Loading

அத்தியாயம் 15 :

வேலுவும், சூர்யாவும் நிரலியை ஆதியிடம் விடுவதற்காக கூட்டிக்கொண்டு கிளம்பிய போதே கற்பகம் ஒரு ஆட்டம் ஆடியிருந்தார்.

“அவன்தானே விட்டுட்டு போனான். அவனா வந்து கூப்பிடட்டும். நம்மளா போன நமக்கென்ன மரியாதை.

நாலு வருசமா வீட்டோடத்தானே இருந்தாள்… இப்பவும் இருக்கட்டும்.

என் பேரனுக்கு பொண்டாட்டின்னு இவ(ள்) ஞாபகம் இருந்திருந்தால் வந்திருக்க மாட்டானா?

வேண்டாதவளை என்னத்துக்கு வம்படியா அவன்கிட்ட விடப்போறீங்க?”

இப்படியான கற்பகத்தின் எந்தவொரு பேச்சுக்கும் வேலு செவி சாய்க்கவில்லை. மகளை அழைத்துக்கொண்டு புறப்பட்டு விட்டார்.

வருடங்கள் சில சென்றும் ஆதி நிரலியை பார்ப்பதற்கு கூட வரவில்லையென்றதும், மீண்டும் தன் பேத்தி சந்தியாவுக்கு ஒரு வாய்ப்பு இருப்பதாக கற்பகம் எண்ணியிருக்க அதில் கூடை மண்ணை அள்ளிப்போட்டார் வேலு.

சந்தியா கற்பகத்துடன் தொடர்பில் தான் இருக்கிறாள்.

அவளின் தற்போதைய நிலை மற்றும், மேற்படிப்பு எப்படி பயில்கிறாள் என்று அறிந்த கற்பகத்தின் மனம் குதுகளித்திருந்தது. அதில் இப்போது நிரலி ஆதியிடம் சென்று ஆப்பு வைத்தாள்.

ஆதியுடன் வாழச் சென்றவளை எப்படியும், வாழவிடக் கூடாதென்று கருவிக்கொண்டே வேலு மற்றும் சூர்யாவின் வருகைக்கு காத்திருந்தார்.

காலை முதல் பேருந்தில் வந்து சேர்ந்தவர்களை வீட்டின் உள்ளே கூட விடாது மறித்து நின்றார் கற்பகம்.

“அப்பத்தா, இரவு பயணம் அசதியா இருக்கும். முதலில் உள்ளே வரட்டும், அப்புறம் பேசிக்கலாமே!” செல்வி கற்பகத்தை தடுக்க முயன்றார். அவரின் பயம் அவருக்கு.

“நீ பயப்படும்படி எதையும் நான் சொல்ல மாட்டேன். எனக்கு என் பேத்தியான உன் வாழ்க்கை முக்கியம்.”  செல்விக்கு மட்டும் கேட்கும் வகையில் கிசுகிசுத்தவர் வேலுவை கோபமாக பார்த்தார்.

சூர்யா வேலுவின் பின்னால் பம்பினான்.

‘பெரிய வீட்டுக்கு போனால் இந்த கிழவிக்கிட்ட மாட்டிப்பேன்னு தானே பெரியப்பா வீட்டுக்கு வந்தேன். இது விடாது கருப்பு போலிருக்கே. ஆண்டவா என்னை காப்பாத்து.’ சூர்யா மனதிற்குள் புலம்பினான். என்ன இருந்தாலும், சூர்யாவுக்கு கற்பகத்திடமான பயம் மட்டும் சிறு வயதிலிருந்து அப்படியே உள்ளது.

“உன் பொண்ணை வாழ வச்சிட்டு வந்துட்ட போலிருக்கு.” கற்பகத்தின் குரலில் அவ்வளவு கேலி.

வந்த கோபத்தை அப்படியே அடக்கினார் வேலு. அவர் அறிந்திட்ட விடயம் அப்படி. வேலு எதிர்பார்க்காத ஒன்று. அவ்விடயத்திலேயே கற்பகத்தின் மீது மிகுந்த ஆத்திரம் கொண்டுள்ள அவர், எங்கே வயது வித்தியாசமின்றி கை ஓங்கிவிடுவோமோ என்று பயந்தே அடக்க முடியா சினத்தை அடக்கி நின்றார். அதுமட்டுமில்லாது அவரின் கையை கட்டிபோட்டிருப்பது ஆதி அல்லவா.

மனதிற்கு மிகவும் விருப்பமானவன். அவன் சொன்னால் அதில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்குமென்பதில் நம்பிக்கை கொண்டிருப்பவர், கற்பகத்தை நேருக்கு நேர் பார்க்கும் போதெல்லாம் ஆதியை நினைத்தே தன்னை கட்டுப்படுத்திக் கொள்கிறார்.

“இப்போ என்ன உங்களுக்கு, எந்தவொரு தகப்பனும் தன்னுடைய பொண்ணு புருஷனோட சந்தோஷமா வாழணும் தான் நினைப்பான். அதைத்தானே நானும் செய்தேன்.”

“இம்புட்டு நாள் இல்லாத அக்கறை இப்போ என்ன?” வேலுவின் இந்த திடீர் செயலில் ஏதோ உள்குத்து இருப்பதாகவே கற்பகம் நினைத்தார்.

“அவரே(ஆதி) வந்து கூட்டிட்டு போவாருன்னு காத்திருந்தேன். அது நடக்காதுன்னு தெரிஞ்சிப்போச்சு அதான் நானே போய் விட்டுட்டு வந்தேன்.” அவ்வளவு தான் என்பது போல் வேலு அவரை தாண்டி உள்ளே சென்றார்.

சூர்யாவும் கிழவிக்கு பயந்து வேலுவின் கை பிடித்தவாறு சென்றான்.

“எனக்கு ஆதி விலாசம் வேணுமே!”

கற்பகம் சாதாரணமாக கேட்பதைப்போல் இருந்தாலும், அதனுள் வன்மம் மட்டுமே நிறைந்திருந்தது. நிரலி தனது பேரனுடன் வாழ்ந்து விடக்கூடாது என்கிற வெறி. நிரலியும் அவரின் பேத்தி தானே, சந்தியாவின் வாழ்வின் மீதிருக்கும் அக்கறை நிரலியிடத்தில் ஏனில்லை.

“மாமா கொடுத்துடாதீங்க, கிழவி அங்க போய் உட்கார்ந்துக்கும். அம்மு இதுவரை வாங்குன வசவே போதும்.” சூர்யா வேலுவின் காதில் கிசுகிசுத்தான்.

“அங்க என்ன முணுமுணுக்குற.” கற்பகம் கேட்டிட சூர்யா மௌனியாகினான்.

“உங்களுக்கு எதுக்கு ?” அவ்வாறு கேட்ட வேலுவிடம் தனது தந்திரம் எதுவும் பலிக்காது என்று அறிந்த கற்பகம் ஓவென்று மார்பில் அடித்து அழ ஆரம்பித்தார்.

“அய்யோ அப்பத்தா என்னாச்சு?” செல்வி பதறிக்கொண்டு கற்பகத்தின் அருகில் சென்றார்.

வேலுவுக்கு இது பாசாங்கு என்று நன்கு விளங்கிற்று. சூர்யா, ஆத்தி… என்கிற ரீதியில் பார்த்து நின்றான்.

“என் பேரன் முகத்தை பார்த்து நாலு வருசமாச்சே… என் வீட்டு ஒத்த ஆண் வாரிசு, அவனை பார்க்க எனக்கு கொடுத்து வைக்குதோ இல்லையோ!” அவர் தனது ஒப்பாரியை துவங்கிவிட்டார்.

கற்பகம் தன் மகன் மூர்த்தியிடம் கேட்டு ஆதி இருக்கும் இடத்தை அறிந்திருக்கலாம். ஆனால் அவர் தான் ஒருமுறை கற்பகம் நேரடியாகக் கேட்டும் சொல்ல முடியாதென நிர்தாட்சண்யமாக மறுத்துவிட்டாரே.

தன் மகன் கற்பகத்தின் மீது மிகுந்த கோபம் கொண்டுள்ளான் என்று மூர்த்திக்கு தெரியும். இந்த கிழவி அவனை பார்க்கின்றேனென்று அங்கு சென்றுவிட்டால், ஏற்கனவே வீட்டு பக்கம் தலை காட்டாமலிருப்பவன் மொத்தமாக குடும்பத்தையே மறந்து விடுவானென்று கற்பகம் எவ்வளவோ ஆர்ப்பாட்டம் செய்தும் மூர்த்தி சொல்லவில்லை. அதனாலே வேலுவிடம் தன் நாடகத்தை ஆரம்பித்தார் கற்பகம்.

கற்பகம் இவ்வாறு ஆரம்பித்தால் எளிதில் நிறுத்தமாட்டார். அது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். இருப்பினும் கிழவி அழும் வரை நல்லா அழட்டுமென்று வேலு திடமாக நின்றார்.

அவர் செய்த காரியம் அப்படி. தன் பேத்தியை வாழ வைக்க செய்தாலும், அதன் பின்னான அவரின் செயலில் நல்ல எண்ணம் இல்லாமல் போனதே! நினைக்க நினைக்க வேலுவுக்கு ஆத்திரம் வலுத்தது. தன் மனைவியும் இதனை தன்னிடம் மறைத்திருக்கின்றாளே என்கிற வருத்தமும் ஒருங்கே தோன்றியது. ஆனால் செல்வியை நினைக்கும்போது வேலுவுக்கு பாவமாகத்தான் இருந்தது. அந்த நிலையில் தன்னுடைய திருமண வாழ்வை காப்பாற்றிக்கொள்ள, செல்விக்கு கற்பகத்தின் யோசனைப்படி நடப்பதைத்தவிர வேறு வழியில்லையே.

ஆனால், அதனை கற்பகமும், செல்வியும் இருபத்திரண்டு வருடம் காமாட்சி மற்றும் மூர்த்திக்கே தெரியாது மறைத்து வருவதுதான் பெரும் ஆச்சரியம்.

வேலு தன் மனதோடு உழன்று கொண்டிருக்க, கற்பகம் இன்னும் நீலி கண்ணீர் வடித்து அரற்றிக்கொண்டிருந்தார்.

“பெரியப்பா இந்த கிழவி இப்போதைக்கு நிறுத்தாது போலிருக்கே!” என்ற சூர்யாவிடம்,

“ரெண்டு நாள் ஆனாலும், ஆதிப்பா விலாசத்தை சொல்லும் வரை நிறுத்தவே நிறுத்தாது” என்றார் வேலு.

“அப்போ சொல்லப்போறீங்களா? அடுத்த நிமிசம் கிழவி பஸ் ஏறிடும். அம்முக்குதான் கொடைச்சல்.” சூர்யா கிழவியின் திட்டம் உணர்ந்தவனாகக் கூறினான்.

வேலு ஆதியின் இருப்பிடம் பற்றி சொல்லக்கூடாதென்று நினைத்தாலும், கிழவி தான் சொல்லாது ஓயாதென்று அறிந்தவர்… சிறிது நேரம் கிழவியின் நடிப்பை பார்த்துவிட்டு, ஆதியின் மீதிருக்கும் நம்பிக்கையிலும், அதைவிட ஆதி நிரலி மீது வைத்திருக்கும் அன்பையும் தெரிந்தவர், ஆதியின் வீட்டு முகவரியைக் கூறினார்.

“அப்படியே சீட்டுல எழுதி குடுய்யா?”

வேலு சூர்யாவை பார்த்துச் சென்றார்.

சூர்யாவும் ஒரு காகிதத்தில் ஆதியின் முகவரியை எழுதித்தர, அதனை வாங்கி தன்னுடைய சேலை தலைப்பில் முடித்துக்கொண்ட கற்பகம், வீட்டிற்குச் சென்று சில துணிகளை ஒரு பைக்குள் அடைத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்.

மூர்த்தி எவ்வளவோ தடுத்தும் கற்பகம் நிற்கவில்லை. ஆதியின் இல்லம் வந்து சேர்வது ஒன்றே குறிக்கோள் என்று நடந்துகொண்டார்.

“அம்மா இந்த நேரத்துல கிளம்பினால் நடு சாமத்துல போய் சேருவீங்க. புது ஊருல அந்நேரத்துல என்ன செய்வீங்க, ஒன்னு கிடக்க ஒன்னு ஆச்சுதுன்னா என்ன பண்ண முடியும்.” இது கொஞ்சம் கற்பகத்திடம் வேலை செய்தது.

நடையை நிறுத்தி மூர்த்தியை கூர்ந்து பார்த்தார்.

“என்ன போகவிடமா செய்ய எதுவும் திட்டம் போடுறீயோ!” மூர்த்தியிடம் சந்தேகமாக வினவினார்.

“வேணுன்னா காலையில அங்க போய் சேருற மாதிரி… ராத்திரிக்கு நானே வந்து பஸ் ஏத்திவிடுறேன், இப்போ உள்ளே போங்க” என்ற மூர்த்தி இனி அவர் சென்றாலும் கவலையில்லை எனும் விதமாக துண்டை உதறி தோளில் போட்டவாறு வேலைகளை கவனிக்கச் சென்றுவிட்டார்.

சொன்னது போலவே அன்று இரவு மூர்த்தி கற்பகத்தை பஸ் ஏற்றிவிட்டார். நேராக வேலுவிடம் வந்து ஒரு பிடி பிடித்துவிட்டார்.

“இங்க இருந்தவரை தான் அந்த புள்ளைய பேசியே கொன்னுச்சு, இப்போ அங்க போயும் அதுக்கு நிம்மதியில்லாம செஞ்சிபுட்டியே.

இந்த அம்மா நிரலியை என்ன பாடு படுத்த போகுதோ!” மூர்த்தியின் முகத்தில் பேத்தியை நினைத்து கவலை அப்பட்டமாக முகத்தில் தெரிந்தது.

“அதெல்லாம் என் மருமகன் பார்த்துப்பான் மாமா.” மூர்த்திக்கு ஆறுதல் வழங்கினார் வேலு.

“நல்லா பார்த்துப்பானே… எப்புடி இந்த நாலு வருசமா பார்த்துகிட்ட மாதிரியா?” மூர்த்தியின் குரலில் அவ்வளவு நக்கல். அது வேலுவுக்கும் புரிந்தது.

ஆனாலும் இதுக்கு தான் தான் காரணமென்று அமைதியாக இருந்தார்.

ஒரே மகன் மீது அலாதி பிரியம் இருந்தபோதும், தங்கள் மீது தவறே இருப்பினும் மகன் அன்று செய்த செயலை மூர்த்தியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதைவிட தானே நேராகச் சென்றும் மகன் மனம் இறங்கவில்லையே என்ற வருத்தம் அவருக்கு.

“ஆதி மேல் எனக்கு நம்பிக்கை இருக்கு மாமா. எங்களுக்கு தெரிந்த விடயம், நீங்கள் அறியும் வரை தான் இந்த கோபம். அறிந்த பின்னர் நீங்கள் கோபம் கொள்ளும் நபரே வேறு.” பூடகமாக பேசிச்சென்றார் வேலு. ஆனால் மூர்த்திக்குத்தான் ஒன்றும் விளங்கவில்லை.

செல்விக்கு அய்யோ என்றிருந்தது. தன் கணவனுக்கு ஏதோ தெரிந்துவிட்டதென்று அவரின் உள்ளம் அரற்றியது. அப்போதும் அவர் வாய் திறக்க தயாராக இல்லை.

காலையில் சென்னை வந்து இறங்கிய கற்பகம், ஒவ்வொரு ஆட்டோ ஓட்டுநரிடமும் பேரம் பேசி வீட்டிற்கு வந்து சேர தாமதமாகிவிட்டது. அதற்குள் ஆதி நீதிமன்றத்திற்கு சென்றிருந்தான்.

சூர்யாவிடமிருந்து கற்பகத்தின் பயணத்தை பற்றி தெரிந்து கொண்ட நிரலிக்கு அவர் ஏதோ காரணகாரியமாக வந்திருப்பதாகவே தோன்றியது.

அவர் பேசிய பேச்சுக்கள் எல்லாம் காதில் ரீங்காரமிட்டது. அய்யோ என்றிருந்தது. ஆதியின் காதலில் திளைத்த மொத்த மகிழ்வும் காணாமல் போயிருந்தது. காலையிலிருந்து உற்சாகம் இப்போதில்லை. மொத்தமாக வடிந்திருந்தது.

மெத்தையில் அமர்ந்தவள், மனதில் சுழன்ற கற்பகத்தின் எண்ணத்தோடு சேர்ந்திட்ட உடலின் சோர்வால் தன்னை அறியாதும் உறங்கியும் போனாள்.

இரண்டு மணி நேரம் கழித்து கண் விழித்த கற்பகம் வரவேற்பறை இருக்கையில் தோரணையாக வந்து அமர்ந்தார்.

“ஏய்.” நிரலியை அழைத்தார்.

ஆனால் வந்ததோ வள்ளி. அவரை தீயாய் முறைத்த கற்பகம்,

“அவ(ள்) இல்லையா?” என்றார்.

கடைக்கு சென்று வந்த வள்ளி நிரலியை அவளது அறையில் சென்று பார்க்க, நிரலி சுருண்டு படுத்திருந்த தோற்றம் என்னவோ போலிருந்தது. ஆதலால் தானே சமையலை முடித்து நிரலிக்காக காத்திருக்க, அவளுக்கு முன் கற்பகம் வந்துவிட்டார்.

‘இந்தம்மாக்கு நிரலி தூங்குவது தெரிந்தால் என்ன செய்யுமோ தெரியலையே’ என்று நினைத்த வள்ளி, வாய்க்கு வந்த பொய்யினை கூறினார்.

“இப்போ தான் சமையல் செஞ்சிட்டு, கசகசன்னு இருக்குன்னு குளிச்சிட்டு வாறேன்னு மேலே அறைக்கு போயிருக்காங்க.”

“அதுக்கு என்னத்துக்கு நீட்டி முழுக்குறவ” என்ற கற்பகம் தனது பழைய மாடல் பட்டன் போனை வள்ளி முன் நீட்டி, “இதுல சந்தியான்னு ஒரு நெம்பர் இருக்கும் அதுக்கு போன் போட்டு கொடு” என்றார்.

வள்ளியும் சரியென்பதை போல் தலையசைத்து, போனை வாங்கி அவர் சொல்லிய பெயரை தேடியெடுத்து கால் செய்து கொடுத்தார்.

மூன்று ரிங் சென்ற பிறகு அழைப்பு ஏற்கப்பட்டது.

“அம்மச்சி.” சந்தியாவின் குரல் குதூகலமாக ஒலித்தது.

பேச வாய் திறந்த கற்பகம் அங்கேயே நின்று கொண்டிருந்த வள்ளியை முறைக்க, அவர் விட்டால் போதுமென்று ஓடிவிட்டார்.

தான் அவ்வளவு சொல்லியும் தன் பேச்சை கேட்காது சென்றுவிட்டாளே என்ற கோபம் கற்பகத்திற்கு சந்தியாவின் மீதிருந்தது.

அவ்வாறு சென்றவள் சில மாதங்களுக்கு பிறகு கற்பகத்தை தொடர்புகொள்ள, கோபத்தின் காரணமாக அவளை தவிர்க்கவே செய்தார்.

‘தன்னுடைய எண்ணத்தில் மண்ணை போட்டாளே’ என்கிற கோபம்.

கூட்டு குடும்பத்தில் வாழ்ந்தவளால் பேசுவதற்கே ஆளில்லாமல் இருக்கும் தனிமை பிடிக்கவிலை. ஆதலால் தொடர்ந்து கால் செய்து, கற்பகம் பேசாவிட்டாலும் தன்னுடைய நிலை தனக்கு கிடைத்த உதவியென அனைத்தையும் சந்தியா கற்பகத்திடம் பகிர்ந்தாள்.

அவள் பேசுவதை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தவருக்கு, தன்னனுடைய ஆசை நிறைவேற மற்றொரு வாய்ப்பும் இருக்கிறதென்று பொறி தட்ட, சந்தியாவை ஏற்றுக்கொண்டார்.

“நான் இங்க உன் மாமன் வீட்டுலத்தான் இருக்கேன்.”

“நிஜமாவா அம்மச்சி.”

சந்தியாவிற்குள் அவ்வளவு மகிழ்ச்சி. வேண்டாமென்று நினைத்தது தற்போது வேண்டுமென்கிறதே. அதற்கே இந்த மகிழ்வு.

“என்னத்தக்கு இவ்வளவு சந்தோஷம் உனக்கு, நாலு வருசமா ஒருத்தனை கைக்குள்ள போடத் தெரியல… வீடு எங்கயிருக்குன்னு கூட தெரிஞ்சு வச்சிக்கல. உன்னை வச்சிக்கிட்டு நான் என்னத்த பண்ணப்போறேனோ!” சலித்துக்கொண்டார் கற்பகம்.

“நானென்ன செய்ய அம்மச்சி, வீட்டுக்கு வரவான்னு கேட்டாலே… நீ எதுக்கு என்னை பார்க்கணும் சொல்லிடுவாரு. அதையும் மீறி ஆபிஸ் போய் பார்க்கலாம் போனால், அசிஸ்டன்ட் வச்சே வெளியே அனிப்பிடுவாரு.” அவர்கள் சொல்லும் அவனை நெருங்க முடியாத வருத்தம் அவளுக்கு.

“விடு பார்த்துக்கலாம். அதான் நான் வந்துட்டேனே!” ஏதோ சாதித்துவிட்ட மிதப்பு அவரிடத்தில்.

“இப்போ எப்படி இங்க வந்தீங்க? தாத்தாவுக்கு தெரியுமா?”

இத்தனை வருடமாக ஆதியை பார்க்கவென்று கற்பகம் செய்த எல்லாவற்றிற்கும் மூர்த்தி தடையாக இருந்தார். அதனால் எவ்வளவோ முயற்சிகள் செய்தும் கற்பகத்தால் ஆதியை பார்க்க வர முடியவில்லை. அதனாலே இந்த கேள்வியை சந்தியா கேட்டாள்.

“அதுக்கு நான் பட்டப்பாடு எனக்குத்தானே தெரியும்” என்ற கற்பகம், நிரலி வந்ததையும்… வேலுவிடம் நாடகமாடி ஆதியின் முகவரியை வாங்கியதையும் சொல்ல, கேட்ட சந்தியாவுக்கு அதிர்ச்சி.

“அம்மச்சி…”

“எதுக்கு இந்த அதிர்ச்சி… உன் இடம் உனக்குத்தான். நான் இருக்கேன்.” என்னதான் கற்பகம் நானிருக்கின்றேன் என்று தைரியம் கூறினாலும் சந்தியாவிற்குள் நிரலியை நினைத்து சற்றே கலக்கமாகத்தான் இருந்தது.

“அம்மச்சி இவ்வளவு நாள் எப்படியோ, ஆனால் இப்போ நாம் நினைப்பது நடக்குமா?”

“இப்போ வந்து கேளு… எவ்வளவு தூரம் சொன்னேன் கேட்டியா. இப்போ குமுறி என்ன பிரயோசனம்.” அதற்கு மேல் செல்ல பேத்தியை அவரால் கடிந்துகொள்ள முடியாது அழைப்பை வைத்துவிட்டார்.

இங்கு கற்பகம் போன் பேசிக்கொண்டிருந்த வேளையில் நிரலியை எழுப்பி அழைத்து வந்துவிட்டார் வள்ளி.

உணவு மேசையில் நிரலி பதார்த்தங்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். அவளை பார்வையால் எரித்தபடி வந்தார் கற்பகம்.

“சொன்னதை செஞ்சியா?” அவ்வளவு அதட்டல் அவரின் குரலில்.

“ம் அம்மச்சி.”

“வாய் திறந்து பதில் சொன்னால் முத்து உதிர்ந்திடுமோ!” மேவாயில் இடித்துக்கொண்டார்.

உணவை அள்ளி வாயில் வைத்தவர்,

“நால்லாத்தான் சமைச்சிருக்க” என்று வள்ளி சமைத்ததை, நிரலி சமைத்த உணவாக நினைத்து தன் திட்டத்தை தொடங்க முதல் அடியை தொடங்கினார்.

கற்பகத்திற்கு தெரியாது நிரலி வள்ளிக்கு நன்றி சொன்னாள்.

சாப்பிட்டு முடித்ததும், நிரலியை அருகில் அமர்த்தி ஏதேதோ பேசியவர்,

“உன் அக்கா சந்தியா இங்க இருக்குற காலேசுல தான் மேல படிக்குறாளாம். எனக்கு அவளை பார்க்கணுமுன்னு இருக்கு. இங்க வர சொல்லலாமுன்னா விலாசம் சொல்லத் தெரியல, நான் அவளுக்கு போன் போடுறேன் கொஞ்சம் விலாசம் சொல்லு.”

சந்தியாவைப் பற்றி சொல்லியதுமே நிரலியின் முகம் சுருங்கிவிட்டது. மேலும் அவள் இங்கு வர வேண்டுமென்று கற்பகம் கூற ஆதியை நினைத்து அரண்டே விட்டாள்.

ஆதியின் காதலை எந்தளவிற்கு அறிந்து வைத்திருக்கின்றாளோ அதேயளவிற்கு அவனின் கோபத்தையும் அறிந்து வைத்திருக்கிறாள். சந்தியாவை பார்த்தால் ஆதியின் மனநிலை என்னவாகயிருக்குமென்று கவலை கொண்டாள்.

தான் சொல்லியதற்கு பதிலேதும் பேசாது மௌனமாக இருக்கும் நிரலியின் தோள் தொட்டு,

“என்ன சத்தத்தையே காணோம்” என்றார்.

“அது வந்து அம்மச்சி, மாமாகிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு…” அவள் வாக்கியத்தை முடிக்காது இழுக்க,

“சந்தியாவை காலேசுல சேர்த்து மேல படிக்க வைக்கிறதே என் பேரன் தான். ரெண்டு பேரும் தொடர்பில் தான் இருக்கின்றனர். அவள் மேல் அன்பு இல்லாமலா, அவமானப்படுத்திச் சென்றவளுக்காக இவ்வளவு செய்யுறான்” என்று அழகாக நிரலியின் மனம் குழம்பும் வகையில் பேசினார் கற்பகம்.

ஒரு நொடி நிரலியின் உலகம் நின்று சுழன்றது. சந்தியா மீண்டும் தனக்கு போட்டியா? மனம் வாடியது. இந்த குழப்பத்தில் நிரலி ஒன்றை மறந்தாள்.

‘ஆதியுடன் தொடர்பில் இருப்பவளுக்கு அவனின் வீடு தெரியாதா?’

ஆனால், ‘ஆதி எது செய்தாலும் அதில் ஒரு காரணமிருக்கும்’ என்று அவளின் காதல் கொண்ட மனம் நினைக்க,

“அவர்கிட்ட கேட்டுட்டே சொல்லுறேன் அம்மச்சி” என்றவள் அறைக்குள் புகுந்துக்கொண்டாள். இரவு உணவின் போதும் வெளியே வரவில்லை.

இரவு ஆதி வந்த போதும் அவளின் நிலையில் மாற்றமில்லை.

 

 Epi 16

ஏந்திழையின் ரட்சகன் 16

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
24
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments