Loading

அத்தியாயம் 12 :

ஆதியின் நிரலி மௌனமாக அமர்ந்திருந்தாள். ஆனால் உள்ளுக்குள் ஆழிப் பேரலையாய் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தாள்.

காலையில் ஒன்றாக அமர்ந்து வந்தபோது கூட இவ்வளவு அவஸ்தையில்லை.

ஆதி காதல் சொல்லியது மட்டுமில்லாமல், அவனின் அணைப்பு, இதழ் முத்தம் எல்லாம் இப்போது அவளை தடுமாற வைத்தது. எங்கே அவனை பார்த்தால் சித்தம் கலங்கிவிடுவோமோ என்று அஞ்சியே கார் கதவினை இடித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

விரல்களை இறுக மூடியிருந்தாள். ஏசி காரிலும் முகத்தில் முத்து முத்தாக வியர்த்திருந்தது. உதடு நடுங்கிக் கொண்டிருந்தது.

தன்னவளின் தற்போதைய நிலையில் ஆதியிடம் மென் புன்னகை. தன்னவளின் அவஸ்தையையும் அணு அணுவாக ரசித்தான். கழுத்தில் அரும்பியிருந்த வியர்வை துளிகளை நா கொண்டு துடைத்திட பேராவல் கொண்டான்.

காதல் சொல்லியவன் அதில் மூழ்கி திளைத்திட தவிக்க, பெண்ணவள் அவனை பார்ப்பதையே தவிர்த்தவளாக இருந்தாள்.

“பேபி.”

ஆதியின் அழைப்பில் அவன் பக்கம் திரும்பியவள், அவனின் முகத்தை பார்க்க முடியாது இமை தாழ்த்த,

“உன் கை கொடுடா” என்றான் ஆதி.

மனதில் இனம் புரியா நடுக்கம் பரவும் போதும் அவன் கேட்டதை செய்தாள்.

தன் முன் நீண்ட அவளின் கையினை மென்மையிலும் மென்மையாக தனது கைக்குள் பொத்திக் கொண்டான்.

“யூ ஆர் சோ சாஃப்ட் பேபி.”

உள்ளங்கையில் அவனின் சூடு பரவ, அவளுக்குள் பற்றி எரிந்தது. காதலின் அவஸ்தையை தாங்கிக்கொள்ள முடியாதவள், கையினை அவனது பிடியிலிருந்து உருவ முயல,

“என்கிட்ட உனக்கென்ன பயம் பேபி?” என்றான்.

‘இது பயமில்லை அனுபவிக்க ஏங்கும் சுகமான இம்சை.’ மனதோடு சொல்லிக்கொண்டவள்,

“என்னவோ பண்ணுது மாமா” என வெளியில் கூறினாள்.

அவளின் பதில் அவனுக்கு அவளை சீண்டும் உற்சாகத்தை கொடுக்க, ஒரு கையால் காரினை செலுத்தியவாறு சற்று அவள் புறம் சரிந்தவன்,

“என்ன பண்ணுது பேபி?” என்றதோடு, அவளின் கன்னத்தில் வியர்வையில் ஒட்டியிருந்த ஒற்றை கூந்தல் முடியை தன் இதழ் குவித்து ஊதினான். அதில் அவள் பனிச்சிற்பமாய் உறைந்தாள். கன்னங்களில் சிவப்பு குடியேறியது.

“இந்நேரத்தில் இப்படி டெம்ப்ட் பண்றியே பேபி!” உண்மையில் அவனால் அவளருகில் அடங்கியிருக்க முடியவில்லை. இதில் அவள் வேறு முகத்தில் பல்வேறு ஜாலங்களைக் காட்டிக்கொண்டிருக்க ஆதி மொத்தமாகத் திணறினான்.

‘என்னோட காதலை புரிஞ்சிக்கணுமுன்னு எவ்வளவோ தவிச்சிருக்கேன். இப்போ, அவருடைய காதல் மூச்சு முட்டுதே!’ மனதோடு சொல்லிக்கொண்டவளுக்கு அவ்வளவு மகிழ்வு. இந்த அவஸ்தை, இம்சையெல்லாம் பிடித்தேயிருந்தது.

“எதாவது பேசு பேபி.”

“என்ன பேசுறது?”

“என்ன வேணாலும் பேசு பேபி… என்கிட்ட எதாவது கேட்கணும் இருக்குமில்ல அதை கேளு… என்னையே கூட கேளு!”

ஆதியின் வார்த்தைகளில் அவளிடத்தில் அதிர்வு. கண்கள் அகல விரிந்திருந்தன.

அவள் அகன்ற விழிகளை தன் கருவிழி இடம் வலம் போட்டிபோட பார்த்தவன்… “இந்த பார்வை… இதே பார்வை தான் என்னை உன்னிடம் கவிழ்த்தது. எனைக் கொன்று புதைக்கும் பார்வை. இந்த பார்வையை பார்க்க எத்தனை நாள் இரவு ஏங்கியிருக்கேன். இந்த பார்வை என்கிட்ட ஏதோ சொல்லும். அப்போ புரியல, ஆனால் புரிஞ்சிகிட்ட நாள்… என்மீதான உன் காதலை தெரிஞ்சிகிட்ட நாள் அதை அனுபவிக்கும் நிலையில் நானில்லை.”

ஆதியின் பேச்சில் இப்போது நிரலியின் நிலையை சொல்லவும் வேண்டுமோ!

“நான்… நான்… உங்களை விரும்புறேன்னு உங்களுக்குத் தெரியுமா?” கண்களில் நீர் நிறைந்துவிட்டது.

“ம்… உன் காதல் தெரிந்ததால் தான் என் மனதில் நீ இருப்பதே எனக்குத் தெரிந்தது.”

“எப்போ?”

“தெரிந்ததால் தான் தாலியே கட்டினேன்.”

ஆதி கூறிய பதிலில் என்ன வகை உணர்வை பிரதிபலிப்பதென்று நிரலிக்கு தெரியவில்லை. சிலையாகிப்போனாள். அடுத்து என்ன கேட்பது, என்ன பேசுவது ஒன்றும் விளங்காத்தன்மை.

நேற்று தான் வந்ததிலிருந்து அவனின் செயல்களை அவதானித்துக் கொண்டுதானே இருக்கின்றாள். அதற்கான பொருள் அவன் காதல் சொல்லிய நொடி புரிந்தாலும், இது எப்போதென்ற கேள்விக்கான பதிலை அறிய அவளின் மனம் பரபரத்தது. இருந்தும் அவளுக்கு வாய்விட்டு கேட்க வரவில்லை.

இப்போது இந்த கணத்தினை கடக்கவே அவளுக்கு மூச்சு முட்டும் உணர்வு. இதயம் எங்கே குதித்து ஓடிடுமோ எனும் விதமாக வேகமாக படபடத்தது. கண்களில் சுரந்த கண்ணீர் நிற்காமல் கன்னம் தாண்டியது.

தன்னவளின் கண்ணீரை காண சகியாது காரினை சாலையோரம் நிறுத்தியவன், இழுத்து அணைத்தான்.

“பேபி… பிளீஸ் டா… அழாத… உன் கண்ணீரை என்னால் தாங்க முடியாது.” ஆதியின் குரல் தழுதழுத்ததோ!

“நான் அழல மாமா… இந்த நொடியை கடந்து வரத் தெரியல!” அவனின் நெஞ்சில் இன்னும் அழுந்த புதைந்தாள்.

“நீ இப்படி அழுவன்னு தெரிஞ்சிருந்தால் நீயா சொல்லும் வரை காத்திருந்திருப்பேன்!” அவள் சந்தோஷத்தில் அழுவதை கூட அவனால் பார்க்க முடியவில்லை.

“இல்லை மாமா இல்லை, நான் அழல” என்றவள் புறங்கையால் கண்கள் துடைக்க, அது சிறுபிள்ளையின் செயலென ரசித்து பார்த்தான்.

“பேபி.”

கரகரத்த ஆதியின் அழைப்பில் அவனின் கண்களை நேருக்கு நேர் சந்தித்தாள்.

“எப்போ பேபி சொல்லுவ? நீயா சொல்றதுக்கு நாலு வருஷம் வெயிட் பண்ணேன். நீயா என்கிட்ட வரனும் ஆசைப்பட்டேன். இது ரெண்டுல எதுவுமே நடக்கல.” வருத்தமாகக் கூறினான்.

காதலைதான் அவளாக சொல்லவில்லை. யார் மீதோ கோபம் விட்டு வந்துவிட்டான். ஆனால் அவளாக வர வேண்டுமென்று அதீத ஏக்கம் கொண்டிருந்தான். ஏனோ அவனாக வரவழைக்கும் வரை அவளுக்குத் தானாக அவனிடம் செல்வோமென்று தோன்றாது போனது.

“இப்போ கூட சொல்லியிருக்க மாட்டேன். ஆனால், உன்னை பக்கத்துல வச்சிக்கிட்டு காதலை அடக்கி வைக்க முடியல பேபி.” கார் ஸ்டியரிங்கில் தனது மொத்த அழுத்தத்தையும் காட்டினான்.

இவ்வளவு காதல் வைத்திருக்கும் போது நான்கு வருட பிரிவு, வருத்தம், வேதனை எதற்கு? என்ற கேள்விக்கான சரியான விளக்கங்கள் அவனிடமிருந்து கிடைக்காத போதும்… அவளுக்கு அவனுடைய காதல் ஒன்றே போதுமானதாக இருந்தது. இந்த காதலுக்காக அவள் தவித்தது அவள் மனம் மட்டுமே அறியும். ஆதலால் அவனின் காதலை எவ்வித விளக்கங்களுமின்றி மனதார ஏற்றுக்கொண்டாள்.

தன்னவனின் வருத்தத்தை காண இயலாது… அவனின் இரு கன்னங்களையும் பற்றி ஆவேசமாக முகம் முழுக்க இதழ் ஊர்வலம் நடத்தியவள் வார்த்தைகளற்று உணர்வு குவியலாக முத்தத்தால் காதலை மொழிந்தாள்.

நிரலி மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருந்தாள். அவளின் வேகத்தில் ஆதி திக்குமுக்காடினான்.

“டேய் பேபி… பேபி… கூல்…”

கிடைக்கவே கிடைக்காதென்று நினைத்த ஒன்று கை சேர்ந்திட்ட மகிழ்வு அவளிடத்தில்.

தன்னவளை அமைதிப்படுத்தும் வழி தெரியாது திகைத்து இருந்தவன், போதும் போதுமென்கிற அளவுக்கு அவளின் முத்தத்தை ஏற்றுக்கொண்டு, தன்னுடைய மனைவியை இறுக்கி அணைத்திருந்தான்.

எலும்பை உடைக்கும் அவனின் அணைப்பில் தன்னிலை மீண்டவள், மெல்ல விலகி இருக்கையில் நேராக அமர்ந்தாள்.

“உனக்கு என்மேல் கோபம் எதுவுமில்லையா பேபி?”

என்ன தான் நிரலி ஒன்றும் கேட்காது காதலை ஏற்றுக்கொண்டாலும், தான் இன்னும் எதற்கும் சரியான விளக்கம் கொடுக்கவில்லையே என்கிற எண்ணத்தில் கேட்டான்.

“எனக்கு உங்க காதல் மட்டும் போதும் மாமா. நீங்க என்ன செய்திருந்தாலும் அதற்கு சரியான காரணமிருக்கும் நம்புறேன். சொல்ல முடியுமுன்னா நீங்களே சொல்லியும் இருப்பீங்க” என்றவள்,

“அதோடு உண்மையான ஆழமான அன்பு, அன்பைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்காது” எனக் கூறினாள்.

அவளின் பதிலில் அவன் தான் பேச்சின்றி மௌனியானான்.

“பேபி.” இவ்வார்த்தையை தவிர வேறெதுவும் அவனுக்கு வரவில்லை. வாதாடி என பெயர்பெற்றவன் பேச வார்த்தைகளற்றுப் போனான்.

“போகலாம் மாமா.”

அவனின் அமைதியும் பார்வையும் அவளுக்கு நாணத்தை கொடுக்க, அவனின் கவனத்தை மாற்றும் விதமாகக் கூறினாள்.

அப்போதுதான் சாலையோரம் வண்டியை நிறுத்தியதே அவனின் கவனத்தில் வந்தது. உடனடியாக வண்டியை இயக்கியவன், தன்னுடைய ஒரு கரத்தினை அவளின் உள்ளங்கையோடு கோர்த்துக்கொண்டான். அவனின் பிடி சொல்லாமல் சொல்லியது, “இனி வாழ்நாள் முழுவதும் இப்பிடியினை விடுவதில்லை.”

அந்நொடி நிரலிக்குள் இருந்த தயக்கமெல்லாம் ஓடிச்சென்றது. தெரிய வேண்டியவை அனைத்தும், நேரம் வந்தால் தெரிந்துவிடப் போகிறது என்கிற பக்குவமும் குடியேறியது.

“எதாவது பேசு பேபி.”

போக வேண்டிய இடத்திற்கு இன்னும் சிறிது தூரம் இருப்பதால், அதுவரை சும்மா இருக்க வேண்டாமென அவளை பேச ஊக்கினான்.

என்ன பேசுவதென்று தெரியாது விழித்தவள், சட்டென நினைவு வந்தவளாக…

“ஆமா, இந்த ஏ.டி யாரு? இன்னைக்கு கோர்ட்டில் அந்த பேரு சொல்லாத வாயேயில்லை” என்றாள்.

“நிஜமா உனக்கு யாருன்னு தெரியலையா பேபி? ராகவ் சொல்லலையா?”

“உங்ககிட்ட கேட்டுக்க சொன்னாங்க.” அது யாரென்று தெரியவில்லையென சிறு எரிச்சல் அவளிடம்.

“உன்னால கெஸ் பண்ண முடியுதா பாரு பேபி” என்ற ஆதி அதன் பிறகு தன் வாயினை திறக்கவேயில்லை.

இவனும் சொல்லமாட்டான் என நினைத்த நிரலி, ராகவனுடனான இன்றைய பேச்சுக்கள் மற்றும் உறவு பற்றி ஒன்றுவிடாது ஆதியிடம் சொல்லிக்கொண்டு வந்தாள்.

தன்னவளின் பேச்சினை விரும்பியே கேட்டான். ராகவின் மீதான நிரலியின் அன்பு, இருவர்களுக்கிடையே மலர்ந்த உறவு ஆதிக்கு மகிழ்வை கொடுத்தது.

தன் எல்லையை விட்டு வெளிவர விரும்பிடாத ஆதி, ராகவின் மேல் நிறைய பாசமும் அக்கறையும் இருந்தாலும் அதனை நேரடியாகக் காட்டிக்கொண்டதில்லை. ஆனால் இன்று தன்னவளின் மூலம் ராகவுக்கு உறவுகள் கிடைத்ததில் ஆதிக்கு அத்தனை மகிழ்ச்சி.

அவர்கள் வந்து சேரவேண்டிய இடம் வந்ததும், ஆதி காரினை நிறுத்தினான்.

“இது யார் வீடு?” என்ற கேள்வியோடு தன்னை ஏறிட்ட நிரலியிடம் பதில் சொல்லாது, அவளின் கை பிடித்து உள்ளே அழைத்துச் சென்றான். வீடு அவ்வளவு பிரம்மாண்டமாக இருந்தது. ஆனால் வீட்டில் யாரும் இருப்பதைப்போன்று தெரியவில்லை.

“பானுக்கா.”

ஆதியின் குரலுக்கு சமையலறையிலிருந்து, ஈரம் நிறைந்த கையினை சேலை தலைப்பில் துடைத்தவாறு வெளியில் வந்தார் ஒரு பெண். அவர் பின் முப்பதில் இருக்கலாம்.

“வாப்பா.”

ஆதியை பார்த்ததும் வாஞ்சையாக வரவேற்றார். அவனின் அருகில் நின்றிருந்த நிரலியை பற்றி ஆதி எதுவும் சொல்லாமலே, “வாம்மா” என வரவேற்று… “நல்லாயிருக்கியாம்மா?” என்று நலம் விசாரித்தார்.

அவரைப்பற்றி எதுவும் தெரியாத போதும் அவரின் கனிவான பேச்சில் அவரின் கேள்விக்கு தலையசைத்தாள்.

இருவரையும் இருக்கையில் அமர வைத்தவர், “இனியாவது நீங்க ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்தே இருக்கணும்” என்றவாறே உள்ளே சென்று இருவருக்குமான பழச்சாறுடன் வந்தார்.

“இப்போ இது எதுக்குக்கா?” என்றபோதும் ஆதி குவளையை கையில் எடுத்துக்கொண்டான்.

பானுக்கா அவ்வீட்டில் சமையல் செய்பவர். அவருக்கென்று பெயரளவில் இருந்த கணவனும் குடியின் பிடியில் அழிந்து இறந்து போனான். அதன் பின்னர் அவ்வீடே அவரின் வீடாகிப்போனாது. ஆதிக்கு அவரிடம் ஏதோ ஒட்டுதல். ராகவிடம் கூட சொல்லிடாத நிரலியைப் பற்றி அவரிடம் சொல்லியிருக்கின்றான்.

பழச்சாறு குடித்து முடித்ததும், “சார் தூங்குறாரா பானுக்கா?” என்றான்.

“இப்போதான் தோட்டத்துல விட்டுட்டு வந்தேன். நீச்சல் குளத்துகிட்ட இருக்காருப்பா, நீ போய் பாரு.” அவனின் கேள்விக்கு பதிலளித்தவர் மீண்டும் தன்னுடைய ஆஸ்தான சமையற்கட்டிற்குள் நுழைந்து கொண்டார்.

மனைவியை அழைத்துக்கொண்டு தோட்டத்தின் மத்தியில் அமர்ந்திருக்கும் சிறிய அளவிலான நீச்சல் குளத்தினை நோக்கி ஆதி சென்றான்.

“என் வாழ்வில் மிகவும் முக்கியமான நபர். நான் மதிக்கும் நபரும் கூட.” பார்க்க இருப்பவரைப் பற்றி செல்லும் போதே அவர் தனக்கு யாரென்பதை நிரலியிடம் கூறினான். அவன் சொல்லியதைக் கேட்டுக்கொண்ட விதமாக அவள் தலையை ஆட்டினாள்.

செயற்கை குளத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த நடை பாதையில், சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தவரின் பார்வை தூரத்தில்  மறைய தயாராக இருக்கும் ஒளி மங்கிய சூரியனிடம் நிலைக்குத்தி இருந்தது.

“குட் ஈவ்னிங் சார்.”

அவரின் அருகில் சென்ற ஆதி, அவருக்கு தன் வணக்கத்தை தெரிவிக்க,

வந்திருப்பது யாரென்றும் பாராது, குரலை வைத்தே… “வாங்க மிஸ்டர்.ஏ.டி” என்று வரவேற்றார் ஆர்.கே. அந்த சிஷ்யனின் குரு.

அவர் ஏ.டி என்றழைத்தத்தில் அதிர்ந்த நிரலியின் கண்கள் சாசர் போல் அகல விரிந்தன… குடை போன்று விரிந்த இமைகளுக்கு கீழ் அவளின் கோலி குண்டு கருவிழிகள் நிலைகுத்தி அசையாது நின்றன. தன் கணவனின் உயரம் கண்டு சற்று மிரண்டு தான் போனாள்.

‘இவர் தான் ஏ.டி’யா?’ மனதில் மீண்டும் மீண்டும் இக்கேள்வி எதிரொலித்தது.

அவளின் அதிர்வையும், மிரட்சியையும் பார்த்து சிரித்தவன் பட்டென்று கண்ணடித்து அவளை சுயம் மீட்டான்.

“விஸ்வநாதனை ஓட விடுற போலிருக்கே!” ஆதியால் அவரின் குரலில் நிறைவை உணர முடிந்தது. அவனிடத்தில் சிறு புன்னகை.

“என்னிடமும் சிரிப்புத்தானா” எனக் கேட்டுக்கொண்டே அவர்கள் புறம் நன்றாக திரும்பியவர், நிரலியை கனிவாக பார்த்தார்.

“ஒரு வழியா உன் மனைவியை உன்னிடம் வர வைத்துவிட்டாய்!”

“இதுக்கு நான் பட்டப்பாடு எனக்குத்தானே தெரியும்” என்ற ஆதி… நிரலியின் முகம் தன் வார்த்தையில் தீவிரமாக மாற்றம் பெறுவதை உணர்ந்தவன் அதனை தடுக்கும் பொருட்டு ஏதோ அர்த்தமாக கண் காட்ட, அவள் புரிந்தது எனும் விதமாக ஆர்.கே’விடம் ஆசீர்வாதம் வாங்க கீழே குனிய, அவளை தடுத்தவர்… தலையில் கை வைத்து ஆதுரமாக வருடினார்.

நிரலியை ஆதி ஆசிர்வாதம் வாங்க பணித்ததற்கான காரணம் உள்ளது. அக்காரணம் ஆதிதான் சொல்ல வேண்டும்.

“எனக்கிருக்கும் ஒரே உறவு இவன் தான். அவன் சந்தோஷமா இருக்கணும். அது உன் கையில் தான் உள்ளது. பய ரொம்ப சேட்டை பண்ணுவான், பார்த்துக்கோம்மா.”

அவரின் பேச்சில் ஆதியின் மீதான அன்பையும் அக்கறையையும் நிரலியால் உணர முடிந்தது.

“சரிங்கப்பா.” தனக்கு பதில் சொல்லிய நிரலியின் அப்பா என்ற வார்த்தை ஆர்.கே’விற்குள் அதிர்வை ஏற்படுத்தியது. அதிலிருந்து வெளியேற முடியாது தவித்தார்.

அவரின் முக மாற்றத்தை அவதானித்த நிரலி, ‘தனது அப்பா என்ற வார்த்தை அவருக்கு பிடிக்கவில்லையோ’ என நினைத்து…

“எங்க கிராமத்தில் எல்லோரையும் உறவு முறை வைத்து அழைத்துதான் பழக்கம்… அதேபோல் உங்களை பார்த்ததும் அப்பான்னு கூப்பிட தானா வந்துவிட்டது” என்று விளக்கமளித்ததோடு… “உங்களுக்கு விருப்பமில்லைன்னா நான் சொல்லலை” எனவும் கூறினாள்.

அவள் அவ்வாறு சொல்லியதும் ஆர்.கே’விற்கு முன், “நீ தாராளமாக அப்பான்னு சொல்லலாம் பேபி… அவரும் உனக்கு வேலு மாமா மாதிரிதான்” என்றான்.

ஆதியின் பேச்சு ஆர்.கே’விற்கு புரிந்தும் புரியாத நிலை. அவன் தன் மன அமைதிக்காக கூறுகிறானென்று எண்ணினார்.

கசந்த முறுவல் ஒன்றை பிரதிபலித்தவர், “அப்பா என்று அழைக்கும் உறவைத் தான் தேடி அலைகிறேன்” என்று உணர்வின் பிடியில் முணுமுணுத்தவர்… நொடியில் தன்னை மீட்டு, “உன் விருப்பம்போல் கூப்பிடும்மா” என்றார்.

அவளும் மலர்ந்த முகத்துடன் ஒப்புதல் வழங்கினாள்.

ஆர்.கே ஏ.டி’யை பார்க்க,

“பேபி அந்தப்பக்கம் நிறைய செடி இருக்கு. உனக்கு விருப்பமிருந்தால் பார்த்து வாயேன்” எனக்கூறி நிரலியை அங்கிருந்து அகற்ற முயன்றான். அவனின் வார்த்தையே இருவரும் ஏதோ தனியாக பேச முற்படுகின்றனர் என்று நினைத்து நிரலியும் அவர்கள் பேசுவது கேட்காத, ஆனால் ஆதியின் பார்வையில் தெரியும்படி சென்று தோட்டத்தை ரசிக்கத் துவங்கினாள்.

“உனக்கேத்த பொண்ணுதான்.” ஆர்.கே’வின் முகத்தில் சிறு மகிழ்வு எட்டி பார்த்ததோ!

“அப்புறம் ஏ.டி”

அதன் பிறகு இருவரும் பேசிக்கொண்ட அனைத்தும் அவர்கள் மட்டுமே அறிந்தது.

இறுதியில்,

“நிச்சயம் இந்த சொத்துக்கள் அனைத்தும் உங்களுக்கு பிறகு உங்களுடைய ரத்தத்திற்கு தான் அதாவது வாரிசுக்குத்தான்” என்று உறுதியாக அழுத்தத்துடன் கூறினான்.

“எனக்கு இந்த சொத்துக்களை விட, எனக்கு பிறந்தது ஆணோ, பெண்ணோ, ஆனால் என் வாரிசும்… என் அப்பாவின் வார்த்தைகளும் தான் முக்கியம் ஆதி. இப்போ இவை இரண்டையும் காக்கும் நிலையில் நானில்லை. உன்னைத்தான் மலையென நம்புகிறேன்.” நெக்குறுகி மருகினார் ஆர்.கே.

தரையில் மண்டியிட்டு அமர்ந்தவன், அவரின் கைகளை தனது கைகளுக்குள் பொத்திக்கொண்டான். அனைத்தையும் சரிசெய்வேன் என்ற நம்பிக்கையை அச்சிறு செய்கையில் அவருக்கு வழங்கினான்.

அவரின் மனக்கண்ணில் உடன் பிறந்தவனே செய்திட்ட துரோகம் தோன்றி மறைந்தது.

நிறைமாத கர்ப்பிணியான மனைவியின் முகமும், இதுவரை பார்த்தேயிராத தன் மகவின் நினைவும் நெஞ்சத்தை நிறைக்க, துளி கண்ணீர் எட்டி பார்த்தது.

கம்பீரமாக தனக்கு முன்னோடியாக திகழ்பவரின் கண்ணீரை கண்ட ஆதிக்கு அடக்கப்பட்ட கோபம் மனதில் தீயாய் கனன்றது.

ஆர்.கே’யின் கைகளில் அழுத்தத்தை கூட்டிய ஆதி, அவர் மகிழும்படியான செய்தியைக் கூறினான்.

“உங்க குழந்தை கிடைச்சிட்டாங்க சார்.”

ஆதியை நம்பாத பார்வை பார்த்த ஆர்.கே, “என் மனதை மாற்ற பொய் சொல்றியா ஆதி” எனக் கேட்டார்.

அதற்கு ஆதி பதில் சொல்லாது புன்னகைக்க,

“இந்த புன்னகைக்கு பின்னாலிருக்கும் கள்ளத்தனத்தை விஸ்வநாதனிடம் மட்டும் காட்டு” என்றார். சிறு கோபம் துளிர்த்திருந்தது. ‘தன்னிடமும் மற்றவர்களிடத்தில் விளையாடுவது போல் இருக்கிறானே’ என்று வருந்தினார்.

“உங்களிடம் இதுவரை எப்போதும் பொய் கூறியதில்லை சார்” என்ற ஆதி, “அடுத்த ஹியரிங்க்கு நீங்களும் கோர்ட்டிற்கு வரும்படி இருக்கும்” எனக்கூற, ஆர்.கே இம்முறை முழுதாக ஆதியின் பேச்சை நம்பினார்.

சில நிமிடங்கள் மௌனம் நீடிக்க, ஆதி ஆர்.கே’வின் அருகில் நின்றிருந்தாலும் மலர்களோடு மலராக நின்றிருந்த தன்னவளை ரசித்திருந்தான்.

‘இவனிடம் எப்படி கேட்பது, கேட்டால் சொல்லுவானா?’ மனதில் உருப்போட்டபடி ஆர்.கே. கடைசியில் கேட்டிட முடிவுசெய்து, தன் குழந்தை யாரென்பதை கேட்டும் விட்டார்.

மனைவியின் மீது கண் வைத்தவாறே,

“இப்போ அவள் உங்கள் மகள் மட்டுமல்ல சார்” என்று கூற வந்ததை பாதியிலேயே நிறுத்திவிட்டு,

“அவங்க பாதுகாப்பு நமக்கு ரொம்ப முக்கியம் சார்… யாரென்று தெரிந்துவிட்டால், உயிருக்கு ஆபத்து. சாரி சார், உங்களிடம் கூட இப்போ சொல்ல முடியாது” என்று உறுதியாக மறுத்துவிட்டான்.

ஆதி சொல்லியதை வைத்து தனக்கு பிறந்தது மகளென்று கண்டு கொண்டார்.

ஆதி சொல்லுவதும் உண்மையென நினைத்தவர் மேற்கொண்டு சொல்லும்படி அவனை வற்புறுத்தவில்லை. இவ்வளவு காலம் காத்திருந்த தன்னால் இன்னும் சில நாட்கள் காத்திருக்க முடியாதாயென்று, மகளின் உயிரையும் மனதில் வைத்து அமைதியாகினார்.

வெகு நேரம் கடந்துவிட்டதை உணர்ந்த ஆதி, ஆர்.கே’வை அவரின், சர்க்கர நாற்காலியை தள்ளியபடி அறைக்கு அழைத்துச்சென்று மெத்தையில் படுக்க வைத்துவிட்டு, கிளம்புவதாகக் கூறி வெளியில் வந்தான். பானுக்காவிடமும் சொல்லிவிட்டு தோட்டத்திற்கு வந்தவன், அங்கு நின்றிருந்த மனைவியை பின்னாலிருந்து அணைத்து அவளின் தோளில் முகம் பதித்து, கழுத்திற்கும், தோளிற்கும் இடையிலான ஆடையில்லா பகுதியில் அழுந்த முத்தம் வைத்தான்.

Epi 13

ஏந்திழையின் ரட்சகன் 13

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
13
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments


    1. ஆதி ஆர்கேவும் மாமா மருமகனோ