அத்தியாயம் 11 :
ராகவும் நிரலியும் கேன்டினிலிருந்து திரும்பி வந்த போது ஏ.டி அவனது இருக்கையில் அமர்ந்திருந்தான். தீவிரமாக சில கோப்புகளை ஆராய்ந்து கொண்டிருந்தான்.
“சீனியர் யூ மேட் திஸ் டே.”
“ஆஹாங்…”
“கேம்பஸ் ஃபுல்லா ஏ.டி… ஏ.டி…”
“ம்.”
ராகவின் பாராட்டு மற்றும் உற்சாகத்தில் அவ்வளவு தான் ஏ.டி’யின் ரியாக்ஷன்.
கேட்டினிலிருந்து அவனுக்காக வாங்கி வந்த ஐஸ் டீ’யை ஏ.டி’யின் முன் மேசையில் வைக்க,
“எத்தனை முறை சொல்வது ராகவ். இந்த மாதிரி நீ வாங்கி வராதேன்னு. எனக்கு வேண்டுமென்றால், நான் கேன்டின் போய் சாப்பிட்டுப்பேன்.”
“நான் அங்கு தானே போனேன்… வாங்கி வந்ததில் இப்போ என்ன குறைஞ்சி போயிட்டேன்.” ராகவ் தனது வேலையை கவனிக்க சென்றுவிட்டான்.
ஏ.டி யாரென்ற யோசனையிலேயே உழன்று கொண்டிருந்ததால் அவர்களின் பேச்சு வார்த்தையை நிரலி சரியாக கவனிக்கவில்லை. கவனிக்காததால் கருத்திலும் விழவில்லை.
நிரலி நின்று கொண்டே இருக்க, அவளின் அருகில் வந்த ஏ.டி… “ஆர் யூ ஓகே பேபி” என்று அவள் செவிகளுக்குள் கேட்க, பதறி விலகினாள்.
பதற்றத்தில் அவளின் விரிந்த கண்களுக்குள் விரும்பியே சிக்கினான். அவன் ஐஸ் டீ’யை பருகிக்கொண்டே தன்னவளையும் சேர்த்து பருகிக்கொண்டிருந்தான்.
எந்நிலையிலும் அனைவருக்கும் ஏ.டி’யாக இருப்பவன் நிரலியிடத்தில் மட்டும் ஆதியாக இருப்பதை இந்த ஒரு நாளுக்குள் அவனே அறிந்திருந்தான்.
கொள்ளை கொள்ளையாய் அவள் மீது மனதில் தேங்கிக்கிடக்கும் காதலை நொடிக்கு நொடி காட்டிக்கொண்டே இருக்க வேண்டுமென ஆதியின் மனம் பரபரத்தது.
இருவரும் ஒருவரையொருவர் பார்வையால் விழுங்கியபடி நின்றிருக்க, சட்டென தன்னவளின் இடையணைத்து கை வளைவிற்குள் நிறுத்தினான்.
அவர்களை கவனித்த ராகவ்…
“நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன் சீனியர்” என்று அவன் முகம் பார்க்காது சொல்ல,
“நீ இன்னும் போகலையாடா?” என்றான் ஆதி.
“நீங்க நடத்துங்க சீனியர்” என்றவன் சிரித்துக்கொண்டே வெளியேறிவிட்டான்.
“அய்யோ மாமா என்ன செய்யிறீங்க… பாருங்க ராகவ் அண்ணா வெளியே போயிட்டாரு. என்ன நினைச்சாரோ!”
“அவன் நினைக்கிறது இருக்கட்டும். நீ நினைச்சிக்கிட்டு இருக்கிறதை எப்போ என்கிட்ட சொல்லுவ?” கேட்டே விட்டான். அவளாக காதலை சொல்லும் வரை இனியும் பொறுமையாக காத்திருக்க முடியாது என மனம் உந்தியது. அவளாக சொல்லவும் போவதில்லை. காதல் கொண்டவன் வெளியே கொண்டு வரவேண்டும்.
முன்பு எப்படியோ! ஆனால் இப்போ?
தன்னவனின் நேசத்தை உணர்ந்து கொண்டிருப்பவளால் தன் நேசத்தை வெளிப்படுத்த தோன்றவில்லை. அவன் கேட்டது விளங்கவுமில்லை. காதலிக்கும் போது வராத இன்பம், காதலிக்கப்படுகிறோம் என்ற போது அதிகமாக ஊற்றெடுத்தது. அந்த இன்பத்தை அனுபவிக்கவே ஆசைப்பட்டாள். தன்னவனுக்கும் இத்தகைய இன்பத்தை வழங்க வேண்டுமென்பது அவளுக்கு மறந்தே போனது.
இந்த ஒரு நாளில் ஆதியின் ஒவ்வொரு செயலிலும், நேசத்தை உணர்ந்தவளுக்கு… தாலி கட்டியதும் தன்னை ஏன் விட்டுச் சென்றான் என்பதற்கு மட்டும் பதில் கிடைக்கவில்லை. அதனை கேட்டுத்தெரிந்து கொள்ள அவள் விரும்பவில்லை. அவனாக சொல்ல வேண்டுமென எதிர்பார்க்கிறாள். அதோடு இப்போது அவன் நடந்துகொள்ளும் முறை காதலென்று எண்ணினாலும், அதற்கான விளக்கங்கள் வேண்டுமே!
அதோடு இந்த காதல் எப்போது வந்தது என்ற யோசனையும் அவளுள் எழுகிறது. ஆதலால் அவளால் தன் காதலை சொல்ல இயலவில்லை.
“டேய், நிரலி…”
தான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாது… தனது நெருக்கத்தில் தன்னுடைய மார்பில் விழி அமர்த்தியவளாக தலை கவிழ்ந்திருந்தவளை… மென் காதலோடு அழைத்தான்.
முதல் முறை அவனின் கை வளைவிற்குள் காதலாய் நின்றிருப்பதே அத்தனை சுகமாக இருந்தது.
அதிலும் அவனின் அழைப்பு…
அவனின் மொத்த காதலையும் காண்பித்தது. ஒற்றை விளிப்பில் மனதின் ஒட்டு மொத்த காதலையும் கொட்டிட முடியுமா? நிரலியின் ஆதி காண்பித்திருந்தான். நெஞ்சத்தின் நேசத்தையெல்லாம் கொட்டி கவிழ்த்திருந்தான்.
அதன் சுகம் தாங்காது நிரலியின் கண்கள் பனித்தன. அவள் ஏங்கித் தவித்த சுகமல்லவா… கிடைக்கப்பெறாதோ என்று தவித்த பேரின்பம்.
சந்தோஷத்தில் அழுவது கூட வரம்.
மெல்லிய விசும்பலில் தன்னவளின் நாடியை ஒரு விரல் தொட்டு முகத்தை உயர்த்தியவன்… அவளின் நீர் திரண்ட கண்கள் காட்டிய ஈர்ப்பில் அனைத்தும் மறந்தவனாக மென்மையிலும் மென்மையாக தனது இதழ் கொண்டு பேதையின் நயனத்தில் தேங்கி நின்ற உப்புநீரை ஒற்றியெடுத்தான்.
தேகம் சிலிர்த்து அடங்க இரண்டு கை விரல்களையும் உடையோடு சேர்த்து இறுக மூடியவள், அவனின் ஸ்பரிசத்தில் மூச்சுவிட திணறி நின்றாள். அவளின் நிலை அவனுக்கு போதையேற்றுவதாய்.
“பேபி…” காதலாக உருகி குழைந்தான்.
‘நீ சொல்லும்போது சொல்லிக்கோ… எனக்கு உன்னை திகட்ட திகட்ட காதலிக்கணும் போலிருக்கு. எப்படி உன்னை விட்டு நான்கு வருடங்களாக இருந்தேனென்று தெரியவில்லை பெண்ணே. வந்த ஒரு நாளில் என்னை மொத்தமாக தடுமாறச் செய்கிறாய்.’ மனதோடு பேசியவன் வாய் வார்த்தையாக நேசத்தை வெளிப்படுத்தியிருந்தான்.
“என்னை முற்றிலும்
மறந்தவனாகிப் போகிறேன்
உனதருகினில் பெண்ணே!
பித்தாகினேன்
எனைத் தடுமாறச் செய்யும்
உன் கூர் விழிகளில்.”
கவிதையாய் பிதற்றியவனின் வார்த்தை பொருளை அவள் உணரும் முன்னே, தன்னவளின் அழகிய செந்நிற வதனத்தோடு தனது அதரங்களை பொருத்தியவன், வார்த்தைகளற்று முத்தத்தால் காதலை சொல்லியிருந்தான்.
குடை விரிந்த பெண்ணவளின் நயனத்தோடு காதல் பார்வையை படர விட்டவனின் இதழ் தொடுகை நீடித்துக்கொண்டே இருக்க… மனம் கவர்ந்தவனின் நேசத்துளிகள் மங்கையவளின் இதயத்தில் சொட்டு சொட்டாக இறங்கியது. கண்களில் கோர்த்த நீர் அதீத உணர்ச்சி பெருக்கில் கன்னம் தாண்டி வழிந்தோட… தன்னவன் உணர்த்திய காதலில் மூச்சிமுட்ட, நுரையீரல் தீண்டிடும் காற்றிற்கு ஏங்கினாள்.
மங்கையின் நிலை உணர்ந்து பிரிய மனமின்றி மெல்ல விலகியவன், தன்னவள் கன்னங்கள் தாங்கி, நெற்றி முட்டி… “லவ் யூ பேபி” என்று காதலை வாய் வார்த்தையாக மொழிந்தான்.
நெஞ்சம் முழுக்க நிறைந்திருப்பவனின் காதலின் கனம் தாங்காது, இமைப்பொழுதில் தன்னவனை இறுக்கி அணைத்தவள் இன்னும் இன்னும் ஆழ அவனுள் புதைந்தாள். அவள் சொல்லாத காதலை ஆழ்ந்த அணைப்பினால் ஆதியால் உணர்ந்துகொள்ள முடிந்தது.
‘இப்போ கூட உன்னால் சொல்ல முடியாதா பேபி.’ மனதோடு கேட்டுக்கொண்டவன் அவள் வாய் மொழியாகக் கேட்டிட தவித்தான்.
***
இப்போதுதான் கேன்டின் சென்று வந்ததால் ராகவ் வேறெங்கும் செல்லாது… தன்னுடைய சீனியருக்கு காதல் செய்ய தனிமை அளித்ததோடு காவலுக்காக வெளியே இருந்த பெஞ்சில் அமர்ந்துகொண்டான்.
ஆதிக்கு நிறைய சொந்தங்களென்று ராகவிற்கு தெரியும். அத்தனை பேர் இருந்தும் எதற்காக தனித்து இருக்கின்றான் என்ற அவனின் கேள்விக்கு ஆதியிடம் பதில் கேட்டதில்லை. கேட்டாலும் அவன் சொல்லுவானா என்பது சந்தேகம். அதனால் ஆதியின் குடும்பத்தைப் பற்றி ராகவ் எதுவும் கேட்டுக்கொண்டதில்லை.
படிக்கும் போது ஆதிக்கு ராகவ் ஜூனியர். அப்போதே இருவருக்கும் நல்ல நட்பு. அது இப்போது தொழிலுலும் தொடர்கிறது. என்ன தான் வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளாவிட்டாலும் இருவருக்குள்ளும் சகோதரப்பாசம் இருக்கிறது. அந்த பாசத்தால் ராகவ் பலமுறை, ஆதியின் திருமணத்தைப்பற்றி பேசியிருக்கிறான். அப்போதெல்லாம் ஆதியின் பதில் மௌனம் தான்.
வேலையை தாண்டி எதுவுமில்லை எனும் விதமாக தன் தொழிலிலே கண்ணாக இருந்தவன் திடீரென பொண்டாட்டி என்றதோடு, அவள் மீதான காதலை வெளிப்படையாக சுமந்து நிற்பது… ராகவிற்கு மகிழ்வை அளித்தது. தன்னுடைய சீனியர் இப்படி இருக்கத்தானே அவன் ஆசைப்பட்டான். அதை கண்ணெதிரே கண்டதில் அத்தனை மகிழ்வு அவனுள்.
ராகவ் ஆதியிடத்தில் இன்று தெரியும் பிரகாசத்தை நினைத்துக் கொண்டிருக்கும் போது அவனின் முன் நிழலாடியது. யாரென்று நிமிர்ந்து பார்க்க விஸ்வநாதன் நின்றிருந்தார்.
“ஏ.டி இல்லை?”
விஸ்வநாதன் எப்போதும் யாரிடமும் யாருக்காகவும் அனுமதி வேண்டி நிற்கமாட்டார். இன்று ராகவ் வெளியே அமர்ந்திருக்கவும், ஆதியில்லை என நினைத்து ராகவிடம் விசாரித்தார்.
“உள்ள தான் இருக்கார். ஒரு முக்கியமான கேஸ் பைல் பார்த்திட்டிருக்கார்” என்றவனை மேலும் கீழும் பார்த்தவர், “அப்புறம் நீ ஏன் இங்க உட்கார்ந்திருக்க?” எனக் கேட்டார்.
“எவ்வளவு நேரம் சார் பைலை கட்டிக்கிட்டு உருளுறது. அதுகூடவே குடும்பம் நடத்த நானென்ன ஏ.டி’யா” என்று அவரிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே, ‘சீனியர் உள்ள எந்த நிலைமையில் இருக்காரென்று தெரியலையே… இவரு பொசுக்குன்னு உள்ளே போயிட்டால் வம்பு’ என மனதில் நினைத்தவன் ஆதிக்கு அழைப்பு விடுத்தான்.
கணவன் மனைவி இருவரும் ஒருவரின் அணைப்பில் மற்றொருவர் சுற்றம் மறந்து நின்றிருக்க, அவர்களை கலைக்கும் பொருட்டு ஆதியின் அலைபேசி தொல்லையாக அலறியது.
தன்னுடைய பேபியை அணைப்பில் நிறுத்திக்கொண்டே, அலைபேசிக்கு செவி மடுத்தான்.
அந்த பக்கம் ராகவ்.
“சீனியர் லவ் பண்ணி முடிச்சிட்டீங்கன்னா நான் உள்ளே வரலாமா?” என மெல்ல கேட்டவன், “என்னோடு வேறொருவரும் உங்களுக்காக வெயிட்டிங்” என உரக்கக் கூறினான்.
அந்த வேறொருவர் யாரென்று அவனால் யூகிக்க முடிந்தது.
“டூ மினிட்ஸ் அப்புறம் வந்துதொலைடா தொல்லை” என்ற ஆதி அலைபேசியை அணைத்துவிட்டு… தன்னவளை ஆழ்ந்து அணைத்து விடுவித்தான்.
திடீரென விலக்கி நிறுத்தியதில் உணர்வுகள் அடங்காது ஏக்கம் வழிய நின்றிருந்தவளை பார்த்து “ஆர் யூ ஓகே பேபி?” என்றவன்,
தனது உள்ளங்கை கொண்டு தன்னவளின் முகத்தை அழுத்தி துடைத்து… கலைந்திருந்த முன்னேற்றி கேசத்தை அவளின் காதோரம் சொருகி சரி செய்தான்.
“வீட்டுக்கு போய் லவ் பண்ணலாம் பேபி” என்று சொல்லியவன், நெற்றியில் அழுத்தமாக இதழ் பதித்து, அவளை இருக்கையில் அமர்த்தி ஒரு கோப்பினை கையில் அளித்துவிட்டு தடுப்பினைத் தாண்டி தன்னுடைய இருக்கையில் சென்று அமர்ந்தான். நொடியில் ஆதியிலிருந்து ஏ.டி’யாக மாறியிருந்தான்.
அவனின் பேபி என்ற வார்த்தையை புதிதாகக் கேட்டபதுபோல் ஆதி ஒவ்வொரு முறை சொல்லும்போதும் உருகித்தான் போனாள்.
‘நல்லாத்தானே இருந்துச்சு, இப்போ எதுக்கு பட்டுன்னு விட்டுட்டு போயிட்டாங்க…’ நிரலி சிந்திக்க ராகவ் உள் நுழைந்தான். அவனைத் தொடர்ந்து விஸ்வநாதன். உடனடியாக தன்னை நிலைப்படுத்திய நிரலி ஆதி கொடுத்துச்சென்ற கோப்பிற்குள் தலையை விட்டுக்கொண்டாள்.
ராகவ் சென்று நிரலிக்கு அருகிலிருந்த இருக்கையில் அமர, விஸ்வநாதன் அவள் யாரெனும் விதமாக ராகவை பார்த்தார்.
“நியூ அசிஸ்ட்.”
ராகவின் பதிலில், ‘ஏ.டி’யிடம் பெண் ஜூனியரா!’ என்று மனதிற்குள் வியந்தவர் ஏ.டி’யின் அறைகுள் நுழைந்தார்.
“சாரிண்ணா,”
விஸ்வநாதன் நகர்ந்ததும், தங்களது செயலுக்கு ராகவிடம் நிரலி மன்னிப்பு வேண்டினாள்.
“அண்ணாகிட்ட யாராவது சாரி சொல்லுவங்களா?” எனக்கேட்ட ராகவ், “தங்கச்சி ஹஸ்பண்டோட சந்தோஷமா இருந்தால் எந்த அண்ணனுக்குத்தான் பிடிக்காது” எனக்கூறி அவளின் தலையை மெல்ல ஆட்டினான்.
“எனக்குதான் உறவுன்னு சொல்லிக்க யாருமில்லை. எல்லாம் இருந்தும் சீனியர் ஏன் தனியா இருக்கார்ன்னு ஃபீல் பண்ணியிருக்கேன். உறவுகளோட அருமை யாருமே இல்லாத எனக்குத்தான் புரியும். அதனால் சீனியரும் என்னை மாதிரி இருந்திடுவாரோன்னு பயந்திருக்க. அப்படியிருந்தவர் இன்னைக்கு இப்படி பார்க்கும்போது எப்படியிருக்குத் தெரியுமா? அவர் வாழ்க்கையில் என்ன நடந்துச்சு தெரியாது, ஆனால் நீ அவர்கிட்ட வந்த பிறகுதான் உண்மையான சந்தோஷம் அவர் முகத்துல தெரியுது. உன்கிட்ட மட்டும் தான் அவர் அவரா இருக்கார்.
ஐ திங்க் ஹீ லவ்ஸ் யூ மோர் தென் திஸ் வோர்ல்டு.”
மனதிலிருப்பதை சொல்லியவன் மௌனமாகிவிட, அவனின் இறுதி வரிக்கு அவளையும் அறியாது ஆமாம் என்றிருந்தாள்.
இப்போது அவளுக்கு ஒன்று புரிந்தது, ஆதிக்கும் ராகவிற்கும் இடையில் தொழில், நட்பை தாண்டி உறவென்ற பாலமும் உள்ளதென்று.
“அண்ணா உங்க சீனியரை நிறைய புரிஞ்சி வச்சிருக்கீங்க… எனக்கும் அவரை பற்றி சொல்லுங்க தெரிஞ்சிக்கறேன்.”
ராகவின் நிலையை மாற்றும் பொருட்டு நிரலி பேச்சினை மாற்றி, அவனை தன்னுடன் நிறைய பேச வைத்தாள். இருவரும் வெளிப்படையாக உறவுகளை சொல்லிக்கொள்ள விட்டாலும், இருவருக்கும் அண்ணன் தங்கை என்ற உறவுமுறை மனதில் உரிமையாகத் தோன்றியது.
உடனடியாக சூர்யாவுக்கு அழைத்தவள், நேற்று அவன் கிளம்பி சென்றதிலிருந்து ஆதி காதல் சொல்லியதை தவிர்த்து அனைத்தையும் சொல்லியவள் ராகவை பற்றி சொல்லி அவனுடன் பேச வைத்தாள். சூர்யாவுக்கும் ராகவை மிகவும் பிடித்தது. அதோடு விடாது தனது தந்தைக்கு அழைத்து, வேலு, செல்வி, வருணிடமும் பேச வைத்தாள்.
ராகவிடம் பேசியதும், தன் மகளை பாதுக்காக்க அண்ணனென்கிற உறவு அருகிலேயே இருப்பதில் மகிழ்ந்து போனார் செல்வி. கள்ளம் கபடமற்ற அந்த கிராமத்து மனிதர்கள் ராகவை தங்கள் உறவாகவே நினைத்தனர். அவர்களிடம் பேசிவிட்டு அலைபேசியை வைத்த ராகவ், பட்டென நிரலியை அணைத்துக் கொண்டான்.
“ரொம்ப தேங்க்ஸ் டா.” உறவுகளின் பாசத்தை நொடிநேரம் அனுபவித்தற்கே உணர்வின் பிடியில் நெகிழ்ந்திருந்தான். மனதளவில் சிறுவனாக மாறியிருந்தான். நிரலியை தன் உடன் பிறந்தவளாகவே மனதில் நிறுத்தினான்.
“ஹலோ உங்க தேன்க்ஸ் நீங்களே வச்சிக்கோங்க… இப்போ வாங்க வேலையை பார்ப்போம்” என்றாள்.
அப்போதுதான் அவளை, தான் அணைத்திருப்பதையே உணர்ந்தவன், அவள் தன்னை தவறாக நினைத்திருக்கக்கூடாது என்கிற எண்ணத்தோடு விலகி நின்று அவளின் முகம் பார்க்க… அவனின் மனதினை படித்தவள் போல், “நானும் சூர்யாவும் சண்டைன்னு வந்துட்டால் கட்டிப்பிடிச்சு உருளுவோம்.” நீயும் எனக்கு சூர்யா மாதிரிதான், நான் உன்னை புரிந்துகொண்டேன் என்று மறைமுகமாகக் கூறி ராகவை அமைதிப்படுத்தினாள். அதில் ராகவிற்கு இன்னும் அதிகமாக தன் தங்கையை பிடித்தது.
***
ஏ.டி’யின் அறைக்குள் நுழைந்த விஸ்வநாதன் அவனுக்கு முன்னிருந்த இருக்கையில் கால் மேல் காலிட்டு அமர்ந்தார்.
அவரை ஏ.டி வாருங்களென்றும் அழைக்கவில்லை, உட்காருங்களென்றும் சொல்லவில்லை.
அவர் இப்போது எதற்கு வந்திருப்பாரென்றும் அவனுக்குத் தெரியும். அவரே சொல்லட்டுமென்று அமைதி காத்தான்.
“இதோடு நிறுத்திக்கோ ஏ.டி. இனி என் வழியில் குறுக்க வராதே.” அவர் வந்த காரணத்தை நேரடியாக சொல்லியும் விட்டார். ஏ.டி’யிடத்தில் சிறு பிரதிபலிப்பும் இல்லை. அவரை பார்த்தது பார்த்தபடியே இருந்தான்.
“உன் மௌனத்தை நான் சம்மதமென்று எடுத்துக்கொள்ளவா?”
“ஹா…ஹா…ஹா…” அடக்கமாட்டாது எழுந்து நின்று சிரித்த ஏ.டி,
“நானா யார் வம்புக்கு போறதில்லை விச்சு” என்றான்.
“ஆனால், என்னை சீண்டி வர யாரையும் நான் சும்மா விடுவதுமில்லை.” அவரை அழுத்தமாக பார்த்துக்கொண்டே கூறினான்.
“ஏ.டி.” விஸ்வநாதன் ஆத்திரத்தில் பற்களை கடித்தார்.
“எஸ், நானே.” ஏ.டி’யிடத்தில் வழக்கமான கிண்டல்.
“உன்னை இப்படியெல்லாம் செய்ய சொல்றது ஆர்.கே தானே! அவனால் என்னை அசைக்க முடியலன்னு உன்னை வச்சு விளையாடுறானா?”
“ஆர்.கே? குட் ஜோக்” என்ற ஏ.டி, “நீங்க இந்த நிலையில் இருக்க காரணமே அவர் தான். அவர் நினைத்திருந்தால் அவரைவிட்டு நீங்க பிரிந்தபோதே உங்களை ஒன்றுமில்லாமல் அவரால் செய்திருக்க முடியும். நான் வரும் வரை அவர் காத்திருக்க வேண்டிய அவசியமேயில்லை” என்றான்.
ஏ.டி சொல்வதிலுள்ள உண்மை விஸ்வநாதனுக்கும் புரியத்தான் செய்தது. ஆனால் தனது ஆத்திரத்தை காட்ட முடியாத தன்னுடைய இயலாமையில் என்ன பேசுகிறோமென்று தெரியாது பேசிவிட்டார். ஆர்.கே விட்டுக்கொடுத்த இடம் தான் தனக்கென்று அவருக்கு நன்றாகத் தெரியுமே!
“எனக்கு புரியாதது ஒன்றே ஒன்று தான் விச்சு… தன்னுடைய எதிரி யாராக இருந்தாலும் அசராது எதிர்த்து நிற்பவர், நீ செய்த வேலைக்கு உன்னை ஒன்றும் செய்யாது எப்படி விட்டார். அதையும் கண்டுபிடிக்கிறேன்.” தீவிரத்துடன் யோசனை பாவனையில் ஏ.டி.
ஏ.டி’யின் பேச்சில் பதட்டம் கொண்டாலும் உடனடியாக சுதாரித்துக்கொண்ட விஸ்வநாதன், “என்கிட்ட மோதினால் தோல்விதான்னு அவனுக்கு தெரிஞ்சிருக்கு அதான்” என்று திமிராகக் கூறினார்.
அவ்வாறு சொல்லிய விஸ்வநாதனை இதழ் சுளித்து பார்த்த ஏ.டி, “எப்படி தொடர்ந்து நான்கு முறை என்னிடம் தோத்துப்போயிட்டே இருக்கீங்களே அப்படியா?” எனக் கேட்டான்.
“ஏ.டி.”
“சும்மா எதுக்கு விச்சு என் பேரை ஏலம் போடுற… போ உனக்காக அந்த முன்னால் அமைச்சர் வெயிட்டிங் ஓடு ஓடு” என்றான்.
அமைச்சரென்றதும், அவரை எப்படி சமாளிப்பதென்று விஸ்வநாதனுக்கு மலைப்பாக வந்தது. எப்படியும் ரித்தேஷ் விடுதலையாகி விடுவான் என்கிற நம்பிக்கையில் பல லட்சங்கள் அமைச்சரிடமிருந்து வாங்கியிருந்தார். இப்போது அதில் ஏ.டி’யிடம் தோற்றுப்போனதோடு, பணமும் கைவிட்டு போகப்போகிறதே என்று ஆத்திரம் எழ ஏ.டி’யை முறைத்து பார்த்தார்.
‘உன் பார்வையெல்லாம் என்னை ஒன்றும் செய்திட முடியாது’ என்று பதில் பார்வை பார்த்து கம்பீரமாக நின்றான் ஏ.டி.
“உன் வயசு என் அனுபவம் டா… யானைக்கும் அடி சறுக்கும்.”
“அது யானைக்குத்தான் விச்சு… இது ஏ.டி… ஆதி தேவ்” என்று தன் முழு உயரத்திற்கு நிமிர்ந்து நின்று கூறியவன், “நான் எப்போதும் முன் வைத்த காலை பின் வைத்ததில்லை. இனி என்னுடைய அடி எப்போதும் உனக்கு முன்னால் தான்” என்று வாயிலை நோக்கி செல்லுமாறு கை காண்பித்தான்.
“ஆர்.கே’வையே முடக்கிப்போட்ட எனக்கு நீயெல்லாம் சாதரணம்டா!”
“அப்புறம் எதுக்கு என்னை விட்டுடுன்னு என்கிட்ட வந்து கெஞ்சிட்டு இருக்க!” ஏ.டி’யின் குரலில் முழுக்க முழுக்க நக்கல் மட்டுமே.
“ஏ.டி.”
“ச்சூ… சும்மா சவுண்ட் விட்டுட்டு, கிளம்புங்க விச்சு” என்றவன் காதில் சுண்டு விரலை விட்டு ஆட்டினான்.
‘இவனை அழித்தே தீர வேண்டும்’ என்கிற வெறியுடன் அங்கிருந்து வெளியேறினார் விஸ்வநாதன்.
ராகவிடம், “என்கிட்ட கொஞ்சம் அவனை அடக்கியே வாசிக்க சொல்லு” என்று எச்சரித்துவிட்டே சென்றார்.
Epi 12
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
35
+1
1
+1
1 Comment