Loading

அத்தியாயம் 2

பத்து தலைமுறைகளைத் தாண்டியும் கம்பீரமாய் நின்றிருந்தது அந்தக் காரை வீடு. வருடாவருடம் பராமரிப்பு செலவு மட்டுமே லட்சங்களை விழுங்கி, புது பொலிவுடன் மிளிரும் அவ்வீட்டில் சிறிய தலை முதல் பெரிய தலை வரை மொத்தம் பத்துப் பேர் இருக்கின்றனர்.

முற்காலத்தில் நெல் சேமிக்கும் அறையாக இருந்தது தற்சமயம் ஸ்டோர் ரூமாக உருமாறியுள்ளது. மாடியில் ஓய்வறை, பால்கனியுடன் சேர்ந்த விசாலமான நான்கு அறைகள், அதே போல் கீழ் தளத்தில் நான்கு அறைகள், சமையலறை, சாப்பாட்டுக் கூடம், விருந்தினர் அறை, பூஜையறை, முற்றத்தில் துளசி மாடம் என அனைவரும் விரும்பக்கூடிய அழகிய வீடு. அது விருதுநகர் அருகேயுள்ள கருவேலம்பட்டியில் பெயர் சொல்லுமளவிற்கு பெரிய குடும்பம்.

“இன்னிக்கு டவுனுக்கு போற சோலி இருக்கப்பா. இந்த தறுதலை எங்கே போய் தொலைஞ்சான்?” என மகனிடம் கேட்டவாறே வந்தமர்ந்தார் அவ்வீட்டின் பெரிய தலை சங்கரன் தாத்தா. விவசாயிகள் மற்றும் விவசாய வளர்ச்சிக்கு பாடுபடும் மனிதருக்கு வரும் ஐப்பசி வந்தால் அகவை எண்பது. கருவேலம்பட்டியின் கருவேலங்காட்டையும் பசுமையாக மாற்றும் திறமை கொண்டவர்.

சாகுபடி செய்யப்படும் பயிர்களின் விதைகளை அவற்றின் வளர்சூழலுக்கு ஏற்ப, சேற்றுப் பாங்கிலோ அல்லது புழுதிப் பாங்கிலோ பாவி தனியாக வளர்த்து நடவிற்கு பயன்படுத்துவதற்கு, பண்படுத்தும் இடத்தை நாற்றங்கால் என்பர். பெரியவர் சங்கரனும் இயற்கை முறைகளைப் பின்பற்றி அதிக மகசூல் தரும் பழங்கள் மற்றும் காய்கறிகள் வளர்ப்பதற்காக நாற்றங்கால் ஒன்றை உருவாக்கி, தனது மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு விநியோகித்து வருகிறார். இதற்காக சிறந்த குடிமகன் என்ற கௌரவத்தையும், பத்மஸ்ரீ விருதையும் ஒரு குடியரசு தினத்தில் பெற்றவர்.

இதற்கென கருவேலம்பட்டியில் உற்பத்தி குழுவையும் உருவாக்கி வைத்துள்ளார். இவரின் இயற்கைமுறை விவசாயம் மூலம் நல்ல வருமானத்தைப் பார்த்த பிறகு, ஊரில் பல இளைஞர்களும் விவசாயத்தில் சேர்ந்துள்ளதில் பெரியவருக்கு ஏகப் பெருமை!

பல இளைஞர்கள் தன் பாதம் பின்பற்றி நடக்க, தன் சொந்த பேரன் மாற்றுப்பாதை அமைத்து செல்வதில் அதிருப்தி அடைந்திருந்தவருக்கு அவன் ‘தறுதலை’ ஆகிப் போனான்.

“நான்தான்ப்பா ஃபோனுக்கு சார்ஜர் வாங்க அனுப்பினேன்.” என வாய்க்கு வந்ததை உளறினார் சரவணன். சங்கரனின் தலைச்சன் பிள்ளை.

சரவணனின் நேர்மையின் பொருட்டு ஊர்தலைவர் போன்ற பதவிகள் தேடி வந்தும் கூட அதெல்லாம் நமக்கு சரிவராது என்று மறுத்துவிட்டவர் சிவகாசி- விருதுநகர் சாலையில் பட்டாசு ஆலை வைத்துள்ளார். அலுவலகம் விருதுநகரில்!

“ஓஹோ! சார்ச்சர் மெடிக்கல் ஷாப் வாசல்ல வந்து நிற்கற மினி பஸ்ல தான் கிடைக்குதோ?”

“அப்பா…”

“என்னடா நொப்பா? புள்ளையைக் கண்டிச்சு வளர்க்க துப்பில்ல. இதுல அவனை விட்டுக்கொடுக்காம பேசறதா நினைப்பு வேற! என்னத்தையாவது சொல்லி வைப்போம். இந்த கிழவனுக்கு எங்கே தெரியப் போகுதுன்னு நினைக்கறியோ?”

“அய்யோ இல்லீங்கப்பா!”

“காலைல நாத்து கேட்க வந்தவகளுக்கு கணக்கு பார்த்து கொடுத்துட்டு வர்ற வழில உம்மவனோட லட்சணத்தைப் பார்த்துட்டுதான் வந்தேன். அந்த கண்டக்டர் பயலுக்கு சாராயம் ஊத்தி கொடுத்துட்டு இருக்கான்டா நீ பெத்த தறுதலை!”

“நான் சொல்லி கண்டிச்சு வைக்கறேன்ப்பா.”

“என்னத்தைச் சொன்னியோ போ… அஞ்சுல வளைக்காம விட்டுப்புட்டு இப்ப இருவத்தஞ்சுல வளைக்க நினைக்கற நீ! அடியாத மாடு படியாதுடேய்… அப்போவே அடிச்சு வளர்த்திருந்தா இப்போ சொன்ன பேச்சைக் கேட்டு காட்டுல (வயல்வெளி) காலை வச்சிருப்பான். நானும் என் பேராண்டியை என் வம்சம் தழைக்க வந்தவன்னு கொண்டாடிருப்பேன்.”

“அவனை இன்னிக்கு கவனிச்சுக்கறேன். நீங்க சாப்பிட வாங்கப்பா.”

“ஹூம் ஹூம்!” என ஹூங்காரம் செய்தவர் மீசையை நீவிவிட்டு டைனிங் ஹாலை நோக்கி நகர,

‘என் புள்ளையைக் கரிச்சுக் கொட்டலைன்னா இந்த மனுஷனுக்கு சாப்பிட்டது செமியாதே!’ என உள்ளூரப் புகைச்சலுடன் உணவு பரிமாற வந்தார் காஞ்சனா. சரவணனின் மனைவி -சங்கரனின் மூத்த மருமகள்.

காஞ்சனா ஒரு எம்பிஏ பட்டதாரி. ஆக, தற்சமயம் குடும்பத் தலைவி பதவியோடு, கணவரின் அலுவலகத்தின் நிர்வாகியாகவும் செயல்படுகிறார். அதில் சங்கரனுக்கு மருமகளின் மீது நிரம்ப மரியாதையும் பெருமையும் உண்டு.

மாமனாருக்கு விவசாயத்தின்பால் உள்ள விருப்பமும், அடுத்தவர்க்கு உதவும் குணமும், அவரின் அயராத உழைப்பும் என காஞ்சனாவிற்கும் பெரியவரின் மீது மிகுந்த பக்தியுண்டு. ஆனால் இருவருக்கும் முட்டிக் கொள்ளும் விடயமும் உண்டு. அதுவே தற்சமயம் நிகழ்ந்தது.

‘அவன் எத்துணைச் சேட்டைக்காரனாக இருந்தாலும் என் பிள்ளையல்லவா?’ என பெற்றவளாய் காஞ்சனா.

‘தறுதலையைப் பெற்றுவிட்டு அதில் பெருமை வேறா?’ என கௌரவம் காக்கும் தாத்தனாய் சங்கரன்.

தந்தை மற்றும் மனைவி என இருவருக்கும் இடையே இடிபட்டு, இருவரோடு சேர்த்து மகனையும் சமாளிக்கும் இடிதாங்கியாய் சரவணன்.

இப்போதும் தந்தைப் பேசிய பேச்சிற்கு தன்னை முறைக்கும் மனைவியை நிமிர்ந்தும் பாராமல், சோற்றுப் பருக்கை வெள்ளை நிறம்தானே என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தவரை ஆர்ப்பாட்டமான ஒரு குரல் கலைத்தது.

“அப்பா… நம்ம மல்லிகா இருக்குதுல்ல? அது மவளுக்கு பரிசம் போடப் போறாகளாம். பத்திரிகை வைக்க வந்துட்டு இருக்கா.” என்றார் அசோகன், சங்கரனின் இரண்டாவது மகன்- சரவணனின் தம்பி.

தந்தையோடு விவசாயத்திலும் அண்ணனுக்கு பட்டாசு ஆலையிலும் உதவியாக இருக்கும் அசோகனின் தேவை அக்குடும்பத்தில் இன்றியமையாதது.

சரவணன், “யாருடா?” யாரந்த மல்லிகா என்ற குழப்பத்தில் தம்பியிடம் சந்தேகம் கேட்க,

“ஏண்டா எந்தம்பி மவளை உனக்குத் தெரியலயா?” என முழியை உருட்டினார் சங்கரன்.

உடன்பிறந்த தம்பியாக இருந்தால்… அட, சிற்றப்பா அல்லது பெரியப்பாவின் மகன் என்றாலும் கூட தெரிந்திருந்திருக்கும். இவர் எத்தனை விட்ட தம்பியோ!

சரவணன் முழிக்க, “நம்ம அப்பாவுக்கு நாலு விட்ட சித்தப்பாவோட பையன் கேசவன் சித்தப்பா இருக்கார் இல்ல? அவரோட மக தான் இந்த மல்லிகாவாம். அந்தப் புள்ள நமக்கு சொந்தம்ன்னு தெரியும். இப்டி சுத்தி வளைச்சு வர்றதெல்லாம் தெரியாது.” என அண்ணனைக் காப்பாற்றும் தம்பியாக அசோகன்.

“ஓ அவரா? சிவகாசில சின்னதா மேட்ச் ஓர்க்ஸ் வச்சிருக்கார் போல. நம்ம ஃபயர் வொர்க்ஸ்லயும் டீலிங் வச்சிருக்கார். (‘மேட்ச் வொர்க்ஸ்’ என்பது தீப்பெட்டி தொழில். ‘ஃபயர் வொர்க்ஸ்’ என்பது பட்டாசு தொழில்.) அவர் மருமகன் கதிரவன் என் கூட படிச்சவன்தானே! கரிசகொளத்துக்காரன். கொஞ்சநாள் வெளிநாட்டு பக்கம் போயிட்டு வந்தான். அப்டியே ‘டச்’ விட்டுப்போச்சு.” – அந்த சித்தப்பா யாரென்று அடையாளம் பிடிபட்டு விட்ட மகிழ்வில் சரவணன்.

“என்கிட்டயும் முன்னெல்லாம் மல்லி நல்லா பேசுவா. இப்போ ஏதாவது விசேசத்துக்கு போகும்போது பார்த்து பேசறதோட சரி.” – காஞ்சனா.

கருவேலம்பட்டிக்கும் கரிசல்குளத்திற்கும் நடுவே ஒரு தார்சாலை மட்டுமே. தார்சாலையிலிருந்து கிழக்கு, மேற்கு எனப் பிரியும் சிமெண்ட் சாலைதான் கரிவேலம்பட்டி மற்றும் கரிசல்குளத்திற்கு செல்லும் வழி. இரண்டு ஊர்களுக்கும் பொதுவாய் வந்து போகும் சிற்றுந்துதான் நாம் முதல் அத்தியாயத்தில் பார்த்தோம்.

“நமக்கு சிவாசி (சிவகாசி) பக்கம் போற சோலிக் கழுதை ஒண்ணுமில்ல. அவன்தான் பொண்ணைக் கட்டிக் கொடுத்த ஊரு’ன்னு கரிசகொளம் பக்கம் வருவான். வரும்போது எப்பவாவது எட்டிப் பார்ப்பான். ‘என்னண்ணே எப்டி இருக்கே?’ன்னு செத்த நேரம் பழங்கதையைப் பேசிட்டு போவான். அவனுக்கு ரெண்டும் பொண்ணா போச்சு. பாவம் அதுலயும் ஒண்ணைச் சிறுசுலயே விஷகாய்ச்சலுக்கு பறிகொடுத்துட்டான்.” – தம்பியின் நினைவில் சங்கரன்.

சரவணன் சொன்னார். “ஆமாம்பா. நம்ம ஆபீஸ்க்கு வரும் போதெல்லாம் என் வம்சம் என் பொண்ணோட முடிஞ்சிடுச்சே வருத்தப்படுவாப்ல! அவளுக்கும் ரெண்டும் பொண்ணுதானே?”

“ம்ம்! அதுல ஒரு பிள்ளைக்கு தான் பார்த்திருக்கா போல… என்னவோ இப்டியே ஒவ்வொரு சொந்தமா விட்டுப் போகுதேப்பா…” சொன்னவரின் முகத்தில் நிரம்ப வருத்தம்.

அசோகன் கேட்டார். “என்னப்பா இப்ப விட்டுப் போச்சு? அதான் அந்தப் புள்ள பத்திரிகை வைக்க வருதுல்ல?”

“ஆங்! பத்திரிகை வைக்க வாரது யாருன்னே உனக்கும் உங்கொண்ணனுக்கும் தெரியல.” கேலியாக சொன்னாலும் குரலில் வருத்தம் இழையோடியது.

“அதெல்லாம் தெரியும்பா! இவன் மொட்டைக் கட்டையா மல்லிகான்னு பேரை மட்டும் சொல்லவும்தான் யாரோன்னு நினைச்சேன். அவ புருஷன் பேரைச் சொல்லிருந்தா உடனே தெரிஞ்சிருக்கும்.”

“ஹூம் ஹூம்!” என்றவர், இளைய மகனிடம், “அந்தப் புள்ள பத்திரிகை வைக்க வருதுன்னு உனக்கு எப்டிடா தெரியும்?” எனக் கேட்க,

அசோகன், “இப்ப நம்ம ராமசாமி பெரியப்பா வீட்டு ஃபங்ஷனுக்கு பட்டாசு கிஃப்ட் பார்சல் கொடுக்க போனப்ப தான் தெரியும்பா… உங்களையும் பார்த்து பத்திரிகைக் கொடுக்க நம்ம வீட்டுக்கு வரணும்னு சொன்னா. பேச்சுவாக்குல ராமசாமி பெரியப்பாதான் உங்க சுத்துவழி சொந்தத்தைப் பத்தி சொன்னார்.” என்று சத்தமாக சொன்னவர், “எனக்கு தலையே சுத்திடுச்சு.” என்றார் முணங்கலாக!

ஆனால் அது எதையும் கவனியாமல் பெரியவர், உணவு உண்டு முடித்த காய்ந்த விரல்களோடு சிந்தனையாக அமர்ந்திருந்தார்.

“நீங்களும் சாப்பிட உட்காருங்க தம்பி. நீங்க உங்க மச்சினர் வீட்டுக் கல்யாணத்துக்கு எப்போ போறீங்க? அமலா அங்கே எதிர்பார்த்துக்கிட்டே இருப்பாள்.” என்ற காஞ்சனாவின் குரலில் கலைந்து, இளையவரைக் கேள்வியாகப் பார்த்தார் சங்கரன்.

அசோகனின் மனைவிதான் அமலா. உள் வீட்டு விவகாரங்கள் மற்றும் கணக்குகள் அனைத்திற்கும் பொறுப்பு அமலாதான். அவ்வீட்டில் மாட்டுக் கொட்டகையில் இருந்து மாடியில் கூட்டிப் பெருக்கும் வேலை வரை பணியாளர்களிடம் வேலை வாங்கும் சாமர்த்தியம் அமலாவிற்கு மட்டுமே கைவந்தது. இதிலெல்லாம் காஞ்சனா தலையிடுவதில்லை. இப்போது அண்ணன் மகனுக்கு திருமணம் என்று அமலா பிறந்தகம் போய் ஐந்து நாட்களாகிறது.

“கல்யாணத்துக்கு முதல் நாள் போகலாம்னு பார்க்கறேன் மதினி.” என்ற அசோகன் சாப்பாட்டில் கவனமாக,

சங்கரன் மகனைக் கடிந்து கொண்டார். “கல்யாணம் உன் மருமவனுக்குடா… மூணாம் மனுஷன் மாதிரி முதல் நாள் போறேங்கற?”

“நான் போயிட்டா இங்கே கிடக்கற வேலையெல்லாம் மேற்பார்வைக்கு ஆளில்லாம அப்டி அப்டியே கிடக்கும்பா.”

“எப்பா… நீதான் இந்த வீட்டைத் தூக்கி நிறுத்தற தூணு, ஒத்துக்கறோம். ஃபயர் வொர்க்ஸையும் காடு, கரையையும் பார்க்கற மாதிரி சொந்த பந்தத்தையும் பார்க்கணும்டா அசோக்கு. நீ நாலு நாளைக்கு முன்னாடியே போ! நாங்க எல்லாரும் பிற்பாடு வாரோம். எங்க ஐயாவு’க்கும் என் சீமாட்டிக்கும் பரீட்சை இருக்குதுல்ல…” என்று பேச்சை முடித்தார்.

சங்கரனின் ‘ஐயாவு’ என்ற செல்ல விளிப்பிற்கு சொந்தக்காரன் அசோகனின் ஒற்றை மகன் அரவிந்தன். அவரின் சீமாட்டி என்பவள் அவரின் கொள்ளு பேத்தி.

இந்த சங்கரன் தாத்தாவிற்கு இரு மகன்கள். அவர்களை சரவணன், அசோகன் என மேற்படி உரையாடலில் பார்த்தோம். சரவணன் – காஞ்சனா தம்பதியர்க்கு மூன்று மகன்கள். அதில் மூத்தவன் மனோகரனுக்கும் சங்கரன் தாத்தாவிற்கும் ஒத்து வராமல் போக, தற்சமயம் அவன் வட மாநிலம் ஒன்றில் குடியேறியுள்ளான்.

இரண்டாமவன் ஸ்ரீதரன். தாத்தாவைப் பின்பற்றி படித்து முடித்த கையோடு வயல் வரப்பில் காலூன்றியதால் அவன் செல்லப் பேரனாகிப் போனான். அத்தோடு ஸ்ரீதரன் தன்‌ சொந்த முயற்சியில் அரிசி ஆலை ஒன்றும் நிறுவி நிர்வகித்து வருகிறான். அவனுக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. அவள்தான் சங்கரன் தாத்தாவின் ‘செல்வ சீமாட்டி’. அந்தக் குட்டிப்பாப்பா அமுதினி கிண்டர் கார்டன் போகிறாள். அவளுக்குத்தான் கல்யாணத்திற்கு செல்ல முடியாமல் பரீட்சை இருக்கிறதாம்!

மூன்றாமவன் தாத்தாவிற்கு பிடித்தமில்லா ‘தறுதலை’. நன்றாக படிப்பு வந்தும்கூட ஒழுங்காக படிக்காமல் தாத்தாவை வெறுப்பேற்றியவன். ஏதோ பெயருக்கு பாலிடெக்னிக்கில் ஒரு டிப்ளமோ முடித்துள்ளான். ம்ம்… அவன் பெயரை இப்போதே சொல்லிவிடவா?

அடுத்து இளையவர் அசோகன்- அமலா தம்பதியர்க்கு ஒரே மகன் அரவிந்தன். அவன் சிறு வயதிலிருந்து தாத்தாவின் சொல்லிற்கு கீழ்ப்படிந்து வருவதால் அவன் எப்போதும் சங்கரன் தாத்தாவின் ‘செல்ல ஜயாவு’ தான். தற்போது முதுகலையில் மண் அறிவியல் மற்றும் வேளாண் வேதியியல் பிரிவில் முதல் வருடம் படிக்கின்றான். அதில் ஆராய்ச்சி படிப்பை முடித்து, பயிர் உற்பத்தி நிபுணராக (Crop Production Specialist) வேண்டுமென்பதே அவன் லட்சியம். அதில் சங்கரனுக்கு நிரம்ப பெருமை.

“ஹாய் தாத்தா, ஹேப்பி சன்ஷைன்!” என உற்சாகமாக மாடியிறங்கி வந்தான் அர்விந்தன்.

“நம்மூர் வெயில் மண்டையைப் பிளக்கறது உனக்கு கேப்பியா ஐயாவு?” என பேரனிடம் தோழனைப் போல் பேசும் சங்கரன், மாடியிலிருந்து வந்த கொலுசு சப்தத்தில் புன்னகை முகமாய் மேலே பார்த்தார்.

பள்ளிச் சீருடை அணிந்து அம்மாவின் கையைப் பிடித்துக்கொண்டு தத்தித் தத்தி நடந்து வந்தாள் சங்கரனின் கொள்ளுப் பேத்தி அமுதினி.

“ஹாய் அம்மு! இன்னிக்கு எக்ஸாம்க்கு ஒழுங்கா படிச்சிருக்கியா?” – அரவிந்தன்.

“அமுடி(தி)னி குட் கேர்ள்! நீ எக்ஸாமுக்கு படிச்சியா?” என அவள் சிற்றப்பனைத் திருப்பிக் கேட்க, அனைவருக்கும் புன்னகை அரும்பியது.

ஸ்ரீதரனின் மனைவி பிரியா முழு அர்ப்பணிப்போடு பணி செய்யும் செவிலியர். விருதுநகரில் உள்ள ஒரு 24/7 நேர பல்நோக்கு மருத்துவமனையில் பணிபுரிகிறாள். நேற்று இரவு நேரப் பணி முடித்து வந்தவள், சிறிது நேர ஓய்வின் பின்னர் மகளைப் பள்ளிக்கு தயார் செய்திருந்தாள்.

“பிரியா, ஸ்ரீ எங்கேம்மா?” காஞ்சனா கேட்டார். காலையில் இருந்து தன் இரண்டாம் மகன் கண்ணிலேயே படவில்லையே!

“காலைலயே வாழை லோடு ஏத்தணும்னு போனார் அத்தை.”

“ஃபோன் போட்டு வரச் சொல்லு. சாப்பிட்டுட்டு எங்கேயும் போகட்டும். நீயும் உட்கார். சாப்பிட்டுட்டு போய்த் தூங்குவியாம்.”

அமுதினியை அசோகன் அழைத்துச் செல்ல, அர்விந்தன் கல்லூரிக்கு கிளம்ப, சங்கரனும் சரவணனும் பின்தங்கினர். கூடவே காஞ்சனாவும் பிரியாவும் அமர்ந்திருந்தனர். அவர்கள் குறிப்பிட்ட மல்லிகா, ஏதோ விழாவிற்கு அழைக்க வருகிறாரே!

காஞ்சனா மெல்லிய குரலில் மருமகளிடம் வருபவர் யாரென சொல்லிக் கொண்டிருந்தார். ‘சத்தியமாக புரியவில்லை’ என்று மனதிற்குள் அலறினாலும் புரிந்தாற் போல் தலையாட்டினாள் பிரியா.

அவர்கள் எதிர்பார்த்த மல்லிகாவும் அவர் கணவருடன் வர, இவர்கள் வெளியே சென்று வரவேற்றனர்.

சரவணன், மல்லிகாவின் கணவர் கதிரவனைத் தோளையணைத்து கேட்டார். “பக்கத்தூர்ல இருந்துக்கிட்டு இந்தப் பக்கம் எட்டி கூட பார்க்கறதில்லயே மாப்ள?”

“நம்ம பழைய ஃப்ரெண்ட்ஸை எல்லாம் அப்பப்போ பார்க்கணும்னு தோணும் மச்சான். வேலைலயே நேரம் போயிடும்.” என்ற கதிரவன் அச்சுத் தொழில் செய்கிறார்.

சங்கரனை, “பெரியப்பா…” என்றழைத்த மல்லிகா அங்கிருந்த ஒவ்வொருவரையும் நலம் விசாரித்தார்.

உள்ளே அழைத்து உபசரித்தனர்.

“உங்கப்பன் எப்டிம்மா இருக்கான்? பார்த்து நாளாச்சு.”

“நல்லாயிருக்கார் பெரியப்பா. ஒரு நாள் வர சொல்றேன்.” என்றவர் நிச்சயதார்த்த விழாவிற்கு பத்திரிகையை எடுத்து நீட்ட,

“கல்யாணம் மூத்தப் பொண்ணுக்கா? இளையவளுக்கா?” எனக் கேட்டவாறே வாங்கினார் சங்கரன்.

கதிரவன் சொன்னார். “மூத்தவளுக்கு தான் மாமா. இளையவ இன்னும் படிப்பை முடிக்கல.”

“படிக்குதா? என்னப் படிக்குது?” உள்ளூர ஏற்பட்ட யோசனையை மறைத்துக்கொண்டு கேட்டார்.

“த்ரீ வீ காலேஜ்ல பிபிஎம் படிக்கிறா. இது ஃபைனல் இயர்.”

“நம்ம சொந்தம் எல்லாருக்கும் சொல்லிருக்கேன் பெரியப்பா. நீங்களும் குடும்பத்தோட கண்டிப்பா வரணும்.” – மல்லிகா.

“நிச்சயத்துக்கே பத்திரிகை அடிச்சிருக்க? கிராண்டா செய்றியா கதிரு?” – சரவணன்.

“ஆமா மச்சான். நம்ம வீட்ல முதல் கல்யாணம். அதான் பத்திரிகை அடிச்சு சுத்துப்பட்டு சொந்தத்தை எல்லாம் அழைச்சிருக்கேன்.”

சற்று நேரம் சரவணன் கதிரவனுடனும், மல்லிகா மற்றவர்களுடனும் அளவளாவிவிட்டு புறப்பட்டனர்.

 

தூறல் தூறும் 🌧️🌧️

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
6
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்