Loading

அத்தியாயம் 1 :

என்னை உனக்குள் தொலைத்தேன்
ஏனோ தெரியலை
உன்னை கண்ட நொடி ஏனோ இன்னும் நகரல
உந்தன் ரசிகையே நானும் உனக்கேன் புரியவில்லை…!

****

நான்கு வருடங்களுக்கு முன்பு, 

முகிலவள் உறங்க ஆயத்தமாகும் விடிவெள்ளி. ஆதவன் தன் தங்க நிற கரங்களை மெல்ல விரிக்கும் அழகிய அதிகாலை பொழுது. 

பறவைகள் கூட்டம் கூட்டமாக எங்கோ பறந்து செல்லும் இளங்காலை வானினை, தன் சிறு மலையடி கிராமத்தை சுற்றி ஓடும் ஆற்றின் கரையோரம் நின்று முகம் உயர்த்தி கீழாநெல்லி கண்களால் பார்த்திருந்தவள், அந்நேரத்திலேயே தலைக்கு தண்ணீர் ஊற்றி… ஈரக்கூந்தலை அடியில் முடி போட்டிருந்தாள். ஒரு முறையேனும் திரும்பி பார்க்கத் தூண்டும் மஞ்சள் முகம்.

அழகிய விடியல் பொழுதை ரசிக்கும் மனநிலையில் அவள் இல்லை என்பதை அவளின் ஒளி குன்றிய கண்கள் பறைசாற்றியது. வதனத்தில் எப்போதும் குடியிருக்கும் புன்னகை இன்று உறைந்திருந்தது.

பார்ப்போருக்கு அவள் வெள்ளி வானை ரசித்திருக்கின்றாள் என்றே தோன்றும். ஆனால் இன்னதென்றே புரியா ஓர் உணர்வு குவியலில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறாள் என்பது அவளின் மனம் மட்டுமே அறிந்த ஒன்று.

கடந்த ஒரு மாதமாகவே அவளின் மனம் அலைப்புற்றுக் கொண்டு தான் இருக்கிறது. ஏன் இப்படியென்றால் அவளிடம் விடையில்லை. ஆராயவும் அவள் முற்படவில்லை. மனதினை அலசிய பின்னர் தெரிய வரும் பதிலை நினைத்து பயந்து அதனை புறம் தள்ளி வைத்திருக்கின்றாள்.

எவ்வளவு நேரம் கரையில் நின்றிருந்தாளோ… வெறிக்கும் பார்வையையும், சிந்தையில் ஓடும் எண்ணங்களையும் ஒதுக்கி வைத்தவள், முயன்று முகத்தில் உற்சாகத்தை வரவழைத்து வந்த வேலையை கவனிக்கலானாள்.

அவள் அப்படித்தான் எப்போதும் வாழ்க்கையை அதன் போக்கில் வாழ ஆசை கொண்டவள். முகத்தில் புன்னகை பூசி வலம் வருபவள். முடிந்ததை எண்ணி வருந்தவும் மாட்டாள், வருவதை நினைத்து கலக்கம் கொள்ளவும் மாட்டாள். நடப்பவை யாவிலும் உள்ள நல்லதை மட்டுமே பார்ப்பவள்.

அப்படிப்பட்டவள் இப்போது, தான் செய்யும் காரியத்தை நினைத்து தனக்குள்ளே ‘நீயா இப்படி?’ என்று தன்னை நினைத்தே சிரித்துக் கொண்டாள். என்ன செய்வது அவளால் இதில் மட்டும் மனதின் உந்துதலிலிருந்து வெளிவர முடியவில்லை. எவ்வளவு கட்டுப்பாடுகள் விதித்தும், மூளையை மீறி இச்செயல் செய்திட அவளின் மனம் இங்கு ஓடி வந்திருக்கிறது.

“ஆண்டவா இந்த பாவத்திலிருந்து நீ தான் என்னை காப்பாற்ற வேண்டும்” என சத்தமாக வேண்டிக் கொண்டவள் சுற்றி யாரேனும் இருக்கின்றனரா என நோட்டமிட்டாள்.

“அதெல்லாம் யாருமில்லை, பாதியில் நிறுத்திய உன் வேண்டுதலை ஆரம்பி… எவ்வளவு நேரம்தான் அந்த வானத்தையே பார்த்திட்டு நின்னுட்டு இருப்ப, கூட ஒரு அப்பாவி ஜீவனை கூட்டிட்டு வந்தியே அந்த ஞாபகம் கொஞ்சமாவது இருக்கா?

நீயும் திரும்புவ திரும்புவன்னு பார்த்தால், உன்னோட நின்னு எனக்கு கால் வலி வந்தது தான் மிட்சம்” என்று அவளிடம் புலம்பிக் கொண்டிருந்தது வேறு யாருமில்லை அவளின்  அண்ணன் சூர்யா. இருவரின் அம்மாக்களும் அக்கா தங்கை.

“என்னைய விட ரெண்டு வருசம் பெரியவன்னு துணைக்கு உன்னை கூட்டிட்டு வந்தேன் பாரு, என்னை சொல்லனும்” எனத் தலையில் தட்டிக் கொண்டவள், சூர்யாவின் கைகளில் குடத்தை கொடுத்து… ஆற்றுப் படியில் தள்ளி விட்டாள்.

“உன் வேண்டுதலுக்கு நான் ஏன் தண்ணீ மோண்டு கொடுக்கணும்” எனக் கேட்டாலும், படிகளில் இறங்கி சுழித்து ஓடும் ஆற்று நீரினை குடத்தில் மோண்டு அவள் சொன்னதை செய்தான்.

“நூற்றி எட்டுக்கு இன்னும் முப்பது குடம் தான் பாக்கி” என்ற சூர்யா, தண்ணீர் நிரப்பிய குடத்தை மேலே உயர்த்தி அவளுக்கு வாகாக கொடுத்தபடி… “இப்போ எதுக்கு பிள்ளையாருக்கு நூற்றி எட்டு குடம் தண்ணீர் லஞ்சம் கொடுத்துட்டு இருக்க?” என்று வினவினான்.

அவனை ஏற இறங்க பார்த்தவள்…

“அது…” என அவனின் காது அருகில் குனிந்து,

“சொல்ல முடியாது போடா” என குடத்தை இடுப்பில் வைத்துக் கொண்டு வேகமாக சென்று விட்டாள்.

பருத்து தடித்து இருந்த அரசமரத்தினை சுற்றி மேடை கட்டி அதன் நடுவில் வைக்கப்பட்டிருந்த கரு நிற பிள்ளையார் சிலைக்கு நீரை ஊற்றியவள் அதே வேகத்தில் வந்து சூர்யாவிடம் குடத்தை தூக்கிப் போட்டாள். குடத்தினை சரியாக பிடித்தவனின் முகம் யோசனையில் இருந்தது.

“என்னடா யோசனை பலமா இருக்கு?”

“அதில்லை காலையிலே அஞ்சு மணிக்கெல்லாம் குளிச்சு, இப்படி பக்தி பழமா வேண்டிக்கிற அளவுக்கு நீ அவ்வளவு நல்லவ(ள்) இல்லையே… நீ இப்படி செய்யும்போது தான் உன்னுடைய வேண்டுதல் என்னான்னு தெரிஞ்சிக்கணும் ஆர்வம் வருது.

சரி, சொல்லு… அப்படி என்ன வேண்டுதல், ஆங்?”

சூர்யா அவளிடம் கேட்டுக் கொண்டிருந்தாலும் கைகள் தானாக ஆற்றில் நீரினை மோண்டு கொடுத்துக் கொண்டிருந்தன.

“இன்னும் பத்து குடம் தாம்லே, ஒழுங்கா சொன்ன வேலையை மட்டும் செய்.”

“பரீட்சையில் ஃபெயிலாயிட்டியோ…! எத்தனை பேப்பர் அரியர்?” சூர்யா அவளிடமிருந்து தனக்கு வேண்டிய பதில் கிடைக்காமல் விடுவதாக இல்லை.

“உனக்கு என்ன வேண்டுதலுன்னு தெரிஞ்சே ஆகணுமா?”

அவள் அவ்வாறு கேட்டதும் ஆர்வமுடன் தலையாட்டினான் சூர்யா.

“மாமாவுக்கும் அக்காக்கும் கல்யாணம் பண்ண பெருசுங்க போட்டிருக்கும் திட்டம் இன்னைக்கு நடக்கயிருக்கும் நிச்சயத்தோடு நின்னுபுடனும்.” அப்பாவியாக முகத்தினை வைத்துக்கொண்டு சொல்லியவள், “அம்புட்டுத்தேன்” என்று குடத்தினை இடையில் வைக்க,

“ஆத்தா ஆள விடு. நீயாச்சு, உன் வேண்டுதலாச்சு… இதுல நானும் உனக்கு உதவியிருக்கன்னு அந்த கெ(கி)ழவிக்கு தெரிஞ்சுது உன்னோட சேர்த்து என்னையும் ஆஞ்சிபுடும் ஆஞ்சி” என்று அலறியவனாக அவளை திரும்பியும் பாராது பின்னங்கால் பிடரியில் பட ஓடினான்.

“நான் ஆத்துல இறங்கினா(ல்) மூழ்கிடுவன்லே, மிட்ச தண்ணியும் மோண்டு கொடுத்துட்டு போலே… டேய் அண்ணா” என அவள் கத்தியதெல்லாம் சூர்யாவின் காதில் விழவேயில்லை.

சூர்யாவோ தனக்கு எதிரே வாட்டசாட்டமாக வந்த இளைஞன் மீது இடித்து கீழே விழுந்தும், அவ்விளைஞனை நிமிர்ந்தும் பாராது எழுந்து ஓடினான். வீடு சென்று தான் அவனின் ஓட்டம் நின்றது.

பின்னே அவன்(சூர்யா) சொல்லிய கிழவியிடம் மாட்டினால் என்ன நிலையாகும் என்று தெரிந்தவனாயிற்றே, அந்த பயம் தான் அவனின் ஓட்டத்திற்கு காரணம்.

மழைக்காலம் என்பதால் அந்த சிறு ஆறு தண்ணீரால் நிரம்பி வழிந்தது. அதன் ஆழம் அதிகம். இறங்கினால் கரையோரமே அவளின் உயரத்திற்கு இடுப்பளவு நனைந்திடுவாள். கரை மோதும் தண்ணீரில் கால் வைக்க பயந்து நின்றிருந்தவள் தன்னை அழைக்கும் குரலில், ஆயிரம் மின்னல்கள் ஒரே நேரத்தில் தாக்கிய உணர்வினை பெற்றாள்.

“நிரலி…” (இவருக்கு நிகர் இவரே வேறொருவரும் இல்லை என்பது பொருள்.)

அவனின் குரலில் அவளின் இதயம் மத்தளம் வாசிக்க… இமைகள் அகல விரிய மெல்ல திரும்பியவள் நீண்ட நாட்களுக்குப் பின் அவனை கண்டதில் இமைக்கவும் மறந்து, உடல் முழுக்க சில்லென்ற உணர்வு பாய அவனின் விழி மீது தன் மீன் விழி பதித்து சிலையென நின்றாள்.

அவன் ஆதிதேவ். ஆறடி இளைஞன். வயது இருபத்தியேழு, ஜூனியர் வழக்கறிஞராக பிரபல வழக்கறிஞர் ராஜ் கிருஷ்ணனிடம் சென்னையில் பணி புரிகிறான். படித்து முடித்ததும் பயிற்சிக்காக அவரிடம் சேர்ந்தான். தன்னிடம் வரும் பாதி வழக்குகளை அவரே மனமுவந்து ஆதியிடம் ஒப்படைக்கும் அளவிற்கு அவன் திறமை வாய்ந்தவனாக இருந்தான். அவன் வழக்குகளை கையாளும் விதத்தினைக் கண்டு கிருஷ்ணனே பலமுறை வியந்து பாராட்டியிருக்கின்றார். 

“நீயே தனியாக அலுவலகம் தொடங்கி வழக்குகளை கையாளலாம்” என்று அவர் பலமுறை சொல்லியும், “இன்னும் கொஞ்ச நாள் உங்களிடம் கற்றுக்கொள்கிறேன்” எனக்கூறி அவரிடமே இருக்கின்றான்.

நிரலியின் உறை நிலையை, ‘தான் திடீரென அழைத்ததில் பயந்துவிட்டாள்’ என்று அர்த்தம் கொண்டவன் அவளின் தோள் தொட்டு உலுக்கினான்.

ஆதியின் தொடுகையில் சுயம் பெற்றவள்,

“எப்போ மாமா வந்தீங்க?” என அவனின் வரவை விசாரித்தாள்.

“இப்போதான் சற்று நேரத்திற்கு முன்பு, பயணத்தின் போதே உறங்கிட்டேன். சரி காத்தாட நடப்போமுன்னு இங்க வந்தா(ல்), கல்லை கண்ட நாய் மாதிரி… எதிரே என் மேல் இடித்தது கூட தெரியாமல், சூர்யா இந்த ஓட்டம் ஓடுறான்” என்று அவள் கேட்ட கேள்விக்கும் சேர்த்து பதில் சொல்லியிருந்தவன் மென் புன்னகையை தன் உதட்டில் படர விட்டான்.

ஆதியின் இதழ் விரிந்த முகத்தினை ரசிக்கத் தூண்டிய மனதை அடக்கியவள், “நல்லாயிருக்கீங்களா மாமா?” என்றாள்.

“பார்த்தா எப்புடி தெரியுது?” எனக் கேட்டவன் தன்னை ஒருமுறைச் சுற்றி தன் முழு உயரத்திற்கு நிமிர்ந்து நின்று, கூர்மையாக வெட்டி விடப்பட்டிருந்த மீசை நுனியை திருகினான்.

மூச்சி விடவும் மறந்து அவனின் தோற்றத்தில் சுற்றுப்புறம் மறந்து அவள் லயித்திருக்க, அவனோ அவளின் பார்வையில் உள்ளுக்குள் குறுகுறுப்பை உணர்ந்தான். முதல் முறையாக ஒரு பெண்ணின் பார்வை தனது மனதை ஈர்க்கும் உணர்வை பெற்றான்.

‘என்ன உணர்வு இது.’ மனதின் நிலை அவனுக்கு விளங்கவில்லை.

நிரலியின் பார்வை வீச்சு உடல் முழுக்க கதகததப்பை ஏற்படுத்த, தலையை உளுக்கி சமன் செய்தவன், அவளின் நிலையை மாற்றும் பொருட்டு…

“இந்நேரத்தில் இங்கென்ன செய்கிறாய்?” என்று வினவினான்.

ஆதியின் கேள்வியில் சட்டென்று பார்வையை மாற்றிக் கொண்டவள், பூக்களை வண்டுக்கள் மொய்ப்பதை போல் அவனையே பார்த்திருந்ததில் ‘அவன் என்ன நினைத்திருப்பானோ’ என லஜ்ஜையுற்று தன்னைத்தானே தலையில் தட்டிக் கொண்டவளாக… 

“ஒரு வேண்டுதல் பிள்ளையாருக்கு தண்ணீர் ஊத்தனும். சூர்யா பக்கி பாதியிலேயே போய்ட்டான். தண்ணீ எப்படி ஆத்துல மோண்டுகிறதுன்னு பார்த்துட்டு இருக்கேன்” என்று பதிலளித்தாள்.

“சரி நான் மோண்டு தரேன் நீ மேலேறு.” 

ஆதி அவ்வாறு சொல்லியதும் மகிழ்ந்த மனதை கொட்டி ‘அவரு கல்யாணத்தை நிறுத்த அவரே உதவி செய்யுறாரே… நன்றி ஆண்டவா’ என இறைவனிடம் மானசீகமாக உரையாடியவள், ஆதி நீர் எடுத்து கொடுக்க மீதமிருந்த எண்ணிக்கையை நிறைவு செய்தாள்.

“அவ்வளவு தானா… போதுமா?”

“போதும் மாமா… நூற்றி எட்டு குடம் தான் முடிஞ்சிது” என்றவள் அரச மரத்தை சுற்றி வந்து பிள்ளையார் முன்பிருந்த விபூதியை எடுத்து தன் நெற்றியில் வைத்ததோடு அனிச்சை செயலாக ஆதியின் நெற்றியிலும் வைத்து விட்டாள்.

ஆதியை தொட்டு வைத்த பிறகே அவன் ‘என்ன சொல்லுவானோ’ என்று பயந்து அவனின் முகம் காண அவன் இவளின் செயலை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. எங்கோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

“நீங்க இப்படியே நடக்கப் போறீங்களா, இல்லை வீட்டுக்கு வாறீங்களா மாமா?” என்றவளிடம் “பாலா வாறேன்னு சொன்னா(ன்) பார்த்துட்டு வாறேன். நீ கிளம்பு” என்றான்.

சரியென தலையாட்டியவள் மெல்ல முன்னோக்கி செல்ல,

“நிரலி இந்த வேண்டுதல் எதுக்கு?” என உரக்கக் கேட்டிருந்தான் ஆதி.

தலையை மட்டும் திருப்பி அவனை பார்த்தவள், இரு கையினாலும் பிடித்திருந்த குடத்தினை ஆட்டிக்கொண்டே… “உங்களை கட்டிக்கிடத்தான்” எனக் கூறினாள்.

ஆதி கேட்டதில் அதிர்ந்தாலும் அவனிடம் பொய் சொல்ல அவளுக்கு வராமல் போக, உண்மையையேக் கூறினாள். ஆனால் அவனோ அதை “அக்கா மகள் தன்னிடம் விளையாட்டாக சொல்லுகிறாள்” என்று நினைத்து,

“அடிங்…க” அடிக்க வருவதைப்போல் பாவனை செய்ய, அவளோ நாக்கினை துருத்தி காட்டிவிட்டு ஓடிவிட்டாள்.

“வாலு.” செல்லும் அவளை பார்த்து முணுமுணுத்தான். ஆதியின் முகம் அந்த ஆதவனுக்கு நிகராய் பிரகசாமாக காட்சியளித்தது.

உற்சாகத்தோடு துள்ளல் நடையுடன் வீட்டிற்குள் நுழைந்தவள், கூடத்தில் அமர்ந்திருந்த தன் கொள்ளு பாட்டி கற்பகத்தைக் கண்டு தன் நடையை மென் அடியாக மாற்றினாள்.

“காலங்காத்தாலே மினுக்கிட்டு எங்கடி போயிட்டு வர?”

அவரின் வெண்கல குரலில் உடல் அதிர நின்றவள், “அது வந்து அம்மத்தா அரசமரத்தடி…” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

“அம்மா நிரலி” என அவளின் தந்தை வேலுமணியின் அழைப்புக் கேட்க

“சரி சரி போ… உன் அப்பன்கிட்ட எதாவது போட்டுக்கொடுத்தேன்னு வைய்யீ” என்று மிரட்டி அனுப்பி வைத்தார்.

“எங்கத்தா இம்புட்டு அவசரமா ஓடுற?”

வேலுமணியின் அழைப்புக் கேட்டு அவரிடம் செல்ல ஓடிய நிரலியினை பாதியில் எதிர்கொண்ட ஆதியின் அன்னை காமாட்சி, (அவளின் பாட்டி) கை பிடித்து நிறுத்திக் கேட்டார்.

“அப்பா கூப்பிட்டாக அம்மச்சி” என்றவளிடம் புது துணியை கொடுத்தவர், “இதை போட்டுக்கிட்டு அக்கா கூடாலே இரு கண்ணு” என்றார்.

“சரிங்க அம்மச்சி” என்றவள் தன் தந்தை இருந்த அறைக்குள் சென்றாள்.

“அம்மத்தா என்னடா கண்ணு கேட்டாங்க?”

எடுத்ததும் அவர் அப்படி கேட்பாரென்று எதிர்பார்க்காதவள் சட்டென்று சமாளிக்கத் தெரியாது திருத்திருத்து நின்றாள். மகளின் செய்கையே அவருக்கு உணர்த்திவிட,

“நீயும் அவுக மகனுக்கு பொறந்த பொண்ணோட பொண்ணு தான். அப்படியிருந்தும், மத்த பேர பிள்ளைககிட்ட காட்டாத கடுமை உன்கிட்ட மட்டும் ஏன்னு தெரியலயே” என்று எப்போதும் சொல்லுவதையே இப்போதும் சொல்லி காரணம் தெரியாது மருகினார்.

அப்போது அறைக்குள் நுழைந்த அவரின் மனைவி செல்வி கணவனின் பேச்சினைக் கேட்டு அதிர்ந்தாலும் தன்னை திடப்படுத்திக் கொண்டார். 

மனைவியின் முகத்தில் கலக்கத்தை கண்டவர், பதினெட்டு வருடமாக
அவரின் கலக்கத்திற்கான காரணம் புரியாது இருக்கிறார். தனது கேள்விக்கான பதில் மனைவியிடம் உள்ளது என்பது அவருக்குத் தெரிந்தும் தானாகக் கேட்டுத் தெரிந்துகொள்ள அவர் விரும்பவில்லை. மனைவியாக சொல்லட்டுமென்று இன்று வரை காத்திருக்கிறார்.

இப்பேச்சு வந்தாலே வேலு மனைவியை அர்த்தமாக பார்ப்பதும், அது தெரிந்தாலும் தெரியாத மாதிரி செல்வி தலை தாழ்ந்து இருப்பதும், எப்போதும் நடப்பதென அறிந்த நிரலி அவர்களை மாற்றும் பொருட்டு…

“விடுங்கப்பா எனக்கு பழகிப்போச்சு, முடிஞ்ச வரை அவுக கண்ணுல படாமல் இருக்கேன்” என்க, மகளின் தலையை ஆதுரமாக தடவிக் கொடுத்தார் அந்த பாசமிகு தந்தை.

கிராமத்திலேயே அவர்களது குடும்பம் தான் பெரிய குடும்பம். பண்ணை அடிப்படையிலும் சரி உறுப்பினர்களின் எண்ணிக்கையிலும் சரி, தலைமுறை தலைமுறையாக ஒரே ஊரில் அருகருகே ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். மனங்களுக்கு நடுவில் சில முரண் பாடுகள் இருந்தாலும் அதனை அன்பினால் அனுசரித்து ஒற்றுமையாக பயணம் கொள்கின்றனர்.

வீட்டின் முதல் மூத்த தலைமுறை தேவநாதன்- கற்பகம். அவர்களுக்கு ஒரே ஆண் வாரிசு மூர்த்தி. அவருக்கு பின் எவ்வளவோ வரமிருந்தும் கற்பகத்திற்கு பிள்ளை பேறு இல்லாமல் போய்விட்டது.

மூர்த்திக்கு தேவநாதன் தனது உடன் பிறந்த சகோதரி பாவாயி’ன் மகள் காமாட்சியையே மணம் முடித்து வைத்தார். அப்போது காமாட்சிக்கு பதினான்கு வயது தான். மூர்த்தி இருபதின் தொடக்கத்தில் இருந்தார். அந்த காலகட்டத்தில் இந்த வயதில் தான் திருமணம் செய்ய வேண்டுமென்கிற நாகரிக காரணமில்லை. பெண் பிள்ளைகள் வயதுக்கு வந்தாலே திருமணம் தான். காமாட்சி இருவது வயதினை அடையும் போது மூன்று பெண் பிள்ளைகளை பெற்றிருந்தார்.

“இப்படி பொம்பளை பிள்ளையா பெத்து போட்டாக்கா குடும்பம் அடுத்த தலைமுறைக்கு எப்படி போவும், எனக்குத்தான் கருவேப்பிலை கொத்து கணக்கா ஒன்னே ஒன்னுன்னு இருந்துபோச்சு, தனியா அவன்(மூர்த்தி) நிக்குற மாதிரி எம் பேரப் பிள்ளைகளும் நின்னுடக் கூடாதுன்னு எதிர் பார்த்தாக்கா இங்க வம்ச விருத்தியே ஆகாமல் அழிச்சிடுவால் போலிருக்கே…!” 

நடு கூடத்தில் கற்பகம் போட்ட சத்தத்தில் காமாட்சி ஆடி போய் விட்டார்.

“எனக்கு பேரனை பெத்துக்கொடு இல்லாட்டி எம் மவ(க)னுக்கு நான் வேற கல்யாணம் கட்டி வைக்குதேன்” என்று குதியாக குதித்தார்.

அன்று முழுவதும் அழுது அழுது காமாட்சியின் முகமே வீங்கிப்போச்சு. மனைவியின் நிலை கண்டு மூர்த்தி தான் அதிகம் துடித்துப் போனார்.

‘அம்மாவை இப்படியே விட்டால், தான் இல்லாத நேரத்தில் காமுவை சொல்லால் கொட்டிக்கொண்டே இருப்பார்’ என எண்ணிய மூர்த்தி தன் அன்னையிடம் சற்று கடுமையாக பேசினார்.

“உனக்கென்ன ஆண் வாரிசு தானே வேணும் பெத்து கொடுக்கிறேன். அதுவரை வாய் மூடிட்டு அமைதியாக இருக்கணும். இப்போ எங்களுக்கு என்ன வயசாகிப் போச்சுதுன்னு அந்த குதி குதிக்கிற நீ, முப்பதை தாண்டல அதுக்குள்ள மூனு புள்ளைகளுக்கு அப்பனாகிட்டேன். இனி புள்ளை எப்போ வேணுமோ அப்போதேன் நான் பெத்துப்பேன்.” காட்டமாக மொழிந்த மகனின் கோபம் கண்டு கற்பகமே ஆடிவிட்டார். அதன் பிறகு கொஞ்சம் அமைதியாக இருந்தவர் மறைமுகமாக காமாட்சியை சாடுவதை வழக்கமாக்கிக் கொண்டார். கணவர் தேவநாதன் சொல்லியும் கற்பகம் அடங்கவில்லை.

காமாட்சியும் வேண்டாத தெய்வமில்லை, செல்லாத கோவிலில்லை. ஒரு நிலையில் அவரே இனி தனக்கு குழந்தை பிறக்காதென்று சோர்ந்து விட்டார். இடையில் தேவநாதன் இயற்கை எய்திருந்தார். ஆனால் அவரின் மூத்த மகள் அம்பிகாவுக்கு பதினாறு வயது இருக்கும்போது காமாட்சி மீண்டும் கரு தரித்தார். அப்போது அவருக்கு வயது முப்பத்தி ஒன்று.

“வயதுக்கு வந்த பெண் பிள்ளைகள் வீட்டிலிருக்கும் போது தான் வயிற்றை பிடித்துக் கொண்டிருந்தாள் ஊரார் என்ன சொல்லுவார்கள்” என்று காமாட்சி புலம்ப,

“செத்துப்போன உம்(ன்) அப்பா தான்டா உனக்கு மகனாக வந்து பிறக்கப் போறாரு, அதனால உம் பொண்டாட்டியை ஒழுங்கா பெத்துப்போட சொல்லு” என்று காமாட்சியின் புலம்பலுக்கு கற்பகம் முற்றுப்புள்ளி வைத்தார்.

நினைத்தது போலவே பிறந்தது ஆண் குழந்தை. கற்பகத்தை கையில் பிடிக்க முடியவில்லை. பண்ணையில் வேலை பார்பவர்களுக்கெல்லாம் ஒரு நாள் கூலி இலவசமாக அளித்து தடபுடலாக விருந்து வைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

பாலூட்டுவது மட்டுமே காமாட்சியின் வேலையாக இருந்தது. அக்காக்கள் மூவருமே இன்னொரு தாயாக அக்குழந்தையை தாங்கினர். குடும்பத்தில் அனைவருக்கும் பிறந்திருந்த ஆண் குழந்தை உலகமாகிப் போனது. அதனால் மூர்த்தி குழந்தைக்கு ஆதி என்று பெயர் வைக்க விருப்பம் கொள்ள,

“எம் பேரனுக்கு எம் புருஷன் பேரு தான் வைக்கணும்” என்று அதற்கும் கற்பகம் பிரச்சனை செய்தார். யோசித்த மூர்த்தி ஆதியுடன் அவரின் தந்தை பெயர் பாதியை சேர்த்து ஆதிதேவ் என பெயரிட்டார்.

ஆதி பிறந்த இரண்டு வருடத்தில் அவனின் முதல் அக்கா அம்பிகாவுக்கும் காமாட்சியின் அண்ணன் மகன் தங்கமணிக்கும் திருமணம் நடந்தது. அவர்களுக்கு சந்தியா என்கிற ஒரு மகள் இருக்கின்றாள்.

ஆதிக்கு ஐந்து வயது இருக்கும்போது அவனின் இரண்டாவது அக்கா செல்விக்கு தங்கமணியின் தம்பி வேலுமணியுடன் திருமணம் நடந்தது. இரண்டு வருடங்கள் கடந்தும் அவர்களுக்கு பிள்ளை இல்லை.

மூன்றாவது அக்கா கவிதாவுக்கு திருமணம் நடந்த போது ஆதிக்கு ஆறு வயது. அதே ஊரிலிருந்த மூர்த்தியின் சித்தப்பா மகளின் மகன் ராசுவுக்கு கவிதாவை மணம் முடித்திருந்தனர். கவிதா ராசுவின் மகன் சூர்யா.

சூர்யா பிறந்த இரண்டு வருடத்திற்கு பிறகு பிள்ளை இல்லையே என்கிற ஏக்கத்தினை போக்க செல்வி மற்றும் வேலுமணிக்கு நிரலி பிறந்தாள். நிரலிக்கு அடுத்து நான்கு வயது வித்தியாசத்தில் அவளின் தம்பி வருண். 

குடும்பம் ரொம்பவே பெரியது தான். ஆனால் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கின்றனர். பண்ணை வேலைகளில் ஆதிக்கு விருப்பமில்லை என்றறிந்த மூர்த்தி, அவனுக்கென்று சொத்துக்களை ஒதுக்கி வைத்துவிட்டு மற்ற பண்ணைகள் அனைத்தையும் தன் மருமகன்களிடம் ஒப்படைத்துவிட்டு, ஆதி ஆசைப்பட்ட சட்ட படிப்பினை படிக்க வைத்தார். பண்ணையை கவனிப்பதற்காக அனைவரும் அருகருகே இருந்தாலும் விசேட நாட்களில் ஒன்றாக பெரிய வீட்டில் கூடிவிடுவர். இப்போதும் ஒரு விசேடத்திற்காகத்தான் எல்லோரும் ஒன்று சேர்ந்துள்ளனர்.

இன்று ஆதிக்கும் அவனின் மூத்த அக்கா அம்பிகாவின் மகள் சந்தியாவிற்கும் நிச்சயதார்த்தம்.

வழக்குகளில் படு பிஸியாக இருக்கும் ஆதி தன்னுடைய நிச்சயத்திற்காகத்தான் இங்கு வந்திருக்கின்றான். நடக்கப்போகும் நிகழ்வு தெரிந்திருந்தால் வந்திருக்க மாட்டானோ!

 

அத்தியாயம் 2 ன் 🖇️ 

ஏந்திழையின் ரட்சகன் 2

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
12
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்