- அத்தியாயம் 3
கருவேலம்பட்டிக்கும் கரிசல்குளத்திற்கும் பொதுவாக தார்ச்சாலையை ஒட்டி அமைந்திருந்தது, அந்தப் பெரிய காம்ப்ளக்ஸ். அங்கே மாடியில் முதல் தளம் முழுவதும் குழந்தைகளுக்கென சதுரங்கம், ஓவியம், பரதநாட்டியம், இசை, சிலம்பம், கராத்தே என ஆறு பிரிவுகளுக்கான அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.
மாலை நேர வகுப்புகளுக்கு தான் குழந்தைகள் மற்றும் பயிற்சியாளர்களின் வருகை இருக்கும். கீழ்தளத்தில் உள்ள பெரிய கடை ஒன்றில் தையல் கடையும் தையல் வகுப்புகளும் நடைபெறும். அங்கே மட்டும் இரு ஊர்களில் இருந்தும் பெண்கள் அவ்வப்போது வந்து செல்வதுண்டு. மேலும் ஒரு ஆட்டோமொபைல் கடை, தேநீர் கடை இருக்கின்றன.
அங்கே அந்த காலை பத்து மணி வேளையில் மொட்டை மாடியில் இருந்து, தேர்ந்தெடுத்த காதல் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தது.
‘கட்டழகைக் கண்டவுடன் கண்ணில் இல்லை உறக்கம்.
வெள்ளையணு சிவப்பணு ரெண்டும் சண்டை பிடிக்கும்.
காதலுக்கு இதுதான்
பரம்பரைப் பழக்கம்!’
காம்ப்ளக்ஸ் வாசலில் தன் டூவீலரை நிறுத்திய பாலா, “பிரமோத்! டேய் பிரமோ…த்!!” என மேலே பார்த்து தொண்டைக் கிழிய கத்தினான்.
‘ஸ்மூத்தாய்ச் செல்லும்
ஃப்லாப்பி டிஸ்க் அவள்!
நெஞ்சை அள்ளும்
டால்பி சௌண்ட் அவள்!
ஆ….
திருடிச் சென்ற என்னை… திருப்பித் தருவாளா…
தேடி வருவாளா…’
கீழிருந்த பாலா புலம்பியபடி மூச்சு வாங்க இரண்டு தளங்கள் கடந்து வந்தான். “முருகா! இவனுக்கு ஃப்ரெண்டா வாக்கப்பட்டதுக்கு குடும்பமே சேர்ந்து என் ஆவியைக் குறைக்கறானுங்களே… டேய் பிரமோத்!!”
வந்தவன் அந்த சிறியக் கையடக்க ஒலிப்பெருக்கியில் (mini portable speaker) அலறிய பாடலை அணைத்துப் போட, அந்த பத்து மணியிலேயே உச்சிப் பொழுது போல் அனலடிக்கும் வெயிலின் உபயத்தால், நெற்றி, தோள்கள், மார்பு என அனைத்திலும் வியர்வை வழிந்தோட, அத்தனை நேரம் கையில் சுழற்றிக் கொண்டிருந்த சிலம்பம் கம்பை அர வெட்டில் நிலைக்கொண்டு நிறுத்தி நிமிர்ந்து பார்த்தான் அவன். பிரமோத்!
நீண்ட கால்சட்டையிலும் கையில்லா வெள்ளை பனியனிலும், அடர்ந்த சிகையுடனும் அழகிய கதாநாயகனுக்கான முழுத் தோற்றப் பொருத்தத்தில் இருந்தவன், கம்பைத் தோழனின் முன் நீட்டியது நீட்டியபடியே பேசினான். “வா மச்சான்! வந்து ரொம்ப நேரமாச்சா? என்ன சாப்பிடற?” எனக் கேட்டவன், கீழிருந்த தேநீர்க்கடையை எட்டிப் பார்த்து, “டேய் சிம்பு! மாடிக்கு ஸ்ட்ராங்கா ரெண்டு டீ கொண்டு வா!” என்று இரைந்துவிட்டு, “இந்த வேகாத வெயில்ல நீ ஏண்டா இப்டி லொங்கு லொங்குன்னு ரெண்டு மாடி ஏறி வந்திருக்கே? ஒரு கால் பண்ணிருக்கலாம்ல?” என்றபடியே அங்கிருந்த குழாயைத் திறந்துவிட்டு முகம், கை, கால் கழுவி வியர்வையை விரட்டியடித்தான்.
அதுவரை நண்பனை முறைத்துக் கொண்டிருந்த பாலா, தன் ஆத்திரத்தையெல்லாம் வார்த்தைகளாக்கினான். “மொகரைக்கட்ட! ஏண்டா மொபலைத் தூக்கி ஸ்பீக்கர்ல கனெக்ட் பண்ணிட்டு, இங்கே வந்து சிலம்பாட்டம் ஆடுற நாதாரி, என்னைக் கேட்கறியா? எத்தனை கால் பண்றதுடா உனக்கு?”
அதற்குள் கைபேசியை எடுத்துப் பார்த்திருந்த பிரமோத் கேட்டான். “அச்சோ ஆமா! முப்பது கால் பண்றளவுக்கு என்னடா பிரச்சினை? உங்க அப்பத்தா நல்லா இருக்குதுல்ல?”
“டேய் டேய்ய்… இப்ப தான் கோவிலுக்கு போயிட்டு வர்றேன். காலைலயே என்னைக் கெட்ட வார்த்தைப் பேச வைக்காதே! உங்கப்பா தான் உன்னைத் தேடிட்டு இருக்காரு. என்னவோ நான் உன் பொண்டாட்டி மாதிரி நீ காணாம போனா எனக்கே குடைச்சலைக் கொடுக்கறாரு மனுஷன்!”
சிந்தனையோடே சட்டையை எடுத்துப் போட்டபடி கேட்டான் பிரமோத். “அப்பாவா? எதுக்காம்டா?”
‘சொன்னா இவன் போக மாட்டான். சொல்லலைன்னா அந்தாளு ஏன் சொல்லலைன்னு என்னைக் கேட்பாரு. ஷ்ஷ்…’ மனக்குரலில் அலுத்துக் கொண்டவன், “என்னவோ எனக்கென்னப்பா தெரியும்? சிலம்பாட்டத்துக்கு ‘அவள் வருவாளா’ பாட்டு போடற உனக்குத்தான் தெரியும்.” என்றான், விளையாட்டாக!
“ஹாஹா… தாங்க்ஸு வ்ரோ. காலைல பஸ்ல என் சித்துவுக்கு இந்த பாட்டைப் போடலாம்னு நினைச்சேனா… அதுக்குள்ள அவ வந்துட்டாளா… அதான் இப்ப போட்டேன். ஹிஹி…”
இருவரும் கீழே இருந்த அலுவலக அறைக்கு வந்திருந்தனர். பாலா மின்விசிறியைச் சுழலவிட்டு, சட்டையை மேலேற்றி நாற்காலிக்கு உடம்பைக் கொடுக்க, டீக்கடை பையன் கொண்டு வந்த தேநீரை எடுத்து பாலாவின் கையில் கொடுத்தான் பிரமோத்.
“ஆனா பிரமோத்… உனக்கும் உன் குடும்பத்துக்கும் நடுவுல நான் நசுங்கறதை விடவும், நீ சிலம்பாட்டம் ஆடும் போது அந்த கிழவியை(?) நினைச்சு லவ் சாங்ஸ் போட்டு கொடுமைப்படுத்துறதை விடவும், என் இடத்துக்கே வந்து என்னையே வெல்கம் பண்ணி, டீ கொடுத்து உபசரிக்கற பாரு… அதைத்தான்’டா என்னால சகிக்க முடியல. இந்த இன்ஸ்டிடியூட்டுக்கு ப்ரொப்ரேட்டர் நானா இல்ல நீயாடா?” என்ற பாலா இன்னும் வண்ணம் வண்ணமாகக் கேட்டிருப்பான். தற்போது மின்விசிறி தரும் குளுமையும் தொண்டையில் இதமாய் இறங்கும் தேநீரும் அவனின் குமுறலைச் சற்று மட்டுப்படுத்தியிருக்கிறது.
அவன் சொல்வதைப் போல் பாலாதான் இந்த பயிற்சி கூடத்திற்கு முதலாளி. கடந்த நான்கைந்து மாதங்களாக பிரமோத் காலையில் சித்தாராவை பேருந்தில் இருந்து விருதுநகரில் இருக்கும் பெண்கள் கல்லூரி வரை போய் வழியனுப்பிவிட்டு, மீண்டும் ஊருக்குத் திரும்புபவன் தன்னிஷ்டம் போல் ஊர் சுற்றுவான். அதற்கு முன்பும் சொல்லிக் கொள்வதைப் போல் அவன் எதுவும் செய்து விடவில்லை என்பது வேறு விடயம்.
ஊர் சுற்றுபவன் எங்கிருக்கிறான் என அவன் வீட்டினர் யாருக்கும் சொல்லுவதில்லை. அப்படி அவர்கள் அவனைத் தேடினால் முதலில் அழைப்பது பாலாவிற்குதான். ஏனெனில் பிரமோத்தை முற்றுமுழுதாக அறிந்தவன் பாலா மட்டும்தான்.
இருவரும் பால்யத்திலிருந்தே நண்பர்கள். பள்ளி, கல்லூரி என ஒன்றாக திரிந்தவர்கள். பாலாவின் அப்பா விருதுநகரில் உள்ள பிரபல அச்சகத்தில் வேலை செய்தவர். அவரின் சின்ன வருமானத்தில் பாலாவையும் அவனின் அக்கா கோதையையும் முடிந்தவரை படிக்க வைத்தவர், மகளை அருகிருந்து பார்த்துக்கொள்ள வேண்டுமென எதிரிலுள்ள கரிசல்குளத்திலேயே மணமுடித்துக் கொடுத்துள்ளார்.
பாலா படித்து முடித்து பிரமோத்தைப் போல் ஊர் சுற்றித் திரியாமல் கிடைத்த வேலைகளைச் செய்து வந்தவன், அங்கே புதிதாய்க் கட்டப்பட்ட காம்ப்ளக்ஸில் தன் சேமிப்பைக் கொண்டு மேல் தளத்தை வாடகைக்கு எடுத்திருக்கிறான். அவன் இந்த பயிற்சி கூடத்தைத் துவங்கி ஆறு மாதங்களாகின்றன. இதில் எதிர்பார்த்ததை விடவும் நல்ல வருமானம் கிடைப்பதால், தன் அப்பாவை இத்தனை வருட கூலி வேலையிலிருந்து விடுவித்து ஓய்வளித்துள்ளான் பாலா.
“அட! ஓனர் நீதாம்பா… ஆனா டீ என்னுதுல்ல?” என்ற பிரமோத், பாலாவை சந்தேகமாக பார்த்துக் கேட்டான். “அதிருக்கட்டும், எங்கப்பா எதுக்குடா என்னைத் தேடுறாரு? உண்மையைச் சொல்லு. தேடுறது அப்பாவா? இல்ல அந்தக் கிழவனா?”
‘நான் கோவமாதானே பேசினேன்? எப்டி கண்டுபிடிச்சான்?’ என அவன் சிந்தித்த இரண்டு விநாடிகளில் அவனைக் கண்டுகொண்டான் பிரமோத்.
போட்டிருந்த சட்டையை மீண்டும் கழற்றிப் போட்டுவிட்டு, காலை வசதியாக தூக்கி மேஜை மேல் நீட்டிக்கொண்டான்.
தோழனை அறிந்தவனாக பாலா, “நீ இப்ப போகலைன்னா என் உசுர வாங்குவாருடா அந்தாளு. ப்ளீஸ்… வீட்டுக்கு போ பிரமோத்.” என சொல்லி முடிக்கையில் பாலாவின் அலைபேசி அழைத்தது. “இந்தா அடிச்சிட்டாருல்ல!”
உடனே எழுந்து மீண்டும் சட்டையைப் போட்டுக்கொண்டவன், “சரி அழாதே! நான் கிளம்புறேன்.” என்றுவிட்டு திரும்ப, ஓடிப்போய் அவன் கையைப் பிடித்தான் பாலா.
இவன் நிச்சயம் வீட்டிற்கு போகமாட்டான் என்று புரிந்து வைத்திருந்தவன், “வா, நான் ஊருக்குள்ள தான் போறேன். உன்னை உங்க வீட்ல விட்டுட்டுப் போறேன்.” எனவும், அவனைப் பார்த்து எள்ளலாக சிரித்தான் பிரமோத்.
“வாழ்க்கைல இன்னும் எந்த நல்லது பொல்லதையும் அனுபவிக்கலடா நானு. அதுக்குள்ள ஏண்டா குடும்பமே சேர்ந்து எனக்கு சங்கூதப் பார்க்கறீங்க?” பாலா இப்படி மனம் வெதும்பிப் பேசுவதற்கு காரணம் இருந்தது.
அவன் மேலே பேசும்முன் மீண்டும் அவன் அலைபேசி அழைக்க, பிரமோத்திடம் இருந்து எட்டி நின்றுகொண்டு வேகமாக அழைப்பை ஏற்று, “மாமா, அவன் இங்கேதான் மாமா இருக்கான். இதோ இப்போ தான் வீட்டுக்கு போடா’ன்னு சொல்லிட்டிருந்தேன்.” எனவும், மறுமுனை என்ன சொன்னதோ தெரியவில்லை. ‘சரி சரி’ என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.
நிமிர்ந்து பார்க்க, பிரமோத் அவனின் பிரத்யேக மிதப்பு பார்வையுடன் பின்னந்தலையைக் கோதியபடி நின்றிருந்தான். “என்ன அவனை அங்கேயே பிடிச்சு வை’ன்னு சொன்னாரா?”
“தெரியுதுல்ல? எஸ்கேப் ஆக நினைக்காம *** அழுத்தி உட்காரு!”
“ப்ச்! உன்னைப் பார்த்தாலும் பாவமாதான் இருக்குது வ்ரோ. அட் தி சேம் டைம் அந்த கிழம் போடற ப்ளான்ல சிக்கிடக்கூடாதே இந்த சிங்கம்?” என கவலை போல் சொன்னவன் மீண்டும் போய் அமர,
பாலா ஆதங்கமாகக் கேட்டான். “ஏண்டா அவர் வயசுக்காவது நீ கொஞ்சம் மரியாதையா விட்டுக்கொடுத்து போகலாம்ல?”
“வயசுக்கேத்த மாதிரி நடந்துக்கிட்டா மரியாதை தானா வரப்போகுது.”
“தன் பேரனுங்க தன் பேச்சு கேட்கணும்னு நினைக்கறாரு. அவர் அந்தக் கால மனுஷன் இல்லயா?”
“நான் நைண்டீஸ் கிட் வ்ரோ!” எனச் சொல்லி அழகாய் புன்னகைத்தான்.
“நீயும் ரொம்ப தான் பிடிவாதம் பிடிக்கற, பிரமோத்!”
அதைப் பற்றி கவலையில்லை என்பதாக அவன் தோள் குலுக்க, கீழே இருந்து கார் ஹார்ன் சப்தம் கேட்டது. பிரமோத் எழுந்து போய் எட்டிப் பார்த்தான். ஓட்டுநருடன் சங்கரன் தாத்தா வந்திருப்பார் என்று இவன் நினைக்க, அங்கே அவன் அப்பா சரவணன் நின்றிருந்தார்.
பின்னே தள்ளியிருந்த சட்டையை முன்னே இழுத்துவிட்டு, காலரைச் சரி செய்துகொண்டு நான்கே தாவலில் கீழிறங்கி தந்தையின் முன் போய், “அப்பா.” என பவ்யமாக அழைக்க,
“என்ன பழக்கம் தம்பி இது, நெதம் (தினம்) காலைல எங்கேயாவது தொலைஞ்சு போறது? ஃபோனையும் எடுக்கறதில்ல?” என்று தன் சின்ன மகனைக் கடிந்துகொண்டார் சரவணன்.
“சும்மா கொஞ்ச நேரம் சிலம்பம் சுத்த வந்தேன்பா.”
“சரி, தாத்தா டவுனுக்கு போகணுமாம். கூட்டிட்டு போயிட்டு வேலை முடியற வரை கூடவே இருந்து கூட்டிட்டு வா! அம்மா ஆஃபீஸ் வர நேரமாகும். இல்லைன்னா அவ கூட அனுப்பிடுவேன்.”
‘இதுக்குத்தான் நீங்களே நேர்ல வந்தீங்களா?’ என அதிருப்தியாய் மனதில் பேசியவன், வெளியே, “அப்பா… ஸாரி. கொஞ்சம் வேலை இருக்குது.” என்றான் இறங்கிய குரலில்!
“ஏர் உழுகற மாட்டுக்கு வேலை இருக்கும். எருமை மாட்டுக்கு என்னப்பா வேலை இருக்கப் போகுது?” என வாகனத்திற்குள் முன் சீட்டில் அமர்ந்திருந்த சங்கரன் சிரிக்காமல் பேரனை வாரிவிட,
அதில் எரிச்சலான பிரமோத் அப்பாவின் முன் தாத்தாவை எதுவும் சொல்ல முடியாமல் பல்லைக் கடித்தான். அவனுக்கு அப்பாவின் மேல் நிரம்ப மரியாதை உண்டு. இவன் பெயரைத் தேர்ந்தெடுத்ததில் இருந்து படிப்பு வரை அன்னைக்கும் அவனுக்கும் முக்கியத்துவம் தந்தவர், தந்து கொண்டிருப்பவர் அப்பா சரவணன்.
எனவே, ‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்பதற்கேற்ப நல்ல பிள்ளையைப் போல் காரில் ஏறி ஸ்டியரிங்கைப் பற்றியவன், “போயிட்டு வர்றேன்பா.” என்றதில், சரவணனுக்குதான் உள்ளூர கலக்கம் ஏற்பட்டது.
‘இன்று இவன் அப்பாவை எப்படியெல்லாம் பாடாய்ப் படுத்தப்போகிறானோ! அது சரி அவரும் அவனுக்கு சளைத்தவரல்ல!’
காரில்…
தாத்தாவின் கேலிக்கு பதில் கொடுக்கவில்லை என்றால் பிரமோத் எப்படி சங்கரனின் பேரனாவான்?
அலைபேசியில் பாலாவை அழைத்து ஸ்பீக்கரை தட்டிவிட்டவன், “ஏன் பாலா, எருமை மேல சவாரி போவாரே… அவரை என்னன்னு’டா சொல்லுவாங்க?” என மெய்யாகவே சந்தேகம் போல் கேட்க,
அவனைத் தாத்தாவுடன் துரத்திவிட்ட சந்தோஷத்தில் அழைப்பை ஏற்றிருந்த பாலாவும் பதிலளித்தான். “எமன்னு சொல்லுவாங்க. ஏன் மச்சான், தாத்தாவுக்கு கார் ஓட்டுறவன் எமனுக்கு ஏரோப்ளேன் ஓட்டப் போறியா? ஹாஹா…”
“தறுதலைங்க ஒண்ணா சேர்ந்தா எமனுக்கு என்ன அவன் அப்பனுக்கே ஓட்டுவீங்கடா.” என்ற சங்கரனின் கணீர் குரலில்,
அந்தப் பக்கம் பதறியடித்து அலைவரிசையைத் துண்டித்த பாலா, “படுபாவிப்பய! அடிச்சு துரத்திவிட்டு அப்பாடின்னு மூச்சு விடல. அதுக்குள்ள அடுத்த ரவுண்டுக்கு கோர்த்துவிடுதே… அப்பனே முருகா, என்னை இந்த பாட்டன் – பேரன் கூட்டணிக்கே நேர்ந்துவிட்டிருக்கியா? இதெல்லாம் தவறு சாமி…” என முருகனைக் கண்டித்துக் கொண்டிருக்க,
இங்கே காரில் பேரனின் அழிச்சாட்டியத்தில் கடுப்பான பெரியவர், அலைபேசியை எடுத்து தன் புகைச்சலை பாகவதர் பாட்டைப் போட்டு ஆற்ற முயன்றார்.
‘…அப்பனைப் பாடும் வாயால் – ஆண்டி சுப்பனைப் பாடுவேனோ?
அம்மை யப்பனைப் பாடும் வாயால்….’
‘பெரிசுக்கு லந்தப் பாரேன். நான் ஆண்டி சுப்பனா?’ எனக் குமைந்தவன், தன் ப்ளே லிஸ்ட்டை தட்டிவிட்டான்.
‘….இந்தா ஹே இந்தா
பேர் பெருசு
இவன் ஆள் புதுசு
வழியோ தினுசு
இருக்கு மனசு ஹே உள்ளார
குத்தமில்ல சுத்தமில்ல
பத்தமில்ல…’
இப்படியாக இருவரும் ஆளுக்கு ஒரு பாட்டைப் போட்டு அலப்பறை செய்துகொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் சங்கரன் காதல் பாடல் போடுகிறேனென ஒரு பாடலை ஒலிக்கவிட்டார்.
‘நிலவு ஒரு பெண்ணாகி
உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம் மாறி
நீந்துகின்ற குழலோ…’
அந்தப் பாடலின் முடிவில் சிந்தனைவயப்பட்ட நிலையில் இருந்தான் பிரமோத்.
பேரனைப் பார்த்தார் சங்கரன். ‘என்ன இவ்வளவு நேரம் அடுத்தப் பாட்டு போடாம, மாட்டுக்கு புண்ணாக்கு வைக்க மறந்தவன் மாதிரி உட்கார்ந்திருக்கான்?’
இந்த பிரமோத் அப்படி என்ன சிந்தனையில் இருக்கிறானாம்? அவனின் மனக்குரலுக்கு சற்று செவி கொடுத்தோமேயானால் அது இப்படியாக இருக்கிறது.
‘இந்தப் பாட்டை எங்கேயோ கேட்டிருக்கேனோ?’ எனக் குழம்பினான்.
திடுமென பழைய நினைவுகளைக் கிளற வந்து, மூளையின் ஒரு பகுதியில் சிறு சலசலப்பை ஏற்படுத்தும் வல்லமை, சுவாசத்தில் பரவும் சுகந்தங்களுக்கு மட்டுமல்ல, மென்னதிர்வுகளில் போதையேற்றும் இசைக்கும் உண்டு. அவனுக்கு அந்தப் பாடல் ஏதோ ஓர் பிஞ்சு முகத்தை நினைவுபடுத்த முயன்றது. அதில் நெஞ்சின் ஓரம் சிறு வெதுவெதுப்பை உணர்ந்தான் பிரமோத். ஆனால் அதைப் பற்றி மேலும் சிந்திக்க முயலவில்லை.
‘வாட்எவர், லிரிக்ஸ் நல்லா இருக்குது. நோட் பண்ணிக்குவோம். அப்புறமா சித்தாராவுக்கு போட யூஸ் ஆகும்.’ என்று தன் சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.
இப்படியாக விருதுநகரில் முடிந்தது பயணம். ஆனால் அங்கே சங்கரனுக்கு இரத்தக் கொதிப்பை வரவழைத்துவிட்டு அவரருகே நல்ல பிள்ளையாய் நின்றிருந்தான் பிரமோத்.
தூறல் தூறும் 🌧️🌧️🌧️