அத்தியாயம் 14
அன்று இரவெல்லாம் கண்ணீர்த்தூவலில் தன் தலையணையை நனைத்தாள் நிவர்த்திகா.
‘இப்டி தலையைக் குனிஞ்சுக்கிட்டா என்ன அர்த்தம்?’ அன்று அக்கா ஆர்த்தியின் நிச்சயத்தன்று சித்தாராவிடம் என்னமாய்க் கொஞ்சினான்!
‘நிமிர்ந்து என்னைப் பாரு சித்து.’ அந்தக் குரலில்தான் எத்துணைக் குழைவு!
அன்று அவளிடம் அப்படி குழைந்த குரல் இன்று தன்னிடம் என்ன அதிகாரமாய் அதிர்ந்தது!
‘நிமிர்ந்து பாருடி! பெரிய உலக அழகி…’
‘பதில் சொல்லுடி! சரியான அழுத்தம்!’
ஒவ்வொரு நாளும் சிற்றுந்தில் சித்தாராவைத் தேடும் கண்களும், அன்று அவளருகே அமர்ந்திருந்தபோது அவன் வதனம் காட்டிய பூரிப்பும், கல்லூரியில் அவளைத் தேடிய போது அவன் தவித்தத் தவிப்பும், அவளை அவன் எந்தளவு காதலித்திருக்கிறான் என்பதைப் பறைசாற்றுகிறதே! அப்படியாக காதலில் திளைத்துக் கிடந்தவன் எங்ஙனம் வேறொரு பெண்ணை மணக்க சம்மதிப்பான்?
இன்னமும் அவன் மனதில் அவள் அழுத்தமாய்ப் புதைந்து கிடப்பதால்தானே தன்னை இந்தளவு வெறுக்கிறான்? இந்தக் கல்யாணம் நடந்தால் இருவரின் வாழ்வும் அர்த்தமற்றதாகிவிடாதா? அவனே சொன்னதைப் போல் அன்பற்ற பிணைப்பு அல்லலில் முடியாதா?
இப்படியாக சிந்தித்து, தலையணையை நனைத்த கண்ணீருடன் பிரமோத் பேசிப் போனதையே நினைத்துத் தூங்காமல் கிடந்தாள் நிவர்த்திகா. நாளை காலையில் முதல் வேலையாக அப்பா, அம்மாவிடம் கல்யாணமும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று சொல்லிவிட வேண்டும் என முடிவெடுத்துக் கொண்டாள்.
மறுநாளும் அவளால் பிரமோத் ஏற்படுத்தியிருந்த தாக்கத்திலிருந்து வெளிவர இயலவில்லை. பெற்றோரிடம் பேசுவதற்கு முன் விஜிக்கு அழைத்தாள்.
எடுத்ததுமே, “விஜிஇ…” என்று அழுதவளின் குரலில் மறுமுனையில் இருந்தவளுக்கு தூக்கிவாரிப் போட்டது.
“நிவி… நிவி என்ன பிள்ள? என்னத்துக்கு அழற?”
“நேத்து அவன் வந்தான் விஜி.” என்று ஆரம்பித்து பிரமோத் பேசிவிட்டு போனதைச் சொல்லி அழுதாள்.
“இப்டி பேசறவன் கூட எப்டி வாழ முடியும் விஜி? இந்தக் கல்யாணம் வேண்டாம்னு அப்பா கிட்ட சொல்லிட போறேன்’டி.”
அந்தப் பக்கம் சிறிது நேரம் நிசப்தம்.
விஜி நேற்றே தோழியின் மனதினை அலசியிருந்தாள். அன்று கல்லூரியில் நிவர்த்திகா, பிரமோத்தைக் காண்பதைத் தவிர்த்த போதே இவளுக்கு ஏனென்ற கேள்வி உதித்தது. ஆனால் அதனை அப்போது பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.
ஏன் இரண்டு நாட்கள் முன்பு தன் தோழிக்கு கணவனாக வர இருப்பவன் பிரமோத் என்று தெரிந்த போதும் கூட, முதலில் மனம் அதிரவே செய்தது. ஆனால் நேற்றைக்கு முதல்நாள் பூ வைத்த அன்று நிவர்த்திகாவைப் பார்த்தபோது, அழும் அவள் முகத்தில், ‘ஏன் விருப்பமின்மையைக் காணவில்லை?’ என்ற கேள்வி முளைத்தது. நியாயமாக பார்த்தால் வேறொரு பெண்ணின் பின்னால் சுற்றியவனை இவள் மறுக்கத்தானே வேண்டும்?
தோழி என்ற முறையிலும், ஒருநாள் பிரமோத்தின் மனதினை அருகிருந்து பார்த்தவள் என்ற முறையிலும் விஜியின் மனம் இருவர் குறித்தும் ஆழமாய்ச் சிந்தித்தது.
நிவர்த்திகா ஒருநாள் சிற்றுந்தில் இருந்தபோது, ‘கோணலா இருந்தாலும் என்னோடதாக்கும்.’ என்றதில் ஆரம்பித்து, ஒவ்வொரு முறையும் அவனை அருகே காண நேரும்போது அவள் அவனைத் தவிர்த்ததையும், பல நேரங்களில் அவனைக் குறித்து சிடுசிடுப்பாய்ப் பேசியதையும் நினைத்துப் பார்த்தாள்.
நிவர்த்திகா அத்தனை சீக்கிரத்தில் மனதினைத் திறக்கமாட்டாள் என்று தெரியும்தான். அதனால் முன்பே இவளைக் கவனித்திருக்கலாமோ என்று தோன்றியது.
‘ச்ச! என்ன ஃப்ரெண்டு நானு!’ எனத் தன்னை நிந்தித்துக் கொண்டவள், பெண் பார்க்க வந்தபோது நிவர்த்திகாவைத் தொடர்ந்த பிரமோத்தின் பார்வையையும் கவனித்திருந்தாள். அலைப்பேசி-நிவர்த்திகா, அமுதினி-நிவர்த்திகா, சபையோர்-நிவர்த்திகா, தாத்தா-நிவர்த்திகா, நடு நடுவே அவனருகே இருந்தவரோடு சிறு பேச்சு, மீண்டும் அதே வரிசையில் பார்வையிடுதல் என, நிவர்த்திகாவிற்கே கண்களைக் குத்தகைக்கு விட்டிருந்தான். ஆனால் அவளை முதல்முறை பார்ப்பதைப் போல் பார்த்ததில்தான் இவளுக்கு குழப்பம்.
அதையும் விசேஷம் முடிந்ததும் நிவர்த்திகாவிடம் கேட்க, “நீதானே சொல்லுவ, மினி பஸ்ல சித்துவைத் தவிர வேற யாரும் அவன் கண்ணுக்கு தெரிய மாட்டாங்க’ன்னு?” என்று மழுப்பியிருந்தாள் அவள்.
‘சித்துவோட ஃப்ரெண்டுன்னு என்னை மட்டும் எப்டி அடையாளம் தெரிஞ்சது அவனுக்கு?’ -குழப்பம்.
ஆனால் நிவர்த்திகாவைப் போல் பிரமோத்தும் அன்று விருப்பமின்மையைக் காட்டவில்லை. அவள் வீட்டினரிடம் கூட புன்னகை முகத்துடன் நன்முறையில் தானே விடைபெற்றான்?
எனவே தற்போது தோழியை அமைதிபடுத்த முயன்றாள் விஜி. “இங்கே பாரு நிவி, முதல்ல ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சுக்கோ. அவனுக்கு சித்தாரா மேல காதலுமில்ல ஒண்ணுமில்ல.”
“உனக்கு மண்டைல எதுவும் அடிப்பட்டிருச்சா’டீ? அப்டினாலும் அஞ்சு மாசமா டெய்லி பார்த்தது கூடவா மறந்துடும்?”
“அப்டி இருந்திருந்தா ஏன் அன்னிக்கு அவ இவனை வேண்டாம்னு சொன்னதும் ‘தேங்க் காட்’ன்னு சந்தோஷப்பட்டான்? என்னவோ அவ்ளோ நேரம் ஆக்ஸிஜன் இல்லாம மூச்சுவிடத் தவிச்ச ஹார்ட் பேஷண்ட் மாதிரி இருந்தவன், நான் போய் அவ வேற ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிக்க போறாளாம்னு சொன்னதும் ஃப்ரெஷ் ஏர் சுவாசிச்சவன் மாதிரி எவ்ளோ பிரைட் ஆனான் தெரியுமா?”
“…….”
“அவனை அவ ரிஜெக்ட் பண்ணதுக்கு குறைஞ்சபட்சம் வருத்தம் கூட படல நிவி அவன். ட்ரூ லவ் அப்டிதான் இருக்குமா?”
“அப்போ பஸ்ல நாம பார்த்தது?”
“அதுக்கு ஏன் உங்கப்பா சொன்ன விளக்கம் உண்மையா இருக்கக்கூடாது?”
நிவர்த்திகா சற்றுப் பொறுத்துக் கேட்டாள். “அப்போ ஏன் நேத்து என்கிட்ட அவ்ளோ ஹார்ஷா நடந்துக்கிட்டான் விஜி? அவனால அவளை மறக்க முடியாம தானே…”
“கண்டிப்பா அந்தக் காரணம் மட்டும் இருக்காது நிவி… அவன் வேற எதையாவது நினைச்சு உன்கிட்ட கோவப்பட்டிருக்கலாம். ஒருவேளை அவங்க தாத்தா எதுவும் சொன்னாரோ என்னவோ!”
“என் லைஃப்ல அவனை விட அவங்க தாத்தா ரோல் வெய்ட்டா இருக்கும் போலயேடி…”
“ஹஹ்ஹஹஹ…”
“அப்போ… விஜி… அவன் சித்துவை லவ் பண்ணவே இல்லையா?”
“இல்லவே இல்ல.”
“நிஜமா?”
“நிஜம்ம்மா! மனசுல இதை வச்சுக்கிட்டு வாழ்க்கையை ஆரம்பிக்காதே நிவிம்மா! அவனைப் புரிஞ்சுக்க டிரைப் பண்ணு.”
“ஹ்ம்ம்… ஆனா அவனுக்கு எவ்ளோ கோவம் வருது தெரியுமா விஜி? சித்துக்கிட்ட ஒருநாள் கூட கோவப்பட்டு நாம பார்த்ததே இல்ல.”
விஜி நிரம்ப புரிதலுடனும் மிகுந்த பொறுப்புடனும் பொறுமையாக சொன்னாள். “இப்போதானே சொன்னேன் நிவி? சித்துவை நினைச்சு கம்பாரிஸன்ல வாழ்க்கையை ஆரம்பிக்காதே! ஐ திங்க் அவனுக்கு உன்னைப் பிடிக்காம எல்லாம் இல்ல. நேத்தெல்லாம் அவன் கண்ணு உன் மேலத்தான். ஏதோ ஒரு எக்ஸ்பெக்டேஷனோட பார்த்தானே தவிர, பிடிக்காத பொண்ணைப் பார்க்கற மாதிரி பார்க்கல. அவன் கோவப்பட்டதுக்கு வேற காரணம் இருக்கலாம் நிவிம்மா.”
“ஹ்ம்ம்… சரி.”
“அண்ட் ஐ கெஸ் சம்திங் அபௌட் யூ… ஒருவேளை உன் மனசு அவன் பின்னாடி போச்சோ? அதனாலதான் அவனைச் சும்மா வஞ்சிக்கிட்டும் (திட்டுதல்), அவாய்ட் பண்ணிக்கிட்டும் இருந்தியோ? இல்லைன்னா உன்னால எப்டி பொண்ணு பார்க்கறதுக்கு அவன் முன்னால வந்து நின்னிருக்க முடியும்?”
“…..”
“பதில் சொல்லமாட்டியே… அழுத்தக்காரி.”
“நேத்து அவனும் இதேதான் சொன்னான்.”
“என்னன்னு?”
“சரியான அழுத்தம்னு”
“பரவால்ல உன்கிட்ட அதையாவது சரியா கண்டுபிடிச்சிருக்கானே…”
“அப்புறம் விஜி…”
“ம்ம்.”
“இனி அவரை அவன் இவன்னுலாம் சொல்லாதே…”
“ஏ…நிவீஈஈ…. தெளிஞ்சிட்டியா? அச்சோ இப்போ வீடியோ கால் வராம போயிட்டேனே… உன் முகத்தைப் பார்த்திருப்பேன். சும்மா கண்டதையும் நினைச்சு குழப்பிக்காம இப்டியே சந்தோஷமா இருடி.”
இப்போது மனம் தெளிந்திருந்தது. ஆனால் விஜி அத்தனை சொல்லியும் ஆர்த்தியின் நிச்சயத்தன்று தன் கண்ணால் நேரில் கண்ட காட்சி – பிரமோத் சித்தாராவின் முகமருகே குனிந்த அந்தக் காட்சி நிவர்த்திகாவின் அடிமனதின் ஒரு மூலையில் உறங்கியே கிடந்தது.
**~**~**~**~**
‘Mano Anna calling’ என்று திரைக் காட்டியதைப் பார்த்துவிட்டு உடனே அழைப்பை ஏற்றான் பிரமோத். “எப்டிண்ணே இருக்கே? ஊருக்கு வர்றேன்னு சொல்லி எவ்ளோ நாளாச்சு?”
“நான் ஒரு வன் இயர் கான்ட்ராக்ட் ப்ராஜெக்ட்ல சைன் பண்ணிருக்கேன்டா. இப்போதைக்கு அதுல வந்த அட்வான்ஸ் பணம் வச்சு சமாளிச்சிருக்கேன். அந்த வேலை முடிஞ்சதும் வர்றேன்னு அம்மாகிட்ட சொல்லு.”
“ஹ்ம்ம்.”
“ஹேய் வாட்’ஸ் பக்கிங் யூ மேன்? குரல் டல்லா இருக்குது?”
“வீட்ல கல்யாணம் பத்தி பேசினாங்க’ண்ணே. தாத்தா பொண்ணு பார்த்திருக்கார்.”
“நல்ல விஷயம்தானே? உனக்கு பொண்ணைப் பிடிக்கலையா?”
“அவளுக்குத்தான் என்னைப் பிடிக்கல.” சுணங்கிக் கொண்டான்.
“அப்டின்னு அவ சொன்னாளா? ஏனாம்?”
பதில், சொல்லிக் கொள்ளும்படி இல்லையே? ஆக பேச்சை மாற்றினான். “ப்ச்! உன்னை மாதிரி லவ் பண்ணி கல்யாணம் பண்ணிட்டு நிம்மதியா இருந்திருக்கலாம்.”
சிறிது மௌனத்திற்கு பிறகு, “எல்லா காதலும் சந்தோஷமா தான் ஆரம்பிக்கும் பிரமோத். முடிவுல காதலோ சந்தோஷமோ சுதந்திரமோ இருக்கறதில்லை.” என்று அவன் அவனின் நிலைப்பாட்டைச் சொன்னான்.
“என்னண்ணே சொல்ற? நீ சந்தோஷமா இருக்க தானே?”
“ஃபர்கெட் இட்! தாத்தா சொல்ற பொண்ணைக் கட்டிக்கோ. அவளுக்கு என்ன பிடிக்கலன்னு கேட்டு சரி செய்ய பாரு!”
“நீ என்னவோ சொல்ற ப்ரோ. உனக்கு என்ன கஷ்டம்னாலும் சொல்லு. ஊருக்கு வா.”
அண்ணனிடம் பேசிவிட்டு வைத்தபின், நிதானமாக சிந்தித்தான். நிவர்த்திகாவின் உள்ளத்தை தெரிந்துகொள்ள முயன்றான். என்ன முயன்றும் அவளை நினைத்தால் அந்தத் தாழ்ந்த இமைகள் மட்டுமே ஞாபகத்தில் வந்து தொலைத்தது. மனம் மீண்டும் முருங்கை மரமேறப் பார்த்தது. அவளிடம், தான் வேறெதையுமே கவனித்துப் பார்க்கவில்லை என்பதைச் சிந்திக்க மறந்தான்.
**************
பத்து மாதங்கள் கடந்திருந்தன. கடந்த நாட்களில் ஒரு நாளும் பிரமோத், நிவர்த்திகாவின் அகன்ற இமைகளை நினைக்க மறந்ததில்லை. இப்போது முன்பு போல் அதை நினைக்கையில் கோபம் வருவதில்லை. சொல்லத் தெரியாத ஓர் உணர்வில் அவனை ஈர்த்தன அவ்விமைகள்!
‘பார்த்தால் பிடிக்காது பார்க்க பார்க்கப் பிடிக்கும்’ என்ற சித்தாந்தமோ என நினைத்து தனக்குள் சிரித்துக்கொள்வான். இருந்தும் அவளுக்கு தன்னைப் பிடிக்கவில்லை என்ற எண்ணம் அவனை அலைக்கழித்தது.
விளைவு, இந்தப் பத்து மாதங்களில் சிலசமயம் திடுமென சுணங்கிப்போவான். சில சமயம் இந்தக் கல்யாணம் வேண்டாமென நினைப்பான். ஆனால் கதிரவனைச் சந்திக்க நேரும்போது நல்ல மாப்பிள்ளையாக நடந்துகொள்வான்.
இருந்தும் அவளைச் சந்திக்க முயற்சிக்கவில்லை. பாலா அவ்வப்போது தோழனின் மண்டையைக் கழுவிவிடுவான். தாத்தா கண்டும் காணாமல் இருந்துக்கொள்ள, வீட்டில் மற்றவர்களுக்கும் அப்படியே அறிவுறுத்தப்பட்டிருந்தது.
கல்யாணத்திற்கு நாள் நெருங்க நெருங்க இவன் மனதின் அலைமோதலும் அதிகரித்தது. இப்படியே போனால் திருமணத்திற்கு பின் தன் நிலைமை என்னவாகுமோ! அதைவிட தன் பொருட்டு அவளையும் துன்புறுத்திவிடுவோமோ என்ற பேரச்சமும் அடிமனதில் கிடந்து அரித்தது.
அன்று காலையிலேயே மழை வரும் போல் வானம் சோம்பல் முறித்துக்கொண்டிருந்தது. அவ்வப்போது குறட்டைப் போல் சின்ன சின்ன உறுமல்கள்.
நிவர்த்திகா தன் விருப்பம் போல் கல்யாணம் வரையில் வேலைக்கு செல்வதற்காக அப்பா கதிரவனிடம் அனுமதி வாங்கியிருந்தாள். அவரும் விருதுநகரில் பெரிய கடைவீதியில் இருந்த ஒரு பிரபலமான நிறுவனத்தில் சேர்த்துவிட்டிருந்தார்.
கடந்த ஒன்பது மாதங்களாக அவள் கல்லூரி செல்வதைப் போலவே அலுவலகத்திற்கும் சிற்றுந்தில்தான் வந்து போனாள். சிற்றுந்தில் இருந்து இறங்கி சிறிது தொலைவு நடந்துதான் அலுவலகத்தை அடைய முடியும்.
அன்றும் அதுபோல சிற்றுந்தில் இருந்து இறங்கியவள் அங்கே நின்ற பிரமோத்தை நிச்சயமாக எதிர்பார்த்திருக்கவில்லை. அது அவளின் வியப்பை ஏந்திய விரிந்த விழிகளில் இருந்து தெரிந்தது. அவ்விழிகளின் அழகை இவன் அள்ளும்முன் இமை தாழ்த்திக்கொண்டாள். இன்று அப்படி செய்ததற்காய் அவள்மேல் கோபம் வரவில்லை. ஏனெனில் நேற்று கிடைத்த போதனை அப்படி!
நேற்று வேலையில் மனம் செல்லாமல் முகச் சிணுக்கத்தோடே வீட்டிற்கு வந்தவன், வீட்டில் அமலா மட்டுமே இருப்பதைப் பார்த்தான். “எல்லாரும் எங்கே சித்திம்மா?”
“இன்னிக்கு திங்கக்கிழமையாச்சே? அவரவர் வேலையைப் பார்க்கப் போயிட்டாங்க.”
“ஓ!”
“நாளு, கிழமை தெரியாதளவுக்கு வேலை வாங்குறானா உங்கண்ணே?”
“ப்ச் இல்ல. நான் இன்னிக்கு ஸ்ரீ சொன்ன வேலையைச் செய்யல.”
“என்ன அப்பு மறுபடியும்?” அமலா அதிருப்தியாய் கேட்க,
“மூட் இல்ல சித்திம்மா.” என்றபடி சோபாவில் தளர்வாய்ச் சாய்ந்தான்.
அவனருகே அமர்ந்தவர் மகனின் தலைகோதிவிட்டு விஷயத்தைக் கறந்தார். மனதிற்கு நெருக்கமான சித்தியிடம் தன் மனக்குறையைச் சொல்வதால் அமைதி கிட்டும் என்றெண்ணியவனும், தாத்தா தொட்டு, சித்தாரா துவங்கி நிவர்த்திகாவிடம் வந்து முடித்தான்.
“இதுதானா உன் பிரச்சினை? முன்னாடியே என்கிட்ட சொல்லிருந்தா நான் அவக்கிட்ட பேசி உனக்குத் தேவையானதைக் கேட்டு சொல்லிருப்பேன்ல?”
“ச்சு போங்க! உங்களுக்காக பிடிச்சிருக்குன்னு சொல்லுவா.”
“சார் அவளே உங்கக்கிட்ட வாயைத் திறந்து பிடிச்சிருக்குன்னு சொல்லணும்னு எதிர்பார்க்கறீங்க? சரிதான். ஆனா அதுக்கு நீங்க அந்தப் பிள்ளைக்கிட்ட பொறுமையா இல்ல பேசணும்? உங்களுக்கோ பொறுமைன்னா அது எந்தக் கடைல விற்குதுன்னு தெரியாது.”
“சித்திம்மா… அவ இப்ப வரைக்கும் என் முகத்தை நிமிர்ந்து பார்க்கவே இல்ல.”
“நீ கொஞ்சம் நிதானமா யோசிடா. உனக்கு ஒரு காரணம் இருக்கற மாதிரி அவளுக்கு ஒரு காரணம் இருக்கலாமில்ல?”
“அதான் சொன்னேனே… சித்தாராவோட லவர்ன்றது தான் அந்த காரணம்!”
“அதுவும் உண்மைதானே செல்லம்?” என்றதும் இவன் கோபத்திற்கும் இயலாமைக்குமிடையே அல்லாடினான். உண்மை சுடுமல்லவா?
“உனக்கென்ன இப்போ அவ அவளோட பெத்தவங்க கட்டாயத்துல உன்னைக் கட்டிக்க சம்மதிக்கறாளா என்னன்னு தெரியணும். அவ்ளோதானே?”
“ம்ம்.” பாவமாய்த் தலையசைத்தான் பிரமோத்.
“அதுக்கு நீ உன் கருத்துல இருந்து வெளியே வந்து அந்தப் பிள்ளையோட மனசைப் புரிஞ்சிக்க பாருடா. அவ இதுக்குத்தான், இதனாலதான் பார்க்க மாட்டேங்கறான்னு நீயே அவளை முடிவு பண்ணா எப்டி?”
அமலா கேட்ட கேள்வி நியாயமானதுதான் என்று அதிசயமாய்ப் பிரமோத்தின் உள்ளம் ஒப்புக்கொண்டது.
நிவர்த்திகா ஆசைப்படி சிறிது காலம் வேலைக்கு போகிறாள் என்று கதிரவன் மாமா சொல்லியிருந்தார். அப்போது அவர் பேச்சுவாக்கில் இடத்தையும் குறிப்பிட்டிருக்க இன்று டியூக் உடன் வந்துவிட்டான்.
இப்போதும் அவள் இவனைக் கண்டு இமைத் தாழ்த்துகிறாள்தான்! இருந்தும் அமலா சொன்னதை மனதில் கொண்டு, ‘டோண்ட் ஜட்ஜ் க்விக்லி, பிரமோத்!’ எனத் தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.
டியூக்கை தள்ளிக்கொண்டு அவளோடு இவன் நடக்க, பதற்றம் ஒட்டிக்கொண்டது அவள் உடல்மொழியில்! மழைக்காற்று அந்த பரபரப்பான காலை நேரத்தில் புழுதியைக் கிளப்பிவிட்டது கடைவீதியில்!
“ஏய்! உன்கிட்ட பேச தான் வந்திருக்கேன். இப்டி ஓடினா என்ன அர்த்தம்? மெதுவா போ!”
“இங்கே ஏன் வந்தீங்க? நான் ஒண்ணும் சித்தாரா இல்ல!” எனவும், இவன் மனதில் அடிவாங்கினான். இதற்குதானே பயந்தான்!
தன்னை வேறொரு பெண்ணோடு தினம் தினம் பார்த்தவள் எப்படி தன்னை மனமுவந்து அவள் கணவனாக ஏற்றுக்கொள்வாள்? மனம் முணுமுணுவென்று உளைச்சலை ஏற்படுத்துவதை உணர்ந்தான்.
வானமும் முணுமுணுக்க ஆரம்பித்தது.
சரி எப்படியும் இன்று பேசிப் பார்த்துவிட வேண்டியதுதான் என்று நினைத்தவனுக்கு நிவர்த்திகாவை விட்டுக் கொடுத்துவிட மட்டும் தோன்றவே இல்லை. அவள் சொல்லால் அடிவாங்கிய மனதினை சமன் செய்துகொண்டு அழைத்தான் அவளை!
“நிவர்த்திகா நில்லு!”
மண்வாசனையை இழுத்து நுகர்கிறாளோ?
அவள் கால்கள் இரண்டும் நீயா நானா என போட்டிப் போட்டுக் கொண்டு தத்தம் வேகத்தைக் காட்டின. இவன் விருட்டென டியூக்கை ஓரமாக நிறுத்திவிட்டு, அவளுடன் தோளுரச நடக்க கலவரமாகப் பார்த்தாள். அது பெரிய வீதி என்பதால் அவ்வப்போது கனரக வாகனங்கள் கூட வந்து சென்றன. ஆக பாதசாரிகள் நடைமேடை மீதுதான் நடந்தாக வேண்டும். அத்தனைக் குறுகலான இடத்தில் இவன் இடித்தபடி நடப்பதில் அழுதுவிடுவது போலானாள்.
“ப்ச் பிரமோத்! ப்ளீஸ் போங்க…”
மழைத்தூவல்தான் சிலிர்க்க வைக்கிறதா? அல்லது இதயத்தில் வெதுவெதுப்பான திரவப்பொருள் எதுவும் சுரக்கிறதா என்ற ஐயமேற்பட்டது இவனுக்கு. ஏதோ இனந்தெரியாத உணர்வு ஆக்டோபஸாய் ஆக்ரமிக்க வருவதை இவன் உணரும்முன், அவள் நடக்கும் வேகத்தில் அவசர அவசரமாக தன் கேள்விக்கு வந்தான். “இந்த கல்யாணத்துல உனக்கு சம்மதமா இல்லையான்னு சொல்லு, போயிடறேன்.”
சிறுமழை பெருமழையாக வளர, “ஆஃபீஸ் வந்துடுச்சு. வர்றேன்.” என்றவள், அலுவலக நுழைவுவாயிலில் நுழையும்போது இவனைத் திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டு போனாள்.
பிரமோத்தின் கால்கள் தன் நடையை நிறுத்திவிட்டன. அவள் பார்த்தாள்! முழுமையாக இமைகளை விலக்கி இவனைக் கண்ணோடு கண் பார்த்தாள். பார்த்துவிட்டாளா? ஆமாம் ஆமாம்! பார்த்துவிட்டாள். அந்தக் கண்கள் தன்னிடம் ஏதாவது சொன்னதா? ஆங்… என்ன சொன்னது?
எத்தனை உரிமையான பார்வை! நிச்சயம் பரிச்சயமில்லாதவனைப் பார்க்கும் பார்வையல்ல அது! ஏக்கமா?, ‘என்னை விட்டுவிடேன்’ எனும் பார்வையா? அல்லது ‘இறுக்கிக்கொள்’ எனும் பார்வையா? தெரியவில்லையே… ஆனால் அதில் அலைகழிப்பைக் கண்டானே தவிர, அசூயையைக் காணவில்லை. பிணக்கையும் பீதியையும் கண்டானே தவிர பிடித்தமின்மையைக் காணவில்லை.
இப்படியாக சிந்தனையில் லயித்தபடி டியூக்கின் அருகே வந்தவன், அழும் முகத்துடன் அவளைப் போலவே மெல்லிய கீச்சுக் குரலில் டியூக்கிடம் சொன்னான். “ப்ச் பிரமோத்! ப்ளீஸ் போங்க!”
அதற்கு வலிக்கும் என்று எண்ணினானோ என்னவோ, இத்தனை வருடங்களாக இல்லாமல் அதனை அத்தனை மென்மையாக கையாண்டான்.
தூறல் தூறும் 🌧️🌧️🌧️