அத்தியாயம் 16 :
இரவின் இனிமையை கண் முன் காட்சிப்படுத்தியவாறு காரினை செலுத்திக்கொண்டிருந்த ஆதியின் புன்னகை முகம் கோர்ட் வளாகத்தை கண்டதும் அனைத்தும் மறந்து ஏ.டி’யாக இறுகினான்.
கோர்டிற்குள் நுழைந்த ஆதியின் கண்கள் தன்னைப்போல் விச்சுவின் அலுவலக அறை பக்கம் சென்று மீண்டது.
அந்நேரம் விஸ்வநாதனும் ஏ.டி’யைத்தான் நினைத்திருந்தார். அவனின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும் என்பதே அவரின் யோசனை.
ஏ.டி’யை நினைத்து பயம் ஆரம்பித்திருந்தது அவருள். இதுவரை வெற்றி சிங்கமாக சுற்றி வந்தவருக்கு தொடர் தோல்விகளை அல்லவா அந்த வேங்கை பரிசாகக் கொடுத்திருக்கிறது.
மீண்டும் அவன் தன்னுடைய எந்த வழக்கில் தலையிடுவானென்று அவரால் கணிக்க முடியவில்லை. இதுவா அதுவா என்று நினைக்கும்போதே இந்த இரண்டை விட மற்றொன்று பெரியதாகத் தோன்றும். பெரியது என்பது வழக்கின் நிலையல்ல, வழக்கிற்காக பெறப்பட்ட தொகையின் அளவு. நியாயமற்ற எல்லா பெரிய இடத்து வழக்குகளுக்கும் கணக்கீடு இல்லாது வாங்கி குவித்திருக்கிறார். இதில் எதில் ஏ.டி கை வைத்தாலும் பெரும் நட்டம் அவருக்கு.
அதைவிட மீண்டுமொரு தோல்வியென்றால்?
நினைக்கவே அஞ்சினார்.
அடுத்து எதில் ஏ.டி’யின் தலையீடு என்று யோசித்தவருக்கு தெரியவில்லை, ஏ.டி மற்றவரின் யோசனைகளுக்கு அப்பாற்பட்டவன் என்று. அவன் அவரின் அடி மடியினிலேயே கை வைக்க போகிறான் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை.
“குட் மார்னிங் சீனியர்.”
ராகவிற்கு சிறு தலையசைப்பை பதிலாக அளித்த ஏ.டி தீவிர சிந்தனையில் இருந்தான்.
இருப்பினும் அவனின் முகப்பொலிவு வேறெப்போதும் ராகவ் கண்டதில்லை.
“என்ன சீனியர் உங்க சிந்தனையை தாண்டி முகம் ஜொலிக்குது… வாட் இஸ் தி மேட்டர்?”
ராகவ் அவ்வாறு வினவியதும் மனைவியின் முகம் கண் முன் தோன்ற அவனின் முகம் மென்மையை காட்டியது. உதட்டோரம் இளநகை ஒன்று அழகாக பூத்தது.
“சீனியர்… மிஸ்டர். ஏ.டி’யா இது?” அதிசயத்தை கண்டது போல் கூவினான் ராகவ்.
“ச்சீ போடா” என்ற ஆதி ராகவின் முதுகில் வலிக்காது ஒரு அடி வைக்க,
“அய்யோ சீனியர் இப்படியெல்லாம் வெட்கப்பட்டு என் பிஞ்சு இதயத்தை தாறுமாறா துடிக்க வைக்காதீங்க!” என்று ராகவ் ஆதியை நன்கு வெட்கப்பட வைத்தான்.
“இப்போ உங்களை பார்க்கும்போது எனக்கு ஒன்னு தோணுது சீனியர்.”
“என்ன?”
“நான் பொண்ணா பிறந்திருக்கலாம்.”
“பிறந்திருக்கலாம் தான்… ஆனால் எல்லோரும் என் பேபி ஆகிட முடியாது. இந்த சிரிப்பு, சந்தோஷம், எல்லாம் அவளால் தான்” என்ற ஆதி மீண்டும் தனது சிந்தனைக்குள் சென்று விட்டான்.
ஆர்.கே’விடம் பேசிவிட்டு வந்துவிட்டான். ஆனால் விஸ்வநாதனுக்கு தெரியாமல் செயல்படுத்த என்னவழியென்று யோசித்தான்.
ஆதி தீவிர யோசனையில் இருப்பதை கவனித்த ராகவ் சில கணங்கள் அவனை தொந்தரவு செய்யாது அமைதியாக பார்த்திருக்க, மீண்டும் தானே பேசினான்.
“இன்னைக்கு மேம் வரலையா சீனியர்.”
“எனக்காக மேம்’ன்னு சொல்ல வேண்டிய அவசியமில்லை ராகவ். நிரலின்னு பெயர் சொல்லியே கேட்கலாம்” என்ற ஏ.டி ஏதோ யோசனை வந்தவனாக, வேகமாக இருக்கையிலிருந்து எழுந்து நீதிபதியை காணச் சென்றான். உடன் ராகவ்.
நீதிபதியின் அறைக்குள் அனுமதி பெற்று உள் சென்ற ஏ.டி’யை உற்சாகமாக வரவேற்றார்.
“வாங்க எனர்ஜிடிக் யங் பாரிஸ்டர்.”
ஆர்.கே’வும், நீதிபதி தயாளனும் நெருங்கிய நண்பர்கள். அந்த வகையில் ஆதியை நன்றாகத் தெரியும். இருப்பினும், ஆதி வழக்குகளை கையிலெடுத்து வாதாட துவங்கியது முதல் இவரும் பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றார், அவனின் திறமையை. அதற்கே இத்தகைய வரவேற்பு.
அவருக்கு வணக்கம் சொல்லி, அவர் காட்டிய இருக்கையில் அமர்ந்து ஏ.டி அசௌகரியமாக உணர்ந்தான். முன்னெப்போதும் வழக்குகளுக்காக உதவி வேண்டுமென்று யாரிடமும் சென்று நின்றதில்லை, பேசியதில்லை. இதுவே முதல் முறை. ஆதலால் தயங்கினான். அவனின் முகமே அவன் இதுவரை செய்திடாத ஒன்றை செய்ய விழைகிறான் என்று அனுபவசாலி மற்றும் பலதரப்பட்ட மனிதர்களை தினமும் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து பார்க்கும் தயாளனால் எளிதில் கண்டுகொள்ள முடிந்தது.
ஆதி கேட்பதற்கு முன்பு அவரே வினவினார்.
“என்னன்னு சொல்லுங்க ஏ.டி. முடியும் என்கிற நிலையில் நிச்சயம் உதவுகிறேன்.”
தயாளன் அவ்வாறு சொல்லியதும் ஆதி சற்று இலகுவாக உணர்ந்தான்.
நடந்த அனைத்தையும் கூறிய ஏ.டி, “டி.என்.ஏ டெஸ்ட் எடுக்க பெர்மிஷன் வேண்டும் சார்.” மிகவும் தயங்கித்தான் வினவினான்.
“இதற்கெதற்கு தயக்கம் ஏ.டி. தொழில் ரீதியாக உதவி செய்யுமிடத்தில் நானிருக்கின்றேன். செய்துதானே ஆகவேண்டும். இதை வெளிப்படையாகவே செய்யலாமே!”
“வெளிப்படையாக… இப்போதைக்கு யாரென்ற உண்மை விஸ்வநாதனுக்கு தெரியாமல் இருக்கும்வரை தான் நன்மை சார். அவங்க உயிருக்கே கூட விலை நிர்ணயிக்க விஸ்வநாதன் தயங்கமாட்டார் சார். அதுக்கே இந்த மறைமுகத் திட்டம்” என்றான்.
“புரியுது ஏ.டி” என்ற தயாளன், “ஆனால், பெயர் குறிப்பிட வேண்டுமே, எதிர் தரப்பினருக்கு சாட்சியை அடையாள படுத்தி அட்வான்ஸ் நோட்டீஸ் கொடுக்க வேண்டுமே!” என்றார்.
“தேடும் நபர் கிடைத்துவிட்டதாக மட்டும் தெரிவித்து, அவர்களை வழக்கன்று நீதிமன்றத்தில் ஒப்படைக்க அனுமதி வாங்கிவிட்டதாக மட்டும் தெரிவித்தால் போதுமானது என நினைக்கிறேன் சார்.”
“இதுவும் நல்ல ஐடியா தான் ஏ.டி” என்ற நீதிபதி அவன் கேட்டதற்கு அனுமதி அளித்து கையெழுத்திட்டார்.
“ரொம்ப நன்றி சார்.”
“ஆர்.கே என்னுடைய பிரண்ட் ஏ.டி.” நீதிபதி புன்னகையுடன் கூறினார்.
“தொழிலுக்காக யோசித்தாலும், உங்கள் நண்பருக்காக நிச்சயம் இதை செய்ய ஒப்புக் கொள்வீர்கள் தெரியும் சார். அதனால் தான் தயங்கினாலும் தைரியமாக கேட்க வந்தேன்.”
ஆதியின் பதிலில் அவனை மெச்சும் பார்வை பார்த்தவர், “சிறு விடயத்திற்கு கூட அனைத்தையும் ஆராய்ந்து பார்ப்பதால் தான், இந்த இளம் வயதிலேயே பல சீனியர்களும் உங்களை கண்டு அஞ்சும் இடத்தில் இருக்கீங்க.
சிறு புன்னகையோடு அவரின் பாராட்டை ஏற்றவன் நன்றி கூறி வெளியேறினான்.
‘எவ்வளவு பெரிய பாவத்தை செய்துவிட்டு, நிம்மதியாக இருக்கிறாய் விச்சு. உன்னை மொத்தமாக காலி செய்றேன்.’ நீதிபதியின் அறையிலிருந்து வெளிவந்த ஏ.டி’யின் மனம் சூளுரைத்தது.
ஆதியோடு இருந்த ராகவிற்கு நீதிபதியிடம் அவன் சொல்லியதை கேட்டதும் “இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா” என்று தலை சுற்றியது.
“என்ன ராகவ் நம்ப முடியலயா?” என்ற ஆதியின் கேள்வியில் ராகவ் ஆமென்றான்.
“எல்லாம் சரியா நடக்குமா? இதில் அவங்களுக்கு எந்தவொரு ஆபத்தும்…” ராகவ் தனக்கு கிடைத்த உறவிற்கு ஆபத்தென்றதும் கவலை கொண்டான்.
ஆதியிடத்தில் வழக்கமான புன்னகை மட்டுமே.
அந்த புன்னகையில் தனக்குள் இருக்கும் அதே பயத்தை மறைக்க முயன்றான்.
அப்படியே ஒரு வழக்கிற்காக இருவரும் விசாரணை அறைக்கு சென்று அவ்வழக்கினை முடித்துவிட்டு தங்களது அலுவலக அறைக்குள் நுழையும்போது அங்கு நடுநாயகமாக விஸ்வநாதன் அமர்ந்திருந்தார்.
அவரை கண்டதும் ராகவின் கை முஷ்டி இறுகியது. பார்வையாலே அவனை அடக்கினான் ஆதி.
அவர் வராமல் இருந்திருந்தால் தான் ஆதி ஆச்சர்யம் கொண்டிருப்பான். அவரின் வருகை அவன் எதிர்பார்த்தது தான். அதனால் எத்தகைய உணர்வையும் முகத்தில் காட்டாது வழக்கம்போல் அவரிடம் வம்பு செய்தான்.
“ஹாய் விச்சு” என்றவன் தும்மல் வந்ததை போல் பாவனை செய்ய இருக்கையிலிருந்து விஸ்வநாதன் எழுந்து விட்டார். அவரின் முகத்தில் அப்படியொரு கோபம்.
அந்த கோபத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் இருந்தது ஆதியின் செயல்.
தன்னுடைய பாக்கெட்டிலிருந்து விக்ஸ் மிட்டாய் ஒன்றை எடுத்தவன் அதனை முகத்திற்கு நேரே உயர்த்தி பிடித்து மெல்ல பிரித்து வாயில் போட்டு ஸ்லோ மோஷனில் நாக்கை சுழற்றி சுவைத்தான்.
அதில் விஸ்வநாதன் உண்மையில் கடுப்பாகி விட்டார். எப்போதும் போல் இப்போதும் ஏ.டி’யின் வாயில் தானே அறைபடுவது போல் உணர்ந்தார்.
“வேண்டாம் ஏ.டி.”
அவர் ஒன்றை நினைத்து சொல்ல ஆதி ஒன்றை நினைத்து பேசினான்.
“நான் உனக்கு வேணுமான்னு கேட்கவேயில்லையே விச்சு” என்ற ஆதி அங்கிருந்த குஷன் இருக்கையில் கால் மேல் காலிட்டு அமர்ந்தான். அவன் தோரணையில் தனியானதொரு திமிர் வெளிப்பட்டது. அது அவனுக்கே உரித்தான ஒன்று.
ராகவும் நடப்பதை வேடிக்கை பார்க்கும் வகையில் அமர்ந்து கொண்டான்.
“அப்புறம் விச்சு… வந்த காரணம் என்னவோ ?” தெரிந்தும் வினவினான்.
பல்லை கடித்த விஸ்வநாதன், “யாரது?” என்றார்.
“யார்.. யாரு?”
“யூ ஆர் டூ ஸ்மார்ட் ஏ.டி… சோ டோன்ட் பிளே வித் மீ” என்ற விஸ்வநாதன் முன்னர் தான் அமர்ந்திருந்த இருக்கையில் அமர,
“முடிஞ்சா கண்டுபிடி விச்சு… இன்வெஸ்டிகேட் என்கிற பெயரில் குற்றவாளியை நிரபராதியாக ஆக்குவதும், நிரபராதியை குற்றவாளியாகவும் மாற்றுவதற்கும் தானே லா படிச்சிருக்க” என்ற ஏ.டி’யின் வார்த்தையில் அவரின் முகம் கருத்து விட்டது.
சில நொடி கனத்த மௌனம் அங்கே,
“சரி நான் நேரடியாக விடயத்திற்கு வறேன். ஆர்.கே’வின் வாரிசு யார்?” விஸ்வநாதன் கேட்டுவிட்டார். ஆனால் பதில் சொல்ல ஏ.டி நினைக்கவில்லையே.
“சொல்ல முடியாது.” தெனவட்டாகக் கூறிய ஏ.டி மொபைலை எடுத்து கேம் விளையாடத் துவங்கிவிட்டான்.
அவனை ஒன்றும் செய்ய முடியாத தன்னிலையை நினைத்து தனக்குள்ளே குமைந்தார் விஸ்வநாதன். அந்நேரம் அவர் ஏ.டி’யை பார்த்த பார்வையை கண்டு ராகவ் அரண்டு போனான். அந்த பார்வையில் நிச்சயம் ஆதியை கொல்லத் துடிக்கும் வெறி கரையை கடக்கத் துடித்துக் கொண்டிருந்தது.
ஆதி அதனை உணர்ந்தாலும் கண்டு கொள்ளவில்லை.
“நீ சொல்லவில்லை என்றால் என்னால் கண்டுபிடிக்க முடியாது என நினைக்கின்றாயா?”
“அப்போ கண்டுபிடி விச்சு.” அவ்வளவுதான் ஏ.டி’யின் பதில்.
“அது யாராக இருந்தாலும் உயிர் போவது உறுதி.”
காற்றின் வேகத்தில் இருக்கையிலிருந்து எழுந்த ஏ.டி, விச்சு அமர்ந்திருந்த இருக்கையின் இருபுறமும் கை வைத்து… அவரின் முகத்தருகே தனது முகத்தை கொண்டு சென்று, அவரின் பார்வையை தனது வேங்கை பார்வையால் நேருக்கு நேர் சந்தித்து… “என்னருகில், என்னுடன், என் பார்வையில், என் பாதுகாப்பில் இருக்கும்வரை உன்னால் விரல் நகத்தை கூட தீண்ட முடியாது” என்று ஒரு விரல் நீட்டி மிகுந்த அழுத்தத்துடன் கூறியவன் அதே வேகத்தோடு வெளியேறியிருந்தான்.
புயல் சுழன்றடித்து நொடியில் அமைதியாகியது போலிருந்தது அவ்விடம்.
விஸ்வநாதனுக்கு வியர்த்துவிட்டது.
ஆதியை அசைத்து பார்ப்பது முடியாத காரியமென்று அவர் இன்னும் அறியவில்லை.
தன்னையே மிரட்டிச் செல்லும் ஆதியை வென்றிட துடித்தது அவர் மனம்.
ஆதி என்ன தான் சிறிதும் அச்சமின்றி விஸ்வநாதனையே மிரட்டிச் சென்றிருந்தாலும், ராகவிற்கு அவரிடத்தில் பயமிருந்தது. ஏ.டி’யுடன் இருப்பதால் அவரின் பல கொடூர செயல்களை அறிந்தவனாயிற்றே. அதனால் விளைந்த பயமே.
இதனால் ஆதிக்கும், இந்த வழக்கில் பெயர் சொல்லாது ஆதி குறிப்பிட்ட நபரின் உயிருக்கும் ஏதேனும் ஆபத்து வந்து விடுமோ என்று அஞ்சிய ராகவ் ஆதிக்கு தெரியாமல் முடிவு ஒன்றினை எடுக்க, அது அவனின் உயிருக்கே ஆபத்தாக அமைய காத்திருந்தது.
ராகவ் ஏதோ யோசனையில் இருப்பதை… தன்னிலை மீட்ட விஸ்வநாதன் கவனிக்க, ‘இவனின் முகம் ஏன் குழப்பத்தில் உள்ளது’ என்று சிந்தித்தார்.
அச்சமயம், ‘எந்நேரமும் ஏ.டி’யுடன் இருப்பவன் இவனுக்கு தெரிந்திருக்குமே அது யாரென்று’ மனதில் நினைத்தவர் வேறொரு கணக்கு போட்டவாறு வெளியில் சென்றார்.
மீண்டும் ஆதி அலுவலக அறைக்குள் வந்த போது அவனின் முகம் சாதாரணமாக இருந்தது. அதிலிருந்து ராகவால் ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை.
ராகவிடம் டி.என்.ஏ பரிசோதனைக்காக அந்த குறிப்பிட்ட நபரின் தலை கேசத்தை அளித்த ஆதி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவரை சந்திக்கக் கூறினான். மேற்படி தகவலுக்கு நீதிபதி தயாளனை தொடர்பு கொள்ளுமாறு அந்த மருத்துவரிடம் கூற கூறினான்.
இந்த வழக்கில் உண்மை வெளி வந்துவிட்டால், முடியாதோர் பலருக்கு மிகப்பெரிய நன்மை உள்ளது என்று உணர்ந்த ராகவ் மிகவும் கவனமாக, டி.என்.ஏ மாதிரியை கொண்டு சென்று, தயாளனின் அனுமதி படிவம் மற்றும் இதன் பாதுகாப்பினையும் உறுதி செய்து, எப்போது தகவல் கிடைக்கும் என்பதையும் தெரிந்துகொண்டு வந்தான்.
ராகவ், தான் சென்று வந்ததை பற்றி ஆதியிடம் கூற, அமைதியாகக் கேட்டுக்கொண்டான்.
“என்ன சீனியர்… என்ன யோசனை?”
“ஒன்றுமில்லை ராகவ்” என்ற ஆதி மேற்கொண்டு அந்த வழக்கை பற்றி தான் சேகரித்த அனைத்து தகவலையும் மீண்டுமொரு முறை படித்து பார்த்து ஆழ்ந்து உள்வாங்கினான்.
எல்லா வழக்குகளையும் போல் இவ்வழக்கை எளிதாக அவனால் எண்ண முடியவில்லை. இதில் அவனின் உயிரல்லவா இடம் பெற்றிருக்கிறது. எந்தவொரு இடத்திலும் எதிராளிக்கு சிறு துணுக்கு அளவிற்கு கூட பேச இடம் கொடுத்துவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தான். ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தான்.
இடையில் ஆர்.கே’விற்கு அழைத்தவன் இன்று நடந்தவற்றை அவரிடம் சொல்லியதோடு, அவர் சொல்லிய சில குறிப்புகளையும் குறித்துக் கொண்டான்.
நேரம் போனதே தெரியாது அவ்வழக்கு அடங்கிய கோப்பினிலேயே ஆதி மூழ்கியிருக்க, ராகவ் தான் இரவானதை சொல்லி அவனை கிளம்புமாறு கூறினான்.
இதுபோல் இரவு நேரமாகுமென்பதால் தான், இது போன்ற நேரத்தில் அவளுக்கு பாதுகாப்பு வேண்டியே, இதுவரை வேண்டாமென்று நினைத்திருந்த வீட்டு காவல் வேலைக்கு வள்ளியின் கணவனை நியமித்தான். அதனால் நிரலி இந்நேரத்தில் தனித்து இருப்பாளே என்று கவலை கொள்ளாது பொறுமையாகவே அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு ராகவிடமும் சொல்லிக்கொண்டு வீடு புறப்பட்டான்.
ஆதி சென்ற பின்னால், அலுவலகத்தை சுற்றி முழுதாய் பார்வையை சுழற்றிய ராகவ், அறையின் கதவை பூட்டிவிட்டு தனது பைக்கை உயிர்ப்பித்து தான் தங்கியிருக்கும் அறை நோக்கி சென்றான்.
அடுத்த பத்து நிமிடத்தில் ராகவ் கடத்தப்பட்டிருந்தான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
14
+1
52
+1
2
+1
செமடா
Thank you so much akka 🩷