Loading

அத்தியாயம் 7

“வெளியே காலை எடுத்து வச்ச‌… காலை வெட்டிடுவேன்.”

தன் முன் உக்கிரமாக நிற்கும் அம்மா லலிதாவை சமாளிக்க முடியாமல் திணறினாள் சித்தாரா. மாலை கல்லூரி முடிந்து வீட்டினுள்ளே நுழைந்ததுமே பஜனை ஆரம்பித்துவிட்டது.

“அவன் என் பின்னாடி சுத்தினா நான் என்னம்மா பண்ணுவேன்?” என்றாள் பயந்தவள் போல்!

“காலைல பஸ்ல உன் பக்கத்துல வந்து உட்கார்ந்தானாமே? உன் கை என்ன பூ பறிச்சிட்டு இருந்ததா? கன்னம் பழுக்க ஒண்ணு கொடுத்திருக்க வேண்டியதுதானே? பொட்டப் பிள்ளைக நெருப்பு மாதிரி இருக்க வேணாம்?”

சித்தாராவின்‌ அப்பா பாலசந்திரன் மனைவியை சமாதானப்படுத்த முயன்றார். “விடு லலிதா, நான் சங்கரன் ஐயாகிட்ட பேசிருக்கேன். அவன் தொல்லை இனி இருக்காது, நான் பார்த்துக்கறேன்னு உத்தரவாதம் கொடுத்துருக்கார்.”

“அன்னிக்கும் இதேதான் சொன்னீங்க. ஆனா இன்னைக்கு காலைல மொத்த பஸ்ஸும் பார்க்கற மாதிரி இவ பக்கத்துல வந்து உட்கார்ந்தானாம். செல்வி வந்து சொல்றா.”

“பெரியவருக்காக பார்க்கறேன். அன்னிக்கு பேரனுக்காக மன்னிப்பெல்லாம் கேட்டாரு. திரும்ப பேசிப் பார்ப்போம்.”

‘இத்தனை நடந்திருக்கிறதா? முன்னாடியே தெரிந்திருந்தால் பிரமோத்தை எச்சரித்திருக்கலாமோ? ‘ என்பதாக இருந்தது சித்தாராவின் எண்ணம்.

“நீங்க இப்டியே பேசிக்கிட்டே இருங்க. பொம்பளைப் பிள்ளையைப் பெத்து வச்சிட்டு, ஊர் வாய்க்கு அவலா கொடுத்திருக்கேனேன்னு எவ்ளோ கஷ்டமா இருக்குது தெரியுமா?” – பெற்ற அன்னையின் நியாயமான கவலை.

“எனக்கு மட்டும் கவலை இல்லையா என்ன?”

“அப்போ அவளைப் படிக்க போக வேண்டாம்னு சொல்லுங்க. இந்த விஷயம் சாந்தி மதினி காதுக்கு போறதுக்கு முன்னாடி உடனே கல்யாணத்தை முடிக்கற வழியைப் பாருங்க. அப்போதான்‌ எனக்கு நிம்மதி.”

சாந்தி மதுரையில் இருக்கிறார். அவர் சித்தாராவிற்கு அத்தை முறையாக வேண்டும். அந்த உறவுமுறை யாதெனில்…

நீங்கள் ‘அதெல்லாம் சொல்ல வேண்டாம் வேண்டாம்’ என்று அலறுவது எனக்குக் கேட்கின்ற காரணத்தால், சாந்தி சித்தாராவிற்கு அத்தை முறையாக வேண்டும் என்று மட்டும் சொல்லி முடித்துக் கொள்கிறேன். அந்த அத்தைக்கு ஒரு மகன் இருக்கின்றான்.

சித்தாரா முதல் வருடம் படிக்கும் பொழுதே அவளைப் பெண் கேட்டார் சாந்தி. இவர்கள் தான் பெண்ணிற்கு படிப்பு முக்கியம். நன்றாக படிக்கும் பெண். ஆக ஒரு பட்டத்தை வாங்கிய பின் திருமணம் செய்யலாம் என உறுதி கொடுத்திருக்கின்றனர்.

இப்போது சித்தாராவின் காதல் கதை தெரிந்தால் கல்யாணப் பேச்சு தடைபடுவதோடு உறவுகளுக்குள்ளும் சங்கடமல்லவா? அதை நினைத்துதான் லலிதாவிற்கு கவலையும் பயமும்.

சொந்தங்கள் சூழ் ஊரில், ஒரு பெண்ணிற்கு கல்யாணத்திற்கு மாப்பிள்ளை பேசியாயிற்று என்று அச்சொந்தத்தில் பெரியவர்கள் அனைவருக்கும் தெரிந்துமிருக்கையில், பெண்ணின் நடவடிக்கைகள் மாப்பிள்ளை வீட்டாருக்கு எங்ஙனம் தெரியாமல் போகும்?

லலிதா பயந்தாற் போல் சாந்திக்கும் விஷயம் தெரிந்தது. இருப்பினும் சொந்தத்தில் புகைச்சல் எழுவது வாடிக்கைதான். ஒரு வாய் வாழ்த்தும்; ஒரு வாய் தாழ்த்தும்! ஆக விஷயத்தின் உண்மைத் தன்மையை உறுதிபடுத்திக் கொண்டு ஒரு வாரம் கழித்து, கல்யாணப் பேச்சுவார்த்தையை நிறுத்திக் கொள்ளலாமென சொல்லிவிட்டார் சாந்தி.

•**•**•**•**•**•**•

சூரியன் அஸ்தமிக்கும் வேளை. பாலாவின் பயிற்சிகூடம்.

வழக்கம்போல் பிரமோத்தை மட்டுமல்லாது அவன் மொத்த குடும்பத்தையும் சேர்த்து மனதினுள் வறுத்தெடுத்தபடி இரண்டு மாடியேறி வந்தான் பாலா.

வந்ததும் வராததுமாக, “டேய் பிரமோத்!” என்று ஆரம்பித்தவன், அங்கே பிரமோத் சிலம்பம் ஆடிக் கொண்டிருந்ததைக் கண்டான். எப்போதும் போலல்லாது வெறித்தனத்தின் உச்சத்தை அந்த கம்பில் காட்டிக் கொண்டிருந்தான் அவன்.

ஓரமாய் இருந்த கல் மேடையில் அவனின் அலைபேசி அணைந்து கிடந்தது. வழக்கமான காதல் பாடலுக்கு பதிலாக, காற்றில் கம்பின் ‘விஷ்க் விஷ்க்’ என்ற சப்தம் மட்டுமே! பார்த்தவனுக்கே கண்கள் சுளுக்கிக் கொள்ளும் போல் இருந்தது அவனின் ஆட்டம்.

‘என்னவானது இவனுக்கு? ஒருவேளை தாத்தாவுடன் சண்டையோ? இருக்காதே… அதற்கெல்லாம் அசருபவன் இவனில்லையே!’

“பிரமோத்!”

“……..”

“மச்சான் டேய், நிறுத்து!” என்றபடி லாவகமாக ஊடே போய் அவன் கையைப் பிடித்து கம்பைப் பிடுங்கி எறிந்தான் பாலா.

கல் மேடையின் மேலிருந்த துவாலையை எடுத்துக் கொடுக்க, அதை தட்டிவிட்டு தலையை கவிழ்ந்தபடி அமர்ந்துவிட்டான் பிரமோத்.

“என்னடா ஆச்சு? தாத்தா கூட எதுவும் பிரச்சினையா?”

“ப்ச் இல்லடா.”

“அப்போ உனக்கும் அந்த கிழவி கல்யாண விஷயம் தெரிஞ்சிடுச்சா? அதான் கோவமா இருக்கியா? நானே அதைச் சொல்லத்தான் வந்தேன்.”

அதற்கு பிரமோத் கேட்டானே பார்க்கலாம், “எந்த கிழவி?” என்று! பாலா திகைத்துப் போனான்.

பிரமோத், சித்தாராவின் பின்னே சுற்றுவது தெரிந்து பாலா, ‘அவக்கிட்ட அப்படி என்னத்தைக் கண்டு மயங்கின? எங்க பாட்டி கூட அவளை விட அழகா இருக்கும்.’ என்றவன், அப்போதிருந்து அவளைக் ‘கிழவி’ என்றுதான் சொல்லி பிரமோத்திடம் கேலி செய்வது வழக்கம். யோசித்துப் பார்த்தால், ‘சித்தாரா’ என்ற பெயரைச்‌ சொல்லி பாலா பேசியதே இல்லை என்றே தோன்றியது.

அப்படி இருக்க, இவன் ‘எந்த கிழவி?’ என்று கேட்கிறானே!

“ஏண்டா புது காதலியைக் கூட மறக்கற அளவுக்கு என்னடா பிரச்சினை உனக்கு?”

“புதுக் காதலியா? ஓ! சித்தாராவை சொல்றியா?” என்று லேசாக சிரித்தான்.

அப்போது கூட பாலா ‘கல்யாண விஷயம்’ என்று குறிப்பிட்டது பிரமோத்தின் மூளையில் பதிவாகவில்லை. அதை அவதானித்த பாலா, அவனுக்கு இன்னும் அவள் வீட்டில் நடந்தது தெரியவில்லை என்று புரிந்துகொண்டான்.

“சரி, இப்போ எதுக்கு நீ இங்கே வந்து வெறிபிடிச்சவன் மாதிரி ஆடிக்கிட்டு இருக்கே?”

“மனோ அண்ணே கால் பண்ணான், பாலா.”

“அவர்தான் அடிக்கடி பேசறாரே? இப்போ என்ன சொன்னாருன்னு நீ இப்டி இருக்கே?”

“அவனுக்கு பணம் தேவையாம். தாத்தாகிட்ட பேசி அவன்‌ பங்கு சொத்தை வாங்கித் தர சொல்லி கேட்கறான்.”

“என்ன?!” என்ற பாலாவுக்கு நிரம்ப அதிர்ச்சி. “அவர் ஏதோ லவ் மேட்டர்ல சும்மா கோவிச்சிட்டு போயிருக்காருன்னு நினைச்சா… ஏண்டா இப்டி சொத்தைப் பிரிக்கற வரைக்கும் போகணும்?” என்றான் ஆதங்கமாக!

பிரமோத்தின் மூத்த அண்ணன் மனோகரன். தாத்தாவிற்கு மிகவும் பிரியமான பேரன். அவனுக்கு பெயரிலிருந்து அனைத்தையும் தேர்ந்தெடுத்து சீராட்டினார் சங்கரன். ஆனால் அது அவனுக்கும் பிடித்தமா என்று கவனிக்க தவறிவிட்டார்.

இரண்டாவது பேரனான ஸ்ரீதரனையும் சங்கரன்தான் வளர்த்தார். அவனுக்கு தாத்தாவின் கொள்கைகளும் ரசனைகளும் ஒத்துப் போக, அவன் அவர் செய்ததை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டான். அவனுக்கு பெயரில் இருந்து பிரியா வரை தேர்ந்தெடுத்தது சங்கரன்தான்.

ஆனால் மனோ, தாத்தா தன் விருப்பத்திற்கு மதிப்பளிக்கவில்லை என்று நினைத்தான். அதையும் மனதினுள்ளேயே வைத்துப் புழுங்கினான். சில முறை காஞ்சனா கேட்ட போதும் கூட அழுத்தமாய் இருந்து மறுத்துவிட்டான். தாத்தாவை மீற முடியாமலும் அவரின் கொள்கைகளை ஏற்க முடியாமலும் குமைந்தவன் ஒரு கட்டத்தில் மன அழுத்தத்திற்கு ஆளானான்.

அவன் தன் மனதிலுள்ளதைப் பகிர்ந்து கொண்ட ஒரே ஜீவன், பிரமோத். இருவருக்குமான வயது வித்தியாசம் ஆறு ஆண்டுகள். ஆக ஸ்ரீயை விட சிறியவனான பிரமோத்திடம் எதையும் பகிர்ந்து கொள்வது மனோவிற்கு எளிதாக இருந்தது. புரிந்தும் புரியாமலும் அண்ணன் சொல்வதை மலங்க மலங்க விழித்துக் கொண்டு கேட்கும் சிறுவனின் மனதில் தாத்தா ஒரு மகத்தான வில்லனாக உருவெடுத்தார்.

எதையும் துணிந்து எதிர்கொள்ளாமல், தொட்டதற்கெல்லாம் மனம் சுணங்கிப் போகும் ரகமான மனோவிற்கு, ஒருவகையில் தாத்தாவை எதிர்க்கும் துணிவைக் கற்றுத் தந்தது பிரமோத் தான்.

மனோ முதல் வருடம் கல்லூரியில் சேரும்போது பிரமோத்திற்கு பன்னிரண்டு வயது. “எனக்கு கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் முடிச்சு எம்என்சில வேலை பார்த்து கை நிறைய சம்பாதிக்கணும்னு ஆசைடா பிரமோத். இந்த தாத்தா என் ஆசைல மண்ணள்ளிப் போட்டு, வயக்காட்டு மண்ணைக் கொத்த வைக்கப் பார்க்கறார்.” எப்போதும் போல் மனோ தன் தம்பியிடம் புலம்ப, அவன் எப்போதும் போல் புரியாமலேயே கேட்டு தலையாட்டிக் கொண்டிராமல் இம்முறை தாத்தாவை எதிர்க்கச் சொன்னான்.

தன் சின்னத்தம்பியை வியப்புடன் பார்த்தான் மனோ. “நான் எப்டிடா சொல்றது? சொன்னா எதிர்த்து பேசறான்னு நினைக்க மாட்டாரா? தாத்தாவை எதிர்த்துப் பேசினா நம்ம அப்பாவுக்கு பிடிக்காது பிரமோத்.”

“உனக்கு பிடிச்சதைப் படிக்கப் போறேன்னு சொல்றதுல என்ன தப்பிருக்குது மனோ’ண்ணே? தாத்தா முடியாதுன்னு சொன்னா, உனக்காக நான் போய் கேட்கறேன்.”

இப்போது தம்பியைக் கண்டு புன்னகைத்தான் மனோ. “பெரிய மனுஷன் மாதிரி பேசறடா நீ.” என்று வாஞ்சையுடன் கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்ட அண்ணன் மேல் பிரமோத்திற்கும் பாசம் பெருகியது.

சின்னவனானாலும் தம்பி சொன்னதைப் பரிசீலித்துப் பார்த்த மனோ, இறுதியாக தாத்தாவிடம் தன் ஆசையை, இலட்சியத்தை முன் வைத்தான். சிறிது யோசித்தப் பெரியவர் காஞ்சனாவின் முகம் பார்க்க, அவருக்கும் மனோவின் ஆசையில் விருப்பமே என்று புரிந்துகொண்டு, மூத்தப் பேரனை அவன் விரும்பிய பாடத்தைப் படிக்க அனுமதித்தார்.

அதன்பின் எல்லாம் நன்றாகத்தான் போனது, மனோ காதல் என்று வந்து நிற்கும் வரை! கல்லூரி இறுதி வருடத்தின் முடிவில் ஒரு வட இந்திய பெண்ணைத் தோழி என்று சொல்லி கருவேலம்பட்டிக்கு அழைத்துவர, மனதில் நெருடல் எழுந்தாலும் பேரனின் மேல் நம்பிக்கை இருந்ததால் இன்முகமாய் விருந்தோம்பினார் சங்கரன்.

அவர் எதுவும் சொல்லாததால் மற்றவர்களும் அவளை சிறப்பாகவே உபசரித்தனர். ஆனால் வந்த பெண் ஒரே வாரத்தில் வீட்டையும் வீட்டிலுள்ளவர்களையும் விழிகளால் எடை போட்டதுடன், அவர்களைத் தங்களின் பாரம்பரிய முறைக்கு மாற்றியமைக்க முயன்றாள்.

சங்கரனின் இரண்டாவது மருமகள் அமலாதான் அவளை முதலில் சரியாக கணித்தவர். இருந்தும் வீட்டிலுள்ளவர்களிடம் அதனைப் பகிர்ந்துகொள்ள தயங்கினார். எத்தனை வருடங்கள் ஆனாலும் மாமியார் வீட்டில் மூத்தார் மக்கள் குறித்து அப்படி சட்டென்று பேசிவிட முடியாதே?

வந்திருக்கும் பெண்ணோ மூத்தவரின் மகன் மனோவின் தோழி. ஆக உடனேயே எதுவும் சொல்லிவிடாமல் பொறுமை காத்தார். அடுத்து அவர் சொல்லாமலேயே அவளைக் கண்டுகொண்ட நபர் காஞ்சனா. பெண்கள் மிகவும் நுண்ணிய உணர்வு படைத்தவர்கள் என்பது உண்மைதான் போலும்.

காஞ்சனா தன் கணவர் சரவணனிடம் சொல்ல, அவர் மனோவை அழைத்துக் கேட்க, அவன் இதுதான் சந்தர்ப்பம் என்று, அவள் தன் காதலி என்றும், நம் ஊரையும் குடும்பத்தாரையும் தெரிந்துகொள்ள வந்திருக்கிறாள் என்றும் சொல்ல, சரவணன் மட்டுமல்லாது காஞ்சனாவும் மலையேறிக் கொண்டார்.

விஷயம் கேள்விப்பட்ட சங்கரன் தாத்தா நிதானமாக அந்தப் பெண்ணை அழைத்து, தங்கள் குடும்பத்தின் மேன்மை, பாரம்பரியத்தின் சிறப்பு, தமிழ்ச் சமூகத்தின் பிரத்தியேகக் கோட்பாடுகள் என்றெல்லாம் ஒரு மணி நேரம் பேசி, நீயும் இக்குடும்பத்தில் ஒரு நபராக பந்துத்வம் பெற விரும்பினால், அதற்கெல்லாம் உட்பட்டு, தமிழர் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் கடைபிடிப்பவளாக இருக்கவேண்டும் என்று சொல்ல,

அவள், ‘உங்கள் தாத்தா இதற்கு என்னை வேண்டாமென்றே சொல்லியிருக்கலாம். கூப்பிட்டு வைத்து அவமானப்படுத்திவிட்டார்.’ என்று கோபமாக மொழிந்து, மனோவிற்கு ஒரு பெரிய கும்பிடாக போட்டுவிட்டு, நடையைக் கட்டிவிட்டாள்.

அவள் வந்ததே மனோவுடனான தன் மணவாழ்க்கை எவ்வகையில் செழிப்பாகவும் தனக்கு சாதகமாகவும் இருக்கும் என்று தெரிந்து கொள்ளத்தான்! உண்மைக் காதலென்றால் நிபந்தனைகளை ஏற்கவோ, எதிர்க்கவோ அல்லது போராடவோ தோன்றியிருக்குமல்லவா?

அது அப்போது அவள் மேல் பித்தேறிப் போயிருந்த மனோவிற்கு புரியவில்லை. அவனுக்கே புரியாத போது பதின் பருவத்தில் இருந்த பிரமோத்திற்கு எப்படி புரிந்திருக்கும்?

பள்ளி முடிந்து வந்தவன் அண்ணனின் தோழியைக் காணாது அவனிடம் கேட்க, அவன் அவள் தன் காதலி என்றும், தாத்தாவிற்கு காதலைப் பிடிக்காமல் அவளைத் துரத்தியடித்துவிட்டார் என்றும் சொல்ல, இவன் மனதில் தாத்தாவின் மேல் வஞ்சம் கூடிப்போனது.

அடுத்த சில நாட்களில் மனோவிற்கு அவன் விரும்பியதைப் போல பன்னாட்டு நிறுவனத்தில் வேலை கிடைத்துவிட, இத்தனை நாட்கள் மனதிலிருந்த கசப்புகளையெல்லாம் வார்த்தைகளாக்கி தாத்தாவிடம் கொட்டிவிட்டு, இனி இந்த வீட்டு வாசலை மிதிப்பதில்லை என்றும் சபதமிட்டு போய்விட்டான்.

அடுத்து ஓரிரு வருடங்களுக்குப் பின் அவனுக்கு திருமணம் என்று காஞ்சனா ஆரம்பிக்க, தனக்கு திருமணம் ஆகிவிட்டது என அதிர்வெடியைக் கொளுத்தி போட்டுவிட்டு, அவ்வப்போது தொலைபேசி எடுத்துக் கொண்டிருந்தவன் கூட அதன்பின் பேசவில்லை. தான் இருக்கும் இடத்தையும் யாரிடமும் தெரிவிக்க மறுத்துவிட்டான். பிரமோத் கேட்டும் கூட சொல்லவில்லை. அதில் மிகவும் மனமுடைந்த ஜீவன் காஞ்சனாதான்.

அதற்கு முன்பும் பிரமோத், அண்ணனின் பொருட்டு சங்கரனின் பேச்சைக் கேட்கமாட்டான்தான். ஆனால் மனோ வீட்டை விட்டு போன பிறகுதான் தாத்தாவிற்கு எதிரான சின்ன சின்னப் பழிவாங்கலில் ஈடுபட ஆரம்பித்தான்.

அவரின் இரத்தத்தை லைட்டர் இல்லாமல் கொதிக்க வைத்துப் பார்ப்பதில் அவனுக்கோர் அலாதி இன்பம்; அதில் அண்ணனுக்கு நியாயம் செய்துவிட்டதாய் ஓர் பிம்பம்.

பத்தாம் வகுப்பில் விருதுநகர் மாவட்டத்தில் முதலாவதாக வந்தவன், பன்னிரெண்டாவதில் ஏனோதானோவென்று தேறினான். தாத்தாவிற்கு பெருமை சேர்க்கும் எதையும் அவன் செய்வதாக இல்லை. அறிவார்ந்த பையன் அண்ணன் விடயத்தில் மட்டும் அடிமுட்டாளாகிப் போனான்.

சிறுவயதில் இருந்து அவனைத் தட்டிக்கொடுத்து சீர்படுத்தி வளர்த்ததில் பெரும் பங்கு அவன் சித்தி அமலாவிற்குதான் இருக்கிறது. அமலா அதிகம் படித்திராதவர். இருப்பினும் கற்பூர புத்திக்காரர். மனிதர்களை எடைப் போடுவதாகட்டும், குழந்தை வளர்ப்பாகட்டும், குடும்ப நிர்வாகமாகட்டும் அனைத்திலும் சிறப்பு வாய்ந்தவர். மனைவியின் சிறப்பு தன்மைகள் குறித்து அசோகனுக்கு நிரம்ப பெருமையுண்டு.

அப்பேற்பட்ட அமலாவிற்கு செல்லப் பிள்ளையான பிரமோத்தின் நடவடிக்கைகள் புரியாமல் போகுமா? அவருக்கு தன் மகன் அர்விந்தன் எப்படியோ அப்படித்தான் மூத்தாரின் மக்களும்! தன் வயிற்றுக் குழந்தையைப் போலவேதான் மூவரிடமும் நடந்துகொள்வார். ஆக அவனுக்கு புரியும்படி எடுத்துச் சொல்லி, தாத்தாவை எதிர்ப்பது தவறு என்றார்.

“அப்போ ஏன் தாத்தா மனோ அண்ணனோட லவரைத் துரத்திவிட்டார் சித்திம்மா? அவன் வீட்டை விட்டு போகும் போது ஏன் தடுக்காம இருந்தார்? வேறு மாநிலத்து பொண்ணுன்னா நம்ம வீட்டுக்கு கல்யாணமாகி வரக்கூடாதா சித்தி? நம்ம குடும்பம் அப்டியென்ன உசத்தியாம்? காதல் என்ன அவ்ளோ கெட்டதா?” என கேள்விகளால் திணறடித்தான்.

காதலை, குடும்ப சித்தாந்தங்களை, மனோவின் மனநிலையைக் குறித்து பிரமோத்தின் வயதிற்கேற்ப விரிவாக விளக்கம் சொல்லவியலாமலும், மனோவின் மேல் அசைக்க முடியாத நம்பிக்கையும் பாசமும் கொண்டிருக்கும் பிரமோத்தைக் கையாள தெரியாமலும் விழித்தார் அமலா.

பிரமோத்’ஐப் பற்றி நன்கறிந்திருந்த சங்கரன், அவன் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்ததும் படிப்பு விடயத்தில் அவன் போக்குக்கே விட்டுவிட தீர்மானித்திருந்தார். சரவணனும் காஞ்சனாவும் கடைக்குட்டி மகன் எதைத் தேர்ந்தெடுக்கப் போகிறான் என்று ஆவலோடு காத்திருக்க, அவன் தன் தோழன் பாலாவைப் போல் பாலிடெக்னிக்கில் சேர்ந்து படிக்க விரும்புவதாகச் சொன்னான்.

பாலாவின் வீட்டில் அவனை அதிக பணம் செலுத்தி படிக்க வைக்க இயலாத நிலைமை. அதனால் அவன் டிப்ளமோ படிப்பை முடித்தால் போதுமென்று இருந்துவிட்டான்.

காஞ்சனா மகனோடு பேசிப் பார்த்தார். பிரமோத்தின் நல்ல நண்பனான பாலாவும் இது கால விரயம், உனக்கிருக்கும் திறமைக்கு மனோ அண்ணனைப் போல் மென்பொறியியலில் கால் பதிக்கலாம் என்றான். யார் சொன்னதையும் கேட்காமல் தன் பிடியிலேயே நின்றவனை, வேறு வழியில்லாமல் அவன் போக்கில் விட்டுவிட்டனர்.

இந்த விடயத்தில் சரவணனுக்கு உள்ளூர வருத்தமிருந்தாலும் மகனை வற்புறுத்த அவர் விரும்பவில்லை. ஆக பிரமோத் விரும்பியதைப்(?) படித்தான்.

அதன்பின் மனோ, பிரமோத்தைத் தவிர வேறு யாரோடும் தொடர்பிலில்லை. இரண்டொரு முறை, தான் மட்டும் நேரில் வந்து பார்ப்பதாக சொன்னவனையும், மனோவின் கோபம் தடை செய்தது. தன்னிடமும் அலைப்பேசி வழி பேச்சை நிறுத்திக் கொண்டால் என்ன செய்வதென அமைதிகாத்தான் பிரமோத். அவ்வபோது அம்மா காஞ்சனாவுடன் அண்ணனைப் பேச வைப்பான். அவ்வளவே!

அப்படி ஒருமுறை பேசிய போது, ஸ்ரீதரனின் திருமணத்திற்கு அழைக்க, அந்த வீட்டில் தனக்கு மரியாதை இல்லை என்றும், தான் வந்து ஆகப் போவது ஒன்றுமில்லை என்றும் சொல்லி, ஸ்ரீக்கு தன் வாழ்த்தையும் தெரிவித்தான்.

காஞ்சனாவின் புலம்பல் தாங்காமல் சரவணன் ஒருமுறை மகனைத் தேடி வடக்கு நோக்கி பயணம் செய்தார். இந்நாட்களில் ஒருவரைக் கண்டுபிடிப்பது சுலபம் என்றாலும் வேண்டுமென்றே தன் அடையாளத்தை மறைத்து வாழ்ந்த மனோவைக் கண்டுபிடிப்பது அத்தனை சுலபமாக இருக்கவில்லை. ஒரு வாரம் அலைந்து திரிந்த சரவணன், அவன் வேலை செய்யும் நிறுவனத்தில் இருந்து வெளியே வரும்போது மகனை வேறொரு பெண்ணுடன் காண நேர்ந்தது.

அப்பா அங்கே வந்ததில் தனக்கு விருப்பமில்லை என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தினான் மனோ. உடன் இருந்த பெண்ணைத் தன் மனைவி என்று அறிமுகப்படுத்தினான். அதற்கு மேல் அவரை நிற்க விடாமல் மூன்றாம் மனிதராக பாவித்து, அனுப்பிவிட்டான்.

முப்பது வருடங்களாக கணிக்க முடியாத மகனின் குணத்தை, இயல்பை, நடத்தையை அன்று அந்த ஐந்து நிமிடங்களில் கணித்தார் சரவணன். பின்னர் ஊர் திரும்பியவர், ‘மகன் நன்றாக இருக்கிறான். அவனைப் பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை.’ என்பதோடு நிறுத்திக்கொண்டார்.

அதன்பின்னும் பிரமோத்துடன் மட்டும் பேசிக் கொண்டிருந்த மனோ, இதோ இப்போது ஏதோ பணத்தேவை இருக்கப் போய், தன் பங்கு சொத்துக்கள் வேண்டுமென்கிறான்.

“சரி அவர் கேட்டதுக்கு நீ என்ன சொன்ன?”

‘இவனுக்கு தான் அண்ணன் என்றால் அறிவு சுத்தமாய் வேலை செய்யாதே! என்னத்தை சொல்லி வைத்திருக்கிறானோ…’ என்று அவனையே பார்த்திருந்தான் பாலா.

“அம்மாவும் அப்பாவும் வெளியே சொல்லலைன்னாலும் உள்ளுக்குள்ள அவனைத் தேடறாங்க பாலா. ஸ்ரீ’ண்ணே கல்யாணத்துக்கு கூட வரலைன்னு அம்மாவுக்கு ரொம்ப வருத்தம்.”

“ம்ம்.”

“அதான் இந்த விஷயத்தை வச்சு அவனை இங்கே வரவழைக்கலாம்னு நினைச்சேன்.” எனவும் இத்தனை நேர குறுகுறுப்பு மறைந்து, பாலாவின் முகம் மலர்ந்தது.

“இதுக்கு எதுக்கு தயங்கிட்டு இருக்கணும்? உனக்கும் சொத்துல உரிமை இருக்குது. நீயே வந்து தாத்தா கிட்ட கேளுன்னு சொல்லிருக்கேன்.”

“அதானே பார்த்தேன்… நீயாவது நியாயமா பேசறதாவது…”

“நான் என்ன பாலா அநியாயமா பேசிட்டேன்? அவன் சொத்து; அவன் உரிமை.”

“சரி விடு, அப்டியாவது அவர் வரட்டும். அதுக்கு ஏன் நீ இப்டி வெறித்தனமா ஆடிட்டிருக்கே?”

“தன் சொந்தப் பேரன் எங்கேயோ கண்காணாத இடத்துல இருக்கான். இந்த தாத்தா ஒரு தடவை அவனை வா’ன்னு கூப்பிடலாம்ல பாலா?”

தோழனின் உள்ளக்கிடக்கையை, மனத்தாங்கலைப் புரிந்த பாலாவால், அவனைத் தட்டிக் கொடுத்து அப்போதைக்கு ஆசுவாசப்படுத்த மட்டுமே முடிந்தது.

 

தூறல் தூறும் 🌧️🌧️🌧️

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
5
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்