Loading

அத்தியாயம் 30

அதிகாலையில் தன்னருகே கலைந்து கிடக்கும் மனைவியைக் காணும், எந்தக் கணவனும் அடையும் பேருவகை பிரமோத்தையும் ஆட்கொண்டது. அவள் முகத்தில் நேற்றிரவு இவன் வரைந்த காதலின் மிச்சசொச்சம்.

இதழில் உறைந்த புன்னகையுடன், தன்னைச் சுத்தப்படுத்திக்கொண்டு வந்தவன் அவள் நெற்றியில் இதமாய் இதழ் பதித்தான். “ஹோய்!”

“ம்ம்…”

“விடியப் போகுது.”

“இப்போதான் தூங்கவே ஆரம்பிச்சேன்.” என்று அவள் புரண்டு படுக்க, இவனும் அவளோடு இணைந்து இழைந்தான்.

“ம்ஹ்ம்… பிரமோத்…” அவள் சிணுங்கலில் சிட்டெறும்பின் சுறுசுறுப்பு அவனிடம்!

கார்த்திகை மாதத்தின் கார் வண்ண வானம் தம்பதியரின் நிர்பந்தத்திற்காய் சற்றுநேரம் பொறுத்திருந்தது. பின்னர் கார் மேகத்தைக் களைந்து, நீல ஆடை உடுத்த ஆயத்தமாகும்போது, ஓய்ந்த விழிகளால் தன்னைச் செல்லக் கோபத்துடன் பார்த்த மணவாட்டியைக் கண்டு மந்திரப்‌ புன்னகை பூத்தான் பிரமோத்.

அவள் எழுந்து குளித்துவிட்டு வரும் வரை காத்திருந்தவன், இளமஞ்சளில் இளநீல பூக்கள் தெளித்த ஷிஃபான் மேக்ஸியில் மீண்டும் தன்னிலை மறக்கச் செய்தவளைக் கண்டு தலையை உலுக்கிக்கொண்டான். தலை துவட்டியவாறு நின்றிருந்தவளிடம், “நான் நாத்தங்கால் போறேன் நிதி. நீ இந்த சங்கரைக் கொஞ்சம் அடங்கி வீட்ல கிடக்கச் சொல்லு.” என்றான்.

தாத்தா தானே தினமும் நாற்றங்கால் பகுதியைப் பார்வையிடுவார்? கேள்வியாகப் பார்த்தாள்.

பதில் சொன்னான். “வெளியே மழைக்காத்து எப்டி அடிக்குது பாரு. பெரிசுக்கு இளமை ஊஞ்சலாடுதுன்னு நினைப்பு. தன்னை எம்ஜிஆர்’ஆ நினைச்சிக்கிட்டு இந்த காத்துல கையை வீசிக்கிட்டு நடந்துபோய், வீசிங்கை இழுத்து வச்சுப்பார்.”

“ஆமா, நேத்தே பிரியாக்கா தாத்தாவுக்கு ஏதோ டேப்லெட்ஸ் கொடுத்துட்டிருந்தாங்க. நீங்க போயிட்டு வாங்க. தாத்தாவை வரவிடாம நான் பார்த்துக்கறேன்.”

“தாங்க்ஸ்டி மை ஹாட் சாக்லேட் பொண்டாட்டி.” என இடை வளைத்து நெற்றி முட்டிச் சென்றான்.

இந்த தாத்தா எத்தனை முறை தன்‌முன்னேயே பிரமோத்தைத் தறுதலை என்று திட்டியிருக்கிறார்! இன்று போய் சொல்ல வேண்டும். ‘பாருங்க தாத்தா, என் புருஷன் எவ்ளோ சின்சியரா வேலைக்கு கிளம்புறார். இன்னொரு வாட்டி அவரைத் தறுதலைன்னு சொன்னீங்க… நான் மனுஷியா இருக்கமாட்டேன்.’

தாத்தா எதிரிலிருப்பதைப் போல் மானசீகமாக அவரிடம் பேசியவளுக்கு சிரிப்பு வந்தது. அதே புன்னகை முகத்தோடே சங்கரனின் முன் போய் நின்றாள். பெரியவர் வெளியே கிளம்புவதற்காகக் குடையை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.

“எங்கே கிளம்பிட்டீங்க தாத்தா?”

வெளியே புறப்படும்போது இப்படி கேட்பது கூடாது எனும் பழைமையில் ஊறிய சங்கரன் அவளை அதிருப்தியாய்ப் பார்க்க, அதையெல்லாம் சட்டை செய்யாமல் சட்டமாய் அவரின் கட்டிலில் அமர்ந்துகொண்டாள்.

“நாத்தங்கால் வரை போயிட்டு வர்றேன்மா.” என்றார் பொறுமையாக.

“உங்களுக்கு இளமை ஊஞ்சலாடுதுன்னு நினைப்பா தாத்தா? மழை வேற வர்ற மாதிரி இருக்குது. அடிக்கற கூதக் காத்துல பழைய பட ஹீரோ மாதிரி கையை வீசிக்கிட்டு நடந்துபோய் வீசிங்கை இழுத்து வச்சிக்கப் போறீங்களா?” பிரமோத்தின் வார்த்தைகளைக் கொண்டு அவனைப் போலவே பெரியவரிடம் பேச,

நிவர்த்திகா தன்னிடம் இப்படியெல்லாம் கேலியாய்ப் பேசும் பெண்ணில்லையே! பேரனைப் போலவே அவள் முகத்தை ஆராய்ந்தவருக்கு அவளின் பளிங்கு முகம் பளிச்சென்று அவளின் விளையாட்டைக் காட்டிக் கொடுத்தது.

இவரும் கேலியாகவே சொன்னார். “நான் போகலைன்னா உன் புருஷன் அந்தத் தறுதலைப் போய் பார்த்துடப் போறானா?

“நீங்க என்னவோ அவரைத் தறுதலைன்னு சொல்றீங்க. அவர் என்னன்னா காலைல தங்கராசு கடையில ஒரு ஷாம்பூ பாக்கெட் வாங்கித் தர சொன்னதுக்கு, ‘எங்க தாத்தாவுக்கு இந்தக் குளுந்த காத்து ஒத்துக்காது. நான் நாத்தங்கால் போகணும். நீ எப்டியோ போடி’ன்னு சொல்லிட்டு ஓடிட்டார்.” என்று சொல்லி கழுத்தை நொடித்துக்கொண்டாள்.

குற்றாலத் துண்டை தலைப்பாகையாக கட்டிக்கொண்டிருந்த சங்கரன், தலைப்பாகை நழுவியதையும் கவனியாமல் நிவர்த்திகாவின் அருகே வந்து அமர்ந்தார். “என்னம்மா சொல்ற? பிரமோத் அப்டியா சொன்னான்?”

“ஆமாங்கறேன்.”

அவளை நம்பாத பாவனையில், “அவன் ஒருநாளும் எனக்காக பார்க்கமாட்டேனே… நீ என்கிட்ட விளையாடுறியா தாயி?” எனக் கேட்க,

“சும்மா தறுதலை தறுதலைன்னு வைய (திட்டுதல்) மட்டும் தெரியுது. உண்மையைச் சொன்னா எங்கே நம்பறீங்க?” என பேச்சோடு பேச்சாக தன் மனத்தாங்கலையும் வெளிப்படுத்திவிட்டு எழுந்துபோனாள்.

இவள் இவளின் கணவனை என்ன வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேசலாம். அதுவே அடுத்தவர் அவனைப் பற்றி கீழாக ஒரு சொல் சொல்லிவிட்டால் ரோஷம் பொத்துக்கொண்டு வந்துவிடும். பாதிக்கப்படுவது இவளின் கௌரவமும் தானல்லவா? இது கணவன் மேல் காதலுள்ள ஒவ்வொரு சராசரி இந்திய பெண்ணுக்கும் உள்ள குணம்.

பேரனின் பொறுப்பிலும், பேத்தியின் பொறுமலிலும் சங்கரன் பெருமையாக மீசையை நீவிவிட்டுக் கொண்டார். “புருசனைச் சொன்னா கோவம் வருது…”

பிரமோத் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டான் என்பதில் பரம திருப்தி அடைந்தவர், துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு, தன் மூக்குக் கண்ணாடியைச் சரி செய்துவிட்டு, அலைப்பேசியை எடுத்து யூடியூப் பார்க்க ஆரம்பித்தார். இதுவும் பிரமோத்தைப் பார்த்து அவனுக்கு போட்டியாய் ஆரம்பித்த பழக்கமே!

சற்று நேரத்தில் அவர் அறையை எட்டிப் பார்த்த நிவர்த்திகா தனக்குள் சிரித்துக்கொண்டு, அவரை சாப்பிட அழைக்க, “என் சீமாட்டி எங்கே?” எனக் கேட்டபடி வந்தமர்ந்தார்.

மற்றவர்களும் தத்தம் வேலைக்கு புறப்பட ஆயத்தமாகி வந்திருந்தனர்.

“அம்முவுக்கு இன்னிக்கு லீவு தாத்தா. இன்னும் தூங்குறா.” என்றாள் பிரியா.

“உம் உம்! பிள்ள எழும்பினதும் என்கிட்ட கூட்டிட்டு வா! இந்த தென்கச்சி கோ.சுவாமிநாதன் சொன்ன கதையைச் சொல்லணும்.” என்றபடி மீண்டும் அலைப்பேசியை நாட, சரியாக உள்ளே நுழைந்தான் பிரமோத்.

தாத்தாவிடம் நாற்றங்கால் நிலவரத்தைச் சொல்லிவிட்டு, கீழிருந்த ஓய்வறை ஒன்றில் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு வந்தமர, நிவர்த்திகா அவனையே பார்த்திருந்தாள். அவனும் அவள் பார்வையைப் புரிந்துகொண்டு கண்மூடித் திறந்துவிட்டு சங்கரனை ஏறிட்டான். “சங்கர், நிதி வேலைக்கு போகணும்னு சொல்றா.” என்றவன், “பழைய இடத்துக்கே போக சொல்லவா’ப்பா?” என சரவணனிடம் கேட்டான்.

சட்டென குறுக்கே புகுந்தார் காஞ்சனா. “நானே சொல்லணும்னு நினைச்சேன். சரி இப்போதானே கல்யாணம் ஆச்சு. கொஞ்சநாள் போகட்டும்னு பேசாம இருந்தேன். நீ ஏன் வேற இடத்துக்கு போகணும் நிவர்த்தி? என் கூட நம்ம ஆஃபீஸுக்கே வாயேன்?”

இதனை யாரும் எதிர்பாராததால் அனைவரும் நிவர்த்திகா என்ன சொல்லப் போகிறாளென அவள் முகம் பார்த்தனர். அவள் தன் கணவனைப் பார்த்தாள். அவன் புருவம் உயர்த்தினான்.

“நான் சிஏ பண்ணட்டுமா அத்தை? ஆல்ரெடி வேலைக்கு போன சமயத்துல இன்டர் பாஸ் பண்ணிருக்கேன்.”

“ஃபர்ஸ்ட் அட்டெம்ப்ட்டா? மாமா (கதிரவன்) சொல்லவே இல்ல?” பிரமோத் ஆச்சரிய மிகுதியில் கேட்க,

“ஆமா, நீங்க மட்டும்தான் அப்பாடக்கரா என்ன?” என அமர்த்தலாய்க் கேட்டாள்.

“யூ ஸ்வீட் சில்க்கி.”

“அது என்ன கீ?” -சங்கரன்.

“சில்க்கி. அவ என்னோட பட்டுப்பூச்சி சங்கர்.”

“ஓஹோ! அப்போ நீ யாரு? அவளோட மரவட்டையா?”

அனைவரும் நகைக்க, “தாத்தா…” என்ற செல்லச் சிணுங்கல் பேத்தியிடம்.

சரவணன், “உனக்கு விருப்பமானதைச் செய்ம்மா. ஆர்ட்டிகல்ஷிப்’க்கு நம்ம ஆடிட்டர் கிட்ட பேசறேன். எலிஜிபிலிடி எப்போ வருதுன்னு தம்பிகிட்ட சொல்லு. அதுவரை ஆஃபீஸ் வந்து மேனேஜ்மென்ட்டைத் தெரிஞ்சுக்கோ!” என்றவர் சாப்பிட்டு முடித்து எழுந்துகொள்ள,

நிவர்த்திகா பொறுப்பெடுத்துக் கொள்வாள் என்று தெரிந்ததில் காஞ்சனா முகமெல்லாம் புன்னகையுடன் அவள் கன்னத்தைத் தட்டிவிட்டு சென்றார்.

“எப்டியோ கம்பெனிக்கு அடுத்த ஆளை ரெடி பண்ணியாச்சு.” என்று வாய்விட்டே சொல்லிச் சென்றார் அசோகன்.

“நீ சிஏ முடிச்சா எனக்கும் நீதான் ஆடிட்டிங் பண்ணனும் நிவர்த்தி.” என்ற ஸ்ரீதரன், மகளை எழுப்ப மாடிக்கு போனான்.

பிரியாவும் அரவிந்தனும் அவளின் புதுப் பயணத்திற்கு வாழ்த்துத் தெரிவித்து நகர்ந்தனர்.

சாப்பிட்டு முடித்து எழுந்த பிரமோத் மனைவியிடம் கண்கள் சிமிட்டி, தன் மகிழ்ச்சியைத் தெரிவிக்க, அமலா நிவர்த்திகாவின் முதுகில் ஒரு அடியை வைத்துவிட்டுச் சொன்னார். “எந்த வேலைக்கு போனாலும் சரி! பிள்ளையைப் பெத்து என் கையில தந்துடணும் சொல்லிட்டேன். தள்ளிப் போடற வேலையெல்லாம் வச்சிக்கக் கூடாது.”

வழக்கம்போல் நிவர்த்திகா சங்கடமாக புன்னகைக்க, மனைவியைக் காக்கும் ரட்சகனானான் பிரமோத். “அதுக்கு நான் கியாரண்டி சித்திம்மா.”

பார்த்திருந்த சங்கரன் மும்முரமாக அலைப்பேசியில் எதையோ தேடினார். பிரமோத் கைக் கழுவிக்கொண்டு வந்ததும், வேறெங்கோ பார்த்துக்கொண்டு அலைப்பேசியில் பாடலை ஒலிக்கவிட்டார். ‘மன்மத லீலையை வென்றோர் உண்டோ…’

நிவர்த்திகா திகைத்து முழிக்க, அமலா, “இந்த மாமாவுக்கு கொஞ்சங்கூட விவஸ்தையே கிடையாது.” என சன்னக்குரலில் சொல்லி, தலையிலடித்துவிட்டு நகர, பிரமோத் இரு கைகளையும் தேய்த்துவிட்டுக் கொண்டு தாத்தாவின் எதிரில் அமர்ந்தான்.

அவருக்காகவே எடுத்து வைத்ததைப் போல் பாடலின் ப்ளே பட்டனைத் தட்ட, அது, ‘ஆண்டவன் படைச்சான்
என்கிட்ட கொடுத்தான்
அனுபவி ராஜான்னு
அனுப்பி வச்சான் நீயும்
அனுபவி ராஜான்னு
அனுப்பி வச்சான்…’ என்று பாடியது.

பேயைக் கண்டதைப் போல் இருவரின் அலப்பறைகளையும் பார்த்திருந்த நிவர்த்திகா, இருவரின் அலைப்பேசிகளையும் பறித்துக்கொண்டு, “இன்னிக்கு இந்த ரெண்டையும் வாட்டர் டேங்க்ல போட்டு எடுக்கல… என் பேர் நிவர்த்தி இல்ல.” என்றவாறு மாடிக்கு ஓடிப்போனாள்.

பிரமோத், “ஏய்! அது ஐஃபோன்’டீ…” என்று எழ,

“விடுடா! தண்ணிக்குள்ள விழுந்த ப்போனை, அரிசிக்குள்ள வச்சு எடுத்தா சரியாப் போகுமாம். ரீல்ஸ்ல பார்த்தேன்.” என அசட்டையாக உரைத்தார் சங்கரன்.

“ஏதே? அரிசியா?

“உம் உம்!”

“ஷ்ஷ்! கிழம் யூடியூபைப் பார்த்து வீணாப் போகுது.”

“போயிட்டு போறேன். நீ அரிசியைப் பத்தி கவலைப்படாம என் தங்கமீனு மாதிரி ஒரு அரசியைப் பெத்துக் குடு, ஐயாவு.” அமலா சொன்னதைப் போல் இந்தக் காலப் பெண்கள் படிப்புக்கு, வேலைக்கு இடைஞ்சல் என்று குழந்தைப் பெற்றுக் கொள்வதைப் பற்றி சிந்திப்பதில்லை. நிவர்த்திகாவும் அதுபோல் இருந்துவிடுவாளோ என்ற அச்சத்தால் பேரனிடம் கேட்டு உறுதிசெய்து கொள்ள விழைந்தார் சங்கரன்.

“அவ இன்டர் ஃபர்ஸ்ட் அட்டெம்ப்ட்’ல பாஸ் பண்ணின மாதிரி, நானும் பாஸ் பண்ணிடுவேன் சங்கர். யூ டோண்ட் வொர்ரி, மை ஏன்ஷியண்ட் கிங்! ” என்று தாத்தாவின் சுருங்கிய கன்னத்தைப் பிடித்து ஆட்ட, அவன் வார்த்தைகளில் நம்பிக்கை வரப் பெற்றவருக்கு மனம் நிறைந்து போனது.

“ஹூம் ஹூம்!” சந்தோஷமாக தலையசைத்தார்.

“பட் வன் திங்க் சங்கர்! இப்போ ஐயாவு ஐயாவுன்னு தாஜா பண்ணிட்டு, அப்புறமா என் மகளையும் கூட்டு சேர்த்துக்கிட்டு எனக்கு அகெய்ன்ஸ்ட்டா ப்ளான் போட ஆரம்பிச்சீர்… நான் மனுஷனா இருக்கமாட்டேன்!” என்று விரல் நீட்டி எச்சரித்துவிட்டு, அதற்கு அவரின் கேலிச் சிரிப்பைக் கண்டுகொள்ளாது நிவர்த்திகாவைத் தேடிப் போனான்.

அறையில் தேடிவிட்டு அங்கே அவளைக் காணாமல், மொட்டை மாடிக்கு போக, அங்கே வானம் நிதானமாக பொழியும் தீர்த்தத்தைக் கண்ணுற்று கிறங்கிப் போய் நின்றிருந்தாள் அவன் மனைவி.

“ஹோய்!”

தன் பிரத்யேக மென்‌முறுவலுடன் சொன்னாள். “ரொம்ப சந்தோஷமா இருக்குது பிரமோத். லவ் யூ ஸோ மச்.”

“லவ் யூ ட்டூ’டி சக்கரக்கட்டி!”

“என்னால இன்னுமே நம்பவே முடியல.”

“எதை?”

“நீங்க மினிபஸ் கண்டக்டர் கூட சண்டைப் போட்டதை, இப்போ என்னைச் சக்கரக்கட்டின்னு சொல்றதை!”

“ஹாஹா… நீதான் என்னை ரொம்ப மாத்திட்டே! ஐ மிஸ் தோஸ் டேஸ்.” எனவும்,

அவள் முகம் சுருங்கியது. “அப்போ சித்துவை?”

“ம்ம் அஃப்கோர்ஸ்! அவளுக்கு பாட்டுப் போடற அந்த நாட்களை எவ்ளோ மிஸ் பண்றேன் தெரியுமா?” என்றவன் பாட வேறு செய்தான். “அவள் வருவாளா… அவள் வருவாளா…”

கணவனின் விளையாட்டைக் கண்டுகொண்டவள், அவனை வெடுக்கென இழுத்து மழைக்குள் தள்ளிவிட்டாள். அலட்டிக்கொள்ளாமல் சிரித்தபடி அவளையும் தன்னோடு சேர்த்துக்கொண்டான் தலைவன்.

கார்த்திகை வானம் தூவிய தூறலில் ஏகாந்தமாய் நனைந்தனர் நிவர்த்திகா – பிரமோத்.

             🌧️சுபம்🌧️

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
75
+1
9
+1
2

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  9 Comments

  1. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதல் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  2. Arul mozhi kathali

   பிரமோத் ❤️ நிவர்த்திகா…‌அழகான ஜோடி…‌எதிரெதிர் துருவங்கள் தானே சேரும்😂😂விளையாட்டுத்தனமும் கேடித்தனமும் கைத்தேரந்த கலையாய் கொண்ட கதாநாயகனும் அமைதியும் அடக்கமும் கொண்ட கதாநாயகி ஜோடி சேர்த்த விதம் அருமை…‌🥰😍❤️
   அழகான கதைக்களம்..‌ நல்லதொரு கிராமத்து கல்யாணக்காதல்… ஆனாலும் நிவர்த்தி பாவம் தான்😂
   சித்து பின்னாடி இருக்கிறப்போலாம் பாக்காம விட்டுட்டு பொண்டாட்டி ஆனப்புறம் முக்த்தை காட்டுனு சுத்துற புருஷன்🤭 அதுக்கூட நல்லாத்தான் இருந்திச்சு 😂😂 அன்பின் பிணைப்பில் குடும்பமும் காதலோடு துணையும் அமைந்தாலே பேரின்பமே 🥰😍 வாழ்த்துக்கள் பாணபத்திர காதலன் 643ஏஏஏஏ

  3. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதல் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  4. கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான குடும்பக் கதை. நகைச்சுவையும், அழுத்தமும் கொண்ட சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.

  5. கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான குடும்பக் கதை. நகைச்சுவையும், அழுத்தமும் கொண்ட சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.