Loading

அத்தியாயம் 8

“ஏன்மா போறதுன்னா நீங்க எல்லாரும் போக வேண்டியதுதானே? என்னை ஏன்மா போட்டு பிழிஞ்சு எடுக்கறீங்க? நானென்ன எல்கேஜி பையனா? விட்டுட்டு போனா தொலைஞ்சு போயிடுவேனா? சும்மா எரிச்சலைக் கிளப்பிக்கிட்டு…”

அமலாவின் பிறந்த வீட்டில் நடக்கும் திருமண விசேஷத்திற்கு புறப்பட்டுக் கொண்டிருந்த காஞ்சனா, பிரமோத்தையும் தன்னுடன் வரும்படி அழைத்ததற்குத்தான் அப்படி கத்திக் கொண்டிருந்தான் அவன்.

சங்கரன், சரவணன், காஞ்சனா, அரவிந்தன் ஆகியோர் புறப்படுவதாக ஏற்பாடு. கூடவே இவனையும் அழைக்க, இவனுக்கு எரிச்சல் மூண்டது.

“அர்வி எல்லாம் வர்றான்ல? உனக்கென்னடா?”

“அர்விக்கு சொந்த மாமா பையன். எனக்கு யாரும்மா? யார்னே தெரியாத சுத்துப்பட்டு சொந்தத்துக்கெல்லாம் நான் எதுக்கும்மா?”

“ஏன் வ்ரோ, என் சொந்தமெல்லாம் உன் சொந்தமில்லையா?” என அரவிந்தன் போலிக் கண்ணீரைத் துடைத்துக்கொள்ள,

நேரங்காலம் தெரியாமல் கடுப்படிக்கிறானே என்று அவனையும் குதறினான் பிரமோத். “டேய் ‘அரை’விந்தா என்கிட்ட அறை வாங்கிட்டு போயிடாதே!”

“ச்சு! இந்த கோபமெல்லாம் சும்மா பெரியம்மா. இதுவே எங்க மாமாவுக்கு அழகான பொண்ணு இருக்குதுன்னு தெரிஞ்சா இவன் முதல் ஆளா கிளம்பிருக்க மாட்டான்?”

“ஆமா, உங்க மாமாவுக்கு பொண்ணு இருந்திருந்தா அருக்காணிக்கு அக்காவா இருந்திருப்பா… அவளைப் பார்க்கத்தான் நாங்க முதல் ஆளா கிளம்புறோமாம்.”

அரவிந்தன், “மேகல… மணிமேகல…” என்று வடிவேலுவைப் போல் நடித்துக் காட்ட, பிரமோத் சட்டென்று சிரித்துவிட்டான்.

தம் குழந்தைகளின் சீண்டல் பேச்சுக்களை மென்னகையுடன் ரசித்திருந்தார் சரவணன்.

“உம் உம்…”

“வந்துட்டாரு வாழும் கட்டபொம்மன்.” – பிரமோத்.

“தம்பி…” – கண்டிக்கும் அழைப்பில் சரவணன்.

“ஸாரிப்பா.”

சங்கரன் தன் இரண்டாம் பேரன் ஸ்ரீதரனைப் பார்த்துக் கேட்டார். “என்னடா சொல்றான் அவன்?”

“அந்தாளுக்கு ஒரு பாயாசத்தைப் போட்டா தான் வழிக்கு வருவான் தாத்தா.”

“அதெல்லாம் வேணாம்’ய்யா.” என்றவர், பிரமோத்திடம் சொன்னார். “அந்த கருணாகரன் பய இருக்கான்ல? அவன் நம்ம தோப்பு, அப்புறம் அந்த தொந்தி நாடார், மகேசன், வேலாயுதம்ன்னு எல்லார் தோப்புக்கும் போற பொது வழியை ஆக்ரமிப்பு பண்ணிட்டான்’டா. பேசிப் பார்த்தோம். ஒண்ணும் வழிக்கு வரல… நாம அரசாங்க உதவியோட போகலாம்னு நேத்து நம்ம கிராமத்து ஆபீஸ்ல போய் பேசிட்டு வந்திருக்கேன். அவனுங்க என்னவோ தஸ்புஸ்ஸூன்னு இங்கிலீசுலயே பேசறானுங்க.”

ஸ்ரீதரன் மனக்குரலில், ‘ரெண்டு வார்த்தை இங்கிலீஷ்ல சொன்னதை எப்டி திருப்பிவிடுறார் இந்தத் தாத்தா.’ எனப் பிரமோத்தைக் கையாளும் சங்கரனைச் சுவாரஸ்யமாக வேடிக்கைப் பார்த்தான்.

“நீயும் ஸ்ரீ கூட அங்கே போய் என்ன வேணுமோ கேட்டு பதில் சொல்லு ராசா! நான் வர ரெண்டு நாள் ஆகும்ல? இந்தா தாய்ப்பத்திரம். இதுல நமக்கும் அந்தப் பாதைக்கு பாத்தியதை இருக்குதுன்னு குறிப்பிட்டிருக்கு. இதையும் எடுத்துட்டு போய் காட்டு.” என்றுவிட்டு, “என்னம்மா கிளம்பியாச்சா?” என காஞ்சனாவைக் கேட்டபடி வெளியேறினார்.

சித்தாராவை இனி பார்க்கக்கூடாது, பேசக்கூடாது, அது பெண்பிள்ளையான அவளுக்கு தேவையில்லாத தொல்லைகளை ஏற்படுத்தும் என்று யாராவது பிரமோத்திடம் போய் சொல்லிவிட முடியுமா? சொன்னால் அவனும்தான் நல்ல பிள்ளையாய் கேட்டுக் கொள்பவனா?

அவனுக்கு தாத்தாவுடன் தானே பகை? தன் இரண்டாம் அண்ணனான ஸ்ரீயுடன் இல்லையே? ஆக அவனைக் கையாளும் முறையை மாற்றினார் சங்கரன். மறுக்க முடியாத காரணங்களைச் சொல்லி ஸ்ரீதரனுடன் அனுப்பி வைத்தார்.

அவனுக்கு வேலையைத் தவிர வேறு எண்ணங்கள் இராமலும் அதே சமயம் தங்கள் மேல் எவ்வித சந்தேகமும் வந்துவிடாத படியும் பார்த்துக் கொள்வது உன் கடமை என்று, பிரமோத் எனும் மாபெரும் கண்ணாடிப் பாத்திரத்திற்கான பொறுப்பை ஸ்ரீயிடம் தள்ளிவிட்டிருந்தார். ஸ்ரீயும் சங்கரன் சொன்ன வேலையுடன், வேறு சில வேலைகளையும் மெதுமெதுவாக பிரமோத்திடம் தள்ளினான்.

இப்படியாக பிரமோத்தை அவன் வீட்டினர் அடைகாக்க, சித்தாராவைக் கல்லூரிக்கு அவள் தந்தை அழைத்துப் போக, இருவராலும் சந்தித்துக் கொள்ள முடியவில்லை. அத்துடன் பிரமோத்திற்கு அண்ணன் மனோவைப் பற்றிய சிந்தனையும் சேர்ந்துகொள்ள, அவன் அவளிடம் குறுஞ்செய்தியிலும் பேசவில்லை.

அதற்காக அவளை மறந்துவிடவுமில்லை. பொதுவாக காலை வணக்கம், இரவு வணக்கம் என நாடகத்தனமாக எதையாவது தட்டிவிடுவான். அதற்கு அவளிடமிருந்து பதில் வராது.

அவள் வீட்டினர் அவளின் அலைப்பேசியைக் கைபற்றியிருந்தனர் என்று இவனுக்குத் தெரியாதே!

*×*×*×*×*×*×*×*×*

பிரமோத் – சித்தாராவின் காதல் நாட்காட்டியில் நான்கு நாட்கள் கழிந்திருந்தது. இருந்தும் இருவரையுமே பசலை நோய் பீடிக்கவில்லை. ஆனால்,

பசலைக் கண்டது,
காதலர்களைக் காணாத
பஸ்!

“நீ சொல்லும் போது கூட நான் நம்பல நிவி. ஆனா அன்னிக்கு அவன் அவக்கிட்ட நம்பர் கேட்டதும், என்னை ஃபோட்டோ எடுக்க சொன்னதும்… ப்ப்பாஆஆ… இன்னுமே என்னால நம்பவே முடியல” விஜி இதனை இத்துடன் எத்தனை முறை சொல்கிறாளோ அவளுக்கே தெரியாது.

மௌன முறுவல் பூத்தாள் நிவர்த்திகா.

“ஆனா ஏன் அன்னிக்கு அப்புறம் சொல்லி வச்ச மாதிரி ரெண்டு பேருமே வரல?”

“சொல்லி வச்சிருப்பாங்களா இருக்கும்.”

“அய்யூ… பாதில தொடரும் போட்ட நாடகம் மாதிரி இருக்குது நிவீஈஈ….”

முறுவலை மாற்றவில்லை இவள்.

“இதுக்குத்தான் இந்த லவர்ஸை நம்பக் கூடாதுங்கறது. பாதிலயே நம்மளை இப்டி புலம்ப விட்டு போயிருச்சுங்களே… ஒருவேளை லவ் சக்ஸஸ் ஆனதை செலிபரேட் பண்றாங்களோ? இல்லைன்னா ஸ்பாட்டை மாத்திருப்பாங்களோ?”

“எனக்கென்னடி தெரியும்? பெத்தனாட்சி… பருக்கை* குறுக்கா(க) விழுந்த கணக்கா துள்ளிக்கிட்டு இருக்காளே இவ…” என சலித்துக்கொண்டாள் நிவர்த்திகா.

(*சோற்றுப்பருக்கை)

“உனக்கு எக்ஸ்பெக்டேஷனே இல்லைன்னு சொல்லு பார்ப்போம். அழுத்தக்காரி!”

“அதுங்க ரெண்டும் லவ் பண்ணா என்ன? இல்லை ** பண்ணா எனக்கென்னடீ? எக்ஸ்பெக்டேஷன் ***டேஷன்னுக்கிட்டு…” என காரணமே இல்லாமல் தோழியிடம் எரிந்து விழுந்தாள்.

அது தன்னைப் பாதிக்காததைப் போல் அலுத்துக்கொண்டாள் விஜி. “அடியாத்தீ… இங்கிலீஷ்ல கெட்ட வார்த்தை பேசறாளே… எங்கம்மா கிட்ட சொல்றேன் இரு.”

அதில் இவள் மீண்டும் புன்னகைக்க, விஜியைப் போல் காதலர்களுக்கு பேருந்தில் மற்ற அபிமானிகளும் இருக்கின்றனரே… அதில் ஒருவன் பிரமோத்தை அழைத்தான். மற்றொருவன் ‘ஸ்பீக்கரில் போடு!’ என சைகை மொழியில் சொல்ல, அழைப்பு ஸ்பீக்கரில் போடப்பட்டது.

“சொல்றா தேவா!” – பிரமோத்.

“எங்கண்ணே போயிட்ட? நாலஞ்சு நாளா உன்னை பஸ்ல பார்க்கவே முடியல?”

“ரெவின்யூ டிபார்ட்மெண்ட்ல வில்வேஜ் ஆஃபிஸரைப் பார்க்க வந்திருக்கேன்டா. தாத்தாவோட இடத்துக்கு போற வழியை ஒரு நாதாரி ஆக்குப்பை பண்ணிட்டான். அது விஷயமா ஸ்ரீ’ண்ணே கூட நாலு நாளா அலைஞ்சிட்டிருக்கேன்.”

“ஓஹோ! சரி, நம்ம பொழைப்பையும் பார்க்கணும்ல? அதான் நீ வரலைன்னு அண்ணியும் வரலயா? சரிண்ணே.”

“டேய் தேவா!”

“என்ன’ண்ணே சொல்லு!”

“நான் வராதப்போ சித்தாராவும் வரலியா என்னடா?”

“ஆமாண்ணே அது நாலு நாளா அவங்கப்பா கூட பைக்ல போகுது.” என்ற கூடுதல் தகவலைப் பிரமோத்திற்கு மட்டுமல்லாது, நம் தோழிகளைப் போல் காதலர்களைத் தேடிய மற்றவர்களுக்கும் சொன்னான் தேவா.

மறுமுனையில் பதிலில்லை. வைத்துவிட்டான் போலும். தோழிகள் இருவரும் வழக்கம் போல் ஒருவரையொருவர் பார்த்து உதட்டைப் பிதுக்கி தோள் குலுக்கிக்கொண்டனர்.

**°**°**°**°**

சங்கரனின் பேரனல்லவா பிரமோத்? அவர் இவனின் காதலெனும் கருவாட்டின் தலையைத் திருக, இவன் அதனை மோப்பம் பிடிக்காமல் இருந்துவிடுவானோ?

கடந்த சில நாட்களாகவே தாத்தா ஏதோ தனக்கெதிராக சதி செய்கிறாரோ என்ற சம்சயம் இருந்து வந்தது. இப்போது அது இன்னும் அதிகரிக்கவே, முதலில் சித்தாரா ஏன் கல்லூரிக்கு அவள் அப்பாவுடன் செல்கிறாள் என தெரிந்துகொள்ள நினைத்தான்.

சித்தாரா தனக்கு உறவுக்காரப் பெண் என்று பிரமோத்திற்கு தெரியும். ஏனெனில் ஐந்து மாதங்களுக்கு முன் அவன் அவளை முதன்முதலில் சந்தித்ததே ஒரு உறவுக்காரர் வீட்டில்தான். யாரோ ஒரு பாட்டி தவறியிருக்க, பிரமோத் வீட்டில் இருந்து ஆண்கள் மட்டும் சென்றிருந்தார்கள்.

தவறியவரைப் படுக்க வைத்து அவரைச் சுற்றி, அவர் உறவுமுறையில் வரும் மகள்கள், பேத்திமார்கள் நீர்க்குடம் எடுப்பது வழக்கம். அவ்வகையில் சித்தாராவும் அந்தப் பாட்டிக்கு நீர்க்குடம் எடுத்திருக்க, ஈர உடையுடன் இருந்தவள், உடலை எடுத்துப் போகையில், அவள் வயது பெண்களுடன் வெளிவாசல் வரை நடந்து வந்தாள்.

ஆண்கள் இடுகாட்டிற்கு புறப்பட, அப்போது பிரமோத்தின் அருகே வந்த சித்தாராவின் ஈர பாவாடை தடுக்கிவிட, அவள் விழுந்து விடாமல் இருக்க அனிச்சையாய் அவள் கரம் பற்றி, “பார்த்து பார்த்து!” என்றான் பிரமோத்.

அப்போது இந்த சங்கரன் தாத்தா சும்மா இருந்திருந்தால் அவன் அப்போதே சித்தாராவை மறந்திருப்பான். அவர் ‘நான் உன்னை கவனித்துக் கொண்டிருக்கிறேனடா பேராண்டி’ என்பதாக, “ஹூம் ஹூம்!” என்று ஒலியெழுப்ப,

பிரமோத்தின் மூளை தாறுமாறாக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. ‘அண்ணன் காதலென்ற போது அவனைத் துரத்திவிட்டவர்தானே? இப்போது நான் கையைப் பிடித்ததற்கே காண்டாகிறார். காதலிப்பதாகச் சொல்லி வெறுப்பேற்றினால் என்ன செய்வார்? என்னையும் துரத்திவிடுவாராமா? அதையும்தான் பார்த்துவிடலாமே!’

மூளையில் உதித்த நன்முத்தை உடனேயே ஆபரணத்தில் கோர்க்க ஆயத்தமாகிவிட்டான். அந்தப் பெண்ணின் பெயரென்ன என்று கூட அப்போது இவனுக்கு தெரியாது. அவளுடன் இருக்கும் பெண்கள் அவளை ‘சித்து’ என்றழைக்க இவனும் அதையே பற்றிக்கொண்டான்.

“பார்த்துப் போ, சித்து. கால் சுளுக்கிக்கப் போகுது.” என்றான் தாத்தாவிற்கு கேட்கும்படி!

அவர் இவனை முறைக்க இவனுக்கு குதூகலமானது. தாத்தனுடன் ஆடும் சதுரங்கத்தில் முதலாவதாக வெட்டி வீழ்த்தப்படுவது சித்தாரா எனும் உயிருள்ள காரிகையின் இருதயம் என்பதைச் சிந்திக்க மறந்தான் பிரமோத்.

அன்று அவள் இவனை மிரள மிரள பார்த்தபடி கையை உதறிக்கொண்டு நகர்ந்ததைக் கூட இவன் அறியவில்லை. அதன்பின் அவள் வீடிருக்கும் தெருவில் இரண்டு நாட்கள் சுற்றினான். அவளின் பெற்றோரையும் உறவுமுறையையும் தெரிந்துகொண்டவன், அவள் அன்றாடங்களின் அட்டவணையை மனனம் செய்துகொண்டு, அதன்படி அவள் தினமும் சிற்றுந்தில் வரும் நேரத்தைத் தனக்கானதாய் மாற்றினான். இப்படியாக இவன் விளையாட்டைச் செவ்வனே ஆடிக் கொண்டிருப்பதாக நினைத்திருக்க, இப்போது அப்படி இல்லையோ?

தாத்தா அவரின் காய்களைக் காபந்து செய்ய முன்னேற்பாடுகளைச் செய்துவிட்டார் என்று தெரிய வரும்போது பிரமோத்தின் மனநிலை என்னவாக இருக்குமோ!

சித்தாராவின் பெயரைக் கூட அவள் பின்னால் சுற்றும் போது அவளிடமே கேட்டுத் தெரிந்து கொண்டதுதான். அப்படியிருக்க, அவள் வீட்டினர் அவளுக்கு மதுரையில் மாப்பிள்ளை பார்த்து வைத்திருப்பது மட்டும் எங்ஙனம் இவனுக்கு தெரிந்திருக்கும்?

சொந்தங்களிடையே தெரிந்திருக்கும் விடயங்கள் அனைத்தும் பிரமோத் வீட்டில் பெரியவர்கள் வரையிலேயே இருந்தது. அதுவும் சித்தாராவைப் போன்ற தூரத்து உறவினர் வீட்டு விடயங்கள் எல்லாம் பிள்ளைகள் வரை வந்ததில்லை. அப்படி உறவினர் குறித்து பேசினால் கூட எந்தப் பிள்ளைகள் காது கொடுத்துக் கேட்கிறதுகள்?

அன்று மாலை வேலை முடியும் வரை ஸ்ரீயுடன் இருந்த பிரமோத், பின்னர் முதலில் சந்தித்தது பாலாவை! தடதடவென மாடியேற, மாலை நேர இன்ஸ்டிடியூட் பரபரப்பாக இருந்தது. அலுவலக அறைக்குள் நுழைந்தான்.

“என்ன பண்ற பாலா?”

ஏதோ ஒரு சான்றிதழின் நகலைப் பார்த்துக் கொண்டிருந்தவன், அதை மேஜையில் பிரமோத்தின் முன் நகர்த்தி வைத்தான். “டிராயிங் கிளாஸுக்கு ஸ்டாஃப் யாரும் இல்லைன்னு சொல்லிட்டிருந்தேன்ல? புதுசா ஒரு பொண்ணு சேர்ந்திருக்குது.” என்றவன், வெட்கத்துடன் தலைக் கோதிக்கொண்டு, “செட்டாகும் போல தெரியுது மச்சான்.” எனவும்,

“அட்றா அட்றா‌ அட்றா…” – ஆர்ப்பாட்டமாய் இவன். “கரிசகொளமா? கருவேலம்பட்டியா?”

“கரிசகொளம்தான்.”

“வாழ்த்துகள் மாப்ள!”

“சரி, நீ என்ன இந்நேரத்துக்கு இங்கே வந்திருக்கே?”

இவன் முகம் சிந்தனையைப் பிரதிபலித்தது. “சித்தாரா வீட்டுக்கு போகணும்டா. நீயும் வா.”

“ஏதே? வீட்டுக்கா?!”

“………”

“ஏண்டா பஸ்ல தான் சுத்திட்டிருந்தே? இப்ப வீடு வரைக்கும் போக தைரியம் வந்திடுச்சா?”

“ஆமா, கிளம்புடா.”

“ஞான பண்டிதா… இப்போதான் ஒண்ணு செட்டாகற மாதிரி இருக்குதுன்னு சொல்லி வாயை மூடல. அதுக்குள்ள ஏழரையை இழுக்கப் பார்க்கறான். அதுல என்னையும் வேற கோர்த்துவிட நினைக்கறானே…”

“டேய் வீட்டுக்கு போகலாம்னு தானே சொன்னேன்? ஏழரை எட்டரைன்னு ஒப்பாரி வைக்கறான்.”

“எப்பா… நீ அந்த வீட்டு மாப்பிள்ளை பாரு! நீ போனதும் உன்னை உள்ளே கூப்பிட்டு வச்சு விருந்து வைக்கப் போறாங்க! நல்லா வருது வாயில… பொண்ணைப் பெத்தவன் துரத்தியடிப்பான்’டா என் ****”

“அதெல்லாம் எனக்கு தெரியாது. நான் இப்போ அவளைப் பார்க்கணும்.” பிடிவாதம் பிடிக்கும் நண்பனைக் கண்டு கடுப்பானான் பாலா.

“சரி, வீட்டுக்கு போய்ப் பார்க்கறளவுக்கு அப்டி என்ன அவசரம்?”

“நான் ஸ்ரீ ‘ண்ணே கூட வேலையா இருந்த அஞ்சு நாளும் சித்துவும் பஸ்ல வரலையாம்டா. காலேஜுக்கு அவங்கப்பா கூட வண்டில போறான்னு நம்ம தேவா சொன்னான்.”

பாலாவுக்கும் அப்போதுதான் நினைவு வந்தது. அன்று இவன் சொல்ல வந்ததை பிரமோத் கவனிக்கவே இல்லையே!

“ஒரு நிமிஷம் பொறு!” என்றவன், கீழிருக்கும் டீக்கடைக்கு அழைத்து இரண்டு தேநீர் சொன்னான்.

“ப்ச்! எனக்கு வேணாம் பாலா. நீ வேணும்னா குடிச்சிட்டு சீக்கிரம் வா.”

“அட இருடா… அன்னிக்கு இதைத்தான் சொல்ல வந்தேன். நீ மூட் அவுட்ல இருந்ததுனால அப்டியே விட்டுட்டேன்.”

கேள்வியாக நண்பன் முகம் பார்த்தான் பிரமோத்.

“அந்தக் கிழவிக்கு ஏற்கனவே அவ முறைப் பையனைப் பேசி வச்சிருந்தாங்களாம்.” என மெதுவாக ஆரம்பித்தான்.

“என்ன?! யாரு?”

“எவனோ மதுரைக்காரன் போல. எனக்கே எங்கம்மா தான் சொல்லுச்சு. ‘இந்தப் பையன் அந்தப் பிள்ளைப் பின்னாடி சுத்துறானாமேடா. நெசமா?’ன்னு என்கிட்ட கேட்டுச்சு. அப்போதான் இது பத்தி சொல்லுச்சு.”

“……….”

“உனக்கு இந்த விஷயம் தெரியாதுன்னு எனக்குத் தெரியும். இருந்தாலும் அந்தக் கிழவி ஏதாவது சொல்லிருப்பாளோன்னு நினைச்சேன் மச்சி.” என்றுவிட்டு பிரமோத் முகம் பார்க்க, திகைப்பிலிருந்து விடுபடாதவன் இல்லையெனும் விதமாய்த் தலையசைத்தான்.

பாலா தயங்கியவாறு சொன்னான். “நான் உன்னை ப்ளேம் பண்றதுக்காக சொல்லல. உனக்கு தெரியணும்ங்கறதுக்காக சொல்றேன்.”

“இன்னும் என்னடா? இழுக்காம பட்டுன்னு சொல்லு.”

“அந்த சம்பந்தம் தட்டிப்‌ போச்சாம் பிரமோத்.”

“!?”

“நீ அவ கூட பஸ்ல ஒண்ணா உட்கார்ந்ததை எவனோ மாப்பிள்ளை வீட்ல போட்டு விட்டுட்டான் போல!”

“ப்ச்!” நிலைகுலைந்து போனான் பிரமோத்.

“மாப்ள…”

“பேசி வச்ச பிள்ள’ன்னு தெரிஞ்சிருந்தா, நான் அவப் பக்கமே பார்த்திருக்க மாட்டேன் பாலா.” இனம் புரியா குற்றவுணர்வில் தவித்தான்.

“ஏய்… தெரியும்டா. அலமலந்து போகாதே மச்சான்!” நண்பனைத் தேற்ற முயன்றான் பாலா.

பிரமோத்திற்கு அந்த நேரத்திலும் வீணாக தாத்தாவை சந்தேகப்பட்டுவிட்டோமே என்ற எண்ணமும் உள்ளே ஓடியது.

“நான் அவளைப் பார்க்கணும் பாலா. இந்த விஷயம் அவளுக்கு தெரியுமா என்னன்னு கேட்கணும்.”

“அதைத் தெரிஞ்சு இப்போ என்ன பண்ணப் போற பிரமோத்? இனியாவது வாலைச் சுருட்டிட்டு இரு! நாம ஒண்ணும் பெரிய சிட்டில இல்லை. நாலு ஓட்டை பஸ் ஓடுற ஊர்ல இருக்கோம்.”

“இல்லடா அவ மனசைக் கலைச்சு விட்டுட்டேனோன்னு…”

“அவ மனசுல என்ன இருக்குதுன்னு தெரிஞ்சு உனக்கு சொல்ல வேண்டியது என்‌ பொறுப்பு. இப்போ நீ உன் மனசைச் சொல்லு. அந்தக் கிழவியை நிஜமாவே லவ் பண்றியா? கல்யாணம் செஞ்சுக்க எந்த ரிஸ்க்கும் எடுக்கத் தயாரா இருக்கியா?”

 

தூறல் தூறும் 🌧️🌧️🌧️

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்