அத்தியாயம் 11
“நீ பேசாம கரிசகுளத்துக்கு வாக்கப்பட்டு வந்துரு விஜி. அப்போ தான் நாம எப்பவும் பிரியாம இருக்கலாம்.”
“ஏன் நீ கருவேலம்பட்டிக்கு வாக்கப்பட்டு வாரது…” என்றாள் விஜி.
அதுநாள் வரை பேருந்து, கல்லூரி என்று இணை பிரியாமல் திரிந்த நட்பு பூக்கள் இரண்டும் இனி பேருந்துமில்லை, கல்லூரியுமில்லை என்று அலைபேசியில் கண்ணீர் சொரிந்தன.
போன வாரம்தான் பரீட்சைகள் அனைத்தும் முடிந்திருந்தன. இனி தங்கள் பெயருக்கு பின்னால் பிபிஎம் என்று சேர்த்துக் கொள்ளலாம். விஜி தன் வீட்டில் மேற்படிப்பிற்கு அச்சாரம் போட்டு வைத்திருக்கிறாள். அது நிறைவேறுவது அவள் தந்தையின் கிருபையில் உள்ளது.
நிவர்த்திகா வீட்டில் மேற்படிப்பிற்கு அனுப்பமாட்டார்கள் என்று தெரிந்து, வேலைக்கு போக வேண்டும் என்று தன் அப்பா கதிரவனிடம் சொல்லி வைத்திருக்கிறாள்.
“அடி போடி! பட்டிக்காட்டுலயே பொறந்து பட்டிக்காட்டுலயே குப்பைக் கொட்டுவேனா? நான் எங்கக்கா மாதிரி பெரிய சிட்டில தான் வாக்கப்பட்டு போவேனாக்கும்.” என அலட்டலாகச் சொன்னாள் நிவர்த்திகா.
அவளின் அக்கா ஆர்த்திகாவிற்கு போன தை மாதத்தில்தான் திருமணம் முடிந்திருந்தது. அவள் இப்போது இருப்பது மதுரைக்கு அருகே இருக்கும் திருமங்கலத்தில்!
“பார்க்கறேன் டோலி, நீங்க எந்த பெரிய சிட்டில போய் சீரியஸா குப்பை அள்ளப் போறீங்கன்னு!” என விஜியும் போலியாக சவால்விட்டாள்.
நிவர்த்திகா விஜியுடன் பேசிவிட்டு வர, நடு வீட்டில் அவளின் அப்பா கதிரவன் தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்தார்.
**********
அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பிரமோத்தைத் தவிர மற்ற அனைவரும் வீட்டில் இருந்தனர். சங்கரன் காலைப் பலகாரம் முடிந்ததும் அமுதினி முதற்கொண்டு அனைவரையும் கூடத்திற்கு வரவழைத்திருந்தார்.
“ஏண்டா நெதம் புது கலர் சேர்த்து சட்டியும் சக்கரமும் (புஸ்வாணம், தரை சக்கரம்) செஞ்சு டிரையல் பார்ப்பியே… நேத்தும் பார்த்தியா?” என தன் மூத்த மகன் சரவணனைக் கேட்க,
அவரும் பெருமையாக சொன்னார். “ஆமாப்பா, நேத்து டிரெய்ன் வெடில (பற்ற வைத்ததும் சத்தமின்றி சீறிக்கொண்டு செல்லும் ஒரு வகை வெடி) பார்த்துட்டு இருந்தோம். இந்த வருஷ தீவாளிக்கு இறக்கிடணும்.”
“வருசாவருசம் தீவாளி வருது. நீயும் மத்தாப்பு புதுசு புதுசா போட்டுக்கிட்டு இருக்கியே தவிர, காலாகாலத்துல கல்யாணத்தை முடிச்சு உன் பிள்ளைக்கு தல தீவாளி பார்க்கணும்னு நெனப்பு இருக்காடா உனக்கு?”
அப்பாவின் அதட்டலில் ஒரு நிமிடம் திருதிருத்தார் சரவணன். ‘யாருக்கு தலை தீபாவளி?’ ஒருவிதமாக தடுமாறி புரிந்துகொண்டு, “பிரமோத்துக்கா? அவன்… அவனுக்கு இன்னும் பொறுப்பு வரணும்னு பார்க்கறேன்ப்பா…” என்றார் நலிந்த குரலில்.
“எப்டி… நெதம் சிலம்பம் சுத்திக்கிட்டும், வண்டில பெட்ரோலைப் போட்டு ஊரைச் சுத்திக்கிட்டும் இருந்தா பொறுப்பு வந்துடுமாடா?”
“அப்போ கல்யாணம் செஞ்சா மட்டும் பொறுப்பு வந்துடுமா தாத்தா?” எள்ளலாகக் கேட்டான் அரவிந்தன்.
“ஐயாவு… கல்யாணம் முடிச்சா அவனுக்குன்னு ஒருத்தி வருவா. இத்தனை நாள் இருந்த மாதிரி இல்லாம அவளுக்காகவும் யோசிப்பான். பூ வேணும்னா கூட புருஷன் கையை எதிர்பார்ப்பா… அப்பவும் எங்கப்பா கிட்ட கேளுன்னு சொல்லுவானா, ஐயாவு?”
“ச்ச! ஒரு புலியை பூ வாங்கறதுக்கு வேலைக்கு அனுப்பப் பார்க்கறீங்க தாத்தா நீங்க!”
அவன் பதிலில் அனைவர் முகத்திலும் முறுவல்!
“அந்தக் காலம் மாதிரி இல்லை. இப்போல்லாம் பொண்ணுங்க எல்லாம் ரொம்ப ஸ்மார்ட் தாத்தா. பூவுக்காகவெல்லாம் புருஷன் கையை எதிர்பார்க்கறதில்ல.” என்று ஸ்ரீயைப் பார்த்தவாறே குரலில் சிறு கேலி இழையோட சொன்னாள் பிரியா.
ஸ்ரீ, “நான் உனக்கு பூ வாங்கித் தந்ததே இல்லையாடீ?” என சிறு கோபத்துடன் கேட்க,
“அவ பொதுவா சொல்றா. நீ ஏண்டா குதிச்சுக்கிட்டு வர்ற?” என அதட்டல் போட்டார் அமலா.
அசோகன் பேச்சை நடப்பிற்கு திருப்பினார். “பிரமோத்க்கு நீங்க ஏதும் பொண்ணு பார்த்துருக்கீங்களாப்பா?”
“ஹூம் ஹூம்!” – ஆமோதிப்பு.
இப்போது அனைவர் முகத்திலும் ஆவல்.
“யாரு தாத்தா?” – பிரியா.
“என் தம்பி கேசவனோட பேத்தி’ம்மா.”
அவள் கேள்வியாக காஞ்சனாவைப் பார்க்க, அவர் ஆர்வமாக சங்கரனைக் கேட்டார். “மல்லியோட மகளா மாமா?”
“ஆம்’ம்மா. அன்னிக்கு அவ நிச்சய பத்திரிகை வைக்க வந்தப்பவே நான் முடிவு பண்ணிட்டேன். என் தம்பி குடும்பத்து கடைசி வாரிசு மல்லிகா பிள்ளைதான். இப்போ நாம அங்கே பொண்ணெடுத்தா சொந்தம் விட்டுப் போகாது. என்னடா சரவணா?”
“சரிதான்ப்பா. என் ஃப்ரெண்டோட மக என் மருமகள்னா எனக்கு டபுள் ஓகே!” என்ற சரவணனின் முகத்தில் அப்படியோர் மலர்ச்சி.
“அதானே கதிரவன் மகளை நீ வேணாம்னு சொல்லுவியா?” – அசோகன்.
“பொண்ணை எப்போ பார்க்கறது மாமா?” என அமலா கேட்க,
“இப்போ தான்ம்மா என் மனசில இருக்கறதை உங்ககிட்டயே சொல்றேன்? இனி தான் கேசவன் கிட்ட கேட்கணும். அப்புறம் கதிர…”
“அதெல்லாம் கதிரவன் ஒத்துக்குவான்ப்பா.” எனத் தந்தையை இடைமறித்துச் சொன்னார் சரவணன்.
பெரியவர் பதிலேதும் சொல்லாமல் சிந்தனையிலாழ்ந்தார். ‘பாலசந்திரனின் மகளுடன் பிரமோத் கிசுகிசுக்கப்பட்ட போதும், அவர் தன் மகளைப் பிரமோத்திற்கு தர விரும்பவில்லை. இப்போது கதிரவன் மட்டும் பெண் தர எப்படி சம்மதிப்பார்?’
கதிரவனிடம் சம்மதம் வாங்க சரியான ஆள் அவருடைய நண்பன் சரவணன் தான் என முடிவு செய்த பெரியவர், “நான் கேசவன் கிட்ட பேசறேன். கதிரவன் கிட்ட நீயே நேர்ல போய் பேசிடு, சரவணா.” என்றார்.
“சரிப்பா.”
“வீட்டுக்கு போக வேண்டாம். வேற எங்கேயாவது வெளியே வரச்சொல்லி பேசு.”
“எனக்குத் தெரியாதாப்பா?”
“உம். அசோக்கு, காரை எடு. கேசவனைப் பார்த்துட்டு வந்துருவோம். அப்புறம் வீட்டுப் பொம்பளைங்களுக்கும் சொல்லிக்கறேன்மா. இப்போதைக்கு அந்தப் பய (பிரமோத்) காதுக்கு எதுவும் போக வேண்டாம். எல்லாம் ஒத்து வந்த பிறகு சொல்லிக்குவோம்.”
“சரி மாமா.” – காஞ்சனா மற்றும் அமலா.
அதன்படி பெண் வீட்டாரிடம் கலந்து பேசி, அவர்களுக்கும் சம்மதம் என்று தெரிந்து, ஒரு வாரம் கழித்து பிரமோத்திடம் சொன்னார்கள்.
“கல்யாணமா? எனக்கா? சரிதான். பேரனுக்கு கல்யாணம் பண்ணனும்னு சங்கருக்கு இப்பவாவது புத்தி வந்ததே?” என்று தன் நையாண்டியை ஆரம்பித்தான் அவன்.
“தம்பி!” – சரவணன்.
“ஸாரிப்பா. பொண்ணு யாரும்மா?” என காஞ்சனாவிடம் கேட்க,
“மல்லி மதினியோட மகளாம் பிரமோத். நல்ல பிள்ளை அது. அவுக அக்கா கல்யாணத்துல பார்த்தேன்.” என்றார் அமலா.
“அது எந்த மல்லி, சித்திம்மா?”
“வாயிலயே போடப் போறேன்டா உனக்கு! அப்பாவோட ஃப்ரெண்ட் கதிரவன் அண்ணே இருக்காரில்ல? அவரு மக!” – காஞ்சனா.
“கதிரவன் மாமா மகளா?”
‘அவர் வீட்டு ஃபங்ஷனுக்கு பரிசம், கல்யாணம்னு ரெண்டு தடவை போனேன். ரெண்டு தடவையும் அவரோட இன்னொரு மகளைப் பார்க்கவே இல்லையே?’ என அவளைத் தன் நினைவுகளில் துழாவ முயன்றான்.
நிச்சயதார்த்த விழாவில் எதுவும் நினைவிலில்லை. ஆனால் கல்யாணத்தில் அந்த அத்தை அவளை அறிமுகப்படுத்த நினைத்து, “இங்கே தானே இருந்தா? அதுக்குள்ள எங்கே போயிட்டா?” எனக் கேட்டது ஞாபகத்தில் இருந்தது.
அதன்பின்னும் அவளைப் பார்க்கவில்லை. அல்லது பார்த்தும் அடையாளம் தெரியாமல் இருந்துவிட்டானோ? தெரியவில்லை.
“ஆமா, பொண்ணு இந்த வருஷம் தான் பிபிஎம் முடிச்சிருக்கா! அதனால இப்ப உறுதி செஞ்சிக்கிட்டு அடுத்த வருஷம் கூட கல்யாணத்தை வச்சுக்கலாம்.” – சரவணன்.
“ஜாததப் பொருத்தமும் பார்த்துட்டேன் சரவணா. ஒன்பது பொருத்தம் இருக்குதாம். தோஷம் கீஷம் ஒண்ணுமில்லை. அதனால எப்போ வேணா செய்யலாம்.” – சங்கரன்.
“வர்ற ஞாயித்துக்கிழமை எங்கேயும் ஊரைச் சுத்த போயிடாதே, பிரமோத். பொண்ணு பார்த்துட்டு அப்டியே பூ வச்சிட்டு வந்துடுவோம்.” – அசோகன்.
“ப்ச்! போங்க சித்தப்பா. எனக்கு அவளைப் பார்த்த மாதிரியே ஞாபகமில்ல. பொண்ணு ஃபோட்டோ பார்க்காம என்னால ஓகே சொல்ல முடியாது.” என முறுக்கிக்கொண்டான் பிரமோத்.
“உங்கப்பனுக்கே நான் ப்போட்டாவைக் காட்டி முடிக்கலையேடா.” – சங்கரன்.
“சங்கர், நீர் என்னைப் பழி வாங்குறதுக்காகவே அட்டு ஃபிகரைப் பார்த்து வச்சிருப்பீர். ஃபோட்டோ பார்க்காம பொண்ணு பார்க்க நான் வர மாட்டேன்.”
“நிவர்த்தி லட்சணமான பிள்ளைடா பிரமோத். அன்னிக்கு அவ அக்கா கல்யாணத்துல அம்மா பார்த்தேனே… நீ பார்க்கலையா?” எனக் கேட்டார் காஞ்சனா.
“ஆமாக்கா. மாமா சொல்றதுக்கு முன்னாடியே இந்தப் பிள்ளை நம்ம வீட்டுக்கு வந்தா நல்லா இருக்குமேன்னு நான் நினைச்சேன்.” – அமலா.
ஸ்ரீதரன், “டீஃபால்ட்டா சிரிப்பை ஒட்ட வச்ச மாதிரி முகத்தோட ஒரு பிள்ளை சுத்திக்கிட்டு இருந்துச்சே… அதுவா சித்தி?” என கேட்க,
“ஆமா ஸ்ரீ, லட்சுமி கடாட்சமா இருந்துச்சு.” என்றார் அசோகன்.
“ஓ! அவங்களா’ப்பா?” என்ற அரவிந்தன் தன் பங்கிற்கு சொன்னான். “வொர்த்து ப்ரோ! நீ ஃபோட்டோ பார்த்து, பொண்ணு பார்த்து, பரிசம் போட்டுன்னு டைம் வேஸ்ட் பண்ணாம ஸ்ட்ரெய்ட்டா தாலியே கட்டிடலாம்.”
“ஆமா பிரமோத், அந்தக் கல்யாணத்துக்கு நானும் தானே வந்திருந்தேன். அந்தப் பிள்ளைக்கு நல்ல ஃபேஸ் கட்! அவ ஸ்மைலுக்கு நான் ரசிகையாகிட்டேன் தெரியுமா? நம்ம அம்மு கூடத்தான்!” என்ற பிரியா, தன் மகள் அமுதினிக்கு நிவர்த்திகா சித்தியை நினைவுபடுத்தும் வேலையில் ஆழ்ந்துவிட்டாள்.
“அப்புறமென்ன? வீட்ல அம்முக்குட்டி வரை எல்லாருக்கும் பிடிச்சிருக்கு. நானும் கதிரவன் கிட்ட பேசிட்டேன். ஞாயித்துக்கிழமை ரெடியா இரு தம்பி!” – சரவணன்.
‘எல்லாரும் பார்த்திருக்காங்க. அன்னிக்கு என் கண்ல மட்டும் ஏன் அவ படல?’ எனத் தனக்குள் கேட்டுக் கொண்டவனின் கால்கள், மாடியில் உள்ள அவனறைக்கு ஓடியது.
அங்கே கதிரவன் தன் மூத்த மகளின் நிச்சயதார்த்தத்திற்கு இவனுக்கு தந்த பத்திரிகையை எடுத்து முன்னும் பின்னும் திருப்பி எதையோ தேடி, தேடியது கிடைத்தாற் போல் ஓரிடத்தில் நிலைத்தன அவன் விழிகள்.
“நிவர்த்திகா!” எனச் சொல்லி பார்த்துக்கொண்டன அவன் அதரங்கள்.
**~**~**~**~**
“பிரமோத்தா?!” – அதிர்ச்சி, திகைப்பு, திகைப்பூண்டை மிதித்தாற் போல்… இன்னும் அதிர்விற்கு என்னென்ன உவமைகள் இருக்கின்றனவோ அத்தனையும் சேர்ந்தாற் போல் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு நின்றாள் நிவர்த்திகா.
மகள் அத்தனை இலகுவாக அந்தப் பெயரைச் சொல்வதைக் கேள்வியுடன் பார்த்தனர் கதிரவனும் மல்லிகாவும்.
சற்றுமுன்னர் தான் அவள் கல்யாண விடய மூட்டையை நடுவீட்டில் வைத்து அவிழ்த்திருந்தார் கதிரவன்.
கல்யாணம் என்றதுமே நிவர்த்திகாவிற்கு ஏமாற்றமாக இருந்தது. “கொஞ்ச நாள் வேலைக்கு போறேனேப்பா?”
எப்படியும் படிப்பு முடிந்ததும் திருமணம் செய்வித்து விடுவார்கள் என்று புரியாதவளல்ல. இருந்தும் அது இத்தனை விரைவில் நடக்குமென எதிர்பார்த்திருக்கவில்லை.
“இப்போ நீ வேலைக்கு போகணும்னு என்ன அவசியம் நிவர்த்தி?”
“…….”
“நல்ல சம்பந்தம் இப்போ விட்டா பின்னாடி கிடைக்காதுடீ. உங்கக்கா மாதிரி அவ்ளோ தொலைவு அனுப்ப வேண்டாம் பாரு!”
“ஆமா நிவர்த்திம்மா… எதிர்ல இருக்க கருவேலம்பட்டிதான். நினைச்ச நேரம் வந்து போயி இருந்துக்கலாம். நாங்களும் பிள்ளை எப்படி இருக்குதோ என்னவோன்னு கவலையில்லாம இருப்போம்ல?” என்றார் கதிரவன்.
“கருவேலம்பட்டியா?” கோணலானது இவள் முகம். “போன வாரம் தான் இந்த விஜி கழுதை சொன்னா’ம்மா. கருவேலம்பட்டிக்கு வாக்கப்பட்டு வந்துடு நிவி. ரெண்டு பேரும் பிரியாமலே இருக்கலாம்னு!”
தம்பதியர் சிரித்துக்கொண்டனர்.
“உன் ஃப்ரெண்ட் போன வாரம் சொன்ன மாதிரி, என் ஃப்ரெண்டும் போன வாரம்தான் என்னைக் கூப்பிட்டு கேட்டான். என் பையனுக்கு உன் மகளைத் தருவியாடா கதிரவா’ன்னு கேட்டான்.”
“அது யாருப்பா உங்க ஃப்ரெண்ட்?”
“சரவணன்னு ஒருத்தன். உனக்கு தெரிஞ்சிருக்கும். ஆர்த்தி கல்யாணத்துக்கு வந்திருந்தான். அவங்கப்பா உங்கம்மாவோட பெரியப்பா. உங்க கேசவன் தாத்தாவுக்கு அண்ணன். நீ கூட அன்னிக்கு கேட்டியே… அந்த சங்கரன் தாத்தா…”
கதிரவன் சொல்ல சொல்ல இவளின் விழிகள் மெல்ல மெல்ல விரிந்தது. தன்னையுமறியாமல், “பிரமோத்தா??” என்று கூவியிருந்தாள்.
“பிரமோத்தையா சொல்றீங்கப்பா?” பாலின் நிறம் வெள்ளைதான் என்று தெரிந்தும் அப்படி இருந்துவிடக் கூடாது எனும் வேண்டுதல் எப்படி ஏற்றுக் கொள்ளப்படும்?
“உனக்கு அந்தத் தம்பியைத் தெரியுமா நிவர்த்தி?” -கதிரவன்.
“……..”
“ஏய் என்னடீ? பேயறைஞ்ச மாதிரி பார்க்கற?” அதிர்விலிருந்த அவள் முகபாவனையிலிருந்து, அவளுக்கு பிடித்தமா பிடித்தமில்லையா என்று இனம் பிரிக்க இயலவில்லை.
“நிவர்த்தீ!!”
“அம்… அம்மா… பிரமோத்தா’ம்மா?” என மீண்டும் மீண்டும் கேட்டு உறுதிபடுத்திக் கொள்ள விழையும் மகள் விநோதமாக தெரிந்தாள்.
‘இது நிஜமா?’ என பெண்ணிற்கு தன்னைக் கிள்ளிப் பார்க்க தோன்றியது. ஆயினும் அதை செயல்படுத்தவியலாமல் காய்ச்சல் கண்ட உடலைப் போல், கை ஒத்துழைக்க மறுத்தது.
“நிவர்த்தி, என்ன செய்யுது?” கதிரவன் கேட்க,
“அப்பா… அவன்… அவர்… என்ன சொன்னார்?”
“முதல்ல உனக்கெப்டி அவரைத் தெரியும்னு சொல்லுடி.” – மல்லிகா.
“ம்மா, அவர் லலிதா சித்தி மக சித்தாரா இருக்கால்ல? அவளைத் தான்…”
“தெரியும்டா. நெதம் நீ காலேஜ்க்கு போற பஸ்ல பார்த்திருக்கியோ? எனக்கு அது நினைவே இல்லை பாரேன்.” – கதிரவன்.
‘அப்பாவுக்கு தெரியுமா? தெரிந்துமா அவனை மாப்பிள்ளையாக்க விரும்புகிறார்?’ அவள் கேட்க விரும்பியதை விழிகள் அப்படியே கேட்க,
பதில் சொன்னார் கதிரவன். “எனக்கு முன்னாடியே இந்த விஷயம் தெரியும்தான். ஆனா அந்தத் தம்பி கூட நானும் உங்கம்மாவும் ஒரு அரைநாள் முழுக்க இருந்தோம் நிவர்த்தி. அன்னிக்கு அவரைப் பக்கத்துல இருந்து பார்த்ததுல ஒரு சின்ன பழுது கூட சொல்ல முடியல.”
“ஆமா நிவர்த்தி. உங்கப்பாவோட சொத்தை (அத்தை)மக அந்த பல்லாயி (உண்மையில் அவர் பெயர் சுமதி) இருக்கால்ல? பத்திரிகை வைக்க போன இடத்துல அவளோட மக ‘கார்ல ஒரு ரவுண்ட் கூட்டிட்டு போறீங்களா’ன்னு அந்தத் தம்பி மேல போய் விழுகுது. கருமம் அப்படியே அம்மையைக் கணக்காவே வளர்ந்து நிக்குது. எனக்கு அவ்ளோ ஆத்திரம்! வந்த இடத்துல எதுவும் பேசக்கூடாதேன்னு அமைதியா இருந்தேன். ஆனா அந்தத் தம்பி எவ்ளோ நாசூக்கா பேசி அனுப்புச்சு தெரியுமா?”
“எவ’டீ இவ… விஷயத்தை மட்டும் சொல்லாம நீட்டி முழக்கிக்கிட்டு!” என கதிரவன் கடிந்துகொள்ள,
“உங்க சொத்தை மகளை சொன்னதும் உங்களுக்கு பொத்துக்கிட்டு வந்துருமே…” என விடாமல் பேசினார் மல்லிகா.
“ப்ச்! அதைவிடு மல்லி. இப்ப பிள்ளை கலங்கி நிற்குது பாரு. பயப்பட வேண்டாம்னு சொல்லுவியா…”
“அடி பாப்பா! அந்த தம்பி மனசுல அப்டிலாம் எதுவுமில்லையாம். நீ வெசனப்படாதே!”
“எனக்கும் முதல்ல அது நெருடலாதான் இருந்தது நிவர்த்தி. ஏன்னா நானும் அந்தப் பக்கம் வரும்போது டீக்கடைல பேசிக்கறதைக் கேட்டிருக்கேனே… சரவணன் முதல்லயே பையனைப் பத்தி சொல்லிட்டு, அப்புறம்தான் பொண்ணு கேட்டான்.” நிவர்த்திகா தரையிலோடும் எறும்பு வரிசையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவன் அண்ணன் விடயத்தில், தாத்தாவுடன் ஏற்பட்ட பிணக்கில் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொண்டான் என்று சொன்ன கதிரவன், “அப்டியிருந்தும் அன்னிக்கு நாங்க மூணாவது மனுஷனா நிற்கும் போது எங்க முன்னாடி அவரை அவன் விட்டுக் கொடுக்கவே இல்ல தெரியுமா? அன்னிக்கு நானும் உங்கம்மாவுமே அவன் அவர்கிட்ட நடந்துக்கிட்ட விதத்துல அசந்துபோனோம்.” என அவர் கோணத்தில் பிரமோத்தைப் பற்றி அவர் புரிந்துகொண்டதைச் சொன்னார்.
அன்று அவன் என்னமாய் பர்ஃபாமன்ஸ் செய்திருந்தால் இப்படியோர் பாராட்டைப் பெறுவான்!
“சங்கரன் மாமா தான் முதல்ல பேச்சை ஆரம்பிச்சிருக்கார் போல!”
‘ஓ! அந்த தாத்தாவா? அதனால்தான் அன்று அக்காவின் நிச்சயதார்த்த நிகழ்வில் தன்னைத் தேடி வந்து பேசினாரோ?’ அன்று பிரமோத்தின் மேல் கவனம் வைத்திருந்தவள் இதை சிந்திக்க மறந்துபோனாளே!
“அவருக்கும் பேரன் மேலே அத்தனைப் பிரியம். என்ன வெளியே காட்டிக்கறதில்லையாம்.”
சொல்லிவிட்டு மகளைப் பார்த்தார். அவள் நிலை மாறாமல் அப்படியே இருந்தாள். “வேற யாரும் எதுவும் சொல்லுவாங்கன்னு நினைக்கறியா நிவர்த்திம்மா? அப்பா கஷ்டப்படும் போதும் அம்மா கூட உங்களையும் தனியா விட்டுட்டு வேத்து நாட்டுக்கு போகும் போதும் எவன் வந்தான் சொல்லு!”
நிமிர்ந்து தந்தை முகம் பார்த்து கேட்டாள். “அன்னிக்கு சொந்தக்காரங்க முக்கியம்னு சொன்னீங்களேப்பா?”
“சொந்தக்காரங்க முக்கியம்னு சொன்னேன். நம்ம சொந்த விஷயத்தை விமர்சனம் பண்றவங்களை அதிமுக்கியமா நினைக்கணும்னு சொல்லல, நிவர்த்தி.”
மல்லிகா மகளின் தோளணைத்துச் சொன்னார். “நீ கவலையேபடாதே நிவர்த்திம்மா. அந்த குடும்பத்துல உனக்கு எந்த கஷ்டமும் வராது. நிச்சயம் அவரும் உன்னை எந்த இடத்துலயும் விட்டு கொடுக்கமாட்டார்.”
“எல்லாத்துக்கும் மேல அப்பா உனக்கு நல்லதைத்தானே செய்வேன் நிவர்த்தி? சரி, அப்பாவோ அம்மாவோ உன்னைக் கம்பெல் பண்ணமாட்டோம். நீயே யோசிச்சு சொல்லு.”
“நீங்க அவங்ககிட்ட என்னப்பா சொல்லிருக்கீங்க?”
சிறிது தயங்கியவர், “உனக்கு அவரை முன்னாடியே தெரியும்னு நான் யோசிக்கலம்மா… அதனால… சம்மதம்னு சொல்லிட்டேன்.” என்றுவிட்டு, சற்றுநேரம் கழித்து மீண்டும் சொன்னார். “உனக்கு பிடிக்கலைன்னாலும் சொல்லு. நான் அவங்ககிட்ட வேற காரணம் சொல்லி வேண்டாம்னு சொல்லிடறேன். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் உன் சந்தோஷம்தான் முக்கியம் நிவர்த்தி.”
“ஆமா, ஆர்த்திக்கு எப்டி பிடிச்ச மாதிரி கல்யாணம் ஆச்சோ, அதே மாதிரி உனக்கும் பிடிச்சு தான் செய்வோம். நீ ஒண்ணும் வெசனப்பட்டுக்காதே.” -மல்லிகா.
நிவர்த்திகா தனக்குள் எதையோ பரிசீலிப்பவள் போலும் கலக்கமுற்றும் இருந்தாளே தவிர, அவர்களுக்கு பதிலேதும் சொல்ல முற்படவில்லை.
தூறல் தூறும் 🌧️🌧️🌧️
Hello Readers,
கதை வாசிச்சிட்டு உங்களோட குட்டி கமெண்ட்ஸையும் இங்கே ஷேர் பண்ணுங்களேன். As a story teller, கதை உங்கப் பார்வைல எப்டி போகுதுன்னு தெரிஞ்சிக்க விருப்பம்🤗🤗
நன்றி, 🫶🫶