Loading

அத்தியாயம் 17 :

ஆதி வீட்டிற்குள் நுழைந்ததும்,

“ராசா நல்லாயிருக்கியாப்பா” என்ற கற்பகத்தின் குரலில் அவன் உடல் விறைத்தது.

கற்பகம் இங்கு வருவாரென்று அவன் எதிர்பார்க்கவில்லை. அன்றைய நாள் நினைவில் எழ, முயன்று தன் கோபத்தை அடக்கினான். நெற்றி நரம்புகள் புடைக்க நின்றவனின் தோற்றம் கண்டு கற்பகத்திற்கே பயம் பீடித்தது.

கற்பகத்தின் மீதான இந்த கோபம் திருமண காரியத்தால் மட்டும் விளைந்ததில்லை. அதைவிட ஒரு பெரும் பாவத்தை அவர் செய்து வைத்திருக்கிறாரே. அதனால் பாதிக்கப்பட்டது அவனின் உயிரானவள் அல்லவா!.

நினைக்க நினைக்க ஆதியின் ஆத்திரம் தனது எல்லைக் கோட்டை தொட்டு தொட்டு மீண்டது.

ஆதி வந்ததுமே, கற்பகத்தின் குரல் கேட்டு கிச்சனில் எதுவும் செய்யாது ஆதியின் வருகைக்காகக் காத்திருந்த வள்ளி வெளியில் வர, அவர் கண்டது ஆதியின் கோப முகத்தை தான்.

ஆதி எப்போதும் இறுக்கமானவன், பேசவே யோசிப்பவன் என்று அறிந்திருந்த வள்ளிக்கு ஆதியின் இந்த முகம் புதிது.

இத்தனை கோபம் கற்பகத்தை பார்த்து தான் என்று உணர்ந்தவர் அவனை மாற்றும் பொருட்டு,

“தம்பி சாப்பிட்டீங்கன்னா எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டு நான் கிளம்புவேன்” என்றார்.

வள்ளியின் குரலில் அவர் புறம் திரும்பியவன், “நீங்க இன்னும் போகலையாக்கா, வேலை முடிந்தால் கிளம்ப வேண்டியது தானே!” எனக் கேட்டான்.

“அதில்லை தம்பி நிரலி பாப்பா தனியா இருக்குமேன்னு நானும் அப்படியே இருந்துபுட்டேன்” என்ற வள்ளியின் பதில் ஆதிக்கானதாக இருந்தாலும், அவரின் பார்வை கற்பகத்திடமே இருந்தது.

அதிலேயே கற்பகம் வந்ததும் ஆரம்பித்துவிட்டார் என்பதும், அவருடன் நிரலியை விட்டு செல்ல மனமில்லாது தான் வள்ளி இவ்வளவு நேரம் இருக்கிறார் என்பதும் ஆதிக்கு புரிந்தது.

“இனி புதுசா வீட்டுக்கு யாராவது தெரியாதவங்க வந்தால் எனக்கு போன் பண்ணுங்க வள்ளிக்கா” என அழுத்தமாகக் கூறியவன் நேராக உணவு மேசைக்கு சென்றான்.

ஆதி சொல்லிய வார்த்தைகள் கற்பகத்தை எட்ட நிறுத்திய போதும் அதை அவர் கண்டு கொள்ளவில்லை. சாப்பிட்டு வரட்டும் ஆரம்பிக்கலாமென இருக்கையில் அமர்ந்தார்.

ஆதிக்கு கற்பகம் என்ன செய்தார் என்பது தெரிய வேண்டும், அதனாலே அறைக்கு கூட செல்லாமல் உணவு உண்ண அமர்ந்துவிட்டான்.

நிரலியிடம் கேட்டால் நிச்சயம் சொல்லாமட்டாள் என்பது உறுதி. அதனால் வள்ளியிடமே தெரிந்துகொண்டு செல்லலாமென்று நினைத்தான்.

ஆதிக்கு உணவு பரிமாறியபடி, வரவேற்பறையில் அமர்ந்திருந்த கற்பகத்தின் காதில் விழுந்து விடாதபடிக்கு கிசுகிசுப்பான குரலில்,

“இந்த பாட்டி யார் தம்பி, வந்ததும் நிரலி பாப்பாவை அந்த விரட்டு விரட்டுது. பாப்பா கண்ணுல அவ்வளவு மிரட்சி… அதான் நீங்க வரவரை இருக்கலான்னு இருந்துட்டேன்” என்று அவன் கேட்காமலே நடந்ததை கூறினார்.

அமைதியாகக் கேட்டுக்கொண்ட ஆதியின் மனம் உலைகலனாக உள்ளுக்குள் கொதித்தது.

என்ன இருந்தாலும் வீட்டில் வேலை செய்பவர் முன்னிலையில் எதுவும் வேண்டாமென்று நினைத்தவன், எதுவும் பேசாது உண்டு முடித்தான்.

கை கழுவ கிச்சனிற்குள் சென்றவனிடம், அங்கு பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த வள்ளி “பாப்பா இன்னும் சாப்பிடலங்க, சாயங்காலம் அந்த பாட்டி ஏதோ சொன்னாங்க… அதுக்கு கண்ணெல்லாம் கலங்க மேல போன பாப்பா கீழே வரல தம்பி” என்க,

‘இவர் அடங்கவே மாட்டாரா?’ என்று ஆயாசமாக உணர்ந்தான் ஆதி.

“சரிங்கக்கா… நீங்க இந்த வேலையை முடிச்சிட்டு கிளம்புங்க” என்றவன் தானே பால் காய்ச்சி மனைவிக்கு கொண்டு சென்றான்.

தன்னை கண்டுகொள்ளாது கையில் பால் அடங்கிய குவளையுடன் மாடியேறிச் செல்ல படியில் அடி வைத்த ஆதியை தன் பேச்சால் தடுத்து நிறுத்தினார் கற்பகம்.

“என்ன பழக்கம் இது ராசா… புருஷன் பொண்டாட்டிக்கு பால் கொண்டு போறதா!”

அவரிடம் பேசி எதுவும் வீண் வாக்குவாதமாகிவிடக் கூடாதென்று தான் அவனும் நினைக்கிறான். ஆனால் அவர் விடமாட்டார் போல்.

பற்களை கடித்தபடி மெல்ல அவர் பக்கம் திரும்பியவன்,

“என் பொண்டாட்டிக்கு நான் கொண்டு போகாமல் வேறு யாரு கொண்டு போவா?”

ஆதியின் என் பொண்டாட்டி என்ற வார்த்தையில் கற்பகத்தின் முகம் சுருங்கியது. அதுதானே அவனுக்கும் வேண்டும். உள்ளுக்குள் ஒரு சிறு நிறைவு அவனிடம்.

“ரொம்பத்தான் பொண்டாட்டி மேல அக்கறை… அப்படியிருக்கவன் எதுக்கு நாலு வருசம் ஒதுக்கி வச்சீ(ங்)க?”

ஆதியை மடக்கிவிடும் எண்ணம்.

“அதை உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை.” முகத்தில் அடித்தார் போல் கூறினான்.

இவனிடம் கோபம் கொண்டால் வேலைக்காகாது என்று நினைத்தவர் நொடியில் தனது உடல் மொழி மற்றும் பேச்சின் திசையை மாற்றினார் கற்பகம்.

“சரி அதான் ராசியாகிட்டீங்களே அப்புறம் எதுக்கு ராசா கோபம்.” நயந்து பேசினார்.

‘என்ன கிழவி பம்முது.’ ஆதியின் மனவோட்டம் இதுவாகத்தான் இருந்தது.

“நீ பண்ண காரியத்துக்கு இந்த கோபமே குறைவு தான்… வேண்டாம் கிழவி என்னை பேச வைக்காதே! நான் பேசினால் நீ தாங்கமாட்டாய்” என்று மாடியேறவன், மீண்டும் திரும்பி நின்று…

“நிரலி என் மனைவி, அதை உன் மனதில் நன்கு ஆழ பதிய வைத்துக்கொள்” என கூறிவிட்டே சென்றான்.

ஆதி நிரலிக்கு துணையாக இருப்பது அவனது பேச்சினிலேயே தெரிந்துவிட, நாளைக்கே சந்தியாவை வரவழைத்திட வேண்டுமென்று முடிவு செய்த பின்னரே… கீழிருந்து ஆதியின் மூடிய அறையினையே பார்த்திருந்தவர் தனது அறைக்குள் நுழைந்தார்.

ஆதி அறைக்குள் நுழைந்த போது நிரலி மெத்தையில் மொத்த உடலையும் சுருக்கி சுருண்டு படுத்திருந்தாள். கண்கள் மூடியிருந்தன. ஆனால் அலைப்பாய்ந்த கருவிழிகள் அவளின் உறக்கமின்மையை பறைசாற்றின. கன்னங்களில் காய்ந்துபோன கண்ணீர் தடம்.

பால் குவளையை அருகிலிருந்த மேசையில் வைத்தவன், கை, கால், முகம் கழுவி உடை மாற்றி வரும் வரையிலுமே நிரலி அதேபோல் தான் இருந்தாள்.

ஆதி அறைக்குள் நுழையும்போதே கதவு திறக்கும் ஓசையில் கணவனின் வரவை கண்டு கொண்டாள். ஆனால் அவளுக்கு அவனை வரவேற்கும் எண்ணம் எழவில்லை. நேற்று நடந்த கூடலில் உடலும், கற்பகத்தின் இன்றைய பேச்சுக்கள் அவளின் மனதினையும் சோர்வுரச் செய்திருந்தன.

இருப்பினும் கணவனின் மீது சிறு கோபமும் முளைத்திருந்ததோ!

மெத்தைக்கு அருகில், மார்பின் குறுக்கே கை கட்டி நின்றவன்,

“பேபி” என்றழைக்க…

அவனின் காதல் கொட்டும் விளிப்பில், திமிரி அவனின் மடியில் சாய விழைந்த மனதையும், அவனின் முகம் காண பரபரத்த கண்களையும் சிரமப்பட்டு அடக்கி, அதே நிலையில் படுத்திருந்தாள்.

“நீ தூங்கலன்னு எனக்குத் தெரியும்.”

பட்டென்று எழுந்து அமர்ந்திருந்தாள்.

“பேபி.” அருகில் அமர்ந்தவனிடம் பார்வையை திருப்பாது, தனக்கெதிரே சுவற்றில் மாட்டப்பட்டிருந்த ஆதியின் புகைப்படத்தை வெறித்தது நிரலியின் பார்வை.

“நிஜமிருக்கும் போது நிழலெதற்கு பேபி.”

அதற்கும் அவள் அசைந்தாளில்லை.

‘ஆதி உன் பாடு படுத் திண்டாட்டம் தான் போலிருக்கே! ஆனாலும் உனக்கு இவ்வளவு பொறுமை என்பதே இன்று தான் தெரிகிறது.’ தன்னை குறித்தே மனதிடம் உரையிட்டான்.

“நீ சாப்பிடலன்னு வள்ளிக்கா சொன்னாங்க, இந்த பாலையாவது குடி” என்றவனுக்கு நன்றாகவேத் தெரிந்திருந்தது, அவள் இதை வாங்க மாட்டாளென்று… ஆதாலால் தானே அவளின் வாயருகே குவளையை கொண்டு சென்று, உதட்டில் குவளையை அழுந்த பதித்தான்.

அப்போதும் வாயினைத் திறப்பபேனா என்று அழிச்சாட்டியம் செய்தவள்,

“பேபி, உனக்கு என்ன கேட்கணுமோ அதை கேளு… எதுவாகயிருந்தாலும். ஆனால் அதுக்கு முன்னாடி இதை குடிச்சிடு.”

அதற்கும் மேல் அவளால் அவனிடம் பிடிவாதம் கொள்ள முடியாது பாலினை ஒரே மூச்சாகக் குடித்தவள், எதுவும் கேட்கத் தோன்றாது ஆதியின் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டாள்.

தன்னைப்போல் ஆதியின் கரம் நிரலியின் சிகை கோதியது.

“ஸ்பீக் அவுட் பேபி.”

‘மனைவியின் மனதில் என்னயிருக்கிறது என்று தெரியாமல் தானாக எதுவும் சொல்லக்கூடாது. கற்பகம் என்ன சொல்லியிருந்தாலும் என் மீது நம்பிக்கை இல்லையா?’ ஆதலால் அவளாகக் கேட்க வேண்டுமென நினைத்தான்.

நிரலியோ அவன் கேட்ட பிறகும் வாய் பூட்டு திறக்காது, அவனின் இடையை சுற்றி இரு கரம் கோர்த்து இறுகிக்கிக் கொண்டாள். தலை ஒன்றுமில்லையென ஆடியது.

‘சொல்ல வேண்டிய எதுவும் ஆதியாக நினையாது சொல்ல மாட்டானென்று அவளுக்கு நன்கு தெரியும். அதனால் தனக்கு தெரிய வேண்டுமென்று அவன் நினைக்கும்போது தான் கேட்காமலே அனைத்தையும் சொல்லுவான்’ என எண்ணியவளுக்கு கணவனின் மீது அதீத நம்பிக்கை உள்ளது.

அந்த நம்பிக்கை தந்த பலத்தால், சோர்ந்து கிடந்த மனதை திடப்படுத்தியவள், கணவனின் முகத்தை நிமிர்ந்து பார்த்து…

“ஐ லவ் யூ மாமா” முதல் முறையாக காதலை வார்த்தைகளாக மொழிகிறாள். அன்று கூட தன் செயல்களால் உணர்த்தினாலே அன்றி இதழ் பிரித்து சொல்லிடவில்லை. ஆனால் இன்று?

அவளின் நெற்றியில் இதழ் ஒற்றிய ஆதி…

“உன் மனசுல ஏதோ போட்டு உருட்டிட்டு இருக்க… அது என்னன்னு சொல்லு பேபி. நீ இப்படி இருக்கிறதை பார்க்க என்னவோ மாதிரி இருக்கு” என்றான்.

அவளாக கேட்கட்டும் என்று நினைத்தவனே அவளை சொல்லுமாறு ஊக்கினான்.

“எதுவுமில்லை மாமா… என்ன நடந்தாலும் நீங்க எனக்குத்தான்.” அவ்வளவு அழுத்தம் அவளின் குரலில்.

‘இந்த கிழவி வேறென்னவோ சொல்லியிருக்கும் போலிருக்கிறதே!’ தாடையை தடவி யோசித்தவனுக்கு மனைவியை கஷ்டப்படுத்தும் கிழவியை வீட்டைவிட்டு விரட்ட ஒரு நொடி போதும். இருப்பினும் அதை செய்யாமல் இருக்க வேறொரு காரணம் உள்ளதே. இப்போது கற்பகம் இங்கு வராமல் போயிருந்தாலும் அவனே வரவழைத்திருப்பான்.

தான் அழைக்காமலே வந்திருப்பவரை வரவேற்காமல் இருந்தாலும், போ என்று சொல்லாததற்கு காரணம் உள்ளது. கூடிய விரைவில் முடிவு வர வேண்டுமென நினைத்தான்.

“நான் உனக்குத்தான் பேபி. என் மேல் நம்பிக்கையில்லையா?” எனக் கேட்டான்.

“அந்த நம்பிக்கை இருப்பதால் தான், எனக்கு பல விடயங்கள் தெரியாத, புரியாத போதும் உங்களிடம் கேட்காமல் இருக்கின்றேன்” என்றவள் தானே முன் வந்து அவனின் வலிய இதழினை தன் பூவிதழ் கொண்டு தீண்டினாள்.

இப்போது அவளுக்கு மருந்தே அவளின் கணவன் தான். மனதின் அலைப்புறுதலை எல்லாம் தன் முத்தத்தில் கணவனக்கு உணர்த்திட முயன்றால். பூவுக்குள் அவ்வளவு வன்மை. வலியவனே சற்று திணறித்தான் போனான். அவனின் பின்னந்தலை கேசம் அவளின் விரல்களுக்குள் சாட்டையாய் சுழல, முரட்டு அதரம், மென்னிதழில் வன்மையை உணர்ந்தது.

“உன்னை யாருக்கும் விட்டு கொடுக்கமாட்டேன்” என்பதை கணவனுக்கு உணர்த்திட துடித்தாள். இப்போது புரிந்தது ஆதிக்கு காதலை வார்த்தைகளாக கூறியதன் பொருள், காதலை சொல்லி தன்னை தக்க வைக்க நினைக்கிறாள்.

கை பொம்பையை யாரேனும் பிடிங்கி சென்றிடுவரோ என்னும் குழந்தையின் மனநிலையில் தான் இப்போது அவளிருந்தாள். தன் உரிமையை விட்டுக்கொடுக்க அவள் தயாராக இல்லை.

அங்கே மென்மையின் வன்மையில் வலிமை கரைந்து போனது.

மனைவியின் வேகத்தை தனதாக்கிக் கொண்டவன், மொத்தமாய் அவளை தனக்குள் தாங்கினான்.

காதலின் அஸ்திவாரம் நம்பிக்கையில் தான் பலப்படுகிறது.

*****

நேரம் நள்ளிரவைத் தாண்டி சென்று கொண்டிருந்தது.

அப்போதுதான் ஆதி ஆழ்ந்த நித்திரைக்கு சென்றிருந்தான். நிரலி அவனின் நெஞ்சமதை மஞ்சமாக மாற்றியிருந்தாள்.

எங்கோ தூரத்தில் இசைப்பது போன்றதொரு இசையின் ஒலி. ஆதியின் உட்செவியைத் தீண்ட, அவனின் அலைபேசி ஒலியென கண்டுகொண்டவன் உறக்க கலக்கத்தில் கை நீட்டி, மேசையில் துழாவி அலைபேசியை எடுத்து… திரை பார்க்காது மூடிய விழிகளோடு செவி மடுக்க… எதிர் புறம் சொல்லப்பட்ட செய்தியில் பாதாதிகேசம் வரை மின்சாரம் தாக்கியதை போல் பதறி எழுந்தான். தூக்கம் முற்றும் முழுதாக விலகியது.

அந்நேரத்திலும் தன்னவளுக்கு நோகாது அணைத்தபடியே இருந்தான்.

தன்னவனின் பதட்டத்தை தூக்கத்தில் பெண்ணவளும் உணர்ந்தாளோ இமை திறந்திருந்தாள்.

காதில் அலைபேசியை வைத்தவாறு, முகம் வியர்த்து வழிய இருந்த கணவனை கண்டதும், அவனின் பதட்டம் அவளையும் ஆட்கொண்டது.

“என்னாச்சு மாமா?”

ஆதிக்கு பேசிட நா வரவில்லை. கேட்ட செய்தியில் கல்லென சமைந்திருந்தான்.

“மாமா.” நிரலி தன்னுடைய தோள் தொட்டு உலுக்கிய உலுக்களில் சுயம் மீண்டவன், எப்போதோ அழைப்பு துண்டிக்க பட்ட அலைபேசியை செவியிலிருந்து நகர்த்தி, முகத்திற்கு நேரே பிடித்து… கேட்ட செய்தியை கிரகிக்க முயன்றான்.

“பேபி… இப்போ நான் போகணும், வந்து சொல்லுறேன்.”

நிரலியை பயம் கொள்ளச் செய்ய வேண்டாமென்று நினைத்தான்.

அடுத்த கணம், மின்னலென வீட்டை விட்டு வெளியேறியவன் காற்றாய் காரில் பறந்தான்.

ஆதி சென்ற இடம் அரசு மருத்துவமனை. அங்கு அவசர சிகிச்சை பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் ராகவ்.

முதல் முறையாக கண் கலங்குகிறான்.

ராகவிற்கு சிகிச்சை அளிக்கும் அறைக்கு முன்னிருந்த இருக்கையில் தவிப்புடன் அமர்ந்திருந்த ஆதி,

“ராகவ் ஏன்டா இப்படி செய்தாய்?” மானசீகமாக அவனிடம் கேள்வி கேட்டான்.

“ராகவ் வந்திடுடா…” ஓயாது மனதில் சொல்லிக்கொண்டே இருந்தான்.

“ஏன் இப்படி?” கலங்கி நின்ற இவனில்லை ஆதி… ஆதிதேவ்.

சிகிச்சை அறையிலிருந்து வெளிவந்த பெண் மருத்துவர் ஆதிக்கு நன்கு பரிச்சயம். ராகவின் மூலம் ஆதியின் குறுகிய நட்பு வட்டத்திற்குள் இருக்கும் ஒரு நபர்.

“ஆதி.”

“ஸ்வே… ராகவுக்கு என்னாச்சு… நல்லாயிருக்கான் தானே! அவனுக்கு ஏதும் ஆகிடாதே! எனக்கு அவன் வேணும்…” படப்படத்தான். நிச்சயம் அவன் அவனாக இல்லை.

“ஆதி காம் டவுன்…”

“எப்படி ஸ்வே… எப்படி அமைதியா இருக்க முடியும். அங்கிருப்பவன் யாரோயில்லை… என் ராகவ், என்னுடைய ராகவ் ஸ்வே.” விட்டால் தானொரு ஆண்… பலபேர் அஞ்சி நடுங்கும் ஏ.டி என்பதையே மறந்து அழுதிடுவான் போல். ராகவிற்காக அத்தனை தவிப்பு ஆதியிடம்.

“எனக்கு எல்லாமே அவன் தான் ஆதி.” தானே திடமாக இருக்கும்போது ஆதி இப்படி உடைகிறானே என்று உரக்கக் கத்தியிருந்தாள்.

“ஸ்வே.” அவள் சொல்லிய செய்தி ஆதிக்கு புதிது. அவனின் பார்வையில் சிறு வியப்பு.

“எஸ்… ஹீ இஸ் மை லவ். பட் இதுவரை ஒரு சின்ன பார்வையில் கூட நான் வெளிப்படுத்தியதில்லை. ஆனால் இப்போது அவனிருக்கும் நிலையை கண்டால், என் காதலை அவனிடத்தில் சொல்லாமலே போய்விடும் போலிருக்கு.”

அதுவரை ஆதிக்கே தைரியம் சொல்லும் திடத்தில் இருந்தவள், அப்படியே தரையில் மடங்கி அமர்ந்து கதறி அழுதாள்.

இவ்வளவு நேரம் ஒரு மருத்துவராக, திடமாக நின்று சிகிச்சை அளித்தவள்… ஆதியை திடப்படுத்த முயன்றவள்… தானும் ஓர் சாதாரண பெண் என்பதை உணர்ந்ததும் தன்னவனுக்காக துடித்தாள்.

ஸ்வேதாவின் அழுகையை கண்டவன், “இது தான் ஒடிந்து அமரும் தருணமில்லை” என்று தன்னை நிலைப்படுத்தி ஏ.டி’யாக மாறியிருந்தான்.

“ஸ்வே ஒன்னுமில்லை… இங்க பாரு… ராகவிற்கு ஒன்னுமாகாது.” கலங்கி நின்றவன் அவளுக்கு ஆறுதல் அளிக்க முயன்றான். அவளிடம் சொல்லுவதைப்போல் தனக்கே சொல்லிக்கொண்டான்.

‘ராகவிற்கு ஒன்னுமாகாது.’

“இல்லை ஆதி… அவனிருக்கும் நிலையை என்னால் பார்க்க முடியவில்லை. எப்படி அவனுக்கு சிகிச்சை கொடுத்தேன் என்பதே எனக்கு கருத்திலில்லை.”

“என்னாச்சு… எப்படி?”

“எனக்குத் தெரியலையே!”

அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தவன், “இப்போ தான் நீ தைரியமா இருக்கணும்… அவனுக்கு உறவாக நீ கிடைச்சிருக்கன்னு தெரிந்தால் அவ்வளவு சந்தோஷப்படுவான். உன் காதலை கேட்பதற்காகவாவது அவன் மீண்டு வருவான்” என்று சொல்ல,

ஆதியின் தோள் சாய்ந்தவள், “ஒரு மருத்துவராக நம்பிக்கை எனக்கில்லையே” என்றாள்.

அவளுடன் சேர்ந்து ராகவிற்கு சிகிச்சை அளித்த தலைமை மருத்துவர் அப்போதுதான் அறையிலிருந்து வெளியில் வந்தார்.

“நம்பிக்கையை இழக்காதீங்க ஸ்வேதா”  என்ற அவர், ராகவின் நலன் வேண்டி தன்னை பார்த்த ஆதியிடம்,

“இனி கடவுள் கையில் தான்” என சொல்லிச் செல்ல, சற்று நேரத்திற்கு முன்பு திடப்படுத்திய மனம் மீண்டும் கலங்குவதை உணர்ந்த ஆதி கை முஷ்டியை அழுந்த தன் திடம் போகாதிருக்க முயற்சி செய்ய, அவனின் அலைபேசி சிணுங்கியது.

அழைத்தது விஸ்வநாதன்.

“இந்நேரத்தில் இவன் எதுக்கு தன்னை அழைக்கின்றான்?” யோசனையோடு திரையை பார்த்திருக்க… முழு ஒலியும் அடங்கி இரண்டாவது முறை அழைப்பு வருவதாக ஒலித்தது அலைபேசி.

ஆதி அழைப்பினை ஏற்க,

“என்ன ஏ.டி, உன் ஜூனியர்… ச்ச… ச்ச… ஜூனியர் தப்பா சொல்லிட்டேன். அந்த ஆர்.கே வாரிசு எப்படியிருக்கின்றான்.?”

விஸ்வநாதன் அவ்வாறு கேட்டதும் ஆதிக்கு உடல் மொத்தமும் அதிர்ந்தது.

 

Epi 18

ஏந்திழையின் ரட்சகன் 18

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
25
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. ராகவ் நிரலியை காப்பாற்ற இப்படி சொல்லிட்டான் போல