Loading

அத்தியாயம் 18 :

ஆதி விஸ்வநாதனின் அழைப்பினை ஏற்க,

“என்ன ஏ.டி, உன் ஜூனியர்… ச்ச… ச்ச… ஜூனியர் தப்பா சொல்லிட்டேன். அந்த ஆர்.கே வாரிசு எப்படியிருக்கின்றான்.?”

விஸ்வநாதன் அவ்வாறு கேட்டதும் ஆதிக்கு உடல் மொத்தமும் அதிர்ந்தது.

‘என்ன சொல்லுகிறான் இவன்?’ ஆதியின் மனம் கேள்வி கேட்டது.

“என்ன ஏ.டி பேச்சினையே காணோம். எனக்கு எப்படி தெரிந்ததென்றா?” என்ற விஸ்வநாதன்,

“நான் விஸ்வநாதன்டா… ஆனானப்பட்ட ஆர்.கே’வையே ஒன்றுமில்லாமல் செய்த எனக்கு நீயெல்லாம் எம்மாத்திரம்” என கொக்கரித்தார்.

விஸ்வநாதன் பேச்சு ஆதிக்கு அவ்வளவு கோபத்தை அளித்தது. இருப்பினும் அமைதி காத்தான்.

இப்போது கோபத்தை காட்டுவதைவிட செயலில் அவனை வீழ்த்த நினைத்தான் ஆதி. அதற்கே இந்த அமைதி.

“என்ன ஏ.டி பயந்துட்ட மாதிரி தெரியுது…” விஸ்வநாதன் நக்கல் குரலில் வினவினார்.

…..

“முதல் முறை என்னிடம் தோற்க போகிறாய் ஏ.டி.” இடியென சிரித்தார்.

…..

“இனி உன்னால் பேசவே முடியாது.”

…..

“ஒருவேளை உன் ஜூனியர் உயிரோடு இருந்தால் கோர்ட்டில் சந்திக்கலாம்.” வென்றுவிட்ட மிதப்பு விஸ்வநாதனிடம். முடிவு முழுமையடையாமல் வெற்றி தோல்வியை தீர்மானிக்கக் கூடாதென்று வயதில் மூத்தவருக்கு தெரியவில்லை. இப்போதே வென்றுவிட்டதாக ஆடினார்.

‘இந்நேரத்தில் நிதானம் ரொம்ப ரொம்ப முக்கியம்.’ தனக்குள்ளே சொல்லிக்கொண்ட ஆதி, அதுவரை தரையிலேயே அமர்ந்து… ராகவிருக்கும் அறையையே வெறித்திருந்த ஸ்வேதாவை கை பிடித்து தூக்கி இருக்கையில் அமர வைத்தான்.

ஸ்வேதாவை பார்க்கும்போது அவளுக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்ற கவலை தோன்றியது.

“ஸ்வே ஆர் யூ ஓகே?” என்றவன் அவளருகில் அமர்ந்து, “ராகவிற்கு ஒன்றும் ஆகாது, இதைவிட பெரிய பெரிய விபத்தில் சிக்கியவர்களை எல்லாம் சாதாரணமாக ட்ரீட் பண்ண நீயே இப்படி இடிந்து போகலாமா?” என்க அவளிடத்தில் பெரும் கேவல் வெளிப்பட்டது.

“அவர்களெல்லாம் என் ராகவ் இல்லையே ஆதி… எவ்வளவு பெரிய மருத்துவராக இருந்தாலும் தன்னுடைய சொந்தமென்று வரும்போது திடம் தொலைப்பது இயற்கை தானே! இப்போது நானும் அந்த நிலையில் தான் இருக்கின்றேன்” என்றவள் ஆதியின் தோள் சாய்ந்து கதறினாள்.

மூன்று அக்காக்களுடன் பிறந்து வளர்ந்தவனுக்கு ஸ்வேதாவின் இந்த நெருக்கம் சகோதரத்துவத்தையே உண்டாக்கியது. தன்னைப்போல் கரம் நீண்டு ஸ்வேதாவின் முதுகை வருடி விட்டான். அவனின் தேற்றலில் அவளின் அழுகை மெல்லிய விசும்பலாக குறைந்தது.

அந்நேரம் அங்கு வருகை தந்தாள் சந்தியா.

அங்கு தான் சந்தியா ஹவுஸ் சர்ஜன் பயிற்சி பெறுகிறாள். தூரத்திலேயே ஆதியை கண்டு விட்டவள், அவனுடன் ஒரு பெண் இருப்பதை கண்டு, அது நிரலியாக இருக்குமோ என ஒதுங்கியே நின்றாள்.

ஸ்வேதாவின் முகம் தெரிந்த பின்னரே அவளுக்கு மூச்சு சீரானது என்று சொல்லலாம்.

ஆதியின் தோளில் நிரலி சாய்ந்திருப்பதாக நினைத்துக்கூட பார்க்க முடியாத சந்தியாவுக்கு நிரலி மீதான ஆதியின் காதல் தெரிந்தால்?

ஸ்வேதா ஆதியின் தோழியென்று சந்தியாவுக்கு தெரியும்.

இங்கு பயிற்சிக்கு செல்லவிருப்பதை சந்தியா ஆதியிடம் சொல்லியபோது அவன் தான் ஸ்வேதாவைப் பற்றி சொல்லி “ஏதேனும் உதவி வேண்டுமென்றால் கேட்டுக்கொள்” என்று ஸ்வேதாவை சந்தியாவிற்கு அறிமுகம் செய்து வைத்திருந்தான். தோழி என்கிற தெளிவு இருந்ததால் நிரலியிடம் தோன்றிய உணர்வு ஸ்வேதாவிடம் தோன்றவில்லை.

ஸ்வேதாவின் விசும்பல் முற்றிலும் அடங்கியதும், “கண்ணை துடை ஸ்வே, முதலில் உன்னறைக்குச் சென்று ரெப்ரெஷ் ஆகிவா” என்றான்.

சரியென்ற தலையாட்டாலுடன் ஸ்வே எழ,

“ஹாய் மாமா!”

அழைத்த சந்தியாவின் குரலில் இருவரும் அவள் புறம் திரும்பினர்.

‘இவளெங்கே இங்கே!’ சிந்தித்தபோது தான் சந்தியா இங்கு பயிற்சி காலத்தில் இருப்பதே ஆதிக்கு நினைவு வந்தது.

சந்தியா அழைத்ததற்காக அவளை பார்த்து வரவேற்பாக தலையசைத்தவன், ஸ்வேதாவை அவளது அறைக்கு அனுப்பி வைத்தான்.

ஸ்வேதா நகர்ந்ததும்,

“என்ன இந்நேரம் வரை இங்கிருக்கிறாய். ஹாஸ்டலுக்கு போகவில்லையா?”

சந்தியா செல்லாது அங்கே நிற்கவும் எதாவது பேச வேண்டுமேயென்று கேட்டான்.

“அதை நான் கேட்க வேண்டும் மாமா. எனக்கு நைட் ஷிப்ட்.” என்றவள், “எதாவது கேஸா மாமா…?” என அவனிங்கிருப்பதன் காரணத்தை அறிய முற்பட்டாள்.

“நத்திங்” என்றவன் மேற்கொண்டு எதுவும் பேசாது இருக்கையில் சென்று அமர்ந்துகொண்டான்.

ஆதியையே பார்த்திருந்த சந்தியாவுக்கு அன்று தான் செய்தது தவறென்று உள்ளுக்குள் ஓலமிட்டது.

‘ஓய்ந்த தோற்றத்திலும்… ஹீ லுக்ஸ் மேன்லி.’ பட்டவர்த்தனமாக ஜொள்ளினாள்.

“அவசரப்பட்டு கல்யாணத்தை நிறுதிட்டியேடி!” வாய்விட்டே புலம்பினாள்.

சந்தியாவால் ஆதியை விட்டு கண்களை நகர்த்த முடியவில்லை. அப்போது இருந்த நிலையில் ஆதி அம்சமானவனாகவே இருந்தாலும் தனக்கு இணையில்லை என்று நினைத்து திருமணத்தை நிறுத்தியவள், இங்கு வந்த பிறகு அவனின் உயரம் அறிந்து, கை கிடைத்த பொக்கிஷத்தை நழுவ விட்டு விட்டதாக இன்றளவிலும் வருந்துகிறாள்.

“எதாவது சொன்னியா?”

சந்தியா பேசியது போல் தோன்றவும் அவ்வாறு வினவினான்.

இல்லையென்றவள் ஆதிக்கு அருகிலிருக்கும் இருக்கையில் அவனை உரசியவாறு அமர்ந்தாள்.

ஸ்வேதாவுடன் அவ்வளவு நெருக்கத்தில் தோன்றாத ஒப்பத்தக்காத உணர்வு சந்தியாவின் அருகில் ஆதிக்கு தோன்றியது. அடுத்த நொடி இருக்கையிலிருந்து எழுந்தவன் சுவற்றில் சாய்ந்து, ஒற்றை காலை மடித்து பின்னோக்கி சுவற்றில் பதித்தவனாக நின்றுகொண்டான்.

ஆதி ராகவிற்கு எப்படி இப்படியானதென்று ஆழ்ந்த யோசனையில் இருக்க… கன்னத்தில் கை வைத்து அவனையே பார்வையால் விழுங்கிக் கொண்டிருந்தாள் சந்தியா.

சந்தியாவின் பார்வையை அவனால் உணர முடிந்தது. சாதாரணமாக பார்க்கிறாளென்று அவன் நினைக்க, சிறிது நேரத்திற்கெல்லாம் அவளின் பார்வையில் ஆதியின் உடல் கூசியது.

சந்தியாவை கூர்ந்து நோக்கியவனின் பார்வையில், அவளின் பார்வை தவறானதாக பட…

“நீ கிளம்பு” என்றான்.

“இருக்கட்டும் மாமா… நீங்க இருக்கும்வரை இருக்கின்றேன்” என போவதை மறுத்தாள்.

“ஒரு முறை சொன்னால் உனக்கு புரியாதா?” வார்த்தையில் மட்டுமே கோபம். ஆதியின் முகம் என்னவோ அமைதியாகத்தான் இருந்தது.

“ஏன் மாமா… நான் உங்களோடு இருக்கக் கூடாது?”

“கூடாது.” அடக்கப்பட்ட கோபத்தில் சீறினான். சந்தியா மாமா என்றழைப்பது அவனுக்கு காய்ந்தது. அக்கா மகள் அழைக்கிறாள் என்றுக்கூட அவனால் அதனை ஏற்க முடியவில்லை.

அவனின் நிரலி மாமா என்று சொல்லும் ஒற்றை வார்த்தையில் மொத்த உலகமும் அவன் வசப்பட்டதாக உணர்வான். இதயம் ஒருவித இதத்தில் முங்கி எழும்.

ஆனால் சந்தியாவின் அவ்வழைப்பு ஏதோ ஒவ்வாத்தன்மையை ஏற்படுத்தியது.

“மாமா…”

அவள் ஏதோ சொல்ல வர கை காட்டி தடுத்தவன்,

“டோன்ட் சே திஸ் வர்ட் அகய்ன்” என்றான்.

அவனின் முகம் காட்டிய வெம்மையில் அரண்டுவிட்டாள் சந்தியா.

அந்நேரம் சரியாக அங்கு ஸ்வேதா வர, ராகவின் அறையிலிருந்த செவிலிப்பெண்ணும் வேகமாக ஓடி வந்தார்.

“டாக்டர் அவருக்கு திடீரென ஃபிக்ஸ் வந்திருச்சு.”

அவர் சொல்லியதும், “சீஃப் டாக்டர் வர சொல்லுங்க சிஸ்” என்ற ஸ்வேதா விரைந்து அறைக்குள் செல்ல, ஆதியும் படபடப்புடன் அவள் பின்னால் சென்றான்.

உடல் முழுக்க ஆங்காங்கே கட்டுடன் படுத்திருந்த ராகவின் உடல் வெட்டி இழுத்தது. தூக்கி தூக்கி போட்டது.

“ராகவ்…” ஸ்வேதாவிற்கு நின்றிருந்த கண்ணீர் உடைப்பெடுத்தது.

ஆதிக்கு ராகவின் அந்நிலை மனதை கலங்கச் செய்தது. இருப்பினும் இந்நேரத்தில் திடமாக இருப்பது அவசியம் என்பதை உணர்ந்தவன் தன்னை நிலைப்படுத்தி நின்றான்.

ஸ்வேதா சிகிச்சை அளிக்காது கையிலெடுத்த மருந்துடன் ராகவின் நிலையை கண்டு நடுங்கி நிற்க,

“ஸ்வே காம் டவுன்… சில்… ராகவுக்கு ஒன்றுமாகாது” என்று அவளை நிலைப்படுத்த முயன்றான்.

நடப்பதை கதவின் கண்ணாடி வழியாக பார்த்த சந்தியாவிற்கு கடுப்பாக வந்தது.

“மூன்றாம் மனிதர்களான இவர்களுக்காக இவ்வளவு துடிப்பவன் தன்னிடம் பேசவே யோசிக்கின்றான்” என்று கடுகடுவென ஆதியை பார்த்திருந்தாள்.

அப்போது அங்கு வந்த தலைமை மருத்துவர், சந்தியாவை கண்டு…

“நீங்க ட்ரெயினி தானே! இங்கென்ன வேலை உங்களுக்கு… நீங்க இங்கெல்லாம் வரக்கூடாது கிளம்புங்க” என்றவர் உள்நுழைய சந்தியா இருக்கையில் சென்றமர்ந்தாள்.

உள்ளே வந்த மருத்துவர் ஸ்வேதாவின் நிலை உணர்ந்து… அவளின் கையிலிருந்த ஊசியை வாங்கி தானே ராகவிற்கு உட்செலுத்தினார். அடுத்த சில வினாடிகளில் ராகவின் உடல் சீராக… அப்போதுதான் படபடத்த ஆதியின் மனமும் சீரானது.

ஸ்வேதா ராகவின் நிலையிலேயே உழன்று கொண்டிருக்க,

“மிஸ்.ஸ்வேதா… நீங்க ஒரு டாக்டர். சொந்த விருப்பு வெறுப்பிற்கு இடமளிக்கக்கூடாது” என்றவர் “உங்களை கொஞ்சம் கன்ட்ரோல் பண்ணிக்கோங்க” எனக் கூறினார்.

ஆதியின் பக்கம் திரும்பியவர், “என்ன ஏ.டி சார் உங்களுக்கும் பயமென்றால் என்னவென்று தெரியும் போலிருக்கே” என்றவர், “ராகவின் தலையில் மூளைக்கு செல்லும் நரம்பில் ரத்தக்கட்டு ஏற்பட்டுள்ளது. அதனால் தான் இந்த ஃபிக்ஸ். அதை அகற்றி விட்டால் ராகவ் உயிர் பிழைக்க வாய்ப்பிருக்கிறது” என்றார்.

“அப்போ ஆப்பரேஷன் செய்திடலாமே டாக்டர்.”

“இதில் அவர் கோமா நிலைக்கு செல்லவும் வாய்ப்பிருக்கிறது ஏ.டி.”

நன்மை என்றால் தீமையும் உடன் வருவது இயற்கை.

“அவன் உயிருடன் இருக்கிறான் என்ற ஆறுதல் போதுமே டாக்டர். ஆனால் என் ராகவ் உயிர் பிழைப்பான் என்று என் உள்மனம் சொல்லுகிறது டாக்டர்.”

ஸ்வேதாவும் ராகவின் ஆப்பரேஷனுக்கு சம்மதம் தெரிவிக்க,

“இதை சொல்லுவதற்கு அசிங்கமாகத்தான் உள்ளது. இருந்தாலும் நம் அரசாங்க மருத்துவமனைகளின் நிலை இதுதான். இவ்வளவு பெரிய ஆப்பரேஷன் செய்வதற்கான வசதிகள் இங்கில்லை ஏ.டி… பிரைவேட் ஹாஸ்பிட்டல் சென்றால் நல்லது” என்றார்.

அவர் சொல்லுவது முற்றிலும் உண்மையே! அரசு மருத்துவமனைகளில் சுகாதாரத்திற்கே முக்கியத்துவம் இல்லாத போது, நல்ல சிகிச்சை மட்டும் எப்படி கிடைத்து விடும். இன்றும் சிகிச்சையை சேவையாக நினைத்து அங்கு பணிபுரியும் ஒருசில மருத்துவர்களால் மட்டுமே நோயாளிகள் காக்கப்படுகின்றன. உலகத்தில் மிகப்பெரிய ஊழல் மருத்துவத்துறையில் தான் நடைபெறுகிறது. ஊழல் நடக்கும் இடம் எப்படி சிறந்து விளங்கும்.

“பிரைவேட் ஹாஸ்பிட்டல் சென்றால் போலீஸ் கேஸாகும்.” ஸ்வேதா சொல்ல,

“இப்போது அதுவும் நல்லதுக்குத்தான் ஸ்வே… ராகவை இந்த நிலைக்கு ஆளாக்கியவனுக்கு தண்டனை கிடைக்க வேண்டாமா” என்ற ஆதி உடனடியாக ராகவை வேறொரு மருத்துவமனைக்கு மாற்ற ஏற்பாடு செய்தான்.

அறையிலிருந்து வெளிவந்த ஆதி, ஆர்.கே’வின் தந்தை பெயரில் உள்ள ட்ரெஸ்டின் கீழ் இயங்கும் மருத்துவமனையில் தனக்கு தெரிந்த தலைமை மருத்துவருக்கு அழைத்து விவரத்தை சொல்லி, இங்கு சிகிச்சை அளித்த மருத்துவரை அவருடன் பேச வைக்க, அவர் அறுவை சிகிச்சைக்கான ஏற்பாட்டை கவனிப்பதாகக் கூறி, ராகவை கவனமாக அழைத்து வருமாறு கூறினார்.

அவரிடம் பேசிவிட்டு திரும்பிய ஆதி அப்போதுதான் கவனித்தான் இன்னும் சந்தியா அங்கேயே இருப்பதை.

அவளை தீயாய் உருத்து ஆதி நிற்க,

“என்னை பிடிக்கலையா மாமா… அப்புறம் எதுக்கு நான் படிக்க உதவி செய்து, எனக்கு பாதுகாப்பா இருக்கீங்க” என்றாள்.

“வெறும் அக்கா மகளென்கிற அக்கறை தான் காரணமென்று பொய் சொல்லாதீங்க மாமா. அம்மத்தாவை மன்னிக்க முடியாத உங்களால் என்னை மட்டும் மன்னிக்க முடிந்தது என்றால் அதற்கு பெயரென்ன மாமா?”

“இப்போது இதை பேசுமிடம் இதுவல்ல.” எவ்வளவு முயன்றும் ஆதியிடத்தில் அழுத்தப்பட்ட கோபம் வெளிப்பட்டது.

“ஏன் பேசக்கூடாது மாமா… இவ்வளவு நாள் என்னிடம் நன்றாகத்தானே பேசினீர்கள். இப்போது மட்டுமென்ன? அந்த நிரலி வந்து விட்டாளென்பதாலா?

அவளை பிடிக்காமல் தானே இத்தனை வருடம் தள்ளி வைத்தீர்கள்?

உங்களுக்கு என்னைத்தான் கட்டிவைக்க அனைவரும் விருப்பட்டனர்.

ஏன் நீங்களே என்னைத்தானே கட்டிக்க சம்மதம் சொன்னீங்க…

அப்போ ஏதோ உங்களைப்பற்றி தெரியாமல் கல்யாணத்தை நிறுத்த கிறுக்குத் தனம் பண்ணிட்டேன்.

இப்போ உங்களை ரொம்ப பிடிக்குது மாமா.

அவள் வந்துட்டான்னு யோசிக்காதீங்க, அம்மத்தாகிட்ட சொன்னால் அவளை நம்ம வாழ்க்கையிலிருந்தே விலக்கிடுவாங்க.

ஐ…”

“வில் யூ ஷட் யூர் மௌத்.”

அவ்வளவு நேரம் இழுத்து பிடித்திருந்த ஆதியின் பொறுமை நிரலியை சொல்லியதும், அவள் சொல்ல வந்தது புரிந்ததும் எங்கோ சென்றது. அவ்வளவு உரக்கக் கத்தியிருந்தான்.

அவனின் சத்தம் கேட்டு உள்ளிருந்த ஸ்வேதாவே என்னவோ ஏதோவென்று வெளியில் ஓடி வந்திருந்தாள்.

“வாட் ஹேப்பன் ஆதி?”

தான் இப்போதிருக்கும் நிலையை கண் கூடாகப் பார்த்தும்… சுயநலமாக பேசும் சந்தியாவின் மீது ஆதிக்கு அளவு கடந்த வெறுப்பு உண்டானது.

கால்களை அகட்டி வைத்து, முழு உயரத்திற்கும் நிமிர்ந்து மார்பிற்கு குறுக்கே கை கட்டி நின்று சந்தியாவை,

“ச்சீ, நீயெல்லாம் ஒரு பெண்ணா?” என்று பார்க்க, அதில் அவள் குறுகிப் போனாள்.

“ஸ்வே இவளை இங்கிருந்து போகச் சொல்லு. இல்லையென்றால் நான் என்ன செய்வேனென்றே தெரியாது” என்ற ஆதியிடத்தில் அவளை அடித்து விடும் கோபம்.

“சந்தியா யூ மே கோ நௌ.” ஸ்வேதா சந்தியாவை அப்புறப்படுத்த முயல, சந்தியா ஒரு இன்ச் கூட நகராது கல்லென நின்றாள்.

“இதெல்லாம் திருந்தாத கேஸ் ஸ்வே… வா ராகவை பார்க்கலாம்” என்ற ஆதி மீண்டும் சந்தியாவின் புறம் திரும்பி,

“ரோட்டுல போகிற பிச்சைக்காரன் வந்து படிக்க வைக்க கேட்டிருந்தாலும் நான் படிக்க வைத்திருப்பேன்.

தானத்தில் சிறந்த தானம் கல்வி தானம்” என்றதோடு,

“உன்னை படிக்க வைப்பது நானில்லை.  வேதாச்சலம் ட்ரெஸ்ட் மூலமாகத்தான் நீ படிக்கின்றாய்.”

வேதாச்சலம் ஆர்.கே’வின் தந்தை.

“இத்தனை நாள் நன்றாகத்தானே பேசினேன் என்றாயே! எத்தனை நாள் நானாக பேசியிருக்கிறேன்?

உன்னை பார்த்த பிறகு கடந்து சென்ற இந்த இரண்டு வருடத்தில், நானாக உனக்கு அழைத்ததில்லை. நீயாக பேசியதையும் விரல் விட்டு எண்ணி விடலாம்” என்றவன் அவளை நோக்கி அருவருப்பான பார்வை ஒன்றை வீசினான்.

அதன் பிறகு ஒரு நொடி கூட ஆதி அங்கிருக்கவில்லை. ராகவை ஸ்ட்ரெச்சரில் ஏற்றி ஆம்புலன்ஸ் உதவியோடு, ராகவின் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வேதாச்சலம் ட்ரெஸ்ட் மருத்துவமனைக்கு ஸ்வேதாவுடன் சென்றான்.

தனக்கு தானம் செய்ததாக ஆதி சொல்லாமல் சொல்லிச் சென்றது சந்தியாவை ஆத்திரத்தின் உச்சத்துக்கு கொண்டு சென்றது.

“அந்த நிரலிக்காக என்னை ஒதுக்குகிறாயா? அவளுக்கு ஒரு முடிவு கட்டுகிறேன்” என்ற சந்தியா காலை பத்து மணிக்கெல்லாம் ஆதியின் வீட்டிலிருந்தாள்.

சந்தியாவிற்கு ஒன்று புரியவில்லை. ஆதி நிரலிக்காக எதுவும் செய்வானென்று. அத்தோடு அவன் நிரலி மீது கொள்ளை கொள்ளையாய் காதல் வைத்திருக்கிறான்.

வீணாக ஏரிமலையுடன் மோதி தானே அதில் பொசுங்க போகிறோம் என்பதை சந்தியா அறிந்திருக்கவில்லை.

****

அதிகாலை நான்கு மணிக்குத் தொடங்கிய ராகவிற்கான அறுவை சிகிச்சை முடிவடைய காலை ஒன்பது மணியாகியது.

சிகிச்சை முடித்து வெளி வந்த மருத்துவர்,

“நாற்பத்தி எட்டு மணி நேரத்திற்குள், அவர் கண் விழித்தால் மட்டுமே உறுதியாக எதுவும் சொல்ல முடியும்” எனக் கூறிச் சென்றார்.

மருத்துவராக ஸ்வேதாவிற்கு புரிந்தாலும்… ராகவ் மீது காதல் கொண்ட மனம் ராகவ் இந்நொடியே கண் விழிக்கத் தவித்தது.

“ஆதி.”

“ஒன்றுமில்லை ஸ்வே… சில்… ஹீ வில் பீ ஆல்ரைட்.” தனக்கும் சேர்த்து சொல்லிக் கொண்டான்.

அந்நேரம் நிரலி அழைக்க, அலைபேசியை காதுக்கு கொடுத்தவன்…

“பேபி” என்று விளிக்க,

“என்னாச்சு மாமா. ஏதும் பிரச்சினையா? இன்னும் வீட்டுக்கு வரல? சாப்பிட்டீங்களா?” என்று வினவினாள்.

இப்போது அவளிடம் எதுவும் சொல்ல வேண்டாமென்று நினைத்த ஆதி, “நான் ஈவ்னிங் வந்துவிடுவேன் பேபி” எனச்சொல்லி, மேற்கொண்டு பேசினால் ஏதேனும் சொல்லிவிடுவோமென்று உடனடியாக வைத்துவிட்டான்.

நிரலி சாப்பிட்டீங்களா என்று கேட்ட பிறகே ஆதிக்கு உணவு பற்றிய எண்ணம் வந்தது.

இரவு முதல் அவனும் ஸ்வேதாவும் நீர் கூட அருந்த மறந்திருந்தனர். கேன்டின் சென்றவன், ஸ்வேதாவிற்கு மட்டும் பழச்சாறு வாங்கி வந்து கொடுக்க… மறுத்தவளைத் தேற்றி குடிக்க வைத்திருந்தான்.

அந்நேரம் ஆதி எதிர்பார்த்திருந்த நபரிடமிருந்து அழைப்பு வர, மீண்டும் அரசு மருத்துவமனை நோக்கிச் சென்றான்.

 

Epi 19

ஏந்திழையின் ரட்சகன் 19

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
9
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்