Loading

அத்தியாயம் 29

எந்தத் துறையிலும் தன் கணவன் திறமைக்காரன் என்பதை அறிந்திருந்த நிவர்த்திகா, அவனின் ரசனைப் பண்புகளை நேற்றிரவுதான் தெரிந்து கொண்டிருந்தாள். அதை நினைத்து நினைத்து அந்த புன்னகை முகத்தாளின் இதழ்கள், விரிந்தது விரிந்தபடியே இருந்தது. ஜன்னலினூடே தெரிந்த அடிவானச் சிவப்பைக் கண்டவாறு அவன் கைகளுக்குள் சுருண்டுகிடந்தாள்.

அலைப்பேசி அழைக்க, மெதுவாக கணவனின் துயில் கலைந்து விடாதவாறு அவன் கைகளில் இருந்து நகர்ந்து, எட்டி எடுக்க, அமலாதான் அழைத்திருந்தார். “அத்தை?”

“எழும்பிட்டியா? இப்போ கிளம்பினாதான் முகூர்த்தத்துக்கு முன்னாடி போக சரியா இருக்கும் நிவர்த்தி.”

“இதோ கிளம்பிட்டே இருக்கேன்.”

“பிரமோத் எழுந்தாச்சா? அவனையும் எழுப்பி விட்டுடு.”

“ம்ம்.”

முகூர்த்தம் என்றதும் விஜியின் ஞாபகம் வர, அரக்க பறக்க எழுந்து குளித்து வந்தாள்.

“பிரமோத்! டைமாச்சு.” என்று எழுப்பியவளை,

அவன் அரைக்கண் திறந்து, “ம்ம்… மை ஹாட் ஸ்டஃப் டால்…” என்றபடி தன்னிடம் இழுத்துக்கொள்ள முயற்சிக்க,

அவன் கைகளுக்குள் சிக்காமல் தள்ளி நின்றுகொண்டு, “சீக்கிரம் போனா விஜிக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுவேன். ப்ளீஸ் பிரமோத்…” எனவும்,

“விஜி ஒழிக!” என்று எழுந்து புறப்பட சென்றான்.

குளித்துவிட்டு வர, அவன் வார்ட்ரோப்பில் அவனுக்கான உடையைத் தேர்ந்தெடுப்பதில் முனைந்திருந்த மனைவியை ரசனையுடன் பார்த்தவன், தானே சென்று ஒரு இள ஊதாநிற உடுப்பை எடுத்தான்.

“இந்த டிரெஸ்ஸா போடப் போறீங்க?” என திகைத்தவள், அவளின் அக்கா ஆர்த்தியின் நிச்சயத்திற்காக எடுத்திருந்த இளநீல காப்பர் சில்க் சேலையை அணிந்திருந்தாள்.

“ம்ம்! நீயும் ப்ளூ; நானும் ப்ளூ! பார்ட்னர்ஸ் இன் க்ரைம் அண்ட் ஃபாஷன்.” என்றபடி அவள் காதின் கீழ் முத்தமிட்டவன், “ம்ஹ்ஹ்ம்… என்ன வாசனை இது…” எனக் கிறங்க,

இரண்டு நிமிடங்கள் நினைவு தப்பியவள், சுதாரித்து சட்டென அவனைத் தள்ளிவிட்டு, “டைமாகுதுங்க…” என்றாள் அழும்‌ பாவனையில்!

“பாவம் பார்த்து விடறேன்!” என எச்சரிக்கை போல் சொன்னவன், எடுத்த உடையையே உடுத்த எத்தனிக்க, அதனை வெடுக்கென பிடுங்கிக்கொண்டாள் அவன் துணைவி.

“ஜஸ்ட்டு மிஸ்ஸு…” என்றபடி இடுப்புத் துண்டை இறுக்கிப் பிடித்தவன், “ஏய்! இந்த டிரெஸ்’க்கு என்னடி?” எனக் கேட்டான். அவள் விழிகளில் நவரசங்களைப் பார்த்திருக்கும் பிரமோத், முதன்முதலாக அதில் திருட்டுத்தனம் பிரதிபலிக்கக் காண, விழிகள் சுருக்கி, “இந்த டிரெஸுக்கும் எதாவது ஃப்ளாஷ்பேக் வச்சிருக்கியா?” எனக் கேட்க,

“ஆ…மா…” என சின்னக்குரலில் ராகம் போட்டாள் அவள்.

வேகமாக ஹேங்கரில் தொங்கிய ஷார்ட்ஸை அணிந்துகொண்டவன், வசதியாக நாற்காலியில் அமர்ந்துகொண்டு கேட்டான். “ம்ம்! சொல்லு கேட்போம்.”

“அய்யோ பிரமோத்! டைமாகுது. சீக்கிரம்!” என்றுவிட்டு மீண்டும் அவனின் வார்ட்ரோப்’ஐ குடைய,

“நீ சொல்லாம நான் கிளம்பறதா இல்ல! அண்ட் வந்தா இந்த ட்ரெஸ்ல தான் வருவேன்.” எனப் பிடிவாதம் பிடித்தான்.

வேறுவழியில்லாமல் அவசர அவசரமாக, தான் அணிந்திருப்பது தன் அக்காவின் நிச்சய விழாவிற்கு எடுத்த புடவை என்றும், அன்று அவனும் இதே இளநீல வண்ண சட்டை அணிந்து வந்ததையும், தான் விஜியிடம் அவனைப் பற்றிய கதை சொல்லும் போது உடைகள் குறித்து பேச்செழுந்ததையும் கோர்வையாக சொல்லி முடித்தவள், “நீங்க இப்போ இதைப் போட்டுட்டு வந்தா விஜி என்னை ஓட்டி தள்ளுவா! வேற போடுங்க பிரமோத்.” என சிணுங்கினாள்.

“ரெண்டு பேருக்கும் வேற வேலையே இருக்காதாடீ? ஒரு மனுஷன் போடற சட்டை முதற்கொண்டு பார்த்தா கதையளக்கறது?”

“அதெல்லாம் அப்டித்தான். இப்போ வேற போடுங்க.”

“அப்போ நீயும் வேற உடுத்து.” என அவள் சேலையில் கை வைக்க,

“அய்யோ! நான் அம்லு அத்தை ரூம்ல போய் கிளம்பறேன்பா.” என்று அணிய வேண்டி வைத்திருந்த நகைகளை எடுத்துக்கொண்டு வெளியே ஓடிப்போனாள்.

புன்னகைத்தவனின் தேகத்தை இளநீல வண்ண சட்டையே ஆக்ரமித்தது.

************

விஜியின் திருமணம் நன்முறையில் நடந்தேறியது. மாப்பிள்ளை ஜீவாவின் நண்பர்கள் மணமக்களிடம் செய்த கலாட்டாவில் மேடையில் ஒரு ஓரமாக நின்றிருந்த மனைவியைக் கண்களில் சிரிப்புடன் பார்த்திருந்தான் பிரமோத்.

பின் எழுந்து அருகிருந்த காஞ்சனாவிடம், “ம்மா! கிஃப்ட் கொடுத்துட்டு வர்றேன்.” எனவும்,

“சரி போ. நிவர்த்தி கூட சேர்ந்து கொடு.” என்ற அன்னையிடம் தலையசைத்து நகர்ந்தவன் நிவர்த்திகாவின் அருகே போய், ‘வா’ என்பதாக கண்ஜாடைக் காட்ட,

“அதுக்குள்ளேயா? இப்போதான் கல்யாணமே முடிஞ்சது…” என ஆரம்பித்தவளிடம்,

“எனக்கு நேத்துதான் ஃபர்ஸ்ட் நைட்டே முடிஞ்சது…” என அவளைப் போலவே ராகமாக சொன்னவனின் புஜத்தைக் கிள்ளி எச்சரிக்கும் பார்வை பார்த்தாள்.

அவளின் முகபாவம் கண்டு சிரிப்பை அடக்க முடியாது நின்றிருந்த பிரமோத், “அப்புறமா கூட்டத்தோட கூட்டமா கொடுக்கறதுக்கு இப்போவே கொடுத்துடலாம், வா!” என அழைத்துப் போனான். ஜீவாவிடம் வாழ்த்துகள் சொன்னான்.

புகைப்படம் எடுத்தபின், கீழிறங்கும்போது விஜியிடம், “தேங்க்ஸ்ங்க.” எனவும், அவள் மட்டுமல்லாது ஜீவா, நிவர்த்திகாவும் புரியாது பார்த்தார்கள்.

“எங்க கல்யாணத்துல நீங்க யாருக்கோ சாம்பிராணி போட்டு விட்டீங்களாம். அது இன்னுமே குபுகுபுன்னு புகைஞ்சிக்கிட்டு இருக்குது. தேங்க்ஸ் அ பன்ச்!”

புரிந்துவிட்டதென சிரித்தாள் விஜி. “ஓ அதுவா? ஹஹ…”

“சும்மா சொல்லல. பேசாம நீங்க கதை எழுத டிரைப் பண்ணலாம். செம ட்விஸ்ட்டு!” எனவும்,

களுக்கென சிரித்தவளைக் கேட்டாள் நிவர்த்திகா. “அதென்னடி எனக்குத் தெரியாத ட்விஸ்ட்டு?

“எப்போவும் நீதான் மர்மமா இருக்கணுமா? ஒரு சேன்ஞ்சுக்கு இன்னைக்கு நான் இருக்கேனே?”

பல்லைக் கடித்து, “கல்யாணப் பொண்ணாச்சேன்னு உன்னை சும்மா விடறேன்.” என முறைத்தவள், வேறு உறவினர் வரவும் நகர வேண்டியிருந்தது. ஆனாலும் பிரமோத்தை நச்சரித்து விஷயத்தைத் தெரிந்துகொண்டாள்.

“என்னாதுஊஊ!? மினிபஸ்ல நீங்க என்னைப் பார்க்க வந்தீங்களா?”

“ஆமாவாம். நீ கூட நான் நிற்கறது நல்லா தெரியற மாதிரி இடத்துலதான் உட்காருவியாம்.” என மனைவியைச் சீண்ட,

“அதென்னவோ நிஜம்தான்.” என அங்கிருந்த பூக்களைப் பார்வையிட்டபடி சன்னக்குரலில் சொன்னாள் அவள்.

இருவரின் நெருக்கத்தையும் பார்த்தவாறு கடந்து சென்ற ஒரு பெண்மணி, “செல்போனு வந்தாலும் வந்துச்சு… புதுசு புதுசா காதல் பண்ணி, அப்பனாத்தாளை ஏமாத்தி கல்யாணம் பண்ணிக்குதுக…” என எகத்தாளமாக சொல்லி செல்ல, இருவரும் பரஸ்பரம் பார்வையைப் பரிமாறி சிரித்துக்கொண்டனர்.

மேடையைப் பார்த்து, “ஐ லவ் யூ விஜி!” என்ற நிவர்த்திகா, கணவனிடம், “இதை உங்களுக்கு யார் சொன்னா?” எனக் கேட்க,

“பிஸ்மி கடைல பேசிட்டிருந்தானுங்க. என்னைப் பார்த்து ஒருத்தன் கேட்டான். ஏன் பிரமோத் எங்களையெல்லாம் இளிச்சவாயன் ஆக்கிட்ட? அப்டின்னு! அப்புறம்தான் விசாரிச்சு தெரிஞ்சுக்கிட்டேன்.” என சொன்னவனின் அலைப்பேசி அழைக்க, “அப்பா!” என்றுவிட்டு அழைப்பை ஏற்றான்.

அந்தப் பக்கம் சொல்லப்பட்ட விடயம் என்னவோ தெரியவில்லை. “ஓகேப்பா. வர்றேன்.” என்றவன், இவளிடம் சொன்னான். “ஏதோ அவசர வேலை போல! நான் கிளம்பறேன். நீ உன் ஃப்ரெண்டோட இருக்கணும்னு சொன்ன இல்ல?”

“மாமாகிட்ட சொல்லிட்டு நீங்களும் இருங்களேன் பிரமோத்?”

“முக்கியமான விஷயம் எதுவும் இல்லைன்னா அப்பா கூப்பிடமாட்டார்டா. நான் போயிட்டு டிரைவரை அனுப்பறேன். சித்தி உனக்கு துணைக்கு இருப்பாங்க.”

“அப்போ அத்தை?”

“அப்பா அம்மாவையும் கூட்டிட்டு வர சொன்னார். முடிஞ்சா நானே உன்னைக் கூப்பிட வர்றேன்.” என்றவன் கண்களில் பத்திரத்தையும் கைகளில் அழுத்தத்தையும் தந்துவிட்டுப் போனான். தாமதமான முகூர்த்த நேரம் என்பதால் காலை உணவை வந்ததுமே உண்டுவிட்டதால், சாப்பாட்டைக் காரணம் காட்டியும் இவளால் அவனை நிறுத்தி வைக்க முடியவில்லை.

***********

“பிரமோத்!” – தாத்தாவிடம் அப்படியோர் தளர்வை, பரிதவிப்பை ஒருபோதும் கண்டதில்லை இவன்.

“தாத்தா… என்னாச்சு?” அங்கிருப்பவர்களைக் கேள்வியாகப் பார்த்தான்.

பணியாட்கள் கூட யாருமில்லாமல் கீழே வீடு நிசப்தமாயிருந்தது. சங்கரன், அவரின் இரு மகன்கள், ஸ்ரீதரன், அரவிந்தன் என வீட்டின் ஆண்கள் அனைவரும் மாடி ஹாலில் கூடியிருந்தனர். மனோ ஒரு ஓரமாக நின்றிருந்தான். புரிந்துபோனது இவனுக்கு.

“அம்மா எங்கே?” எனக் கேட்ட சரவணன் சில பத்திரங்களை நீட்டினார்.

“கீழே பக்கத்து வீட்ல பேசிட்டு இருக்காங்க.”

“சரி, இது எல்லாத்துலயும் கையெழுத்து போடு பிரமோத்.” என சாதாரணமாக உரைத்தார் சரவணன்.

பத்திரத்தை வாங்கினாலும் தயங்கினான். “அப்பா…”

“உனக்குத்தான் எல்லாம் தெரியுமே? இதுக்காக நீதானே அவனை வர சொல்லிருக்க?”

“ஸாரிப்பா…”

“சரவணா, அவன் கேட்டதும் இப்டி பொட்டுன்னு பாகம் பிரிக்கறியேய்யா? சின்னக் கழுதைக்கு என்ன தெரியும்?” என்ற பெரியவரின் குரலில் அப்படியோர் அலைமோதல்.

“உங்களுக்குதான்ப்பா அவங்க இன்னும் சின்ன பிள்ளைக! உண்மைல தனியா போய் குடித்தனம் நடத்தி பொழைக்கற அளவுக்கு வளர்ந்தவங்கதான்! இனியும் ‘அது’ மாதிரி பொழைச்சிக்குவாங்க.” என மனோவை அற்பமாக பார்த்தவாறு சொன்னார் சரவணன்.

அப்பா தன்னைத்தான் தாக்கிப் பேசுகிறார் எனப் புரிந்த மனோ ரோஷமாக சொன்னான். “நான் இங்கே இருந்தா உங்களுக்குதான் குடும்ப கௌரவம் பாதிக்கும். நான் இங்கிருந்து வெளியேறினதுக்கு மெய்ன் ரீஸனே அதுதான்.”

“அப்பா ஏதோ கோவத்துல சொல்றார். நீ ஏன்’ண்ணே சம்பந்த சம்பந்தமில்லாம பேசற?” – ஸ்ரீ.

“நான் சொல்றது அவருக்கு புரியும் ஸ்ரீ.” என்றவன், ‘உனக்கும் புரியுமே?’ எனும்படி பிரமோத்தைப் பார்த்தான்.

பிரமோத்திற்கு அண்ணனின் குணமும் நடத்தையும் இரண்டு நாட்களுக்கு முன்புதான் தெரிந்திருந்தது. அவன் ஊர்ப்பக்கம் தலைகாட்டாதிருப்பதன் காரணத்தையும் அதன்பின் தான் ஊகித்திருந்தான்.

முதலில் மனோ பேசியதற்கு வேறொருவனாக இருந்திருந்தால் கழுத்து திருகப்பட்டிருக்கும். அண்ணனாகப் போனதால் முதலில் ஆத்திரம் வந்தாலும், நிதானித்தப்பின்னர் பொறுமையாக பேசி, அவனை இங்கேயே பிடித்து வைத்துக்கொள்ளலாம்; தாத்தாவுடன் இருந்தால் அவனை எப்படியும் நெறிப்படுத்திவிட முடியுமென நினைத்தான். ஆனால் அதற்குள் அவன் ஊர் வந்ததன் நோக்கத்தைக் கேட்டுவிட்டான் போலும்!

“ஐயா மனோ…” தேம்பலாய் அழைத்தார் சங்கரன்.

“உங்க மேல எனக்கு எந்தக் கோவமும் இல்ல தாத்தா. இன்ஃபாக்ட் உங்க மேல நிறைய மரியாதையும் பாசமும் இருக்கறதாலதான் இப்பவும் தள்ளி இருக்க நினைக்கறேன். அட் தி சேம் டைம், மை லைஃப்! மை ரைட்ஸ்! மை பாத்!”

‘அவன் சொத்து! அவன் உரிமை!’ என்று பாலாவிடம் சொன்னபோது தோன்றாத உணர்வு, இப்போது அண்ணனின் வாயால் கேட்கும்போது வலித்தது பிரமோத்திற்கு. ‘ஏன்’ண்ணே இப்டி பிரிச்சு பேசற?’ எனக் கேட்க தோன்றியது.

“இப்டி யாரும் வேணாம்னு இருக்கறது நல்லதில்ல மனோ. நாளைக்கு நல்லது பொல்லதுக்கு மனுச மக்க வேணாமா?” -அசோகன்.

ஸ்ரீ, “அதான் உன் ஆசைப்படி இத்தனை வருசம் தனியா இருந்துட்டியே’ண்ணே? இனியாவது சேர்ந்து இருக்கலாம்ல? பிரமோத், சொல்லுடா!” என தம்பியைத் துணைக்கழைக்க,

மனோ, “நீயே சொல்லு. நான் இங்கே இருக்கணுமா?” என அங்கே மாட்டியிருந்த ஸ்ரீதரன் – பிரியாவின் புகைப்படத்தைப் பார்த்தபடி பிரமோத்திடம் கேட்க, நொடியில் அவன் சட்டையோடு சேர்த்து கழுத்தையும் பிடித்து பின்னால் சரசரவென தள்ளிக்கொண்டு போய் சுவரோடு சேர்த்து அழுத்தியிருந்தான் பிரமோத்.

கண்மூடித் திறக்கும்முன் இங்கே நின்றிருந்தவன் அங்கே சென்றதில் சரவணனைத் தவிர மற்ற ஆண்கள் அனைவரும் பதறியபடி பிரமோத்திடம் இருந்து மனோவைப் பிரிக்க முயன்றனர். முயல மட்டுமே முடிந்தது.

அண்ணன் மேல் வைத்திருந்த நம்பிக்கைப் பொய்த்துப் போனதில் எழுந்த கோபத்துடன் கண்ணிரண்டும் சிவந்து கலங்கியது. இவனுக்காக எத்தனை தூரம் தாத்தாவைப் பகைத்திருக்கிறான்! தன் ஆதர்ச நாயகன் என்று மனதில் ஏற்றிருக்கும் தாத்தாவிடம் வேண்டுமென்றே வெறுப்பைக் கொட்டியிருக்கிறான்! எல்லாம் தன் மனோ அண்ணனிற்காக அல்லவா? அவனானால் வீட்டுப் பெண்களையே அறமற்று நோக்குகிறான்!

அழுத்திப் பிடித்திருந்ததில் வலதுகை நடுங்க, பிரமோத் ருத்ரமூர்த்தியாக நின்றிருந்தான். அத்தனை வருட அழுத்தமான பாசம் ஒரே வாரத்தில் பொய்யென்றாக, அந்த ஏமாற்றத்தை அத்துணை சீக்கிரம் ஏற்கத்தான் முடியவில்லை. அத்துணை ஏமாற்றமும் இன்னுமின்னுமென அவன் கழுத்தில் அழுத்தத்தைக் கூட்டச் செய்தது.

மற்றவர்களைப் போல் பதறாமல் பிரமோத்தின் பின் அமைதியாக வந்து நின்ற சரவணன், “தம்பி, உன் கை அழுக்காகிடும். விட்டுட்டு வந்து கையெழுத்துப் போடு.” என்பதற்கும்,

“வராண்டாவைக் கூட பெருக்காம இந்த முத்தம்மா எங்கே போனா?” என்றபடி மாடியேறி வந்த காஞ்சனா தம் பிள்ளைகள் நிற்கும் நிலையைக் காண்பதற்கும் சரியாக இருந்தது.

பார்த்தவர் ஆவேசமான கூவலொன்றை வெளிப்படுத்தினார். “பிரமோத்! என்ன செய்ற?” என்றவர் வந்து அவன் சட்டையைப் பிடித்திழுக்க, ஆவேச மூச்சுக்களுடன் அண்ணனின் கழுத்தை விட்டுவிட்டு, அப்பா தந்த பத்திரங்களில் தேவையான இடங்களில் கையெழுத்திட்டு விட்டு, அவ்விடத்திலிருந்து அகன்றான்.

செல்பவனைப் பார்த்த காஞ்சனா அதிர்ந்த, அழுத விழிகளுடன் மனோவின் முகம், கழுத்து எனத் தடவி பரிசோதித்தவாறே, “என்னடா சண்டை ரெண்டு பேருக்கும்? பிரமோத் எப்பவும் உன் பேச்சைத் தானே கேட்பான்?” எனக் கேட்க,

அம்மாவின் அழுகையைக் காணப் பிடிக்காமல், “ஜஸ்ட் நத்திங்ம்மா.” என அவரை அணைத்து, கண்ணீரைத் துடைத்தான் மனோ.

அதனைக் கண்ட சரவணன் அதீத நிதானக் குரலில் சொன்னார். “அவ உன் அம்மா!”

அடுத்த நொடி, “அப்பாஆஆ!!” என கண்கள் விரித்து, வீடே அதிரும்படி இரைந்த மனோ உடைந்துவிட்டான். என்ன வார்த்தை சொல்லிவிட்டார்! அம்மாவைப் போய்… தாளவே முடியவில்லை. இத்தனை வருடங்கள் இருந்த திமிர், அகங்காரம், பெண்ணாசை, மோகப்பண்பு என அத்தனையும் அவரின் ஒரு கூற்றில் நொறுங்கியது.

சுற்றி நின்று பார்த்திருந்த ஆண்களுக்கும் இப்போதுதான் மனோவின் பிரச்சினை புரிபடுபவதைப் போலிருந்தது. திகைத்தனர். அரவிந்தனுக்கு அவன் பிரியாவின் புகைப்படத்தைப் பார்த்தபடி பேசியபோதே சந்தேகம்தான். இப்போது, ‘ஷிட்!’ என தனக்குள்ளாக முணுமுணுத்துவிட்டு விருட்டென தன்னறைக்குள் புகுந்துகொண்டான். அவனுக்கென்ன மனோவின் போல் பாசமா? நேசமா?

காஞ்சனா, “என்னதாங்க பிரச்சினை? நீங்களாவது சொல்லுங்களேன்.” என கணவரிடம் கேட்க,

பெருமூச்செறிந்தார் அவர். “நம்ம குடும்பத்துல இப்டியொரு பிள்ளை பிறந்திருக்க வேண்டாம்.” தன்னை முறைத்த மனைவியைப் பொருட்படுத்தாமல், “உன் கையெழுத்தும் தேவைப்படுது. உன் பேர்ல இருக்க உங்கம்மா வீட்டை அவனுக்கு கொடுத்திடலாம்.” எனவும்,

இப்போது மனோவை உலுக்கினார் காஞ்சனா. “என்ன? என்னடா இது? சொத்தைப் பிரிக்கறியா? சொந்தத்தைப் பிரிக்கறியா? இதுக்குத்தான் பிரமோத் உன் கழுத்தைப் பிடிச்சானா? நினைச்சேன். அவன் காரணமில்லாம யாரையும் கை நீட்ட மாட்டான்.”

தன்னைச் சற்று நிதானப்படுத்த முயன்று, அதில் தோற்று, குரலில் இழையோடிய நடுக்கத்துடனே சொன்னான் மனோ. “அவன் அதுக்காக என் கழுத்தைப் பிடிக்கலம்மா.”

“மனோ!” எனக் கடுமையாக அழைத்து அவன் பேச்சை நிறுத்த முயன்றார் சரவணன். மனோவைப் பற்றித் தெரிந்தால் காஞ்சனாவால் தாங்கிக்கொள்ள முடியுமா? எந்த அன்னைக்கும் இப்படியொரு மகன் மகத்தான தண்டனையல்லவா?

“நீங்க கீழே போங்க மதினி. ஸ்ரீ, அம்மாவைக் கூட்டிட்டு போ!” என காஞ்சனாவை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்த நினைத்தார் அசோகன்.

“இல்ல சித்தப்பா. அம்மாவுக்கு தெரியட்டும்.” என்ற மனோ, “ஐ’ம் அ டிவோர்ஸி’ம்மா.” எனவும்,

“என்னடா சொல்ற?” அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தாக்க ஓய்ந்த குரலில் கேட்டார் காஞ்சனா.

அவரின் முகம் பாராமல் நிலம் பார்த்து கடகடவென சொன்னான். “அண்ட் ஐ’ம் அ உமனைஸர். தட்’ஸ் வை ஷீ லெஃப்ட் மீ! தட்’ஸ் தி ரீஸன் வை பிரமோத் ஹிட் மீ! (பிரமோத் என்னை அடித்ததின் காரணமும் அதுதான்!)

அவன் சொல்ல சொல்ல நெஞ்சையடைத்துக் கொண்டு வந்தது. ‘அவ உன் அம்மா!’ என்று தன் கணவர் சொன்னதற்கும், அதற்கு அவன் வீடே அதிரும்படி கத்தியதற்கும் இப்போது அர்த்தம் புரிந்த காஞ்சனா, சரவணனை பத்ரகாளியாக விழிவிரித்து முறைத்தவர், உடைந்து போய் அங்கிருந்த சோபாவில் அமர்ந்தார். “நல்ல புத்தி சொல்லித்தானேடா வளர்த்தோம்? எங்கே தப்பு பண்ணினோம்?” என்றவருக்கு கண்ணீர் நிற்காமல் வழிந்தோடியது.

“இங்கே இருந்தா உன் இஷ்டம் போல இருக்க முடியாதுன்னு தான் ஓடிப் போயிட்டியா?” கோபமும் இயலாமையுமாக கேட்டார்.

‘ஆமாம், எனக்கு தினம் ஒரு பெண் வேண்டும்.’ என அன்னையிடம் சொல்ல இயலாது, “நான் மாற டிரைப் பண்றேன்’மா. ஹோப் ஐ கேன்.” என்றவன்,

சங்கரனை நெருங்கி அவர் கைகளைப் பிடித்துக்கொண்டு கண்ணீர் வடித்தான். “உங்க மேல எப்பவும் எனக்கு எந்த கோபமும் இருந்ததில்ல தாத்தா. என் ஆசைக்கு நான் உங்களை வச்சு பாதையமைச்சுக்கிட்டேன். ஸாரி தாத்தா.”

“போனது போகட்டும்யா. இனி நடக்கறதைப் பேசுவோம். இங்கே ஆளோட ஆளா இருந்து பாரு…”

“நான் திரும்ப வர்றேன் தாத்தா… உங்க பேரனா மட்டும்! இப்போ எனக்கொரு ஆபரேஷன் பண்ணனும். அதுக்குத்தான் பணம் தேவைப்படுது.”

“என்னய்யா சொல்ற? எதுவா இருந்தாலும் நம்மூர்லயே இருந்து பார்க்கலாம்யா… உனக்கு எதுவும் ஆகாம நான் பார்த்துக்கறேன்.” என்ற தாத்தா, அள்ளி அணைத்துக் கொள்ளத் தூண்டும் சிறு குழந்தையாய்த் தெரிந்தார். எத்துணை அப்பழுக்கில்லா அன்பை தன் சிற்றின்பத்திற்காய் இழந்திருக்கிறான்!

பேச முடியாமல் குரல் கரகரத்தது. “எல்லாத்தையும் என்னால சொல்ல முடியல தாத்தா. ஸாரி… ஐ’ம் எக்ஸ்ட்ரீம்லி ஸாரி.” என்றவன், சரவணனிடமும் காஞ்சனாவிடமும் சென்றான். “ஹோப் யூ கேன் ஃபர்கிவ் மீ’ப்பா.”

“ஐ’ம் அஷேம்ட் ஆஃப் மை மிஸ்டேக்ஸ்’ம்மா. ஐ பெக் யோர் பார்டன்…” நிதானத்தில் இல்லாமல் நிரம்பவே உணர்ச்சிவயப்பட்டிருந்தவனுக்கு இத்தனை வருடங்கள் நாவில் தவழாத தாய்மொழியும் கைக்கொடுக்கவில்லை.

நின்ற இடத்திலிருந்தே தன் தம்பியைத் திரும்பிப் பார்த்து, “அப்பாலஜீஸ்’டா ஸ்ரீ.” என்றவன் சரவணனிடம், “சொத்தைப் பிரிக்க வேணாம்ப்பா. எனக்கு கொஞ்சம் பணம் மட்டும் கொடுத்தா போதும்.” என்றவனின் தோளைத் தட்டியவர், மறுபுறம் திரும்பி துளிர்த்தக் கண்ணீரைத் துடைத்துக்கொண்டார்.

இத்தனை வருடங்கள் பெண்சுகத்தில் சுகித்துக் கிடந்தவன், இன்று தன் தந்தை, தன் அம்மாவுடன் சேர்த்து ஒரு வார்த்தை சொன்னதில் திடுமென மாறிவிடப் போவதில்லை. ஆனால் அவரின் கூற்று அவனை ஆழமாய்க் கீறி நிரம்பவே காயப்படுத்தியிருந்தது. வீட்டுப் பெண்களையும் தன்னோடு இருந்த பெண்களைப் போல் நினைத்ததற்கு வெட்கினான். திருந்திவிட வேண்டுமென மனமார நினைத்தான். நம்புவோமாக!

தூறல் தூறும் 🌧️🌧️🌧️

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
35
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments

    1. கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான காதல் கதைக்களம். சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.