Loading

அத்தியாயம் 25

பிரமோத் அண்ணனிடம் பேசிவிட்டு நிவர்த்திகாவைத் தேடி மாடிக்கு வந்தான். முகம் கசங்கி கண்கள் சிவந்து இரு கால்களையும் கட்டிக்கொண்டு கட்டிலின் ஓரமாக அமர்ந்திருந்தவளின் பார்வை தரையில் ஒரே இடத்தில் நிலைத்திருந்தது.

“ம்க்கும்.” எனத் தொண்டையைக் கனைத்தவாறு வந்தமர்ந்தவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.

“கோவமா இருக்கியா என்ன?”

“……..”

“ஓ! மேடம் இந்த காவாலிப் பயகிட்டலாம் பேச மாட்டீங்க இல்ல?” என விளையாட்டுப் போல் பேசியவன் தன் ஆதங்கத்தையும் வெளிப்படுத்த,

“ஆமா, பேச மாட்டேன். இங்கே சித்து, சித்துன்னு குழைய வேண்டியது. கீழே போய் எல்லார் முன்னாடியும் தாத்தா கூட ப்ளான் பண்ணி நான்தான் இவரை வாழ விடாம செஞ்சிட்ட மாதிரி பேச வேண்டியது.” என்றவள் இத்தனை நேரம் அடக்கியிருந்த அழுகையைத் திறந்துவிட்டாள்.

“நிதி…” அவள் முகம் பற்ற வந்தவனின் கரத்தைத் தட்டிவிட்டு திரும்பிக்கொண்டாள்.

“இன்னும் மனசுல அவளையே நினைச்சிக்கிட்டு, இங்கே வந்து என்ன நிதி?”

‘அட! பொறாமையா? இது நல்லாருக்கே?’ முதல்முதலாக அவள் வெளிப்படுத்தும் இவ்வுணர்வை இன்னுமாய்த் தூண்டிவிட நினைத்தான். தன் மீதுள்ள அன்பிலாலல்லவா அவள் இவ்விதமாக பொறாமை கொள்கிறாள்! தான் கொண்ட காதல் காய்ச்சலுக்கு அவளின் பேரன்பில் நிவாரணம் கொள்ள முடியுமென்ற நம்பிக்கை வந்தது.

“ஹேய்!”

இமை மலர்த்த மறுக்கிறாள். பிரமோத்தின் பலவீனம் அது.

“கடுப்பேத்தாம என்னைப் பாருடி.” அவனுக்கு அவளின் அழுகை வருத்தமளித்தது.

இதுவே சங்கரன், சித்தாரா அல்லது வேறு யாராக இருந்தாலும் சிறு பிள்ளையிடம் வம்பு வளர்ப்பவனாக சேஷ்டைகள் செய்து சூழ்நிலையின் போக்கையே மாற்றியிருப்பான். இவளிடம் ஏனோ அது முடிவதில்லை. இவளிடம் மட்டும்தானே ஆழமான மனோபாவம் கொண்டிருக்கிறான்?

“நிதி, லுக் அட் மீ!”

மூக்கை உறிஞ்சினாளே தவிர, நிமிரவில்லை. ‘எப்பவும் என்னை மட்டும் நிமிர்ந்து பாருடின்னு அதிகாரமா சொல்ல வேண்டியது. போய்யா!’

பல்லைக் கடித்தான் அவன். “திமிர்! மொத்த அம்பத்து நாலு கிலோவும் திமிர்தான்!

மறந்துபோய் அவன் முகம் பார்த்துவிட்டாள். “என் வெய்ட் உங்களுக்கு எப்டி தெரியும்?

அவள் கண்கள் தந்த பாவனையில் வெற்றியின் கர்வம் இவனிடம். “அன்னிக்கு கோவில்ல உன்னைத் தூக்கினேனே… அப்போ தெரியும். பார்க்க தேய்ஞ்சு போன ஆப்பம் மாதிரி இருக்க, ஆனா அங்கே மட்டும் எப்டி…”

“இனஃப் பிரமோத்! சும்மா ஒண்ணும் புருஷன் ரைட்ஸ்ல பேச வேணாம்.”

‘புண்ணியவதி மனுஷனை ஒரு மாசமா காய போட்டிருக்கா! இதுல இவ புருஷன் ரைட்ஸ் தந்துட்டாலும்…’ மனதிற்குள் தாளித்தவன், வெளியே அழ வைத்தான். “ச்சீ ச்சீ! புருஷன் ரைட்ஸா? சித்தாராவை நினைச்சவன் சித்தெறும்புல கூட பொண்ணுங்களைத் திரும்பிப் பார்க்கமாட்டான்.” என்று கன்னத்தில் போட்டுக்கொண்டு, “சித்து சித்து! ஸாரிடி ஏதோ ஒரு ஞாபகத்துல அப்டி பேசிட்டேன்.” என தனக்குத்தானே பேச,

முட்டிக்கொண்டு வந்த கண்ணீரை வெகு சிரமத்துடன் உள்ளிழுத்துக் கொண்ட நிவர்த்திகாவிற்கு வயிறு புகைந்தது. பட்டென கட்டிலிலிருந்து கீழறங்கி, “அந்தளவுக்கு அந்தப் பொய்க்காரிதானே உங்களுக்கு முக்கியமா போயிட்டா! அப்புறம் ஏன் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க?” எனத் தொண்டையடைத்த அழுகைக் குரலில் கேட்க,

“கம் அகெய்ன்! யாரைப் பொய்க்காரின்னு சொல்ற? சித்தாராவையா?” என்றவனின் புருவங்கள் கேள்வியாய் வளைந்தது.

‘அச்சோ! போட்டு வாங்கினானா?’ தான் உளறிவிட்டதைத் அவனின் அழுத்தமான ‘கம் அகெய்ன்’ உணர்த்த சட்டென்று நாக்கைக் கடித்து வேறுபுறம் திரும்ப யத்தனித்தவளின் தோள்பற்றி தன்புறம் திருப்பினான் பிரமோத்.

“யாரைச் சொன்ன? ஏன் சொன்ன? எதையும் முழுசா சொல்ற பழக்கமே கிடையாதா உனக்கு?”

“ஆமா, விடுங்க!”

“ம்ஹூம்!” எனத் தோளை இன்னுமாய் அழுத்திப் பிடிக்க,

வலியில் முகம் சுருக்கியவளுக்கும் கோபம் வந்தது. “ஆமா, அந்தப் பொய்க்காரியைத்தான் சொன்னேன். என்ன இப்போ? அன்னிக்கு உங்ககிட்ட உங்களை லவ் பண்றேன்னு சொல்லிட்டு, விஜி கிட்ட அவளுக்கு எந்த சம்பந்தமுமே இல்லாத மாதிரி, ‘அவன்தான் என் பின்னாடி சுத்தினான். எனக்கெதுவுமே தெரியாது’ன்னு சொல்லிருக்கா. அப்டிப்பட்டவ தான் உங்களுக்கு உசத்தியா போச்சுன்னா போங்க… போங்களேன். உங்களை மாதிரி முழு முட்டாள் யாருமே கிடையாது.”

தன் பிடியை சிறிது தளர்த்தியவன் அவளை அப்படியே சுவரோரமாய் சாய்த்துக்கொண்டு, நெருக்கமாய் நின்று கேட்டான். “அவ என்னை லவ் பண்றேன்னு சொன்னது உனக்கெப்டி தெரியும்?”

திடுமென சரியான புள்ளியில் தட்டியவனைக் கண்டு எச்சில் விழுங்கினாள். “அது…”

“ம்ம் சொல்லு. என்னவோ பக்கத்துல இருந்து பார்த்த மாதிரி சொல்ற?”

“பிரமோத்த்!!” கீழிருந்து சங்கரனின் குரல் கேட்க,

இவனும் கழுத்தைத் திருப்பி, “வர்றேன் தாத்தா!” என சத்தமாகச் சொல்ல,

நிவர்த்திகா விழிவிரித்தாள். ‘என்னடா அதிசயம் இது!’

பாட்டனும் பேரனும் ஒருவரையொருவர் தேடும்போதோ அல்லது இருவரின் மனமும் நெகிழ்ந்திருக்கும் போதோ இவ்வித விளிப்புகள் சகஜம் என்று அவளுக்கு தெரியாதல்லவா? சற்றுமுன் மனோவிடம் பேசியதில் இருவருமே ஆழ்ந்த, நெகிழ்ந்த மனநிலையில் இருந்தனர்.

அவள் விழியின் கேள்விக்கு சின்னப் புன்னகையுடன் பதில் சொன்னான் பிரமோத். “சங்கர் இப்போ ‘வெறும் சங்கர்!’ அப்புறமா ரோபோ சங்கரா மாறுவார்.”

முறுவலித்தாள்.

“நிவர்த்திகா!” ஆழ்ந்த குரலின் அழைப்பில் நிமிர, “என்னையும் சித்துவையும் உங்கக்கா ஃபங்ஷன்ல பார்த்தியா?” எனக் கேட்டான்.

இவன் சித்தாராவைத் தனியே சந்தித்தது ஒரே ஒருமுறை தான். அதுவும் ஆர்த்திகாவின் நிச்சயதார்த்த விழாவில்தான்! அங்கே வைத்துதான் அவளும் இவனை விரும்புவதாகச் சொன்னாள். ஆக, நிவர்த்திகா தன் அக்காவின் விழாவில்தான் அவர்களைப் பார்த்திருப்பாள் என்பதை எளிமையாக கணிக்க முடிந்தது.

“……”

“உனக்கு அதுதான் பிரச்சினைன்னா, இப்போ நான் சொல்றதை நல்லா மண்டைல ஏத்திக்கோ! ஐ’வ் நெவர் பீன் சீரியஸ் அபௌட் ஹர்! இந்த கண்ணு என்னை டிஸ்டர்ப் பண்ற மாதிரி, வேற யார்க்கிட்டேயும் நான் ஃபீல் பண்ணதுமில்லை.”

மெல்ல மெல்ல நேச வெளிப்பாட்டிற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த அவள் விழிகள், அவன் எப்போதும்போல் இரு கைகளால் தலை சாய்த்து, அவள் கழுத்தின் பக்கவாட்டில் விரலளைந்து, தன் இரு நிமிடங்களை அவளின் செவ்விதழில் செலவழித்து விட்டு, “இப்டி செய்ய எந்தப் பிள்ளைக்கிட்டேயும் தோணினதுமில்லை.” எனவும், கலங்கி கண்ணீரை நேர்கோடாய் வழியவிட்டது. ‘அப்போ அன்னிக்கு சித்தாராவை கிஸ் பண்ணினது என்னவாம்?’

“பீ ஃபேக்சுவல் ட்டூ மீ, பிரமோத்!”

“என்ன செஞ்சா என்னை நம்புவ’ன்னு தெரியல!” என்றவன் நெற்றியைத் தேய்த்துவிட்டுக் கொண்டான்.

தான் சிற்றுந்தில் செய்த அலப்பறைகள் அத்தகைய அளப்பரியது என்று புரிந்ததால், இப்போது தன்னை நம்ப மறுக்கும் மனைவி மேல் கோபம் வரவில்லை.

“ப்ச், சும்மா அழுது கரையாதேடீ! வந்து வச்சுக்கறேன் உன்னை!” எனக் கடிந்து, வழிந்த அவளின் கண்ணீரைத் துடைத்துவிட்டுப் போனான்.

***********

“என்னப்பா உன்னோட பெரிய ரோதனையாப் போச்சு. வருசத்துக்கொருக்க ஏழரை இழுப்பியா?”

“பெரியவரே, நீங்க சொல்றதையெல்லாம் கேட்டு ‘ஆமா சாமி’ போட நான் ஒண்ணும் இந்த ஊர்க்காரய்ங்க மாதிரி மூளையில்லாதவன் இல்ல.”

“ஆங்! இவருக்குதான் அடுத்தவிங்க இடத்தை ஆட்டையப் போடறளவுக்கு கன்னாபின்னான்னு மூளை வளர்ந்து போய்க்கிடக்குது.” என்ற பிரமோத்தின் ஏளனத்தில் சுற்றியிருந்த கூட்டம் கொல்லென நகைத்தது.

எந்த ஊரிலும் அடுத்தவனை அடித்தேனும் முன்னுக்கு வந்து விடவேண்டுமென்ற தன்‌முனைப்பில் சிலர் இருப்பர். அது போன்ற ஒருவன்தான் இந்த கருணாகரன். பிரமோத் ஒருமுறை இருபத்தைந்தாயிரம் ரூபாயைச் சங்கரனை வெறுப்பேற்றும் பொருட்டு ஒரு தம்பதியருக்கு தூக்கிக் கொடுத்தானே… அவர்களும் இந்த கருணாகரனால் பாதிக்கபட்டவர்கள்தாம்!

ஏழைகளிடத்தில் கறார் கந்துவட்டிக்காரனாக வலம் வருபவனுக்கு, பரம்பரைச் சொத்துக்கள் ஏராளம் உள்ளன. அச்சொத்துக்களைப் பெருக்க ஆயிரம் குறுக்குவழிகளை யோசிக்கும் அவன்‌ மூளை. அதில் ஒன்றுதான் பிறர் தோப்புகளுக்கு செல்லும் பொது வழிகளைக் கைப்பற்றுதல்.

போன வருடமே இந்த சிக்கலில் இவன் தொல்லை அதிகரித்ததால், சங்கரன் தன் பேரன்கள் ஸ்ரீதரன், பிரமோத் மற்றும் பாதிக்கப்பட்ட சிலர் வீட்டு இளைஞர்களை வைத்து பிரச்சினையைத் தீர்த்திருக்க, இப்போது மீண்டும் செவ்வனே தன் பணியை ஆரம்பித்திருக்கிறான் கருணாகரன்.

“படிச்ச பையன் உனக்கெதுக்குப்பா இந்த புழுதியும் மண்ணும்? நீயும் உங்கண்ணே மாதிரி வெளியூர் போய் ஏசி ரூம்புல உட்கார்ந்து சம்பாதிக்கறதை விட்டுட்டு… பெரிசு கூட சேர்ந்து ஏன் பிரச்சினை பண்ற? பேசாம உன்‌ பங்கு தோப்பை நல்ல விலைக்கு வித்துட்டு போவியா…”

“நான் என்ன பண்ணனும்னு நீ ஏன்’ண்ணே சொல்ற?” எனப் பேசிக்கொண்டிருந்த பிரமோத் திடுமென அப்படி மூர்க்கமாக நடந்துகொள்வானென சங்கரனே எதிர்பார்த்திருக்கவில்லை.

“பிரமோத்!”

இரத்தம் ஒழுகிய தன் மூக்கை இரு கைகளாலும் மூடிக்கொண்ட கருணாகரன், “பேசிட்டு இருக்கும்போதே அடிக்கற? *** உன்னைச் சும்மா விடமாட்டேன்டா…” என்று இன்னும் ஏதோ சொல்ல வர,

பிரமோத் மீண்டும் ஒரு குத்துவிட, கருணாகரனால் பாதிக்கப்பட்டிருந்த சுற்றியிருந்தவர்களும் சேர்ந்து அவனைப் புரட்டி எடுத்துவிட்டனர். “இனி ஊருக்குள்ள யார் இடத்திலயாவது பிரச்சினை பண்ற’ன்னு தெரிஞ்சா ஊர்க்காரன்னுலாம் பார்த்துட்டு இருக்கமாட்டோம். எவிடென்ஸோட கம்ப்ளெய்ண்ட் பண்ணி போலீஸ்ல பிடிச்சு குடுத்துடுவோம்.”

“போதும் விடுடா!” -சங்கரன்.

“கொய்யால! யாரை ஊரை விட்டு போகச் சொல்ற? எங்கே பெரியவர் கிட்ட ஒரு ஸாரியைச் சொல்லிட்டுப் போ பார்ப்போம்.” என அடித்தக் கையிலேயே எலும்பு நொறுங்கும்படி முறுக்கிக்கொண்டு கேட்க,

வலியில் துடித்தவன், “எனக்கும் ஆளுங்க இருக்காங்க. பார்த்துக்கறேன்டா.” என, இன்னுமாய் அவன் கையை முறுக்கினான் பிரமோத். “ஆஆ!!! ஸாரி ஸாரி… பெரியய்யா… மன்னிச்சிடுங்..ஆஆ!!”

“போய்யா போ! இனியாவது நேர்மையா இருந்து பொழைக்கப் பாரு!” என்றவர் பேரனிடம், “விட்டுத்தொலைடா, ஒழியட்டும்.” என்றார்.

அவன் போனதும் கூட்டமும் கலைய, இருவரும் தங்கள் தென்னந்தோப்பிற்குள் சென்றனர். உரித்தத் தேங்காய் மட்டைகளை அலங்காரம் போல் பாத்திக்குக் கரைக் கட்டியிருந்தனர். அதுவே உரமும் ஆயிற்று. சங்கரன் சொல்லாமலேயே பிரமோத் ஊடுபயிர்களைப் பார்வையிட்டு வந்தான். பேரனைச் செப்பனிட்டு விட்டோமென்ற பெருமையை மீசை வழிக் கடத்தினார் பாட்டன்.

அவர் கட்டிலைத் தட்டிப் போட்டு அமர, இளநீரைக் கொண்டு வந்து நீட்டினான்.

வாங்கிக்கொண்டு, “பேசிட்டு இருக்கும்போதே ஏன்’டா கை நீட்டுற? ஸ்ரீ இல்லைன்னு உன்னைப் போய் கூட்டிட்டு வந்தேன் பாரு. என்னைச் சொல்லணும்.” என சடைத்துக்கொண்டார்.

“அய்யய்ய… இப்போ அடியைப் போட்டப்புறம் வாலை சுருட்டிட்டு போனானா இல்லையா?”

“அடிபட்ட பாம்பு கடிக்காம விடாதுடா.”

“ஹாஹா… பாம்பை அசிங்கப்படுத்தாதீர் சங்கர். இந்த அடியைப் போன வருஷம் இவன் பிரச்சினை பண்ண ஆரம்பிக்கும்போதே போட்டிருந்தா இப்போ இருக்கற இடந்தெரியாம மூடிட்டு இருந்திருப்பான்.”

“என்னவோ போ! இப்டி மூர்க்கமா இருக்கறதுனாலதான் வீட்டுக்கு வந்தப் பிள்ளையும் உன்னைக் கண்டா அரண்டு போகுது போல…” அன்று நிவர்த்திகாவிடம் பேசியவர், இவனிடம் எப்படி பேச்சைத் துவங்குவது என தயங்கியிருக்க, இன்று காலை சித்தாராவின் வரவும் அதைத் தொடர்ந்த சிறியவர்களின் பிரச்சினையும் இப்போது பேசத் தூண்டியது.

“அஃவ்பா!” என்று வாயிலடித்தபடி அவரருகே அமர்ந்தவன், “உம்ம பேத்தி என்னைப் பார்த்து அரண்டு கிடக்கறா? நீங்க பார்த்தீங்க?” என அதிர்ந்தவனாக பாசாங்கு செய்தான்.

“பார்த்ததுனால தானேடா சொல்றேன்? என்னம்மா பிரச்சினைன்னு நான் கேட்டப்போ கூட உன்னைப் பத்தி ஒரு வார்த்தை குறையா சொல்லலை. உனக்காக என்கிட்ட வக்காலத்துக்கு வந்துச்சுடா! உன்னை மாதிரி தறுதலைக்கு இப்டியொரு அருமையான பிள்ளைத் தேடினாலும் கிடைக்கமாட்டா. உனக்குத்தான் வச்சு வாழத் தெரியல.”

மனைவியின் பண்பில் இவனுள்ளம் உல்லாசம் கொண்டது. “பார்றா! புது தோஸ்த்துக்கு சப்போர்ட்டா? போதும் சங்கர். எங்களுக்கு இப்போ என்ன வயசு போயிடுச்சு? கல்யாணம் செஞ்சு வச்சாச்சுல்ல? கவலையில்லாம இரும்.”

“கிறுக்கு பயலே! சின்ன பையனா இருக்கும்போது வாங்கி கொடுத்த முட்டாயி கரைஞ்சிடும்னு திங்காம கைலயே வச்சிட்டிருப்பான். அந்தப் புத்தி இன்னும் போகல போல. தாலியைக் கட்டிட்டா கல்யாணம் முடிஞ்சிடுச்சுன்னு நினைக்கறியாடா?”

“கல்யாணம்னா தாலிதானே சங்கர்?”

“அடேய்‌ பொசக்கெட்ட பயலே! சார்ச்சர் (charger) மாட்டினா பத்தாதுடா. சுட்ச்சும் (switch) போடணும்.” என்றதில்,

குபீர் சிரிப்பு பேரனிடத்தில்! “சங்கருக்குள்ள எப்பேற்பட்ட மன்மதன் ஒளிஞ்சிருக்கான்யா!”

“என் தங்கமீனுக்கு தான்டா தெரியும், எனக்குள்ள எத்தனை மன்மதன்னு!”

“ஹாஹா…”

“ஐயாவு…”

“தாத்தா! யூ டோண்ட் வொர்ரி. ஆல் இஸ் வெல். உமக்கு அம்முக்குட்டி மாதிரி கொள்ளு பேத்தி வேணுமா? இல்ல அரைவாலு அர்வி மாதிரி கொ. பேரன் வேணுமா?”

தூறல் தூறும் 🌧️🌧️🌧️

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
60
+1
3
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்