அத்தியாயம் 12
பாலாவின் இன்ஸ்டிடியூட். மொட்டை மாடி. இரவு வானம். மேல் சட்டையில்லாமல் தரையில் ஒரு யோகா மேட்டை விரித்து, அதில் கால் மேல் கால் போட்டு, வானம் ஒப்பனைக்காக தன் மேனியில் சிதறவிட்டிருந்த ஜிகினா துகள்களைப் போலிருந்த நட்சத்திரங்களைப் பார்த்தபடி படுத்திருந்தான் பிரமோத்.
வகுப்புகள் அனைத்தும் முடிந்து உபாத்தியாயர்களும் புறப்பட்ட பின், மேலே வந்தான் பாலா. “அப்புறம் மச்சான்… என்ன வேலை செஞ்ச களைப்பா? இப்பல்லாம் பார்க்கவே முடியறதில்லை.”
வானத்தைப் பார்த்தபடியே பதிலளித்தான் இவன். “ஸ்ரீ இழுத்துட்டு போயிடறான் மச்சி. அஷோக் சித்தப்பா இப்போல்லாம் அப்பா கூடவே ஃபயர் வொர்க்ஸ் போயிடறார். பாவம் ஸ்ரீ’ண்ணே எவ்ளோ வேலைதான் தனியா செய்வான்? அதோட இந்த பொதுப் பாதை கேஸ் வேற!”
“ம்ம், நீ நடத்து வ்ரோ. உன்னை இப்டி பார்க்க எவ்ளோ சந்தோஷமா இருக்குது தெரியுமாடா?”
“……….”
“என்னடா பேச்சைக் காணோம்?”
வானத்தில் வஞ்சியின் முகத்தைத் தேடுகிறானோ? “வீட்ல பொண்ணு பார்த்திருக்காங்க பாலா.”
“அட்றா அட்றா! சொல்லவே இல்லை? பொண்ணு எந்தூரு மச்சான்?”
‘இந்தத் தாத்தா காரியம் ஆகும் வரை நம்மைக் கூட்டு சேர்த்துக் கொண்டு, காரியம் ஆனதும் கழட்டிவிட்டு விட்டாரே? இந்த விடயத்தைத் தன்னிடம் சொல்லவே இல்லை கிழம்!’ என மனதினுள் சங்கரனைத் தாளித்தான் பாலா.
“கரிசகொளத்துல அப்பாவோட ஃப்ரெண்ட் ஒருத்தர் இருக்கார். அந்த மாமாவோட மகளாம்.”
“பொண்ணை நீ பார்த்திருக்கியா? ஆளு எப்டி?”
பெருமூச்செறிந்தான் இவன். “ப்ச்!”
“பார்க்கலையா? அதான் கவலையா? நாளைக்கு வா. மாமா வீட்டுக்கு போற மாதிரி போய் பார்த்துட்டு வந்துடுவோம்.”
“ச்ச! சும்மா இருடா.”
“ஏண்டா? சரி அட்லீஸ்ட் ஃபோட்டோவாவது கேளு.”
“கேட்டேன். வீட்ல இருக்க எல்லா டிக்கெட்டும் காலண்டர்ல இருக்க மகாலட்சுமியை நம்மூர் பிள்ளைங்க கலர்ல இமாஜின் பண்ணிக்க சொல்லுதுங்க.”
“ஹாஹா… கல்யாணத்துக்குள்ள எப்டியும் பார்த்துடுவே இல்ல?”
“ம்ம், நாளன்னிக்கு பூ வைக்க அவங்க வீட்டுக்கு போகணுமாம்.”
“வாழ்த்துகள் மச்சான். சரி பேரு என்னன்னு சொல்லு. ஃப்ளேம்ஸ் போட்டு பார்ப்போம்.”
“நிவர்த்திகா.”
“நிவர்த்திகா பிரமோத்! பக்கா!”
மென்னகை பூத்தான் பிரமோத்.
“வானத்துல அவ மூஞ்சி தெரியுதா என்ன? கிளம்புடா. நான் கீழே கேட்டைப் பூட்டணும்.”
“பூட்டிக்கோ!”
“அப்புறம் நீ எப்டி வெளியே போவ?”
“நீ இல்லாதப்போ எப்டி உள்ளே வருவேனோ அதே மாதிரி வெளியேயும் போவேன்.”
“அடப்பாவி! சுவரேறி குதிக்கறியா?”
“ஆமா, போடா!” என்ற பிரமோத்தின் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என பாலாவால் கணிக்க முடியவில்லை.
ஆனால் அவன் இத்தனை அமைதியாக பிரமோத்தைப் பார்த்ததேயில்லை. எனவே அவனைத் தனியாக விடவும் மனம் வரவில்லை.
“நாளைக்கு பொண்டாட்டி வந்துட்டா இந்த இன்ஸ்டிடியூட்ல நைட்டு மொட்டை மாடில படுக்க முடியாதுன்னு தான் இப்பவே ஸ்டே பண்ண பார்க்கறியோ?” எனக் கேட்டு, அதற்கு பிரமோத் தந்த முறைப்பையும் கண்டுகொள்ளாமல் இன்னும் கேலி செய்தே அவனை இடத்தைக் காலி செய்ய வைத்துவிட்டான் பாலா.
**~**~**~**~**~**
பிரமோத் வானத்தில் நிவர்த்திகாவின் முகத்தைத் தேடிக் கொண்டிருந்த அதே நேரம்.
“நிவர்த்தி!”
பக்கத்து வீட்டுக் குழந்தையுடன் வெளித் திண்ணையில் அமர்ந்து கைக்கு மருதாணி இட்டுக் கொண்டிருந்தவள் கதிரவனின் குரல் கேட்டு உள்ளே வந்தாள்.
“கூப்பிட்டீங்களாப்பா?”
மகளின் மருதாணி விரல்களைப் பார்த்தவர் அவள் முகத்தை மிகக் கவனமாக ஆராய்ந்தவண்ணம் சொன்னார். “சரவணன் வீட்ல இருந்து பேசினாங்க நிவர்த்தி.”
உடனே அவள் கண்கள் பயம், கலக்கம், குழப்பம், எதிர்பார்ப்பு, அலைமோதல் என அநேக உணர்வுகளை வெளிப்படுத்த, அதில் பிடித்தமின்மை மட்டும் இல்லை என்பதை மனதில் குறித்துக்கொண்டார்.
“பயப்படாதேம்மா! உன் விருப்பம்தான். உனக்கு வேண்டாம்னா பளிச்னு சொல்லிடு. அப்பாவோ அம்மாவோ வற்புறுத்த மாட்டோம்; வருத்தப்படவும் மாட்டோம்.”
“………”
“ஏற்கனவே யோசிச்சிருப்ப’ன்னு நினைக்கறேன். அதனால இப்பவே சொன்னா நல்லா இருக்கும். ஏன்னா சரவணா நாளன்னிக்கு நாள் நல்லா இருக்குது. பூ வைக்க வரட்டுமா’ன்னு கேட்கறான்.”
“!!”
“உன் பதில் தெரியாம எப்டி சரின்னு சொல்றதுன்னு வீட்லயும் பேசிட்டு சொல்றேன்னு சொல்லிருக்கேன். அவங்க வந்தப்புறம் பிடிக்கலன்னு சொன்னா நல்லா இருக்காதும்மா.”
“அப்பா!”
அப்போது கோவிலுக்கு போய்விட்டு, அருகிருக்கும் உறவுக்காரர் வீட்டிலும் தலைக் காட்டிவிட்டு வந்த மல்லிகா பெண்ணின் நெற்றியில் விபூதி, குங்குமம் இட்டுவிட்டார். கணவர் சொன்ன விடயத்தைக் கேட்டவரும் மகளிடம் சொன்னார். “கல்யாண விஷயத்துல உன் மனசு என்ன சொல்லுதோ அதை மட்டும் சொல்லு. இப்போ எடுக்கற முடிவுனால பின்னாடி வருத்தம் மட்டும் படக்கூடாது நிவர்த்தி.”
“எனக்கு குழப்பமா இருக்குதும்மா. நீங்களே பார்த்து செய்ங்க.” என்றுவிட்டு மருதாணிக் கையைக் கழுவ போக,
“வச்ச மருதாணியை அழிக்க வேண்டாம் நிவர்த்தி.” எனச் சொல்லிவிட்டு போனார் கதிரவன்.
அந்தத் தூணின் அருகே ஒரு துணியைப் போல் சரிந்து அமர்ந்தவளின் இதயம் ‘ஹோ’வென்று ஓலமிட்டது.
‘வச்ச மருதாணியை அழிக்க வேண்டாம்.’ அப்பாவின் கூற்றைக் கெட்டியாக பிடித்துக்கொண்டாள்.
மனமே!
ஏனிந்த அலைமோதல்?
ஓட்டத்தை நிறுத்தி
அவனிதயத்தில்
இளைப்பாறினால்தான் என்ன?
**********
ஞாயிற்றுக்கிழமை.
“என்கிட்ட ஏண்டி முன்னாடியே சொல்லல?” நிவர்த்திகாவின் புடவைக் கொசுவத்தை ஒழுங்கு செய்தபடி கேட்டாள் விஜி.
“எனக்கே தெரியாத விஷயத்தை உனக்கெப்டி விஜி சொல்றது?”
“அழுத்தக்காரி! குழப்பவாதி!!”
“உண்மைதான். ஐ அட்மிட் இட்!” என்றவளின் குரல் மட்டுமல்லாது விழிகளும் கலங்கியது.
நேற்று காலை நிவர்த்திகா தன் திருமண பேச்சுவார்த்தை குறித்து விஜியிடம் சொல்ல, “என்ன! என்ன? என்ன பேர் சொன்ன?” என்று திகைத்த விஜி தன் காதின் திறனைச் சந்தேகித்தாள்.
“பிரமோத்!” எனவும்,
மீண்டும் மீண்டும் ‘நாம் சிற்றுந்தில் பார்க்கும் பிரமோத்’ஆ?’ என்று கேட்டு தெளிவுபடுத்திக்கொண்டாள் விஜி.
வீட்டில் இருப்புக் கொள்ளாமல் மறுநாள் தோழிக்கு உதவும் சாக்கில் முன்கூட்டியே வந்துவிட்டாள். ஆனாலும் அவளிடம் பேச சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. அத்தனை நேரம் நிவர்த்திகாவின் அக்கா ஆர்த்தி அருகில் இருந்ததால் பேச முடியாததை எல்லாம் மிச்சமிருந்த பத்து நிமிடத்தில் பேசித் தீர்த்துவிட விழைந்தனர் தோழிகள்.
“ப்ச்! நான் கஷ்டப்பட்டு போட்ட கர்வ்(curve) அழுது அழிச்சுத் தொலையாதே!” என்று நிவர்த்திகாவின் கலங்கிய விழிகள் அழிக்கப் பார்த்த மையை சரி செய்தாள்.
வேறொருத்தியின் கண்பார்வைக்கு தவமிருந்தவனை தினம் தினம் அருகேயிருந்து பார்த்திருந்தவளுக்கு, அவனே தனக்கு கணவனாக வரப் போகிறான் என்று தெரிந்தால், அவளின் மனநிலை தற்போது எப்படியிருக்கும் என்று ஒரு தோழியாக நன்கு புரிந்திருந்தாள் விஜி.
அவளுக்கு ஆறுதலும் தேறுதலும் சொல்ல வார்த்தைகள் கிட்டவில்லை. அதைத் தவிர அவள் செய்ய முடிந்ததும் எதுவுமில்லை.
“நீ பிடிக்கலன்னு சொல்லியிருக்கலாமே நிவி? ஏற்கனவே நீ அவனைக் குறை சொல்லிக்கிட்டே இருப்ப வேற!”
“……..”
தோழியின் முகத்தை ஆராய்ந்தவளுக்கு புதிதாய் ஒரு கேள்வி முளைத்தது. அதனை மறைத்துக்கொண்டு சொன்னாள். “வந்துட்டாங்க போல! இப்பவும் ஒண்ணுமில்லை. பார்த்துட்டு போனதுக்கப்புறம் ஏதாவது காரணம் சொல்லி பிடிக்கலன்னு சொல்லிடலாம். ச்சியர் அப் கேர்ள்!”
‘வச்ச மருதாணியை அழிக்க வேண்டாம் நிவர்த்தி!’ -அப்பாவின் குரல் இவள் மனதில்.
“நிவி, ஏன் சிலை மாதிரி நிற்கற? கூப்பிடறாங்க, வாடி!”
உணர்வுகளை மறைத்து, முகத்தைச் சீராக்கிக்கொண்டாள். வந்தாள். லேசாக இமையுயர்த்தி பிரமோத்தைத் தவிர மற்றவர்களை மட்டும் பார்த்து சம்பிரதாயமாக முறுவலித்து நமஸ்கரித்தாள். ஸ்ரீதரன், அரவிந்தன் தவிர மற்ற அனைவரும் வந்திருந்தனர்.
பிரியா நிவர்த்திகாவைக் கைபிடித்து தன்னருகே அமர வைத்துக் கொண்டிருக்க, அவள் வந்ததுமே பார்த்த பிரமோத், அவள் விழிகள் தன் முகம் நோக்கக் காத்திருந்தான். ‘ஏன் என்னை மட்டும் பார்க்கல?’
அவள் அவன்புறம் திரும்பவில்லை. அவனும் வேறிடத்தே விழி திருப்பவில்லை. ஆரோக்கியமான நிறத்தில் அழகாக இருந்தாள்.
இவனுக்கு ஏதோ ஒரு குறுகுறுப்பு. பிரியாவிடம் பேசும் அந்த விழிகளில் ஏன் இத்துணை அலைபாய்தல்? பிரமோத்திற்கு காரணம் சொல்லத் தெரியவில்லை. ஆனால் அவள் தன்னை வேண்டுமென்றே தவிர்ப்பதைப் போல் உணர்ந்தான்.
அமுதினி சோபாவில் அமர்ந்திருந்த பிரமோத்தின் இரு கால்களுக்கும் இடையே வந்து நின்று நெளிந்தவாறு அவன் காதில் கிசுகிசுத்தாள். “பிமோ சித்தப்பா, ஸ்மைலிங் சித்தி க்யூட்.”
மென்முறுவலுடன் மகளை முத்தமிட, மீண்டும் தன் அம்மாவிடம் ஓடிவிட்டாள் குட்டிப்பெண். அந்த ‘ஸ்மைலிங் சித்தி’யின் விழிகளை அமுதினியின் ‘பிமோ சித்தப்பா’ சந்திக்க நினைக்க, அவள் முகத்தின் முன் இடக்கை கொண்டு நெற்றியில் பொடித்திருந்த வியர்வையை இரு விரல்களால் துடைத்துக்கொண்டிருந்தாள்.
பிரமோத்தின் புருவங்கள் சிந்தனையில் சுருங்கியது. இதை… இவளை… இந்த செய்கையை எங்கோ பார்த்திருக்கிறோமோ? சட்டென்று பிடிபடவில்லை. ‘எங்கேடா பார்த்திருக்க?’ என மூளையிடம் கேட்க, அது வெகு சிரமத்துடன் சிற்றுந்து இருக்கையின் கம்பியின் பின்னால் இந்த முகத்தைப் பார்த்திருப்பதாக அடையாளம் காட்டியது.
ஆமாம், ஆமாம் சிற்றுந்தில் இடப்பக்கத்தில் ஜன்னலோரமாய் அமர்ந்து கொண்டு, அருகே இருக்கும் அந்த சிவப்பியிடம் கிசுகிசுத்துக் கொண்டிருப்பாள். அந்த சிவப்பியை வேறு சித்தாராவிடம் தூது அனுப்பி தொலைந்தேனே… அவளின் பெயரைக் கூட அன்று கேட்டுக் கொள்ளவில்லை!
அப்படியானால்..? தன்னைப் பற்றி – தான் சித்தாராவிடம் காதல் கொடி பறக்கவிட்டதைப் பற்றி எல்லாம் இவளுக்குத் தெரிந்திருக்குமே? சிந்தனையூடே எழுந்து நின்றுவிட்டான். இறைவா! ஒரு மனிதனுக்கு சோதனைகளைத் தருவதற்கு காசு கொடுத்து அறையெடுத்து, மல்லாக்க படுத்துக்கொண்டு விட்டத்தைப் பார்த்து யோசிப்பாயோ? அய்யகோ!
மீண்டும் அவளைப் பார்க்க, அவள் தாழ்த்திய அந்த அகன்ற இமைகளை மலர்த்தவே இல்லை. அவ்வப்போது அவன் வீட்டுப் பெண்களிடம் நிமிர்ந்து பதிலளித்தாள்.
எழுந்து நின்றவன் அலைப்பேசியைப் பார்த்தவாறு மீண்டும் சாதாரணம் போல் அமர்ந்துகொண்டான். சங்கரன் அவரின் தம்பி கேசவனோடு அளவளாவ, சரவணன் கதிரவனோடு ஐக்கியமாகி இருந்தார். பிரியா தன் மகள் அமுதினியோடு நிவர்த்திகாவைப் பிடித்துக்கொள்ள, மற்ற பெண்கள் இருவரும் மல்லிகாவோடு பேசிக் கொண்டிருந்தனர்.
ஆக இவன் வீட்டாட்களில் இவனைக் கவனித்த ஒரே ஜீவன், இடப்பக்கத்தில் அமர்ந்திருந்த சித்தப்பா அசோகன். “என்னாச்சு பிரமோத்?”
“சித்தப்பா, இந்தப் பொண்ணு வேணாம்னு சொல்லிடுங்க.”
பிரமோத்தைக் கையாள்வதில் மிகக் கவனம் தேவை என்பது அவருக்கு அனுபவப் பாடம். அவனொரு ‘ஹேண்டில் வித் கேர்’ ப்ராப்பர்ட்டி. எனவே யாருக்கும் சந்தேகம் வந்து விடாதபடி நிதானமாக பார்த்தார்.
“ஏன் ராஜா? இன்னும் காபி தரலைன்னு கோபமா? மாப்பிள்ளை முறுக்கா?” என கேலியாக கேட்க,
அவரை முறைத்தவன், “சித்தப்பா இந்தப் பொண்ணு…” என ஏதோ சொல்ல வர, அதற்குள் ஆர்த்திகாவின் கணவன் வசந்த், இவனிடம் கரம் குலுக்க வந்தான்.
“ஆர்த்தி! ஸ்வீட், காஃபி எடுத்துட்டு வா!” என மனைவியிடம் சொல்லிவிட்டு, புன்னகையுடன், “வணக்கம் சகல. ஐ’ம் வசந்த். நிவர்த்தியோட அக்கா வீட்டுக்காரர்.” என்றான்.
“வசந்தா? கணேஷ் எங்கே?” என அவனிடமும் தன் கேலியை ஜாலியாக ஆரம்பித்தார் அசோகன்.
“அய்யோ சார் நீங்களுமா?” என அவன் சந்தோஷமாக அலுத்துக்கொள்ள,
“சார் இல்ல, சித்தப்பா!” எனத் திருத்தியவர், “அப்போ நிறையப் பேர் கணேஷைத் தேடிருக்காங்க போல!” எனக் கேட்க,
“கணக்குலயே வராது. என்ன மனுஷன் அவர்! இந்த ஜெனரேஷன்ல கூட எத்தனைப் பேர் கேட்கறாங்க தெரியுமா?”
“அது அவர் எழுத்தோட மேஜிக், வசந்த். ஒரு காலத்துல கல்கி, சாவி, விகடன்னு தவமிருந்திருக்கேன். காரணம் அவர் மட்ட்டும்தான்! அவர் ஒரு அறிவு பொக்கிஷம், எழுத்து சிற்பி.”
‘அவர், அவர்’ என்று எவரைப் பேசுகிறார்கள் எனப் புரிந்த பிரமோத்திற்கு, இனி சித்தப்பாவிடம் கல்யாணப் பேச்சு குறித்து சொல்வது வீண் என்றும் புரிந்தது. அவனின் அஷோக் சித்தப்பா ஒரு தீவிர சுஜாதா வாசகர். அவர்தான் இவனுக்கும் கணேஷையும் வசந்த்’ஐயும் அறிமுகப்படுத்தினார். சுஜாதாவைப் பற்றி பேச ஆள் கிடைத்தால் அத்தனை சுலபத்தில் விட்டுவிட மாட்டார். இன்று வகையாக சிக்கிக்கொண்டான் இந்த வசந்த்.
இப்போது இவன்தான் ஏதாவது செய்து இந்த கல்யாணம் வேண்டாமென சொல்ல வேண்டும். என்ன சொல்ல? யாரிடம் சொல்ல? சரி எல்லாம் இருக்கட்டும். அவள் என்ன நினைக்கிறாள்?
அலைப்பேசியைப் பார்வையிட்டவாறு நிவர்த்திகாவைப் பார்த்தான். அமுதினி ஏதோ கதை போல் சொல்ல, செந்தாமரையாய் விரிந்திருந்தது அவள் புன்னகை.
‘அவளுக்கு சம்மதமா இருக்குமோ? இல்லைன்னா எப்டி இப்டியொரு ஃபுல்ஃபில் ஸ்மைல் வரும்?’
அப்படியே நிமிர்ந்து வீட்டைப் பார்வையிடுபவன் போல் ஒவ்வொருவராக பார்க்க, ஆர்த்தியுடன் பேசியபடி நின்றிருந்தாள் விஜி. அவளும் இவனைப் பார்க்க, நம்மாளுக்கு தர்மசங்கடமாகிப் போனது. அந்த நேரத்தை அறவே வெறுத்தான் பிரமோத். இருந்தும் அவளை ஒரு பொருட்டாக எண்ணாமல் புறந்தள்ளினான். அவனுக்கு நிவர்த்திகாவின் விழிகள் மட்டுமே நோக்கமாக இருந்தது.
விஜி என்னவோ சாதாரணமாகத்தான் பார்த்தாள். அவனைக் கண்டதும் அன்று அவன் சித்தாராவின் மறுப்பிற்கு, ‘தேங்க் காட்!’ என்று சொன்னதே நினைவிற்கு வந்தது.
அன்று அதற்கான காரணத்தைச் சொல்லவில்லை. கேட்குமளவிற்கு இவளுக்கும் அவனிடம் சுவாதீனம் இல்லை. ஆனால் இன்று வரை காதல் தோல்விக்கு போய் ஏன் அப்படி மகிழ்ந்தான் எனத் தெரிந்து கொள்வதில் ஆர்வமிருந்தது. ஏனெனில் அவன் காதலென்ற பெயரில் நடத்திய கூத்துக்கள் ஒவ்வொன்றையும் நேரில் பார்த்திருக்கிறாளே!
பிரமோத் அதற்கு மேல் பொறுக்கமாட்டாமல், “சங்கர்! சங்கர்!” என தனக்கடுத்து அமர்ந்திருந்த தாத்தாவை உதடசைக்காமல் அழைக்க,
அவர், “பேசிக்கிட்டே இருக்கோம் பாரு! நல்ல நேரம் முடிஞ்சிடும் கேசவா. அம்மா, அந்த சேலையைப் பிள்ளைக்கிட்ட கொடு.” என காஞ்சனாவின் கவனத்தையும் திருப்பினார்.
‘சங்கர்ர்ர்!!’
அவள் இப்போதும் தன்னைப் பார்க்கவில்லை என்ற மனக்கிலேசத்தில் இருந்தவனுக்கு சங்கரனின் மேல் எரிச்சல் மூண்டது. அவள் சேலை மாற்றப் போன இடைவெளியில் மீண்டும் அவரின் காதைக் கடிக்க இவன் தருணம் பார்த்திருக்க, ‘மாப்பிள்ளை நீதான்! ஆனால் இன்றைய ஹீரோ நானடா!’ என்று சொல்லாமல் சொல்லி, தன் தம்பியிடம் படம் காட்டிக்கொண்டிருந்தார் சங்கரன்.
அவர்தான் பெண்ணைக் கண்டு அவன் படக்கென எழுந்து நின்றபோதே அவன் மனநிலையைக் கணித்துவிட்டாரே! எப்போது, என்ன செய்து வைப்பான் எனத் தெரியாத ஒரு பிரகிருதியைப் பேரனாகப் பெற்றவருக்கு எச்சூழ்நிலையிலும் கவனம் அவன்மீது இல்லாதிருந்தால்தான் ஆச்சரியம்.
நிவர்த்திகா புடவை மாற்றிய பின் அழைத்து வரப்பட்டாள். அதிலெல்லாம் பிரமோத்தின் கவனம் செல்லவில்லை. அவள் முகத்தை மட்டுமே ஆராய்ந்தபடி இருந்தான். இமை மலர்த்தினால் உள்ளத்தைக் கண்டுகொள்வான் என்று நினைத்தாளோ என்னவோ!
‘பார்க்கவே பிடிக்கலை போல!’
உள்ளக் கொதிப்புடன் இருந்தவன், ‘வீட்டுக்கு போனதும் முதல் வேலையா அப்பாகிட்ட பேசிடணும்.’ என்று முடிவெடுத்த பின்னர்தான் அமைதியானான்.
அதன்பின் காஞ்சனா, பிரியாவை அழைத்து நிவர்த்திகாவிற்கு பூ வைக்கச் சொல்ல, அவளும் இன்முகத்துடன் பேசியபடி மல்லிகைச் சரத்தினை பெண்ணின் தலையில் முடிந்து வைப்பதை திரும்பியே பாராமல், அமுதினியைக் கைப்பற்றிக் கொண்டு விளையாட ஆரம்பித்துவிட்டான்.
வசந்த் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்று பிரமோத்தை அழைக்க,
இவன் பார்வை மைக்ரோ விநாடியில் அவள்புறம் திரும்பியது. அவள் வசந்தைக் கலவரமாய்ப் பார்த்து, ‘வேண்டாமே…’ என்று கண்கள் சுருக்கி கெஞ்சிய பாவனையில், இவன் தன் சுயமரியாதை தாக்குண்டதாய் எண்ணினான்.
“வெட்கப்படாதே நிவர்த்தி. இங்கே வா, இந்தப் பக்கமா பார்த்து நில்லு.” என்ற பிரியா அவள் கைப்பிடித்து கோணம் பார்த்து நிற்க வைத்தாள்.
‘வெட்கமாம்! ஹெல்!’
“பிரமோத், நீங்களும் வாங்க.”
பிரியா அழைத்ததைக் கவனியாதவன் போல் அலைப்பேசியில் அவனே ரிங்டோனை ப்ளே செய்து, அழைப்பு வந்ததாய்ப் பெயர் பண்ணிக்கொண்டு, “சொல்லுங்க சர்.” எனப் பேசியபடி வெளித் திண்ணைக்கு சென்றுவிட்டு, ஒரு நிமிடம் கழித்து மீண்டும் உள்ளே வந்து வாசலின் அருகேயே நின்றுகொண்டு, “தாத்தா, வில்லேஜ் ஆஃபீஸ்ல இருந்து கால்! நாம கொடுத்த ஃபோல்டர்ல ஃபீல்ட் மேப் மிஸ்ஸாகுதாம். அவரை இப்போ விட்டா அப்புறம் பிடிக்க முடியாது. நான் ஸ்ரீ கூட போய் கொடுத்துட்டு வந்துடறேன்.” என்று மற்றவர்கள் பேசவே இடங்கொடாமல், “வர்றேன் அத்தை, போயிட்டு வர்றேன் மாமா. வர்றேன்ங்க.” என கதிரவன் தம்பதியரிடமும் வசந்த், ஆர்த்தியிடமும் இன்னுமிருந்த சில சொந்தங்களிடமும் இன்முகமாக விடைபெற,
அவசர அவசரமாக வந்து தண்ணீர் சொம்பைத் தந்து, “சும்மா ஒரு சம்பிரதாயம். தண்ணி குடிச்சிட்டு கிளம்புங்க தம்பி.” என்ற மல்லிகாவின் உள்ளன்பை மறுக்க முடியாது, மரியாதையுடன் வாங்கிக் குடித்துவிட்டு விடைபெற்றுக் கொண்டான்.
தன் முகம் காண மறுத்த நிவர்த்திகாவின் தாழ்ந்த இமைகளே மீண்டும் மீண்டும் கண்முன் வலம் வருவதான பிம்பத்தில், உண்டான கோபத்தை அவனின் டியூக் தாங்கிக்கொள்ள வேண்டியதாயிற்று.
அவன் வீட்டில் சில பணியாளர்கள் மட்டுமிருக்க, தடதடவென மாடியேறி தன்னறையை அடைந்தவனின் கண்கள் சிவந்திருந்தன.
அடுத்த அரைமணி நேரத்தில் மற்றவர்களும் வந்துவிட, “பிரமோத்!” என்ற சங்கரனின் கணீர் குரலில் விருட்டென எழுந்து கீழே விரைந்தான்.
“தாத்தா…” எனும் அழைப்பில் ‘வீட்டுப்பாடம் செய்ய மாட்டேன்’ எனும் சிறுவனாகியிருந்தான்.
“என்ன அதிசயம் அத்தை! இவர் பிரமோத்’ங்கறதும் அவர் தாத்தா’ங்கறதும்…” என்று அமலாவின் காதில் பிரியா முணுமுணுக்க,
“அவங்களுக்கு தேவைன்னா அப்டித்தான்.” மாமனாரையும் மகனையும் நன்கறிந்த மருமகளாய் அமலா.
இறங்கி வந்தவனின் காதை வலிக்கப் பிடித்துத் திருகினார் சங்கரன். “ஏண்டா பொய் சொல்லிட்டு பாதிலயே வந்த?”
‘பொய்யா சொன்னான்?!’
நேற்றே, ‘அந்த கருணாகரன் இனி உங்கள் வழிக்கு வரமாட்டான். உங்கள் மற்றும் உங்கள் சகாக்களின் தாஸ்தாவேஜூகள் அனைத்தும் படுசுத்தம்’ என்று அந்த கிராம அலுவலர் சொல்லியிருந்தார். அதையும் பிரமோத் தான் வந்து சங்கரனிடம் சொன்னான்.
எந்த பிரச்சினையைக் காரணம் காட்டி சங்கரன் தன் பேரனை சித்தாராவிடமிருந்து திசை திருப்பிவிட்டாரோ, அதே பிரச்சினையையே இன்று கைக் காட்டி அவன் அவர் பார்த்த பெண்ணை நிராகரித்து வந்திருக்கிறான்.
“ஆஆ!!! விடுமய்யா வலிக்குது. எனக்கு இந்தக் கல்யாணம் வேணாம்.”
“பிரமோத்!” காஞ்சனாவுக்கு மகனின் குணத்தில் முதல்முறையாக கோபம் வந்தது.
“ஏன் தம்பி வேண்டாம்ங்கற? அங்கே உனக்கு எதுவும் பிடிக்கலையா?” – சரவணன்.
“அதுலாம் இல்லப்பா.”
“பின்னே? நீயும் உங்கண்ணே மாதிரி யாரையும் விரும்புறியா? அப்டி இருந்தா இப்பவே சொல்லிடு. நாங்களே முடிச்சு வைக்கறோம். அவனை மாதிரி போய் அவமானப்படுத்திடாதே!”
‘திடீர்னு லவ் பண்ண, பொண்ணுக்கு நான் எங்கே போக?’
“என்ன தம்பி?”
“அய்யோ! அப்பா… அப்டிலாம் எதுவுமே இல்லை.”
“அப்போ நிவர்த்திகாவைப் பிடிக்கலையா? வேற பொண்ணு பார்ப்போமா? ஆனா இதெல்லாம் முன்னாடியே சொல்லிருக்கணும்ல? அங்கே போய் கை நனைச்சிட்டு வந்தப்புறம் எப்டி சொல்றது?” – அசோகன்.
“சித்தப்பா, என்னைப் பத்தி தெரிஞ்ச வரை அவளே பிடிக்கலைன்னு சொல்லிடுவா பாருங்க.”
சரவணன், “என்ன தம்பி என் பிள்ளைக்கு என்ன குறை? அவ பிடிக்கலைன்னு சொல்றதுக்கு?” என,
அப்பாவின் பதிலில் நெகிழ்ந்த பிரமோத், “அப்டியில்லப்பா… சரி... எதுக்கும் ஒரு தடவை அவகிட்டேயும் கேட்டுடுங்களேன்…”
“சரி உன் திருப்திக்கு அதையும் கேட்டுடுவோம்.”
எப்படியும் நிவர்த்திகா தன்னை வேண்டாம் என்றுதான் சொல்லுவாள். நாம் அப்படியே நழுவிக் கொள்ளலாம் என்று மனதில் அல்ஜீப்ரா போட்டான் பிரமோத். அவன் எப்போதும் அல்ஜீப்ராவில் முதல் மாணவன். இப்போது எப்படியோ!
🌧️🌧️🌧️🌧️🌧️
அத்தியாயம் 13
மறுநாள் காலை.
புடவைக் கொடுத்து பூ வைத்துவிட்டு வந்த பிறகு, இப்போது போய் பெண்ணுக்கு பிடித்தமா என்று கேட்பது அபத்தமாகத் தோன்றியது சரவணனுக்கு. அவர்கள் சம்மதம் என்று சொன்ன பிறகுதான் இவர்கள் போய் உறுதி செய்தார்கள். மீண்டும் கதிரவனை எப்படி கேட்பது என்ற நினைவில், ஹாலில் சோபாவின் கைப்பிடியில் கையை வைத்து, அதில் கன்னத்தைத் தாங்கி அமர்ந்திருந்தார் அவர்.
“தலையில ஒரு துண்டையும் போட்டுக்கோ! தறுதலையைப் பெத்ததுக்கு அதுதான் உனக்கு மிச்சம்.” என்றபடி அருகில் வந்தமர்ந்தார் சங்கரன்.
“நேத்தே ரெண்டு பேரும் தனியா பேசறதுன்னா பேசிக்கோங்கன்னு சொல்லிருக்கலாமோ’ப்பா?”
“உன்னை… நல்லா வருது எனக்கு… ஏண்டா எப்டிடா கிறுக்கு புள்ளைய பெத்துட்டு இப்டிலாம் யோசிக்கற நீ? தனியா பேச விட்ருந்தா அந்தப் பிள்ளைக்கிட்ட எதையாவது சொல்லி அழ வச்சு, விசேசத்தை நிறுத்தறதோட இல்லாம நேத்தே உன் சிநேகிதத்தையும் வெட்டி விட்ருப்பான்டோய்!”
பெருமூச்செறிந்த சரவணன், “ப்ச்! இவனுக்கு ஏன் திடீர்னு இப்டியொரு சந்தேகம் வந்துச்சோ தெரியல.” எனவும்,
“எல்லாம் ஆத்தா வயித்துல இருக்கும் போதே ஊசிப் போட்டு விளைய வைக்கறதுல வந்த கொழுப்புடேய்… அவன் தனியா பேசணும்னு கேட்டுடுவானோ என்னவோன்னுதான் நான் நேத்து உசாரா அவன் பக்கம் திரும்பவே இல்லை.” என்று கண்கள் உருட்டிச் சொன்னார் பெரியவர்.
“………”
“அப்டி இருந்தும் அவன் நினைச்சதைச் சாதிச்சுப்புட்டான் பார்த்தியா? அந்தப் பிள்ள கூட சேர்ந்து ஒரு ப்போட்டா (photo) கூட எடுக்க நிக்காம ஓடியாந்துட்டான். பொச கெட்ட பய! அந்தச் சின்னப் பிள்ளை மனசு என்ன பாடுபட்டிருக்கும்?”
அவர் பேசியதைக் கேட்டபடி ஸ்ரீயுடன் உள்ளே வந்த பிரமோத், “ஆமா! அவ மனசு பாடுபட்டதை இவர் பார்த்தார். ப்பா, நேத்து அவ என்னை நிமிர்ந்து கூட பார்க்கல தெரியுமா?” என்றான்.
“அத்தனை பேர் மத்தியில ஒரு பொட்டைப் பிள்ளை உன்னை மாதிரி தடிமாட்டுப் பயலை எப்டிடா நிமிர்ந்து பார்ப்பா? அடக்க ஒடுக்கமான பிள்ளை அப்டித் தானிருக்கும்.”
“அடக்க ஒடுக்கத்துக்கும் அகம்பாவத்துக்கும் உங்களுக்குத்தான் வித்தியாசம் தெரியல!”
“பிரமோத்த்!!” என்று எழுந்து நின்ற சரவணன், என்றுமே மகனை இத்தனைக் கடுமையாக அழைத்ததில்லை.
“ஒரு சமயம் நீ சொன்னது உண்மையா இருக்குமோன்னு யோசிச்சேன். ஆனா இப்ப நீ பேசறதெல்லாம் பார்த்தா, தாத்தா கிட்ட வீண் பிடிவாதம் பிடிக்கத்தான் தேவையில்லாம அந்தப் பிள்ள மேல பழி சொல்றியோன்னு தோணுது.”
“அப்பா…”
“வேற என்ன காரணம் சொல்லேன் பார்க்கலாம்?”
எப்படிச் சொல்வான்? என் காதல் விளையாட்டுக்களை நேரில் கண்டதால் என்னை அவளுக்கு பிடிக்கவில்லை. அதனால் என் முகத்தைப் பார்க்கக்கூட மறுக்கிறாள் என்று தந்தை முகம் பார்த்து சொல்லத்தான் முடியுமா?
“உன் தேவையில்லாத கற்பனைக்கெல்லாம் என்னால கதிரவன்கிட்ட மறுபடியும் போய் பேச முடியாது. உறுதி செஞ்சது, செஞ்சதுதான். பேசினபடி அடுத்த வருஷம் கல்யாணம்.”
‘இதுதான்டா என்ர தீர்ப்பு!’ என்பதைப் போல் உள்ளே போய்விட்டார் சரவணன்.
சங்கரனுக்கு பேரனைப் பார்த்து ‘வெற்றி’ என மீசையை நீவிக்கொள்ள வேண்டும் போலிருந்தது. ஆனால் அவன் அதற்கு பதிலுக்கு ஏதாவது செய்கிறேனென கிளம்பிவிட்டால் என்ன செய்வது என்று கஷ்டப்பட்டு கோபம் போல் முகத்தைத் திருப்பிக்கொண்டார்.
தம்பியின் அமைதியைக் காணப் பொறுக்காத ஸ்ரீதரன், அவனைத் தேற்ற வேண்டி சொன்னான். “பொண்ணு பார்க்க போகும்போது பிரியா கூட என்னை நிமிர்ந்து பார்க்கலடா பிரமோத். அதுக்காக அவளுக்கு என்னைப் பிடிக்கலன்னு அர்த்தமா?”
“ஸ்ரீ…”
“பொண்ணுங்க அப்டித்தான். நேரா பார்க்கமாட்டாளுங்க. நம்ம பார்க்காதப்போ பார்க்கறது, ஒன்றரைக் கண்ணால பார்க்கறதுன்னு திருட்டுப் பார்வைப் பார்ப்பாளுங்க. கேட்டா ஸ்வீட் நெர்வெஸ்ன்னு சொல்லுவாளுங்க.”
“என் தங்கமீனு கூட அப்டித்தான்டா…” என்று பழங்கதை சொல்ல ஆரம்பித்த சங்கரனை, இரு பேரன்களும் வேண்டாமென தலையாட்டிக் கும்பிட்டு, ஆளுக்கொரு பக்கம் தெறித்து ஓடிப்போனார்கள்.
*************
“வாய்யா! வாய்யா! என்ன பெரிய வீட்டுப் பிள்ளை காத்து இந்தப் பக்கம் அடிக்குது?” என அன்பும் உரிமையுமாகப் பிரமோத்தை வீட்டினுள் அழைத்தார் பாலாவின் அம்மா, அழகம்மாள்.
“பாலா என்னம்மா செய்றான்?”
“நேத்து பஞ்சார்ணம் (பஞ்சவர்ணம்) ஊருக்கு போயிட்டு ராத்திரி லேட்டா தான்’யா வந்தான். அவனும் அவன் அப்பாவும் இன்னும் உறங்கியாகுது ஹஹ… நீ என்ன சாப்பிடுற? காபி ஆத்தட்டுமா?”
பஞ்சவர்ணம் அவரின் நாத்தனார். பாலாவின் அத்தை. அவர் இருப்பது ஆத்தூரில். நேற்று அவர் வீட்டில் ஏதோ தகராறு, பஞ்சாயத்து என்று அவனும் அவன் அப்பாவும் சென்றிருந்தனர். அதனால் பிரமோத்துடன் பெண் பார்க்கும் படலத்திற்கு வர முடியாது என்று முன்கூட்டியே சொல்லியிருந்தான் பாலா.
“கேப்பை கூழ், கம்பங்கூழ்’ன்னு ஸ்பெஷலா ஏதாவது வச்சிருப்பீங்களே… அதைத் தர்றது!”
“அய்ய… பெசலாம் பெசலு… சும்மா போய்யா.” என கண்கள் சுருங்க சிரித்தவர், கதவு ஒருக்களித்து சாத்தியிருந்த ஒரு அறையினுள் தலை நீட்டி, “எய்யா முருகா, உன் தோஸ்த்து வந்திருக்கான் பாரு!” எனக் குரல் கொடுத்துவிட்டு சமையலறை பக்கம் நகர்ந்தார்.
சற்று நேரத்தில் பாலா எழுந்து வர, “சீக்கிரம் கிளம்பு. வெளியே போகணும்.” என அவசரப்படுத்தினான் பிரமோத்.
“என்னடா அவசரம்?” எனக் கொட்டாவியுடன் வந்தவன் கேட்க, இவன் முகத்தைத் தூக்கி வைத்திருப்பது கண்டு மேலே ஏதும் கேட்காமல் கிளம்பினான். பிரமோத், அழகம்மாள் தந்த உணவினைச் சாப்பிட்டு, அவரிடம் சொல்லிக்கொண்டு டியூக்கை உயிர்ப்பித்தான்.
பாலா பில்லியன் என்ற பெயரில் இருந்த தக்குனூண்டு இடத்தில் ஏறியவாறு கேட்டான்.”எங்கே போறோம்னாவது சொல்லுடா!”
“கோதையக்காவைப் பார்த்து ரொம்ப நாளாச்சுல்ல?”
கோதை, பாலாவின் அக்கா. நிவர்த்திகாவின் ஊரான கரிசல்குளத்தில்தான் அவளை மணமுடித்துள்ளனர்.
“ஆ…ஆ… மச்சான் ஒரே நாள்ல கவுந்துட்டியா? அக்காவைப் பார்க்கப் போற சாக்குல…” என்றதும்,
பிரமோத் வண்டியை வேகமாக அசைத்து, “உருட்டி விட்டுடுவேன் நாயே! மனுசன் இருக்குற கடுப்புல கலாய்க்கறானாம்.” என்று காய்ந்தான்.
“அடேய் அழகம்மாளுக்கு இருக்கிற ஒரே புள்ளை, வித்யாவுக்கு இருக்கிற ஒரே ஒரு ஆளுடா நானு! சோலியை முடிச்சிட்டு போயிடாதப்பா!”
சர்ரென்று சாய்த்து திரும்பி வண்டியை நிறுத்திவிட்டு திரும்பிப் பார்த்த பிரமோத் ஆச்சரியமிகுதியில் கேட்டான். “என்னடா சொல்ற? வித்யாவா? ஆளா? அதுக்குள்ளேயுமா கரெக்ட் பண்ணிட்ட?”
பாலா, “ச்சீ போங்கள்!” என அவன் முதுகிலேயே முகத்தைப் புதைத்துக்கொள்ள,
“ச்சீ தள்ளி உட்காருடா பரதேசி!” என முதுகைக் குலுக்கிவிட்டு மீண்டும் வண்டியைக் கிளப்பினான்.
போகும் வழியில் பாலாவிற்கு தற்போதைய தன் நிலைப்பாட்டையும், தன் மனதினை யாரும் புரிந்து கொள்ளவில்லை என்ற ஆதங்கத்தையும் சொல்ல, பாலா சிந்தனையுடன் சொன்னான். “நீ ஓவரா இமாஜின் பண்ணிக்கறியோன்னு தோணுது வ்ரோ.”
“ப்ச்! நீயும் அப்பா மாதிரியே பேசாதே பாலா. எனக்கு… எனக்கு என்னவோ அவளைப் பார்த்ததும் புரிஞ்சது. அவளுக்கு பிடிக்கலையோன்னு…”
“ஓ! பார்த்த பத்து நிமிஷத்துல அவளைப் புரிஞ்சிக்கற அளவுக்கு கவனிச்சிருக்க? ஏண்டா, பகல்லயே பசுமாடு தெரியாது உனக்கு. இதுல அந்தப் பிள்ளையைப் புரிஞ்சிக்கிட்டானாம்.”
டியூக் பாலாவின் அக்கா கோதையின் வீட்டின் முன் நின்றது. ஓசை கேட்டு வெளியே வந்த கோதை அந்த நேரத்தில் தம்பிகளைக் கண்டு வியந்தாள். “என்னடா தம்பிங்க ரெண்டு பேருக்கும் திடுதிப்புன்னு அக்காக்காரி ஞாபகம் வந்திருக்குது?”
“எப்டிக்கா இருக்கே?” உள்ளே நுழைந்தவாறு கேட்டான் பிரமோத்.
“கொணட்டி! உன்னைப் பார்த்தா உப்புக்கல்லுக்கு ஆகுமா? எங்கே எம்மருமவ?” – பாலா.
“ஸ்கூலுக்கு போயிருக்காடா. இரு! கலர் (soft drinks) வாங்கிட்டு வர்றேன்.” எனத் தம்பிகளை உபசரிக்க,
“அதெல்லாம் வேணாம். இப்போ தான் கம்பங்கூழ் குடிச்சிட்டு வர்றோம்.” என்றான் பாலா.
கோதை, பிரமோத்தைப் பார்த்துக் கேட்டாள். “நீ ஏண்டா இருக்கமாட்டாம இருக்க? வேற சோலி இருக்கா?”
கோதை நல்ல புத்திக் கூர்மையுடைய பெண். ஒருவரைப் பார்த்த மாத்திரத்தில் கணித்துவிடுவாள். பழகினால் உடல்மொழியில் இருந்து விரலசைவு வரை கவனிக்கக் கூடியவள்.
“ஆமாவாம். நீதான் இன்னிக்கு அவனுக்கு ஊறுகாய்.” என்ற பாலா, நேற்று பெண் பார்க்க வந்த போது பெண்ணிடம் தனியாக பேச முடியவில்லை. இப்போது அவளைப் பார்த்து பேச வந்திருக்கிறான் என பாதி உண்மையை மட்டும் சொல்ல,
“கரிசகொளத்துல பொண்ணு பார்த்துட்டு என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல?” எனக் கோபித்துக் கொண்டவள், பெண் யாரென்று கேட்டாள்.
“கதிரவன் மாமா மக.”
“அட! நிவிப் பிள்ளையா? அவ வீடு நாலு தெரு தள்ளி இருக்குது. அதான் எனக்கு தெரியல. நிவி ரொம்ப நல்ல பிள்ளை பிரமோத். அமைதியானவ! உங்க ரெண்டு பேருக்கும் ஜோடி பொருத்தம் நல்லா இருக்கும். அய்யோ எனக்கு சந்தோசமா இருக்குதுடா தம்பி.”
ஆண்கள் இருவருக்கும் அவளின் புன்னகையை நிறுத்த மனம் வரவில்லை. மௌனமாக இருந்துவிட்டனர். பிரமோத் சிரித்தாற் போல் முகத்தை வைத்துக்கொண்டான். இல்லையெனில் கோதை கண்டுபிடித்துவிடுவாள்.
“க்கா… பார்க்கணும்க்கா. ஹெல்ப் பண்ணேன்.”
“அவ்வளவுதானே? நீங்க ரெண்டு பேரும் நம்ம வீட்டுக்குப் பின்னாடி போற தெரு கடைசில ஒரு சத்துணவு கூடம் இருக்கும். அங்கே போய் இருங்க. நான் அவளைக் கூட்டிட்டு வர்றேன். ஆனா பத்து நிமிசம்தான் டயம். என்ன சொல்ற?”
“ஓகேக்கா. அப்புறம்ம்… அவளுக்கு நான் வந்திருக்கேன்னு தெரிய வேணாம்.”
திட்டப்படி எல்லாம் நடந்தேறியது. கோதை என்னச் சொல்லி அழைத்து வந்தாளோ தெரியவில்லை. ரோஜா நிற பாவாடை, சட்டை, தூய வெள்ளை நிற தாவணி, நெற்றியில் திருநீறு, குங்குமம் கீற்று, தன் கூந்தலின் நறுமணத்தைக் கடன் கேட்டதற்காய்த் தலையில் சிறிது பிச்சிப் பூ என கோவிலுக்கு போய்விட்டு வந்தவள் போல் இருந்த நிவர்த்திகா, வெறிச்சோடி இருந்த சத்துணவு கூடத்து பெரிய வேப்ப மரத்தின் அருகே வர, மரத்தின் மறுபுறத்தில் இருந்து வந்தான் பிரமோத்.
அவனைக் கண்டதும் ஒரே ஒரு கணம் அதிர்வைத் தாங்கி அவன் கண்ணோடு கண் பார்த்தவள், படபடத்துப் போய் பட்டென்று மறுபக்கம் திரும்பிக் கொண்டு கோதையைத் தேட, அவள் முன்னால் வந்த பிரமோத் சிடுசிடுவென பேசினான். “நான் நேத்து உங்க வீட்டுக்கு வந்தேன். ஞாபகம் இருக்குதா?”
‘எனக்கென்ன அம்னீஷியாவா? இப்போ எதுக்கு இவன் வந்திருக்கான்?’ “ஹ்ம்ம்.”
“பிடிக்கலைன்னா முன்னாடியே சொல்லிருக்க வேண்டியதுதானே? வரப் போறது நான்தான்னு உனக்கு தெரிஞ்சிருக்குமே?”
“…….”
“இப்பவும் ஒண்ணுமில்லை. பிரமோத்தைக் கட்டிக்க இஷ்டமில்லைன்னு போய் உங்க அப்பாகிட்ட சொல்லிடு! என்ன புரியுதா?”
அவன் பேசிய விதத்தில் அவளுக்கும் கோபம் வந்தது. “உங்களுக்கு பிடிக்கலைன்னா நீங்களே உங்க வீட்ல சொல்லிட வேண்டியதுதானே?”
“எல்லாம் சொல்லியாச்சு.” எனக் கடுப்பு குறையாமல் சொன்னான்.
“அப்புறம் ஏன் இங்கே வரணும்? கிளம்புங்க, காத்து வரட்டும்.”
அவள் பேச்சில் அவளைச் சுத்தமாக பிடிக்காமல் போனது. அதிலும் இத்தனை நேரத்தில் அவன் முகத்தைக் கூட பார்க்காமல், அவன் விழிகளைத் தவிர்ப்பவளின் மேல் எரிச்சல் மண்டியது. பெண் பார்க்க போன போதும் அவளின் அந்த அகன்ற தாழ்ந்த இமைகளைத்தான் பார்த்தான். இன்றும் இத்தனை அருகிலும் அது மட்டும்தான் காணக் கிடைத்தது.
‘நேற்று பிரியா அண்ணி சொன்னதைப் போல் வெட்கமா? ஸ்ரீ சொன்னதைப் போல் இனிய படபடப்பா? தாத்தா சொன்னதைப் போல் அடக்க ஒடுக்கமா? தான் தான் தவறாக புரிந்துகொள்கிறோமா?’ இப்படியாக எண்ணமிட்டவன் அவள் முகத்தை இன்னும் நன்றாக ஆராய முயன்றான்.
நெவர்! இதில் எதுவுமே இல்லை. ஏனெனில் அவள் முகம் நிமிர்ந்தும் தாடை உயர்ந்தும் இருந்தது. அதில் வெட்கமோ, பயமோ, படபடப்போ, அடக்கமான பண்போ எதுவுமில்லை. விழிகளை மட்டும் இவன்புறம் மலர்த்தவில்லை அவள். அது இவன் மீதான அலட்சியமாகவும் திமிர்த்தனமாகவும் தெரிந்தது இவனுக்கு. அந்த திமிரைக் கொன்று தன் முகங்காணச் செய்துவிடும் வேகம் வந்தது.
பொறுமை பொறுமை என்று அமைதியாக பேச நினைத்தவன் ஆழ்ந்த சுவாசத்துடன் கண்கள் மூடித் திறக்க, அவன் கண்களில் பட்டது அவள் மருதாணிக் கரம். அதைப் பார்த்துவிட்டு அவள் முகம் பார்த்துச் சொன்னான்.
“இங்கே பாரு, படிச்ச பொண்ணுதானே நீ? பிடிக்காம இணையற எந்த உறவுமே நிலைக்காதுன்னு புரியாதவ இல்லையே?” என்றதும், இவளின் விழிகள் கொஞ்சமாய் உயர்ந்து வலப்பக்கம் அசைந்தது. அவனின் வலக்கையின் ஆள்காட்டி விரலில் சிக்கியிருந்த டியூக்கின் சாவியை நோக்கியது.
‘பிடிக்காமல்’ என்று அவன் குறிப்பிட்டது, ‘அவளுக்கு பிடிக்காமல்’ என்பதை! ஆனால் அவள் புரிந்து கொண்டது, ‘அவனுக்கு பிடிக்கவில்லை’ என்று! அப்படி நினைத்ததும் வலப்பக்கம் அசைந்த விழிகள், இடப்பக்கமாய்த் திரும்பி மீண்டும் தாழ்ந்துகொண்டன.
இப்போது அவளின் மனோகரமான வலது கன்னம் மட்டும் காணக்கிடைத்தது. கவிஞனாய் இருந்தால் வர்ணித்திருப்பான். காதலனாய் இருந்தால் வருடியிருப்பான். இவன் கவிஞனுமல்ல; காதலனுமல்ல!
ஆக, அந்தக் கண்களை மட்டுமே அருகிருந்து பார்த்துக் கொண்டிருந்த பிரமோத், அதன் அசைவுகளின் நளினத்தைப் புரிந்துகொள்வதற்கு முன் அது காட்டும் நுட்பமான உணர்வுகளைப் புரிந்துகொள்ள முயன்றான்.
சரி, அதில் தேறினானா? ம்ஹூம், முழு தோல்வி! அவள் நிமிர்ந்து பார்க்காததற்கே அத்தனை கோபம் வந்தது. இப்போது கண்களை அந்தப் பக்கம் வேறு திருப்பி தன் கூற்றை அலட்சியப்படுத்துகிறாள் எனத் தவறாக கணித்தான்.
“அப்டி பிடிக்காம வாழற வாழ்க்கை அரைகுறையாதான் நிற்கும், இந்த மருதாணி மாதிரி என்ன?” எனக் கேட்க, அவள் தன் இடக்கையை நிமிர்த்தி பார்த்தாள். ஆம், அரைகுறையாகத் தான் இருந்தது. அன்று மருதாணி வைத்துக் கொண்டிருக்கையில் பாதியிலேயே அப்பா அழைத்ததும் அப்படியே எழுந்து போயிருந்தாள். அதன்பின் அவர் சொன்னதைக் கேட்டு அழிக்க நினைக்கவில்லை; முழுமைபடுத்தவும் மனம் வரவில்லை. எனவே பாதியோடே நிறுத்தியிருந்தாள்.
“ஏய் பதில் சொல்லுடி! சரியான அழுத்தம்!” எனக் கோப மிகுதியில் இன்னும் அவளை நெருங்கி சொல்ல, விருட்டென்று பின்னால் இரண்டடி நகர்ந்தவளை எங்கே கைநீட்டி விடுவோமோ என்று பயந்தே போனான் பிரமோத்.
இரு கரங்கள் கொண்டு சிகையை அழுந்தக் கோதிக்கொண்டவன், “நிவர்த்திகாஆ….” எனப் பற்களினிடையே அவள் பெயரைக் குதறியெடுக்க,
“ஏன் உங்களுக்கு இவ்ளோ கோவம்? இங்கே வந்து இவ்ளோ டென்ஷன் ஆகறதுக்கு பதிலா நேத்தே எங்க வீட்ல வச்சு பிடிக்கலைன்னு சொல்லிருக்கலாமே?” என்றாள் இலகுவாக!
“நீ ஏன் சொல்லல?”
“என்ன சொல்லணும்னு சொல்றீங்க? பெத்தவங்க இவர்தான் மாப்பிள்ளைன்னு கைக் காட்டினாங்க. வந்து நின்னேன்.” அவள் குரலிலும் எரிச்சல் தொனித்தது.
முற்றிலும் உண்மையல்லவா? ஆனால் ஏனோ அவள் பதிலில் இவனின் கோபம் இன்னுமாய் வெகுண்டெழுந்தது.
“அப்போ எவன் வந்தாலும் வந்து நின்னுருப்பே இல்ல?”
“இப்போ என்ன பிரச்சினை உங்களுக்கு?”
“போய் பிரமோத்தைப் பிடிக்கலைன்னு சொல்லு போ!”
“உங்களாலயே சொல்ல முடியாதப்ப நான் எப்டி சொல்ல முடியும்?”
“முதல்ல நிமிர்ந்து பாருடி. பெரிய உலக அழகி… இவ எங்க மூஞ்சியெல்லாம் பார்க்கமாட்டாளாம்.” என்று காய்ந்தான்.
“பிடிக்கலைன்னு சொன்னப்புறம் நான் பார்க்காததைப் பத்தி நீங்க ஏன் ஃபீல் பண்றீங்க?”
இங்கே அவள் குறிப்பிடுவது ‘அவனுக்கு பிடிக்கவில்லை’ என்று! அவன் புரிந்துகொண்டது அதற்கு நேரெதிர் பொருளில்!
“என் பொறுமையை நீ ரொம்ப சோதிக்கற நிவர்த்திகா. பேசின இந்த பத்து நிமிஷத்துலயே உன் மேல அவ்ளோ காண்டாவுது. உன்னைக் கல்யாணம் பண்ணா சத்தியமா ஒருநாள் கூட நிம்மதியா இருக்க மாட்டேன்.” என்றதும், மழுக்கென்று கண்களில் இருந்து நழுவ பார்த்த கண்ணீரை மறைக்கும் பொருட்டு இன்னுமாய் விழிகளைத் தாழ்த்தினாள் அவள்.
அந்த விழிகள் ஏன் தன் முகங்காண மறுக்கின்றன? “ஓ மேன்!” என இரு உள்ளங்கைகளையும் பேண்ட் பாக்கெட்டினுள் நுழைத்து, வேகமாக வேப்பமரத்தை எட்டி காலால் உதைத்தான்.
அவனின் ஆக்ரோஷத்தில் மிரண்டவள், “நான் போறேன்.” என்று நில்லாமல் திரும்பி விடுவிடுவென நடந்து போய்விட்டாள்.
இவனும் அவ்விடத்தை விட்டு வரும்போது பாலா சிந்தனையுடன் வேறெங்கோ பார்த்துக் கொண்டிருந்தான்.
“போகலாம் வாடா!” என்ற பிரமோத்தின் வெற்றுக் குரலையும் கவனியாது நின்றவனின் தோளில் தட்டினான். “என்னத்தைப் பராக் பார்த்துட்டிருக்கே?”
“ம்ம்? காலண்டர்ல இருக்க மகாலட்சுமி அழுதுட்டே போறதைப் பார்த்தேனா… அதான் அழ வச்சவனை என்ன செய்யலாம்னு யோசிக்கறேன்.”
“பாலா வேணாம்டா… ஏற்கனவே சரி கடுப்புல இருக்கேன். அவ அழறதைப் பார்த்தியா நீ? என்ன திமிர் தெரியுமா?” என்றவனை நிதானமாக திரும்பிப் பார்த்தான் பாலா.
அந்தப் பார்வையின் பொருளைப் புரிந்திருந்த பிரமோத், “ஏதாவது அட்வஸைப் போட்டு சாவடிச்ச… மவனே கழுத்தைத் திருகிக் கொன்னுடுவேன்.” என மெய்யாகவே கழுத்தை நெறிக்கப் பார்க்க,
“டேய் டேய்… அழகம்மாளுக்கு இருக்கிற ஒரே புள்ளை, வித்யாவுக்கு இருக்கிற ஒரே ஒரு ஆளுடா நானு!” என்ற பாலாவின் அலறலில் சிறிது தளர்ந்து புன்னகைத்தான்.
கோதை பக்கத்தில் வேறு வீட்டுப் பெண்ணிடம் பேசிக் கொண்டிருக்க, அவளிடம் சொல்லிவிட்டு இருவரும் புறப்பட்டனர்.
தூறல் தூறும் 🌧️🌧️🌧️