Loading

அத்தியாயம் 5

முதல் நாள் இரவு தாமதமாக படுக்கைக்கு சென்ற பிரமோத் மறுநாள் காலை கண்ணயர்ந்துவிட்டான். சித்தாராவிற்காக காத்திருந்து அவளுக்காக பேருந்தில் பாடல்களை அர்ப்பணிக்க முடியவில்லை.

மறுநாளும் சங்கரன் பேரனைப் பிடித்து வைத்துக்கொண்டார்.

காலையில் அழகாக உடை அணிந்து கிளம்பி வந்தவனை, “எங்கே கிளம்பற பிரமோத்?” எனக் கேட்டது சாட்க்ஷாத் அவன் அம்மா காஞ்சனாவே தான்!

“என்னம்மா புதுசா? சும்மா ஃப்ரெண்ட்ஸோட வெளில இருப்பேன். சாப்பிட என்ன இருக்குது?”

“இன்னிக்கு இன்னும் டிபன் ரெடியாகல. கொஞ்சம் பொறு!”

“ஓகேம்மா, அப்போ நான் வெளில பார்த்துக்கறேன். லன்ச்’க்கு வர்றேன். அமலா சித்தி எப்போ வருவாங்க? அவங்க இல்லாம வீடு வீடாவே இல்ல. அஷோக் சித்தப்பாவும் கல்யாணத்துக்கு முன்னாடியே போயிட்டார் போல?”

“சாப்பிடாம போறளவுக்கு அப்டியென்ன வெட்டி முறிக்கற வேலை உனக்கு?” என அதட்டியவர், “அப்டியே வீட்டு விஷயத்துல பொறுப்பா நடந்துக்கற மாதிரித்தான் வீடு வீடாவே இல்லையாம்.” என்றார் முணுமுணுப்பாக.

பிரமோத் அம்மாவை ஆச்சரியமாகப் பார்த்தான். “இன்னிக்கு என்னம்மா ஆச்சு உங்களுக்கு? என் மேல எதுவும் கோவமா?”

காஞ்சனாவிடம் சரவணன் படித்து படித்து சொல்லியிருந்தார், பிரமோத்திடம் எதையும் தெரிந்தாற் போல் காட்டிக் கொள்ளக்கூடாது என!

இருந்தும் மகன் சரியாக கண்டுபிடிக்கும்படி நடந்து கொண்டதில் தன்னையே நொந்தவர், “சாப்பிடாம போறேன்னா கோவம் வராதா?” என்று கேட்டுவிட்டு மௌனம் சாதிக்க, பிரமோத் அன்னையை சம்சயமாக பார்த்தான்.

அதிகாலையிலேயே போய் நாற்றங்கால் பகுதியை மேற்பார்வை பார்த்துவிட்டு அப்போதுதான் வந்தார் சங்கரன். “குளிச்சிட்டு வர்றேன்மா. ஸ்ரீ எங்கே?”

“இதோ இருக்கேன் தாத்தா.” என்றபடி பிரமோத்தின் இரண்டாவது அண்ணன் ஸ்ரீதரன் வந்தான்.

“இன்னிக்கு நீ என் சீமாட்டி கூட பள்ளியோடத்துக்கு போகணும்னு சொன்ன இல்ல?”

‘அப்படியா?’ என்று விழித்தவன், தாத்தாவின் தீர்க்க பார்வையில், “ஆ ஆமா தாத்தா. இன்னிக்கு ஸ்கூல்ல பிடிஎம். மறந்தே போயிட்டேன்.” என்றவன், மேலே பார்த்து குரல் கொடுத்தான். “பிரியா, அம்முவை சீக்கிரம் ரெடி பண்ணு!”

“ஹூம் ஹூம்!” என்று கனைத்துக் கொண்ட சங்கரன் பிரமோத்தைப் பார்த்து, “அவன்தான் ஏதோ ‘பிடி’ இருக்குதுன்னு சொல்றானே… அசோக்கும் ஊருக்கு போயிட்டான். அதனால இன்னிக்கு என் கூட நீ வாடா.” எனவும்,

“ஏதே?! நானா? யூ கோ மேன்! வை மீ?” என்று வழக்கம் போல தாத்தாவுடன் மல்லுக்கு நிற்க, காஞ்சனா மகனின் தலையில் நறுக்கென்று குட்டினார்.

கீழே நடக்கும் நாடகத்தைப் பார்த்தவாறே மகளைப் பள்ளிக்கு கிளப்பி அழைத்து வந்தாள் பிரியா. அரவிந்தன் கூட பிரமோத் இத்தனை நேரத்திற்கும் வீட்டிலிருப்பதையும், அதைவிட தன் பெரியம்மா ‘தாத்தாவின் முன்’ பிரமோத்தைக் கண்டிப்பதையும் வியப்புடன் பார்த்தபடி வந்தமர்ந்தான்.

“ம்மா!” -தலையைத் தடவிக் கொண்ட பிரமோத்.

“இத்தனை நாள்தான் ஊரைச் சுத்திட்டு இருந்த! தாத்தாவுக்கு உதவியா இருந்த ஸ்ரீ’க்கும் அவன் குடும்பம், குழந்தைன்னு ஆகிடுச்சுல்ல? இனி நீதான் அவன் இடத்துல இருந்து பொறுப்பா நடந்துக்கணும்.”

அதைக் கேட்ட பிரியாவின் முகம் சுருங்கிப் போனது. மனத்தாங்கலுடன் சொன்னாள். “ஏன் அத்தை அப்டி சொல்றீங்க? அம்முவை நான் கூட்டிட்டு போறேன். அவர் எப்பவும் போல தாத்தாவுக்கு ஹெல்ப் பண்ணுவார்.”

‘இவ ஒருத்தி… இப்போ வந்து மருமக பதவிசைக் காட்டிக்கிட்டு…’ என்று காஞ்சனா மனதில் நொடிக்க,

ஸ்ரீதரன் மனைவியின் முழங்கையைப் பின்னால் இருந்து சுரண்டி, வாய்க்கு ‘ஃஸிப்’ போட்டு காண்பித்தான். அதன்பின்னர் தான் சூழ்நிலையைக் கிரகித்தாள் பிரியா.

ஆனால் அனைவரும் ஆச்சர்யப்படும் விதமாக பிரமோத் சொன்னான். “யூ டோண்ட் பேனிக், அண்ணி. நானே போறேன். முந்தாநாள் கணக்கு பாக்கி இருக்குது. அதை இன்னிக்கு டேலி பண்ணிடறேன்.”

அவன் பிற்பாதியை தாத்தாவைப் பார்த்துக் கொண்டே வன்மத்துடன் சொல்ல, அவரும் நீயா நானான்னு பார்த்துடுவோம்டா என மீசையை முறுக்கி, துண்டை உதறிவிட்டு குளிக்கச் சென்றார்.

அவனுக்கு சித்தாராவிற்கு பாட்டு போடுவதை விட தாத்தாவைப் பழிவாங்குவதே முதற்கடமை என்று சங்கரன் பேரனை நன்றாகவே நாடிபிடித்து வைத்திருந்தார். பாவம், பிரமோத்திற்குதான் அது புரியவில்லை.

இப்படியாக அவனின் அன்றைய திட்டங்கள் பாழ்பட, பிரமோத் ‘சித்தாராவிற்கான பாடல்களை’ இரண்டாம் நாளாக தவறவிட்டான்.

அவன் மட்டுமல்ல சிற்றுந்திலும் நிவர்த்திகாவும் விஜியும் அவனைக் காணாமல் தேடினர். சிற்றுந்து புறப்பட்டு கல்லூரி வரும் வரையிலும் தோழிகளிடையே ‘பிரமோத் புராணம்’ ஓடியது. இருவரும் யாருக்கும் கேட்காவண்ணம் மெல்லியக் குரலில் பேசிக்கொண்டனர்.

“இவனுக்காக காலைல அடிச்சு பிடிச்சு ஓடி வந்தா நேத்தும் வரல. இப்பவும் ஆளைக் காணோம். என்னாகிருக்கும் நிவி?”

“புட்டுக்குச்சோ என்னவோ!” அசட்டையாக சொன்னாள் நிவர்த்திகா.

“அடி ஏண்டி வாயை வைக்கற? நமக்கேன் வம்பு! பேசாம இரு நிவி.”

“ஆனா அவ தேடுறாளே? அங்கே பாரு.”

சித்தாராவின் விழிகளில் பிரமோத்திற்கான தவிப்பு மிகுந்திருந்தது. உற்றுப் பார்த்தால் கண்களின் ஓரம் நீர் கோடிட்டிருக்கிறதோ?

“ஆமா பாவம்ல? ஒரு மாதிரி ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கா. அப்போ ஒருவேளை இவளும் லவ் பண்றாளோ?”

“அப்டித்தான் போல…”

“அப்புறம் ஏன் நிவி அவனை சுத்தல்ல விடறா? நானும் உன்னை விரும்புறேன்னு பட்டுன்னு சொல்லிட வேண்டியதுதானே?”

“அவன் எப்டிப்பட்டவன் என்னன்னு தெரியாம எப்டி சொல்ல முடியும் விஜி? அவனுக்கு வேலைவெட்டியும் ஒண்ணுமில்லன்னு நீதானே சொன்ன?”

“அவளும் எங்க ஊர்தானே? அவனைப் பத்தி தெரியாம இருக்குமா? ஊர்ல பெரிய குடும்பம். அதுவும் சங்கரன் ஐயா பேரன்!”

நிவர்த்திகாவிற்கு கரிசல்குளம். விஜி, பிரமோத்தின் ஊரான கருவேலம்பட்டியைச் சேர்ந்தவள். இருந்தும் அடிக்கடி பார்த்துக் கொள்ளும் சந்தர்ப்பம் இருந்ததில்லை.

“பெரிய குடும்பத்துல வாக்கப்பட பயப்படுறா போலருக்குது.”

“ஹஹ… கலாய்ச்சிட்டாங்களாமாம். பெரிய குடும்பம்னா மரியாதைப்பட்ட குடும்பம்னு சொன்னேன் அம்மையே!”

“மரியாதைப்பட்ட குடும்பத்து பையன் ஏன் இப்டி ரோட்டோர ரோமியோவா, பஸ்ல காதல் பஜனைப் பாடறவனா இருக்கான் டோலி? இந்த மாதிரி பசங்களுக்கு பொண்ணுங்க மனசைக் கலைச்சுவிட்டு வேடிக்கைப் பார்க்கறதுல ஒரு சந்தோஷம். சீட்டர்!”

“ச்ச ச்ச! பிரமோத்தைப் பார்த்தா அந்த மாதிரி பையனா தெரியல நிவி.”

“ஓ! அப்போ ஏன் அவளுக்கு ஒரு மெசேஜ்ல கூட வர முடியலைன்னு சொல்லல அவன்? இந்த பஸ்ல பாதிப் பேர் உங்க ஊர்தான். யாராவது நம்பிக்கையான ஒருத்தர்கிட்ட சொல்லிருந்தா கூட அவ இப்போ இவ்ளோ தவிக்க மாட்டாளே?”

“நீ ஏண்டி எப்பவும் அவனுக்கு அகெய்ன்ஸ்ட்டாவே இருக்க? உனக்கு அவனைப் பிடிக்கலதானே?”

“எனக்கு பிடிச்சா என்ன? பிடிக்கலைன்னா என்ன விஜி? சித்துவுக்கு பிடிச்சிருக்கு போல… அவனைத் தேடற அந்தக் கண்ணே சொல்லுது.” என்ற நிவர்த்திகா, சித்தாராவை ஒரு பார்வை பார்த்துவிட்டு முகம் திருப்பிக்கொண்டாள்.

அதற்கு மேல் அந்தப் பேச்சைப் பேச விரும்பாத விஜி வேறு தலைப்பிற்கு தாவினாள். “அதிருக்கட்டும், இன்னிக்கு நீ வர மாட்டே, மட்டம் போட்டுடுவே’ன்னு நினைச்சேன்? படிப்பாளி வந்துட்டியே?”

“நானே சொல்லணும்னு நினைச்சேன். மதியத்துக்கு மேல லீவு சொல்லப் போறேன் டோலி. காலேஜ்ல ஈவ்னிங் என்னைத் தேடாதே. அப்புறம்…” என்று ஏதோ சொல்ல வர,

அவளை இரு கரங்கள் கூப்பி நிறுத்தி, “அம்மா தாயே! இத்தோட நூத்து பதினோரு தடவை சொல்லிட்ட! நானும் சரி சொல்லியே களைச்சிட்டேன். வர்றேன், விடேன்’டி.” என்றவளின் பாவனையில் கலகலவென நகைத்தாள் நிவர்த்திகா.

**~**~**~**~**~**~**

வெகு அமரிக்கையாய் அலங்கரிக்கப்பட்டிருந்தது, அந்தப் பெரிய திருமண மண்டபம்.

‘கதிரவன் மாமா வெளிநாட்டு சம்பாத்தியத்தை எல்லாம் இதற்கே கொட்டிக் கொடுத்திருக்கிறார் போலும்!’ என நினைத்தபடியே தன் குடும்பம் சகிதம் மண்டபத்தினுள் நுழைந்தான் பிரமோத். ஸ்ரீயும் பிரியாவும் மட்டும் வேலை காரணமாக வரவில்லை. அசோகனும் அமலாவும் வெளியூர் சென்றிருக்கிறார்கள்.

அங்கே தன் தாத்தாவிற்கு கிடைத்த வரவேற்பில் இவனுக்கு வயிறு காந்தியது. ‘எதையாவது செய்து கூட்டத்தின் முன் அவருக்கு தலையிறக்கம் ஏற்படுத்தலாமா?’ என்று மனதோடு தீவிர ஆலோசனைக்கு சென்றவனை, உடன் வந்திருந்த சரவணனின் பார்வை தடைசெய்தது.

“அப்பா?”

“வந்த இடத்துல தாத்தாவோட பிரச்சினை செய்யாதே, பிரமோத்!”

நல்ல பிள்ளையாகத் தலையாட்டியவன், ‘வன்ம குடோனா மாறிட்டோமோ? மூஞ்சியைப் பார்த்தே கண்டுபிடிச்சிட்டாரே! அது சரி இந்த அப்பா ஏன் நாலஞ்சு நாளா நம்ம லைன்லயே க்ராஸ் பண்றார்? குடும்பமே நமக்கெதிரா ஏதும் சதி செய்யுதோ? உஷாருடா பிரமோத்!’ என உள்ளத்தில் பரிபாஷை நடத்திக் கொண்டிருந்தான்.

உள் அலங்காரங்கள், டிஸ்ப்ளே ஸ்கிரீன் என ஒவ்வொன்றாய்ப்‌ பார்வையிட்டுக் கொண்டிருந்தவனின் கண்கள் திடுமென ஓரிடத்தில் நிலைக்க, யாரிடமும் எதுவும் சொல்லாமல் எழுந்துபோனான். கருவேலம்பட்டி, கரிசல்குளம் போன்ற சின்ன ஊர்களில் அருகருகேயே பெண் கொடுத்தோ, பெண் எடுத்தோ இருப்பார்கள். ஆக அங்கு வந்திருந்த மாப்பிள்ளை, பெண் என இரு வீட்டாரும், குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் சொந்தமாக இருந்ததால், பேச்சின் சுவாரஸ்யத்தில் சங்கரன் முதல் மற்றவர்களும் பிரமோத் எழுந்து சென்றதை கவனிக்கவில்லை.

ஆனால் அவன் மண்டபத்தினுள் நுழைந்தது முதல், தன் வேலையோடு வேலையாக அவனையும் அவன் செய்கைகளையும் உள்வாங்கிக் கொண்டே இருந்தன இரு விழிகள். அவ்விழிகள், அவன் குடும்பத்திலிருந்து தனியாக எழுந்து சென்றதையும் குறித்துக்கொண்டது.

அரைமணி நேரம் கழித்து களைப்பு மேலிட்ட அவ்விழிகளில் களைப்பை விரட்டி வியப்பு வந்தமர்ந்து கொண்டது. காரணம் அவைகள் கண்ட காட்சி! அங்கே பிரமோத்தும் சித்தாராவும் நின்றிருந்தனர்.

அது மண்டபத்தின் மாடியறைகள் இருக்கும் பகுதி. சரியாக மாடியில் முதல் அறைக்கும் மேலே செல்லும் படிக்கட்டுகளுக்குமிடையே இருவரும் நின்றிருந்தனர்.

“ஹேய் எவ்ளோ நேரமா உன்னை ஃபாலோ பண்றேன் தெரியுமா? சின்னப் பிள்ளைங்களோட பலூனை உடைச்சு விளையாடிட்டு இருக்க?” என பிரமோத் அவளைக் கேட்க,

“அய்யோ! வழி விடுங்க. யாராவது வந்துடுவாங்களோன்னு பயமா இருக்குது.” என பதற்றமாக வெட்கப்பட்டாள் சித்தாரா.

“இரு சித்து. நீ எங்கே இங்கே? பொண்ணு வீடா? மாப்பிள்ளை வீடா?”

“பொண்ணு வீடுதான். நீங்க?”

“நானும்தான். பொண்ணு வீட்டுக்கு நீ எப்டி சொந்தம்?”

“ஹஹ… கல்யாணப் பொண்ணோட அப்பாவோட அஞ்சு விட்ட அண்ணன் பொண்ணு.” என்றாள் அவள்.

“ஷப்பா!”

“ஏன்?”

“அதை விடு. எனக்கு என்ன பதில் சொல்லப் போற?”

“……….” அவன் இத்தனை நாட்கள் தன் பின்னேயே வந்து காதல் சொன்னதில் கர்வத்துடன் வலம் வந்தவள், இந்த இரண்டு நாட்களாக அவனைக் காணாமல் தவித்திருந்தாள் என்பதுதான் உண்மை. இப்போது இந்த எதிர்பாராத சந்திப்பு அவளைப் பரவசத்தில் ஆழ்த்தியிருந்தது.

“இப்டி தலையைக் குனிஞ்சிக்கிட்டா நான் என்னன்னு எடுத்துக்கறது? சித்து என்னைப் பாரு.”

“……….”

அவளை ஓரக் கண்ணால் பார்த்தபடி சொன்னான்‌. “ப்ச்! சரி உனக்கு பிடிக்கலைன்னா விடு. இந்த கல்யாண வீட்டுலயே எனக்கு எத்தனையோ முறைப் பொண்ணுங்க இருக்காளுங்க. ஏன் கதிரவன் மாமாவுக்கே இன்னொரு பொண்ணு இருக்காளாம். பேசாம அவளையே…”

எதிர்பார்த்ததைப் போல் சித்தாரா நிமிர்ந்து அவனைக் கோபத்தில் பஸ்பமாக்க, இவர்களைப் பார்த்திருந்த அவ்விழிகளோ அதிர்வில் படபடத்தன.

கோபக்கனலால் சுட்டெரித்துக் கேட்டாள் சித்தாரா. “பிடிக்கலைன்னு நான் எப்போ சொன்னேன்?”

“பிடிச்சிருக்குன்னும் சொல்லலையே?”

கோபமோ வெட்கமோ அவன்முன் சிவப்பதற்காகவே பிறந்தவள் போல் சித்தாரா.

“அப்போ… அப்போ… ஓகேவா உனக்கு?”

“ம்ம்…”

“அய்யோ! லவ் யூ சித்து.” என்றவனுக்கு தலைகால் புரியவில்லை. அவளின் இரு தோள்களையும் பற்றி உலுக்கினான். இன்னும் அவள் முகமருகே குனிந்து ஏதோ சொன்னான்.

அதற்கும் மேல் அவ்விழிகள் அக்காட்சியில் லயிக்கவில்லை.

**~**~**~**~**~**

“என்ன?! லிப் லாக்’ஆ!?” – விஜி

“ஷ்ஷ்! ஏண்டி கத்துற?” – நிவர்த்திகா.

கல்லூரியில் மரத்தடி பெஞ்சில் மதிய வேளையில் சாவகாசமாக அமர்ந்திருந்தனர் தோழிகள்.

“எப்டி நிவி? நிஜமா நீ பார்த்தியா?” பரபரப்பு குறையாமல் கேட்டாள் விஜி.

“அட ஆமாங்கறேன்.”

“எப்டி நானும் அங்கேதானே இருந்தேன். இவன் வந்ததைப் பார்க்கவே இல்லயே?”

“நீதான் பந்திக் கூடமே கதின்னு இருந்தியே டோலி?”

“ஆ ஆ… சரி சரி நீ மேலே சொல்லு.”

“இவ அவனைப் பார்க்காம வெட்கப்பட்டு தலையைக் குனிஞ்சுக்கிட்டே…”

“இரு இரு! நம்மாளு என்ன கலர் டிரெஸ் போட்டிருந்தான்?”

“ம்ம்… நல்ல ஒரு லைட் டெனிம் ப்ளூ கலர்ல கேஷூவல் ஷர்ட் வித் சாண்டல் கலர் பேண்ட்.” அப்போது அவனையே நேரில் பார்ப்பதைப் போன்ற பாவனையில் சொன்னாள் நிவர்த்திகா.

“ப்ச்! நேத்து ஃபங்ஷன்ல நீதானே ‘புது சேலை – அதுவும் எனக்கு பிடிச்ச டெனிம் ப்ளூ கலர் காப்பர் சில்க் சாரி’ன்னு பீத்திக்கிட்டு சுத்தின? இப்ப அவனும் டெனிம் ப்ளூன்னு சொல்ற? சும்மா அடிச்சு விடற தானே நிவி?”

இவள் தோழியை அதிருப்தியாய் முறைத்தாள்.

“பின்ன அவன் டிரெஸ் கலரை எப்டி இவ்ளோ அக்யூரேட்டா சொல்றியாம்?”

“ம்ம்… எப்டியோ மனசுல பதிஞ்சிடுச்சு.” என்றவளின் குரல் காற்றிற்கு மட்டும் கேட்டது.

“சரி, டெனிம் ப்ளூ’ன்னே நான் கற்பனை பண்ணிக்கறேன். சித்தாரா என்ன டிரெஸ் போட்டிருந்தா? சேலையா? சுடியா?” எனவும், இவள் முழித்தாள்.

“என்ன டோலி முழிக்கறீங்க?”

“தெரியலடி. நான் சரியா கவனிக்கல.”

“அவனை மட்டும் கவனிச்சிருக்க? சரி, அப்புறம் என்னாச்சு சொல்லு.”

தான் பார்த்ததை… அல்ல, தான் பார்த்து தன் போக்கில் புரிந்துகொண்டதை, மேலும் சில பல சென்ஸார் காட்சிகளோடு தோழியிடம் விவரித்து, அவள் வாய் பிளப்பதை அமர்த்தலாய்ப் பார்த்தாள் நிவர்த்திகா – நேற்றைய விழாவில் பிரமோத்தைத் தொடர்ந்த விழிகளுக்கு சொந்தக்காரி!

 

தூறல் தூறும் 🌧️🌧️🌧️

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
5
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்