Loading

அத்தியாயம் 19 :

நள்ளிரவில் வெளியில் சென்ற ஆதி காலை ஒன்பது மணியாகியும் வரவில்லை என்றதும் அவனை அலைபேசியில் தொடர்பு கொண்டு, எப்போது வருவான் என்பதை கேட்டறிந்த நிரலி… சமையலும் வள்ளி அக்கா செய்துவிடுவதால் என்ன செய்வதென்று தெரியாமல் அமர்ந்தவள் தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராக அழைத்து கதைக்கத் தொடங்கினாள்.

அந்நேரம் கற்பகம் எங்கோ கிளம்பிச் சென்றார்.

நிரலியிடம் பேசும் போது அவளின் குரலில் தெரிந்த தெளிவு உற்சாகமே, அவள் சந்தோஷமாக இருக்கிறாள் என்பதை அவர்களுக்கு உணர்த்திட பெரியவர்களின் மனம் நிறைந்து போனது.

காமாட்சி நாசூக்காக அவர்களின் இல்லற வாழ்வைப் பற்றி வினவ,

“அம்மம்மா” என்று நிரலி சிணுங்கியதிலியே அனைத்தும் அவருக்கு விளங்கிட, மகனின் வாழ்வு தொடங்கியதை நினைத்து அத்தாயுள்ளம் பூரித்து மகிழ்ந்தது.

“ரொம்ப சந்தோஷம் அம்மு.”

காமாட்சியின் குரலில் அவ்வளவு நிறைவு.

“இதுக்குத்தான் கண்ணு நாங்க ஆசைப்பட்டோம்” என்று மூர்த்தி கரகரத்த குரலில் நெகிழ,

“மாமா என் மேல் ரொம்ப பிரியம் வச்சிருக்கிறார் தாத்தா… பிரிவுக்கான காரணம் ஏதோ இருக்கு. அது மாமாவே சொன்னால் தெரிஞ்சிக்கலாம். இல்லைன்னா அவர் செயலுக்கு பின்னால் எனக்கு நம்பிக்கை இருக்கு” என்றாள்.

வெளிப்படையாக பேசி மூத்தவர்களின் கலக்கத்தை மொத்தமாக கலைந்தாள்.

கணவனை விட்டுக்கொடுக்காத நிரலியின் பாங்கு அவர்களுக்கு இன்னும் அதீத மகிழ்வை கொடுத்தது.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலாக அனைவரிடமும் பேசியவள், இறுதியில் சூர்யாவிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

சூர்யா மற்றவர்கள் போல் நிரலி சொல்லுவதை எளிதில் நம்பாது பல கேள்விகள் அவளிடம் கேட்டு ஒரு வழியாக்கினான்.

இறுதியில், “இன்னும் எண்ணி பத்து மாசத்துல உன்னை மாமான்னு கூப்பிட என் பிள்ளை வந்திடும், அதுக்கு அப்புறமாவது நம்புவியா?” நிரலி சற்று சத்தத்தைக் கூட்டி பேசவுமே சூர்யா அமைதியாகி அவளை அப்பேச்சிலிருந்து விடுவித்தான்.

“சூர்யா நீ நினைப்பது போலில்லைடா! மாமா மேல் நான் வைத்திருக்கும் காதலைவிட, அவர் என் மேல் வைத்திருக்கும் காதல் அதிகம் டா!”

“நீ சொல்வது உண்மையாக இருந்தால் அதுவே எனக்கு போதும் அம்மு.” நிரலி வாழ்வு சிறக்க வேண்டும். இனியாவது எவ்வித துன்பமுமில்லாது அவள் வாழ வேண்டுமென்ற உண்மையான அக்கறை சூர்யாவிடம்.

அதன் பிறகு இருவரும் வேறு கதைகள் பேசிக்கொள்ள, வீட்டு கேட்டிற்குள் ஆட்டோ சத்தம் கேட்க,

“ஒரு நிமிஷம் சூர்யா” என்று சொன்னவள், அலைபேசியை அணைக்காது யாரென்று சென்று பார்க்க…

ஆட்டோவிலிருந்து இறங்கினார் கற்பகம் மற்றும் சந்தியா.

‘எப்படியும் ஆதி தன்னை அவன் வீட்டிற்கு அழைக்கப் போவதில்லை. இந்த அம்மத்தா மூலமாகவும் முகவரி தெரியப்போவதில்லை. அத்தோடு ஆதி பேசியதை வைத்து அவனிடம் ஒன்றும் செய்ய முடியாது, நிரலியிடம் தான் இனி ஆட்டத்தை ஆட வேண்டும்’ என்று கணக்கிட்ட சந்தியா,

கற்பகத்திடம், வாட்ச்மேனை ஆட்டோ பிடித்து வரச்சொல்லி… வீட்டிற்கு முன்பே அதிலேறுமாறு செய்து, தான் தங்கியிருக்கும் விடுதியின் முகவரியை ஆட்டோ ஓட்டுனரிடம் தெரிவித்து… அங்கு வரவழைத்து… அதே ஆட்டோவில் ஆதியின் வீடு வந்து சேர்ந்தனர்.

இவ்வளவு நேரமிருந்த மகிழ்வு துணி கொண்டு துடைத்தார் போல் காணாமல் போனது. நிரலியின் முகம் நிர்மலமாகக் காட்சியளித்தது.

“நீ சொல்லலைன்னா என் பேத்தியை என்னால் கூட்டியாற முடியாதா?

என்னடி பார்த்திட்டு இருக்க… உன் அக்காவை உள்ள வான்னு கூப்பிட உனக்கொரு ஆளு சொல்லணுமா?” கற்பகத்தின் அதிகாரம் தூள் பறந்தது.

“என்னை பார்த்த சந்தோஷத்தில் வாயடைத்து போயிட்டாள் அம்மத்தா” என்ற சந்தியா தன்னுடைய வீடு போல் உரிமையாக உள்நுழைய போக,

“வலது காலை வச்சி போடி” என்றார் கற்பகம்.

அவ்வார்த்தையில் நிரலி மொத்தமாக அதிர்ந்தாள்.

அனைத்தையும் அலைபேசி வழியாகக் கேட்டுக்கொண்டிருந்த சூர்யாவுக்கு, சந்தியாவின் குரலும்… கற்பகத்தின் வார்த்தையும் அச்சரம் பிசகாமல் செவியில் விழ,

‘இந்த கிழவி இதுக்குத்தான் அங்கே போனதா? சந்தியா கூட உறவில் தான் இருக்குப்போல’ என்று நினைத்தவன்,

“ஹலோ… ஹலோ…” என்க அதனை கேட்கும் நிலையில் நிரலியில்லை.

அதிர்ந்தவள் சிலையாகிப் போயிருந்தாள்.

நிரலியிடமிருந்து சத்தமின்றி போகவே, தங்கையின் தற்போதைய நிலையை சூர்யா அவதானித்தான்.

‘சந்தியா சாதாரணமாக வந்திருப்பதற்கெல்லாம் நிரலி இப்படி அதிர்ச்சியாகி இருக்க மாட்டாள். அந்த கிழவி அங்கு அவளை ஏதேனும் காயப்படுத்தியிருக்கும்.’

சரியாக யூகித்த சூர்யா அடுத்த அரை மணிநேரத்தில் தன்னுடைய குடும்பத்தை அழைத்துக்கொண்டு சென்னை வர புறப்பட்டிருந்தான்.

*****

அரசு மருத்துவமனைக்கு சென்ற ஆதி, மருத்துவமனையின் பின்புறம் இருக்கும் ஆராய்ச்சி கூடத்திற்கு வந்தான்.

அங்கிருந்த மருத்துவர் டி.என்.ஏ பரிசோதனை செய்ய பட்ட ரிப்போர்ட்டை அளிக்க, அதனை கையில் வாங்கி பார்த்தவனுக்கு அளவில்லா மகிழ்வு. முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. மகிழ்வில் கண்கள் கலங்கி விடும் போலிருந்தது.

‘விஸ்வநாதன் நீ மொத்தமாக காலி’ என தனக்குள் சொல்லிக் கொண்டவன், அம்மருத்துவருக்கு நன்றிகள் பல கூறி திரும்பி வந்தான்.

ராகவை சேர்த்திருக்கும் மருத்துவ மனைக்கு வந்த ஆதி… ஸ்வேதாவிடம் ரிப்போர்ட்டை காண்பித்து அதிலிருக்கும் மருத்துவ வார்த்தைகளைப் பற்றி நன்கு கேட்டு அறிந்து கொண்டான்.

“இது உங்க வழக்கு சம்மந்தப்பட்ட விடயம், இதில் நான் தலையிடக் கூடாது. இருந்தாலும், இதுக்கும் ராகவிற்கு விபத்து நேரிட்டதுக்கும் என்ன சம்மந்தம் ஆதி.”

ஸ்வேதா கேட்டதும் ஆதியின் முகம் குழப்பத்தை தாங்கியது.

“என்ன ஆதி யோசிக்கிறாய்?”

“ராகவிற்கு இதனால் தான் விபத்து நேரிட்டதென்று உனக்கு எப்படித் தெரியும்?” ஆதியின் கண்களில் கூர்மை.

“இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் விஸ்வநாதன் எனக்கு கால் செய்திருந்தார்.”

ஆதி இங்கு மீண்டும் வருவதற்கு முன் தான் ஸ்வேதாவிற்கு அழைத்திருந்தார்.

“உன் காதலன் பிழைத்து வந்தாலும், உன்னோடு வாழ வேண்டுமென்றால்… அவனை கூட்டிக்கொண்டு எங்காவது சென்றுவிடு” என்று கூறிய விஸ்வநாதன்,

“ராகவை ஆஸ்பத்திரி படுக்கையில் படுக்க வைத்த எனக்கு, சுடுகாட்டில் படுக்க வைக்க ரொம்ப நேரமாகாது” என்று மிரட்டலாகக் கூறினார்.

“டேமிட்…” ஆதியின் பற்கள் கோபத்தில் கடிப்பட்டன.

“ராகவ் தான் ஆர்.கே’வின் மகனென்று சொல்லிக் கொண்டு கோர்ட் பக்கம் வந்திடக் கூடாதாம்.” ஸ்வேதா சொல்லியதும் ஆதிக்கு ஒன்று நன்றாக விளங்கியது.

‘ராகவ் விஸ்வநாதனிடமிருந்து ஆர்.கே’வின் உண்மையான வாரிசை காப்பாற்ற, தான்தானது என்று சொல்லியிருக்கின்றான். அதனால் அவனுக்கு இந்நிலை.’ அந்நொடி ராகவின் நட்பை நினைத்து ஆதி கர்வம் கொண்டான்.

வாய் வார்த்தையில் உயிர் கொடுப்பேன் என சொல்லத் தயங்கும் காலத்தில், உண்மையிலேயே உயிர் கொடுத்த ராகவை எண்ணி பெருமையாகவே இருந்தது.

“ராகவ் எழுந்து வரட்டும், அந்த விக்ஸ் மிட்டாயிக்கு இருக்கு” என்றான் ஆதி.

ஆதி விக்ஸ் மிட்டாய் என்று விஸ்வநாதனை சொல்லியதைக் கேட்ட ஸ்வேதா, “நல்ல பெயர்” என்று சொல்லி சிரிக்க… “நீ இப்படி சிரிச்சிட்டே இருக்கவாவது ராகவ் சீக்கிரம் கண் திறப்பான் ஸ்வே” என்ற ஆதிக்கு அதே புன்னகையையே பதிலாகக் கொடுத்தாள்.

சில நிமிட அமைதிக்கு பிறகு,

“அந்த விஸ்வநாதனுக்கு இன்னொரு அதிர்ச்சி கொடுக்கலாமா ஆதி.”

ஸ்வேதா கேட்டதும் ஆதி கேள்வியாய் புருவம் உயர்த்தினான்.

“ஆர்.கே எனக்கும் அப்பா தான் ஆதி.”

“வாட்…”

ஆதி இருக்கையிலிருந்து எழுந்து விட்டான்.

“என்னுடைய அம்மா அவருக்கு கணவரென்றால், எனக்கு அப்பா தானே ஆதி.” எவ்வித உணர்வு பிரதிபலிப்புமின்றி அமைதியாகக் கூறிய ஸ்வேதாவை சிறு அதிர்வோடு பார்த்திருந்தான் ஆதி.

ஆர்.கே’வின் வாரிசு யாரென்று தொடங்கிய அவனின் தேடுதலில்… அடி ஆழம் வரை அறிந்து வைத்திருக்கிறேன் என்று ஆதி நினைத்திருக்க… திடீரென ஸ்வேதா இவ்வாறு சொன்னால் அதிர்வு ஏற்படத்தானே செய்யும்.

“என்ன ஆதி… விஸ்வநாதனுக்கு ஷாக் கொடுக்க உனக்கு கொடுத்துட்டனா?”

கேட்டவளை ஆதி அமைதியாக ஏறிட, ஸ்வேதா கடந்த காலத்தில் நடந்ததை கூறினாள்.

அதில் பல செய்திகள் ஆதி அறிந்தவை தான், இருப்பினும் விஸ்வநாதனின் கண்ணில் விரல்விட்டு ஆட்ட, மேலும் சில தகவல்கள் கிடைத்ததில் ஆதிக்கு மேலும் பலம் சேர்ந்ததாகியது.

“அப்போ ஆர்.கே சார் மனைவி உயிரோடு தான் இருக்காங்க?”

ஆதியின் கேள்விக்கு ஸ்வேதாவின் தலை ஆமென்று ஆடியது.

“அம்மா விடயம் கேள்விப்பட்டால் ரொம்ப சந்தோஷப்படுவாங்க ஆதி. நடந்ததை நினைத்து நினைத்து அவங்க அழாத நாளில்லை.” ஸ்வேதாவின் குரலில் ஒரு சோகம்.

“இன்னும் சில நாட்கள்… பிறகு சொல்லிக்கொள்ளலாம்.”

“ஏன்?”

“ராகவை நீ விரும்புவது… எனக்கே இன்று தான் தெரியும். ஆனால் அந்த விஸ்வநாதன் என்னைச் சார்ந்தவர்கள் உட்பட அனைவரையும் கண் காணித்திருக்கின்றான். உன்னை மிரட்டினால் நீ உன் காதலுக்காக ராகவை காக்க அவன் சொல்வதை செய்வாயென்று, உனக்கு கால் செய்திருக்கின்றான்.

அப்படியிருக்கையில், ஆர்.கே’வின் மனைவி உயிரோடு இருக்கின்றாரென்று தெரிந்தால்… அடுத்த கணம் ராகவின் நிலை தான் அவருக்கும்.

அதனால் உன் அம்மா சற்று விலகியே இருக்கட்டும்.

வழக்கு நடைபெறும் அன்று நேரடியாக கோர்டிற்கு வரவழைத்து விடலாம்.”

ஆதி சொல்வதும் ஸ்வேதாவிற்கு சரியென்றே பட ஒப்புக்கொண்டாள்.

அதன் பிறகு இருவரிடமும் மௌனமே ஆட்சி செய்தது.

ஆதியின் முகம் தான் மௌனத்தை கொண்டிருந்ததே தவிர, அவனின் மனம் பலவற்றையும் சிந்தித்துக் கொண்டிருந்தது.

‘எத்தனை தில்லு முல்லு… சதி வேலைகள்.’ நினைக்க நினைக்க விஸ்வநாதனை கொல்லும் ஆத்திரம். எரிமலைக்கு நிகராக அவனின் மனம் கங்குகளாகக் கனன்றது.

ராகவ் கண் திறக்கும் நொடிக்காக இருவரும் காத்து கிடக்க, மாலை ஆனதே தவிர ராகவிடம் சிறு அசைவு கூட தென்படவில்லை. மரக்கட்டை போல் படுக்கையில் கிடந்தான்.

“எவ்வளவு நேரம் ஸ்வே இப்படியே இருக்கப்போற… அதான் இன்னும் டவெண்ட்டி ஹவர்ஸ்க்கு மேல இருக்கே! நீ வீட்டுக்கு போயிட்டு வா!”

ஆதியின் பேச்சிற்கு மறுப்பாய் தலையசைத்தாள் ஸ்வேதா.

“சொன்னா கேளு ஸ்வே…”

“இல்லை ஆதி… குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் ராகவ் எப்ப வேண்டுமானாலும் கண் விழிக்கலாம். அப்போ நான் அவன் பக்கத்தில் இருக்கணும்” என்றவள், “நீ வேண்டுமானால் வீட்டுக்கு போயிட்டு வா, நிரு உனக்காக காத்திருப்பாள்” என அவனை வீட்டுக்கு போகுமாறு கூறினாள்.

“நிரு… இதுவும் நல்லாத்தான் இருக்கு. என் பேபிக்கு எல்லாமே அழகாத்தான் இருக்கும்.”

ஸ்வேதா நிரலியை நினைவு படுத்தவும் ஆதியின் எண்ணம் முழுக்க நொடியில் தனதாக்கியிருந்தாள் ஆதியின் பேபி.

“இருக்கலாம்… ஆனால், நீ சொல்லும் பேபி அளவிற்கு இல்லை.”

இருவருமே சூழலின் இறுக்கம் தளர்ந்து சற்று புன்னகைத்துக் கொண்டனர்.

“ஓகே ஆதி, நீ வீட்டுக்கு போயிட்டு வரதென்றால் வா” என்ற ஸ்வேதா,

“ராகவுக்கு இன்ஜெக்ஷன் போட நேரமாச்சு… இன்னும் டாக்டர்ஸ் யாரும் வரலையே” என அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ராகவை அப்ஸர்வ் செய்யும் மருத்துவர் வந்து மருந்தினை ஐவி மூலமாக ராகவின் உடலில் செலுத்திவிட்டு, மானிட்டரையும் ஒரு பார்வை பார்த்துச் சென்றார்.

அதன் பின்னர் ஆதியும், “ஒரு மணி நேரத்தில் வந்துவிடுகிறேன்” என்று சொல்லி வீடு நோக்கி புறப்பட்டான்.

*****

வாயிலிலே நிரலி சமைந்து நிற்க,

கற்பகத்தின் சொல்படி வலது காலை எடுத்து வைத்து உள் நுழைந்த சந்தியா வீட்டின் உள் அமைப்பைக் கண்டு விழி விரித்தாள்.

ஆட்டோவிலிருந்து இறங்கிய போதே வீட்டின் வெளி அமைப்பையும், தோட்டத்தையும் கண்டு வாய் பிளந்தவள், உள்ளே வீட்டின் விஸ்தீரத்தையும்… இன்டீரியர் அமைப்புகளையும் கண்டு உள்ளம் குமைந்தாள்.

“என்னடி அப்படி ஆவென பாக்குற… நியாயமா இந்த வீடு உனக்கு சொந்தமாகியிருக்கணும்… எல்லாத்தையும் நீயே கெடுத்துக்கிட்ட” என்ற கற்பகம் சேலை தலைப்பை இடுப்பில் சொருகியவாறு… நிரலியை மிதப்பாக ஒரு பார்வை பார்த்து இருக்கையில் அமர்ந்தவர், முன்னிருந்த டீபாயின் மீது கால் நீட்டினார்.

“இந்த ஆட்டோ என்னா குலுங்கு குலுங்குது” என்றவர் நிரலியை பார்த்து “ஏய் இங்க வா” என்றழைத்தார்.

“நியாயமா இந்த வீடு உனக்கு சொந்தமாகியிருக்கணும்…” என்று கற்பகம் சந்தியாவிடம் சொல்லியதில் வலித்த மனதுடன் நின்றிருந்த நிரலி கனத்த கால்களை மெல்ல நகர்த்தி அவர் அருகில் வந்தாள்.

“தைலம் இருந்தால் எடுத்துட்டு வந்து தேய்த்துவிடு” என்று காலை ஆட்டி காண்பித்தார்.

நிரலியும் வயதில் மூத்தவர், செய்வதில் தவறில்லை என்ற எண்ணத்தில் கற்பகத்தின் காலில் தைலத்தை தடவி தேய்க்க போக,

“பாப்பா இந்தா ஸ்ப்ரே… இதை காலில் அடிச்சு விடு. தேய்க்க வேண்டாம். வலி நொடியில் காணாமல் போய்விடும்” என்றவாறு, நடப்பதை பார்த்துக் கொண்டிருந்த வள்ளி… நிரலியின் செயலை தடுக்கும் விதமாக வந்தவர் தானே அதனை கற்பகத்தின் காலில் அடித்து…

“அவ்வளவு தான் பாப்பா… சரியாகிடும். நீ வா, உறவுக்காரவுக வந்திருக்காங்க போல… அவுங்களுக்கு சமைப்போம்” என்று, எதை சொன்னால் கற்பகம் தடுக்கமாட்டாரோ அதற்கேற்ப பேசி நிரலியையும் தன்னுடன் கிச்சனிற்குள் அழைத்துச் சென்று விட்டார்.

அங்கு நடந்த எதையும் காதில் வாங்காது வீட்டையே இன்ச் பை இன்ச்சாக பார்வையிட்டுக் கொண்டிருந்த சந்தியாவின் மனதில், அன்று அவள் ஆதியின் வீட்டை புறா கூண்டு என்று சொன்னது நினைவில் வர… ‘அனைத்தையும் கை நழுவ விட்டுவிட்டோமே!’ என வெளிப்படையாகவே வருந்தினாள்.

“இப்போ வருந்தி என்ன பயன்.” கற்பகம் நொடித்துக் கொண்டார்.

ஒருமுறை சந்தியா ஆதிக்கு அழைக்க, அவன் அழைப்பை எடுக்காமல் போக, வீடும் தெரியாததால் நீதி மன்றத்திற்கே சென்று அவனை சந்தித்தால்.

அங்கு அவளை எதிர்பாராதா ஆதி,

“உன் படிப்பிற்கு உதவி செய்ததோடு என் வேலை முடிந்தது. என்னைத் தேடி வரும் வேலையெல்லாம் வேண்டாம்” என்று அப்போதே முகத்தில் அடித்தார் போல் சொல்லிவிட, திரும்பி சென்றவளை நிறுத்தி… அக்கா மகளாயிற்றே! என்னயிருந்தாலும் அவளின் பாதுகாப்பில் அக்கறை கொண்டவனாக, “ஏதேனும் முக்கியத் தேவையென்றால் மட்டும் என் நெம்பருக்கு கூப்பிடு” என்று சொல்லி அனுப்பி வைத்தான்.

அன்று நீதி மன்றத்திலும், அதன் பிறகு செய்தித்தாள்களில் சென்னை பிரிவில் ஆதியை பற்றி வரும் செய்திகளை வைத்தும் அவனின் உயரத்தை அறிந்தவளுக்கு மனம் வெதும்பியது.

இப்போதும் அதை சொல்லி சந்தியா கற்பகத்திடம் புலம்பினாள்.

“என்னயிருந்தாலும் மாமா என்னை கட்டிக்கத்தான் ஆசைப்பட்டார் அம்மத்தா… எந்நேரம் நானே கெடுத்துகிட்டேன்.”

நேற்றிரவு ஆதி சொல்லியது எதுவும் அவளின் நினைவில் இல்லை போலும்.

“இப்பவும் உன் மேல ஆசை இருக்குடி… அதான் உன்னைய படிக்க வைக்குறான். நீ கொஞ்சம் ஒழுங்கா இருந்திருக்கலாம்.”

“அப்போ ஏதோ புத்திகெட்டு செஞ்சிபுட்டேன் அம்மத்தா.” உண்மையிலேயே வருத்தம் தான் அவளுக்கு, ஆனால் அது ஆதியின் உயரம் மற்றும் வளமையினால் வந்தது.

“இப்பவும் ஒன்னுமில்லை உனக்குத்தான் இங்க ஆள கொடுத்து வச்சிருக்கு. ஏதோ தாலி கட்டிட்டோமுன்னு அவளோடு வாழுறான். அதுவும் இந்த நாலு நாளில் அப்படி என்னத்த வாழ்ந்திருப்பாக.” கற்பகத்தின் பேச்சு எல்லை மீறியிருந்தது.

அவரை போன்றோருக்கு என்னத் தெரியும் காதலைப்பற்றி… காதலுக்கு நாள் கணக்குத் தேவையில்லை… காதல் வாழ இரு மனங்கள் மட்டும் போதும்.

அவர்களின் பேச்சு கிச்சனிலிருந்த நிரலிக்குத் தெளிவாகக் கேட்க, அவளின் கண்களில் நீர் நிறைந்து விட்டது.

இது ஆதியின் மீது வந்த நம்பிக்கையின்மையால் இல்லை… கொண்டவனை மற்றவர்கள் உரிமை கொண்டாடும் போது தன்னால் வாய் திறக்க முடிக்கவில்லையே என்கிற குமுறல், ஆதங்கம்.

“மாமா.” நிரலியின் மனம் விடாது ஜெபித்தது.

கற்பகம் மற்றும் சந்தியாவின் உரையாடல் வள்ளிக்கும் தெளிவாக செவியில் நுழைய,

“தம்பிக்கு போன் போட்டு வர சொல்லு பாப்பா” என்றார்.

“இல்லை வேண்டாக்கா… ஏதோ வேலையாக போயிருக்கிறார். தொல்லை செய்ய வேண்டாம்.” மறுத்துவிட்டாள்.

“தம்பி அன்னைக்கே சொல்லுச்சு பாப்பா… யாராவது வந்தால் போன் பண்ணுங்கன்னு, நானாவது பண்ணுறேன்.”

“நான் அவர்கிட்ட சொல்லிக்கிறேன் அக்கா.”

அதன் பிறகு வள்ளி சமையலில் இறங்கிட, நிரலியின் பார்வை அதிலிருந்தாலும் மனம் வெகுவாக குழம்பியிருந்தது. தனக்குத்தானே சுய அலசலில் ஈடுபட்டிருந்தாள்.

மனதில் பல கேள்விகள் அணி வகுத்து நின்றன. அதற்கெல்லாம் பதில் தெரியாத போதும், அவளால் ஆதியை சந்தேகிக்க முடியவில்லை.

ஏனென்றால், இந்த நான்கு நாட்களில் அவன் அவளிடம் காட்டிய காதலின் அளவு அத்தகையது. காதலை அடி ஆழம் வரை காண்பித்திருந்தான்.

கணவனின் காதலை கண் கொண்டு பார்த்து… இதயத்தால் உணர்ந்து… உணர்வுகளால் அனுபவித்தவளால், கற்பகம், சந்தியா சொல்லியதை போல் எண்ணத் தோன்றவில்லை.

கற்பகத்தின் ஆட்டமே அதுதான். சந்தியாவுக்கு ஆதி செய்த உதவியை வைத்து, அவன் மனதில் சந்தியா தான் இருக்கிறாள் எனும் எண்ணத்தை நிரலியின் மனதில் விதைத்து… அதனை சந்தேகமாக உருமாற்றம் பெறச் செய்து, அவளை வீட்டை விட்டு அனுப்புவது.

ஆனால் நிரலி அவர்களின் கற்பனைக்கு அப்பாற்பட்டு… தன் கணவனின் காதலில் மூழ்கி, ஆதி மீது அவன் கொண்ட நம்பிக்கையை காட்டிலும் பன் மடங்கு அவள் கொண்டுள்ளாள்.

நிரலியின் இத்தகைய நம்பிக்கையை காணும் போது கற்பகம் பெரும் புயலில் சிக்கித் தவிக்கப் போகிறார்.

 

Epi 20

ஏந்திழையின் ரட்சகன் 20

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
13
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்