Loading

என் ஆயுள் நீயே 17

புதிய செயல்முறைத் திட்டத்திற்கான மாதிரியை பிரணவ் விளக்கிக் கொண்டிருந்தான்.

அஷ்மி, ரீமா அமைதியாகக் கேட்டுக் கொண்டிருக்க, அவர்களின் பார்வை புராஜக்டர் பலகையில் நிலைத்திருந்தது.

எந்தவொரு திட்டமும் வடிவமைத்தது, செயல்படுத்தும் முன் மூவரும் கலந்தாலோசிப்பது வழக்கம். அங்கு அதுதான் நடந்துக் கொண்டிருந்தது. ஆனால், வழக்கமாக பிரணவ் விளக்கம் கொடுக்கும்போது மற்ற இருவரும் அந்நேரம் தோன்றும் புது யுக்திகள், அதிலுள்ள பிழைகள், இந்த குறிப்பு செயல்படுத்தும் போது சரிவருமா? இதற்கு மாற்று என்ன? என்று பலதும் எடுத்து சொல்லி சிறு விவாதமே நடக்கும்.

இன்று, இருவரும் பிரணவ் சொல்வதை ஏற்கும் நிலையில் அமைதியை கடைப்பிடித்தனர்.

வடிவமைக்கும் போது சரியாக குறிப்பிட்ட ஒன்றை, தற்போது பிரணவ் வேண்டுமென்றே தவறாக சொல்ல, இருவரும் தெரிந்த போதும் வாய் திறக்கவில்லை.

கையிலிருந்த லேசர் பாயிண்டரை மேசையில் வைத்த பிரணவ், இருக்கையின் பின் நின்று இரு கைகளையும் அதில் ஊன்றி, இருவரையும் ஆழப் பார்த்தான்.

“உங்க ரெண்டு பேருக்கும் என்ன கோபம்?” நேரடியாகக் கேட்டுவிட்டான்.

காலையிலிருந்து பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றான். வழமையாக இருக்கும் கலகலப்பு இருவரிடமும் இல்லை. முகத்தை வெளிப்படையாகவே உம்மென்று வைத்திருக்கின்றனர்.

கேட்கும் கேள்விகளுக்கு பதில் கொடுத்தனர்.

அஷ்மியும், ரீமாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

“நான் எதும் தப்பு பண்ணிட்டனா?”

“மீட்டிங் முடிஞ்சா கிளம்பலாம்.” அஷ்மி இருக்கையை விட்டு எழுந்துவிட்டாள்.

“இப்போ எதுக்கு இப்படி பிஹேவ் பண்ணிட்டு இருக்கீங்க? என் மேல் எதும் மிஸ்டேக் அப்படின்னா நேரா சொல்லுங்க. அதைவிட்டு…” என்று வார்த்தையை நிறுத்தியவன்,

“பொண்ணு பார்க்கப்போன விஷயத்தில் நானெதும் கோல்மால் பண்ணியிருப்பேன் நினைக்கிறீங்க… ரைட்?” சரியாக யூகித்தவனாக வினவினான்.

இப்போது பெண்கள் இருவரின் பார்வையும் பிரணவ் மீது அழுத்தமாக படிந்தது.

“அப்போ அதுதான் இல்லையா?” என்ற பிரணவ், “நான் எதுவும் பண்ணல? அவளாவே தான் செட் ஆகாது சொன்னாள்” என்றான். சிறு தடுமாற்றத்துடன்.

“நிஜமாவா?” ரீமா கூர்மையுடன் வினவினாள்.

பிரணவ் பதில் சொல்லாது முறைத்து பார்த்தான்.

“நான் எதுவும் பண்ணல” என்றான்.

“அப்பட்டமா பொய் சொல்றான். நீங்க வாங்க ரீமாக்கா” என்று அஷ்மி ரீமாவின் கையை பிடித்து இழுக்க,

“உனக்கெல்லாம் மனசாட்சின்னு ஒன்னு இருக்காடா?” எனக் கேட்டிருந்தாள் ரீமா.

“ஹேய் ரீமா… இதழ் நோ சொன்னதுக்கு நானென்ன பண்ண முடியும்?” என்றான்.

“ஹோ…” ரீமா உதடு குவித்து இழுக்க…

“இன்னும் பொய்யை மெயின்டெய்ன் பண்றான் பாருங்க” என்று கடுப்பாக மொழிந்தாள் அஷ்மி.

“அஷ் வேண்டாம்… ரெண்டு பேரும் ரொம்ப ஓவரா போறீங்க” என்று பிரணவ் நீட்டிய சுட்டுவிரலை தட்டிவிட்ட அஷ்மி…

“நீ ஏதோ பிளே பண்ணியிருக்க… பட் மாம் மாதிரி, எல்லாம் தெரிஞ்சும் அதை நான் நம்பமாட்டேன்” என்றான்.

“என்ன தெரியும் உனக்கு?” என்று கேட்ட பிரணவ், “உங்களால் புராஜக்ட் டிஸ்கஷன் மூடே போச்சு. நாளைக்கு இதை சப்மிட் பண்ணனும். அந்த நினைவிருக்கா உங்களுக்கு?” என்றான். கோபமாக.

“சரி நீயும் சீனியரும் தனியா பேசப் போனீங்களாமே… என்ன பேசுனீங்க?” மாற்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு புருவத் தூக்கலோடு கேட்டாள் அஷ்மி.

“ஜஸ்ட் காலேஜ் டேஸ் டாக். அவ்ளோதான். வேற எதுவும் பேசல” என்ற பிரணவ், “நான் தான் பையன்னு தெரியாம ஓகே சொல்லியிருப்பா போல, நேரில் பார்த்து தெரிஞ்சதும், காலேஜிலே ஒத்து வராது… இதுல லைஃப் லாங் எப்படின்னு செட் ஆகாது சொல்லிட்டாள்” என்று சாதரணமாக தோள்களை உயர்த்தி இறக்கினான்.

அஷ்மிதா, ரீமா ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

“நீங்க ரெண்டு பேரும் இப்படியே நில்லுங்க. நான் வேலையை பார்க்கிறேன்” என்று பிரணவ் இருக்கையில் சென்று அமர்ந்தான்.

“நிஜமாவே சீனியரே செட் ஆகாது சொன்னாங்களா?”

மடிக்கணினியில் தட்டிக் கொண்டிருந்த பிரணவ் ஒரு கணம் நிறுத்தி, கேட்ட தங்கையை ஏறிட்டான்.

“இன்னும் நம்பலன்னா நானென்ன பண்ணட்டும் அஷ்மி” என்ற பிரணவ், “நான் மேரேஜ் பண்ணிக்காம இருக்க எதோ நடுவில் விளையாடியிருக்கேன் நினைக்கிறீங்க?” எனக் கேட்டு, “வேணும்னா இன்னொரு பொண்ணு பாருங்க. ஓகேன்னா மேரேஜ் பண்ணிக்கிறேன்” என்றான்.

“உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா? ஒருத்தியை உயிரோடு எத்தனை தடவை தான் கொல்லுவ. அங்க அவளை துடிக்க வச்சிட்டு, இங்க வந்து இன்னொரு பொண்ணு பாருங்க சொல்ற… சத்தியமா உன்மேல அவ்ளோ கோபம் வருது பிரணவ்” என்ற ரீமா, “உண்மை தெரியும் போது ரொம்பவே வருத்தப்படுவ நீ” என்று வெளியேறிவிட்டாள்.

அஷ் முறைத்துக் கொண்டு நின்றாள்.

“என்னாச்சு உங்களுக்கு? இதழ் என்னை ரிஜெக்ட் பண்ணதுக்கு நானே ஃபீல் பண்ணல. நீங்க ஏன் இவ்ளோ ரியாக்ட் பண்றீங்க?” ஒருவித நக்கல் குரலில் கேட்டான்.

“போகும்போதே சொன்னனே… ஓகேன்னா மட்டும் போ அப்படின்னு” என்று நிறுத்திய அஷ்மிதா, “சீனியர் உனக்கு நோ சொல்ல வாய்ப்பே இல்லை” என்றாள்.

“ம்ப்ச்” என்று நெற்றியைத் தேய்த்துக் கொண்ட பிரணவ், “ஆமா நான் தான் மேரேஜில் விருப்பமில்லை. நீ என்னை பிடிக்கலன்னு சொல்லு சொன்னேன். அதுக்காக இதழ் சைட்(side) நீங்களா இமாஜின் பண்ணிட்டு என்னை அக்யூஸ் பண்ணிட்டு இருக்கீங்க” என்றான்.

விரக்தியாக புன்னகைத்த அஷ்மி, உதட்டை சுளித்து, தலையை சலிப்பாக இருபக்கமும் ஆட்டினாள்.

“இதுல ரீமா நான் எதோ இதழை கொலை பண்ணிட்ட ரேஞ்சுக்கு பேசிட்டுப் போறாள். நான் அப்படி சொல்ல சொல்லி கேட்கலன்னாலும், அவளே அதைதான் சொல்லியிருப்பாள்” என்றான்.

அந்நேரம் அவ்வறையின் கதவினை தட்டிவிட்டு பணியாள் உள்ளே வந்தார்.

“மேம்… கோடிங்கில் சின்ன வெரிஃபை. கொஞ்சம் வர முடியுமா?” என்று அவன் கேட்க, “போங்க வரேன்” என்று நகர்ந்தாள் அஷ்மிதா.

கதவினை திறந்து வெளியில் அடி வைத்தவள், நின்று தலையை மட்டும் திருப்பி,

“ஷீ இஸ் மேட்லி லவ்ஸ் யூ’டா அண்ணா” என்று பிரணவ்வை ஒட்டு மொத்தமாக உயிர் வரை அதிர்வடையச் செய்து சென்றிருந்தாள்.
_______________________

கல்லூரி மைதானம்.

அன்றைய வகுப்புகள் முடிந்திருக்க, விடுதிக்கு செல்லாது மரத்தடியில் அமர்ந்திருந்தான் குரு ஆர்யன்.

“என்னடா ஹாஸ்டல் போகல?” கேட்டவாறு அவனது நண்பன் நரேஷ் வந்தமர்ந்தான்.

“போகணும். நீ கிளம்பல?”

“வர்ஷா வரேன் சொன்னா. லைப்ரரி போயிருக்காள்” என்ற நரேஷ், “எழில் ஓகே சொல்லியாச்சா?” எனக் கேட்டான்.

“நான் ப்ரொபோஸ் பண்ணதையே மறந்துட்டான்னு தோணுது” என்றான் ஆர்யன்.

அவனது பாவனையில் நரேஷ் சத்தமிட்டு சிரிக்க, ஆர்யன் முறைத்து வைத்தான்.

“வர்ஷாகிட்ட நான் லவ் சொல்ல தயங்குன அப்போ என்னை என்னலாம் சொல்லி கிண்டல் பண்ண நீ?” என்ற நரேஷ், “உன் ஆளு வராள்” என்று கண் காண்பித்தான்.

எழில்… எழிலினி இவர்களை நோக்கி தான் வந்து கொண்டிருந்தாள்.

எழில் உதயனிடன் தன்னை ஒருவன் காதலிப்பதாக முன் மொழிந்ததாக சொல்லியது ஆர்யனைத்தான். அஷ்மியிடம் தான் காதலை சொல்லிவிட்டதாக சொல்லியது எழிலைத்தான்.

தாங்கள் இருவரும் நட்பு கொள்வதற்கு முன்பே, தங்களின் உடன் பிறந்தவர்கள் ஒருவருக்கொருவர் அதீத பரீட்சயமானவர்கள் என்று இருவரும் தெரிந்திருக்கவில்லை. அஷ்மியும் எழில் உதயனின் மற்றொரு தங்கையாக இருப்பாளென அறிந்திருக்கவில்லை.

“ஹாய் எழில்.” அருகில் வந்துவிட்ட எழிலிடம் கையசைத்தான் நரேஷ்.

“மார்னிங் இருந்து ஒண்ணா ஒரே கிளாசில் தான் இருந்தோம். இப்போ இந்த ஹாய் அவசியமா” என்ற எழில், “இந்தா ஆர்யா” என்று அவனின் முன்பு உணவு வைக்கும் சிறு பாக்ஸ் ஒன்றை நீட்டினாள்.

“என்னது?”

“பிரான் கிரேவி இருக்கு” என்ற எழில், “அம்மா லஞ்சுக்கு செய்தாங்களாம். உனக்காக முன்னாடி செய்ய சொல்லி எடுத்திட்டு வந்திருக்கேன்ல… அந்த நினைவில் அம்மா கொடுத்து அனுப்பியிருக்காங்க. என்னை பிக்கப் பண்ண வந்த அண்ணா கொண்டு வந்தாங்க” என்று விளக்கமாகக் கூறினாள்.

“இது ரொம்ப முக்கியம்” என்று முனகிய ஆர்யன், “நான் சொன்னது என்னாச்சு?” என நேரடியாகவேக் கேட்டான்.

“ஓகே நீங்க பேசுங்க” என்று நரேஷ் நாகரிகமா நகர்ந்து சென்றுவிட்டான்.

“அண்ணா எனக்காக வெயிட்டிங். பிடிடா இதை” என்று பாக்ஸை அவனின் கையில் திணித்தாள்.

“எனக்கு வேணாம். நீ நான் கேட்டதுக்கு ஆண்சர் பண்ணு” என்றான். விடாப்பிடியாக.

“தெரியல.”

“என்ன தெரியல?” ஆர்யன் கோபமாக நெருங்கி வர, எழில் இரண்டடி பின் வைத்திருந்தாள்.

“ம்ப்ச்… சாரி” என்றவன், “உள்ள ரொம்ப படுத்துறடி. புரியுதா இல்லையா உனக்கு? ஸ்டார்டிங்கில் எதோ அட்ராக்ஷன்… தள்ளியிருந்தா சரியாகிடும் நினைச்சு தான் உன்னை என்கிட்ட பேச வேணாம் சொன்னேன். ஆனா என் பார்வையிலேயே உன்னை வச்சிருந்தேன். அதுலே தெரிஞ்சிடுச்சு… நான் டோட்டலா உன்கிட்ட விழுந்துட்டன்னு. லவ்வால் ஸ்டடிஸ் அபெக்ட் ஆகக் கூடாதுன்னு தான், ரெண்டு வருஷமா சொல்லாம வச்சிருந்தேன். இன்னும் ஃபீவ் மந்த்ஸ்… காலேஜ் முடிஞ்சிடும். பார்க்கணும் நினைச்சாக்கூட அவ்ளோ சீக்கிரம் பார்க்க முடியாது. அதான் சொல்லிட்டேன். சொல்லும் போது கூட உனக்கு ஓகே இல்லைன்னா டிஸ்டர்ப் பண்ணக்கூடாதுன்னு தான் நினைச்சேன். ஆனால்…” என்று ஒரே மூச்சாக தன் உணர்வுகளை சொல்லிக்கொண்டு வந்தவன் இடை நிறுத்தி காற்றினை இதழ் குவித்து ஊதினான்.

“முடியலடி… புரிஞ்சிக்க பிளீஸ்” என்றான்.

இருவரிடமும் ஆழ்ந்த அமைதி.

சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லியாயிற்று. இனி முடிவு அவள் கையில் எனும் விதமாக தன்னை தன் காதலை மொத்தமாக வார்த்தையால் அவளிடம் ஒப்புவித்து பதில் வேண்டி காத்திருந்தான்.

அவளுக்கும் அவன்மீது கொள்ளை காதல். ஒரே வகுப்பு. கல்லூரி சேர்ந்த சில நாட்களிலேயே இருவரிடையேயும் நெருக்கமான நட்பு. இரண்டாம் வருடம் முடியும் வரை அவர்களின் நட்பில் எவ்வித மாற்றமுமில்லை. அந்த வருட விடுமுறையில் அவளின்றி நாட்கள் கடந்த நிலையில் தான் ஆர்யன் தன் மனதை கண்டுகொண்டான்.

அவளுடனே சுற்றிக்கொண்டு இருந்துவிட்டு, அவள் இல்லாது சின்ன சலனமிது என்று தனக்குத்தானே தேற்றிக்கொண்டு, தன் மனம் தானே அறிய இடைவெளி விட்டு நின்றான். மூன்றாம் வருடம் துவங்கிய முதல் நாள் கல்லூரி வந்ததுமே, அவளிடம் பேசாதே என்று சொல்லிவிட்டான். அவளும் காரணம் கேட்கவில்லை. இவனும் சொல்லவில்லை.

எழில் புரிதலோடு தள்ளி நின்றதே அவனுக்கு அவள் பால் கொண்ட எண்ணத்தை மேலும் அதிகரிக்கச் செய்தது.

காதலாக விலகி நின்றவன், தற்போது பதில் வேண்டி தவமிருக்கிறான்.

வீசும் காற்றின் ஓசையை தவிர்த்து சிறு சத்தமில்லை.

முன்தினம் காதலை சொல்லும் போது கூட, ஆர்யனிடம் இப்படியொரு உணர்வுகள் ததும்பும் வார்த்தைகள் இல்லை. இதற்கே பெண்ணவள் தவித்து பார்த்தாள்.

எழிலுக்கு உதயனின் சம்மதம் வேண்டுமாக இருக்க, “நானும் உன்னை நேசிக்கிறேன்” என்று வாய் வரை வந்துவிட்ட வார்த்தைகளை உதிர்க்காது கடினப்பட்டு நின்றாள்.

“எதாவது சொல்லுடி!”

“நான் போகணும்…”

“ஊஃப்… சரி போ!”

எழில் விட்டால் போதுமென்று வேக அடிகள் வைக்க…

“ஓய்” என்று அவளை நிறுத்தியிருந்தான்.

“கொடுத்திட்டு போடி” என்று அவளது கையிலிருந்த டப்பாவை கண் காண்பித்து, கை நீட்டினான்.

“ஆங்… ச்சூ…” நெற்றியில் தட்டிக் கொண்ட எழில், “சாரி” என்று அவனது கையில் டப்பாவை வைத்து திரும்பி நடந்தாள்.

ஆர்யன் உரிமையாய் டி போட்டு பேசுவது, அவளுக்கு படபடப்பை கொடுத்தது.

“நாளைக்கு தேங்காய் சாதம், அவியல் வேணும். முந்திரி நிறையப்போட்டு” என்றான்.

திரும்பாது தலையை மட்டும் அசைத்தவளின் முகம் புன்னகையில் தோய்ந்திருந்தது.

(தேங்காய் சாதமெல்லாம் பிடிக்குமா என்று யாரும் கேட்கக்கூடாது. தேங்காய் சாதம், அவியல் கன்னியாகுமரி சிறப்பு உணவுகளில் அடக்கம்.)

 

 

என் ஆயுள் நீயே 18

உதயன் மருத்துவமனை சென்று வந்த கையோடு மீன் பிடி தளத்திற்கு செல்லத் தயாராகி கீழே வந்தான்.

அனைவரும் கூடத்தில் தான் ஆளுக்கொரு இடமாக அமர்ந்திருந்தனர்.

உதயன் மாடிப்படிகளில் இறங்குவது தெரிந்ததும், தூணில் சாய்ந்து கவலையாக அமர்ந்திருந்த கங்கா எழுந்து கொண்டார்.

“நீங்க உட்காருங்கம்மா. சாப்பாடு தானே எடுத்து வைக்கணும். நான் வைக்கிறேன்” என்று முன் வந்தாள் நனியிதழ்.

“இருக்கட்டும் நனி” என்ற கங்கா, சமையலறைக்குள் நுழைய, அவரின் நடையில் அத்தனை சோர்வு.

மூத்த மருமகளை ஒரு நாளும் இப்படி வாடிப்போய் கண்டிராத லட்சுமி பாட்டி, “இந்த மருதனுக்கு கொஞ்சமும் கூறில்லை. அன்னைக்கும் சரி இன்னைக்கும் சரி, தான் நினைச்சது தான் சரின்னு வந்து ஆடிட்டுப் போயிட்டான்” என்று புலம்பினார்.

“விடுங்கம்மா… அவனை தான் நல்லா தெரியுமே! எல்லாத்துலயும் அவசரம்” என்றார் இளங்கோவன்.

“என்னவோ அவனுக்கும் நமக்கும் காலத்துக்கும் ஆகாதுன்னு ஆகிப்போச்சு” என்று வருந்திய கஜமுகன், பேரன் அழைக்கும் முன்னர் தானே உணவு மேசை நோக்கிச் சென்றார்.

“வந்தனாவை அடிக்கடி பார்த்திருக்கேன். ஆனாலும் அவளுக்கு எப்படி அண்ணா மேல லவ்வு. பேசிக்கிட்டது கூட இல்லை.” தன்னுடைய அதி முக்கிய சந்தேகத்தை நனியிதழிடம் கேட்ட எழில், அக்காவின் கையால் கொட்டு வாங்கிக் கொண்டாள்.

“நீங்க அடிச்சாலும் எனக்கு சொல்ல இன்னொன்னும் இருக்கு” என்றாள் எழில்.

“என்னது?” எதும் வில்லங்கமாக சொல்லப்போகிறாள் என்று பார்வையில் ஒருவித கூர்மையோடு நனியிதழ், தன் தங்கையை பார்த்தாள்.

“இப்போ நமக்கும் அவங்களுக்கு நடுவில் சண்டை இல்லாம இருந்திருந்தா இந்த சூழல் எப்படியிருந்திருக்கும்?”

“எப்படி இருந்திருக்கும்?”, நனியிதழ்.

“குமரி அத்தைக்கும், மருதன் மாமாவுக்கும், பொண்ணு கொடுக்கிறதில் நான் நீன்னு போட்டி இருந்திருக்கும். நமக்கு நல்ல எண்டர்டெயின்மெண்ட்டா இருந்திருக்கும்” என்ற எழில் நனியிதழ் பார்த்த பார்வையிலும், “நீ காலேஜ் கிளம்பல?” எனக் கேட்ட உதயன் குரலிலும் அடித்துப் பிடித்து உணவுக்கூடம் ஓடி வந்து உதயன் பக்கத்தில் அமர்ந்தாள்.

“ஆபிஸ் போகலையா பட்டு?”

“நூன் ஷிப்ட் அண்ணா.” நனியிதழ் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணி புரிகிறாள். படிப்பு முடிந்ததும், காதல் வலியில் உழன்று கொண்டிருந்தவளை திசை திருப்ப, வேலைக்கு செல்ல அனுப்பியிருந்தான் உதயன்.

“ம்ம்… வா சாப்பிடலாம்.”

மனதில் ஆயிரம் சோகம் இருப்பினும், உதயன் என்பவனின் முகத்திற்காக அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு சாதாரணமாக நடமாடிக் கொண்டிருக்கிறாள் நனியிதழ். அத்தோடு, முன் தினம் எடுத்த முடிவில் உறுதியாக இருக்கின்றாள். இந்த காதலே வேண்டாம் என்று அதிலிருந்து மீண்டுவர முயன்றுவிட்டாள். அத்தனை எளிதல்ல என்று தெரியும். இருப்பினும், கடக்க நினைத்தால் தானே அதனின் ஆழம் தெரியும். முடியுமா முடியாதா என்று அறிந்திட முடியும். தன்னையே மீட்டிட துணிந்து விட்டாள்.

உதயன் அழைத்த பின்னர் அமர்ந்திருக்க முடியாதென உணவுண்ண எழுந்து சென்றாள்.

“இன்னைக்கு பத்தாவது வயல் உப்பு வெட்டி எடுக்கணும் இன்பா. எனக்கு இறால் பண்ணைக்கு போக வேண்டிய வேலையிருக்கு. நீ அதை என்னன்னு பாரு. இந்த முறை போட்ட பாத்தி வரிசை எதுவும் சரியா இல்லைன்னு வெங்கையா சொன்னார். காண்ட்ராக்ட்டர் மாத்திடு” என்று தொழில் விஷயம் பேசிக்கொண்டே உதயன் உண்டு முடித்திருந்தான்.

“நீ வா. உன்னை காலேஜில் ட்ராப் பண்றேன்” என்ற உதயன், நனியிதழின் கன்னம் தட்டி, சிறிய தங்கையுடன் புறப்பட குமரி உள்ளே வந்தார். தனுவின் கையை அழுத்தமாக பிடித்திருந்தார்.

“பஞ்சாயத்தைக் கூட்டப் போறாங்க போலண்ணா” என்று உதயனிடம் கிசுகிசுத்த எழில், “நான் மாமாவை கூட்டிட்டு வரேன்” என்று நகர, “அவரு வீட்டிலில்லை” என்றான் உதயன்.

உதயன் மருத்துவமனையிலிருந்து திரும்பி வரும்போது குமரி அங்கு தான் சத்தமிட்டுக் கொண்டிருந்தார். உதயன் வந்ததும் அமைதியாகிவர், அவன் மாடிக்குச் சென்றதும் மீண்டும் ஆரம்பித்திருந்தார்.

“அவங்க கிளம்பி வந்து சாப்பிட உட்காரும் நேரம் வரை இப்படி அனத்திக்கிட்டு கிடந்த, நானே உன் வாயை தைச்சிப்புடுவேன் பார்த்துக்க” என்று லட்சுமி பாட்டி அதட்டியிருக்க, தன் வீட்டிற்கு சென்றிருந்தார்.

சரியாக உதயன் கிளம்பும் நேரத்தை அவதானித்து மகளை இழுத்துக்கொண்டு வந்துவிட்டார்.

“அம்மா கிளம்புறேன்” என்று உதயன் வெளி நோக்கி நகர,

“உங்ககிட்ட தான் பேச வந்திருக்கேன் உதயா” என்றார் குமரி.

எப்படியும் இன்னைக்கு அவர் விடமாட்டரென்று அவனுக்குத் தெரியும். நடந்திருக்கும் சம்பவம் அப்படி. எங்கே, வந்தனா உயிரை கொடுக்குமளவிற்கு சென்றிருக்க உதயன் அவள் பக்கம் ஈர்க்கப்பட்டுவிடுவானோ என்கிற எண்ணம்.

“சரி பேசலாம். உட்காருங்க” என்று உதயன் சொல்ல, அவன் சொல்லிய விதமே இன்று ஒரு முடிவுக்கு வந்துவிடுமென்று நினைத்து அமைதியாக சென்று அமர்ந்தார் குமரி.

குமரி கையை விட்டதும், இவ்வளவு நேரம் அவர் பிடித்ததில் கையில் வலி ஏற்பட்டிருக்க, தேய்த்துக்கொண்டே உணவு மேசை அருகே ஓடிவிட்டாள். எல்லோரும் அங்கு தான் இருந்தனர்.

உதயன் பேசலாம் என்றதுமே, எழிலை கல்லூரிக்கு அழைத்துச் செல்ல இன்பா முன் வந்தான்.

அந்நேரம் மருதன், தன் மனைவியுடன் வந்திருப்பதாக தோட்டக்காரர் வந்து சொல்ல, ஒற்றை கையை இடையூன்றி, ஒரு கையால் நெற்றியை தேய்த்துக் கொண்டான் உதயன்.

“வரச்சொல்லுங்க” என்று உதயன் முடிக்கும் முன்னர், “உன் அனுமதியெல்லாமல் எனக்கு வேண்டாம் எனும் விதமாக சட்டமாக வீட்டிற்குள் நுழைந்தார் மருதன்.

மருதனை கண்டதும் அனைவரும் கூடத்திற்கு வந்துவிட்டிருந்தனர்.

“பட்டு” என்று அழைத்த உதயன், நனியிதழ் பக்கம் வந்ததும், “எழிலை விட்டுட்டு வா” என்றான்.

“அண்ணா நான் போறேன். இவர் வேற வந்திருக்கார். நான் எதும் பேசிப்புடுவேன். அப்புறம் நீங்க என்னை திட்டுவீங்க” என்றான். உதயனுக்கு மட்டும் கேட்கும் விதமாக.

“அங்க அத்தையும் பேச வந்திருக்கிறது உனக்குத் தெரியலையா?” என்ற உதயன், “உன் விஷயம் பேச நீயிருக்க வேண்டாமா?” என்றான்.

இன்பாவின் விழிகள் அதிர்ந்து விரிந்தன.

‘இன்னைக்கு மொத்த குடும்பமும் உன்னை கட்டம் கட்டப்போவுது இன்பா.’ உள்ளுக்குள் அலறினான்.

“இப்போவே என் பேச்சை பேசணுமா அண்ணா?” எனக் கேட்ட இன்பா, உதயன் பார்த்த பார்வையில், “இன்னும் அவகிட்டவே இதைப்பத்தி நான் பேசல” என்று இழுத்தான்.

“இப்பவும் அமைதியா இருந்தா பிரச்சினை பெரிசாகும். பரவாயில்லையா?” உதயன் கேட்டதும் இன்பா கப்சிப்.

“நீங்க கிளம்புங்க” என்று இரு தங்கைகளையும் அனுப்பி வைத்த பின்னரே, “உட்காருங்க” என்று மருதனுக்கு இருக்கையை காண்பித்தான் உதயன்.

எப்படியும் குமரி நனியிதழை இழுத்து பேசுவாரென்று தெரியும். ஏற்கனவே வருத்தத்தில் இருப்பவள், இது கொண்டும் வருந்த வேண்டாமென்று காரணமாகத்தான் எழிலோடு அனுப்பி வைத்தான்.

உதயன் பேசிக் கொள்வான். அந்த எண்ணத்தில் யாரும் முன் வரவில்லை. தாங்கள் பேசி பிரச்சினை எதும் என்றால் அதனை சமாளிக்கப்போவது உதயன் தான். ஆதலால், பேச வேண்டிய இடத்தில் பேசிக் கொள்ளலாமென்று அனைவரும் மௌனமாக இருந்து கொண்டனர்.

“நான் உட்கார வரல. ஒரு முடிவு தெரிஞ்சிக்க வந்திருக்கேன். சாதகமா இருந்தா உட்காருரேன்” என்றார் மருதன். அத்தனை வீம்பு அவரிடம்.

“நான் உட்கார்ந்து நீங்க நின்னுட்டு பேசுறதுன்னா எனக்கு ஆட்சேபணை இல்லை” என்று உதயன் சொல்லிட அதன் பொருளில் சட்டென்று அவன் முன்பு காண்பித்த இருக்கையில் அமர்ந்திருந்தார் மருதன்.

“பர்ஸ்ட் பஞ்சிலே நாக் அவுட்.” இன்பா சன்னமாக சிரிக்க, “சும்மா இருடா” என்று கங்கா அவனை அடக்கினார்.

“இன்னைக்கு நேரம் சுவாரஸ்யமா போகும் போலயே?” காமாட்சி கேட்டு தன் மாமியாரிடம் கண்டனப் பார்வையை வாங்கிக் கொண்டார்.

“ம்க்கும்…” என்று முகத்தை வெட்டிய காமாட்சி, “இன்னும் கொஞ்ச நேரத்தில் இவங்க மவள் ஆடுவாள். அப்பவும் இப்படி அதட்டி மிரட்டுறாங்களா பார்க்கிறேன்” முனகினார்.

“காமு நீ வேற ஏன்டி… கேட்டுத் தொலையப்போவுது” என்றார் கங்கா.

“ஆமாம்மா… உன் சம்மந்தி காதுல விழப்போகுது. நாளை பின்ன ரெண்டு பேரும் சேர்ந்து சபையில சமமா நிக்க வேணாமா?” இன்பா துடுக்காய் கேட்டிட, “அக்கா இவன் என்ன சொல்றான்” என்று அதிர்ந்து கேட்டார் காமாட்சி. அவன் சொல்லியதன் அர்த்தம் விளங்கிய கங்காவும் காமுவின் அதிர்விற்கு கொஞ்சமும் கம்மியில்லாது அதிர்ந்து பார்த்தார் மகனை.

இவர்களுக்கு மிக அருகிலேயே, இவர்களின் பேச்சினைக் கேட்டபடி நின்றிருந்த தன்யா, “நிஜமாவா மாமா. உனக்கு ஓகேவா” என இன்பாவை நெருங்கி நின்றாள்.

“ஒரு தரம் கூடவா என் கண்ணை பார்த்து உன்னால புரிஞ்சிக்க முடியல?” இன்பா கேட்டிட, தனு பெரும் மகிழ்வு கொண்டாள்.

முதன் முதலில் குமரி தனு, உதயன் திருமணப் பேச்சினை எடுத்த சமயம் தான், தனு தன் மனதை புரிந்து கொண்டாள். அன்றே இன்பாவிடம் சொல்லவும் செய்திட, அவன் அவளை அடிக்கவே கையை ஓங்கிவிட்டான்.

அவள் பார்வையில், அது முதல் அவளை முற்றும் முழுதாக தவிர்த்தும் விட்டான். தனு பார்வையாலே கெஞ்சுவதும், இன்பா முறைப்பதுமாகவே இருந்திட, எப்போதும் இன்பா தன் காதலை ஏற்கப்போவதில்லை என்று தவிப்போடு இருந்தவளுக்கு இன்றைய இன்பாவின் சம்மதம் அத்தனை மகிழ்வை அளித்தது.

“இனி எல்லாம் உதயா மாமா பார்த்துப்பாங்க” என்றாள் முகம் கொள்ளாப் பூரிப்போடு.

“ஆத்தே…” காமாட்சி நெஞ்சிலே கை வைத்துவிட்டார்.

“அக்கா எனக்கு பயந்து வருதுக்கா. குமரி என்ன ஆட்டம் ஆடப்போறாளோ!” என்றார் காமாட்சி.

“எல்லாம் அண்ணா பார்த்துக்கும்.” சாதாரணமாக சொல்லிய இன்பா, இளங்கோவன் அருகில் சென்று அமர்ந்து கொண்டான்.

“அவங்க ஒருத்தங்க மூத்தவங்களா பிறந்துட்டு உங்ககிட்ட படாதப்பாடு படுறாங்க” என்றதோடு, “ஏய் தனு என்னடி இதெல்லாம்?” என காமாட்சி அவளின் புஜத்திலே இடித்தார்.

“எனக்கு இன்பா மாமாவைத்தான் கட்டிக்கணும்” என்றாள். பட்டென்று அவளின் வாயை கரம் வைத்து மூடிய கங்கா, “இருக்கும் பிரச்சினை போதாதா… உதயா பேசுறவர கொஞ்சம் அமைதியா இருடி” என்றார்.

“உங்களுக்கெல்லாம் வருத்தமில்லையா?” இதுநாள் வரை உதயனுக்கு என்று பார்த்த சூழலில், இன்று இன்பாவுக்கு எனும் நிலையில் வருத்தமோ கோபமோ இல்லையென்ற கேள்வி தான் தனுவிடம்.

“எதுக்கு கோபம்? இன்பாவும் எங்க மகன் தானே! யாரை கட்டுனா என்ன? நீ இந்த வீட்டு மருமகளானா சந்தோஷம் தான்” என்றார் கங்கா.

“இத்தனை நாள் உதயா கல்யாணப் பேச்சை தட்டி வந்த காரணம் நனி மட்டுமில்லைன்னு புரியுது. அவங்களே இது இப்படின்னு ஒரு முடிவில் இருக்கும்போது எங்களுக்கு எதுக்கு வருத்தம்? எது நடக்கனுமோ அதுதான் நடக்கும்” என்ற காமாட்சி, “இன்னும் என்ன ஒன்னும் பேசாம இருக்காங்க” என்றார்.

மருதன் பேச வேண்டுமென்று பிடிக்கவே பிடிக்காது மகளுக்காக படியேறி வீட்டின் கூடம் வரை வந்துவிட்டாலும், வெளிப்படையாய் பேசிட தொண்டை அடைத்துக் கொண்டது.

எண்ணயிருந்தாலும் மனதளவில் இன்றும் மருதனுக்கு அவர்கள் பகையாளிகள் தான்.

“இப்படி மொகத்தை பார்த்துக்கிட்டு வெறுக்குன்னு உட்காரத்தான் வந்தீங்ககளா?” லட்சுமி பாட்டி அமைதியை கலைத்தார்.

 

Epi 19 and 20

என் ஆயுள் நீயே 19 ம 20

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
24
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்