Loading

அத்தியாயம் 10 :

நீதிமன்ற வளாகத்தில் ஆதியின் கார் நுழைந்தது. அதுவரை ஆதியாக இருந்தவன் ஏ.டி’யாக மாறியிருந்தான். அது அவனின் உடல்மொழியிலும் பிரதிபலித்தது.

விறைத்து நின்ற அவனின் புஜத்தில் கரம் பதித்திருந்த நிரலி மாற்றம் உணர்ந்து அவனிடமிருந்து விலகினாள்.

இளகியிருந்த முகம் கடுமையை பூசிக்கொண்டது. வண்டியை அதற்குரிய இடத்தில் நிறுத்தியவன், முட்டிவரை மடக்கியிருந்த சட்டையின் கையை நீவிவிட்டு பொத்தானை அணிவித்தான். கண்களில் கூர்மையை படரவிட்டு ரேபானை அணிந்தவாறு தோரணையாக காரிலிருந்து இறங்கினான்.

கணவனின் செய்கைகளை ரசித்தாலும், ஆதியாக மட்டுமே அவனை அறிந்தவள்… இந்த ஏ.டி’யின் உயரம் தெரியாது, ‘ஓவர் பில்டப்பா இருக்கே’ என்று சொல்லிக்கொண்டாள். அவளிடத்தில் மென்னகை.

“இறங்கு பேபி.”

அந்த இறுக்கத்திலும் அவளிடம் மென்மையாக மொழிந்தான்.

அவனின் அழைப்பில் இறங்கியவள், பரந்து விரிந்து, அந்நேரத்திலும் பரபரப்பாக காட்சியளித்த உயர் நீதிமன்ற வளாகத்தை பிரம்மிப்போடு பார்த்தாள்.

தன்னோடு வருமாறு கண்கள் மொழி பேசியவன், நீண்ட எட்டுக்கள் வைத்து அவ்வளாகத்திலேயே இருக்கும் தனது அலுவலக அறையான சேம்பர் நோக்கி கம்பீரமாக நடந்தான்.

எதிரில் பட்ட அனைவரையும் தோரணையாக கடந்து சென்றான். தன்னை பார்த்து காலை வணக்கம் சொல்லியவர்களுக்கு சிறு தலையசைப்பு மட்டுமே.

‘இவுக இங்கு கெத்து போல.’ மனதில் நினைத்தவள் அவனுக்கு பின்னால் ஓட்டமும் நடையுமாகச் சென்றாள்.

அலுவலக அறைக்குள் ஏ.டி நுழைந்ததும் அங்கிருந்த வட்ட வடிவ மேசையில் அமர்ந்து கோப்புகளை பார்த்துக்கொண்டிருந்த ராகவ் வேகமாக எழுந்து காலை வணக்கம் சொல்ல… புன்னகையுடன் ஏற்றான்.

“ராகவ்… ஷீ இஸ் நிரலி. ட்ரெயின் ஹெர் அண்ட் டீச் ஹௌ டூ டேக் நோட்ஸ்” என்ற ஏ.டி கைகடிகாரத்தில் மணியை பார்த்தவனாக அவ்வறையில் தடுப்பினை தாண்டியிருக்கும் தனது அறை மேசைக்கு சென்று ஒரு கோப்பினை கையில் எடுத்தவன்,

“இன்னைக்கு விச்சுவை ஒரு கை பார்த்துட்டு வரேன்” எனக்கூறிச் சென்றான்.

“ஆல் தி பெஸ்ட் சீனியர்.” ராகவின் வாழ்த்து காற்றில் தான் கலந்தது. அவ்வளவு வேகத்தில் ஏ.டி சென்றிருந்தான்.

“அந்த மனுஷனை கோபப்படுத்தி பாக்குறதுல எம்புட்டு சந்தோஷம்.” ராகவ் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, சென்ற வேகத்தில் திரும்பி வந்த ஏ.டி… “அதென்ன மாயமோ தெரியலடா… விச்சுவை வச்சு செய்யுறதுல ஒரே குஷி தான்” சொல்லியவன்,

“பேபி” என்று நிரலியின் அருகில் சென்று, “இவன் ராகவ்… எனக்கிருக்கும் ஒரே நல்ல பிரண்ட். பட் என் ஜூனியர், உனக்கு ஏதாவது தேவைன்னா அவன்கிட்ட சொல்லு. எனக்கொரு கேஸ் இருக்கு முடிச்சிட்டு வரேன்” என படபடவென சொல்லி புயலென மறைந்திருந்தான்.

ஆதியின் பேபி என்ற விளிப்பிலே நிரலி யார் என்பதை ராகவ் யூகித்திருந்தான்.

“வாம்மா உட்கார்.”

ராகவ் சொல்லியதும் அவனுக்கு எதிரிலிருந்த இருக்கையில் அமர்ந்த நிரலி…

“இந்த ஆபிஸ் அவரோடதா அண்ணா?” எனக் கேட்டாள்.

“ம்… ஆமாம்மா.”

“நீங்க ரெண்டு பேரு தான் இருக்கீங்களா? அவரோட சீனியர் எங்க? மாமா கேஸ் ஆர்க்யூலாம் பண்ணுவாரா?”

கேப் விடாது, நிரலி கேட்ட கேள்விகளிலேயே அவளுக்கு ஆதியின் பணிப்பற்றி ஒன்றும் தெரியவில்லை என்று கண்டுகொண்ட ராகவ், அவளுக்கேற்ற பதிலை சொல்லி தற்போது தான் பார்த்துக்கொண்டிருக்கும் வழக்கு அடங்கிய கோப்பினை அவளிடம் கொடுத்து படித்ததோடு என்ன புரிகிறது என்பதை குறிப்பெடுக்கக் கூறினான். நிரலியின் கவனமும் முழுதாக அதில் சென்றது.

ராகவும் ஏ.டி ஆராய சொல்லி ஏற்கனவே கொடுத்திருந்த மற்றொரு வழக்குடன் போராட ஆரம்பித்தான்.

****

“கேஸ் எத்தனை மணிக்கு?”

“முதல் கேஸே நம்மோடது தான் சார்.”

“ஆபோஸிட் லாயர் யார்?”

“நான்தான் விச்சு.”

தன் ஜூனியரிடம் விஸ்வநாதன் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தவனாக, அதிரடியாக அவரின் அலுவலக அறைக்குள் நுழைந்தான் ஏ.டி.

“என்ன விச்சு டைம் ஆச்சு… இன்னும் இங்கவே நின்னு உன் ஜூனியர்ஸ் கிட்ட கடலை போட்டுட்டு இருக்க.

வா… வா… அங்க ஜட்ஜ் நமக்காக வெயிட்டிங்” என்றதோடு அவரை கையை பிடித்து விசாரணை அறை நோக்கி இழுத்துச் சென்றான்.

அவனின் செய்கையை தடுக்க முடியாது நொந்து கொண்ட விஸ்வநாதன், ஏ.டி’யின் இழுப்பிற்கு சென்றார்.

உள்ளே செல்வதற்கு முன், “விஸ்வநாதனின் கையில் விக்ஸ் மிட்டாயினை திணித்தவன், “இதை சாப்பிடு விச்சு… அப்போதான் ஆர்க்யூ பண்ணும்போது எந்த தடங்கலும் வராது” என்றான். அவரால் அவனை முறைக்க மட்டும்தான் முடிந்தது.

அவர்கள் சென்று தத்தம் இருக்கைகளில் அமர ஐந்து நிமிடத்திற்கு பிறகு நீதிபதி வந்தார். வழக்கு விசாரணையை துவங்க நீதிபதி அனுமதி அளித்ததும் தனது கருப்பு அங்கியை சரிசெய்தபடி எழுந்த விஸ்வநாதன், ஏ.டி’யை பார்த்து நக்கலாக சிரித்துவிட்டு தன் வாதத்தை முன் வைத்தார்.

வழக்கின் சாராம்சம் இதுதான்,

முன்னாள் அமைச்சரின் மருமகள் மூன்று மாதத்திற்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதில், அப்பெண்ணின் பெற்றோர்கள் தங்களின் மகளின் இறப்பில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதோடு, எங்கள் மகளை கொன்றது அமைச்சரின் மகன் ரித்தேஷ் தான்… அதாவது கணவனே மனைவியை கொன்றிருப்பதாக வழக்கு பதிந்திருந்தனர்.

அப்பெண்ணின் மரணம் கொலை அல்ல தற்கொலை தான், இதில் ரித்தேஷ் நிரபராதி என்று விஸ்வநாதன் வாதிடுகிறார்.

இரண்டு முறை வழக்கு விசாரணை நடைபெற்றிருக்க… மூன்றாவது முறை ஏ.டி களமிறங்குவான் என்று விஸ்வநாதனே எதிர்பார்க்கவில்லை. கடந்த இருமுறையும் எதிர் தரப்பு வக்கீலை சரிகட்டி ரித்தேஷ் நிரபராதி எனும் விதமாக வழக்கை நகர்த்தியிருக்க… இன்று எப்படியும் இவ்வழக்கிலிருந்து ரித்தேஷ் விடுதலையாகிவிடுவான், தனக்கு கொள்ளை லாபம் என்ற விஸ்வநாதனின் ஆசையில் மண்ணள்ளி போட்டாவனாக ஏ.டி ஆஜராகினான்.

இருப்பினும் கடைசி நேரத்தில் உன்னால் ஒன்றும் செய்துவிட முடியாது என்கிற அசட்டு துணிச்சலில் இருந்தார் விஸ்வநாதன்.

அப்பெண் இறந்த அன்று  ரித்தேஷ் ஊரிலேயே இல்லை என்பது தான் விஸ்வநாதனின் வாதம். அதற்கேற்றவாறு அச்சமயம் ரித்தேஷ் வெளிநாட்டில் இருந்ததற்கான, வானூர்தி சீட்டினை சென்ற விசாரணையில் சமர்ப்பித்ததாகக் கூறிய விஸ்வநாதன், “தனது கட்சிக்காரர் குற்றமற்றவர்” என்று தீர்ப்பளிக்குமாறு கூறி தனதிடத்தில் அமர்ந்தார்.

ஏ.டி’யை நோக்கி மிதப்பான பார்வையை வேறு வீசினார்.

“எதிர்தரப்பு தங்கள் வாதத்தை முன் வைக்கலாம்.”

நீதிபதி சொல்லியதும் எவ்வித அலட்டலுமின்றி தனது இருக்கையிலிருந்து எழுந்த ஏ.டி நடுநாயகமாக நின்றான்.

“வழக்கு முடிந்தே விட்டது… இன்னும் இதில் விசாரணை செய்ய என்னயிருக்கு, நேரடியாக தீர்ப்பு வழங்கிவிடலாமே!”

நீதிபதியிடம் தன் கருத்தை முன் வைத்தார் விஸ்வநாதன்.

“வழக்கு விசாரணை முடிஞ்சுதா இல்லையான்னு உங்களுக்கு ஆபோஸிட்டில் நிற்கும் நான் சொல்ல வேண்டும்” என்று விஸ்வநாதனை பார்த்து சொல்லிய ஏ.டி…

“இந்த வழக்கு இப்போது தான் உண்மையான விசாரணையை சந்திக்க போகிறது மை லார்ட்” என நீதிபதியை பார்த்து மொழிந்தான்.

“யூ கேன் ப்ரோஸீட் மிஸ்டர்.ஏ.டி.”

“முதலில் இவ்வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட ரித்தேஷை விசாரணை செய்ய அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.”

நீதிபதியின் அனுமதியில் ரித்தேஷின் பெயர் அழைக்கப்பட கூண்டில் ஏறினான் ரித்தேஷ்.

“உங்க பெயர் என்ன?”

“என் பெயரே தெரியாமல் தான் கேஸ் எடுத்தீங்களா?” விஸ்வநாதனுக்கு ஏ.டி’யை எப்படியாவது மட்டம் தட்டும் எண்ணம்.

அதனை கண்டுகொண்ட ஏ.டி சிறு முறுவலுடன்,

“இது விசாரணையில் அடிப்படையான விடயம். இது கூட தி கிரேட் விஸ்வநாதன் சாருக்கு தெரியலையே!” ஆதியின் குரலில் அப்பட்டமான கேலி. அதில் முகம் கடுகடுக்க அமர்ந்தார் விஸ்வநாதன்.

விஸ்வநாதனிடமிருந்து தன் பார்வையை ரித்தேஷின் மீது ஏ.டி பதிக்க… அவனின் கூர்மையான விழிகளுக்கு கட்டுப்பட்டவன் போல் தனது பெயரை கூறினான்.

“ரித்தேஷ்.”

அதன் பிறகு நடந்ததெல்லாம் ரித்தேஷ் தான் கொலையாளி என்பதற்கான உண்மை விசாரணை.

ரித்தேஷ், அவனின் மனைவி மித்ரா இருவரும் காதலித்து மணம் முடித்தவர்கள். ரித்தேஷ் மித்ராவின் அழகுக்காக மட்டுமே காதலித்தான். தந்தை தங்களுக்கு சமமாக மித்ராவின் குடும்பமில்லையென எவ்வளவோ வாதிட்டும், மித்ராவின் அழகு அவனை ஆட்டி வைத்தது. தந்தையை எதிர்த்து மணம் முடிக்க ரித்தேஷ் தயாராக இருக்க, அவனின் செயல் அரசியலில் தனக்கு தலைகுனிவாகிடக் கூடாதென்று தானே ஏற்பாடு செய்து திருமணம் செய்து வைத்தார்.

ஆசை அறுபது நாள் என்பது ரித்தேஷ் விடயத்தில் உண்மையானது. அமைச்சரும் மகனுக்கு, மித்ராவின் வசதியை வைத்து தூபம் போட அது நன்கு வேலை செய்தது. மேலும் பெரும் தொழிலதிபர் ஒருவரின் மகளை ரித்தேஷிற்கு மணம் முடிக்க அசைப்பட்டதாகக் கூறி, அப்பெண்ணின் புகைப்படத்தை காண்பிக்க, அப்பெண்ணின் செயற்கை அழகு முன்பு மித்ராவின் இயற்கையான அழகு காணாமல் போனது.

மித்ராவிடம் ரித்தேஷ் விவாகரத்து கேட்க, அதற்கு அவள் முடியாதென மறுக்க, ரித்தேஷ் தனது சுயரூபத்தை காட்ட ஆரம்பித்தான். நிறைய வலிகளை தாங்கிய போதும், அவள் கொண்ட உண்மை காதலால் கணவனை பிரிய அப்பேதைக்கு மனமில்லை. ஆதாலால் அவனின் அனைத்து இன்னல்களையும் தாங்கிக்கொண்டு அவனுடன் இருந்தாள்.

மித்ரா இறந்த அன்று, தந்தை சொல்லிய பெண்ணின் பிறந்தாள் பார்ட்டியில் கலந்துகொள்ள சென்ற ரித்தேஷ் அவளின் மீது முழு பித்தாக, அப்பெண்ணோ… அவனிடமிருக்கும் சொத்துக்கு ஆசைப்பட்டு மணம் முடிக்க சம்மதம் தெரிவித்திருந்தாலும், உன் மனைவியிடம் விவாகரத்து வாங்கிவா என்று சொல்லிவிட… அவனின் நிலை கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்றானது.

மூச்சு முட்டும் அளவிற்கு குடித்தவன் நள்ளிரவிற்கு மேல் வீட்டிற்கு வந்து சேர்ந்தான். ஆழ்ந்த உறக்கத்தின் பிடியிலிருந்த மித்ராவின் மீது கோபம் பொங்க… உறங்குபவளை போர்வையோடு இழுத்து கீழே தள்ளினான். அரண்டு மிரண்டு எழுந்து அமர்ந்தவளை என்ன காரணமென்று சொல்லாது வெறி அடங்குமட்டும் அடித்தவன், போதை தலைக்கேறிய நிலையில் அவளின் கழுத்தில் தனது ஷூ காலை வைத்து மிதித்தான். மித்ராவின் திமிறல், கதறல், துடிதுடிப்பு  எதுவும் அவனின் கருத்தில் படவில்லை. இறுதியில் மித்ரா இறந்தே போனாள்.

ரித்தேஷ் பயத்தில் தந்தையிடம் சொல்ல, அவர் உடனடி திட்டமாக மித்ராவை கயிறு கட்டி தொங்கவிட்டு, தற்கொலை செய்துகொள்ள தூக்கிட்டு கொண்டதாக அனைவரையும் நம்ப வைத்தார். வெளியில் மகனை மறைத்து வைத்தவர், சரியாக மித்ராவின் உடல் தூக்கும் சமயம் வெளிநாட்டிலிருந்து ரித்தேஷ் வருவதைப்போல் ஜோடித்தார்.

பொய்யாக ஏற்பாடு செய்யப்பட்ட வெளிநாட்டு பயணச்சீட்டு, ஏற்கனவே வெளிநாட்டில் அவன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வைத்து அன்றைய தினம் அவன் ஊரிலேயே இல்லையென விஸ்வநாதன் வாதிட்டிருக்க,

அன்றிரவு அவன் பார்ட்டியில் எடுத்த புகைப்படங்கள், நள்ளிரவில் குறிப்பிட்ட சிக்னலில் ரித்தேஷின் கார் சென்றதற்கான சிசிடிவி பதிவு, மற்றும் ஒரு பதிவில் கார் சன்னல் திறந்திருக்க, அவனின் பக்கவாட்டு தோற்றம் நன்றாக தெரியுமாறு இருக்க… அதுமட்டுமில்லாது விஸ்வநாதன் சமர்ப்பித்த புகைப்படம் ஒன்றில் ரித்தேஷின் கையிலிருந்த உயர்ரக கை கடிகாரத்தில் அவன் புகைப்படம் எடுத்துக்கொண்ட தினத்தின் தேதி பதிவாகியிருக்க அதனையும் சுட்டிக்காட்டி அன்றைய தினத்தில் ரித்தேஷ் இங்கு தான் இருந்தான் என்பதை ஊர்ஜிதப்படுத்தினான் ஏ.டி.

அதிலேயே விஸ்வநாதனுக்கு வியர்த்து வழிந்தது. நடுங்கும் கையோடு கைக்குட்டை கொண்டு முகத்தை துடைத்துக்கொண்டார்.

அதுமட்டுமில்லாமல், காலினாலோ அல்லது கையினாலோ கழுத்தில் ஏற்பட்ட அழுத்ததாலே மித்ராவின் உயிர் பிரிந்தது. உண்மையான ஆய்வு அறிக்கை சமர்ப்பித்து… உடற்கூறு ஆய்வில் கயிறு கொண்டு கழுத்தை இறுக்கியதாலே மித்ராவின் உயிர் பிரிந்ததென்று விஸ்வநாதனால் பொய்யாக தாயார் செய்யப்பட்ட அறிக்கையையும் பொய்யென்று ஏ.டி நிருபித்தான்.

அதோடு, ரித்தேஷ் மித்ராவை அடித்து துன்புறுத்திய போது… அவனை தடுக்க மித்ரா தன் நகம் கொண்டு அவனை கீற… அவளின் நக இடுக்குகளில் ரித்தேஷின் சதை சிறு அளவிற்கு சிக்கியிருந்தது. அதனை வைத்து, அது ரித்தேஷினுடையது தான் என்பதற்கான டி.என்.ஏ அறிக்கையையும் முன் வைத்தான். அதில் மித்ராவின் உடலில் ஏற்பட்ட காயத்தின் நேரமும், ரித்தேஷின் சதை கிழிந்த நேரமும் ஒன்றாக இருப்பதை மேற்கோள்காட்டினான்.

இதில் மொத்தமாக விஸ்வநாதனின் முகம் தொங்கிவிட்டது.

ஏ.டி’யின் வாதம் மற்றும் ஆதாரங்கள் அனைத்தையும் வைத்து, ரித்தேஷ் தான் கொலையாளி என்பது ஊர்ஜிதமாகியது. நீதிபதி அவனின் கொலை செயலுக்கு தகுந்த தண்டனை அளிக்க… ரித்தேஷ் சிறையில் அடைப்பட்டான்.

தொடர்ந்து நான்காவது முறையாக ஏ.டி’யிடம் தோற்றுப் போய் நின்றார் தி கிரேட் விஸ்வநாதன்.

நீதிபதி அங்கிருந்து சென்றதும், தலைக்கு மேல் கைகளை உயர்த்தி சோம்பல் முறித்த ஏ.டி… “இந்த கேஸில் உன்னை ஜெயிக்கணுங்கிறதுக்காக ஆதாரங்கள் திரட்ட ரொம்ப அலைஞ்சதுல அம் வெரி டயர்ட் விச்சு… இன்னொரு கேஸில் பார்க்கலாம். வரட்டா!” என்று கண்ணடித்தவாறு கூறி, அவன் வார்த்தையில் சொல்லிய சோர்வு சிறிதுமின்றி துள்ளலுடன் நடந்து சென்றான்.

****

எவ்வளவு நேரம் தான் கோப்பிற்குள் தலையை விட்டுக்கொண்டு இருப்பது. நிரலி மெல்ல நிமிர்ந்து பார்க்க, ராகவ் தீவிரமாக ஏதோ எழுதிக் கொண்டிருந்தான்.

‘இவரு நிஜமாவே வக்கீலு போல’ என மனதோடு சொல்லிக்கொண்டவள்,

“கடைசியில் என்னையும் வக்கீல் வேலை பார்க்க வச்சிட்டியே கணேஷா” என்று மேல்நோக்கி புலம்ப… அவளின் வார்த்தைகளில் சிரித்துக்கொண்டே நிமிர்ந்தான் ராகவ்.

“இப்போ எதுக்குண்ணே சிரிக்குறீங்க?” மென் சிணுங்கலுடன் கேட்டாள்.

“சீனியர்க்கு மனைவியா இருந்துட்டு… ஒரு கேஸ் பைல் படிக்க இவ்வளவு புலம்புறீங்களே!”

“உங்க சீனியருன்னா அம்புட்டு பெரிய ஆளா என்ன… போங்கண்ணே நானே என்னை கூட்டிட்டு வந்து இங்க உட்கார வச்சிட்டாரேன்னு கடுப்புல இருக்கேன்.”

“பிராக்டிஸ் பண்ண விருப்பமில்லாமலா லா படிச்சீங்க?”

“மாமா லா படிச்சாரேன்னு தான் நானும் லா படிச்சேன். சின்ன வயசுல இருந்தே அவரு என்ன பண்ணாலும் அதை தான் நானும் சூர்யாவும் பண்ணுவோம். கடைசியில் சூர்யா வேணான்னு சொல்றதை கேட்காமல் இதை படிச்சேன். இப்போ இங்க வந்து உட்கார்ந்திருக்கேன். இ.பி.கோ, கொலை, கொள்ளைன்னு படிக்கவே ஒரு மாதிரி இருக்குண்ணா.” அவளின் முகச்சுளிப்பில் ராகவிற்கே தான் விரும்பி படித்த படிப்பில் சில நொடி விருப்பமின்மை தோன்றி மறைந்தது.

“ஆமா யாரந்த மாமா?”

“உங்க சீனியர் தான்.”

நிரலி சொல்லவும், அங்கு ஒருவன் ஓடி வந்தான். அவன் விஸ்வநாதனிடம் ஜூனியராக பணிபுரியும் ராகவின் நண்பன் வினோத். அவன் நிரலியை கவனிக்கவில்லை.

ராகவின் அருகில் வந்தவன், “அந்த ஏ.டி என்ன மனுஷன்டா… என்னையும் அவர்கிட்ட ஜூனியரா சேர்த்து விடுடா” என்றவன் ராகவை பேசவிடாது தானே தொடர்ந்து பேசினான்.

“மித்ரா கொலை வழக்கில் ரித்தேஷ் குற்றவாளி இல்லைன்னு போன ஹியரிங்கிலே விஸ்வநாதன் சார் ப்ரூஃப் பண்ணிட்டாரு. இன்னைக்கு வெறும் தீர்ப்பு மட்டுந்தான்னு நினைச்சு வந்தால்… ஆட்டத்தையே மாத்திட்டாரு ஏ.டி. என்னவொரு ஆர்க்யூ தெரியுமா? ஆமா நீயேன் வரல?”

கேள்வி கேட்டவன் பதிலெல்லாம் எதிர் பார்க்கவில்லை.

“சும்மா சொல்லக்கூடாது ராகவ். விஸ்வநாதன் சாருக்கே வியர்க்க வச்சிட்டாரு மனுஷன். ஆட்டம் முடிவில் கூட திருப்பத்தை கொண்டு வர ஏ.டி’யால் தான் முடியும்.

விஸ்வநாதன் சார் சப்மிட் பண்ண அத்தனை ஆதாரத்தையும் தூக்கி சாப்பிட்டார் ஏ.டி. சான்ஸே இல்லை, மனுஷன் லாவை கரைச்சி குடிச்சிருக்காரு.”

ஏ.டி’யின் விவாதத்தை அருகிலிருந்து பார்த்த வினோத் அதனை சிலாகித்து சொல்ல… ராகவ் அமைதியாகக் கேட்டிருந்தான்.

‘இந்த ஏ.டி ரொம்ப பெரிய லாயர் போல’ என நினைத்தவள், ‘காலையில் மாமா கூட, இனி நீ ஏ.டி’யோட ஜூனியர்ன்னு தான சொன்னாரு’ என்று மூளையை தட்டிக் கொண்டிருந்தாள்.

வினோத்தும் தான் வந்த வேலை முடிந்ததென்று கிளம்பியிருந்தான்.

“நிரலி.”

அவள் எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்க ராகவ் சத்தமாக அழைத்தான்.

“ஆங்… அண்ணா!”

“அப்படியென்ன யோசனை?”

“நாம ஏ.டி’கிட்ட தான் வொர்க் பண்றோமா?” எனக் கேட்டாள்.

அவளின் கேள்வியில் வந்த சிரிப்பை வாய்க்குள்ளே மறைத்தவன், ஆமாம் எனும் விதமாக தலையசைத்து… “நீ ரொம்ப அப்பாவியா இருக்கம்மா” என்றான்.

அவனின் பேச்சு புரியாது அவள் விழிக்க, “சரி வா கேன்டின் போயிட்டு ஒரு டீ குடிச்சிட்டு வருவோம்” என்று அவளை அழைக்க,

“அப்படியே எனக்கு கோர்ட் ஃபுல்லா சுத்திக்காட்டுங்கண்ணா” என்றாள் நிரலி.

“கொலை செய்றவன், கொள்ளையடிக்குறவன்னு தப்பு செய்யுறவனுவ சுத்துற இடத்தை ஏதோ டூரிஸ்ட் பிளேஸ் மாதிரி சுத்திக்காட்ட சொல்லுற” என்று சிரித்தான் ராகவ்.

அவள் வார்த்தைக்கு வார்த்தை அண்ணா என்று அழைக்கவும், அவளை மரியாதை பண்புடன் விளித்து விலக்கி வைக்க அவனுக்கு மனம் வரவில்லை. உறவென்று இல்லாத அவனுக்கு அண்ணா என்ற ஒற்றை அழைப்பில் தங்கை பாசத்தை தானறியாது வழங்கிக் கொண்டிருந்தாள்.

இவர்கள் இருவரும் கேன்ட்டின் வர… வரும் வழி முழுக்க, ஏ.டி’யின் பேச்சு தான். மித்ரா வழக்கையே புரட்டி போட்டிருந்த அவனின் திறமையை அனைவரும் சிலாகித்து பேசியபடி இருந்தனர். அன்றைய நாளின் சிம்மம் ஆதிதேவ்.

இன்னும் சில மணி நேரத்திற்கு இங்கு இருப்பவர்கள் அனைவரும் ஏ.டி’யை பற்றித்தான் பேசிக்கொண்டிருப்பர் என்று பல நாள் வழக்கத்தில் ராகவ் அமைதியாக கடக்க, நிரலி நின்று நிதானமாக அனைத்தையும் உள்வாங்கியபடி நடந்தாள்.

கேன்ட்டின் வந்து அமர்ந்த பிறகும் ராகவின் அருகில் இருவர் வந்து ஏ.டி’யின் இன்றைய ஆர்க்யூ பற்றி பேசிச்செல்ல நிரலி பொறுமை இழந்தாள்.

“யாருண்ணா அந்த ஏ.டி… எனக்கே பார்க்கணும் போலிருக்கே?”

அவள் கேட்ட விதத்தில் ராகவ் குடித்துக் கொண்டிருந்த தேநீர் புரையேறியது.

“இதை நீ சீனியர்கிட்டவே கேளும்மா” என்றவன் ஏ.டி யாரென்பதை அவள் பலமுறை பல விதத்தில் கேட்டும் சொல்லவில்லை.

 

Epi 11

ஏந்திழையின் ரட்சகன் 11

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
10
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments