அத்தியாயம் 9
“அது ஏண்டி நம்மக்கிட்ட வந்து கொடுத்திருக்கான்?” மனதில் ஏற்பட்ட கலக்கத்துடனே விஜி கேட்க,
“நம்மக்கிட்ட இல்ல, உன்கிட்ட! உன்னைப் பார்த்தா தான் இளிச்சவாய் மாதிரி தெரிஞ்சிருக்குது போல டோலி.” எனக் குரலில் மந்தகாசம் இழையோட சொன்னாள் நிவர்த்திகா.
“நீ உஷாரா தூரமாவே நின்னுக்கிட்டே. அவனைப் பார்த்த ஆர்வத்துல நான் முன்னாடி போய் மாட்டிக்கிட்டேன்.” கலக்கம் மாறாமல் பாவமாய்ச் சொன்ன விஜியைக் கண்டு இவளுக்கு கன்னக் கதுப்பெல்லாம் சிரிப்பில் துடித்தது.
தாத்தாவுடன் விளையாடுவதாக நினைத்து, கள்ளங்கபடமற்ற ஒரு பெண்ணின் உள்ளத்தோடும் அவளுக்கான உலக வாழ்வோடும் விளையாடியிருக்கிறோமென காலம் கடந்து புரிந்து மனம் நொந்துபோனான் பிரமோத். நினைக்க நினைக்க மனம் ஒரு நிலையில் இல்லை.
உடனேயே வீட்டில் சொல்லி சித்தாராவை மணந்துகொண்டு, தன்னால் அவள் பெயருக்கு ஏற்பட்டிருக்கும் களங்கத்தைக் களைந்தெறிய அவசரம் கொண்டான். ஆனால் தங்கள் வீட்டில் பேசுவதற்கு முன், சித்தாரவின் மனநிலை என்ன என்று அவனுக்கு தெரிந்துகொள்ள வேண்டியிருந்தது. அவள் அலைப்பேசிக்கு அழைத்து ஓய்ந்துவிட்டான்.
எனவே பாலா அத்தனை தூரம் சொல்லியிருந்தும், இரண்டு நாட்கள் பொறுத்திருந்தவன், அதற்கு மேல் மனம் கேளாமல், வேலையில் அண்ணன் ஸ்ரீதரன் தந்த அழுத்தத்தையும் மீறி, தானே அவளை நேரில் பார்க்க அவள் பயிலும் கல்லூரிக்கே வந்துவிட்டான் பிரமோத். அது பெண்கள் கல்லூரியாதலால் ஆண்களுக்கு உள்ளே செல்ல அனுமதியில்லை.
ஆக,மாலையில் கல்லூரி முடியும் நேரம் தன் டியூக்’கில் வந்தவன், வெளிவாசலில் நின்றுகொண்டு அலைபாயும் பார்வையை உள்ளே பதிய வைக்க முயன்றான்.
வண்ணத்துப் பூச்சிகளெல்லாம்
எப்போது முதுகுப் பை
சுமக்க ஆரம்பித்தனவோ!
அத்தனைப் பேர்களுக்கு நடுவில் சித்தாராவைக் காணாது நின்றிருந்தவன் கண்களில் வெகுநேரம் கழித்துப் பட்டாள் அவள். இவனைப் பார்த்தாளோ? பார்த்தாற் போல்தான் இருந்தது. ஆனால் ஏன் பாராதது போல் திரும்பிக்கொள்ள வேணும்?
‘கையசைத்து அவள் கவனத்தைத் திருப்பலாமா? இத்தனைப் பேர்களுக்கு நடுவில் அப்படி செய்வது முறைதானா?’ என இவன் சிந்தித்த அந்த ஒரு நிமிடத்தில் வாசலின் மறுபக்கத்தில் நின்றிருந்த தன் அப்பாவுடன் வண்டியில் ஏறிப் போய்விட்டாள் சித்தாரா.
ஒருவேளை அவளின் அப்பா வந்திருந்ததால்தான் அவள் தன்னைக் கண்டும் காணாதது போல் போய்விட்டாள் போலும் என்று அவளின் முகத்திருப்பலுக்கு சமாதானம் சொல்லிக்கொண்டான். இவனுக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. இனி எப்படி அவளைச் சந்தித்து பேசி அவள் மனதை அறிந்துகொள்ள போகிறான்? நெஞ்சில் பெரும் பாரம் ஏறிக்கொண்டதைப் போலிருந்தது.
அப்போதுதான் விஜியுடன் வளவளத்துக் கொண்டு வந்த நிவர்த்திகா, சோர்ந்த முகத்துடன் நின்றிருந்த பிரமோத்தைக் காண நேர்ந்தது. அவனைக் கண்டதும் இவள் நடையின் வேகம் குறைய, ஆர்வக்கோளாறில் முன்னேறிச் சென்றிருந்தாள் விஜி.
‘இவனென்ன இப்போ காலேஜ் வரைக்கும் வர ஆரம்பிச்சிட்டானா?’
தன்னையே பார்த்தபடி வரும் விஜியைச் சட்டென்று அடையாளம் கண்டுகொண்டவன் அக்கம்பக்கம் பார்த்துவிட்டு, அவளிடம் வந்து மெதுவாகக் கேட்டான். “எக்ஸ்க்யூஸ் மீ… சித்தாரா கூட படிக்கறவங்கதானே?”
அவன் தன்னை நோக்கி வந்ததிலேயே திகைத்திருந்தவளின் தலை தானாக ஆம் எனும் விதமாய் அசைந்தது.
“நான் பிரமோத். தெரியும்ல?”
அவளிடம் மீண்டும் அதே பாவனை.
“ஒரு சின்ன ஹெல்ப். அ… நோட்புக்… பேப்பர்?” அவனுக்குமே புதிதாய்ப் பேசும் பெண்ணிடம் சங்கடம். தான் பேசுவதை யாரேனும் வித்தியாசமாக நோக்கினால் இவளுக்கும் பிரிச்சினையாகுமே எனும் தயக்கம்.
அதற்குள் திகைப்பிலிருந்து விடுபட்டிருந்தவள், தனது வலப்பக்கத்தில் திரும்பிப் பார்த்தாள். ‘துரோகி!’ என அருகே காணாத நிவர்த்திகாவை சபித்துவிட்டு, பையிலிருந்து அவன் கேட்டதற்கிணங்க ஒரு வெள்ளைக் காகிதத்தை எடுத்துக் கொடுத்தாள்.
வாங்கிக்கொண்டு விடுவிடுவென போய் டியூக்கின் மேல் வைத்து சட்டைப் பையிலிருந்து எடுத்த பேனாவால், இரண்டு நிமிடங்கள் ஏதோ எழுதிவிட்டு அதனை நான்காக மடித்து, திரும்ப விஜியிடம் வந்து கொடுத்தான்.
“நாளைக்கு காலேஜ்ல பார்க்கும்போது சித்தாரா கிட்ட கொடுக்கணும்… ப்ளீஸ்…” அவன் பார்வையில் இந்தப் பெண் மறுத்துவிடக் கூடாதே என்ற வேண்டுதல் இருந்தது.
“ம்ம்…” – தலையாட்டலைத் தவிர வேறொன்றும் தெரியாதவளைப் போல் விஜி.
சின்னதாய் மலர்ந்து, “தாங்க்ஸுங்க.” என்றவன், விடைபெறும் விதமாய்த் தலையசைத்து நகர்ந்தான்.
அவன் சென்றுவிட்டதை உறுதிசெய்த பின்னே விஜியினருகே வந்தாள் நிவர்த்திகா. தன்னைக் கண்டு முகம் திருப்பிக் கொண்ட தோழியைக் கெஞ்சி, கொஞ்சி பேருந்து நிறுத்தம் வரையிலும் சமாதானம் செய்தவள், “என்னவாம்?” என்று கேட்க,
பிரமோத்தின் கோரிக்கையைச் சொன்னாள் விஜி.
“பாவம். டீப்’ஆ லவ் பண்றான் போலருக்குது. நாளைக்கு மறக்காம அவக்கிட்ட கொடுத்துடு விஜி.”
“அது ஏண்டி நம்மக்கிட்ட வந்து கொடுத்திருக்கான்?” என்று கலக்கம் மாறாமல் கேட்டாள் விஜி.
*^*^*^*^*^*^*^*^*
சங்கரனின் இரண்டாம் மகன் அசோகன். அவர் மனைவி அமலா. அவர் தம் அண்ணன் வீட்டு திருமணத்திற்கு சென்றிருந்தவர் கல்யாணக் களேபரங்கள் முடிந்து இன்றுதான் புகுந்த வீடு திரும்பியிருந்தார்.
அநேகக் குடும்ப நபர்கள் வீட்டில் இருந்த மாலை நேரம். பிரியா தன் மகள் அமுதினியிடம் சமர்த்தாய் இருக்க வேண்டுமென அறிவுறுத்தியபடியே, இரவு நேரப் பணிக்கு மருத்துவமனை செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள். சரவணனும் காஞ்சனாவும் இன்னும் வீடு திரும்பியிருக்கவில்லை.
அரவிந்தன் அலைபேசிக்குள் தலையைக் கொடுத்திருந்தான். சங்கரன் ஸ்ரீதரனிடம் நாளை சந்தைக்கு அனுப்பவிருக்கும் காய்கறிகளின் லாப நஷ்டக் கணக்கைச் சொல்லிக் கொண்டிருந்தார். உழைத்த உழைப்பிற்கு பெரிதாக லாபமொன்றுமில்லை என வருந்தினார்.
“பிமோ சித்தப்பா, நான் ஹோம்வொர்க் முடிச்சிட்டேன். சாக்கி வாங்கிட்டு வந்தியா?” என அப்போது வீட்டினுள் பிரவேசித்த பிரமோத்திடம் ஓடினாள் அமுதினி.
அவளைக் கண்டதும் அவனின் சோர்ந்திருந்த முகம் சற்று மலர்ந்தது. “சாக்கி தானே? இப்போ தங்கராசு கடைக்கு போய் வாங்கிட்டா போச்சு.” என்றவன் அவளைத் தூக்கிக் கிச்சுகிச்சு மூட்டினான்.
பிரமோத்தின் சப்தம் கேட்டதும் பிரியாவிற்கு உதவிக் கொண்டிருந்த அமலா, “ஒருவழியா வீட்டுக்கு வந்துட்டியா? ராப்பிச்சைக்காரன் மாதிரி யார் வீட்டு திண்ணைலயாவது ராத்தூக்கம் தூங்கிடுவன்னு நினைச்சேன்.” என்று போலி ஆச்சர்யத்துடன் கேட்க,
“சித்திம்மா… வந்தாச்சா?!” என்றவன் அமுதினியைப் போலவே ஓடிப்போய் அவரைக் கட்டிக்கொண்டான்.
“நீங்க இல்லாம இந்த வீடு ரொம்ப போர் சித்தி.” என அவரின் தோள் சாய்ந்து சொந்தம் கொண்டாடினான். அமலாவைக் கண்டதில் அவன் மனதில் சற்று தெம்பு வந்தாற் போலிருந்தது. அம்மா காஞ்சனாவை விட அமலா சித்திதான் எப்போதும் அவன் மனதிற்கு நெருக்கமானவர்.
“நாட்டுல இந்தப் பாசக்காரய்ங்க தொல்லை தாங்க முடியலப்பா. வெறும் பத்து நாள் கல்யாணம்னு அப்ஸ்காண்ட் ஆனவய்ங்க, டியூக்ல வெட்டியா ஊரைச் சுத்துறவய்ங்க எல்லாம் பாசம்னு கிரின்ச் பண்ணிட்டு திரியிறாய்ங்க.” என கிண்டலடித்தான் அரவிந்தன்.
அவனுக்கு எப்போதும் அமலா – பிரமோத் பாசத்தின் மேல் ஏளனம்தான். நாடகத்தனம் என்பான். ஆனால் என்றுமே தன் அன்னையின் பாசத்திற்கு போட்டியாய் இருக்கிறான் என்று பிரமோத்தின் மேல் பொறாமை கொண்டதில்லை.
“போடா!” என அவன் பின்னந்தலையைத் தட்டிய பிரமோத், அமலாவிடம், “சித்திம்மா காஃபி.” என்றான்.
கலைந்திருந்த சிகையும் களைத்திருந்த முகமும் மகனின் மனநிலை சரியில்லை என்பதைக் கண்ணாடியைப் போல் பளிச்சென்று காட்டியது. ஏதும் சொல்லாமல் சமையலறை சென்றார் அமலா.
அவரின் அமைதி இவனை ஏதோ செய்ய, அவர் பின்னோடு போனவன், “ப்ரூ… வாசம் புறப்படும் பெண்ணே… இஃப் யூ ப்ரூ மேக்கிங்…” எனப் பாடியபடி அவர் கையைப் பற்றி சுழற்றி நடனமாட,
வெளியிலிருந்து சங்கரன் குரல் கொடுத்தார். “ப்ரூ போடும் போது ப்ரூ வாசம் வராம புடலங்கா வாசமா’டா வரும், பொச கெட்ட (புத்தி கெட்ட) பயலே?”
“ப்ச்!” என சலித்துக் கொண்டானே தவிர, அவருக்கு பதில் கொடுக்க எத்தனிக்கவில்லை. அமலா தந்த காபியை அருந்திவிட்டு, மாடியேறி தன்னறைக்குள் புகுந்துகொண்டான்.
ஹாலில் இருந்த அனைவருக்கும் தாத்தாவிற்கு பதில் தராமல் போகும் பிரமோத் ஆச்சரியமளித்தான். ஏதோ சரியில்லை என்று அமலாவிற்கு புரிந்தது. அப்போது வேலை முடிந்து வந்த கணவர் அசோகனைப் பார்வையால் சுட்டார் அமலா.
அமலாவிற்கு ஒருவிதத்தில் காஞ்சனாவின் மேல் கோபமுண்டு. காஞ்சனா படித்திருக்கிறார். அதனால் அலுவலக காரியங்களில் உதவியாக இருக்கிறார். அதற்காக பெற்றப் பிள்ளைகளின் மேல் கவனமில்லாமல் இருக்கலாமா? அதுவும் குழந்தைகளைக் கையாளும் விதத்தில் அவருக்கு சமத்து குறைவுதான்.
அதனாலேயே, தானே மனமுவந்து அந்த மூன்று குழந்தைகளையும் நன்முறையில் கவனித்துக்கொண்டார் அமலா. இப்போது இவர் ஏதோ பத்து நாட்கள் ஊரில் இல்லை. அதற்குள் குழந்தை(?) முகம் வாடிப் போகுமளவு என்னத்தைச் செய்து வைத்தார்களோ?! அதிலும் பிரமோத் அமலாவின் செல்லப் பிள்ளையல்லவா!
காஞ்சனாவின் மேலுள்ள கோபம் அப்படியே கணவன் மேல் திரும்பியது. “பிள்ளை முகமே சரியில்ல. நான் பத்து நாள்தான் இங்கே இல்ல. அதுக்குள்ள என்னத்தைப் பண்ணி வச்சீங்க?”
“ஏன்? என்னாச்சு? பிரமோத் வீட்டுக்கு வந்துட்டானா?” என மனைவியிடம் கேட்டவர், “பையன் ஊருக்கு வெளியே இருந்து வர்றதைப் பார்த்தேன்ப்பா. தனியா எங்கே போனான்னு தெரியல.” என்று சங்கரனிடம் சொன்னார்.
அதுவரை பிரமோத்தின் மனநிலையை எண்ணி புருவச் சுளிப்புடன் அமர்ந்திருந்த பெரியவர், “உம் உம்!” என மகனுக்கு தலையசைப்பைக் கொடுத்துவிட்டு, “சீக்கிரம் சரியாகிடுவான்மா” என்று அமலாவிடமும் சமாதானமாய்ச் சொல்லிவிட்டு எழுந்துபோனார்.
**~**~**~**~**~**
நிவர்த்திகாவிடம் நேற்று சன் டிவி நாடகத்தில் வந்த பெண்ணின் உடையைச் சிலாகித்தவாறு கல்லூரிக்குள் நுழைந்தாள் விஜி. அவளிடம் ஒரு காதும் ஏதோ சிந்தனையுமாக இருந்த நிவர்த்திகா, “விஜி.” என மென்மையாக அழைக்க,
அவள் பேசும் மும்முரத்தில் இருந்தாள். “இப்பல்லாம் நம்மூர்லயே பிள்ளைங்க அழகா மேக்கப் பண்ணுதுங்க. ஆனா இந்த சீரியல்ல மட்டும் ஏன் நிவி மாசாணிக்கு மஞ்ச காப்பு போட்ட மாதிரி மேக்கப் போடுதுங்க? நேத்து அப்டித்தான் ***சீரியல்ல மாமியார் கேரக்டர்க்கு…”
அவள் கையை அழுந்தப் பற்றி அழைத்தாள் நிவர்த்திகா. “ஏன் விஜி, மறந்துட்டியா? நேத்து அவன் உன்னைச் சித்தாரா கிட்ட ஏதோ கொடுக்க சொன்னானே?”
“ஆமால்ல! மறந்தே போயிட்டேன்’டி. நல்லவேளை ஞாபகப்படுத்தினே! அய்யோ! அதை எங்கே வச்சேன்னு தெரியலயே…” என்றவள் புத்தகப் பையைத் துழாவ, இவள் விழிகள், இயங்கும் அவள் கரத்திலேயே அலைபாய்ந்தது.
“அப்பாடா! இதோ இருக்குது.”
அலைபாய்ந்த விழிகள் அமைதியை அணிந்துகொண்டன.
“இப்பவே கொடுத்துடவா நிவி? இல்ல ப்ரேக் டைம்ல கொடுப்போமா?”
வேறெங்கோ பார்வையைப் பதித்திருந்தவள், “இப்பவே கொடுத்துடு. மறந்துடலாம்ல?” என,
“என்ன?” புரியாமல் கேட்டாள் விஜி.
“இல்ல, அப்புறமா கொடுக்க மறந்துட்டா?”
“ம்ம்… அதுவும் சரிதான்.”
இருவரும் வகுப்பில் சித்தாராவைத் தேடினர். அவளைக் காணவில்லை. இவர்கள் சிற்றுந்தில் வருவதால் முன்கூட்டியே புறப்பட்டு வந்துவிடுகின்றனர். அவள் அப்பாவுடன் வருவதால் சாவகாசமாக கிளம்பி வருகிறாள் போலும்.
வகுப்பு துவங்க பத்து நிமிடங்களுக்கு முன்புதான் வந்தாள் சித்தாரா. நிவர்த்திகா கண்ணைக் காட்ட, அவள் வந்ததைக் கவனித்த விஜியும் எழுந்து அவளிடம் போய் கடிதத்தைத் தந்தாள்.
அவள் கேள்வியாகப் பார்க்க, “பிரமோத் கொடுத்தாப்ல. உன்கிட்ட தர சொன்னார்.” என்றாள் விஜி.
“ஸாரி விஜி, ஊர்ல என் பேரைக் கெடுத்தது போதும். இதைத் திரும்ப அவன் கிட்டேயே கொடுத்துடு.”
சித்தாராவிடமிருந்து நிச்சயமாக இப்படியோர் பதிலை எதிர்பாராததால் சிறிது அதிர்ந்து, என்ன செய்வது என்று தெரியாமல் விஜி முழிக்க, சித்தாரா அவளைக் கண்டுகொள்ளாமல் ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டாள். தன்னை உதாசீனப்படுத்தினாலும் விஜிக்கு அவள் மேல் இரக்கம் சுரந்தது.
‘ச்ச பாவம்ல?’ என நினைத்தவாறு திரும்ப,
“விஜி!” என்றழைத்தாள் அவள். இவள் திரும்பியதும், “அவன்கிட்ட சொல்லு, எனக்கு கல்யாணம் நிச்சியமாகிருச்சுன்னு. ஃபாரின் மாப்பிள்ளை. இந்த செமஸ்டர் முடிஞ்சதுமே கல்யாணம்.” என,
“அதெப்டி? நீயும் தானே அவரை லவ் பண்ணின?” என யாருக்கும் சந்தேகம் வராதபடி மெதுவே சித்தாராவின் அருகே அமர்ந்தபடி கேட்டாள் விஜி.
“யார் சொன்னா? அவன்தானே என் பின்னாடி சுத்தினான்? பஸ்ல என் பக்கத்துல வந்து உட்கார்ந்தான்?”
விஜிக்கு அவளின் இந்த திடீர் மாற்றம் கோபத்தைத் தந்தது.
“செஞ்சது எல்லாம் அவன். கெட்ட பேர் மட்டும் எனக்கா? இனி என்னைத் தொந்தரவு பண்ண வேண்டாம்னு சொல்லிடு விஜி.”
“உன்… உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமா சித்து?”
“டோட்டலி!”
“?!”
“ஏற்கனவே எங்க மதுரை அத்தை பையனுக்கு கேட்டிருந்தாங்களாம். எனக்கு தெரியாது விஜி. தெரிஞ்சிருந்தா என் பின்னாடி வராதே, நான் என்கேஜ்ட்’ன்னு சொல்லிருப்பேன்.”
‘இல்லையென்றாலும் பிடிக்கவில்லை. என் பின்னே வராதே என்று சொல்லியிருக்கலாமே?’ என நினைத்த விஜி, அதை நேரிடையாக அவளிடம் கேட்கவில்லை.
“என்ன சொந்தக்காரங்களோ… எத்தனைப் பேச்சு? ஃபர்ஸ்ட் இங்கே இருந்து ஓடிடணும்னுதான் தோணுச்சு விஜி. ஆனா அருணைப் பார்த்த அப்புறம் பிடிச்சுதான் கல்யாணம் பண்ணிக்க டிஸைட் பண்ணேன். அருண் ரொம்ப நல்லவரா இருக்கார். எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. இப்பவே விசாவுக்கு அப்ளைப் பண்ணியாச்சு. கல்யாணம் ஆனதும் அவர் கூடவே போயிடுவேன்.” என்றவளின் முகம் தெளிவாகவே இருந்ததை விஜி கவனித்தாள்.
‘நேற்று பிரமோத்தின் முகத்தில்தான் எத்தனை பரிதவிப்பு! இப்போது இவள் சொல்வதை எப்படி அவனிடம் சொல்லப் போகிறேனோ!’ என்ற எண்ணங்களில் சுழன்ற விஜிக்கு சித்தாராவோ பிரமோத்தோ அத்தனைப் பரிச்சயமில்லாதவர்கள். இருந்தும் இருவரும் தன்னிடம் இத்தனை தூரம் மனதினைப் பகிர்வதில் இருவரின் நிலையையும் கிரகித்துக்கொள்ள முயன்றாள்.
மீண்டும் நிவர்த்திகாவின் அருகில் வந்தமர்ந்தவளின் கவனம் ஆசிரியர் நடத்திய பாடத்தில் பதியவில்லை. நிவர்த்திகா அவளை ஓரக்கண்ணால் அவதானித்தபடியே இடைவேளை நேரத்தை எதிர்நோக்கியிருந்தாள்.
இடைவேளையில் சித்தாரா சொன்னதையெல்லாம் விஜி சொல்ல, நிவர்த்திகா வியப்பில் ஆழ்ந்தாள். இடைப்பட்ட ஆறே நாட்களில் எவனோ ஒரு வெளிநாட்டுக்காரன் நம் ஊர் பெண்ணின் மனதைக் கொத்திக்கொள்ள முடியுமா என்ன?
மாலையில் கல்லூரி முடிந்து புறப்படும்போது ஓய்வறைக்கு போய்விட்டு, பேருந்து நிறுத்தம் வந்து சேர்ந்து கொள்வதாக சொன்ன நிவர்த்திகாவைச் சந்தேகமாக பார்த்தாள் விஜி.
“என்னடி?”
விஜி தன் குறுகுறு பார்வையை மாற்றவே இல்லை.
“அ… கேன்டீன்ல சாப்பிட்ட சமோசா ஒத்துக்கலன்னு நினைக்கறேன்.”
பட்டென்று கேட்டாள் விஜி. “அவனைப் பார்க்க ஏன் இவ்ளோ தயக்கம் நிவி உனக்கு?”
“என்… என்ன? எனக்கென்ன தயக்கம்? அவன் பெரிய இவன்… அ அவனைப் பார்க்க நாங்க தயங்கறோமாம்!”
“ரிலாக்ஸ் டோலி! நாம கேன்டீன்ல சமோசா சாப்பிட்டது இன்னிக்கில்ல, நேத்து!” என்று நிதானமாக உரைத்துவிட்டு போய்விட்டாள் விஜி.
‘ச்ச மண்டை மேல இருக்க கொண்டையை மறந்துட்டோமேடா…’ எனத் தலையில் கைவைத்து அமர்ந்தாள் நிவர்த்திகா.
வெளியே,
பேருந்து நிறுத்தத்திற்கு பின்புறம் பூங்காவைப் போன்ற அமைப்பிலிருந்த சிறிய பகுதியில் நின்றிருந்தான் பிரமோத். தன்னைக் காணாது தேடிய விஜிக்கு சுவர்ப்புறமாக நின்று கையசைக்க, அவனைப் பார்த்துவிட்டவள், அச்சுவரைச் சுற்றிக்கொண்டு நுழைவாயில் வழியே அப்பகுதியின் உள்ளே நுழைந்தாள்.
“யாராவது பார்த்தா உங்களுக்கு சிரமம். அதான்…” என அவன் இழுக்க,
“விவரம்தான்!” எனக் கழுத்தை வெட்டினாள் விஜி.
இதழ் பிரியாமல் புன்னகைத்துக் கொண்டான். இவள் தன் கையிலேயே வைத்திருந்த காகிதத்தை அவனிடம் நீட்ட, வாங்கி பரபரவென பிரித்தான்.
“அது நேத்து நீங்க தந்ததுதான் ப்ரோ.”
“ஓ… சித்து… ம்க்கும். அவ…”
அவள் என்ன சொன்னாள் என்று கேட்க வருகிறான்.
அவனின் தடுமாற்றத்தைக் கண்டவள் நெடுமூச்செறிந்தாள். பிரமோத்தை இரக்கமாக பார்த்துக் கொண்டே சித்தாரா சொன்னதை மெதுவாக சொல்ல,
அவன் இடுப்பைப் பிடித்துக்கொண்டு வானத்தைப் பார்த்து, “தேங்க் காட்!” என்றுவிட்டு தளர்வாக குனிந்து பூமியை நோக்கினான்.
பின் ஆசுவாசமாய் நிமிர்ந்து, “தேங்க்ஸ் உங்களுக்கும்!” என்று மனோகரமாக முறுவலித்தவனை விநோதமாகப் பார்த்தாள் விஜி.
தூறல் தூறும் 🌧️🌧️🌧️