Loading

அத்தியாயம் 1

“அச்சோ… நேக்கு வெக்க வெக்கமா வர்றதே… பெருமாளே…” என்று வெட்கம் போல் பாசாங்கு செய்த விஜியைக் குறுஞ்சிரிப்புடன் பார்த்தாள் நிவர்த்திகா. 

“இன்னிக்கு எந்த விதத்துல ப்ரப்போஸ் பண்ணப் போறானோ…”

எங்கே அந்த வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா

கல்லை கனி ஆக்கினாள் முள்ளை மலர் ஆக்கினாள்

எங்கே அந்த வெண்ணிலா 

அந்த சிற்றுந்தில் அன்றைய முதல் பாடல் ஒலிக்க ஆரம்பித்தது. விருதுநகர் அருகே கருவேலம்பட்டி, கரிசல்குளம் என்ற சிறிய ஊர்கள் இரண்டிற்கும் பொதுவாக விருதுநகர் வரை சென்று வரும் சிற்றுந்துகள் நான்கு உண்டு. நிவர்த்திகாவும் விஜயலட்சுமியும் விருதுநகரில் உள்ள பெண்கள் கல்லூரியில் இளங்கலை இறுதி வருடத்தில் இருக்கின்றனர். தினமும் இந்த சிற்றுந்தில்தான் இருவரும் கல்லூரிக்கு சென்று வருவது. இவர்களைப் போல் இன்னும் சில மாணவிகளுக்கும், நகரத்தில் வேலைக்கு சென்று வருபவர்களுக்கும் கூட இந்த சிற்றுந்தே பொன் ரதம்.

தோழிகள் இருவரும் சற்றே பின்புறத்தில் இடப்பக்க இருக்கைகளில்  இடம்பிடித்திருந்தனர். அப்போதுதான் முன்புறத்தில் நேரடியாக ஒளிபரப்பாகும் நாடகத்தைத் தெளிவாகப் பார்க்க முடியும் என்று இருவரும் நம்புகிறார்கள். எனவே கடந்த நான்கு மாதங்களாக தினமும் காலையில் அவ்விருக்கைகளும் அவர்களை எதிர்பார்த்தன. இதற்காகவே இருவரும் முன்கூட்டியே புறப்பட்டு வந்துவிடுவது வாடிக்கை.

அதன்படி இன்றும் பேருந்து புறப்படும் முன்னரே வந்து தங்கள் இடங்களை ஆக்ரமித்தாயிற்று. இன்னும் பேருந்து ஆட்களால் நிரம்பவில்லை; புறப்படும் நேரமும் நெருங்கவில்லை. ஆக இருவரும் தத்தம் வாய்க்கு வேலைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

“ஆமா நிவி. ஹய்யோ! எனக்கு ஒரே எக்ஸைட்மென்ட்டா இருக்குதுடி.” பிடித்த படத்தில் பிடித்த காட்சியைப் பார்க்க போகும் ஆர்வத்தைக் காட்டினாள் விஜி.

“பாட்டு எல்லாம் கூட எப்டி செலக்ட் பண்றான் பாரேன்…”

“அதான் இந்த பஸ் டிரைவரையும் கண்டக்டரையும் கைக்குள்ள போட்டு வச்சிருக்கானே! இதுக்காகவே ரெண்டு பேரையும் ஸ்பெஷலா கவனிக்கறதா செவிவழி செய்தி!”

“பார்றா! செவி வழி செய்தி வர்றளவுக்கு பஸ்ல டெய்லி பாஸஞ்சர்ஸ் எல்லாரும் இவனைத் தான் கவனிக்கறாங்கன்னு சொல்லு.”

“ஆமா நிவி, இந்த மாதிரி லைவ் ப்ரப்போஸல் ஸீனை யாரு மிஸ் பண்ணுவா?”

“செம க்யூரியஸ்ல? இவன் பண்ற அலப்பறையை சினிமாவுல கூட பார்த்ததில்லப்பா நானு. என்னா லவ்வு!”

“ஆளும் செம ஸ்மார்ட்டூ… “

“அய்ய்ய…”

“என்ன அய்ய..? இல்லைன்னு சொல்லு பார்ப்போம்? ‘மௌனம் பேசியதே’ சூர்யா மாதிரி அவன் கண்ணும் புருவமுமே போதுமேடி. வெரி இம்ப்ரஸிவ்!”

“பார்த்தும்மா விஜி… ஓவர் இம்ப்ரெஸ் உன்னை மாதிரி உட்வேர்ட்ஸ் பேபிக்கு ஆகாது.”

“அதைச் சொல்லு. பார்த்தோமா சைட்டடிச்சோமான்னு போய்க்கிட்டே இருக்கணும். அவன் என்ன எனக்கா ப்ரப்போஸ் பண்ணப் போறான்? ஹூம்ம்…”

“ரொம்பத்தான் அலுத்துக்கற? நான் வேணும்னா ‘இந்தப் பொண்ணை லவ் பண்ணு’ன்னு அவன்கிட்ட உன்னைச் சொல்லட்டுமா?”

“புண்ணியவதி! என் குலசாமி! நீ நல்லா இருப்ப தாயி. இது மட்டும் எங்காத்தாவுக்கு தெரிஞ்சது கொல்லைல இருந்து முருங்கைக் குச்சியை ஒடிச்சு என் உடம்புல மாடர்ன் ஆர்ட் வரைஞ்சிடும். அப்புறம் படிக்கணும்ங்கற என் லட்சியம் பனாலு.” 

“அது! சைட்டு, மண்ணாங்கட்டின்னு… இதுலாம் நமக்கு ஒரு டைம்பாஸ் விஜி. மைண்ட் இட்!”

“ஹான்! ஐ நோ ஐ நோ! ஹேய் வந்துட்டான் பாரு!” என்றவளின் குரலில் சிறிதே பரபரப்பு.

சிற்றுந்து நிற்கும் இடத்திற்கு சற்று தள்ளி, மூன்று லட்சங்களை விழுங்கிய டியூக்’ஐ (Duke) நிறுத்திவிட்டு இறங்கினான் ஒருவன். அவனின் இரு சக்கர வாகனத்தை வைத்தே அவன் பெரிய இடத்துப் பிள்ளை என்பதையும், அதை அவன் நிறுத்தும் நேர்த்தியிலும் கவனிப்பிலும் அது அவனின் பிரியமான செல்லப் பிள்ளை என்பதையும் அறிந்து கொள்ளலாம். அது அவனின் தாத்தாவுடன் சத்யாகிரகம் செய்து வாங்கியது என்பது கூடுதல் தகவல்.

“பட்டிக்காட்டான் பஞ்சு மிட்டாயைப் பார்த்த மாதிரி என்னடி இது? சாதாரணமா இரு விஜி!” பரபரத்த தோழியை அடக்கினாள் நிவர்த்திகா.

“ஷோ ஆரம்பிக்கப் போகுதுல்ல அதான்! ஈஈஈ…”

“ஆரம்பிக்கற மாதிரி தெரியலயே…” என்று இவள், புழுக்கத்திற்கு துப்பட்டாவால் விசிறியபடி, ஆவலோடு தலை நீட்டிப் பார்க்க,

“தேடுறான் பாரு, அய்யோ இந்தப் பக்கம்தான் பார்க்கறான். குனிஞ்சுக்கோ நிவி!” என நிவர்த்திகாவின் தலையைத் தன் தோளில் பட்டும்படாமல் சாய்த்தாள், விஜி.

“அடச்சீ! என் ஹேர் ஸ்டைலைக் கலைக்கற, விடுடீ.” முகத்தின் முன் கை வைத்து, கலைந்த சிகையை சரி செய்தபடியே அந்த ‘அவனைப்’ பார்க்க, அவன் கண்கள் இன்னும் யாரையோ தேடியவாறே அலைந்தன.

அதனைக் கண்ட விஜி நிவர்த்திகாவிற்கு மட்டும் கேட்கும்படி பாடினாள். “காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி…

பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி…”

அவள் பாடலில் புன்னகை வந்தாலும் தோழியைச் சின்னதாய்க் கடிந்தாள். “உன்னை சாதாரணமா இரு’ன்னு சொல்றேன் விஜி. அவனே கவனிக்கலனாலும் நீயே ஓவர் ரியாக்ட் பண்ணி நாங்க உன்னைத்தான் பார்க்கறோம்னு காட்டிக் கொடுத்துடுவ போலருக்குது.”

“இப்ப மொத்த பஸ்ஸே (bus) ஓவர் ரியாக்ட் பண்ணாலும் அவன் கண்ணுக்கு நாம தெரிய மாட்டோம் நிவி. கூல்!”

இருவரும் ஆர்வமாய்ப்‌ பார்த்திருக்க, இப்போது, தேடிய அவன் கண்களில் சிறிதே ஏமாற்றம். தோழிகள் இருவரும் நகைப்புப் பார்வையைப் பரிமாறிக் கொண்டனர். அவர்களும் அவனைப் போலவே சிற்றுந்திற்குள் பார்வையைப் போட்டு அலசிவிட்டு, உதட்டைப் பிதுக்கிக்கொண்டு அவனைப் போலவே ஏமாற்றமடைந்து, பின்னர் தோள்கள் குலுங்க சத்தம் வராமல் நகைத்தனர்.

மீண்டும் அவனைப் பார்க்க, அவன் கண்களில் இப்போது வெளிச்சம்.

“ஆளு வந்தாச்சு போல.” – விஜி.

“அவ அப்டி ரொம்ப அழகா என்னடி?”

“காதலுக்கு கண்ணில்லை நிவி.”

“கோணப்பய! இவனுக்கும் வேற வேலையில்லை; அந்தச் சிலுப்பட்டைக்கும் வேற வேலையில்லை.” – பின்னிருக்கையில் இருந்த செல்வி அக்காவின் நொடிப்பு.

கழுத்தைத் திருப்பிப் பார்த்து, “கோணலா இருந்தாலும் என்னோடதாக்கும்!” என்றுவிட்டு சட்டென நுனிநாக்கைக் கடித்துக்கொண்ட நிவர்த்திகாவை கேலியாக பார்த்தாள் விஜி.

“அது… சிம்ஸ் வர்ற ஆட்’டி!”

செல்வி, “என்னவோ போ. நாங்களாம் அந்தக் காலத்துல ஒரு பையனை நிமிர்ந்து பார்த்தா கூட ஊருக்குள்ள கதைக் கட்டி விட்டுடுவானுக. பயலுகளும் பொம்பள பிள்ளைப் பின்னாடி சுத்துனா கவட்டை மிஞ்சாதுன்னு வாலை சுருட்டிக்கிட்டு இருப்பானுக! இப்ப என்ன தகிரியமா பாட்டுப் போட்டு காதோ…லுன்னு பகுமானம் காமிக்குதுக..!” என்று செல்வி நாடியைப் பிடித்து ஆச்சரியம் போல் நொடித்துகொண்டதில், தோழிகள் இருவரும் வாய் மூடி சிரித்தனர்.

புன்னகையுடனே முன்னால் பார்க்க, அவன் புதிதாய் வந்த ஒரு பெண்ணை வழிமறித்து ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். 

“செல்வியக்கா! கொஞ்சம் வாயை மூடு. என்னவோ சொல்றான்.” என்ற நிவர்த்திகா காதை சற்று முன்னால் கடன் கொடுக்க, காற்று அவன் குரலைக் கொண்டு வந்து அவள் காதில் சேர்த்தது.

“சொல்லு சித்து, என்கிட்ட எப்போ டியூஷனுக்கு வரப் போற?” – அவன்.

“உன்னை மாதிரி மக்கு மண்ணாந்தரைங்க தான் டியூஷனுக்கு போகணும். டாப்பர் லிஸ்ட்ல இருக்கற நான் ஏன் போகணும்?” என்றாள் செல்வியால் சிலுப்பட்டை என்றழைக்கப்பட்ட சித்தாரா.

“அப்போ நீ எல்லா சப்ஜெக்ட்லயும் டாப்பர்’ஆ, சித்து?” எனக் கேட்டவனின் குரலில் ஏகத்துக்கும் குழைவு.

சந்தேகமாக கண்கள் சுருக்கியவள் தப்பிக்கும் வழியைத் தேடி, “ஆமா, வழியை விடு!” எனவும்,

“அப்போ லவ் சப்ஜெக்ட் படிக்க நான் உன்கிட்ட டியூஷன் வரவா?” என்றதுதான் தாமதம். சிற்றுந்தில் இருந்த அத்தனை இளசுகளிடம் இருந்தும் சீழ்க்கையொலி பறந்தது.

நிவர்த்திகாவும் விஜியும் ‘பார்றா’ என்றொரு பார்வையைப் பரிமாறிக் கொண்டு நகைத்தனர்.

அந்த சித்தாரா சிரிப்புடன் அவன் தோளைப் பிடித்து தள்ளிவிட்டு சிற்றுந்தில் ஏறிக்கொள்ள, பின்னேயே பாடல் ஒலித்தது.

‘கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென

சின்னச் சிரிப்பில் உன் 

கள்ளச் சிரிப்பில் என்னைத் தள்ளிவிட்டு தள்ளிவிட்டு 

மூடி மறைத்தாய்…’

“எப்டி நிவி? இதைச் சொன்னா அவ இப்டித்தான் ரியாக்ட் பண்ணுவா’ன்னு புரிஞ்சு, அதுக்கேத்த மாதிரி பாட்டை செலக்ட் பண்ணி வச்சிருக்கான்?”

“ஸ்மார்ட்.” என்று உதட்டை வளைத்தாள் நிவர்த்திகா.

“க்யூட்டா லவ் பண்றான்’டி. இவ்ளோ அழகா குட்டி குட்டியா காதலைச் சொல்றதுக்கு ரூம் போட்டு யோசிப்பான் போல!”

“வேலை வெட்டி இல்லாதவங்களுக்கு ரூம் எல்லாம் தேவையில்லை விஜி.”

“போடி! உனக்கு அவனைப் பிடிக்கல. அதான் ஏதாவது சொல்லிட்டே இருக்க.”

“நீ அவனை ஹீரோ ரேஞ்ச்’க்கு கற்பனை பண்ணி வச்சிருக்க. அதான் நான் சும்மா சொல்றது கூட தப்பா தெரியுது.” என இங்கே இந்த தோழிகளைப் போல், பேருந்தில் இருந்த மற்ற பிரயாணிகளும் அவனுக்கு ஆதரவும் எதிர்ப்புமாய்ப் பேசிக் கொண்டிருக்க,

அங்கே சித்தாராவைத் தவிர ஏனையோர் மனிதர்களே அல்ல என்பதைப் போல், அவளை மட்டுமே பார்ப்பதும், அடிக்கும் எதிர்க்காற்றிற்கு பறக்கும் சிகையைக் கோதுவதுமாய் மேலிருந்தக் கம்பியைப் பற்றியபடி நின்றிருந்தான் அவன்.

கல்லூரி நிறுத்தம் வந்ததும் மாணவிகள் இறங்கிக் கொண்டிருக்கையில் சிற்றுந்தில் பாடல் மாறியது.

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க…

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க…

சித்தாராவைச் சிரிப்புடன் வழியனுப்பிக் கொண்டிருந்தவன் பட்டென்று திரும்பி வாசலருகே நின்றிருந்த நடத்துனரின் சட்டையைப் பிடித்து, “யோவ் மாணிக்கம்! என்னய்யா பாட்டு போடற நீ? என் பென்டிரைவ் என்னாச்சு?” என்று எகிற,

இறங்கி நடக்க ஆரம்பித்த பெண்கள் அப்படியே நின்று வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

“என்னப்பா… காலைல அண்ணே அண்ணே’ன்னு குவார்ட்டர் பாட்டில் எல்லாம் வாங்கிக் கொடுத்த? இப்ப என்னடான்னா ஒரு பாட்டுக்கு போய் யோவ்’ங்கற? சட்டையைப் பிடிக்கிற? அட விடுப்பா..!

“அது வேற வாய்! இப்போ ஏன்யா நீ இந்த பாட்டைப் போட்ட?”

“இந்தா பாரு… காலேஜ் ஸ்டாப்பிங் வரைக்கும்தான் உன் பென்டிரைவ்’ன்னு சொன்னேனா இல்லையா? அப்புறம் எங்க இஷ்டம்தான்.”

“உன் இஷ்டம்னா உன் இஷ்டத்துக்கு பாட்டு போடுவியா நீ?”

“டேய் டேய் தண்ணியடிச்சது நானா இல்ல, நீயாடா? அநியாயத்துக்கு உளருறானே… சட்டையை விடுடா முதல்ல! இப்ப இந்த பாட்டுல என்னடா பிரச்சினை உனக்கு? இதுவும் காதலியைத் தேடுற பாட்டுதானே?”

‘அதானே!’ என்றது சுற்றி நின்ற கூட்டமும் சிற்றுந்தில் ஜன்னல் வழி தெரிந்த தலைகளும்.!

மூக்கை உறிஞ்சிக் கொண்டவன், “தேடுற பாட்டுதான்’ண்ணே… ஆனா… ஆனா… அதுல கடைசில காதலி செத்துடுவா’ண்ணே… ஊஊஊ… அப்போ என் சித்துவும் செத்துப் போயிடுவாளா?” என அழுதவனைப் பார்த்து கூட்டத்தில் பாதி தலையிலடிக்க, மீதி அம்மன் கோயிலில் கூழ் ஊற்றும் வைபவமாய் அவன் காதலைக் (?) கொண்டாடியது.

கடுப்பாகிப் போன மாணிக்கம், “அடேய் நன்னாரிப் பயலே! என் போதைத் தெளிஞ்சிடும்டா… உன் போதைக் காலத்துக்கும் தெளியாது. சாபம் விடறேன்’டா உனக்கு… ‘ஞஞ ஞஞ’ன்னு காதல் பரத் மாதிரி சுத்தப் போறியா இல்லையா பாரு!” எனவும், 

களுக்கென்று நகைத்த நிவர்த்திகாவை அவன் திரும்பிப் பார்க்கும்முன், கூட்டத்திலிருந்து வெளியே இழுத்து சென்றுவிட்டாள் விஜி.

ல்லூரி வளாகத்திற்குள் நிவர்த்திகா, விஜி இருவருக்கும் முன்னால், தன் தோழியிடம் பேசியவாறு நடந்து போய்க்கொண்டிருந்தாள் சித்தாரா. அவளும் இவர்கள் வகுப்பு தானெனினும் அத்தனை நெருக்கமில்லை. சிற்றுந்தில் பார்க்கும்போது புன்னகைத்துக் கொள்வது, அவ்வப்போது நோட்டுப் புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வதென்று சில பேச்சுக்கள் மட்டுமே!

இப்போது முன்னால் சென்று கொண்டிருக்கும் அவர்கள் இருவரின் பேச்சுக்களும் அவனைப் பற்றியதாக இருக்க, நம் தோழிகளுக்கு ஆர்வம் தாங்கவில்லை. 

“ஏய் உனக்கும் அவனைப் பிடிச்சிருக்கா, சித்து? அவன் பண்றதுக்கெல்லாம் நீயும் சிரிக்கிறியே?” என சித்தாராவின் தோழி புவனா கேட்க,

“ம்ம்… கோமாளி மாதிரி பண்றான்ல்ல? அதான் சிரிச்சேன் போவியா…” என உதட்டை வளைத்தாள் சித்தாரா.

“அடிப்பாவி!! என்ன ஹேண்ட்சம்மா ஹீரோ கணக்கா இருக்கான்! அவனைப் போய் கோமாளின்றாளே… ஏய் சித்து சித்து… உனக்கு வேணாம்னா சொல்லுப்பா. நான் வேணும்னா டிரைப் பண்றேன்.”

“ஏண்டி அலையற?”

“அவனை பஸ்ல இந்த நாலஞ்சு மாசமா பார்த்துப் பார்த்து இப்போலாம் கனவுல கூட வர்றான்ப்பா. ஈவன் அவனோட அந்த ஸ்போர்ட்ஸ் பைக் கூட வருதுன்னா பாரேன்!”

“இதெல்லாம் ஓவர் புவி.”

“இருந்துட்டு போகட்டும். நீ என்ன சொல்ற?”

“நீ சொல்ற மாதிரி எனக்கே அவனை இந்த நாலஞ்சு மாசமா தான் தெரியும்பா. பார்த்ததுல இருந்து பின்னாடியே சுத்துறான். எனக்கே சில நேரம் பாவமாதான் இருக்குது.”

“அப்டீன்னா அவன் ப்ரொப்போஸலை அக்செப்ட் பண்றது…”

“ம்ம்… உனக்கு மாதிரி என் கனவுலயும் வரட்டும். அக்செப்ட் பண்றேன்.” என்று அலட்சியமாக சொன்ன சித்தாராவை புவனா மட்டுமல்ல, பின்னால் வந்துகொண்டிருந்த நம் தோழிகளும் குழப்பமாக பார்த்தனர்.

பின் தங்கள் வழக்கமான உதட்டு பிதுக்கலையும் தோள் குலுக்கலையும் செய்துவிட்டு நகர்ந்தனர். 

தூறல் தூறும்🌧️🌧️

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
8
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்