Loading

அத்தியாயம் 6

கதிரவன் – மல்லிகாவிற்கு இரு மகள்கள் மூத்தவள் ஆர்த்திகா – கல்யாணப் பெண். இளையவள் நிவர்த்திகா – நமக்கு முதல் அத்தியாயத்திலிருந்தே பரிச்சயமான சிற்றுந்துப் பெண்.

அன்று தன் மகள் ஆர்த்திகாவின் நிச்சயதார்த்த விழாவிற்கென ஜவுளிகள் எடுக்க விருதுநகர் வந்திருந்தனர் கதிரவன் குடும்பத்தினர். நிவர்த்திகா அக்காவிற்கு உதவிய பின் தனக்கான புடவையைத் தேர்ந்தெடுத்தாள், இளநீல வண்ணத்தில்.

அந்தப் புடவை மல்லிகாவிற்கு பிடிக்கவில்லை. “ஏண்டி கண்ணை மூடின கலர்ல எடுக்கற? வேற பாரு!”

“போம்மா! பிரைட்டா தான் இருக்குது. எனக்கு பிடிச்சிருக்கு.”

“உன் கலருக்கு டார்க் கலர் சேலை நல்லா இருக்கும் நிவர்த்தி. இதுல லேசா கறைப் பட்டாலும் பளீர்னு தெரியும். அதோ அந்த வைலட் கலர் பாரு.”

“ஆமா. வைலட் கலர் சேலை, அப்டியே தலைல நாலு புல்லுக்கட்டையும் ஏத்தி விட்டுடு. நல்லா இருக்கும்.”

“இவளைப் பாருங்க. நல்ல கலரா பாருன்னு சொல்றேன். சொன்னப் பேச்சைக் கேட்கறதே இல்ல.” என மல்லிகா கணவனிடம் பஞ்சாயத்திற்கு போக,

“பிள்ளை ஆசைப்பட்டதை எடுத்துக்கட்டும், விடேன்!” என கதிரவன் மகளதிகாரத் தீர்ப்பு வழங்க,

அம்மா எத்தனை சொல்லியும் கேளாமல் அந்த இளநீல வண்ண புடவையையே எடுத்துக் கொண்டாள் நிவர்த்திகா.

‘நீதான் உங்கக்கா நிச்சயத்துக்கு ப்ளூ கலர் காப்பர் சில்க் சாரி எடுத்திருக்கேன்னு சொன்ன? இப்போ அவனும் அதே கலர் டிரெஸ் போட்டிருந்தான்னு சொல்ற? சும்மா அடிச்சு விடற தானே?’

அன்று அந்தப் புடவை வாங்கும்போது கடையில் அம்மாவோடு நடந்த வாக்குவாதத்தையும், விஜி சொன்னதையும் நினைத்துப் பார்த்தாள் நிவர்த்திகா.

‘அம்மா சொன்னப்பவே கேட்டிருக்கலாம். ஏன்தான் அந்தக் கலர் சாரி எடுத்தேனோ!’

‘ச்சு! எனக்கு பிடிச்சதை நான் எடுத்தேன். அதே கலர் ஷர்ட் போட்டு வந்தது அவன் தப்பு!’

‘ஆமா அவன் தப்புதான்!’ எனத் தனக்குத்தானே குழப்பமும் சமாதானமும் செய்து கொண்டாள்.

“நிவர்த்தீ…”

“ஹா… ஆங்? என்னம்மா?”

“எத்தனை தடவைடீ கூப்பிடறது? பரிசத்துக்கு சொல்லலைன்னு எங்க தங்கமுத்து பெரியம்மா கோவிச்சுக்கிடுச்சாம். எப்டியோ அதை மறந்துட்டேன் நிவர்த்திம்மா… நான் போய் அதுக்கிட்ட பேசிட்டு வர்றேன். நான் வர நேரமாகிருச்சுன்னா அடுப்புல உலை வச்சு விடு. ஒன்றை உலக்கு (ஒன்றரை ஆழாக்கு) அரிசி எடுக்கணும், தெரியுதா?”

அம்மா சொன்னதில் பிற்பாதியைக் காற்றுக்கு கொடுத்தவள் கேட்டாள். “யாரும்மா அந்த பெரியம்மா?”

“நம்ம ஆச்சியோட மூத்த அக்கா இருக்குதுல்ல? த்சோ… அது சுத்தி வளைச்சு வர்ற சொந்தம். சொன்னா உனக்கு புரியாது. நான் போய்ட்டு சுருக்கா வாரேன்.”

இவளுக்கு மீண்டும் சொல்லாமல் கொள்ளாமல் வந்தது அவன் நினைவு!

“ஆமா அவன் ஏன் உங்க வீட்டு ஃபங்ஷனுக்கு வந்திருக்கான்? உங்களுக்கு சொந்தமா?” என ஆர்வமாய்க் கேட்ட விஜிக்கு பதிலளிக்க தெரியாது விழித்தாள் இவள். விடை தெரிந்தால்தானே?

பிரமோத் அன்று கதிரவனையும் மல்லிகாவையும் சிவகாசி அழைத்துச் சென்றுவிட்டு, மீண்டும் கரிசல்குளம் வந்து இவர்கள் வீட்டு வாசலில் இரவு பதினோரு மணிக்கு இறக்கி விட்டபோது நிவர்த்திகா உள்ளறையில் தூங்கியிருந்தாள். பெற்றோருக்கு கதவைத் திறந்துவிட்டது மூத்த மகள் ஆர்த்திதான். அதனால் இப்போது வரை அவன் தன் பெற்றோருக்கு உதவியது இவளுக்கு தெரிந்திருக்கவில்லை.

வெளியே சென்ற மல்லிகாவை வேகமாக போய் அழைத்தாள். “ம்மா… எம்மோய்!”

“என்னம்மா? அம்மா போயிட்டா போல… எதுவும் வேணுமா?” அப்போது உள்ளே நுழைந்த கதிரவன் கேட்க,

“இல்லப்பா… அது… ஆமா…” என இவள் வார்த்தைகளில் கபடி ஆடினாள்.

“என்னாச்சு நிவர்த்தி?”

“அ… ஒண்ணுமில்லப்பா. பரிசம் போடற ஃபங்ஷன்ல நிறைய சொந்தக்காரவுங்க வந்திருந்தாங்களே? அதுல பாதிபேர் யாருன்னே எனக்குத் தெரியல. அதான்… கல்யாணத்துக்கும் அவ்ளோ பேருக்கு சொல்லணுமான்னு…”

“சொந்தக்காரவிங்க எல்லாரும் முக்கியமானவிங்க நிவர்த்தி. வாழ்க்கை முழுசுக்கும் அவிங்க வேணும். அதுவும் நல்லது பொல்லதுக்கு கட்டாயம் அவிங்களுக்கு சொல்லணும். கடன்னு மட்டும் கேட்டு போய் நின்னுடக்கூடாது. மசுருக்கு மதிக்க மாட்டானுக. மத்தபடி, மொய் எழுதுறது தொட்டு தாய்மாமன் பட்டு வரை, பச்சிளத்துல இருந்து பாடைல போற வரை நம்மூர்ல எல்லாத்துக்கும் அவிங்கதான். இல்லைன்னா நான் வேத்து நாட்டுல நிம்மதியா இருந்துருக்க முடியுமா? உங்கம்மா தான் ரெண்டு பொண்ணை வச்சுட்டு தனியா இருந்திருப்பாளா? என்னமோ இந்த கால பிள்ளைக சொந்தத்தோட ஒட்ட மாட்டேங்குதுக.”

“இல்லப்பா, ஒட்டவும் சொல்லல. ஒதுங்கவும் சொல்லல. தூரத்து சொந்தத்துக்கெல்லாம்… எதுக்குன்னு தான் கேட்டேன்.”

மகளின் சுணக்கம் புரிந்தவர் ஹாஸ்யமாய்ச் சொன்னார். “வச்ச மொய்யை வசூல் பண்ண வேணாமா நிவர்த்தி?”

அவர் நினைத்தாற் போல் மென்னகை புரிந்தாள் பெண்.

“அதோட இப்ப சொன்ன பாரு, யாருன்னே தெரியலன்னு… இப்டி அடுத்து வர்ற சந்ததிகள் முழிக்கக்கூடாதுன்னு தான் எல்லாரும் எல்லாரையும் அழைக்கறாங்க. சரி, சொல்லு. உனக்கு யாரைத் தெரியல?”

“அது… நிறைய பேரை…”

குறுக்கிட்டார் கதிரவன். “அட! யாரையோ தெரியலன்னு தானே கேட்கற? சும்மா சொல்லு, அப்பா தானேடா? யாரும் எதுவும் சொன்னாங்களா உன்னை?”

“ச்ச ச்ச… இல்லப்பா! ஒரு தாத்தாதான் கூப்பிட்டு பேசினார். என்னைத் தெரியுதா’ன்னு கேட்டார்.”

“யாருடா?”

அன்று வரவேற்பில் நின்றிருந்தவள் பிரமோத் மண்டப வாசலில் நுழையும் போதே பார்த்துவிட்டாள். சட்டென்று அருகிலிருந்த தேவி அக்காவிடம் ஓய்வறை செல்வதாகச் சொல்லிவிட்டு நகர்ந்து எதிர்திசையில் இருந்து கண்காணித்தவள், ‘இவனெங்கே இங்கே வந்தான்?’ என மனதில் எழுந்த கேள்வியுடன், ‘இந்த நேரம் பார்த்து இந்த விஜி எங்கே போய் தொலைஞ்சாளோ!?’ என விஜியையும் தேடினாள்.

புடவைக்கு பொருத்தமாக கையில் வைத்திருந்த இளநீல வண்ணப் பையிலிருந்து (clutch) அலைப்பேசியை எடுத்து அவளை அழைக்க நினைக்கையில், “இந்தா இவதான் தாத்தா கல்யாணப் பொண்ணோட தங்கச்சி.” என்ற பத்து வயது அத்தை மகளின் குரல் கேட்டு நிமிர,

ஒரு பெரியவர் தன் மூக்குக் கண்ணாடியைச் சரி செய்தபடி, என்னவோ கல்யாணப் பெண்ணே இவள்தான் என்பது போல் பார்வையிட்டவர், “உன் பேரென்னம்மா?” எனக் கேட்க,

அவருக்கு பின்னால் பிரமோத் எங்கே என பார்த்துவிட்டு பதிலளித்தாள். அவன் சற்று பின்தங்கி, மண்டப அலங்காரங்களை விழி அளவையில் அளந்து கொண்டிருந்தான்.

“நிவர்த்திகா. வாங்க தாத்தா உள்ளே உட்காரலாம்.”

“ஹூம் ஹூம்… நான் யாருன்னு உனக்குத் தெரியுதா?” எனக் கேட்க, அதற்கு இவள் விழிக்க, பின்னால் பிரமோத் வர,

“அண்ணே வா வா! முன்னாடி வரிசைல வந்து உட்காரு. அசோக்கும் அவன் வீட்டம்மாவும் வரலியா? ஸ்ரீ பையனையும் காணோமே? மாப்பிள்ளை, யாரு வந்திருக்கா பாருங்க.” என வந்தவர்களை உபசரித்த இவளின் கேசவன் தாத்தா ஆபத்பாந்தவராய் தெரிந்தார்.

(கேசவன், தன் அண்ணன் சங்கரனை உபசரித்ததைக் கண்டுதான் வயிறெரிந்தான் பிரமோத்.)

அப்படியே நழுவி ஓடி வந்துவிட்டவளுக்கு அந்த தாத்தாவை பிரமோத் பொறாமையுடன் பார்த்ததாகப்பட்டது. அதன்பின் அவள் விஜியை அழைக்கவும் மறந்துபோனாள்.

‘அந்த தாத்தாவும் பிரமோத்தும் ஒரே குடும்பம் போலவே!’

‘என்னாச்சு? இவனெங்கே எழுந்து செல்கிறான்?’

சிறிது நேரம் கல்யாண வீட்டுக்காரியாய் வேலைகள் இழுத்துக்கொண்டது. களைப்பு மேலிட ஓய்வறைக்கு செல்வதற்காக மாடியேறி வந்தவள் மீண்டும் அவனைக் காண நேர்ந்தது.

‘அட சித்தாரா! ஆமாம் இவள் லலிதா சித்தியின் பெண்ணல்லவா? பிரமோத்தும் நம் சொந்தமென்றால் அவளுக்கு என்ன முறையில் வருவான்?’

‘ஹய்யோ! காதலர்கள் தனியாக சந்திக்கிறார்களே… விஜி… எங்கேடீ போன? சரி இன்னிக்கு லைவ் ஷோ’வை நான் ஃபர்ஸ்ட் பார்த்துடறேன். அப்புறம் உன்கிட்ட வந்து அள்ளி விடுவேனாம்.’ எனக் குதூகலமானவள், மாடியில் அவர்கள் பேசிக்கொண்டதைக் கேட்க நேர்ந்தது.

அவன் கல்யாணப் பெண்ணின் தங்கை என்று குறிப்பிட்ட போது, இந்த இதயம் ஏன்தான் அத்தனை சப்தம் போட்டதோ! பின், பிரமோத் சித்தாராவின் முகமருகே குனிந்த போது, நெஞ்சுக்குள் தடக்கென ஏதோ ஓர் திடப்பொருள் வழுவியதைப் போலிருந்ததில், திரும்பி கீழே ஓடி வந்துவிட்டாள்.

தன் கேள்வியின் பதிலுக்காய்க் காத்திருக்கும் அப்பாவிடம் சொன்னாள். “அவர் நம்ம தாத்தாவோட (கேசவன்) அண்ணன் போல… நீங்க கூட அவர்கிட்ட பேசினீங்களேப்பா.”

“உங்க தாத்தாவுக்கு ஊர்ப்பட்ட அண்ணன்மார் இருக்காங்களே நிவர்த்தி?”

பிரமோத் என்ன முறை உறவாக வேண்டும் என்று இவளுக்குத் தெரிந்தே ஆக வேண்டும். அவன் ‘கதிரவன் மாமா’ என்று சொன்னானே… அது உண்மையா? இல்லை சித்தாராவிற்காக சும்மா சொன்னானா?

விஜி அன்று ஒருநாள் ‘சங்கரன் ஐயா பேரன்’ என்று குறிப்பிட்டதை நினைவு கூர்ந்து தனக்கு சாதகமாக மாற்றிச் சொன்னாள். “ஆ… அவரை நம்ம தாத்தா சங்கரண்ணன் அப்டின்னு சொன்ன மாதிரி ஞாபகம்…”

“ஓ சங்கரன் மாமாவா? அவர் உங்க தாத்தாவோட நாலு விட்ட…” என்று ஆரம்பித்து நீ…ளமாக உறவுமுறையை விளக்க, மானசீகமாக தன் முகத்தின் முன் சுட்டுவிரல் நீட்டி, ‘உனக்கிது தேவையா? அவன் யாரா இருந்தா தான் என்ன?’ என்று திட்டிக்கொண்டாள்.

கேசவன் தாத்தாவின் அண்ணன் என்றால் இவளுக்கு கேசவன் எப்படியோ அப்படித்தான் சங்கரனும்! ஆனால் பிரமோத்? அவன் அவரின் மகன் வயிற்றுப் பேரனா? மகள் வயிற்றுப் பேரனா? என்று தெரிந்தாலல்லவா அவன் சித்தாராவிற்கு என்ன முறை என்று தெரியும்?

சித்தாராவிற்கு மட்டும்தானா?

**~**~**~**~**~**

சிற்றுந்தின் ஜன்னலோர இருக்கைகள்!

நிவியும் விஜியுமா? என்று பார்த்தால், பார்ப்பவர்களுக்கு ஆச்சரியமளிக்க அங்கே அமர்ந்திருக்கிறார்கள் பிரமோத்தும் சித்தாராவும்!

“ப்ளீஸ்ங்க எல்லாரும் பார்க்கறாங்க. எழுந்து போங்க.” – வெட்கமும் பயமும் தயக்கமும் சிணுங்கலுமாய் சித்தாரா.

“ஹேய் என்னவோ இன்னிக்குதான் எல்லாரும் புதுசா பார்க்கற மாதிரி இவ்ளோ சங்கடப்படற?” எனக் கேட்டவன், “ஏய் போங்கடா எல்லாரும் அங்கிட்டு!” என அவனுக்கு கைதட்டும் (சிங்கியடிக்கும்?) கூட்டத்தைச் சிரித்துக்கொண்டே அதட்டினான்.

அதற்கும் சிணுங்கினாள் சித்தாரா.

“சரி, நம்பர் கொடு போயிடறேன்.”

சரியாக அப்போது படிக்கட்டில் ஏறி உள்ளே வந்தனர் நம் தோழிகள். இருவருமே அவன் சொன்னதைக் கேட்டு அப்படியே நின்று விட, “அச்சோ… அதை இப்போ தான் கேட்கணுமா?” என்றாள் சித்தாரா.

“அன்னிக்கே கேட்டேன். நீதான் தராம ஓடிட்ட!”

அவள் மீண்டும் சிணுங்கியபடி தன் அலைப்பேசியை எடுத்து அவன் கையில் கொடுத்தாள்.

கூட்டம் மீண்டும் ஆரவாரம் செய்ய, “புது நம்பர், புது காதல். கலக்குறே பிரமோத்!” என்றான் ஒருவன்.

பிரமோத் இடக்கையை உயர்த்தி பின்பக்கமாய்க் காலரை உயர்த்திவிட, நிவர்த்திகா கீழே இறங்கிவிடலாமா என நினைத்த விநாடி, “எக்ஸ்கியூஸ் மீ! ஒரு ஃபோட்டோ… ப்ளீஸ்…” என்றான்.

விஜியின் பின்னால் வலப்பக்கம் அவளை ஒட்டினாற் போல் நின்றிருந்த நிவர்த்திகா, லேசாக அவன்புறம் விழி திருப்ப அலைப்பேசியை அவன்‌ முன்னால் நின்றிருந்த தோழிகளிடம் நீட்டிக் கொண்டிருந்தான் பிரமோத்.

அவர்கள் இருவரையும் படம் பிடிக்க வேண்டுமாம்!

அதே நேரம் நடத்துனர் மாணிக்கம் விசில் கொடுக்க, ஜோடியை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த தலைகள் அனைத்தும் அவரவர் இடத்தில் செட்டில் ஆனார்கள். நிவர்த்திகாவும் அவனுக்கு முன்னால் இருந்த இருக்கையில் கண்சிமிட்டும் நேரத்தில் அமர்ந்துவிட்டாள்.

அவளை, ‘துரோகி’ எனக் கண்களால் சாடிய விஜி, குலுங்கிய பேருந்தில் ஜோடியைப் புகைப்படம் எடுத்து தன் திறமையைக் காட்ட,

வாயெல்லாம் பல்லாக, “தாங்க்ஸுங்க.” என்றவன், “உனக்கு அப்புறமா அனுப்பிவிடறேன் சித்து.” என்றபடி இருக்கையில் இருந்து எழுந்துகொண்டான்.

அப்போது அவன் அலைபேசி அழைக்க, எழுந்திருந்தவன் விஜிக்கு வழிவிட்டு நகர்ந்து நின்ற இடம் நிவர்த்திகாவின் வலதுபக்கம், அவள் துப்பட்டாவை உரசியபடி! இவள் விழி நகர்த்தினால் அவன் கால்சராயில் பிணைத்திருந்த லெதர் லேபிளில் ‘FLIKKER JEANS’ என்று எழுதியிருந்ததை வாசித்திருக்க முடியும்.

“இருய்யா சங்கர் வந்துடறேன். அய்யயய்ய… அஞ்சே நிமிஷத்துல அங்கே இருப்பேன், போதுமா?” என்று அலைப்பேசியில் உரைத்துவிட்டு நகர,

அவனின் பெர்ஃப்யூம் வாசனை முழுமையாக இவள் சுவாசத்தை நிரப்ப முயன்றது. கையிலிருந்த கைக்குட்டையால் மூக்கையும் வாயையும் சேர்த்து மூடிக்கொண்டு அந்த நறுமணத்தை நிராகரித்தாள்.

சிற்றுந்து கிளம்பி இரண்டு நிமிடங்கள் ஆகிப் போனது. அப்போது முன்னால் நின்று பயணச்சீட்டை எச்சில் தொட்டு கிழித்துக் கொண்டிருந்த மாணிக்கத்தின் அருகே இரண்டே எட்டில் போனவன், சட்டென்று அவர் விரலிடுக்கில் இருந்த விசிலைப் பிடுங்கி ஊத, சர்ரென்று சக்கரம் தேய சிற்றுந்தை நிறுத்தினார் ஓட்டுநர். இறங்கி அலைப்பேசியில் பேசியவாறு நடந்து சென்றான் பிரமோத்.

“கண்ட கண்ட இடத்துலயும் விசிலடிச்சிக்கிட்டு கிடக்கற? ஆக்ஸிடென்ட் ஆகியிருந்தா உங்கப்பனா வந்து காப்பாத்துவான்?” – ஓட்டுநரின் கோபம்.

“கண்டக்டர் எங்கே விசில் கொடுக்கறானோ அங்கே நிறுத்த வேண்டியது உன்‌ கடமை. எவன் விசிலடிக்கறான்னு பார்க்காம நிறுத்தினது உன் தப்பு. இந்த லட்சணத்துல நீ எங்கப்பனை எல்லாம் பேச்சுல இழுப்பியோ?” – நடத்துனரின் பெருங்கோபம்.

“அப்பனை என்ன? உன் பரம்பரையையே இழுப்பேன். பின்னாடி திரும்பி உம்மொகரக்கட்டையைப் பார்த்துட்டு இருந்தா பஸ்ல இருக்க இத்தனை உசுரையும் காப்பாத்த உன் தாத்தனா வருவான்?”

“வேணாம் வரதா… நானும் ரெண்டு வாரமா பார்க்கறேன்.‌ ஓவரா துள்ளிக்கிட்டு இருக்கே நீ… நான் ஒரு குவார்ட்டரை உள்ளே இறக்கிட்டு பேச ஆரம்பிச்சேன்னு வையி… உன் பரம்பரைக்கு பேரு மிஞ்சாது.”

இருவரும் சண்டையிட்டுக் கொள்வதைப் பார்த்தால் ஏற்கனவே இருவருக்குமிடையே பூசல்கள் இருப்பதைப் போல் தெரிந்தது. பயணிகளில் சிலர் இருவருக்கும் சமரசம் செய்யும் முயற்சியில் இறங்கினர்.

உள்ளே நடக்கும் அமளிதுமளியைச் செவிமடுக்காமல், தூரமாய்ப் போய் டியூக்கை உயிர்ப்பிக்கும் பிரமோத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் நிவர்த்திகா.

இதயமே!
வெளியே கேட்கும் சந்தடியை நிசப்தம் ஆக்குகிறாயே…
சற்று அமைதியாக இரேன்!

தூறல் தூறும் 🌧️🌧️🌧️

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
5
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்