Loading

அத்தியாயம் 4

விருதுநகர் செல்லும் சாலையில் தன் சக்கரங்களை நிதானமாக தேய்த்து நகர்ந்து கொண்டிருந்தது அந்த டஸ்டர். உள்ளே பிரமோத்தின் பெற்றோர். சரவணன் காரைச் செலுத்த அருகே அவரின் தர்மபத்தினி காஞ்சனா.

பெரும்பாலும் சரவணன் பட்டாசு ஆலையைப் பார்வையிட போய்விட்டு, மதியத்திற்கு மேல்தான் அலுவலகம் வருவார். அப்போது காலையில் காஞ்சனா காரோட்டியுடன் செல்வார். இன்று போல் எப்போதாவது இருவரும் ஒன்றாகவே செல்வதுண்டு.

“எனக்கு பிரமோத்’அ நினைச்சு ரொம்ப கவலையா இருக்குதுங்க.” என்றார் காஞ்சனா.

“ஆரம்பிச்சிட்டியா உன் புலம்பலை? அதது அந்தந்த வயசுல புரியும் விடும்மா.”

“மாமாவாவது கொஞ்சம் அரவணைச்சுப் போகலாம். அவரும் அவன்கிட்ட வீம்பா இருக்கார்.”

முதல் இரண்டு மகன்களுக்கு மாமனார் பெயர் தேர்ந்தெடுக்க மௌனமாக இருந்த காஞ்சனா, கடைசியாய்ப் பிறந்த மகனுக்கு தான் தான் பெயர் வைப்பேன் என்று பிடிவாதமாக வைத்த பெயர்தான் ‘பிரமோத்’.

சங்கரனும் ‘பிரமோத்’ என்பது விநாயகரின் பெயர் என்று தம் மனதைத் தேற்றிக்கொண்டார். மாமனாருக்கும் மருமகளுக்கும் பிரமோத் விடயத்தில் அவ்வப்போது சிறு சிறு அதிருப்திகள் தோன்றுவதுண்டு. அதில் ஒன்றுதான் இப்போது காஞ்சனா சொல்வது.

“அப்பா அவனைத் திட்டினாலும் விட்டுக் கொடுக்கமாட்டார். அவனும் அவர் பேரன்தானே? அந்த நினைப்பு இல்லாம போகுமா?”

“என்னவோ இவனும் மனோ மாதிரி அவர்கிட்ட சண்டைப் போட்டுட்டு போய்டுவானோன்னு பயமா இருக்குதுங்க. அப்டி மட்டும் நடந்தா…”

மனோ இவர்களின் மூத்த மகன்.

“ப்ச்! நீ வீணா கற்பனைப் பண்ணிக்கற காஞ்சனா. பிரமோத் பெரியவன் மாதிரி கிடையாது. அப்டியெல்லாம் சுணங்கி, முகம் திருப்பிட்டு போறவன் இல்ல. நின்னு பதிலடி கொடுப்பான். டெய்லி பார்க்கறியே அப்பா கூட மல்லுக்கு நிற்கறதை!”

“இருந்தாலும் யாருக்கும் பயமே இல்லாம சுத்துறானே…”

“பையன்களுக்கு பயம் கூடாது. பெரியவங்க மேல மரியாதை இருந்தா போதும். இவன் யாருக்கு மரியாதை கொடுக்கறானோ இல்லையோ எனக்கும் என் பேச்சுக்கும் நிச்சயம் மரியாதை கொடுப்பான்.”

உண்மைதான். அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே தலையைக் கொடுக்காத சரவணன், மகனைக் கண்டிக்கும் நேரத்தில் தீர்க்கமாக கண்டித்துவிடுவார். அதுவே பிரமோத்தின் சேட்டைகளுக்கு கடிவாளம்!

“அதைக் கெடுத்துக்காதீங்கன்னு தான் சொல்றேன். இப்ப போய் ஏன் அவனை மாமா கூட அனுப்பி வச்சீங்க? இதே மாதிரி எல்லா நேரமும் அவன் உங்கப் பேச்சைக் கேட்டுட்டு இருப்பான்னு நினைக்கறீங்களா?”

“அதெல்லாம் கேட்பான். காரணமா தான் அப்பா கூட அனுப்பினேன். அவன் ஒண்ணும் நீ நினைச்சிட்டு இருக்க மாதிரி இன்னும் சின்னப் பையன் இல்ல. ‘மெடிக்கல் ஷாப்’ பஸ் ஸ்டாப்பே உன் பையன் புகழ்தான் பாடுது.”

“பஸ் ஸ்டாப்பா?” என‌ விழிக்க,

“சரியான தத்தி! பஸ் ஸ்டாப்’ன்னா பஸ் ஸ்டாப்பா பாடும்? அங்கே காலைல வர்ற அத்தனை பேருக்கும் உன் பையன்தான் ஹாட் டாபிக்!”

“என்னங்க சொல்றீங்க? புதுசா எதுவும் பிரச்சினை இழுத்து வச்சிருக்கானா?”

“ம்ம்… கொஞ்ச நாளாவே நடக்குது போலருக்குது. பிரமோத் பஸ்ல வர்ற பொண்ணை லவ் பண்றானாம்.”

“என்ன! என்ன?! லவ்வா? நம்ம பிரமோத்’ஆ?”

“ஒரு அம்மாவா உனக்கு ஷாக்கா தான் இருக்கும். இப்பவும் சின்னப் பையன்னு சொல்லுவியா என்ன?”

“இதுக்குத்தான் டெய்லி அவ்ளோ காலைலயே குளிச்சு கிளம்பிப் போறானா?” அதிர்ச்சி விலகாமலேயே கேட்டார்.

“பின்னே? உன் பையன் கோவில்ல போய் ‘என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா’ன்னு பக்தி பழமா ‘சிவ சிவாயம்’ பாட்டு பாடப் போறான்னா நினைச்ச? பஸ்ல காதல் பாட்டு போட்டு அந்தப் பிள்ளையை இம்ப்ரெஸ் பண்றானாம். அதுக்கு அந்த கண்டக்டர் பயலுக்கு தண்ணி வேற வாங்கி ஊத்துறானாம்.”

காஞ்சனா குரல் உயர்த்திக் கத்தினார் “இதை ஏன் நீங்க என்கிட்ட முதல்லயே சொல்லல? நாளைக்கு காலைல வெளியே காலை எடுத்து வைக்கட்டும், வெட்டிப் போடறேனா இல்லையா பாருங்க!”

“இப்ப தான் காஞ்சனா சொன்னேன். அவன் நீ நினைச்சிட்டிருக்க மாதிரி இன்னும் சின்ன பையன் இல்லைன்னு! அடிச்சு திருத்த வேண்டிய வயசை எல்லாம் கடந்துட்டான். பொறுமையா இரு!”

“எப்டிங்க? கடைசில இவனும் இவன்‌ அண்ணன்‌ மாதிரி…”

“ஷ்ஷ்… ஆயிரம் தடவை சொல்லிட்டேன், பிரமோத் யார் மாதிரியும் கிடையாதுன்னு!” என்ன முயன்றும் சரவணனால் கோபத்தை மறைக்க முடியவில்லை.

“பஸ் ஸ்டாப்பே பேசுதுன்னு சொல்றீங்க. ஊர்ல நம்ம குடும்பத்துக்குன்னு தனி மரியாதை இருக்கும் போது இவன் இப்டி செஞ்சா…”

“பாயிண்ட்டைப் பிடிச்சிட்ட! நான் என் பையனைப் புரிஞ்சு வச்சிருக்கறது சரின்னா, அவனுக்கு வேண்டியதும் அதுதான்!”

காஞ்சனா புரியாமல் பார்க்க, “பிரமோத்’க்கு அம்மா மாதிரி இருடீ. எல்லாத்துக்கும் திருதிருன்னு முழிச்சிக்கிட்டு! அதாவது அவனுக்கு வேண்டியது நம்ம குடும்பப் பேரை – முக்கியமா அவனோட தாத்தா சங்கரன் பேரை ரிப்பேராக்குறது தான்!” என்றார் சரவணன்.

“அய்யோ! ஏன்ங்க இவன் இப்டி இருக்கான்?”

“அவன் மனசுல இன்னும் மனோ வீட்டை விட்டு போன தாக்கம் இருக்குது காஞ்சனா. அதுக்கு காரணம் அப்பாதான்னு (சங்கரன்) பதிஞ்சிடுச்சு. அதான் அவரை எப்டியாவது பழி வாங்கிடணும்னு நினைக்கறான் போல!”

“இவனை எப்டிங்க மாத்துறது? எங்கேயாவது கௌன்சிலிங் கூட்டிட்டு போவோமா? நாம எடுத்துச் சொன்னாலும் காது கொடுத்து கேட்கமாட்டான்.”

“ஏய், இதெல்லாம் வயசுல வர்ற அர்த்தமில்லாத கோபம், வீண் பிடிவாதம். அதுவும் பிரமோத் வெளியே ஜாலி டைப்பா தெரிஞ்சாலும் உள்ளுக்குள்ள ரொம்ப சென்ஸிடிவ்வான பையன்.”

“எனக்கும் தெரியும் என் பிள்ளையைப் பத்தி!”

“அப்புறமென்ன? விடு! அப்பாவுக்கு கூட இந்த விஷயம் தெரிஞ்சிருக்கும்னு நினைக்கறேன். அவர் பார்த்துப்பார்.”

“அதான் அவ்ளோ காலைலயே அவனைத் தேடினாரா? எனக்கே ஆச்சரியமா இருந்தது, என்னடா பிடிக்காத பேரனைத் தேடுறாரேன்னு!”

*~*~*~*~*~*

பிடிக்காத பேரனோடு பிடிவாதமாக நகர்வலம் வந்திருந்த சங்கரன், அப்போது பொறுமையை ‘பொறு பொறு’ என்று பிடித்து வைக்க முயன்றுகொண்டிருந்தார். அவர் பக்கத்தில் பிரமோத்!

“எங்க தாத்தாவுக்கு பரந்து விரிஞ்ச மனசு. அவரை மாதிரி ஒரு கருணையான மனசுக்காரரைப் பார்க்கவே முடியாது. அவர் ஒரு நிகழ்கால பாரி.” என்று தன் முன் கூழைக் கும்பிடு போட்டுக் கொண்டிருந்த தம்பதியரிடம் அள்ளிவிட்டுக் கொண்டிருந்தான்.

“அதான் நேர்லயே பார்க்கறேனே தம்பி. உங்க வம்சமே நல்லா இருக்கணும் ஐயா.” -கணவன்.

“தம்பியும் உங்களை மாதிரியே நல்ல மனசுக்காரர்.” -மனைவி.

சங்கரன் தன்னிடம் பண்ணை எரு வாங்கி விற்கும் வழக்கமான உரக்கடையில் பேசிவிட்டு, வேறொரு வாழை மண்டியில் நிலுவையிலுள்ள பணத்தை வசூலித்துவிட்டு, வரும் வழியில்தான் சம்பவம் நிகழ்ந்தது.

அவர்கள் சங்கரனின் நிலத்தில் தினக்கூலிக்கு வேலை செய்யும், கருவேலம்பட்டியைச் சேர்ந்த தம்பதியர். இருவரும் மூன்று நாட்களாகவே நிலத்திற்கு வரவில்லை. ஏதோ கடன் தொல்லை என்று கேள்வி. ஏற்கனவே சங்கரனிடமும் கடன் வாங்கியிருக்கிறார்கள்.

“என்னடா கண்ணப்பா புருசனும் பொண்டாட்டியும் எங்கே கிளம்பிட்டீங்க?”

“ஐயா, பிள்ளை படிப்புக்குன்னு நம்ம கருணாகரன் ஐயா கிட்ட வீட்டுப் பத்திரத்தை வச்சு, வட்டிக்கு காசு வாங்கிருந்தேன்யா.”

“ஹூம் ஹூம்!” தெரியும் என்பதாக தலையசைத்தார்.

“அவரு இப்ப வீட்டை ஜப்தி பண்ணிடுவேன்னு சொல்றாரு. எனக்கு இருக்கறது அந்த பத்துக்கு பத்து ஓட்டு வீடு ஒண்ணு தான்’யா. அதான் என் மச்சினன் ஒரு ஆள் விருதுநகர்ல இருக்காப்ல… ஏதாவது உதவி கிடைக்குமா’ன்னு பார்க்கறோம்…”

“உம்… பாரு… பொம்பளைப் பிள்ளையை வச்சிருக்க… நாளப்பின்ன வீடு வேணும்.”

“ஆமாய்யா… வர்றோம்ங்க. நாளைக்கு வேலைக்கு வந்திருவோம்.” என்று உறுதிபடுத்த,

அத்தனை நேரம் அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த பிரமோத் கேட்டான். “கடன் எவ்ளோண்ணே வாங்கிருக்கீங்க?”

“இருவத்தஞ்சு (ஆயிரங்கள்) வாங்கிருந்தேன் தம்பி. அது வட்டி போட்டு அம்பதுல வந்து நிக்குது.” என்றார் வருத்தமாக.

அடுத்தவரின் வருத்தத்தைக் களைபவன்தானே நல்ல நாயகனாக, தலைவனாக இருக்க முடியும்? களைந்துவிட்டான் நம் நாயகன்.

அப்போதுதான் வாழை மண்டியில் இருந்து சங்கரன் வசூலித்தப் பணத்தைக் கைப்பற்றி, கண்ணப்பனுக்கு தானம் செய்துவிட்டான். அப்போது சங்கரனால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

கண்ணிமைக்கும் நேரத்தில், “தாத்தா அதைக் கொடுங்க.” என்று சாதாரணம் போல் அவர் கையிலிருந்த சிறிய லெதர் பையை வாங்கி, பணத்தை எடுத்து கண்ணப்பனின் கையில் திணித்துவிட்டான்.

“இதை வச்சுக்கோங்கண்ணே… மேற்கொண்டு கொஞ்சம் போட்டு முதல்ல வீட்டைத் திருப்புங்க. மத்ததை அப்புறம் பார்த்துக்கலாம்.”

கடன் அல்லாமல் கொடுத்த பணத்தைத் திரும்பப் பெறுவது நாகரீகமாகாது. மூன்றாவது மனிதரின் முன், தன் பேரனை விட்டுக் கொடுப்பது நியாயமுமல்ல. ‘பழிவாங்கிட்டியே பரட்டை..!’ என அவன் மேல் ஆத்திரம்தான் உண்டானது. அவர்களின் முன் கடுமையைக் காட்டாமல் சிரிப்பு, கோபம் என இரண்டுக்கு இரண்டு விகிதத்தில் பாவனையை முகத்தில் பூசிக்கொண்டார் சங்கரன்.

காரில் ஏறியதும் பொரிந்து தள்ளிவிட்டார். “யாரு பணத்தை யாருடா தானம் கொடுக்கறது? கொடுக்கறதுக்கு முன்னாடி ஒரு வார்த்தை என்னைக் கேட்டியாடா பரதேசி பயலே?”

“கூல் சங்கர்! யாரைக் கேட்கணும் நானு? அந்தப் பணத்துல எனக்கும்தானே பங்கிருக்குது? சொந்தமில்லாததை என்னைக்கும் தொட மாட்டான் இந்த பிரமோத்!”

“சொந்தமா? ஹஹா… நாத்தங்கால்ல பெத்த பிள்ளையைப் பார்க்கற மாதிரி ஒவ்வொரு வாழைக் கன்னையும் பராமரிச்சியா? தோப்புல மண்ணைப் பக்குவப்படுத்தி பிள்ளை மாதிரி பார்த்த கன்னை நட்டு வச்சு வளர்த்தாயா? வரப்பு வெட்டி தண்ணி பாய்ச்சுனயா? மாசாமாசம் இயற்கையா பக்குவப்படுத்தி வச்சிருக்க உரத்தைப் போட்டு, அது பூ விட்டு குலை தள்ளுற அழகை ரசிச்சிருக்கியாடா நீ? வெயில்படாம, வேலை செய்யாம ஊரைச் சுத்தற நாயி சொந்தம் கொண்டாடுது.”

நமுட்டுச் சிரிப்புடன், “கட்டபொம்மனாகவே மாறிவிட்டீர் சங்கர்.” எனக் கலாய்த்தவன், “தாத்தா சொத்து பேரனுக்குதானே சொந்தம்? எங்கண்ணன் மனோவைத் துரத்திவிட்டாச்சு. ஸ்ரீ’யை (பிரமோத்தின் இரண்டாவது அண்ணன்) உங்களுக்கு பிடிச்ச மாதிரி சாணி தட்ட வச்சாச்சு. அர்வியையும் (அரவிந்தன்) மண்ணைக் கிளர்ற வேலைக்கு படிக்க வச்சாச்சு. அப்போ நீங்க சேர்த்து வச்சிருக்க சொத்தெல்லாம் மிச்சமிருக்க பேரன் நான்தானே அனுபவிக்கணும் சங்கர்?” என்றான் எள்ளலாக!

“நீ என்ன பாயிண்ட்டா பேசினாலும் என் சொத்துல இருந்து சல்லிக்காசு உனக்கு கொடுக்க மாட்டேன்டா தறுதலை பயலே! முக்காத்துட்டுக்கு பிரயோஜனம் இல்லாதவன் மூக்கைச் சிந்திக்கிட்டு வந்தானாம்.” என்றார் ஆத்திரம் அடங்காமல்!

சுளையாக இருபத்தைந்தா…யிரம் ரூபாய்! நல்லவேளை அந்த வாழை மண்டிக்காரன் பாதி பணத்தைத் தான் இப்போதைக்கு தந்தான். இல்லையெனில் இவன் மொத்தமாக அல்லவா வாரிக் கொடுத்திருப்பான்!

‘இப்போது வாழை மண்டிக்காரனைப் போற்றுவதா, பேரனின் செயலுக்கு தூற்றுவதா? அம்மையப்பா! சொக்கநாதா…’ நினைக்க நினைக்க சங்கரனுக்கு நெஞ்சுவலி வரும் போல் இருந்தது.

ஜன்னல் பக்கமாகத் திரும்பி தஸ்புஸ்ஸென்று மூச்சு விட்டுக் கொண்டிருந்தவரின் வதனம், எதையோ கண்டு கேள்வியாய் சுருங்கியது. “டேய் பிரமோத், வண்டியை அப்டி ஓரமா நிறுத்து!”

‘என்ன, பெரிசு திடீர்னு பேரைச் சொல்லி கூப்பிட்டு ஷாக் கொடுக்குது? நம்மளால ஏதோ காரியம் ஆகணும் போல! உஷாருடா பிரமோத்!’ என நினைத்தவன் சமர்த்தாய் அவர் சொன்ன இடத்தில் காரை நிறுத்தினான்.

விருதுநகர் பேருந்து நிலையத்தை விட்டு சற்று தள்ளி, கதிரவனும் மல்லிகாவும் சென்று கொண்டிருந்தனர். காலையில் சங்கரன் வீட்டிற்கு பத்திரிகை வைக்க வந்தவர்கள்.

சங்கரன், “கதிரவா!” எனக் காரிலிருந்தபடியே கையசைக்க,

“கதிரவன் தூங்கக் கிளம்பிட்டான் தாத்தா.” என இவன் மொக்கை போட,

“வாயை மூடிட்டு அந்தா போறான் பாரு… அவனைக் கூப்பிடு!” எனவும்,

‘யாராவது கடன் வாங்கினவனா இருக்கும். கூப்பிட்டு நம்ம பரந்த மனசைத் திறந்து காட்டுவோம். பெரிசைப் பொரிச்சு எடுக்க லட்டு லட்டா சான்ஸ் கிடைக்குதே… இன்னிக்கு பிரமோத் ராசி பிரமா…தம்!’ எனத் தனக்குத்தானே பேசியபடி, சென்று கொண்டிருந்த கதிரவனையும் மல்லிகாவையும் அழைத்து வர,

சங்கரனைக் கண்ட அவர்கள் இருவரின், ‘பெரியப்பா!’ ‘மாமா’ என்றழைப்பில் பேஸ்தடித்துப் போனான் பிரமோத். இனி அவன் ராசிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பம்.

சங்கரன், தான் விருதுநகர் வந்த காரணத்தை மட்டுமல்லாது, பிரமோத் தான் எப்போதும் தனக்கு உதவியாக(?) இருப்பான் என்பதையும் குறிப்பிட்டு அழுத்தமாகச் சொல்லிவிட்டு, அவர்களின் நகர்வலம் பற்றி விசாரிக்க, மல்லிகா சொன்னார். “சிவகாசில அம்மா வீட்டு சொந்தகாரங்க இருக்காங்கள்ல பெரியப்பா? அங்கேதான் பத்திரிகை வைக்கப் போறோம்.”

“காலாகாலத்துல புறப்பட்டிருக்கக் கூடாதாம்மா? பொழுதுசாய கிளம்புறீங்களே?”

“இங்கே சொல்லி முடிக்கவே இவ்ளோ நேரம் ஆகிடுச்சு மாமா. ரெண்டு நாள்ல நிச்சயத்தை வச்சிக்கிட்டு நாளைக்கு போய் சொன்னா சரி வராது. அதான் இப்டியே கிளம்பிட்டோம்.” – கதிரவன்.

சிறிது சிந்தித்த பெரியவர், “சரிதான்ப்பா. டேய் பேராண்டி!” என பிரமோத்தை அழைக்க,

அவன் தனக்கு பின்னால் வேறு யாராவது இருக்கிறார்களா என இந்த பக்கமும் அந்த பக்கமும் பார்த்துவிட்டு, பின் தன்னைச் சுட்டிக்காட்டி, “மீ?” எனக் கேட்க,

“ஹஹ்ஹஹ்ஹா… விளையாட்டு பிள்ளை.” எனக் கதிரவனிடம் சிலாகித்தவர், பிரமோத்திடம், “உன்னைத்தான்டா! நீ என்னப் பண்ற… அத்தை, மாமாவை சிவகாசிக்கு கார்ல கூட்டிட்டுப் போய், வேலை முடிஞ்சதும் வா. இங்கே கரிசகொளத்துல தான் அவங்க வீடு இருக்குது.” என முடிக்கும்முன், பிரமோத் மட்டுமல்லாது, கதிரவனும் பதறினார், அவன் கோபத்தில்; அவர் சங்கடத்தில்!

“அய்யோ! அதெல்லாம் எதுக்குங்க மாமா. இந்தா பஸ் ஏறினா அரைமணி நேரத்துல போயிடுவோம்.” என்றுவிட்டு புறப்பட ஆயத்தமாக,

சங்கரன் அவரை நிறுத்த, “யோவ் தாத்தா கோர்த்துவிடுறியா?” என அவரின் காதுக்குள் கடுப்பானான் பிரமோத்.

விருதுநகருக்கும் சிவகாசிக்கும் இருபதிலிருந்து முப்பது நிமிட பயணம்தான். எனினும் வெளிச்சம் உறங்க ஆரம்பித்த அந்த நேரத்தில் போய்விட்டு, வேலைகளை முடித்துக்கொண்டு, அதன்பின் அவர்களை கரிசல்குளம் வரை போய் வீட்டில் விட்டுவிட்டு இவன் வீடு திரும்ப எத்தனை நேரமாகுமோ!

இந்த தாத்தா, பிரமோத்தை யாரென்று நினைத்துவிட்டார்? உள்ளுக்குள் சிலிர்த்துக்கொண்ட சிங்கம், வெளியே, “நீங்க எப்டி தாத்தா ஊருக்கு போவீங்க? உங்களை இங்கே தனியா விட்டுட்டு என்னால எப்டி நிம்மதியா போக முடியும்?” என பாசத்தைப் பிழிய,

“எனக்கென்னடா தங்கப் பேராண்டி… இப்டி திரும்பி என்னை நம்ம ஆஃபீஸ்ல விட்டுட்டு போயிடு. உங்கப்பன் இன்னும் கிளம்பியிருக்க மாட்டான். அவன் கூடவே ஊர் போய் சேருறேன்.” என மீசையை நீவிவிட்டு வெற்றிப் பார்வைப் பார்த்தார்.

இருவரின் நாடகத்தையும் உண்மையென நம்பி பார்த்த இரு ஜீவன்களும், அங்கே ஓடிய பாசப் பாலாற்றில் மெய்சிலிர்த்தன. கதிரவன் சொன்னார். “இருக்கட்டும் மாமா. பாவம் தம்பிக்கும் அலைச்சல். உங்களுக்கும் சிரமம்.”

“அட! இதுல என்னப்பா சிரமம்? உன்னைப் பார்த்தும் அப்டியே விட்டுட்டு போனேன்னு தெரிஞ்சா சரவணனும் வருத்தப்படுவான்.” என்றவர் பிரமோத்திடம், “கதிரவன் உங்கப்பனோட பால்ய சிநேகிதன்’டா.” என்று அறிமுகப்படுத்தியதில் பிரமோத்தின் கோபம் சற்றே தேங்கியது.

‘அப்பாவோட ஃப்ரெண்டா?’ கேள்வியாகக் கதிரவனைப் பார்க்க,

அவர், “ஆமா தம்பி. ‘நானும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க.’ சினிமா பேரைச் சொல்லல.” என்று மென்மையாக புன்னகைத்தார்.

அவரின் நகைச்சுவையில் தானும் முறுவலித்தவன் ‘அப்பாவிற்காக’ என்று மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டான். “சரி வாங்க மாமா. ஆல்ரெடி டைமாகிடுச்சு.”

தயங்கியபடி கதிரவனும் மல்லிகாவும் காரில் ஏறிக்கொண்டனர். சங்கரனை அவர்கள் அலுவலகத்தில் இறக்கிவிட்டு, சிவகாசி சாலையைப் பிடித்தான் பிரமோத். போகும் வழியெங்கும் கதிரவனின் பொதுவான கேள்விகளுக்கு பதிலளித்தவன், ஒரு கட்டத்தில் நேர்மையாகவே அவரிடமும் மல்லிகாவிடமும் சிரித்துப் பேசினான்.

ஆனால், “சின்ன வயசுலயே தாத்தாவுக்கும் அப்பாவுக்கும் வேலைல உதவியா இருக்கீங்க தம்பி. தாத்தா மேலயும் ரொம்ப பாசம் போலருக்குது.” என்ற கதிரவனின் புகழ்ச்சியும் நெகிழ்ச்சியும் தான் சற்று கூச்சத்தைக் கொடுத்தது.

கதிரவன் தொடர்ந்தார். “எங்கப்பா அந்தக் காலத்துல ஆள் பார்த்துதான் பழகவே விடுவார். அதுல எல்லாம் அவர் ரொம்ப கண்டிப்பு! சங்கரன் மாமா பையன்றதாலேயே என்னை சரவணன் கூட பழக அனுமதிச்சார். அவர் மேல அவ்ளோ மதிப்பு.”

என்ன சொல்வான் இவன்? “ஹிஹி…” என்று இளித்து வைக்க மட்டுமே முடிந்தது. ‘அந்த நல்லவர் என் அண்ணனுக்கு மட்டும் ஏன் பொல்லாதவராகிப் போனார்?’ என்று மனதினுள் புழுங்கினான்.

கதிரவன் தன் பாட்டுக்கும் பழைய கதையைப் பேசினார். “என் கல்யாணத்துல தான் சரவணன், பொண்ணோட அண்ணன்ற முறைல எனக்கு மச்சான் ஆகுறான்னு தெரிஞ்சது. ஹாஹா… அப்புறம் கூட அவனோட டச்’ல தான் இருந்தேன். நீங்க கூட என் சின்ன மகளோட முதல் பிறந்தநாளைக்கு வந்திருக்கீங்க தம்பி.” எனவும்,

நினைவில்லையே என்று சொல்லாமல் புன்னகை மாறாமல் “ஓ!” எனத் தலையாட்டிக் கொண்டான்.

மல்லிகா சொன்னார். “தம்பிக்கு நினைவிருக்காதுங்க. அப்போ இவருக்கு ஆறு வயசுன்னு காஞ்சனா மதினி சொன்ன ஞாபகம்.”

“அப்போ நம்மளை நினைவிருக்காதுதான். அதுக்கப்புறமும் பார்க்கவே இல்லையே…” என்று ஆமோதித்தார் கதிரவன்.

“ஏன் மாமா? அப்புறம் நீங்க வீட்டுக்கு வரலையா என்ன?” என இவன் கேட்க,

“எங்கே தம்பி… அந்த சமயம் இங்கே தொழில்ல அகல கால் வச்சுட்டேன். லாஸ் ஆகிடுச்சு. எங்கண்ணே ஒருத்தன் வெளிநாட்டுக்கு போய் வேலைப் பார்த்து கடனை அடைச்சிடுடா’ன்னு சொன்னான். ரெண்டு பொம்பளைப் பிள்ளைகளைப் பெத்துட்டேனே… வேற வழியில்லாம ஏழு வருஷத்துக்கு அரபு நாட்டுப் பக்கம் போயிட்டேன். அப்புறம்தான் சரவணனோட பேச முடியாம போச்சு. அவனோட மட்டுமில்ல நிறைய சொந்தபந்தங்களோடயும் பேச்சு நின்னு போச்சு.”

“ஆமா தம்பி. நான் மட்டும் எங்கேயாவது விசேச வீட்ல உங்கம்மாவை, அமலா மதினியைப் பார்த்து பேசிக்குவேன். எங்க ரெண்டு பிள்ளைங்க சடங்குக்கு கூட யார்க்கிட்டேயும் சொல்லல. அதனால தான் கல்யாணமாவது எடுத்து செய்யணும்னு இப்போ பரிசம் போடறதுக்கும் பத்திரிகை அடிச்சோம்.” எனப் பெருமையாக சொன்னார் மல்லிகா.

சிவகாசி போய்விட்டு, அவர்கள் இருவரையும் கரிசல்குளத்தில் அவர்கள் வீட்டு வாசலில் இறக்கிவிட்டு, பிரமோத் வீடு திரும்ப இரவு பதினொன்றுக்கும் மேல் ஆனது.

அதில் அவனுக்கு வருத்தமொன்றுமில்லை என்றாலும், ‘கேவலம் இருபத்தஞ்சாயிரத்துக்கு என்னை இன்னிக்கு டிரைவர் வேலை பார்க்க வச்சு பழி வாங்கிடுச்சு இந்த சங்கர்’ என்று தாத்தாவை நினைத்துப் புலம்பியபடி படுக்கைக்கு சென்றான்.

தாத்தாவின் எண்ணம் வேறொன்று என்று இவனுக்கு அப்போது புரிந்திருக்க நியாயமில்லை. அது புரியாததால் அவர் பின்னிய வலை பிரமோத்தை முழுவதுமாக உள்வாங்கக் காத்திருந்து, மெதுவாக அவன் உச்சந்தலையை முட்டி நின்றது.

விளைவு…

“நீங்களும் கட்டாயம் நிச்சயதார்த்த விழாவிற்கு வர வேண்டும்” என்று அவனைப் பெரிய மனிதனாக உணர வைத்து, அவனுக்கும் தனியாக பத்திரிகை வைத்த கதிரவனையும் மல்லிகாவையும் நினைத்து பிரமோத்தின் இதழ்களில் முறுவல் பூத்தது.

*~*~*~*~*~*~*~*
“இன்னிக்கு என்னடி உன் ஆளைக் காணோம்?” என சித்தாராவின் தோழி புவனா கேட்க,

“அவன் ஒண்ணும் என் ஆளு இல்ல…” என மென்று விழுங்கினாள் சித்தாரா.

“சும்மா இழுக்காதே சித்து. இல்லைன்னா ஏன் அவனை இப்டி தேடுற?”

“………”

“ஏண்டி நெளியற? உனக்கு அவனைப் பிடிச்சிருக்கா பிடிக்கலையான்னு இப்போ நேரடியா சொல்லு.”

“……”

“சிரிக்கற? ஹேய் அப்போ பிடிச்சிருக்குது என்ன?”

தோழியை வெட்கம் கரையாமல் பார்த்த சித்தாரா, “ஆமா போடி…” என சிவந்தாள்.

“அப்புறம் ஏன் டோலி அவனைச் சுத்த விடுறீங்க? எப்போ அவன்கிட்ட உனக்கும் பிடிச்சிருக்குதுன்னு ஒத்துக்கப் போற?”

“தெரியல புவி… பஸ்ல அத்தனைப் பேருக்கு முன்னாடி சொல்ல என்னவோ போல இருக்குது.”

“ம்ம்… அவனும் பஸ்ல மட்டும் இம்ப்ரெஸ் பண்ண டிரைப் பண்றானே தவிர அடுத்தக் கட்டத்துக்கு போற மாதிரி தெரியலை. நீ பேசாம அவன் ஃப்ரெண்ட் அந்த பாலா அண்ணே இன்ஸ்டிடியூட்க்கு போய் அங்கே அவனை வர சொல்லி பேசிடு.”

“ச்ச! நானே போய் எப்டி புவி சொல்றது?”

“இப்டி தயங்கிக்கிட்டே இருந்தா நீ கிழவி ஆகிடுவ சித்து.”

“பார்ப்போம். நேரம் அமையும்.”

அந்த நேரம் மறுநாள் மாலையே அமையும் என்று சித்தாரா அப்போது நினைத்திருக்கவில்லை.

 

தூறல் தூறும் 🌧️🌧️🌧️

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
5
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்