Loading

அத்தியாயம் 26

கேட்ட சங்கதியில், நெஞ்சில் கை வைத்து அதிர்ந்து, வார்த்தையில் வார்க்க முடியா சோகத்தை முகத்தில் ஏந்தியபடி பார்த்தான், பிரமோத். அவன் பிண்ணனியில்
‘உன்ன நெனச்சேன்
பாட்டு படிச்சேன்
தங்கமே ஞானத்தங்கமே…
என்ன நெனச்சேன்
நானும் சிரிச்சேன்
தங்கமே ஞானத்தங்கமே…’ என்ற பாடல் ஒலிக்க, அவனும் ‘அப்பு கமலின்’ ஏமாற்றத்தை முகத்தில் பிரதிபலித்தான். “எப்டி… எப்டி மச்சான்…”

“அடச்சீ! முதல்ல இழவு விழுந்த மாதிரி கொடுக்கற இந்த ரியாக்ஷனை மாத்தித் தொலைடா நாதாரி!” – பாலா.

“எப்பிடிறா… உன்னால முடிஞ்சது? என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லணும்னு கூட உனக்கு தோணலையா? நாம என்ன அப்டியா பழகிருக்கோம்?”

“எதுக்குப்பா… சொன்ன மறுநிமிஷம் வந்து கும்மியடிச்சிட்டு போறதுக்கா?”

இருவரின் நாடகத்தையும் சுற்றியிருந்தவர்கள் மென்னகையுடன் பார்த்திருந்தனர். பாலாவின் காதல் வெற்றியடைந்ததையடுத்து, இரு வீட்டாரும் திருமணத்திற்கு நாள் குறித்திருக்கிறார்களாம். பிரமோத் வீட்டில் சொல்லிவிட்டு, நண்பனை அழைப்பிதழின் வடிவமைப்பு தேர்ந்தெடுக்க அழைத்துப் போக வந்த இடத்தில்தான், பிரமோத் தன் ‘செவாலியே’ நடிப்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறான்.

“ப்ச் நல்லதுக்கே காலமில்லை!” என பிரமோத் மூக்கை உறிஞ்ச,

பாலா அருகிருந்த நிவர்த்திகாவைப் பார்த்து, “இந்தா பாரு காலண்டர் மகாலட்சுமி! நீ கல்யாணத்துக்கு கட்டாயம் வரணும். இவனை மட்டும் கூட்டிட்டு வராதே சொல்லிட்டேன்.” என்று சொல்ல, கலகலவென சிரித்தாள் அவள்.

மனைவியின் சிரிப்பில் இவன் மனம் சிக்கிக்கொண்டது. ‘சன்ஷைன் ஸ்மைல்!’ என சொல்லிக்கொண்டான்.

இன்னும் இருவருக்குள்ளும் எதுவும் சரியாகவில்லை. இரண்டு நாட்களாக அவனிடம் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கிறாள் அவள். ஒரு கணம் யாருமறியாமல் அவளைப் பார்த்துவிட்டு, மீண்டும் பாலாவிடம் வம்பு வளர்த்தான்.

“அவனை விடு பாலாண்ணே, என்ன இருந்தாலும் நீ நம்மாளு! கல்யாண வேலையெல்லாம் நான் பார்த்துக்கமாட்டேனா?” என அரவிந்தனும் சேர்ந்து பாலாவை அழ வைக்க, அதகளப்பட்டது வீடு.

அப்போது வாசலில் கார் வந்து நிற்கும் ஒலியில் அசோகன் எட்டிப்பார்த்தார். பார்த்தவர் புளங்காகிதமடைந்தவராக உள்ளே பார்த்து காஞ்சனாவிடம், “மதினி, உங்க தலைப்பிள்ளை வந்திருக்கான் பாருங்க!” என்றுவிட்டு வாசலுக்கு ஓடினார்.

அடுத்தகணம் அனைவரும் வாசலில் கூடினர். அக்கம்பக்கத்தினரும் கூடிவிட்டனர். ஒவ்வொருவராக மனோவிடம் நலம் விசாரித்தனர். ஒருவழியாக வீட்டிற்குள் நுழைய காஞ்சனா மகனைக் கட்டிக்கொண்டு கண்ணீர் உகுத்தார்.

சரவணனின் மூன்று மகன்களுக்கும் களையான முகம். ஸ்ரீதரன் மட்டும் அப்பா சரவணனின் முக ஜாடையிலிருப்பான். மனோவும் பிரமோத்தும் தாத்தா சங்கரனின் ஜாடை. இருவருக்குமே தலைக் கொள்ளாத அடர்ந்த சிகை! ஆனால் இப்போது வந்திருக்கும் மனோவின் தோற்றமே முற்றிலும் மாறிப் போயிருந்தது. முன்நெற்றி முடி ஏறி, கன்னங்கள் ஒட்டி, உடல் மெலிந்து, உதடு கறுத்து என வயதான தோற்றத்தில் இருந்தான் மனோ. அப்படி ஒன்றும் அவனுக்கு வயதும் ஆகிவிடவில்லை. பிரமோத்தை விட ஆறே வயதுகள் மூத்தவன்.

“ராஜா மாதிரி‌ இருந்த பையன்… இப்டி பஞ்சத்துல அடிபட்டவன் மாதிரி திரும்ப வந்திருக்கியே… மனசே ஆறலையேடா‌ மனோ…”

“என் வேலை அப்டிம்மா. சரியான தூக்கமில்லை அதுதான்…”

“உனக்கு ஏண்டா இந்த வேண்டாத வேலை? பேசாம இங்கேயே இருந்துடு தங்கம்… அம்மாவுக்காகடா…”

“ப்ச் ம்மா..!”

“உன் வீட்டுக்காரி வரலையா? கூட்டிட்டு வந்தா அம்மா இங்கேயே பிடிச்சு வச்சுக்குவேன்னு விட்டுட்டு வந்துட்டியா?”

“காஞ்சனா, இப்போதானே வந்திருக்கான். அதுக்குள்ள ஏன்‌ ஆரம்பிக்கற?” என‌ மனைவியைக் கடிந்த சரவணன், “உன் ரூம் ரெடியா இருக்குது மனோ. போய்க் குளிச்சிட்டு சாப்பிட வா.” எனவும், தலையசைத்தவன் சிறிது நேரத்தில் குளித்துவிட்டு வந்தான்.

சங்கரன் பேரனை விட்டு இந்தப் பக்கம் அந்தப் பக்கம் நகரவேயில்லை. அவனிடம் எப்படிப் பேசினால் அவனுக்கு பிடிக்கும் என வாத்தியாரிடம் நல்லப் பெயர் வாங்கிட நினைக்கும் மாணவனாய் அவன் முகம் பார்த்திருந்தார். அமுதினி புதியவனிடமிருந்து தப்பிக்க, பெரிய தாத்தாவின் மடியே பாதுகாப்பு என்று சங்கரன் மடியைவிட்டு இறங்கவில்லை‌.

ஒவ்வொருவராக அவனிடம் ஓரிரு வார்த்தைகள் பேசினர். அமலா பிரியாவையும் நிவர்த்திகாவையும் அவனுக்கு அறிமுகப்படுத்தினார். இருவரும், ‘ஹாய், ஹலோ’ என்று நிறுத்திக்கொண்டனர். தங்கள் கணவன்மார்களின் உடன்பிறந்தவன் என்ற முறையில், மற்றவர்கள் பேசக் கேட்டிருந்தாலும், இருவருக்கும் மனோ முற்றிலும் புதியவனல்லவா?

ஆனால் அரவிந்தனும் அவனிடம் ஏதும் பேசாமலிருந்ததுதான் விந்தை! ஏனோ அவனுக்கு மனோவிடம் ஒட்டுதல் ஏற்படவில்லை. அவனும் ‘ஹாய்’ சொன்னதோடு சரி.

அவர்களையெல்லாம் விட, அண்ணன் என்றால் மட்டும் அடி சறுக்கும் பிரமோத்தும் மனோவிடம் ஏதோ ஒரு நெருடலை உணர்ந்ததுதான் முத்தாய்ப்பு! இருந்தும் அதைப் புறந்தள்ளினான். எத்தனை வருடங்கள் எப்படியெப்படியெல்லாமோ அழைத்தும் வராதவன் இன்று வந்திருக்கிறானே! அதிலேயே மனம் நிறைந்திருந்ததால் மற்றது எதுவும் பெரிதாகத் தெரியவில்லை. அவன் அடிக்கடி பேசியிருப்பதால் அவனால் அண்ணனிடம் சகஜமாக பேசவும் முடிந்தது.

சரவணன் நடப்பதை விட்டேற்றியாக பார்த்திருந்தார். மகனின் மேல் பாசமென்று சிறு பார்வையிலும் வெளிப்படுத்தவில்லை‌. அதில் அசோகன் சம்சயத்துடன் அண்ணனை நோக்கினார்.

வெளியே சென்றிருந்த ஸ்ரீதரனும் வந்துவிட, பாலா பிரமோத்தைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு விடைபெற்றுக்கொண்டான்.

“எப்டியோ குரங்கு வித்தையெல்லாம் காமிச்சு உங்கண்ணனை வர வச்சிட்ட! இப்போ சந்தோஷமா மாப்ள?”

“……”

“என்னடா?”

“தெரியல மச்சான். அம்மா எவ்ளோ ஏக்கத்தை மனசுக்குள்ளே வச்சிட்டு இருந்திருக்காங்க! அப்பா எதையும் வெளியே காட்டிக்கல அவ்ளோதான்! இந்த சங்கர் கூட, எங்கே பேசினா அவனுக்கு பிடிக்குமோ என்னவோன்னு பாவமா உட்கார்ந்திருக்கார்டா.”

“விடுடா. மனோ’ண்ணே இப்போதானே வந்திருக்கார். போக போக எல்லாம் சரியாகிடும்.”

“அதான் பாலா யோசிக்கறேன். அவன் இங்கே வந்த காரணமோ, கொஞ்சநாள்ல திரும்பி போய்டுவான்னோ யாருக்கும் தெரியாது. தெரியும்போது எல்லாரும் எவ்ளோ உடைஞ்சு போயிடுவாங்கன்னு நினைச்சுப் பார்க்கவே கஷ்டமா இருக்குது மச்சி.”

“ஏண்டா உங்கண்ணே கிட்ட நீ பேசி பார்க்க முடியாதா? அப்டியும் பணத்தேவைன்னு சொன்னார்ன்னா, உங்கப்பாகிட்டயோ தாத்தாகிட்டயோ கடனா வாங்கிக்க சொல்லேன்.”

“கடனா? ஹ! இருக்கற நிலைமைல இந்த சங்கர் எல்லாத்தையும் தூக்கி கொடுத்தாலும் ஆச்சரியப்படறதுக்கில்ல. ப்ச்! அவருக்கு பாசமே இல்லன்னு நான்தான் தப்பா புரிஞ்சிக்கிட்டேனோன்னு தோணுதுடா.” என்று வருந்தினான்.

“அவர் உங்களுக்கு தாத்தா பிரமோத். அக்கறையும் பாசமும் இல்லாம போயிடுமா? அந்தக் காலத்து மனுஷன் பாசத்தை வெளிக்காட்டாம விரைப்பா இருந்தே பழகிட்டார். ஆனா அவரையும் உனக்கு சரிசமமா இறங்கி பேச வச்சது நீதாண்டா!” எனவும், கீற்று புன்னகை பிரமோத்திடம்!

“கொஞ்ச நஞ்சமா அவர்கிட்ட வம்பு வளர்த்திருக்க? உன் கூட சேர்ந்து கொஞ்சநாள் முன்னாடி வரை நானுமே அவரைத் தப்பாதான் நினைச்சிருந்தேன்…” என்ற பாலாவை, பிரமோத் கேள்வியாகப் பார்க்க, “ஹ… இன்விடேஷன் கோல்டு அண்ட் ராயல் ப்ளூ ஷேட்ல வேணுமாம்டா. வித்யா சொல்லிருக்கா!” என்று உடனடியாக பேச்சை மாற்றினான்.

“தாத்தா எப்போ உன்கிட்ட பேசினார்?” எனக் கச்சிதமாக கேட்டான் பிரமோத்.

பாலாவிடம் பெரும் தயக்கம்! முன்பு சித்தாரா விடயத்தில் பிரமோத்திற்காக, சங்கரன் தன்னை அணுகியதை எப்படியும் என்றேனும் ஒருநாள் நண்பனிடம் சொல்லுவான்தான். ஆனால் இப்போது இன்னும் பிரமோத் நிவர்த்திகாவிற்கிடையேயான சிக்கல் சரியாகாமல் இருக்கையில், அதைச் சொல்வதற்கான நேரம் இதுவல்லவே என்று தயங்கினான்.

அவனின் தயக்கம் பிரமோத்திற்கு எரிச்சலூட்டியது. “பாலா! வீட்ல இப்டித்தான் ஒருத்தி வாயே திறக்காம என்னைக் கடுப்பேத்திக்கிட்டு இருக்கா! இப்போ நீயும்…”

அது அவளின் சுபாவம். இருபத்திரண்டு வருடங்களாக அவள் அப்படித்தான் இருக்கிறாள். இவன் இரண்டே வாரங்களில் அவள் மாறவேண்டுமென எதிர்பார்க்கிறான்.

“இல்லல்ல… உன்கிட்ட சொல்லக்கூடாதுன்னு இல்ல மச்சான்… இப்ப சொன்ன பாரு, நிவர்த்தி கடுப்பேத்துறான்னு… அதான்… நான் சொல்லி நீ இன்னும் அந்தப் பிள்ள மேல வன்மம் வச்சிக்கிட்டன்னா…”

“யாரு நான் அவ மேல வன்மமா இருக்கேனா? போடா டேய்! அவதான் எதையோ மனசுல வச்சிக்கிட்டு மருகிட்டிருக்கா.” என்றவன் ஞாயிற்றுக்கிழமை சித்தாராவின் வரவால் வீட்டில் நடந்தவற்றைச் சொன்னான்.

எனில், சித்தாராவின் வரவு நண்பனை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை. அவனின் சித்தம் முழுவதும் நிவர்த்திகாவிடமே இருந்திருக்கிறது என்பதைக் கண்டுகொண்ட பாலா, அதன்பின் திருமணத்திற்கு முன்பு சங்கரன் தன்னை அணுகியதைப் பிரமோத்திடம் பகிர யோசிக்கவில்லை.

சித்தாராவின் தந்தை பாலசந்திரன், சங்கரன் தாத்தாவைச் சந்தித்து பேசியதைச் சொன்னவன், “அப்புறம் தாத்தா என்னைக் கூப்பிட்டு கேட்டார். நான்தான் உனக்கு அந்தக் கிழவி மேல லவ்வும் இல்ல; ஒரு மண்ணாங்கட்டியுமில்லன்னு சொன்னேன். அதுக்கப்புறம்தான் அவர் அவளுக்கு வேற மாப்பிள்ளையைப் பார்த்தார். ஒருவேளை நான் வேற மாதிரி சொல்லிருந்தா, அவருக்கு இஷ்டமில்லைன்னாலும் அவளோட அப்பாகிட்ட உனக்காக பேசிருப்பார்.” என்றுவிட்டு பிரமோத்தை ஓரக்கண்ணால் பார்க்க,

“சதிகார நாயே! நீ என் காதல்ல புல்டோஸர் விட்டு விளையாடிட்டு, நான் உன் காதல்ல கும்மியடிக்கறேன்னா சொல்ற?” என்று பல்லைக் கடித்தான்.

“டேய் இன்னொருக்கா நீ புத்திக்கெட்டு அந்தக் கிழவி பின்னாடி சுத்தினதைக் காதல்னு சொல்லாதே! இப்டித்தான் நிவர்த்தி முன்னாடியும் லூசு மாதிரி எதையாவது பேசி வச்சிருப்ப! அதான் அந்தப் பிள்ள மருகிட்டு கிடக்குது.” எனவும், இவன் மனதில் மனைவியின் ஆக்ரமிப்பு.

இப்போது நிவர்த்திகா தள்ளி இருந்தாலும் அது அத்தனைப் பெரிய குறையாக தெரியவில்லை. குறுக்கெழுத்து விளையாட்டைப் போல் சுவாரஸ்யம் கூட்டும் அவள் கண்களும் தன் வீட்டில் ரசிகக் கூட்டத்தைச் சேர்த்து வைத்திருக்கும் அவளின் இளநகையும் அவ்வப்போது இவன் ருசிக்கும் இதழ் முத்தங்களுமென நினைக்கையிலேயே மனதில் மழையை ஊற்றுகிறாள்.

‘அவள் தன் வாழ்வில் வராமல் போயிருந்தால்?’ என்ற நினைவும்கூட கசப்பை ஏற்படுத்துகிறது. இதில் சித்தாராவின் சுவடுமில்லை; அதனால் பாலாவின்மீது கோபமும் வரவில்லை. மாறாக, மனைவியின் மனதில் என்ன சங்கதி கிடந்து அரிக்கிறது என்ற சிந்தனையே!

பாலா சொல்வது சந்தேகமற சர்வ சத்தியமான உண்மை என்று உள்மனம் அடித்துக் கூறியது. சொன்னாளே… ‘இன்னும் உன் மனதில் சித்தாரா இருக்கிறாள்’ என்று! முதலில் கண்ணைப் பார்ப்பதை நிறுத்திவிட்டு, அவளைப் பேச செய்யவேண்டும் என நினைத்தவனுக்கு தாபம் பெருகியது.

         *********

ஒவ்வொருவராக வீடு வந்து சேரும் மாலை நேரம். பெண்கள் கதைப் பேசிக்கொண்டே சிற்றுண்டி தயாரிப்பில் இருக்க, அதிசயமாக சரவணனும் அசோகனும் விரைவில் வீடு திரும்பியிருந்தனர். மனோ அவனறையில் இருந்தான். இத்தனை வருடங்களுக்குப் பிறகு அவனால் வீட்டில் ஒன்ற முடியவில்லை. வழக்கம்போல் சங்கரனும் ஸ்ரீதரனும் காய்கறி அறுவடையின் வரவு குறித்து பேசிக்கொண்டிருக்க, பிரமோத் இன்னும் வந்திருக்கவில்லை.

இப்போதெல்லாம் சங்கரன் இளைப்பு காரணமாக, நாற்றங்காலை மட்டும் மேற்பார்வை பார்த்துவிட்டு அடிக்கடி ஓய்வெடுத்துக் கொள்வதால், பிரமோத்திற்கு வாழை, தென்னந்தோப்பு, நெல், காய்கறி காடு, அறுவடை, ஏற்றுமதி, வெளியூர் பயணம், பணவசூல் என்று ஓயாத வேலை இருந்தது. இப்போதும் விருதுநகர் வரை சென்றிருக்கிறான் என்றான் ஸ்ரீ. விடுமுறை நாட்களில் அரவிந்தன் உதவிக்கு போவான்.

இப்போது அமுதினிக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்த அரவிந்தனுக்கு, வெங்காய பக்கோடாவும் ஃபில்டர் காஃபியும் தந்துவிட்டு, நூறாவது முறையாக வாசலைப் பார்த்துவிட்டுப் போனாள் நிவர்த்திகா.

அவள் கணவனைத் தேடுகிறாளென்று மற்ற மூன்று பெண்களும் தங்களுக்குள் கிசுகிசுத்துச் சிரித்துக்கொண்டனர். ஆனால் நிவர்த்திகாவின், உள்ளத்தை மறைக்கும் புன்னகை முகத்தை இப்போது பிரமோத் பார்த்திருந்தால், அவள் ஏதோவொரு பதற்றத்தில் இருக்கிறாளென கச்சிதமாக கணித்திருப்பான்.

அப்படி கணிப்பவனும் அவளை அதிகநேரம் காக்க வைக்காமல் வந்துவிட, நிவர்த்திகாவிற்கு நெஞ்சின் நடுவே பேரலையொன்று சுழற்றியடித்தது. அறைக்குப் போய் குளித்துவிட்டு வந்தவன், இன்றைய வேலைக் குறித்து தாத்தாவிடம் பகிர்ந்தபடி மனைவி தந்த சிற்றுண்டியைக் காலி செய்தான்‌.

அவன் பேசி முடிக்கும்வரை அமைதி காத்தவள், அமலாவின் அறையில் வைத்திருந்த ஒரு காகித உறையை எடுத்துக்கொண்டு கணவன்முன் போய் நின்றாள்.

கேள்வியாகப் பார்த்தவன், “என்னது?” என வினவ,

இப்போது பதற்றத்தை யாரிடமிருந்தும் மறைக்க முடியாமல், “பா… பாருங்க.” என்றாள்.

வாங்கிப் பார்த்தவனுக்கு வெறி வந்துவிட்டது. பட்டென எழ, பேரனை உள்ளும் புறமும் அறிந்திருக்கும் சங்கரன் அவனைக் கைப்பிடித்து அமர வைத்தபடி கேட்டார். “என்னதும்மா அது?”

ஆழ்ந்த மூச்சை இழுத்துக்கொண்டவள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு நிதானமாக சொன்னாள். “அவருக்கு பெங்களூரு கம்பெனில இருந்து இன்டர்வியூ கார்ட் வந்திருக்குது தாத்தா.”

சற்று நேரம் அங்கே நிசப்தம்.

“என்ன கம்பெனி? என்ன இன்டர்வியூ நிவர்த்தி?” – அமலா.

“உங்களுக்கு ரோபோ டைப்ல ஒரு மசாஜர் மெஷின் செஞ்சு தந்திருந்தார்ல அத்தை? நான்… நான் அதுக்குரிய ப்ரொஸீஜரும் இவரோட க்வாலிஃபிகேஷன் சர்ட்டிஃபிகேட்டும் அனுப்பி வேலைக்கு அப்ளிகேஷன் போட்ருந்தேன். அதுக்குத்தான்…”

அவள் செய்ததில் உடன்பாடில்லை என்றாலும், யாரும் ஒரு வார்த்தை பேசவில்லை. பிரமோத்தின் மேல் முழு உரிமையும் உள்ளவள். இனி அவள் மணியம்தானே?

“உன்னை யாருடி இந்த வேலையெல்லாம் பார்க்க சொன்னது? வேலையில்லாம, சோத்துக்கு வழியில்லாம உன்னைப் பிச்சையெடுக்க விட்டுட்டேனா?”

“பிரமோத்!” – சரவணன்.

“பின்ன என்னப்பா? என்கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்கல!”

“ஏன் கேட்கணும்? எதுக்கு கேட்கணும்ங்கறேன்? டிஸ்டிங்ஷன்ல பாஸ் பண்ணிட்டு, மெக்கானிக்கல்’ல இவ்ளோ திறமையை வச்சிக்கிட்டு உங்க தாத்தாவுக்கு இங்கே ஊழி வேலை செஞ்சிக்கிட்டே இருக்கப் போறீங்களா? அவரும் தறுதலை தறுதலைன்னு வஞ்சிக்கிட்டே (திட்டுதல்) கொஞ்சங்கூட மனசாட்சியே இல்லாம வேலை வாங்கறார். உங்களுக்கும்தான் அவரைப் பிடிக்கலையே? அப்புறம் இங்கேயே வெயில்லயும் மண்ணுலயும் கிடந்து சாகணும்னு என்ன தலையெழுத்து?”

அடுத்து ஒரு வார்த்தை அவளைப் பேசவிடாமல் கழுத்தை அழுத்தமாக நெறித்திருந்தான் பிரமோத்.

“பிரமோத்!” என அனைவரும் பதற, முன்னே நின்றிருந்த அசோகன் பாய்ந்து அவனைப் பிடித்திழுக்க, பிரியா நிவர்த்திகாவைத் தன் வசம் இழுத்துக்கொண்டாள்.

“விடுங்க சித்தப்பா!” என்று திமிறியவன் மார்தட்டிக்கொண்டு மனைவியிடம் ஆக்ரோஷமாக பேசினான். “சங்கரன் பேரன்’டி! மண்ணுலயும் தோப்புலயும் அவர் வியர்வையைப் பார்த்து வளர்ந்தவன். எப்பவும் அவர்தான் என்‌ ரோல்மாடல். வாழ்க்கைல என்ன சாதிக்க போற’ன்னு கேட்டா என் சங்கரை விட ஒரு படி மேல ஜெயிக்கணும்னு சொல்லுவேன். இந்த டிப்ளமோ படிச்சதெல்லாம் சும்மா அவரோட விளையாடிப் பார்க்கறதுக்கு! வேற ஊருக்கு போய் மெஷின் வாழ்க்கை வாழ்ந்து பணம் சம்பாதிக்கறதுக்கு இல்ல.
அவரை மாதிரி நாத்து வாசனைலதான் என் வாழ்வும் சாவும்! காட் இட்! நான் இதுதான். இப்டித்தான் இருப்பேன். உனக்கு ஊழி வேலை செய்ற மாதிரி தெரிஞ்சா, அது அவமானமா இருந்தா… ஜஸ்ஸ்ட் மூவ் அவுட்!” என்று வெளியே கைக் காட்டினான். முகமெல்லாம் ஆத்திரத்தில் சிவந்திருந்தது.

மனைவியின் கண்ணீர் முகத்திலும், அந்த கண்களின் பாவனையிலும் ஏதோ உட்பொருளை உணர முடிந்தது. ஆனால் அதற்குமேல் அதைப்பற்றி சிந்திக்க கோபத்தில் கொதிக்கும் நெஞ்சம் விடவில்லை. விருட்டென திரும்பி வெளியே போய்விட்டான்.

அவன் சென்றதை உறுதிசெய்து கொண்டு கண்ணீரும் சிரிப்புமாய்ச் சொன்னாள் நிவர்த்திகா. “நான் சொன்னேன்ல தாத்தா, அவருக்கு உங்க மேல நிறைய லவ்ன்னு! இப்போ நம்பறீங்களா? அண்ட் ஸாரி தாத்தா. ரொம்ப ஹார்ஷாதான் பேசிட்டேன்ல?” என்று அவர் கைப்பிடிக்க போக,

இடுப்பில் சேலைத் தலைப்பைச் சொருகிக்கொண்டு வேகமாக அவளருகே வந்த அமலா சுளீரென முதுகில் ஓர் அடியை வைத்தார். “வெளாண்டியா பிள்ள?”

“அன்னிக்கு அவர் பேரனுக்கு தன்மேல பாசமே இல்லைன்னு தாத்தா ஃபீல் பண்ணார் இல்ல அத்த? அதான்..! பிரமோத் பொண்டாட்டியோட ப்ளான் எப்டி?” என கண்சிமிட்டி, அதனூடே வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு கேட்டவளை அர்விந்தன், அமுதினியைத் தவிர, அனைவரும் வருத்தத்துடன் பார்த்தனர்.

இன்னும் அவள் வைத்த வெடியின் தாக்கம் யாரிடமும் குறைந்திருக்கவில்லை. முந்தைய சரவணனின் கண்டிப்பிற்கு பிறகு பிரமோத், தினமும் காலையில் இவளை அனைவர் முன்பும் கரித்துக் கொட்டுவதை நிறுத்தியிருந்தான்தான். தம்பதியர் இருவரும் ஆரம்பத்தில் போல் போர் முரசு கொட்டவில்லையென்றாலும், இன்னும் சின்ன சின்ன விடயத்திலும் முட்டிக் கொண்டிருக்கும்போது எதற்கிந்த விபரீத விளையாட்டு என்றிருந்தது.

“ரெண்டு பேருக்கும் எல்லா பொருத்தமும் எக்ஸ்ட்ராடினரியா பொருந்திருக்குது அண்ணி.” என பதிலளித்தான் அரவிந்தன்.

“நீ வேற சும்மா இருடா! நான் பயந்தே போயிட்டேன்.” -காஞ்சனா.

“இன்னிக்கு ஒரு நாளாவது மாமியார் ரோல் பண்ணுங்களேன் பெரிம்மா!”

“அதுக்குத்தான் அம்லு சித்தி இருக்காங்களேடா?” என்னவோ தனக்கே அடி விழுந்ததைப் போல் தன் முதுகைத் தடவிக்கொண்டான் ஸ்ரீதரன்.

அதில் நிவர்த்திகா சிரிக்க, “இதுவே கடைசியா இருக்கட்டும்மா. இனி இப்டியெல்லாம் விளையாட வேண்டாம்.” என்றார் சரவணன்.

விழி தாழ்த்தியபடி, “ஸாரி மாமா” என்று பிரமோத்தைப் போலவே சொல்ல, தன்னை கேலி செய்கிறாளோ என்று சரவணனுக்கே சந்தேகமாகிப் போனது.

ஆனால் அனைவருக்கும் பிரமோத்தின் ஆழ்மனம் புரிந்ததில் மகிழ்ச்சியே! கடைசி ஒரு வருடம் தவிர்த்து, தாத்தாவின்மேல் வெறுப்புள்ளவனாகவே காட்டிக்கொண்டு ஊர் சுற்றியவனல்லவா?

நிவர்த்திகாவிற்குமே பிரமோத்தின் உள்ளம் இப்போதுதான் புரிந்தது. அண்ணனோ தாத்தாவோ பாசமென்றால் பீமபாகம்தான் போலும்.

பேச்சே வராமல் சோபாவில் அமர்ந்திருந்த சங்கரன், தன் பேரன் பேசிப் போனதையே நெஞ்சில் சுமந்து அசைப்போட்டுக் கொண்டிருந்தார். இதனால்தான் ‘வேற்றூர் போய்விடு’ என்று சொன்ன கருணாகரனையும் அப்படி மூர்க்கமாக தாக்கினானோ? பாசத்தினாலா? என்மேல் உள்ள பாசத்தினாலா? என் பேரன் சொன்னானே… நான்தான் அவனுக்கு நாயகனாமே! ஜெயிக்கவே பிறந்தவன் கேவலம் இந்த கிழவனை ஜெயிக்கப் போவதாக சொன்னானே…

அனுபவம் காரணமாகப் பிரியா சந்தேகத்துடன் அவரருகே சென்று தோள்மீது கை வைக்க, இனிய உணர்ச்சியின் மேலீட்டால் அவர் உடல் குலுங்கியது.

“தாத்தா, ரிலாக்ஸ்!”

அவருக்கு பேரனின் உள் மனதையறிந்ததும், தனக்காக அவன் மனதைத் தோண்டியெடுத்தவளின் அன்பும் என புளங்காகிதமடைந்து, சந்தோஷமிகுதியில் நெஞ்சடைத்துக் கொண்டு மூச்சுவிடவே சிரமமாகிவிட்டது.

“நார்மலா இருங்க தாத்தா. வீசிங் அதிகமாகுது பாருங்க!” என அவர் நெஞ்சை நீவியபடி கண்டிப்புடன் சொன்ன பிரியா, அரவிந்தனிடம் திரும்பி, “தாத்தா ரூம்ல இன்ஹேலர் இருக்கும்.” எனவும் அவன் அங்கு விரைய, ஸ்ரீயிடம், “என் ஹேண்ட் பேக்ல அவருக்கு வாங்கின மெடிஸின்ஸ் வச்சிருக்கேன்.” என, அவன் மாடிக்கு ஓடினான்.

சங்கரனைத் திட்டி, மருந்து கொடுத்து ஆசுவாசப்படுத்தினாள் பிரியா. கீழே நடப்பதை மேலேயிருந்து மௌனமாகப் பார்த்திருந்தான் மனோகரன்.

தூறல் தூறும் 🌧️🌧️🌧️

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
34
+1
4
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்