Loading

அத்தியாயம் 14 :

காலை எட்டு மணியளவில் நிரலியின் அலைபேசி சிணுங்களில் மெல்ல கண் திறந்த ஆதியின் விழிகள் லேசாக எரியும் உணர்வு, சிவந்து இருந்தன. அது இரவின் தூக்கமின்மையை பறை சாற்றியது. எரிச்சல் கூட அவனுக்கு இதத்தையே அளித்தது.

இரவின் நிகழ்வுகள் கண்முன் தோன்றி மந்தகாசப் புன்னகையை தோற்றுவித்தது. மேலும் காலை நேர விழிப்பை இனிமையாக்கியது.

தன்னுடைய பரந்த மார்பில் முகம் வைத்து ஆழ்ந்து உறங்கும் மனைவியின் கலைந்த தோற்றத்தை ரசித்தவனுக்கு அப்போதுதான் புத்தியில் உரைத்தது தானெப்படி எழுந்தோம் என்று.

மெத்தைக்கு அருகிலிருந்த சிறு மேசையில் வீற்றிருந்த அலைபேசி, அதற்குள் இரண்டுமுறை ஒலித்து மூன்றாம் முறை அழைப்பை தாங்கி வந்தது.

மனைவியின் சோர்வை அறிந்தவனாக, நிரலியின் துயில் கலைந்திடாதவாறு மெல்ல நகற்றி தலையணையில் படுக்க செய்தவன் அலைபேசியை ஏற்று காதில் வைத்தவனாக பால்கனிக்கு சென்றான்.

“அம்மு. ஆர் யூ ஓகே?”

ஆதி அழைப்பை ஏற்றதும், அந்த பக்கமிருந்து சூர்யாவின் குரல் பதட்டமாக ஒலித்தது.

“நைட்டும் போன் பண்ணல, இப்பவும் நான் ரெண்டு முறை கூப்பிட்டும் நீ அட்டெண்ட் பண்ணல… என்னாச்சு அம்மு, மாமா ஏதாவது…”

சூர்யா என்ன கேட்டிருப்பானோ அதற்குள் ஆதி பேசி அவனின் பேச்சை நிறுதிவிட்டான்.

“உன் மாமா மேல் உனக்கு எவ்வளவு நம்பிக்கை.” நம்பிக்கையில் அவ்வளவு அழுத்தம்.

“என் பொண்டாட்டி நிம்மதியா தூங்கிட்டு இருக்காள், நீ அப்புறம் கால் பண்ணு” என்ற ஆதி அழைப்பை துண்டிக்கப்போக,

“என் பொண்டாட்டியா, இது எப்போல இருந்து? நாலு வருசமா பொண்டாட்டிங்கிறது நினைவில்லையோ?”

சூர்யாவுக்கு ஆதியிடம் ஒருமுறையாவது கேட்டிட வேண்டுமென்று மனதில் உருபோட்டிருந்தது பட்டென்று வெளியில் வந்திருந்தது.

“தங்கச்சி மேல் அவ்வளவு அக்கறையாக இருக்கவுக, புருஷன் இருக்குமிடத்தில் தான் பொண்டாட்டி இருக்கணும் சொல்லி கொண்டு வந்து விடுறது. நாலு வருசமா அண்ணனா நீயும் சும்மாத்தானே இருந்த” என்ற ஆதியின் கேள்வி சூர்யாவுக்கு சுடத்தான் செய்தது. ஆனால் பதில் சொல்ல முடியவில்லை. ஆதி சொல்வதும் உண்மை தானே. அவனும் நிரலி அழுவதை தவிப்பதை பார்த்துக்கொண்டு எல்லோரையும் போல் அமைதியாகத்தானே இருந்தான்.

ஆதியின் பேச்சு சூர்யாவிற்கு எதையோ உணர்த்த, தங்களுக்கு தெரியாமல் என்னவோ நடந்திருக்கு, அதை எப்படி தெரிந்து கொள்வதென்று தனக்குள் உழல, அவனிடமிருந்து எவ்வித பதிலுமின்று போக ஆதி இணைப்பை துண்டித்துவிட்டு, தூங்கும் மனைவியை சில நிமிடங்கள் கண்களில் பருகிவிட்டு குளியலறைக்குள் புகுந்து தன்னை சுத்தப்படுத்தி வெளியில் வந்தான்.

இன்னமும் உறங்கும் மனைவியின் நெற்றியில் மென்மையாக இதழ் தடம் வைத்தவன் கீழிறங்கி சென்றான்.

வீட்டில் வேலை செய்யும் பெண் வள்ளி விடுப்பு முடித்து வந்திருந்தாள். ஆதி கீழே வந்து கதவை திறந்த இரண்டு நிமிடங்களில் உள் வந்து வேலையை ஆரம்பித்தவர், அடுத்த பத்து நிமிடத்தில் ஆதியின் கையில் தேநீரை கொடுத்தார்.

“அக்கா பால் கலந்து தாங்க?”

கேட்டவனை ஆச்சரியமாக பார்த்தார் வள்ளி.

ஆதி இங்கு வந்ததிலிருந்து வள்ளி தான் சமையல் செய்கிறார். இத்தனை வருடத்தில் ஒருமுறை கூட அவன் அது வேண்டும் இது வேண்டுமென்று கேட்டதில்லை. தேநீர் கூட அவன் வீட்டிலிருக்கும் நேரத்தை பொறுத்து இவராக எடுத்து செல்வார். என்ன சமைக்கட்டுமென்றால் கூட உங்களுக்கு தோதுபடும் உணவை செய்யுங்கள் என்று விடுவான். அவன் அதிகபட்சமாக வாய் திறந்து கேட்பது தண்ணீராகத்தான் இருக்கும். அப்படிப்பட்டவன் முதல்முறையாக வாய் திறந்து பால் வேண்டுமென்றதும் ஆதியை பார்த்தவாறு அங்கேயே நின்றிருந்தார்.

“அக்கா!” அவனின் அழைப்பில் மீண்டவர், “உங்களுக்கா பால் கேட்டீங்க தம்பி?” என வினவினார்.

“எனக்குன்னா மட்டும் தான் தருவீங்களா?”

இன்று அவனின் பேச்சும் வித்தியாசமாக இருக்க, அமைதியாக அடுக்கலைக்குள் நுழைந்தவர் பெரிய கண்ணாடி தம்ளரில் பாலினை கொண்டு வந்தார்.

ட்ரேயினை கையில் எடுத்தவன் மாடியேற படியில் கால் வைக்க, ஞாபகம் வந்தவனாக வள்ளியின் பக்கம் திரும்பி…

“உங்க ஹஸ்பண்ட் வேலையில்லாமல் சும்மா இருக்கிறதா சொன்னீங்களே, இன்னையிலிருந்து இங்க வர சொல்லுங்க. அவருக்கு வாட்ச்மேன் வேலை ஓகே தானே!” என்றான்.

வள்ளியின் தலை தானாக ஆடியது.

“இனி ரெண்டு பேருக்கு சமையல் செய்யணும். உங்களுக்கு எப்போதும் போல சேர்த்து செய்துகோங்க.” அவ்வளவு தான் என்பதை போல் தன்னுடைய அறைக்குள் சென்றுவிட்டான்.

‘இந்த மூணு நாளில் அப்படியென்ன அதிசயம் நடந்ததோ! இதுவரை பேசியே பார்த்திடாத சார், இவ்வளவு நீளம் பேசிட்டு போறாரு’ என்று நினைத்தவராக தனது வேலையை கவனிக்க ஆரம்பித்தார்.

அறைக்குள் நுழைந்த ஆதி ஏசியின் குளிரை அதிகப்படுத்திவிட்டு மனைவியின் அருகில் அமர்ந்தான்.

ஏற்கனவே குளிர் தாங்காது போர்வைக்குள் சுருண்டிருந்தாள் நிரலி. இப்போதும், போர்வையையும் தாண்டி குளிர் உடலைத் தாக்க, அனிச்சை செயலாக கைகளை துழாவி அருகில் உறங்கிய கணவனைத் தேடினாள்.

எதிர்பார்த்தது நடந்தேற விரும்பியே மனைவியின் கைக்குள் சிறப்பட்ட கள்ளன், கள்ளத்தனமாக சிரித்தும் கொண்டான்.

குளிரால் மேலும் கணவனிடம் நெருங்கியவள் அவனை இடையோடு கட்டிக்கொண்டு உறக்கத்தை தொடர, அவன் தனது சில்மிஷங்களை மெல்லத் துவங்கினான்.

ஆரம்பம் அவனாகிப் போன பின் முடிவு அவளுடையதாகியது.

“சரியான பிராடு மாமா நீங்க.”

“ஆஹான்… இப்போதான் தெரியுதா?” விஷமமாக கண்ணடித்தான்.

நிரலியின் நெற்றியில் முத்தம் வைத்தவன், “ஐ பீல் ஹாப்பி பேபி. ஏதோ ஃபுல்ஃபில் ஆன மாதிரி இருக்கு.” நிறைந்த மனதுடன் உற்சாகமாகக் கூறினான்.

ஆதியின் முகத்தில் தெரிந்த சந்தோஷத்திற்காகவே இன்னும் காதலை கொட்டிட வேண்டுமென தீர்மானித்தாள். இதற்கு முன்பு அவன் சிரிப்பில் இப்படியொரு ஒளியை அவள் கண்டதில்லை.

தன்னை மறந்து கணவனின் புன்னகையில் லயித்துவிட்டாள்.

“இப்படி பார்த்து டெம்ப்ட் பண்ணாத பேபி, சேதாரம் உனக்குத்தான் பலமாக இருக்கும்.” குறும்புடன் கூறினான்.

கணவனின் பார்வையே சொன்னதை செய்யும் நிலையில் அவனிருப்பதை தெரிவிக்க, வேகமாக எழுந்து குளியலறைக்குள் ஓடி மறைந்தாள். அவனின் சிரிப்பு சத்தம் அவளை அடைந்தது.

குளித்து முடித்து வெளியில் வந்தவள், கோப்புகளை ஆராய்ந்து கொண்டிருந்தவனின் முகம் காணாது… ட்ரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடி முன் நின்று, ஈரத் தலையை உலர்த்த ஆரம்பித்தாள். ஆனால் அவளின் பார்வை முழுக்க கண்ணாடியில் தெரிந்த ஆதியின் பிம்பத்திலேயே இருந்தது.

“சைட் அடிச்சு முடிச்சிட்டன்னா இந்த பாலை குடி.” நிரலியின் முன் மேசையில் வைத்தான். அவளை பின்னிருந்து அணைத்துக் கொண்டான்.

இரவு அவனருகில் வெட்கத்தை விலக்கி வைத்தவள் இப்போது மொத்தமாகக் குத்தகை எடுத்துக்கொண்டாள்.

கண்ணாடியில் தெரியும் கணவனின் முகம் காண்பதை தவிர்த்தவளாக, தம்ளரை கையிலெடுத்தவள் வேகமாக குடித்து முடிக்க, மனைவியை மேலும் நெருங்கி இறுக்கி நின்றவன் அவளின் முன்னெற்றியில் ஆடிய கற்றை கூந்தலை தன் விரல் கொண்டு ரசனையாக காதின் பின்னால் ஒதுக்கினான்.

அதில் கூச்சம் கொண்டு அவள் நெளிந்திட, இவன் என்ன அவள் காதில் சொன்னானோ முகம் மூடி நாணி நின்றாள்.

“பேபி.”

“மாமா நீங்க இப்படின்னு தெரியாது. ரொம்ப கெட்ட பையனாகிட்டீங்க.” அவன் நெஞ்சிலே குத்தினாள்.

“மனைவியிடம் கணவன் எப்போதும் கெட்ட பையன் தான் பேபி.” சொல்லியவன் நொடியில் அவளின் கன்னம் தீண்டி விலகி நின்றான்.

“மாமா.” இடுப்பில் கை வைத்து முறைத்தவள், “உங்களைப்போய் நல்ல பையன்னு நினைச்சு லவ் பண்ணிட்டேனே… இப்படி லவ் டார்ச்சர் பண்றீங்களே!” என்று விளையாட்டாக பேச்சினைத் துவங்கியவள்,

“உங்களோட இந்த காதல் கிடைக்கவே கிடைக்காதோன்னு எத்தனை நாள் பயந்து அழுது தவிச்சிருக்கேன் தெரியுமா மாமா?” என உணர்வுப்பூர்வமாக முடித்தாள்.

தன்னைப்போல் கரம் நீட்டி மனைவியை அணைப்பிற்குள் கொண்டு வந்த ஆதி… “நீ சொல்லிட்ட நான் சொல்லலை அவ்வளவுதான் வித்தியாசம்” என்றதோடு, “மூச்சு முட்டும் அளவிற்கு உன்னை லவ் பண்ணனும் பேபி” என்று மொழிய, அவனின் அடுத்த நிலை என்னவாக இருக்குமென்று அறிந்தவள், அவனின் அணைப்பிலிருந்து விலக முயற்சிக்க அந்தோ பரிதாபம் அவளால் அவனின் பிடியை தளர்த்தவே முடியவில்லை.

“பேபி.”

“மாமா.”

“பேர் சொல்லு பேபி.”

“ம்ஹூம்… நான் மாட்டேன்.”

“நைட் மட்டும் சொன்ன… தேவா… நீ சொன்னப்போ செம கிக்கா இருந்துச்சு பேபி.”

இருவரும் ஒரே நேரத்தில் அவள் தேவா என்று விளித்த போதிருந்த நிலையை நினைவிற்கு கொண்டு வர… அவர்களிடையே நெருக்கம் அதிகமாகியது.

“சொல்லு பேபி… ப்ளீஸ்.”

அவனின் விழி அசைவிற்கே அனைவரும் காத்திருக்க… அவனோ மனைவியின் ஒற்றை அழைப்பிற்கு கெஞ்சினான்.

“அது அப்போ சடனா வந்திருச்சு.”

“எப்போ பேபி.” விஷமமாக வினவினான். கண்களில் குறும்பு மின்னியது.

“அச்சோ மாமா.” அழகாய் சிணுங்கினாள். அவன் சொக்கித்தான் போனான் மனைவியின் குழைவில்.

“தேவா சொல்லு பேபி.”

“கோர்ட்டுக்கு போக வேண்டாமா? கொஞ்சமாச்சாம் பொறுப்பா இரு தேவா” எனக்கூறி அவனை தள்ளிவிட்டு அறையைவிட்டு வெளியில் வந்தாள்.

அவனின் சிரிப்பு கீதமென அவளைத் தீண்டியது.

கீழே வந்த நிரலியை யாரென்று தெரியாது வள்ளி பார்க்க, அவளின் நெற்றியில் பதித்திருந்த குங்குமம் அத்தோடு ஆதியின் அறையிலிருந்து துள்ளளோடு வெளிவந்ததும், நிரலி ஆதியின் மனைவி என்பதை சொல்லாமலே புரிந்துகொண்டார்.

“சாப்பாடு ரெடியாகிருச்சும்மா எடுத்து வைக்கவா?”

வள்ளி கேட்டதிலேயே அன்று ஆதி சொல்லிய சமையல் அக்கா இவர்கள் தானென்று நிரலியும் புரிந்துகொண்டு அவர் கேட்டதற்கு சரியென்றாள்.

ஆதி கோர்டிற்கு செல்ல தயாராகி வந்தவன், சாப்பிடுவதற்கு வந்து அமர, உணவு மேசையில் உணவு பாத்திரங்களை வைத்துக் கொண்டிருந்த வள்ளி “ரொம்ப சந்தோஷம் தம்பி” என்று நகர்ந்தார்.

அவர் எதற்காக அப்படி சொன்னாரென்று இருவருக்கும் தெரிந்துதான் இருந்தது. இத்தனை வருட பிரிவு வேண்டாத ஒன்றாகவே தோன்றியது. எல்லாவற்றிற்கும் காலநேரம் ஒன்று உண்டல்லவா!

நிரலி பரிமாற ஆதி உண்டு முடித்தான்.

“பேபி இன்னைக்கு நீ வர வேண்டாம். ரொம்ப டயர்டா தெரியுற, ரெஸ்ட் எடு” என்றவன் அவளின் கன்னம் தட்டி விடைபெற்றான்.

நிரலி உணவினை மறுத்து பழத்தை சாப்பிட்டுவிட்டு வள்ளியுடன் கதை பேசத் துவங்க, ருக்கு மாமியும் வந்து அவர்களின் ஜோதியில் ஐக்கியமானார். மூவரும் நேரம் செல்வது தெரியாது பேசிக்கொண்டு இருந்தனர்.

வீட்டு வாசலில் நிழலாடியது.

“நல்லாருக்குடி நீ பண்றது. புருஷன் வேலைக்கு போனதும், வீட்டு பொம்பள லட்சணமா வீட்டு வேலை பார்க்காமல் இப்படி உட்கார்ந்து ஊர் கதை பேசிட்டு இருந்தால் குடும்பம் விளங்கிடும்.” வீடே அதிர சத்தமாக பேசியபடி உள்ளே வந்தார் கற்பகம். முகத்தில் ஒரு நொடிப்பு. அவர் நொடித்தது கழுத்தே சுளிக்கியிருக்கும். அவ்வளவு வேகம்.

நிரலி அதிர்ச்சி அடைந்தவளாக எழுந்து நின்றாள்.

அவளுக்கு கற்பகத்தின் வசவு சொற்களை நினைத்து பயம்.

கற்பகத்தின் தோரணையும், அவர் நிரலியை அதட்டியதும், அவள் அதிர்ச்சியோடு சிறு பயத்துடன் நின்றிருப்பதை பார்த்த மாமிக்கு கற்பகம் வில்லங்கம் பிடித்தவரென்று விளங்கியது.

“யாருடிம்மா இது?”

நிரலியின் காதில் முணுமுனுப்பாக வினவினார்.

“என் பாட்டி. மாமாக்கும்.” நிரலியிடமும் அதே முணுமுணுப்பு.

“இப்படித்தேன் வந்தவுகலுக்கு தண்ணீ கூட குடுக்காமல் நிப்பியோ?” கற்பகத்தின் அதட்டலில் உடல் தூக்கிவாரிப்போட வேகமாக கிச்சனிற்குள் சென்றவள் குவளை நிறைய நீர் ததும்ப கொண்டு வந்தாள்.

“வெயிலுக்கு இந்த தண்ணிலாம் காணாது. நல்ல சூசா போட்டு எடுத்துட்டு வா” என்றார்.

இருக்கையில் கற்பகம் அமர்ந்திருக்கும் விதமே மாமிக்கு பிடிக்காமல் போக சொல்லாது அங்கிருந்து சென்றுவிட்டார்.

வள்ளி அப்படியே நின்றிருக்க, வள்ளியின் உடை மற்றும் தோற்றத்தை வைத்து… “நீ வீட்டு வேலைக்காரியா?” என்று மிதப்பாகக் கேட்டார்.

அவர் கேட்டதை விட, கேட்ட விதம் வள்ளியை காயப்படுத்தியது. இத்தனை நாட்களில் ஒருமுறை கூட ஆதி வேலைக்காரப் பெண் போன்று அவரை நடத்தியதில்லை. அக்கா என்றே அழைப்பான். அதில் அவருக்கான மரியாதையும் இருக்கும்.

கற்பகத்திற்கு பதில் சொல்லாது கிச்சனிற்குள் சென்ற வள்ளி, நடுங்கும் கைகளோடு ஆரஞ்சினை பிழிந்து கொண்டிருக்கும் நிரலியை பாவமாக பார்த்தார்.

நிரலியை அவர் ஏவிய விதமே கற்பகத்திற்கு நிரலியை பிடிக்காது என்பதை வள்ளி புரிந்துகொண்டார்.

“குடும்மா நான் சாறெடுக்குறேன்.” அக்கறையாகக் கேட்ட வள்ளியிடம் புன்னகைத்தவள் “முடிஞ்சிருச்சுக்கா” என்று சொல்லி கற்பகத்திடம் சென்றாள்.

பழரசத்தை பருகிய கற்பகம், வீட்டை பார்வையால் அளந்தார்.

‘பய நல்ல பவுசாத்தான் இருக்கான் போல.’ மனதில் நினைத்தவர் நிரலியை ஆராய்ந்தார்.

அவளின் சிவந்த கன்ன கதுப்பும், முகத்தில் புதிதாய் ஒளிர்ந்த பொலிவும் அந்த காலத்து அனுபவ மனிதரான கற்பகத்திற்கு கணவன் மனைவிக்குள் நடக்க வேண்டியவை நடந்து விட்டன என்பதை அப்பட்டமாக உணர்த்தின.

‘வந்த மூணு நாளுல மயக்கிட்டாளே. இந்த வாழ்க்கை எம் பேத்திக்கு தான், உனக்கு நிலைக்காதுடி.’ மனதில் கறுவினார்.

குடித்து முடித்து குவளையை நிரலியின் கையில் வேகமாக திணித்தவர்,

“நான் செத்த உறங்கி எழுந்து வாறேன். அதுக்குள்ள நல்ல நாட்டுக்கோழி வாங்கியாந்து உன் கையாலே மசாலாவை அம்மியில அரைச்சு கார சாரமா வை” என்று ஏவினார்.

“என் பேரன் சம்பாத்தியத்தில் நல்ல வாய்க்கு ருசியா சாப்பிடணும்” என்று சொல்லியவாறு கீழே இருக்கும் அறை ஒன்றிற்குள் தான் கொண்டு வந்த பையோடு புகுந்து கொண்டார்.

கற்பகத்தின் உருவம் மறைந்த பின்னரே நிரலி நிம்மதியாக மூச்சினை வெளியேற்றினாள்.

“இந்த அம்மச்சி இப்போ இங்க எதுக்கு வந்திருக்கு தெரியலையே” என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டவள், வள்ளியிடம் செல்ல, அவர் கூடையுடன் அவளை நோக்கி வந்தார்.

“நான் போய் கறி வாங்கிட்டு வந்துடுறேன் பாப்பா. அதுவரை நீங்க உங்க அறையில் இருங்க.” சொல்லியவர் கற்பகம் சென்ற அறையை ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றார்.

பெருமூச்சு ஒன்றை வெளியேற்றியவாறு தனது அறைக்கு சென்ற நிரலி சூர்யாவுக்கு அழைத்தாள்.

“சொல்லு அம்மு. இப்போ தான் என் ஞாபகம் வந்ததா? ராகவுக்கு கால் பண்ணேன். அவன் நீ ஆபீஸ் வரல சொன்னான். எதாவது பிரச்சனையா அம்மு.”

நிரலியை ஆதியிடத்தில் கொண்டு வந்து விட்டுச் சென்றதிலிருந்து சூர்யாவுக்கு அவளின் ஞாபகம் மட்டுமே. ஆதியின் அழுத்தமான கோப குணம் அறிந்தவனுக்கு தங்கை அவனுடன் நாட்களை எப்படி கடத்துவாள் என்ற அச்சம் இந்த நொடி வரை உள்ளது.

நிரலி முதல் நாளே ஆதியின் செயல்களை சொல்லியிருந்தாலும், திருமணம் நடந்த நொடியே ஆதி நடந்துகொண்ட முறையை நினைக்கும்போது அவன் மனம் எளிதில் நம்ப மறுக்கிறது.

அதனாலே இப்போதும் அவளின் நலன் மட்டுமே வேண்டினான்.

“ஏன்டா இந்த அம்மச்சி இங்க வறாங்கன்னு என்கிட்ட சொல்லல.”

சூர்யா கேட்டதற்கு பதில் சொல்லாது கற்பகத்தின் வருகை எதனால் என்ற காரணத்தை அறிந்திட முயன்றாள்.

“அதுக்குத்தான் காலையில் உனக்கு கால் பண்ணேன். மாமா தான் அட்டெண்ட் பண்ணார். அப்புறம் வேலையில் மறந்துட்டேன்.” சொல்லாததற்கு விளக்கம் அளித்தான்.

“உனக்கு தெரியுமே சூர்யா அம்மச்சிக்கு என்னை கண்டாலே ஆகாது. இப்போ இங்கேயும் வந்துட்டாங்க. நீ எப்படி அவுங்கள இங்க விட்ட.” கற்பகத்திடம் வாங்கிய திட்டுக்களில் அவளுக்கு சலிப்பு ஏற்பட்டுவிட்டது. அது இன்னும் தொடரும் என்ற விரக்தி அவளிடம்.

“அது ஒரு பெரிய கதை அம்மு.”

நேற்று இங்கு வருவதற்காக கற்பகம் நடத்திய ஆர்ப்பாட்டத்தை விலாவாரியாக சொல்லலானான்.

Epi 15

ஏந்திழையின் ரட்சகன் 15

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
11
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments