Loading

அத்தியாயம் 13 :

கணவனின் திடீர் அணைப்பிலேயே உருகியவள், கழுத்தில் அவனிட்ட இதழ் ஒற்றலில் உணர்வு குவியலாக மாறிப்போனாள். கண்கள் தானாக மூடிக்கொண்டன.

“நம்ம வீட்டுக்கு போகலாமா பேபி.” அவளின் காதுமடல் உரச வினவினான். அப்பட்டமான காதல் வழிந்தது. குரல் குழைந்து.

ஆதியின் நம்ம வீடு என்ற வார்த்தையில் உணர்வுகள் அறுபட கண் திறந்தவள் இருக்குமிடம் உணர்ந்து, அவனின் அணைப்பிலிருந்து சட்டென்று விலகினாள்.

“பேபி.” நிரலியின் விலகல் ஆதிக்கு பிடிக்கவில்லை. முகம் சுருங்கிவிட்டது.

கணவனின் இந்த முகச் சுணுக்கம் போவதற்கு எதுவும் செய்யலாமென்று தோன்றிய நொடி நிரலியின் கை சில்லிட்டது. காதலித்தவள் தான். அவன் விலகி விட்டுச் சென்ற போதும்… இன்றும் அவளின் காதல் மாறவில்லை. சற்றும் குறையவில்லை. ஆனால் காதலைத் தாண்டி அடுத்தநிலையை ஒருபோதும் அவள் நினைத்ததில்லை. ஆனால், இப்போது இந்த நொடி… அவனின் அருகாமை வாழ்க்கையின் அடுத்த அடியில் அவளை நிற்க வைத்து யோசிக்க செய்தது. அடுத்த கணம் அவளின் முகம் அந்த அந்தி வானுக்கு நிகராக சிவந்து விட்டது.

முகத்தை கரம் கொண்டு பொத்தியவளின் நாணத்தை, சுணக்கம் மறந்து காதலாய் பார்த்த ஆதி, அவளை நோக்கி அடியெடுத்து வைக்க… அவனின் நெஞ்சில் கை வைத்து தள்ளிவிட்டு வேகமாக ஓடிச்சென்று காரில் அமர்ந்துகொண்டாள்.

பின்னந்தலையை அழுந்த கோதி… வசீகரிக்கும் புன்னகையோடு காருக்கு அருகில் வந்தவன், தன் உணர்வுகளை முழுதாகக் கட்டுப்படுத்திய பின்னரே உள்ளேயேறி அமர்ந்தான்.

அடுத்த அரை மணிநேரத்தில் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் வந்த நேரம் ஹரியும், ஹரிணியும் தோட்டத்து ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்தனர். ஆதியை கண்டதும் இருவரும் ஓடி வந்து இருபக்கமும் கட்டிக்கொண்டனர்.

“என்ன பாஸ்… இன்னைக்கு சீக்கிரம் வந்துட்டீங்க… கோர்ட்டுக்கு காவலுக்கு ஆள் மாத்திட்டாங்களா?” ஹரி கேட்க ஹரிணி களுக்கி சிரித்தாள்.

“அடிங்…” ஆதி ஹரியை அடிக்கத் துரத்தினான். ஹரி வீட்டிற்குள் ஓடினான்.

அப்போதுதான் நிரலியை கண்ட ஹரிணி இடுப்பில் கை வைத்து, “ஹூ ஆர் யூ” எனக் கேட்டாள்.

“அம் நிரலி…”

“அம் ஹரிணி… ஹீ இஸ் ஹரி, மை ட்வின்.”

“தெரியுமே!”

“எப்படி.”

“என் மாமா சொன்னார்.” ஆதியை கை காண்பித்தாள் நிரலி.

“நீங்க இனி இங்கே பாஸ்ஸோடத்தான் இருப்பீங்களா?”

“ஆமாம்.”

“ஏன்?”

“அவரோட வைஃப் அவரோடத்தானே இருக்கணும்.”

“வாட்…” நிரலி அவ்வாறு சொல்லியதும் ஹரிணியிடத்தில் அப்படியொரு அதிர்ச்சி. குழந்தை உதடு பிதுக்கி அழுகத் தயாராகியது. நிரலிக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன செய்வதென்று தெரியவில்லை.

கண்ணை கசக்கியவாறு சிணுங்கிக்கொண்டே ஹரிணி ஆதியை தேடிச்சென்றாள். நன்றாக உரையாடிக்கொண்டிருந்த குழந்தை திடீரென அழுதுக்கொண்டே செல்லவும், குழப்பதோடு கைகளை பிசைந்தபடி சிறுமியின் பின்னால் நிரலி சென்றாள். விட்டால் நிரலியும் அழுது விடுவாள் போலும்.

ஹரியை பிடித்த ஆதி அவனை தலைக்கு மேலேத் தூக்கி சுழற்றியபடி இருக்க, ஹரிணியின் சிணுங்கல் ஒலி கேட்டு அவளின் பக்கம் கவனத்தை திருப்பினான்.

“அச்சச்சோ குட்டிக்கு என்னாச்சு… எதுக்கு அழறாங்க?” ஹரியை கீழே இறக்கி, அருகில் அமர்த்திக்கொண்ட ஆதி, ஹரிணியை தூக்கி மடியில் வைத்தவாறு வினவினான்.

ஹரிணிக்கு என்னவோயென்று பதட்டத்துடன் வந்த நிரலி, ஆதியின் தற்போதைய தோற்றத்தை கண்டு, அவனின் மடியிலும் அருகிலும் தங்களது குழந்தைகள் இருக்குமாறு கற்பனை செய்து பார்த்தாள். முகம் தானாக செம்மை பூசியது.

ஹரிணி எதுவும் சொல்லாமல் நிரலியை கை காண்பித்தது.

ஆதி நிரலியை நோக்கி பார்வையை செலுத்த, அவளோ கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள். மனைவியின் சிவந்த முகத்தை கண்டவன், ‘என்னவோ உள்ளுக்குள்ள நினைச்சிட்டு இருக்காள்’ என்று மனதோடு சொல்லிக்கொண்டு… அவளின் கவனம் தங்களிடம் இல்லையென, “பேபி” என்று இரண்டு முறைக்கு மேல் அழைத்த பிறகே நிரலி ஆதியை ஏறிட்டாள்.

“ஆங்… மாமா.” பேந்த பேந்த முழித்தாள்.

“இந்த உலகத்துக்கு வந்துட்டியா பேபி?” மனைவியை கேலி செய்தான் ஆதி. அப்போதும் அவள் புரியாது நிற்க, ஆதி ஹரிணியை கண் காண்பித்தான்.

“அய்யோ மாமா நான் எதுவும் செய்யல. சடனா அழுதுட்டே உள்ளே வந்துட்டாள்.” எங்கு குழந்தை தன்னால் தான் அழுகிறதோயென்று ஆதி தவறாக நினைத்துவிடக் கூடாதென்று படபடப்பாக மொழிந்தாள்.

“ஹேய் பேபி சில்…” என்று மனைவியை அமைதி படுத்தியவன், ஹரிணியை பார்த்து… “என்னாச்சும்மா, நீங்க சொன்னாதானே தெரியும்” எனக் கேட்டான்.

புறங்கையால் கண்களை துடைத்துக்கொண்ட ஹரிணி, நிரலியை காண்பித்து “இது யாரு?” என்றாள்.

“என்னோட மனைவி.” நிரலியை ஆழ்ந்து பார்த்தபடி கூறினான்.

“அப்போ நீ அவளை கட்டிக்கிட்டியா?” ஹரிணி சிறிய குரலில் வினவினாள். ஆதியின் தலை ஒப்புதலாக ஆடியது.

“அப்போ நீ என்னை ஏமாத்திட்டியா?” ஹரிணியின் கேள்விக்கான அர்த்தம் ஆதிக்கு விளங்கவில்லை. மீண்டும் அவளே பேசினாள்.

“நீ என்னைதானே கட்டிக்கிற சொன்ன, இப்போ இவளை கட்டிக்கிட்டேன் சொல்லுற” என்று சொல்லிய ஹரிணி மார்பில் கையை கட்டிக்கொண்டு உதட்டை பிதுக்கி முறைத்து நின்றாள்.

அவளின் பாவனையில் ஆதி அட்டகாசமாக சிரிக்க, “கட்டிக்கிட்ட ஒன்னையே ஒழுங்கா வச்சிக்கத் தெரியல, இதுல இன்னொன்னு” என்று நிரலி முணுமுணுத்ததோடு கணவனை முறைக்கவும் செய்தாள்.

“நீ சொன்னது எனக்கு கேட்டுச்சு.”

“கேட்கணுமுன்னுதான் சொன்னதே!”

“பேபி.”

“இப்போ பேபிக்கு என்ன? முதல்ல ஹரிணியை பாருங்க.”

குழந்தையிடம் திரும்பியவன், “நீ ரொம்ப குட்டியா இருக்கியே அதான் பெரிய பொண்ணை கட்டிக்கிட்டேன், வேணுன்னா நீ பெரியவளா வளர்ந்ததும் உன்னையும் கட்டிக்கிறேன்” என்றான். அவனின் வார்த்தைகளை அசைபோட்ட சிறுமி, யோசிக்கும் பாவனையில் முகத்தை வைத்திருக்க சில நிமிடங்கள் கழிந்தன.

“நான் வளர்ந்த பிறகு நீ கிழவனாகிடுவ… நானெல்லாம் உன்னை கட்டிக்க மாட்டேன் கிழவா” என சொல்லிய ஹரிணி, ஆதி அடிக்க வர சிரித்துக்கொண்டே ஹரியையும் இழுத்துக்கொண்டு அவர்கள் வீட்டை நோக்கி ஓடிவிட்டாள். நிரலி தான் ஹரிணி சொல்லியதை கேட்டு அடக்கமாட்டாது சிரித்தாள். அவளின் கண்களில் நீர் திரண்டுவிட்டது. அப்படியொரு சிரிப்பு.

“சிரிச்சது போதும். என்னை கிழவன் சொன்னதுல உனக்கு அவ்வளவு சந்தோஷமா?” என்றவனின் பார்வை ரசனையாக மாறியது.

கணவனின் விழி வீச்சினை தாங்காது, அங்கிருந்து வேகமாக ஓடியவள் தங்களது அறைக்குள் புகுந்துக்கொண்டாள்.

அவளின் ஓட்டம் கண்டு நீளமாக அவனின் இதழ் விரிந்தது. பின்பு வாயில் கதவினை அடைக்கச் சென்றவன், வானம் மேக மூட்டமாக இருப்பதை பார்த்து ‘மழை வரும் போல்’ என்று நினைத்தவனாக கதவினை பூட்டி விட்டு வந்தான்.

நேரத்தை பார்க்க இரவு ஏழினை நெருங்கிக் கொண்டிருப்பதாகக் காட்டியது சுவர் கடிகாரம்.

அந்நேரத்திலியே வீட்டினை இருளாக்கியவன், தனது அறைக்கு செல்ல, பால்கனியில் ஓவியமாக நின்றிருந்தாள் அவனின் பாவை.

இருள் வானில் ஒன்றோடு ஒன்று உரசிச் செல்லும் மேகங்களை பாரத்திருந்தவளின் மனம் முழுக்க அவளவனே நிறைந்திருக்க, எண்ணத்தின் நாயகனே அவளை பின்னாலிருந்து அணைத்திருந்தான்.

காதலை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்ட பின்னர், இவ்வளவு நாள் தெரியாத தூரமும்… உணராத விலகளும் அதிகமாக அறியப்பட, இனியும் காத்திருப்பு அவசியமற்றதென்ற நிலைக்கு சென்றிருந்தனர்.

ஆதியின் அணைப்பு இறுகிக்கொண்டே செல்ல… தன்னவளின் தோளில் நாடியை பதித்தான். கணவனின் அதீத நெருக்கமும், ஸ்பரிசமும் பெண்ணவளை கிறங்கச் செய்ய, மூச்சுவிடவே சிரமமாக உணர்ந்தாள்.

குளிர் காற்று வீசும் வேளையில் அவனின் சூடான மூச்சுக்காற்று அவளின் காதை தீண்ட, உஷ்ணத்தில் மெழுகாய் கரைந்தாள். இரு கை விரல்களையும் அழுந்த மூடி உணர்வினை கட்டுப்படுத்த முயன்றவளுக்கு தோல்வியே மிஞ்சியது.

அவளின் மூளை மழுங்கிவிட, காதல் மனம் வீறு கொண்டு பாய்ந்திட தயாராகியது.

“பேபி.”

இந்த இரண்டு நாட்களில் அவன் வாய் வழியாக அதிக முறை கேட்டிட்ட இவ்வார்த்தையில் கொட்டிக்கிடக்கும் காதலையும் தாண்டி வேறொன்றை இப்போது உணர்ந்தாள்.

“பேபி.” ஆதியின் கண்கள் கிறக்கமாக மூடியிருக்க, வாய் மந்திரம் போல் பேபி என்று ஜெபித்தது. அம்மம்மா அவனின் குரலில் அவ்வளவு காதலும் தாபமும் தேன் துளியாய் சொட்டியது. இவன் தான் அவளை பிரிந்திருந்தான் என்று சொன்னால் பிறர் நம்புவது கடினமே. அத்தனை காதல் அவனிடத்தில். தன் குரல் வழியாகவே அவளிடம் கடத்திக் கொண்டிருந்தான்.

அவளால் அவனின் அழைப்புக்கு பதில் மொழிய இயலவில்லை. உணர்வுகள் மொத்தமும் அவனின் பாதத்தில் சரணடைய தவித்துக் கொண்டிருந்தது.

“ம்.” முயன்று ஒற்றை வார்த்தையை உதிர்த்தாள்.

“பேபி.”

“மாமா.” இம்முறை மனதில் உருப்போட்ட வார்த்தை வெளிவந்திருந்தது.

“ஹரி, ஹரிணி என் மடியில் உட்கார்ந்திருக்கும் போது ஏதோ உன் மூளைக்குள் ஓடுச்சே என்ன அது?” கேட்க நினைத்ததை கேட்டுவிட்டான். ஏனெனில் அந்நேரம் அவளின் பார்வை அவன்மீது அப்படியொரு லயிப்பில் இருந்தது. இப்போது நினைத்தாலும் அவனுள் சில்லென்ற இதம்.

பதில் சொல்லாது அவனின் அணைப்பிலிருந்து விலகியவள் அறைக்குள் ஓட, தன்னவளின் கரம் பற்றி நிறுத்தியிருந்தான். மென்மையிலும் உறுதியாக இருந்தது அவனின் பிடி.

“விடுங்க மாமா.”

“பதில் சொன்னா விடுறேன்.” மனைவியுடன் மல்லுக்கு நின்றான்.

கணவனின் கேள்விக்கு பதில் சொல்லாது தப்பிக்க நினைத்தவள், பேச்சினை மாற்ற விரும்பினாள்.

“ஆமாம் நீங்க தான் ஏ.டி, ஏன் என்கிட்ட சொல்லல.” கோபமாக கேட்க நினைத்தும் அவளுக்கு வரவில்லை.

“சொல்லியிருந்தால் என்ன பண்ணியிருப்ப?”

“தெரியல” கை விரித்தாள்.

“நீ இவ்வளவு மக்கா பேபி?”

அவள் முறைத்து நிற்க,

“என் பெயர் என்ன?”

“ஏன் உங்களுக்குத் தெரியாதா?”

“நீ சொல்லேன்.”

“நானெப்படி சொல்ல… அம்மா இதுவரை அப்பா பெயரை சொல்லி நான் கேட்டதில்லையே!”

“அப்போ ஒருமுறை கூட நீ என் பெயரை சொல்லி பார்த்ததில்லையா பேபி?”

‘பேபி… பேபி… சொல்லியே டெம்ப்ட் பண்றாரே!” மனதிற்குள் அரற்றியவள் வெளியே இல்லையென தலையசைத்தாள்.

“வேறெப்படி என்னை இதுவரை அடையாளப்படுத்தியிருக்க?”

“மாமா…” அவ்விளிப்பு அவனின் நெஞ்சின் அடி ஆழம் வரை இறங்கியது.

“என் முழு பெயரையும் நீ சொல்லி பார்த்திருந்தால் ஏ.டி நான் தானென்று கேட்டதும் கண்டு பிடித்திருப்பாய்.” குறைபட்டுக் கொண்டான்.

ஆதி அவ்வாறு சொல்லியதும் மனதிலேயே முதல் முறையாக அவனின் பெயரை உச்சரித்து பார்த்தாள்.

‘ஆதி தேவ்… ஏ.டி… ஹோ…’

மனைவியின் அசையாதத் தன்மையை வைத்து அவள் தனது பெயரை சொல்லி பார்க்கிறாள் என்பதை உணர்ந்தவன்,

“நீ சொன்னது எனக்கு கேட்கலையே… ஒருமுறை வாய் திறந்து சொல்லு பேபி.” கெஞ்சினானோ!

“முடியாது” என்றவள் முகத்தை கை கொண்டு மூடிக்கொண்டாள்.

அவளின் கையை எடுக்க முயற்சித்தவாறே… “ப்ளீஸ் பேபி ஒன் டைம் சொல்லு பேபி” என தன்னுடைய பெயரையே சொல்ல வெட்கப்படும் மனைவியை ரசித்துக்கொண்டே கேட்டான்.

அவள் நிர்தாட்சண்யமாக மறுத்திட…

“உன்னை சொல்ல வைக்கின்றேன்.” சவால் குரலில் மொழிந்தான்.

“பார்க்கலாம்” என்றவள், அப்போதுதான் அவனின் பெயருக்கான உயரம் நினைவில் வர,

“உங்களுக்கு நான் தகுதியானவளா?” என முகத்தை சுருக்கி வைத்தவாறு வினவினாள்.

அவனின் உயரம் அவளுக்கு பயத்தை கொடுத்தது. அதைவிட அவனுக்கு தான் இணையில்லையோ என்ற எண்ணத்தையும் தோற்றுவித்தது.

கை பிடித்திருந்தவன் அவளை சுண்டி இழுக்க, அவனின் நெஞ்சில் மோதி ஒட்டி நின்றாள். வாகாக மீண்டும் தன் அணைப்பில் தன்னவளை நிறுத்தியவன்,

“காதலுக்கு தகுதி முக்கியமில்லை. இந்த ஆதிக்கு நிரலி தான் சரியான பொருத்தம்” என்று சொல்லியவன், “தொழிலின் நிலை வேறு, வாழ்க்கையின் வெளிப்பாடு வேறு, இரண்டையும் ஒன்றாக பார்க்காதே! நான் எப்போதும் உன்னிடத்தில் வெறும் ஆதி மட்டுமே” என்று அழுத்தமாக, மிக அழுத்தமாக… வேறெப்பதும் இவ்வெண்ணம் எழுந்திடக் கூடாதென்று கூறினான்.

வாழ்வில் தன் இணையுடன் மகிழ்வுடன் வாழ மனம் நிறைந்த காதல் மட்டுமே போதும். இங்கு இரு மன வாழ்விற்கு காதல் ஒன்றே தகுதி என்பதை மனைவியின் மனதில் அழகாக ஒட்ட வைத்தான் அக்காதலன்.

முதல் முறையாக தானாக தன்னவனை அணைத்துக் கொண்டாள்.

“சரி இப்போ சொல்லு, அப்போ என்ன நினைச்ச?”

“அய்யோ அதை நீங்க விடமாட்டீங்களா?” தன் தலையால் அவனின் நெஞ்சில் முட்டினாள்.

“எனக்கு ஒன்று வேண்டுமென்றால் அது கிடைக்கும் வரை ஓயமாட்டேன்” என்றவனை பார்த்து எப்படி சொல்வதென்று தயங்கியவளின் முகம் அதனை நினைத்து செம்மை பூசியது.

மனைவியின் சிவந்த முகம் அவனுக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்த, சொல்லியே ஆக வேண்டுமென்று பிடிவாதம் கொண்டான்.

‘சொல்லாமல் அவன் தன்னை விடப்போவதில்லை’ என்று நினைத்தவளுக்கு சொல்லிய பிறகும் அவன் விடப்போவதில்லை என்பது தெரியாமல் போனது.

முகத்தை ஆதியின் மார்பு கூட்டில் புதைத்தவள், “நம்ம பசங்க உங்க மடியில் இருக்கப்போல நினைத்து பார்த்தேன்” என்று தட்டு தடுமாறி சொல்லிவிட, அவனின் கண் முன்னும் அக்காட்சி அழகாக விரிந்தது. நினைத்து பார்க்கவே ஆனந்தமாக இருந்தது.

“கற்பனையை நிஜமாக்கிடுவோம்!” செவிகளுக்குள் நுழைந்திட்ட கணவனின் பேச்சு உடல் முழுக்க மின்சாரத்தைப் பாய்ச்ச, இன்ப அவஸ்தையை உணர்ந்தவள் காற்றில் மிதந்தாள்.

ஆதி மனைவியை தன்னிரு கைகளில் மலர் கொடியாக ஏந்தியிருந்தான். மெத்தை அருகில் சென்றவன், சம்மதம் வேண்டி தன்னவளின் முகம் காண, கண்களால் அனுமதி வழங்கியவள் இரு கரம் கொண்டு முகத்தினை மூடிக்கொண்டாள்.

“உன்மீது பித்தானவனை உன் நாணம் மேலும் பித்தாக்குதடி!” கவிதையாய் மொழிந்தவன், அடுத்து ஒரு மணித்துளியையும் வீண் செய்யாது மனைவியிடத்தில் மொத்தமாக கணவனாக மாறிப்போனான்.

காதல் அழகிய மடலெழுத இருவரும் வார்த்தைகளாகிப் போயினர்.

மனங்கள் இரண்டோடு உயிரும் பிணைந்து கொள்ள…

தன் இத்தனை கால இளமை தாகத்தை மனையிடம் தீர்க்க, அவள் அவனுக்காக பொத்தி வைத்த பெண்மையை தனதாக்கிக்கொள்ள அவன் முயன்ற வேளையில்…

தேகம் சிலிர்த்து அடங்க… உச்சரித்து விட்டாள்.

“தேவா…” அவளின் இரு கை விரல்களும் அவனின் கேசத்தில் அலை பாய்ந்து கொண்டிருந்தன.

மென் முனகளாக செவி நுழைந்த மனைவியின் முதல் விளிப்பில் மொத்தமாய் கிறங்கிப்போனவன் தன்னவளை தனக்குள் பொத்தி வைத்ததோடு அவள் பாதத்தில் அடிமை சாசனம் எழுதினான்.

அங்கு காதலோடு இரு உள்ளங்களின் உணர்வுகளும் சங்கமித்தன.

 

Epi 14

ஏந்திழையின் ரட்சகன் 14

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
40
+1
2
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments