Loading

அத்தியாயம் 27

நிவர்த்திகா நல்ல உறக்கத்தில் இருந்தாள். தூக்கத்திலும் கூட உடையை இயல்பாக, நேர்த்தியாக, முழுவதுமாக மூடி படுத்திருப்பவளைக் கண்டு பிரமோத்திற்கு புன்னகை அரும்பியது. திருமணமான இந்த ஒன்றரை மாதங்களில், அநேக நாட்களில் பின்னிரவில்தான் இவன் வீடு வந்திருக்கிறான். அப்போதெல்லாம் ஒருமுறை கூட இவனுக்கு சபலமேற்படுத்தும் விதமாக அவள் இருந்ததேயில்லை. இவனும் அப்போது அவள்மேல் இருந்த கோபத்தில் அவளை லட்சியம் செய்ததில்லை.

முதன்முதலாக அவள் தூங்கும் இவ்விரவில் அவளை நெருங்கியமர்ந்து, மெதுவாகப் புரட்டினான். மாலையில் அவன் அழுத்தியதில் கன்றிச் சிவந்திருந்த கழுத்து பகுதியை விரல்களால் நீவிவிட்டான்.

மாலையில் அரவிந்தன் அலைப்பேசியை எடுப்பதைக் கண்டு அனைவரின் முன்பும் அவனிடம், நிவர்த்திகா, “அவர்கிட்டே (பிரமோத்) இதெல்லாம் சொல்ல வேணாம் ப்ரோ!” என்று கேட்டுக் கொண்டதையும் மீறி, தனியாக போய் அண்ணனிடம் அனைத்தையும் ஒப்பித்திருந்தான் அரவிந்தன்.

அவன் சொன்னதைக் கேட்ட பிரமோத்தின் மனநிலை, இன்னதென்ற ஓர் உணர்விற்குள் அடக்க முடியாததாய் இருந்தது. இப்படியோர் அசுர அழுத்தக்காரியை அவன் பார்த்ததேயில்லை. “ஃப்ராடு!” எனத் தித்திப்பாய்த் திட்டிக்கொண்டான்.

மனைவியை மட்டுமல்லாமல், தாத்தாவை நினைத்தும் பல்வேறு உணர்ச்சிகள், சிதறி விழுந்த நெல்மணிகளாய் உள்ளத்தின் மூலைமுடுக்கெங்கும் பரவியிருந்தது. “சங்கர் ஹை வோட்டேஜ் அடிச்ச ஷாக்ல இருக்கும்.” என்று சொல்லி மௌனப் புன்னகைப் பூத்தான்.

அவனுக்குமே தன்னை சமன் செய்துகொள்ள நேரம் தேவைப்பட்டது. பால்யம் தவிர்த்து, இடைப்பட்ட இத்தனை வருடங்களாய்ப் பூட்டி வைத்திருந்த உணர்வுகளல்லவா? ஆக, நேரம் கடந்த பின்னரே வீட்டிற்கு வந்தான்.

மனைவியின் அருகே அமர்ந்து அவள் கழுத்தை நீவியபடியே, அவள் துயில் கலைந்து விடாதவாறு மெல்லிய குரலில், “ப்ளான் பண்ணி என்‌ மனசைத் தோண்டியெடுத்தாச்சு. உன் மனசை எப்போ’டி சொல்ல போற?” எனக் கேட்டு அவள் நெற்றியில் முத்தமிட்டு, நெடுமூச்சொன்றில் தன் ஏக்கம் முழுவதையும் வெளிப்படுத்தினான்.

அவன் பார்வை மீண்டும் அவள் கழுத்தில் சிவந்திருந்த தடத்தில் பதிந்தது. நாளை விஜியின் வீட்டிற்கு போகவேண்டும் என்றிருந்தாள். இதோடு எப்படிப் போவாள் என்ற வருத்தமேற்பட்டது. ‘கோபப்படுவதற்கு முன் அவள் முகத்தை, கண்களைக் கணநேரம் படித்திருக்கலாம். அப்போதே ஏதோ நெருடலாகத் தோன்றியதே?’ என தன் அவசரத்தை நினைத்துத் தன்னையே நிந்தித்தான்.

“ஸாரிடா, தாவணிப்பொண்ணு!”

“ம்ஹ்ம்ம்… பிரமோத்!” தூக்கத்தில் புரண்டு இவன் நெஞ்சுக்குள் பதுங்கினாற் போல் படுத்துக்கொண்டாள். இவனுக்கு தேன் திகைப்பு!

சித்தாரா விடயம் ஒருபுறம் இருந்தாலும், சில பெண்களுக்கு கணவனே ஆனாலும், ஆணின் தொடுகை அச்சத்தை, அசூயையைத் தரக்கூடும் என்று எப்போதோ கூகுளாரிடம் படித்திருந்தவன், தன் மனைவியும் அதனால் கூட தன்னை விலக்கி வைத்திருக்கலாமென நினைத்திருந்தான். அதனால்தான் மெதுமெதுவாக அவளை அணுக முடிவெடுத்து அதன்படி தன் முத்த சேவையைத் தொடர்ந்து செய்து வந்தான். ஆனால் பிடிக்காதவள் இப்படித்தான் தூக்கத்திலும் தன் பெயரைச் சொல்லி கட்டிக்கொள்வாளா?

ஏதேதோ சிந்தனையில் இருந்தவன், ‘வாட்எவர் இனியும் டைம் வேஸ்ட் பண்ணாதேடா பிரமோத்!’ என்ற மனக்குரலுக்கு செவி சாய்க்க முடிவு செய்தான்.

*~*~*~*~*~*~*~*~*

“பரவாயில்ல, கிழம் மத்ததுல பழைய பஞ்சாங்கமா இருந்தாலும் பொண்ணு பார்க்கற விஷயத்துல கில்லிதான் போல… ஸ்ரீயோட பொண்டாட்டியும் நல்ல அழகு.” என்ற தன் அண்ணன் மனோவை எரித்துவிடுவது போல் பார்த்தான் பிரமோத்.

மனோவின் பார்வை வீட்டு ஹாலில் மாட்டியிருந்த, பிரமோத்தும் நிவர்த்திகாவும் கல்யாணக் கோலத்தில் இருந்த புகைப்படச் சட்டத்தை வெறித்திருந்தது. நேற்று வீட்டில் நடந்த கலவரத்தைக் கண்டுவிட்டு, தைரியம் வரப்பெற்றவனாய்ச் சொல்லிக் கொண்டிருந்தான் மனோ.

பிரமோத்திற்கு முதன்முதலாக அண்ணனின் மீது ஏற்பட்டிருந்த, மாயவலையில் சிக்கியிருந்த பாசம் பட்டென்று அறுந்து சின்ன பிசிறில் விடுபட ஆரம்பித்தது.

“ஏண்டா இந்தப் பொண்ணு மேல கோவப்பட உன்னால எப்டி முடியுது? உனக்கு செட்டாகலைன்னா சொல்லு…”

அடுத்து அவன் என்ன சொல்லியிருப்பானோ… அதற்குள் அமைதியாக, ஆழ்ந்த குரலில், “அப்டிலாம் இல்ல. ரெண்டு பேருக்கும் பிடிச்சிருக்குது. பிடிச்சுத்தான் கல்யாணம் செஞ்சோம்” என்றவன், மனோவின் கூடு போன்ற தோளில் கை வைத்து அழுத்தி, “உன்மேல நிறைய மரியாதை வச்சிருக்கேன்’ண்ணே…” என விரல் நீட்டி எச்சரித்துவிட்டுப் போனான்.

அவனின் அழுத்தப் பார்வையில் உள்ளுக்குள் சில்லிப்பை உணர்ந்தான் மனோ. வலித்த தோள்களைத் தடவிக்கொண்டவன், ஆக்ரோஷமாக டியூக்கை உயிர்ப்பித்துப் பறந்தத் தம்பியை ஜன்னலின் வழியே சற்று பயத்துடன் பார்த்தான்.

பிரமோத்தை வைத்துதான் இந்த வீட்டில் தன் காரியத்தை சாதித்துக் கொள்ள நினைத்திருந்தான். அவனின் பாசம் அப்பழுக்கற்றது. அதனாலேயே இத்தனை வருடங்கள் அப்பாசத்திற்கு குந்தகம் வராமல் பார்த்துக் கொண்டான் மனோ. இப்போது நிவர்த்திகாவையும் பிரியாவையும் கண்டு மேலெழும் உணர்வுகளை மறைக்கவியலாது உளறியாயிற்று.

திரும்பி மேலே நடக்க எத்தனிக்கையில் சமையலறை வாசலில் நின்றிருந்த அமலா, அவனை அற்பப் புழுவைப் போல் பார்த்ததில் அவனுக்கு யாதொரு வருத்தமும் இருந்ததைப் போல் தெரியவில்லை.

நல்லவேளை வீட்டில் அப்போது வேறு யாருமில்லை. நிவர்த்திகா, நாளனின்று விஜியின் திருமணம் என்பதால் இன்று மாலை வரை அவளுக்கு துணையாக அவள் வீட்டில் இருந்துவிட்டு வருவதாக சொல்லிச் சென்றிருந்தாள்‌.

***********

“எவ்ளோ நேரம்?” அறை வாசலில் வந்து நின்ற பிரமோத் உள்ளே பார்த்து குரல் கொடுக்க,

“ஒரு நிமிஷம் ப்ளீஸ்… என் மொபைலை மட்டும் எடுத்துக்கறேன்.” என்று இங்குமங்கும் தேடினாள் நிவர்த்திகா.

தன் அலைப்பேசியை எடுத்து அவள் எண்ணுக்கு அழைத்தபடி, “முள்ளை முள்ளால எடுக்கற மாதிரி செல்லை செல்லால…” எனும் போதே,

‘எங்கிருந்து வந்தாயடா…
எனைப் பாடுபடுத்த -நீ
எனைப் பாடுபடுத்த…’ என்று தலையணைக்கு அடியிலிருந்து பாடியது அவளின் சாம்சங்.

அவள் அதை எடுக்க ஓடும்முன், இவன் ஓடிப்போய்க் கைப்பற்றியிருந்தான். ‘எங்கு கொண்டு சென்றாயடா
எனைத்தேடி எடுக்க -நான்
எனைத்தேடி எடுக்க…’

“பிரமோத், ஒழுங்கா கொடுத்துடுங்க.” அவன் கையில் தலைக்கு மேல் தூக்கிப் பிடித்திருந்த அலைப்பேசியைக் கைப்பற்றப் போராடினாள்.

‘இன்பதுன்பம்
துன்பம் இன்பம் இன்பமென்று
சோகம் ரெண்டு கொடுக்க – நீ
சுகம் ரெண்டு கொடுக்க…’

“பிரமோத்! ப்ளீஸ்…” என அவன் இடையில் கிச்சுகிச்சு மூட்டி, அவன் தவறவிட இருந்த தருணத்தில், வெடுக்கென பிடுங்கிக்கொண்டு ஓடிவிட்டாள்.

“ஹேய்!”

என்ன பாட்டு இது? ‘Engirundhu vandhayada’ என கூகுளிடம் கேட்டவன், கீழே காஞ்சனா கத்துவது கேட்டு, பின்னர் கேட்க வேண்டுமென விருப்பப் பட்டியலில் போட்டுக்கொண்டான்.

விஜிக்கு நாளைக் காலையில் திருமணம். இன்று மாலை விசேஷத்திற்கு கிளம்பிக் கொண்டிருக்கையில் தான் மேற்கூறிய கூத்து நடந்தேறியது.

கல்யாணம் விருதுநகரில் உள்ள மண்டபத்தில் நடைபெற இருந்தது. காஞ்சனா, அமலா, பிரமோத், நிவர்த்திகா நால்வரும் புறப்பட்டனர். பிரமோத் காரை எடுத்தான்.

“மழை வர்ற மாதிரி இருக்குது. சீக்கிரம் போயிட்டு வந்துடலாம்னு பார்க்கறேன். ஏண்டா லேட் பண்ற?” காரில் ஏறியவாறு கேட்டார் காஞ்சனா.

“வந்துட்டேன்ல’ம்மா?”

“பொம்பளைங்க சீக்கிரம் கிளம்பிட்டோம். உனக்கென்னடா?” – அமலா.

“சும்மா யூடியூப் பார்த்துட்டே இருக்கார் அத்தை.” என்று சற்றுமுன் அவளை அலைக்கழித்ததற்காக, தன் கணவனைப் போட்டுக் கொடுத்து பழிதீர்த்தாள் நிவர்த்திகா.

‘அடிப்பாவி!’ என காரைச் செலுத்தியபடி தன்னருகே அமர்ந்திருந்த மனைவியைப் போலி அதிர்ச்சியுடன் பார்த்தான்.

சற்றே நகர்ந்து, சரிந்து பின்னிருக்கையில் இருப்பவர்களுக்கு தெரியாதபடி, நாக்கை நீட்டி அளவம் செய்தாள் அவன் மனைவி. அவளின் அலங்காரமும் அளவமும் அவனை இம்சித்தது. மழை ஸ்ருதி சேர்க்க ஆரம்பிக்க, உல்லாசமாக துவங்கியது பயணம்.

“நினைச்சேன். எக்கா! ஒருநாள் இல்ல ஒருநாள் காதுல நம்மூர் பெரிசுங்க பீடி சொருகின போல சொருகிட்டு இருக்க அந்த எட்ஃபோனை (ear pods) பிடுங்கி, அடுப்புல போட போறேன் பாருங்க!” என்று காஞ்சனாவிடம் சொல்லி நொடித்தார் அமலா.

“அதைச் செய் முதல்ல! யாரு என்ன சொன்னாலும் காது கேட்க மாட்டேங்குது. அப்டியே கேட்டாலும் அரைவட்டா கேட்டுட்டு, கண்ணைத் திற’ன்னா வாயைத் திறக்கறான்.” என்று காஞ்சனாவும் சேர்ந்துகொள்ள, நிவர்த்திகாவிற்கு குதூகலமாகிப் போனது.

வாய்மூடி சிரித்தவளிடம் வம்பு வளர்க்க தோன்றியது அவனுக்கு. மெதுவாக தன் கையருகேயிருந்த பொத்தானைத் தட்டி கார் ஜன்னலைப் பாதி திறந்தான்.

சாரல் முகத்திலடிக்க, “பிரமோத்! ஏன் ஜன்னலைத் திறக்கறீங்க? மேக்கப் கலையுது.” என்றவள் ஜன்னலை மூட, மீண்டும் திறந்தான் அவன்.

அவள் மீண்டும் மூட, அவன் திறக்க, வேண்டுமென்றே செய்கிறானென புரிந்தவள், ஒற்றைப் புருவம் தூக்கி உஷ்ண மூச்சை வெளியேற்றி, அமலாவிடம் திரும்பினாள். “பாருங்க அத்தை! இதுக்குத்தான் பட்டுச் சேலை கட்டல’ன்னு சொன்னேன். கேட்டீங்களா? மெயின்டெய்ன் பண்றது எவ்ளோ கஷ்டம் தெரியுமா? இப்போ பாருங்க, உங்க மகன் வேணும்னே என் சேலையை நாசம் பண்றார்.”

அவள் பற்ற வைத்தது நன்றாகப் புகைந்தது. உண்மையில் ‘டிசைனர் சேலைக் கட்டிக் கொள்கிறேன். இப்போது பட்டெல்லாம் யாரும் அதிகம் கட்டுவதில்லை.’ என்றவளை, ‘பெண்ணுக்கு பட்டுதான் அழகு. அதுதான் கௌரவம்.’ என்றெல்லாம் சொல்லி வற்புறுத்தி கட்டச் செய்திருந்தார் அமலா.

இப்போது இவள் வேறு இப்படி கொளுத்திப் போட, அவள் சொன்னதைச் சொல்லி, படபடவென பொரிந்து தள்ளினார். மண்டபத்தின்முன் காரை நிறுத்தியவன், “போதும் சித்திம்மா. காதுல இரத்தம் வருது.” எனவும், கலகலத்து சிரித்தாள் நிவர்த்திகா.

அனைவரும் இறங்க, அவளோடு சேர்ந்து நடந்தவன் அவளுக்கு மட்டும் கேட்கும்படி பல்லைக் கடித்து சொன்னான். “வீட்டுக்கு வாடி பார்த்துக்கறேன்.”

“யூடியூப்’பை தானே?” – நமுட்டுச் சிரிப்புடன் அவள்.

மண்டப அலங்காரத்தைப் பார்வையிடுபவன் போல் பாசாங்கு செய்தபடி, “பட்டு சேலை வேணாம்னு சொன்னியாமே? அதில்லாம!” என்றுவிட்டு முன்னால் நடக்க, அவளுக்கு குப்பென்று வியர்த்ததில், மழைச்சாரலிலிருந்து அவள் பாதுகாத்த ஒப்பனைக் கலைய ஆரம்பித்தது.

பிரமோத்திற்கு ஏற்கனவே விஜி என்றாலே சிறிது நமைச்சல்தான். அதனால் இன்று வராமல் இருந்துவிடவே நினைத்தான். ஆனால் அவன் மனைவி முதன்முதலாக இவனை எதிர்பார்த்தாள். “நீங்களும் வந்தா நல்லா இருக்கும் பிரமோத். ப்ளீஸ்…” என்றிட, கிளம்பிவிட்டான்.

ஆனால் இப்போது அவள் மேடையில் விஜியினருகே போய் நின்றுகொள்ள, இவனுக்கு வயிறு காந்தியது. வரவேற்றவர்களுக்கு ஒரு புன்னகையைத் தந்துவிட்டு, எரிச்சலுடன் ஒரு‌ ஓரமாகப் போய் அமர்ந்துகொண்டு, அலைப்பேசியிடம் காதல் செய்ய ஆரம்பித்துவிட்டான். தெரிந்த முகங்களுடன் அளவளாவியபடி அன்னையர் இருவரும் இவனை முறைக்க, கண்டுகொள்ளவேயில்லை மகன்.

காரில் வீட்டிற்கு திரும்பும்போது மீண்டும் இருவரும் ஆரம்பிப்பார்கள். அவன் அலைப்பேசியில் நேரம் செலவழிப்பதால்தான், குழம்பில் கத்தரிக்காய் வேகவில்லை என்பார் அமலா; தங்கள் ஃபயர்வொர்க்ஸ் பட்டாசு நமத்துப் போகிறது என்பார் காஞ்சனா. இதற்கெல்லாம் செவிமடுத்தால் அலைப்பேசியை யார்தான் காதல் செய்வது?

அவனும் யாரையும் கண்டுகொள்ளாமல் ஏர்போட்ஸைக் காதில் மாட்டிக்கொண்டான். சற்றுமுன் நிவர்த்திகாவின் அலைப்பேசியில் கேட்ட, தனக்கான ரிங்டோன் பாடலை ஒலிக்கவிட, மெல்ல மெல்ல சுற்றுப்புறம் மறந்து அதிலேயே கரைந்தான். பார்வை மேடையிலிருக்கும் தன்னவளிடமே நிலைத்திருந்தது.

முதல் தடவை கேட்டான். வரிகளைக் கூர்ந்தான். கணவனைப் பிரிந்திருக்கும் காதல் மனைவியின் ஏக்கத்தை, ஏமாற்றத்தைச் சொல்லும் பாடல். கவிஞர் தாமரையின் வரிகள் ஒவ்வொன்றும் இதயம் தொடும் ரசவாதம் செய்தது.

இரண்டாம் முறை கேட்டான். அந்தக் குரல்தான் எத்துணை ஏக்கத்தைச் சுமந்து ஒலிக்கிறது!
குறிப்பாக அந்த ‘ம்ம்ம்…. ம்ம்ம்…’!

‘வரிகளிலும் குரலிலும் ஏனப்பா மயங்கிக் கிடக்கிறாய்? இதனை உனக்கானப் பாடலாக வைத்திருக்கிறாளே, உன் மணவாட்டி? அது ஏனென்று சிந்தித்துப் பாரேன்.’ என்ற மனதின் குரலுக்கு செவிமடுத்தவன் போல், ‘மாட்டுக்கு புண்ணாக்கு வைக்கற மாதிரி, நாலு முத்தத்தோட என்னைத் தள்ளி வச்சிட்டு, நான் என்னவோ இவளைக் கண்டுக்காத மாதிரில்ல ரிங்டோன் வச்சிருக்கா?’ என்று மனதோடு பேசிக்கொண்டவன் மேடையிலிருந்தவளை முறைத்தான்.

அப்போதுதான் மேடையில் மோதிரம், மாலை மாற்றி, கேக் வெட்டி, அதை மணமக்களைச் சாப்பிட விடாமல் செய்து என கலாட்டாக்கள் முடிந்து பெண், மாப்பிள்ளையின் நண்பர்கள் கூட்டம் சிறிது கலைந்தது. ஒவ்வொருவராக புகைப்படம் எடுத்துக்கொள்ள வர, விஜி களைத்துப் போனாள். மாப்பிள்ளை ஜீவா அவன் நண்பனிடம் பேசிக்கொண்டிருக்க, அப்போதுதான் அருகிருந்த தோழியைக் கவனித்தாள் விஜி.

அவள் கவனம் இவளிடம் இல்லை. ஏதோ இயந்திரத்தனமாக ஒப்பனையைச் சரிசெய்தாள். இவள் ஏதோ கேட்டதற்கும் அப்படியே பதிலளித்தாள். அவள் பார்வையைப் பின்பற்ற, அங்கே இருந்தது பிரமோத். அவன் பார்வையும் நிவர்த்திகாவிடமே!

விஜிக்கு இந்த பிரமோத் புதியவனாகத் தெரிந்தான். இதுவரை சித்தாராவை எதிர்பார்த்து அலப்பறையைக் கூட்டும் பார்வையைத்தான் அவனிடம் கண்டிருக்கிறாள். ஆனால் இப்போது காண்பது ஆழமானதொரு காதல் பார்வை! இன்னும் ஏதோ ஒருவித ஆழ்ந்த உணர்வை வெளிப்படுத்துகிறான். அது என்னவென்று இவளுக்கு புரியவில்லை. அவர்கள் திருமணத்தின் போது கூட அவன் இப்படியில்லை என்றே தோன்றியது. அப்போது நிவர்த்திகாவும் கூட எத்துணை கலக்கத்தில் இருந்தாளென்று தான் இவளுக்குத் தெரியுமே?

இப்போது அவர்களின் இந்நிலைக் கண்டு விஜிக்கு மனநிறைவுடன் மகிழ்ச்சியாகவும் இருந்தது. தோழியைச் சீண்டிப் பார்க்க தோன்றியது. நடுவே ஒரு உறவினர் வர, அவரை ஜீவாவிற்கு அறிமுகப்படுத்திப் பேசி அனுப்பிவிட்டு, நிவர்த்திகாவிடம் திரும்பினாள்.

“ஏண்டி கல்யாணம் எனக்குத்தானே? ஆனா உங்க அலப்பறையில்ல ஓவரா போகுது?” என்று அவள் தோளை இடிக்க,

பதறித் திரும்பியவள், “சும்மா இரு விஜி.” என்று புன்னகைத்தாள்.

“பார்றா வெட்கமா? நானும் அப்போ இருந்து பார்க்கறேன். உன்னைக் கண்ணாலேயே காலி பண்ணிடுவார் போலருக்குது. நீயும் இங்கே எனக்கு ஹெல்ப் பண்ற மாதிரி நின்னு பாவ்லா காட்டிட்டு இருக்கே?”

“நீ ஏண்டி அவரைப் பார்க்கற? பக்கத்துல இருக்க உன் ‘அவரை’ பாரு!”

“ஹிஹி… பழக்க தோஷம். ஆனா இந்த நாடகம் புதுசா இருக்குது நிவி. நல்லாவும் இருக்குது.” எனவும்,

தலையை நிமிர்த்தவில்லை இவள். “விஜீஈஈ…”

“சரி சரி. நான் ஒண்ணும் சொல்லலை. நீ வேணும்னா போய் அவர் பக்கத்துல இரு நிவி. இங்கேதான் எங்க சித்தியோட வானரக்கூட்டம் இருக்குதே?”

“ச்சு போடி! அப்டி விட்டுப் போவேனா உன்னை?”

“ஸ்ஸ்!” என்று புளங்காதிமடைந்தவளாய்ப் பாசாங்கு செய்த விஜி, கையைத் தேய்த்து விட்டுக்கொண்டாள்.

அத்தியாயம் 28

 

மண்டபத்திலிருந்து காரில் வீட்டிற்கு திரும்பும்போது மழை இல்லை. ஆனால் குளிர்க்காற்று தம்பதியரின் மேனி தழுவி, பிரபஞ்சத்தின் பரந்தவெளிக்கு இழுத்துச் செல்ல முயன்றது. இருளும் ஈரக்காற்றும் இருவரின் இளமையையும் இளக்கி வேடிக்கைப் பார்த்தது. காரில் ஒலித்த இசையும் அது தந்த ஈர்ப்பும், காதலின் மறுபக்க உணர்வுகளைத் தட்டி தட்டி தாளமிட்டது.

தலை தொடும் மழையே
செவி தொடும் இசையே
இதழ் தொடும் சுவையே
இனிப்பாயே…

பிரமோத்திற்கு இருப்பு கொள்ளவில்லை.

“மெதுவா போ, பிரமோத்!” என்று தூக்கம் வழிந்த அரைக் கண்ணில் சொன்னார் காஞ்சனா.

காரின் வேகம் குறைந்தது. ஈரக்காற்றின் சில்லிப்பிலிருந்தும், பிரமோத்தின் மையல் பார்வையிலிருந்தும் மீளவே விரும்பாதவள் போல், நிவர்த்திகா ஜன்னல் பக்கம் தலைசாய்த்து அவனையே பார்த்திருந்தாள். மண்டபத்தில் நுழையும்போது அவன் சொன்னது வேறு உடலைக் குறுகுறுக்கச் செய்தது. என்ன தான் மூடி மூடி வைத்தாலும் தன்னையே அறியாமல் காதல் வெளிப்படும் கணங்கள் அநேகம் உண்டல்லவா? அப்படியான இக்கணத்தில் குழைந்திருந்த அவளுள்ளத்தைப் பட்டவர்த்தனமாகப் பிரதிபலித்தது அவளின் பூ முகம்.

கூடு பாவாய் தேகத்தோடு
காதல் தினம் ஓடுதே
கூடு பாயும் தாகத்தோடு
ஆசை நதி மோதுதே
தொடுவாயா என்னை தொடர்வேனே உன்னை…

வீதியில் ஒரு கண்ணும் வீட்டுக்காரியிடம் ஒரு கண்ணுமாய்க் காரோட்டிக் கொண்டிருந்தவன், குமுறிக் கொண்டிருக்கும் உணர்வுகளை பிரயத்தனப்பட்டு அதட்டி அடக்கி, மௌனமுகம் காட்டினான். தங்கள் நிச்சய நாளன்றும் இவள் இப்படித்தானே பார்த்தாள்! அதனாலல்லவா அன்று துணிந்து முத்தமிட்டான்?!

கருவேலம்பட்டியில் வீட்டின்முன் கார் நிற்கவும், மழை பிடிக்கவும் சரியாக இருந்தது. பிரமோத் இறங்கி அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு, வேகநடையில் மாடிக்கு போய்விட்டான். இவள்தான் குளிரில் நடுங்குபவள் போல் கூடத்தின் தூணோரமாக நின்றிருந்தாள்.

கதவைப் பூட்டிவிட்டு வந்த அமலா, “போய் தூங்கு நிவர்த்தி! நல்லவேளை காலைல பத்து மணிக்கு மேலதான் முகூர்த்தம்.” என்றுவிட்டு தூங்கப் போனார்.

அடிபிரதட்சணம் செய்பவள் போல் மெதுவாக மேலேறி, இதயத்தை மெதுவாக துடிக்கச் சொல்லி அறிவுறுத்திவிட்டு, அறைக்குள் தயக்கமாக நுழைந்தாள். அணிந்திருந்த ஜீனைக் களைந்து, இலகு உடைக்கு மாறியிருந்தான் பிரமோத். ஓரக்கண்ணால் அவனைப் பார்த்தபடி பீரோவைத் திறந்து மாற்றுடை எடுத்துக்கொண்டு, உடைமாற்றும் மரத்தடுப்பின் பின்னால் போய் மாற்றி வந்தாள். எப்போதும் குளிக்கும்போது, உடைமாற்றும் போது என தனியுரிமையின் பொருட்டு அறையில் ஒருவர் இருந்தால், அடுத்தவர் இருப்பதில்லை.

ஆனால் இது போன்ற நேரங்களில் இருவருக்குமே சங்கடம் வேண்டாமென ஆரம்பத்தில் பிரமோத் தான் அந்த மரத்தடுப்பை வாங்கியிருந்தான். இப்போது ‘ஏனடா வாங்கினோம்’ என்றிருந்தது.

உடுத்தியிருந்த பட்டுப் புடவையை நான்காக மடித்து, மேஜை மேல் விரித்துவிட்டுத் திரும்ப, அவளை மிக நெருங்கி நின்றிருந்தவனின் மார்பில் முட்டிக்கொண்டாள்.

“கல்யாணத்தன்னிக்கு பெஞ்ச மழையை மிஸ் பண்ணிட்டேன். இன்னிக்கு மழையை மிஸ் பண்றதா இல்ல!” அவன் பார்வையும் பேச்சும், இவள் தேகத்தின் செல்களிலெல்லாம் கலவரத் துகள்களைத் தூவி அமர்க்களப்படுத்தியது.

நடுக்கத்தை வெளிப்படுத்திவிடாதபடி அழுத்தமாய் மூடியிருந்த அவளிதழ்களைப் பார்த்தவாறு கேட்டான். “என்ன பாட்டு அது?”

“அது சும்மா… பிடிக்கும்னு வச்சிருந்தேன்.”

“ஆஹான்?”

“……….”

மெல்ல மெல்ல முகமருகே குனிந்தவன், அவள் இடைப் பற்றி தூக்கி மேஜை மேலேயே அமர வைக்க, நெளிந்தாள் அவள்.

“நல்லா பார்த்து பார்த்து உசுபேத்திவிட மட்டும் தெரியுதுல்ல?”

அவன் விரல்களை விலக்கிவிட முயன்றபடி, “பிரமோத்…” என்றாள் காற்றுக் குரலில்.

“பிடிக்கலையா?” உறுதியான பதில் தெரிந்த கேள்வியை வேண்டுமென்றே கேட்டான்.

முறைத்தாள்.

“ஒருவேளை அருவெறுப்…”

“ச்சச்ச!” என்றபடி‌ அவன் டீ-ஷர்ட் காலரைப் பற்றிக்கொள்ள, பற்றிய அந்தக் கரத்தை ஒருமுறை பார்த்துவிட்டு, “அப்போ வேறென்ன பிடிக்கல?”

“பிடிக்கலைன்னுலாம் ஒண்ணுமில்ல.”

“பின்ன?”

“……..”

“ஒழுங்கா சொல்லிடுடீ… இனியும் எப்போ கோயில் நடை திறக்கும்ன்னு பார்த்திட்டிருக்க முடியாது.” என இடையை அணைத்து சற்று குனிய, கண்களெதிரே தெரிந்தது, அவளின் பட்டை விட மென்மையான கழுத்தினோர சின்னமுடிகள்.

தன்மீதே நம்பிக்கையற்று மெதுவாக விலகி, அருகிருந்த தண்ணீரை எடுத்துக் குடித்தான். இப்போது அவளைப் பேச செய்தாகவேண்டும் என்று புத்தி அறிவுறுத்தியது. தண்ணீரை விழுங்கியபடி அவளையே பார்த்தான்.

தான் செய்வது அதிகப்படி என்று அவளுக்கே தோன்றியதோ என்னவோ! “எனக்கு… எனக்கு…”

“இப்போதான் பேச கத்துக்கறியா?”

“பிரமோத்!”

“சும்மா இப்டி சிணுங்கி கிளப்பிவிட்ட…” என விரல்நீட்டி எச்சரிக்க,

இதழோரமாய் முறுவல் பூத்தவள், “எனக்கு முன்னாடியே உங்களைப் பிடிக்கும்.” என்றாள். என்ன‌ முயன்றும் நாணம் தழுவா மொழியைப் பேச முடியவில்லை.

“எப்போ?” – நம்பிக்கையற்ற குரலில் கேட்டான்.

“ரொம்ப முன்னாடி…”

“ஆதாரம்?”

“நம்பலைன்னா போங்களேன்.” என்று முகத்தைத் திருப்பிக்கொண்டாள் அவள்.

“பொண்ணு பார்க்க வர்றப்போ நிமிர்ந்தே பார்க்க மாட்டாளாம். அப்புறமும் கல்யாணத்துல உனக்கு இஷ்டமா’ன்னு கேட்டா கண்ணை நாலு பக்கமும் உருட்டிட்டு, வாயை ‘கம்’ போட்டு ஒட்டிப்பாளாம். நிச்சயத்தன்னிக்கு சரி பிடிச்சிருக்குதுன்னு நினைச்சு கிஸ் பண்ணினா, காலைல தாலி கட்டினதும், ‘பயமா இருக்குது விஜி’ன்னு கண்ணைக் கசக்குவாளாம். அப்புறமும் கல்யாணமாகி ஒன்றரை மாசமாகியும் பக்கத்துலயே விடமாட்டாளாம். இதுல ஒருநாள் பிடிக்கும்ன்னு… அதுவும் ரொம்ப முன்னாடியே பிடிக்கும்ன்னு சொன்னா நான் நம்பணுமாம்! ஏண்டி உருட்டுறதுக்கும் ஒரு அளவில்ல?”

“என் லவ் உங்களுக்கு உருட்டா தெரியுதுல்ல? போங்க போங்க!” என்று மேஜை மேலிருந்து ‘தங்’கென்று கீழே இறங்க,

அவளின் இடது உள்ளங்கைப் பிடித்து வெடுக்கென்று இழுத்து அணைத்துக்கொண்டு கேட்டான். “என்ன சொன்ன? லவ்வா?”

‘அய்யய்யோ உளறிவிட்டோமேடா!’ என்ற அவளின் பார்வையில், “நான் என்னை ரொம்ப கன்ட்ரோல் பண்ணிட்டிருக்கேன் நிதி. ஜஸ்ட் ஸ்பீக் அவுட்!” எனவும்,

“என்கிட்ட நீங்க கேட்கற ஆதாரம் இருக்குது. ஆனா அதைப் பார்த்தப்புறம்தான் உங்களுக்கு என்னைப் பிடிக்கும்னா எனக்கு அது வேணாம்.” என்றாள் உம்மென்று!

“உன்னை இத்தனை நாளும் அழுத்தக்காரின்னு தான் நினைச்சிட்டிருந்தேன். ஆனா இவ்ளோ சென்ஸிட்டிவா நீ? மேன்!” எனச் செல்லமாய் அலுத்துக் கொண்டவன் சொன்னான்.

“சரி சொல்றேன் கேட்டுக்கோ! எப்போ நீ என்னை நிமிர்ந்து பார்க்காம இருந்தியோ அப்போவே உன்னை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கும்னு நினைக்கறேன். அதனாலதான் எனக்கு அப்போ சரியான கோபம் வந்தது. கல்யாணத்துக்கு முன்னாடி கோவில்ல பேசினப்பவும் சரி, அதுக்கப்புறம் மொபைல்ல பேசினப்பவும் சரி… பிடிக்காம ஒண்ணும் நீ சம்மதிக்கலன்னு புரிஞ்சது. அதனாலதான் தைரியமா தாலி கட்டினேன். தாலி கட்டிட்டு பக்கத்துல நான் இருக்கும்போது நீ உன் ஃப்ரெண்ட்கிட்ட ஆதரவு தேடுறன்னு எரிச்சல் வந்தது.

நீ அதிகமா பேசமாட்ட, ஆனா கவனிச்சு பார்த்தா உன் கண்ணு நிறைய பேசும். நானும் கவனிக்க ஆரம்பிச்சேன். ஏன்னு விடை தேட ஆரம்பிச்சேன்.”

அவளும் அதை உணர்ந்திருக்கிறாளே? ஏன் பிரமோத் தன்னிடம் மட்டும் ஆழமான மனோபாவம் கொண்டிருக்கிறான் என்று சிந்தித்திருக்கிறாளே?

“அப்டித்தான் கல்யாணத்துக்கு முன்னாடி மினிபஸ்ல நீயே தான் என்னை அவாய்ட் பண்ணிருக்கன்னு கெஸ் பண்ணேன். லைக் வைஸ், இப்போ வரை எதையோ மனசுல போட்டு குழப்பிட்டிருக்க’ன்னு புரிஞ்சு, கையைக் கட்டிக்கிட்டு தள்ளி நிற்கறேன். இதெல்லாம் லவ் இல்லைன்னு சொல்லுவியா?”

அவன் கூற்றில் பிரமிப்பை வெளிப்படுத்தியவள் மனதின் தூறலை மறைக்காமல், எம்பி அவன் கன்னத்தில் அழுத்த முத்தத்தைத் தந்துவிட்டு, விலகி அவள் உடையிருக்கும் பீரோவைத் திறந்து அதை எடுத்தாள்.

எதிர்பாராமல் கிடைத்த முத்தத்தில் இனிய திகைப்பில் இருந்தவன், அவள் எடுத்ததைக் கண்டு மேலும் சுக அதிர்வில் நின்றான். “ஹே தாவணிப்பொண்ணு!”

நிவர்த்திகாவின் கையில் இளநீல பிண்ணனியில், அடர்ஊதா நிற பட்டு நூலில் எம்ப்ராய்டரி மற்றும் கற்கள் வேலைப்பாடுகள் செய்திருந்த தாவணி.

“இன்னுமா இதை வச்சிருக்க?” நெஞ்சம் இந்த இன்பம் தாங்காமல் மூச்சுமுட்டுகிறது என்றது. காதலிக்கப்படுவதின் அபரிமிதமான பேரானந்தம் பிரமோத்தை நிலைக்கொள்ளாமல் பரிதவிக்கச் செய்தது. அவள் முன்பு தன்னைச் சித்தாராவின் காதலன் என்று ஒதுக்குகிறாளென்றும், அவளின் பெற்றோரின் நிர்பந்தத்திற்காய்த் தன்னை மணக்க சம்மதிக்கிறாள் என்றும் மனத்தாங்கலில் இருந்தவனை, அவளின் இந்த அடர்ந்த காதல் சுகமாய்த் திக்குமுக்காட வைத்தது.

“நீங்க கூடத்தான் மருதாணி ஒட்டின யூனிஃபார்ம் இன்னும் வச்சிருக்கீங்க.”

“நான் இன்னும் கொஞ்சம் சின்சியரா தேடியிருந்தா உன்னைக் கண்டுபிடிச்சிருப்பேனோ?” தவித்துப் போனான்.

“அப்போவே கண்டுபிடிச்சிருந்தா நான் உங்களைப் பூச்சாண்டி ரேன்ஞ்சுக்கு இமாஜின் பண்ணி பயந்து ஓடிருப்பேன்.”

“ஹோய்!”

“அப்போ எனக்கு அந்த உணர்வை காதல், க்ரஷ்’ங்கற‌ கேட்டகிரில எல்லாம் வைக்க தெரியல பிரமோத். உங்க டிரெஸ்ஸை அழுக்காக்கினதுக்கு நீங்க என்னை அடிச்சிருவீங்களோ இல்லன்னா அம்மாகிட்ட போட்டுக் கொடுத்துடுவீங்களோன்றது தான் அப்போ என் கவலையா இருந்தது. அன்னிக்கு ஈவ்னிங் ஃபுல்லா உங்களைப் பார்த்து பயந்ததுல, அப்போவே உங்க முகம் மனசுல பதிஞ்சிடுச்சு. ” எனச் சிரித்தவள், “இதுக்காகவே கருவேலம்பட்டில அம்மா விசேசத்துக்கு போனா நான் வரல’ன்னு சொல்லிடுவேன்.” என்றாள்.

“நானும் உன்னை ரொம்ப நாள் தேடினேன் நிதி. ஒருவேளை நீ இதைக் கட்டிட்டு வந்திருந்தா கண்டுபிடிச்சிருப்பேனோ என்னவோ!”

“ஹஹ… நீங்க என்னைப் பார்க்கல’ன்னு எனக்கு தெரியாதே? தேவையில்லாம பயந்திருக்கேன். ப்ளஸ் டூ முடிச்ச சமயத்துலதான் எனக்கு அந்தப் பயமே போச்சு.” என்றவளின் வதனத்தில் திடுமென நிழல் படிந்தது.

மெல்லிய குரலில் சொன்னாள். “அதுக்கப்புறமும் நான் இதை ரொம்ப நாள் பத்திரமா வச்சிருந்தேன். அம்மா, “கட்டவே மாட்டேங்கற, அப்புறம் ஏன் வச்சிருக்கணும்.‌ யாருக்காவது கொடுத்துடலாம்’ன்னு சொன்னாங்க. அப்போதான் மனசை என்னவோ பண்ணுச்சு. உங்க ஞாபகம் அதிகமா வந்தது. சோ, அப்டியே வச்சிருக்க தோணுச்சு. அப்புறம்… அப்புறம் ஒருநாள்…”

“ஒருநாள்?”

“உங்களைச் சித்துவோட லவரா பார்த்தப்போ… கஷ்டமா…” உணர்வுகளை மறைக்க முயன்றாலும் சிறு தவிப்பில் கன்னக்கதுப்புகளும் கண்களும் சிவந்தன.

“டேய்…”

“அப்போ இதைத் தூக்கிப் போட்டுடலாம்னுதான் நினைச்சேன். ஆனாலும் அத்தனை வருஷமா வச்சிருந்ததை அவ்ளோ ஈஸியா விட்டுட மனசு வரலை. தாவணியை மட்டும் சொல்லல!”

“ஸாரிம்மா…”

“ச்சு! உங்களுக்கு தெரியுமா என்ன?”

“……”

“நான் ரொம்ப சீரியஸா இருக்கேன்னு எனக்கே என்‌ மனசு அப்போ தான் புரிஞ்சது. அந்த அஞ்சு மாசமும் ஞாயித்துக்கிழமை தவிர, தினமும் உங்களைப் பார்த்தேன். பஸ்ல நிறையப் பேருக்கு உங்க மேல ஒரு ஹீரோ வொர்ஷிப் இருந்தது, விஜிக்கு கூட! ‘மேபீ நமக்கும் அப்டித்தான் போல! நாம தான் வேற விதமா போட்டு குழப்பிக்கறோம்’னு நானே என் மனசை சமாதானப்படுத்திக்கிட்டேன். நீங்க என்னைப் பார்க்கவே இல்லன்றது எனக்குத் தெரியாதே? சோ, சின்ன வயசுல நடந்ததை நீங்க மறந்துட்ட மாதிரி நானும் மறந்துடணும்னு நினைச்சேன். இருந்தும்… ப்ச்! சித்து லவர்கிட்ட என் முகத்தைக் காட்ட பிடிக்கல. அதனாலதான் ஒண்ணு, ரெண்டு தடவை தவிர, நீங்க என்னைப் பார்த்திருக்க முடியாது.”

“நிதிம்மா…”

“விடுங்க பிரமோத்! முடிஞ்சதை மாத்த முடியாதுல்ல? நீங்க சித்துவுக்காக காலேஜ்க்கே வந்தப்போ ஏனோ மனசு வலிச்சது. இது லவ் இல்லைன்னா ஏன் இவ்ளோ ஃபீல் பண்றோம்னு மறுபடியும் குழப்பம். அதான் நீங்க கொடுத்த லெட்டரை உடனே சித்துக்கிட்ட கொடுக்க சொல்லி நான்தான் விஜியைப் போக சொன்னேன். அப்டியாவது உங்களுக்கு அவளோட கல்யாணம் ஆகிட்டா அப்புறம் ஈஸியா மறந்துடலாம்னு தோணுச்சு.”

“மறந்துடுவியாடீ?” என சிறு நடுக்கத்துடனும் கோபத்துடனும் அவளை இறுக்கிக்கொண்டான்.

“அப்டித்தான் நான் நினைச்சேன். ஆனா சித்து சொன்னது வேற மாதிரி இருந்தது. அவளுக்கு அந்த ஃபாரின் அருணைப் பிடிச்சிருக்கறதா சொன்னா. நானும் விஜியும் உங்களுக்காக ஃபீல் பண்ணிட்டிருக்கும்போது நீங்க அவ சொன்னதைக் கேட்டு ‘தாங்க் காட்’ன்னு சொல்லி சந்தோஷப்பட்டீங்களாம். ஏன் பிரமோத் அப்டி சொன்னீங்க?” என நிமிர்ந்து அவன் முகம் பார்த்துக் கேட்டாள்.

இப்போதும் விஜியைப் போல் இவளுக்கும் அதற்கான பதிலைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் இருந்தது. அதை அவள் கண்களும் பிரதிபலித்துவிட்டது போலும்.

“பயங்கர க்யூரியஸ்ல இருக்க போலருக்குது?”

“ஆமா, க்ளைமேக்ஸ் தெரியாத சீரியல் மாதிரின்னு நானும் விஜியும் பேசிப்போம்.”

பக்கென சிரித்துவிட்டு சொன்னான். “நான்தான் சொன்னேனே… நான் எப்பவும் அவக்கிட்ட சீரியஸா இருந்ததில்ல. தாத்தா கூட வம்பு பண்றதுக்கு என்னவோ செய்ய போய், அது எப்டியோ சொதப்பிடுச்சு. அப்புறம்தான் ஒரு பொம்பளைப் பிள்ள லைஃப்ல விளையாடிருக்கோம்னு கில்டியா ஃபீல் பண்ணேன்.

அதனாலதான் காலேஜ் வரை வந்தேன். அந்த லெட்டர்ல கூட ‘உனக்கு விருப்பம்னா சொல்லு, வீட்ல வந்து பேசறேன்’னு எழுதினேன். ஆனா அவளே என்னை வேணாம்னு சொன்னதோட இல்லாம, அவளுக்கு நல்ல லைஃப் அமையுதுன்னு உன் ஃப்ரெண்ட் சொன்னதும், அவ்ளோ நேரம் ஏதோ கழுத்தைப் பிடிச்சு நெறிச்ச உணர்வு பட்டுன்னு ஓடிட்ட ஃபீல்! அதான் அப்டி சொன்னேன்.”

“ஒருவேளை சித்து ஓகே சொல்லிருந்தா?”

“நான் அவ வீட்ல பேசணும்னு இங்கே எல்லார்க்கிட்டேயும் சொல்லிருப்பேன்.”

“எல்லாரும் ஓகே சொல்லிருந்தா?”

“என் லைஃப்ல சரவணன்னு ஒரு ஃபுட்பால் இருக்கே… அதை சங்கர்ன்ற கோச் எத்திவிட்டு, கோல் போட்ருக்கும்.” என்று விளையாட்டாக சொன்னவன், ஆழ்ந்த பார்வையுடன், “அதுல நிவர்த்திகா’ன்ற கப்பை ஜெயிச்சு, டீம்ல கேப்டன்’னு சொல்லி ஒப்புக்கு சப்பாணியா நிற்க வச்சிருக்கிற என்கிட்ட கொடுத்துருக்கும்.” எனவும்,

“ஹஹ்ஹஹ… அச்சோ… இதை உடனே விஜிக்கிட்ட சொல்லணும். நீங்க ஏன் ‘தாங்க் காட்’ சொன்னீங்கன்னு தெரியாம கன்ஃப்யூஷன்ல இருக்கா!” என்று நகர்ந்தவளை,

“கொன்னேபுடுவேன்’டி! மணி பத்து. நான் மட்டுமில்ல, இப்ப நீ கால் பண்ணினா உன் ஃப்ரெண்டோட ஃபியான்ஸி -அந்த ஜீவாவும் உன்னைக் கொல்லுவான்.”

“ஆமால்ல? இனி அவக்கிட்ட கூட டைம் பார்த்துதான் பேசணும்.” என பிண்ணனியில் ‘லாலாலா…’ ஒலிக்கவிட்டவளின் பின்னந்தலையைத் தட்டினான்.

“இந்த ஃபீலிங் காட்டுறதெல்லாம் வேற டைம்ல வச்சுக்கணும். இட்’ஸ் அவர்‌ பெட் டைம்.” என்று ரகசிய குரலில் சொல்ல, மீண்டும் சிறு பிள்ளையென முகத்தைத் தூக்கிவைத்துக் கொண்டாள் அவள்.

கடுப்பாகிப் போனவன், “சரி சொல்லு, கல்யாணத்துக்கு முன்னாடி அத்தனை வாட்டி பிடிச்சிருக்கா பிடிச்சிருக்கான்னு கேட்டேனே… இப்போ சொன்னதுல பாதியாவது அப்போ சொல்லிருக்கலாம்ல?” என குரல் உயர்த்த,

“மெதுவா பேசுங்க பிரமோத்!” என கெஞ்சலாய்க் கண்டித்தவள், “எப்டி சொல்ல முடியும்? பூ வச்சிட்டு போன மறுநாள் வந்து அப்டி வையறீங்க? ‘பிரமோத்தை பிடிக்கலன்னு சொல்லு’ன்னு சொல்றீங்க? நான் ஏற்கனவே நீங்கதான் மாப்பிள்ளைன்னு தெரிஞ்சதும் அவ்ளோ குழப்பத்துல இருந்தேன். சித்துவோட லவரைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேனா? நான்‌ மனசுல நினைச்சவரைப் பண்ணிக்க போறேனா’ன்னு அவ்ளோ போராட்டம். அப்பா, அம்மாவோட எதிர்பார்ப்பு ஒரு பக்கம்! அன்னிக்கு வச்ச மருதாணிகூட அரைகுறையா விட்டுறளவுக்கு குழப்பம்.”

பிரமோத் அதனை நினைவு கூர்ந்தான். அவளுக்கும் அதே நினைவு. கூடவே, ‘வச்ச மருதாணியை அழிக்க வேண்டாம்’ என்ற அப்பாவின் குரலும்!

“நீங்க அப்டி பேசிட்டு போனதும் எனக்கு எவ்ளோ கஷ்டமா இருந்தது தெரியுமா? அடுத்த நாள் அப்பாகிட்ட நீங்க சொன்ன மாதிரி இதுலாம் வேணாம்னு சொல்லிடலாம்னு இருந்தேன். விஜி தான் என்னை சமாதானப்படுத்தினா. நீங்க சித்துவை லவ் பண்ணவே இல்லன்னு சொன்னா! அப்புறம்தான் என் மனசு கொஞ்சம் சமாதானம் ஆச்சு.”

“வாழ்க விஜி!” என்றான், முதல்முறையாக விஜி மேல் எந்த துவேஷமுமில்லாமல்!

“அப்புறமும் நீங்க கேட்கும்போது ஒரு தயக்கம்ம்…”

“இழுக்காதே! பட்டுன்னு சொல்லு. டைம் போகுதுடி…”

இவள் அவனை முறைப்புடன் பார்க்க, “என் அவஸ்தை எனக்குத்தான் தெரியும். சொல்லு.” எனவும்,

“யூ ஆர் பேட், பிரமோத்!” என்றாள்.

“இன்னும் ஆரம்பிக்கவே இல்ல.”

“பொய். நீங்க ஆரம்பிச்சீங்க.”

“ஃபர்ஸ்ட் நைட்ல கூட ஓரமா இருந்தவனைப் பார்த்து, அபாண்டமா பேசறியேடி, அண்ட புழுகுனி!”

“அதில்லை. அக்கா ஃபங்ஷன்ல நான் பார்த்தப்போ… நீங்க… சித்துவை… கி கிஸ் பண்ணீங்க.” இத்தனை நாட்கள் மனதில் மருகிக் கிடந்த விடயத்தை நேரடியாக அவன் முகம் பார்த்து சொல்லி முடிக்கும்முன் நெஞ்சில் நீர் வற்றிப்போனது.

சுர்ரென்று ஏறிய கோபத்தில் அவள் கழுத்தைப் பிடித்துவிட்டான் அவன். “சும்மா சொல்லி பார்க்கலாம்ன்னு இஷ்டத்துக்கு பேசறியாடீ? காவாலிப் பய’ன்னு முடிவே பண்ணிட்டல்ல?”

அவன் தோள்களில் அடித்து, கழுத்தைப் பிடித்திருந்த கையில் கிள்ளி தன்னை விடுவித்துக்கொண்டாள் நிவர்த்திகா. அன்று போல் அழுத்திப் பிடிக்கவில்லை என்றாலும் சிறிது வலித்தது.

அவள் கழுத்தைத் தடவி, இருமுவதைக் கண்டு நிதானத்திற்கு வந்தவன், “நிதி…” என இழுக்க,

“என்ன பழக்கம்? சும்மா சும்மா கழுத்தை நெரிக்கறது?” என கோபம் கொண்டாள்.

“ஸாரி. நானும் நிதானமா இருக்கத்தான் டிரைப் பண்றேன்.”

“……”

அவளின் முறைப்பு தொடர, சமரசத்திற்கு வந்தான். ” நான் அவளைத் தனியா பார்த்து பேசினதே அந்த ஒருநாள்தான். அதனாலதான் நீ ரெண்டு பேரையும் அங்கே தான் வச்சு பார்த்திருப்ப’ன்னு சரியா கெஸ் பண்ணேன். மோர்ஓவர் நிஜமா அவக்கிட்ட ஒருநாள் கூட அப்டி அப்ரோச் பண்ணதே இல்ல. பாட்டு போட்டதைத் தவிர ஒரு பாவமும் அறியாதவனைப் போய் என்னலாம் பேசற நீ?”

“ஹாங்! ஒரு பாவமும் அறியாதவர்தான் அவ்ளோ க்ளோஸா நின்னு பேசினீங்களோ?”

“அடச்சீ! அவக்கிட்ட அன்னிக்கு நான் மொபைல் நம்பரைக் கேட்டுட்டு இருந்தேன்’டி. அவ தராம ஓடிட்டா!”

“பொய் சொல்லாதீங்க பிரமோத். மொபைல் நம்பரை அவ்ளோ குனிஞ்சு நின்னுதான் கேட்பாங்களா?”

“கிறுக்கச்சி! என் இடுப்பு உசரத்துல இருக்கறவக்கிட்ட குனிஞ்சு கேட்காம வேற எப்டி கேட்கறதாம்? அன்னிக்கு நான் அவளை கிஸ் பண்ணதைப் பார்த்தியாடி நீ?”

“…….”

“இன்னும் வாயை மூடிட்டு இருந்த…. கொன்னுடுவேன். பதில் சொல்லு. பார்த்தியா?”

இல்லையென தயக்கமானதொரு தலையாட்டல் இவளிடம்!

“அப்புறம் எப்டி சொல்ற? உன் கற்பனைக்கு நான் எப்டி பொறுப்பாக முடியும்?”

நிவர்த்திகா சற்று நேரம் மௌனத்தில் ஆழ்ந்தாள். இத்தனை நாட்கள் நினைவிலும் அலச அச்சங்கொண்டிருந்த நிகழ்வை மீண்டும் அலசிப் பார்த்தாள். பிரமோத் தன்னை முத்தமிடும்போது கன்னத்தையும் கழுத்தடியையும் பிடித்துக் கொள்வதைப் போல் அன்று செய்யவில்லை. உற்சாக மிகுதியில் சித்தாராவின் தோள்களைப் பிடித்து உலுக்கினான். முகமருகே குனிந்தான். அடுத்து முத்தம்தான் தரப் போகிறான் என்றெண்ணி இவள் மனம் கனத்துப்போய் ஓடிவிட்டாள்.

பின்னர் விஜியிடம் கதைச் சொல்லும் ஆர்வத்தில், வேறெதையும் சிந்திக்கவுமில்லை. தாமேதான் அளந்துவிட்டோம் என்பதை புத்தி ஒப்புக்கொண்டது.

அவள் நிமிரும் வரை பொறுமையாக காத்திருந்த பிரமோத், தவறிழைத்த குழந்தையாய் விழி மலர்த்தியவளை மீண்டும் தன்னிடம் இழுத்துக்கொண்டான். “க்ளியர்?”

“ம்ம்! ஸாரி.”

“இதனாலதான் நான் கிஸ் பண்ணும் போதெல்லாம் அழுமூஞ்சியைக் காட்டினியா?”

“ம்ம்! நீங்க ஃபர்ஸ்ட் டைம்னு சொல்லவும்… என்கிட்ட உண்மையா இல்லன்னு அழுகை வந்தது.”

“ஹப்பா! எவ்ளோ சென்ஸிட்டிவா இருக்கே நிதி நீ? இதனாலதான் வாயைத் திறக்காத அமுக்குணிங்களை டேன்ஞ்சர்ன்னு சொல்றாங்க போல!”

“ஸாரி.”

“செல்லாது செல்லாது. பதிலுக்கு ஐ லவ் யூ சொல்லி, நீயும் கிஸ் பண்ணனும்.”

இனி கணவனிடம் மட்டுமாவது திறந்த புத்தகமாயிருக்க வேண்டுமென நினைத்துக் கொண்டவள், சஞ்சலமற்ற மனத்துடன் நிர்மலமாக புன்னகைத்தாள். “உங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும் பிரமோத். லவ் யூ டில் ஃபுல் ஸ்டாப் ஆஃப் மை லைஃப்!” என்று அவன் சொல்லித் தந்ததைப் போல் முத்தமிட,

“எனக்கும் உன்னை ரொம்ப பிடிச்சிருக்குது, மை ஹாட் ஸ்டஃப் பொண்டாட்டி… உன்னை மட்டும்தான்!” என்றபடி அவள் கையிலிருந்த தாவணியோடு அவளையும் சுருட்டிக்கொண்டு கட்டிலில் சாய,

“இப்போவா?” என்று கடிகாரத்தைப் பார்த்தாள் அவள்‌.

“வேறெப்போ? இதுக்காக அஷ்டமி, நவமி, கௌதமிலாம் பார்த்துட்டு இருப்பாங்களா? வாடி!”

கழுத்தின் பக்கவாட்டில் படர்ந்த அவன் விரல்களை விலக்கி தலைத் தூக்கிக் கேட்டாள். “யாரு கௌதமி?”

“அடிங்! இனியொரு வார்த்தை பேசின…”

தன் இருபத்தெட்டு வருட பிரம்மச்சரிய தபசை, நிவர்த்திகாவை ஆட்கொண்டு நிவர்த்தி செய்தான் பிரமோத். மழையும் மங்கையும் அவன் மோகத்திற்கு கீதம் சேர்த்தனர்.

தூறல் தூறும் 🌧️🌧️🌧️

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
46
+1
3
+1
1

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  4 Comments

  1. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

  2. Naveena Ramesh

   அம்மா தெய்வமே இப்பவாச்சும் வாய தொறந்தியே🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰