தானே சொல்வதற்கு. ஆதியின் வேலை, அதில் அவன் எந்த நிலையில் இருக்கின்றான், அவனின் வருமானம் எவ்வளவு என்று வீட்டில் யாருக்கும் தெரியாது. யாரும் அதைப்பற்றி ஆதியிடம் கேட்டதுமில்லை, அவன் சொல்லியதுமில்லை.

சிறு வயது முதல் யாருக்கும் பதில் சொல்லி பழகாததால் தனக்கு வேண்டியதை யாரிடமும் கேளாது அவனே செய்துதான் பழக்கம். அவன் எது செய்தாலும் சரியாகத்தான் இருக்குமென்பதால் யாரும் ஆதியை ஒருசொல் கேட்டதில்லை.

இரண்டு மாதங்களுக்கு முன்பு, மூர்த்திக்கு அழைத்த ஆதி… சென்னையில் ஒரு வீடு வாங்க போவதாக சொல்லியதோடு, “பணம் வேண்டுமாப்பா” என்று தந்தை கேட்டதுக்கு…

“என் சம்பாத்தியம் முழுக்க அப்படியேத்தான் ஐயா இருக்கு. நீங்களும் உன் உழைப்பு நீயே வச்சிக்கோன்னு வாங்கிக்க மாட்டேங்கிறீங்க! பொறவு அதை நான் என்னத்த செய்ய” என்று மறுத்துவிட்டான்.

ஆதி அப்போது சொல்லியதால் மூர்த்தி மூலமாக அவன் சென்னையில் வீடு வாங்கியிருப்பது குடும்பத்தில் அனைவருக்கும் தெரிந்திருந்தது. 

அது நினைவு வந்த சூர்யா,

“மாமா சென்னையில் சொந்தமா வீடு வாங்கியிருக்கார் தெரியுமா?” என அர்த்தத்தோடு வினவினான். அவனின் அர்த்தம் அவளுக்கு புரியவில்லை.

“என்ன பாக்குற, சென்னையில் வீடு வாங்குவது அவ்வளவு சுலுவு இல்லை.”

“புறாக்கூண்டு மாதிரி ஒரு வீடு வாங்கியிருப்பார், அதெல்லாம் பெரிய விடயமாடே. எனக்கு வேண்டான்னா வேண்டாந்தேன்.” சந்தியா சற்றும் இளகுவது போல் தெரியவில்லை.

“நீ இப்படி செய்வதால் மட்டும் உன்னை மேல படிக்க வைப்பாகன்னு நினைக்குறியா?”

“அதையெப்படி சாதிச்சிக்கனும் எனக்குத் தெரியும்.”

என்ன சொன்னாலும் அதற்கு பதில் வைத்திருந்தாள் சந்தியா. அது சூர்யாவுக்கு மகிழ்வாகத்தான் இருந்தது. இருந்தாலும் குடும்பம் அவமானப்பட்டு போகுமே என்று இவ்வளவு தூரம் சந்தியாவிடம் பேசி பார்த்தான். பலன் பூஜ்ஜியம் தான்.

‘அம்மு, நீ பிள்ளையாருக்கு லஞ்சம் கொடுத்தது வீண் போகல’ என மனதில் நினைத்த சூர்யா, “இதற்குமேல் இங்கிருந்தால்… நீ எடுத்திருக்கும் முடிவுக்கு எனக்கும் சேத்து கெழவிக்கிட்ட வசவு விழும், நான் போறேன்” என்று சூர்யா அங்கிருந்து செல்ல அம்பிகாவின் விசும்பல் அதிகமாகியது. அதனை கண்டு கொண்டால் தனக்கும் மண்டகப்படி கிடைக்குமென்று கவனியாது சென்றுவிட்டான்.

“என்னடே நீ மட்டுந்தேன் வாற?” 

கற்பகம் பாட்டிக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாது ஆடு திருடியவன் போல் சூர்யா பேந்த பேந்த விழித்து நின்றான்.

“என்ன அ(ய்)யித்த புள்ளைய காணோம். இன்னுமா ரெடியாகல.” வந்திருந்த உறவுக்கார பெண்மணி ஒருத்தர் கேட்க,

“இதோ கூட்டியாரேன்” என்ற கற்பகம் தனக்கு முன்னால் நின்று கொண்டிருந்தவனை ஒரே இடியாக இடித்து தள்ளிவிட்டு தானே மேலேறிச் சென்றார்.

“சந்தியாவுக்கு கெழவிக்கிட்ட இருக்கு” என்று நினைத்த சூர்யா அமைதியாக ஆண்களுக்கு மத்தியில் அமர்ந்து கொண்டான்.

மேலே சென்ற கற்பகம், என்ன மாயம் செய்தாரோ அடுத்த பத்து நிமிடத்தில் தன் பேத்தியை அலங்கார பூஷிதையாக கீழே அழைத்து வந்தார்.

சூர்யா ஆச்சரியத்தில் வாய் பிளந்துவிட்டான்.

“லட்டு வேணுமுன்னா கேட்க வேண்டியது தானே” என்று சூர்யாவின் அருகில் அமர்ந்திருந்த உறவுக்கார சித்தப்பா, தட்டில் அடுக்கப்பட்டிருந்த லட்டு ஒன்றை எடுத்து அவனின் வாயில் அடைத்தார். அதைக்கூட அவன் உணரும் நிலையில் இல்லை.

பெண் வந்ததும் மளமளவென வேலைகள் துவங்க, ஆதி, சந்தியா இருவரையும் அருகருகே அமர்த்தி சில சடங்குகள் செய்தனர்.

காலையில் தானெடுத்த முடிவுபடி, தனக்கு அருகில் மெல்லிய இடைவெளியில் அமர்ந்திருக்கும் சந்தியாவை தன் மனைவியாக மனதில் ஏற்க முயற்சித்தான் ஆதி. வெறும் முயற்சி மட்டுமே. 

அந்நேரம் கூட நிரலியின் பார்வை சம்மந்தமில்லாது கண் முன் தோன்றி இம்சித்தது. தலையை குலுக்கி சமன் செய்தவன், சந்தியாவிடத்தில் இப்படியான பார்வை இருக்குமா என்று ஆராய, அவள் தலையை நிமிர்த்தினாள் இல்லை.

ஆதிக்கு சலிப்பாக வந்தது.

பொறுத்திருந்தவன், விரலில் மோதிரம் அணிவிக்க எழுந்தபோது அவளின் முகத்தை ஏறிட்டு பார்க்க… அவளின் முகம் கடுகடுவென்று இருந்ததே தவிர வேறு எவ்வித ஆனந்த உணர்வும் அதிலில்லை.

அவன் அம்பிகாவை பொருள் பொதிந்த பார்வையுடன் நோக்க, அவரோ தன் தலையை பூமிக்குள் அழுத்திக்கொண்டார்.

“என்ன ராசா யோசனை, எம்புட்டு நேரம் காக்கறது… பொண்ணு விரலில் மோதிரத்தை போடுய்யா.” கற்பகம் பாட்டியின் வார்த்தையில் கூடியிருந்தோர் அனைவரையும் சுற்றி பார்வையை சுழற்றியவன், அடுத்தநொடி எதையும் சிந்திக்காது சந்தியாவின் விரலில் மோதிரத்தை அணிவிக்க, கற்பகம் பாட்டியின் அதட்டலான குரலில் இயந்திரத்தனமாக சந்தியா ஆதியின் விரலை தொட்டும் தொடாமல் பற்றி மோதிரத்தை போட்டுவிட்டாள்.

“அப்படியே மாலையை மாத்திக்கோங்க கண்ணு.” சபையோர் முன்னிலையில் எதுவும் பேசிட முடியாது, கற்பகத்தை முறைத்து நின்றான் ஆதி.

“நம்ம வழக்கத்துல நிச்சியத்து அப்போ மாலை மாத்திக்கிறது இல்லையே!” கூட்டத்தில் ஒருவர் சொல்ல, ஆதி வேகமாக இருக்கையில் அமர்ந்தான்.

அதன் பிறகு என்ன நடந்ததென்று ஆதி கவனிக்கவில்லை. நடந்தவை யாவும் அவன் கருத்தில் பதியவும் இல்லை.

சந்தியாவின் முகத்தை வைத்தே, அவளுக்கு இதில் விருப்பமில்லையென்று ஓரளவிற்கு ஆதி யூகித்திருந்தான். இருக்கையிலிருந்து எழ சொல்லியும் எழாது, கூட்டம் கலைவதற்காக அமைதியாகக் காத்திருந்தான்.

சிறிது நேரத்தில் வந்திருந்த உறவினர்கள் அனைவரும் சென்றுவிட, வீட்டு உறுப்பினர்களை தவிர்த்து அங்கு வேறு யாருமில்லை என்பதை அறிந்த ஆதி, சூர்யாவை அழைத்து வேலை செய்யும் ஆட்களையும் வெளியேற்றினான்.

“என்ன கண்ணு எதாவது பேசணுமா?” மூர்த்தி மகனிடம் கேட்க, வருணை அழைத்த ஆதி சந்தியாவை அழைத்துவருமாறு கூறினான்.

“இதோ நான் போறேன்” என்று நகர்ந்த கற்பகத்தை,

“எதுக்கு சொல்லி கொடுத்து கூட்டியாறவா” என்று மிதமிஞ்சிய ஆத்திரத்தில் கேட்டான்.

ஆதியின் கோபத்தில் கற்பகம் பாட்டி ஒன்றும் மிரண்டு விடவில்லை.

அவனின் செயலுக்கான அர்த்தம் பல பழங்களை தின்று கொட்டை போட்ட அந்த மூத்த தலைமுறைக்கா புரியாது போகும். மாலை மாற்றிக்கொள்ள சொல்லியபோது அவன் முறைத்ததிலேயே சந்தியாவின் மனதை அவன் படித்துவிட்டான் என்று பாட்டிக்கு விளங்கிற்று. அடுத்து என்ன செய்ய வேண்டுமோ அதனை சரியாக செய்து முடித்திருந்தார்.

அதனால் அசராது நின்றவர், வருணையே “போய் கூட்டியா” என்று அனுப்பி வைத்தார்.

ஆதியின் கோபத்தை அறிந்திருந்த மூர்த்திக்குத்தான் சற்று கலக்கமாக இருந்தது. அவர் தனது மருமகன் வேலுமணியிடம் ஜாடை காட்ட,

“என்னப்பா ஆதி, எதுவும் வழக்கா?” கலக்கத்துடன் கேட்டிருந்தார். அதற்கு காரணம் ஆதியின் முகத்தில் தென்பட்ட கோபம். ஆதிக்கு எளிதில் கோபம் வந்துவிடாது. வந்தால் அதன் எல்லையை வகுத்திட முடியாது. எந்நிலையிலும் அவனின் முகத்தில் சிறு புன்னகை தவழும். இன்று அப்புன்னகை மறைந்து கோபமே பிரதானமாக இருக்க வேலுமணியே சற்று அரண்டு போனார்.

தன் தாய் தந்தைக்கு பிறகு ஆதி மதிக்கும் ஒரு நபர் வேலு தான். அவர் கேட்டே பதில் சொல்லாது நின்ற அவனின் நிலை கண்டு காமாட்சிக்கு பயம் பீடித்தது. அம்பிகா எதுவும் பேசாது ‘என் மகளுக்கு நல்ல புத்தியை கொடு’ என மௌனமாய் இறைவனை வேண்டி நின்றார். 

குனிந்த தலை நிமிராது அங்கு வந்து தன் முன் நின்ற சந்தியாவை ஆதி உறுத்து விழித்தான்.

“வெல்…”

ஆதியின் ஒற்றை வார்த்தையில் உடல் அதிர நிமிர்ந்து பார்த்த சந்தியா, அவனின் கண்கள் காட்டும் நெருப்பில் மொத்தமாக ஆடிப்போனாள். அவள் பாட்டியை ஓரவிழி பார்வை பார்க்க, ‘தான் பார்த்துக்கொள்வதாக’ அவர் கண் மூடி திறந்தார்.

“உனக்கு கல்யாணத்தில் விருப்பமில்லையா?”

சந்தியாவிடம் நேரடியாகக் கேட்டிருந்தான். மொத்த குடும்பமும் அவனின் கேள்வியில் அதிர்ச்சிக்கு சென்றனர். சூர்யா மட்டும் நடப்பது எல்லாம் நன்மைக்கே என்கிற ரீதியில் பார்த்திருந்தான். 

ஆதியின் கேள்விக்கு பதில் சொல்லாது, சந்தியா கற்பகத்தை நோக்க…

“கேள்வி கேட்டது நான்… கேள்வி கேட்டால் எனக்கு உடனே பதில் வரவேண்டும்” என்று அழுத்தமாகக் கூறினான்.

அதற்கு அவளிடத்தில் சிறு தலையசைப்பு மட்டுமே.

“நான் சொன்னது புரியலையா? ஐ நீட் ஆன்ஸர்?” கோபத்தில் வெடித்திருந்தான். பலபேர் முன்னிலையில் அரங்கேறிய நிச்சயம் நின்று போனால் ஒரு ஆண் மகனாக தனக்கு எவ்வளவு அவமானம் என்று அதிலே உழன்று கொண்டிருந்தவனுக்கு உள்ளுக்குள் கோபம் தீயாய் தகித்தது.

உயர் நீதி மன்ற வளாகத்தில் ‘ஏ.டி’ (ஆதிதேவ் A.D) என்றால் அவ்வளவு மரியாதை. சிலருக்கு பயமும் கூட. நீதிபதிக்கே அவனிடத்தில் நல்ல மதிப்புண்டு. அதனால் அங்கிருக்கும் பலருக்கும் ஆதியின் தும்மல் கூட ஒரு சுவாரஸ்யமான பேச்சு. அப்படிப்பட்ட நிலையில் இருப்பவனின் திருமணம் நின்றால் எத்தனை தலையிறக்கம்.

தன்னை நிமிர்ந்து பார்த்து பேச அஞ்சுபவனெல்லாம், என்ன குறை என்று நேரடியாகக் கேட்டு பரிதாபம் கொள்வது போல் மனக்கண்ணில் வந்து போக, மொத்தமாக கோபத்தின் பிரவாகமாக நின்றிருந்தான் ஆதி.

சந்தியா பயத்தில் மேலும் மேலும் ஒடுங்க, பேச்சுக்கள் வராது நடுங்கினாள்.

நீண்ட மௌனத்திற்கு பின்,

“வெல்…” தன் தந்தையை பார்த்து மொழிந்தவன், அந்த ஒற்றை வார்த்தையில் தன்னை மீட்டிருந்தான். 

“கல்யாணத்தை நிறுத்திடுங்க ஐயா” என கூறியவன் அமைதியாக அங்கிருந்து நகர, அவனின் கரம் பற்றி நிறுத்தியிருந்தார் கற்பகம்.

“என்ன கண்ணு ஆயிப்போச்சு இப்போ. பொசுக்குன்னு கல்யாணத்தை நிறுத்த சொல்லிட்டு போற?” ஒன்றுமே நடவாதது போலிருந்தது கற்பகத்தின் பேச்சு.

“ஏன் உங்களுக்கு தெரியாதா?”

ஆதியின் நேரடித் தாக்குதலில் சற்று தடுமாறியவர்,

“ஏட்டி, வாய தொறந்து பதில் சொல்லட்டி” என்று சந்தியாவின் கன்னம் இடித்தார்.

“சம்மதம்.”

கற்பகத்தின் இடிக்கு பயந்தே அவள் வாய் திறந்திருந்தாள். நிச்சயம் முடிந்ததும் அனைவரும் கிளம்பட்டுமென்று ஆதி காத்திருக்க, அந்நேரம் கற்பகத்திற்கு போதுமானதாக இருந்தது.

வேகமாக சந்தியாவின் அறைக்குச் சென்றவர்,

“இங்க பாரட்டி, மொத சொன்னதுதான் இப்பவும்…” என்று கற்பகம் பாட்டி ஆரம்பித்ததுமே, தன்னை அழைத்துபோக வந்த போது அவர் பேசிய பேச்சு நினைவுக்கு வந்தது.

“என் பேரனை கட்டிக்க உனக்கு கசக்குதோ! அவனை கட்டிக்கிட்டா(ல்) இந்த பண்ணைக்கே நீதேன் ராணி. மூர்த்தி அவன் புள்ளைக்காக எம்புட்டு சேர்த்து வச்சிருக்கான் தெரியுமா? சும்மா பெணாத்தாம இரு. அவனை கட்டிக்க மாட்டேன் அப்படி இப்படின்னு எதாவது இனிமேல் உளறுன அப்படியே உன் வாய்க்குள்ள விஷத்தை ஊத்திப்புடுவேன்.”

கற்பகம் சொன்னால் செய்துவிடுவார். அதற்கு பயந்துதான் தயாராகி வந்திருந்தாள்.

இப்போது மீண்டும் வந்து மிரட்டவும் மொத்தமாக அவர் கட்டுப்பாட்டிற்கு சென்றுவிட்டாள்.

“செத்த நேரத்துல ஆதி உன்னை கூப்பிடுவான், அங்க வந்து உங்களை கட்டிக்க சம்மதமுன்னு மட்டுந்தேன் உன் வாய் திறக்கணும்” என்று எச்சரித்து சென்றார்.

சந்தியா சம்மதம் என்றதும் ஆதி மகிழ்ந்திடவில்லை. அவளை ஆராய்ச்சியாக பார்த்தான். வக்கீல் மூளை வேகமாக தவறென்று சிந்தித்தது.

“எதுக்கு சம்மதம்?” 

“உங்களை கட்டிக்கிட.”

“அப்படியா?” என்றவன் “என் கண்ணை பார்த்து சொல்லு” என்றான்.

அவனின் முகத்தை நிமிர்ந்து பார்க்க கூட அஞ்சி தயங்கியவள், கைகளை பிசைந்துகொண்டு நிற்க…

தன் தம்பிக்கு மகளை எப்படியாவது கட்டிக்கொடுத்திட வேண்டுமென்று நினைத்த அம்பிகா சூழ்நிலையை தன் கையில் எடுத்தார்.

“ஆதி அவளுக்கு உன்னை கட்டிக்கிட விருப்பந்தேன், என்ன கல்யாணம் ஆகிப்போச்சுன்னா ஆசைப்படி மேல படிக்க முடியாதோன்னு வேசனப்பட்டு இருக்கா(ள்). அதேன் மொகமெல்லாம் சோர்ந்து கிடக்கு” என்று காரணம் சொன்னார் அம்பிகா.

சந்தியாவுக்கு படிப்பின் மீதிருக்கும் ஆர்வம் அனைவருக்கும் தெரிந்ததுதான். அதனால் அனைவருக்கும் அக்காரணம் ஏற்புடையதாகவே இருந்தது. 

ஆனாலும், ஆதிக்கு நெருடலாகவே இருக்க…

“சரி அவள் படிக்கட்டும். கல்யாணத்தை நிறுத்திடுங்க” என்று மீண்டும் தன்னிலையிலேயே நின்றான்.

மூர்த்திக்கே மகனிடம் எப்படி என்ன பேசுவதென்று தெரியவில்லை. மௌனமாக நின்றார்.

“இது ஆதி வாழ்க்கை, அவன் மனசுக்கு என்னவோ ஒப்பல… வேண்டாததை வலுக்கட்டாயமாக செய்ய வேண்டாம்” என்று வேலுவும் ஆதிக்கு துணையாக பேச,

“ஏன் உன் பொண்ணை கட்டி கொடுத்திடலாமுன்னு திட்டம் போடுதீ(றீ)யோ” என்று உடனடியாகக் கேட்டிருந்தார் தங்கமணி.

அதற்கு அடுத்து ஒருநொடி கூட வேலு அங்கு நிற்கவில்லை. அறைக்கு சென்றுவிட்டார்.

“கல்யாணம் கட்டிக்கிட்டு படிச்சிக்கிட்டா போச்சு, அவ ஏதோ சின்னப்புள்ள… படிப்பு விடயத்தை எப்படி சொல்லுறதுன்னு வெசனப்பட்டு கலங்கி நிக்கா… நீ சாதாரணமா கல்யாணத்தை நிறுத்திடுங்க சொல்லுற, பொம்பள புள்ள கல்யாணமுன்னா உனக்கு சுலுவா போச்சா” என்று தங்கமணி எகிற,

“அதெல்லாம் நாலு பேரு பார்க்க நடந்த நிச்சயம் கல்யாணத்துல தான் முடியும். நிறுத்தவெல்லாம் முடியாது” என்று கற்பகம் கூறினார்.

“நான் படிக்க முடியாமல் போயிடுன்னு தான் கவலைப்பட்டேன் மாமா!” 

சந்தியாவுக்கு அருகில் நின்றிருந்த அம்பிகா யாரும் அறியா வண்ணம் அவளின் கைகளில் கிள்ளி ஜாடை செய்ய, கற்பகம் சொல்லிக் கொடுத்ததை அப்படியே கிளிப்பிள்ளையாய் சொன்னாள் சந்தியா.

அனைவரும் மாற்றி மாற்றி காரணத்தை ஒன்றுபோல் சொல்ல,

‘தாம்தான் தேவையில்லாமல் அவசரப்பட்டு விட்டோமோ’ என்று நினைத்த ஆதியும்… அவமானத்திற்கு பயந்து அரைமனதாக தலையாட்டினான். இருப்பினும் மனம் முரண்டத்தான் செய்தது.

“நடப்பது நடக்கட்டும்.” ஆதி சென்ற பிறகு தான் மற்றவர்களுக்கு மூச்சே வந்தது.

“மாமனை கட்டிக்க என்னத்தா ரோசனை, உன்னை தங்கமா பார்த்துக்குவான் ராசாத்தி” என்று சந்தியாவின் கன்னம் வழித்த காமாட்சிக்கு சந்தியாவின் மனம் தெரியவில்லை.

அறைக்குள் வந்த சந்தியா, கைப்பாவையாக தான் ஆட்டி வைக்கப்பட்டதாக குமுறினாள். ஆதியின் கோபத்தை முதல் முறை கண்டவள், “என்ன இம்புட்டு கோபம் வருது, இவுகல கட்டிக்கிட்டா அம்புட்டுத்தேன்… அதுக்கு கல்யாணம் கட்டாமலே இருந்திடுவேன்” என்று பலவாறு யோசிக்கத் தொடங்கினாள்.

ஏற்கனவே பல்வேறு குழப்பத்தில் இருந்தவளுக்கு ஆதியின் கோபம் அச்சத்தை விட, அவன் முரடன் என்னும் எண்ணத்தை சந்தியாவின் மனதில் பதிய… “ஆதியை கல்யாணம் செய்துகொள்ளக் கூடாது” என்று, அதற்கு வழி தேடி மூளையை கசக்கினாள்.

 

Epi 4

ஏந்திழையின் ரட்சகன் 4

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
8
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments


    1. சூப்பர் சந்தியா