Loading

அத்தியாயம் 10

சங்கரன் கடந்த சில நாட்களாகவே இறுக்கமாக காணப்பட்டார். காரணம், பெயர் சொல்ல பிறந்த பேரன் பிரமோத் என்று சொல்லவும் வேண்டுமோ? ஒருநாள் சங்கரன் தென்னந்தோப்பில் இருந்த போது சித்தாராவின் அப்பா பாலசந்திரன் அவரைச் சந்தித்தார்.

“அட சந்திரனா? வாப்பா… கிழவனைப் பார்க்க வந்திருக்கே? வந்து இப்டி உட்கார்.” சிறிய மடக்குக் கட்டிலில் தன்னருகே இருந்த இடத்தைக் காட்டினார்.

“எப்டி இருக்கீங்க மாமா?”

“இருக்கேன்யா. ஒரே ஊருக்குள்ள இருந்துக்கிட்டு பார்க்க முடியலயே… காலம் மாறிப் போச்சு. ஹூம்!”

“வேலைல நேரம் சரியாப் போயிடுது மாமா.”

“உம்‌ உம்! பிள்ளைக எப்டி இருக்குதுக, சந்திரா? பெரியவளை விருதுநகர்ல தானே செய்திருக்க (திருமணம்)?”

“ஆமா மாமா. அவளுக்கு ஒரு பையன், ஒரு‌ வயசாகுது.”

“ஹாஹா… நீயும் தாத்தனாகிட்டே’ன்னு சொல்லு!”

நல விசாரிப்புகள், இளநீர் உபசரிப்புகள் எல்லாம் முடிந்ததும் மெல்ல பேச்சை ஆரம்பித்தார் பாலசந்திரன். முதலில் தன்‌ இரண்டாம் மகளின் (சித்தாரா) படிப்பைப் பற்றி சொன்னவர், அவள் கல்லூரிக்கு பேருந்தில் செல்வதையும் பிரமோத் அவளைப் பின்தொடர்வதையும் சொன்னார்.

இதனால் பெண்ணின் பெயருக்கு களங்கம் ஏற்படுவதோடல்லாமல், அவளுக்கு பேசி வைத்திருந்த வரனும் தட்டிப் போக வாய்ப்புள்ளதைச் சொல்வி வருந்தினார் பாலசந்திரன்.

சங்கரனுக்கு இது அதிர்ச்சிதான். பிரமோத் ஏதோ சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறான் என இவர் நினைத்திருக்க, அவனின் சிறுபிள்ளைத்தனத்தால் ஒரு பெண்ணின்‌ திருமணமே அல்லவா தடைப்பட இருக்கிறது!

அவனைக் கண்டும் காணாமல் இருந்தது தன் தவறோ என்றெண்ணி வருந்தியவர், ‘பிரமோத் தன் பேரன் என்பதாலேயே இந்த பாலசந்திரன் தன்னிடம் பேச வந்திருக்கிறான். வேறொருவன் என்றால் இப்படி சுவாதீனமாக வந்து சொல்லிக் கொண்டிருப்பானா?’ என நினைத்த மாத்திரத்திலேயே பெண்ணைப் பெற்றவரிடம் மன்னிப்பை வேண்டினார்.

“பிரமோத்துக்கு உன் மகளுக்கு பேசி வச்சிருக்கறது தெரியாதுன்னு நினைக்கறேன்பா… தெரிஞ்சிருந்தா இப்டி செஞ்சிருக்க மாட்டான். இருந்தாலும் அவன் சார்பா நான் மன்னிப்பு கேட்கறேன்.”

“அய்யோ மாமா! என்ன நீங்க போய் என்கிட்ட..?” பாலசந்திரனின் கண்கள் இறைஞ்ச, பார்த்துக் கொண்டிருப்பாரா சங்கரன் தாத்தா? உள்ளார்ந்த வாக்குறுதியை அளித்துவிட்டார்.

“இனி அவன் காலைல பஸ் ஸ்டாப் பக்கம் வர மாட்டான், சந்திரா. கவலைப்படாதே. அந்தப் பயலை நான் தட்டி வைக்கிறேன்.”

பாலசந்திரன் விடைபெற்று சென்றதும், பிரமோத்தைக் குறித்த சிந்தனையில் ஆழ்ந்தார். ‘சித்தாராவைத் திருமணம் முடிப்பது அவன் நோக்கமா? அன்றி தன் கௌரவத்தைத் தாழ்த்திவிடும் உத்தேசமா? ஆனால் ஒருபோதும் அவன் கண்களில் காதல் மயக்கத்தைக் கண்டதில்லையே?’ என அனைத்தையும் சீர்தூக்கிப் பார்த்தார்.

முன்பே தனக்கெதிராக செயல்படவே அவன் இப்படி நடந்து கொள்வதாக சந்தேகப்பட்டார். என்ன, அந்த பெண் பாலசந்திரனின்‌ மகள் என்று அப்போது தெரியாது. இதோ இன்று அவரின் சந்தேகம் ஊர்ஜிதமாயிற்று. அவனும் நினைத்ததைச் சாதித்துவிட்டான். பாலசந்திரன் தன்முன் வந்து இப்படியாக வருத்தமுற்றுச் சொல்வதே அதற்கு சாட்சி!

ஆனால் இவர் அவனுக்கு பாட்டனல்லவா? பதிலடி கொடுக்காமல் இருந்துவிடுவாரா? இருந்தும் நூற்றில் ஒன்றாக பிரமோத்தின் உள்ளம் சித்தாராவின் வசமிருந்தால், பேரனின் ஆசைக்கு தடை போடலாகாது. இந்த பாலசந்திரனும் மிகவும் நல்ல மாதிரிப்பட்டவன். ஒரே ஊர், ஒரே இனம், நல்ல சம்பந்தம்தான், உறவுக்காரன்வேறு!

இந்த எண்ணம் வந்ததும் தன் மனதில் உதித்தத் திட்டத்தைச் செயல்படுத்தத் தயங்கினார் சங்கரன். எதற்கிந்த தயக்கமாம்? தன்னை விடவும் பிரமோத்தை நன்கறிந்த ஒருவன் இருக்கிறானே?

‘கூப்பிடுங்களடா அவனை!’

சங்கரனின் கட்டளைக்கேற்ப இதோ… இப்போது அவரின் முன் பிரமோத்தின் பிராண சிநேகிதன் பாலா!

“வணக்கம் தாத்தா.”

“என்னடா பேரு இது பாலா மோரா’ன்னு?”

“முழுப்பேர் பாலமுருகன் தாத்தா.” எனப் பல்லைக் கடித்தான் பாலா.

“பாலமுருகன் தகப்பன்சாமிடா. அவனைப் போய் தாத்தா’ங்கற?” என்றுவிட்டு அவரின் நகைச்சுவைக்கு(?) அவரே நகைத்துக் கொண்டார்.

‘கிழத்துக்கு நக்கலைப் பாரேன்… இந்தாளுக்கு பிரமோத் தான் சரி!’

“பேரு எப்டியோ! ஆனா நீ பொறுப்பான பய ராசா.”

‘என்ன, பெரிசு நையாண்டி ட்டூ நாதஸ்’க்கு அந்தர்பல்டி அடிக்குது?’

“என்னடா யோஜனை?”

சிந்தனையூடே, “இல்ல… என் பாட்டுக்கு நீங்க ஏன் ஊதுறீங்…” என்றுவிட்டு, சடாரென சுதாரித்து வாயை மூடிக்கொண்டான்.

இக்கால இளைஞர்களின் பாஷை புரியாத பெரியவர், “என்ன?” என,

“ஹப்…. அது ஒண்ணுமில்ல தாத்தா. புதுசா மியூசிக் க்ளாஸ் ஆரம்பிக்கலாம்னு ஒரு யோசனை…” என இளித்தபடி உளறி வைத்தான்.

“உனக்கிருக்கற பொறுப்பு உன் சிநேகத பயலுக்கு ஏண்டா இல்லாம போச்சு?” பெரியவரின் குரலில் இருந்த வருத்தத்தில் துணுக்குற்றான் பாலா.

“என்னாச்சு தாத்தா?”

“இவன் மினி பஸ்ல ஏதோ ஒரு பிள்ளையக் காதலிக்கறானாமே’டா? நெசமா?”

“அவன் சும்மா டைம்பாஸூக்கு பாட்டைப் போட்டுக்கிட்டு திரியுறான் தாத்தா.” என அசுவாரஸ்யமாய் சொல்ல, பரபரப்பானார் பெரியவர்.

“என்னப்பா சொல்ற? அப்போ உன் சிநேகதனுக்கு அந்த பிள்ளை‌ மேல காதல் ஒண்ணுமில்லையா?”

அவரின் நேரிடையான கேள்வியும் பரபரப்பும் இவனைக் குழப்பியது. ‘பிரமோத் இவரிடம் எதையாவது சொல்லி வைத்திருக்கிறானோ?’

“அப்டியே இருந்தாலும் சொல்லு. அந்தப் பிள்ளையவே பேசி முடிச்சிடலாம்.”

இப்போது இன்னும் அதிகமாக குழம்பினான் பாலா. ‘எப்பவும் இவர் அவனுக்கு எதிராகவே தானே யோசிப்பார்? இன்றென்ன புதிதாக? ஒருவேளை தன் வாயைப் பிடுங்க போட்டு வாங்குகிறாரோ?’

“தெ தெரியலயே தாத்தா… எப்பவும் காலைல அந்தக் கிழவிக்… அ… சித்தாராவுக்காக’ன்னு பாட்டு செலக்ட் பண்ணிட்டு இருப்பான். ஆனா அதுக்கப்புறம் அவளைப் பத்தி பெரிசா எதுவும் பேசி நான் பார்த்ததில்ல. சொல்லப் போனா ‘பாட்டுக்காக சித்தாரா; சித்தாராவுக்காக பாட்டு!’ இப்டித்தான் பேசுவான். மத்தபடி காதல்… எனக்கு சொல்லத் தெரியலை தாத்தா.”

பெரியவரின் முகம் குழப்பத்தையும் சிந்தனையையும் பிரதிபலித்தது.

பாலா அவருக்கு சமாதானமாக சொன்னான். “வேணும்னா நான் இன்னும் அவனை டீப்பா அப்ஸர்வ் பண்ணி சொல்றேன் தாத்தா.”

“ஹூம் ஹூம்!” என்றவர், பாலா தன்னை நம்ப வேண்டி, அவனிடம் பாலசந்திரன் வந்து போனதைச் சொல்லி, தன் மனதில் இருக்கும் திட்டத்தையும் சொன்னார்.

தன்‌ நண்பன் பிரமோத்திற்கு நல்லதைத் தான் நினைக்கிறார் பெரியவர் என்று புரிந்தது. “நல்ல ஐடியா தாத்தா.” என்றவன் தானும் அவருக்கு நிச்சயமாக ஒத்துழைப்பதாக சொன்னான்.

அன்றிலிருந்து பாலாவும் தன்னால் முடிந்தவரை பிரமோத் காலையில் பேருந்து நிறுத்தம் செல்ல வழியில்லாமல் பார்த்துக் கொண்டான். ஆனால் அனைவரையும் மீறி ஒருநாள் – அதாவது நிவர்த்திகா வீட்டு விழாவில் சித்தாராவைச் சந்தித்தபின், சிற்றுந்தில் ஏறி அவளின் அருகேயே சலுகையாக அமர்ந்துவிட்டான் பிரமோத். அதுவே இழுப்பறியில் இருந்த சித்தாராவின் திருமணப் பேச்சைத் தடை செய்தது.

அதையும் அவனிடம் நாசுக்காக சுட்டிக் காட்டினான் பாலா. ஆனால் பிரமோத் அப்படி உடைந்து போவானென்று பாலாவே எதிர்பார்த்திருக்கவில்லை. அவன் எதிர்பார்த்தாற் போல், ‘அவளுக்கு பார்த்த வரன் தட்டிப் போச்சா? அப்போ என் ரூட்டு கிளியர்தானே மச்சி?’ என்று உற்சாகமடையவில்லை.

சித்தாராவின் மனநிலையைத் தெரிந்துகொள்ள பிரயத்தனப்பட்டானே தவிர, ‘சித்து எனக்குத்தான்.’ என்று கூக்குரலிடவில்லை.

அவனிடம் பாலா குற்றவுணர்வைக் கண்டானே தவிர, காதலின் கீற்றையும் காணவில்லை. ஆக சித்தாராவின் மனநிலையை, தான் தெரிந்து சொல்வதாகவும் அதுவரை அமைதியாக இருக்கும்படியும் பிரமோத்திடம் சொன்ன பாலா, சங்கரன் தாத்தாவிடம் உள்ளது உள்ளபடி உரைத்துவிட்டான். அவரும் அதற்குள் அதுவரை அவர் விளையாடிக் கொண்டிருந்த ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டார்.

அதாகப்பட்டது, சித்தாராவிற்கு வெளிநாட்டு மாப்பிள்ளையை தேடித் தந்தது சாட்க்ஷாத் சங்கரனே!

அவள் திருமணம் தடைப்பட்டதில் மனம் வெதும்பிய சித்தாராவின் அப்பா பாலசந்திரன் மீண்டும் சங்கரனிடம் வந்து சுணங்கிய முகத்துடன் சொல்ல, அப்போது தன் எண்ணத்தைச் சொன்னார் சங்கரன்.

“உனக்கு ஆட்சேபணை இல்லைன்னா நான் வேற நல்ல இடமா பார்க்கட்டுமா சந்திரா? இல்ல… உங்கக்கா அந்த மதுரைக்காரி கிட்ட பேசணும்னாலும் சொல்லு. நான் ஒரு எட்டு மதுரை போய்ப் பேசிட்டு வாரேன்.”

“அய்யோ அதெல்லாம் வேணாம் மாமா. என் பிள்ளை மேல நல்ல அபிப்பிராயம் இல்லாத அவ சம்பந்தம் வேணாம்னு நானே முடிவு பண்ணிட்டேன்.”

“நல்லதுப்பா. உன் மனசுல வேறெந்த எண்ணமும் இருந்தாலும் சொல்லு.”

பிரமோத்திற்கு தருகிறாயா என்று கேட்க நினைத்தார். அதில் இவருக்கு விருப்பமில்லை என்றாலும், பாலசந்திரன் மனதில் அப்படியோர் எண்ணமிருந்து இவர் அதற்கு இடங்கொடுக்காமல் போனதாக ஆகி விடக்கூடாது.

பெரியவர் சொல்ல வருவது பாலசந்திரனுக்கு நன்றாகவே புரிந்தது. அதில் அவருக்கும் மனம் ஒப்பவில்லை என்பதுதான் உண்மை. உத்தியோகம் தானே புருஷ லட்சணம்? சங்கரனின் பேரனாக இருந்தாலும், வேலை வெட்டி ஒன்றுமில்லாமல் தான்தோன்றித்தனமாக சுற்றுபவனை நம்பி பெண்ணைக் கொடுக்க இஷ்டப்படவில்லை அவர்.

அதனைச் சொல்லாமல் நாசூக்காக பேசினார். “அப்டிலாம் எந்த எண்ணமும் இல்லை மாமா. இத்தனை தூரம் ஆனப்புறம் ஊரார் பேச்சுக்கு பயந்து செஞ்ச மாதிரி இருக்கும். அதோட நான் சித்தாரா கிட்டேயும் கேட்டேன். அவளுக்கும் இதுல இஷ்டமில்லைதான் போல…”

“அப்போ… நான் வேற இடம் பார்க்கவா?

“தாராளமா பாருங்க மாமா. நீங்க பார்த்தா பழுது சொல்ல முடியாது.”

‘பாதி கிணற்றைத் தாண்டியாயிற்று. இனி நல்ல மாப்பிள்ளையாக பார்க்க வேண்டும்.’ என்று அவர் எண்ணமிட,

முழு கிணற்றைத் தாண்டுவதற்கு கூகுள் பெண்ணைப் போல் வழி காட்டியது, அமலா வீட்டு திருமண விழா! அன்றொரு நாள் சங்கரனின் இரண்டாம் மருமகளின் பிறந்த வீட்டுத் திருமணவிழாவிற்கு சங்கரன் குடும்பத்துடன் சென்றிருந்தாரே?

அப்போது அமைந்ததுதான் அந்த சம்பந்தம். சங்கரனின் மேல் நன்மதிப்பு கொண்ட உறவுக்காரர் ஒருவர், தன்‌ மகனுக்கு பெண் தேடுவதாகச் சொன்னார். பெரியவருக்கு தெரிந்த இடமிருந்தால் சொல்லச் சொல்லி அலைபேசி எண்ணைப் பரிமாறிக் கொண்டார்.

“பையன் லண்டன்ல இருக்கான் ஐயா. நல்ல பையன். வெளிநாட்டுல இருந்தாலும் எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. நல்ல இடமா பார்த்து சொல்லுங்க. நம்மூர் பொண்ணா இருந்தா எங்களுக்கும் ரொம்ப சந்தோஷம். ஐயா வீட்ல பொண்ணிருந்தா நான் வேற எங்கேயும் பார்த்திருக்க மாட்டேன். ஹாஹா…”

அப்போதுதான் சங்கரனுக்கு இந்த வரனை சித்தாராவிற்கு பார்த்தாலென்ன என்ற எண்ணம் உதித்தது.

அவர் மகனைப் பற்றி வேறு சிலரிடமும் விசாரித்தார். அதிலும் திருப்தியடையாமல் அமலாவின் அண்ணனைப் பிடித்து வெளிநாட்டில் வசிக்கும் அவர் வீட்டு உறவுக்காரர் ஒருவரின் எண்ணை வாங்கி, அவரிடம் தொடர்பு கொண்டு பேசி அந்தப் பையனைப்‌ பற்றி விசாரித்தறிந்து சொல்ல கோரினார்.

மறுநாள் மதியத்தில் அந்த அருணின் பிண்ணனி, முண்ணனி அனைத்தும் சங்கரனின் முன்னால் அணிவகுத்திருந்தது. அவர் அங்கிருந்த ஒரு இளவட்ட பையனின் மடிகணினியையே ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

“ஒரே நாள்ல ஒருத்தரைப் பத்தி இத்தனை தூரம் புள்ளி விவரமா பார்த்துட முடியுமா தம்பி?”

“முடியும் தாத்தா. ஒரு பட்டனைத் தட்டினா அவர் ஜாதகம் மொத்தமும் வந்துடும். அவர் உலகத்துல எந்த மூலைல இருந்தாலும் இப்ப நீங்களே அவர்கிட்ட நேரடியா பேசணும்னாலும் பேசலாம்.”

“ஹூம் ஹூம்!” அது தெரிந்ததுதான் என்பதாகத் தலையாட்டியவருக்கு ‘அந்த பையனிடம் பேசிப் பார்த்தால்தான் என்ன?’ என்று தோன்றியது. தன்முன் இருந்தவனிடம் சொன்னார். அவன் நேரத்தைக் கணக்கிட்டுக் கொண்டு, அந்த அருணிடம் அனுமதிப் பெற்று, பெரியவருக்கு காணொளி அழைப்பை ஏற்படுத்தித் தந்தான்.

பார்த்தார். ‘லட்சணமானவன்தான்’

பேசினார்.
‘நல்ல மாதிரிதான்’

முடித்தார்.
‘சந்திரனிடம் கைகாட்டி விட வேண்டியதுதான்.’

கல்யாணத்திற்கு இரு நாட்கள் தங்கிவிட்டு திரும்பும் போது சித்தாராவிற்கு மாப்பிள்ளையை ‘ரெடிமேடாக’ தயார் செய்துவிட்டார் சங்கரன். ஊர் வந்ததும் பாலாவின் பதிலுக்காக காத்திருந்தவருக்கு, சரியான நேரத்தில் அவனும் நண்பனின் மனநிலைக் குறித்துச் சொல்ல, அடுத்த முதல் வேலையாக பாலசந்திரனைத் தென்னந்தோப்பிற்கு வரச்சொல்லி பேசினார்.

ஊரில் இருக்கும் உறவுகளெல்லாம் தங்கள் பெண் குறித்து மட்டமான அபிப்பிராயத்தைப் பரப்பிவிட காத்திருக்கும் வேளையில், சங்கரன் சொன்ன விடயம் பாலசந்திரன் மனதில் பால் வார்த்தது.

“நீ ஒருமுறை பேசிடு சந்திரா. உன் திருப்திக்கு நீயும் விசாரிச்சுக்கோ. சொந்த ஊரு திருநெ(ல்)வேலி பக்கமாம்.” என்றவர், மாப்பிள்ளை, மாப்பிள்ளையின் அப்பாவின் எண்களைக் கொடுத்தார்.

அந்த வரனை முழுமையாக விசாரித்த பாலசந்திரனுக்கு முழு திருப்தி! உடனடியாக மகளிடம் சொன்னார். பிரமோத்தின் மீது பிரேமையில் இருந்தவளுக்கு வெளிநாட்டு அருண் பிரமிப்பை ஏற்படுத்தினான். வெளிநாட்டு வாழ்க்கை என்ற எண்ணம் சபலமேற்படுத்தியது.

பெற்றோருக்கு நல்ல பிள்ளையானாள். பிரமோத்தை மறுத்தாள். விஜியிடமும் தன் விருப்பத்தை, விருப்பமின்மையைச் சொன்னாள்.

சங்கரனின் திட்டங்கள் அனைத்தும் சீராக, சிறப்பாக நடக்க, மூன்று மாத படிப்பு முடிந்ததும் சித்தாரா – அருணின் திருமணமும் ஒரு நன்னாளில் நன்முறையில் நடந்தேறியது.

**~**~**~**~**~**

மூச்சுக் குழலில் திம்மென்று அடைத்துக் கொண்டிருந்த திடப்பொருள் பட்டென்று உருண்டோடியதைப் போலிருந்தது. ஆழ்ந்த சுவாசத்தைக் கண்மூடி இழுத்து அனுபவித்தான் பிரமோத். இரவு வானம் இவனுக்காகவே இளங்காற்றை அனுப்புவதாகத் தோன்றியது.

“இந்நேரத்துக்கு வீட்டுக்கு போகாம என்னையும் இழுத்துட்டு வந்து ஏண்டா டார்ச்சர் பண்ற? ஹா…வ்… தூக்கம் வருது பிரமோத்.” -பாலா.

இருவரும் இன்ஸ்டிடியூட் மொட்டை மாடியில் இருந்தனர். அடித்தக் காற்றிற்கு பிரமோத்தின் சட்டையும் அடர்ந்த சிகையும் ‘பெல்லி’ ஆடின. கைப்பிடி சுவற்றின் அருகே நின்றிருந்தவன் நட்சத்திர வானத்தைப் பார்த்தபடி பேசினான். “இன்னிக்கு சித்துவுக்கு கல்யாணம் மச்சி.”

பாலாவுக்கு சுருக்கென்றது. ‘நண்பன் வருந்துகிறானோ?’

“ஆமா, எங்கம்மா கூட இன்னிக்கு திருநெ(ல்)வேலிக்கு அவ கல்யாணத்துக்கு போயிட்டு வந்துச்சு.” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது, ஒருவன் வந்து உணவுப் பொட்டலங்கள் அடங்கியப் பையைப் பிரமோத்திடம் தந்துவிட்டுப் போனான்.

“சரக்கா? ஃபீல் பண்றியா மச்சான்?” பாலா உள்ளார்ந்த வருத்தத்துடன் கேட்க,

“ம்ம்… இந்த ராத்திரியை ஃபீல் பண்றேன். இந்த காத்தை ஃபீல் பண்றேன். இந்த அமைதியை ஃபீல் பண்றேன். அப்புறம்ம்… ம்ஹாஆ… இந்த ஐட்டங்களோட வாசனையை ஃபீல் பண்றேன்.” என்றபடி உணவுப் பொட்டலங்களைப் பிரித்தான்.

“டேய் எனக்கு தெரியாம முன்னாடியே அடிச்சிட்டு வந்துட்டியா?”

“ஹாஹா… இல்லடா. இப்ப தான் மனசே நிறைஞ்சிருக்குது. என்னால அந்தப் பிள்ளைக்கு எவ்ளோ கெட்ட பேருன்னு ஒரே கில்ட்டியா இருந்தது பாலா.”

“அவளுக்கு கெட்ட பேருன்னு கூட உனக்குப் புரிஞ்சதா வ்ரோ?”

“அந்த மஞ்சச் சட்டை மயில்கண்ணு இல்ல? அவன் என்‌ முன்னாடியே தப்பா பேசினான்டா. அப்டியே அவனைத் தரைல தள்ளிவிட்டு மண்டையை மண்ணுக்குள்ள புதைச்சிடலாமான்னு ஆத்திரம் வந்தது. அப்புறம் அவன் சொன்னதை உண்மையாக்கிடக் கூடாதேன்னு தான் பேசாம வந்தேன். இப்போ தான் சித்துவுக்கு கல்யாணம் ஆகிடுச்சுல? அடுத்து அவனைப் பார்த்தா நாலு அப்பு அப்பிடணும். ஸ்ஸ்ர்ர்!” பேசிக் கொண்டே நல்லி எலும்பு சூப்பை உறிஞ்சினான்.

“இப்ப நீ என்ன சொல்ல வர்ற? அந்தக் கிழவிக்கு கல்யாணம் ஆனதுல உனக்கு எந்த வருத்தமுமே இல்லையா?” நண்பனின் மனதை முழுதாக அறிந்துவிட வேண்டி கேட்க,

“ம்ஹூம். இப்ப தான் நிம்மதியா இருக்குது.” என்றான், உணவினை உள்ளே தள்ளிக்கொண்டே!

“இதைத்தான் நானும் சொன்னேன். காதலுமில்ல மண்ணாங்கட்டியுமில்லன்னு! கேட்டியா நீ?”

“நான் சொன்னேனா லவ் இல்லைன்னு?”

“இப்ப சொன்னியேடா அவளுக்கு கல்யாணம் ஆனதுல நிம்மதின்னு!”

“ஆமா சொன்னேன். அதுக்குன்னு லவ் இல்லைன்னு அர்த்தமா? ஸ்ஸ்ர்ர்…”

‘இவனை எனக்குன்னே செஞ்சு அனுப்பிருக்கியா சரவணாஆ.. (பிரமோத்தின் அப்பாவை அல்ல, மெய்யாகவே அந்த ஆறுமுகக் கடவுள் சரவணனிடம்தான் கேட்கிறான்)?’

“வேற‌ என்ன அர்த்தம்ன்னு நீயேதான் சொல்லேன். உன் காதலுக்காக நீ ஏன்‌ போராடவே இல்ல?” எனக் கேட்டவனுக்கு எரிச்சல் மண்டியது.

சித்தாராவுக்கு தன்னுடனான திருமணத்தில் விருப்பமில்லை என்று விஜி தன்னிடம் சொன்னதை, பாலாவிடம் சொல்ல தன்மானம் தடுத்தது. மீசையில் மண் ஒட்டவே இல்லை என்பதாகக் காட்டிக்கொண்டான் பிரமோத்.

“அவளைக் காதல் சொல்ல வைக்கவே நான்‌ போராட தானேடா செஞ்சேன்? சித்துவுக்கு கெட்ட பேர்ன்னு தெரிஞ்சதும் விலகி நின்னது காதலில்லாம வேறென்னவாம்? சாப்பிட வா மச்சி! தனியா சாப்பிட்டா வயிறு வலிக்கும்.”

பாலாவுக்கு உள்ளுக்குள் அவனைத் தூக்கிப்‌ போட்டு மிதிக்கும் ஆத்திரம் இருந்தும், வெளியே நண்பனை மௌனமாகப் பார்த்திருந்தான்.

“அண்ட் மோர்ஓவர், அவளை டார்ச்சர் பண்றதில்லடா என் காதல். எங்கிருந்தாலும் வாழ்கன்னு வாழ்த்துறதுதான் என் காதல்.”

‘நீ அவளைக் காதலிக்கவே இல்லையடா மடையா!’ என்று சொன்னால் இந்த மங்குனி மன்னன் கேட்டுக் கொள்ளவா போகிறான்?

ஆக, அந்நேரத்திற்கு அவன் சொல்லுவதனைத்திற்கும் தலையாட்டி பொம்மையானான் பாலா.

 

தூறல் தூறும் 🌧️🌧️🌧️

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
5
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்