Loading

அத்தியாயம் 21

“எக்கோவ்வ்! உள்ளே வரலாமா?”

“யாரு?” என்றபடி வாசல் பக்கம் வந்த அமலா, “வாம்மா, நிவர்த்தி சொல்லிக்கிட்டே இருந்தா உன் வீட்டுக்கு கூட்டிட்டு போக சொல்லி!” என்றவர், அவளை உள்ளே அழைத்து அமரச் செய்ய,

“வந்துருக்கலாம்லக்கா? நானும் டெய்லி ஃபோன்ல சொல்றேன் ஒருதரம் வாடி’ன்னு” என்றாள் அவள்.

“நிவர்த்தீ… உன் ஃப்ரெண்டு வந்திருக்கா பாரு.” என மேலே பார்த்து குரல் கொடுத்தவர், விஜியிடம் சொன்னார். “பகல்ல நீ காலேஜூக்கு போயிருவ! பொழுது போன பிறகு விளக்கு வச்ச நேரத்துல எதுக்குன்னு பார்த்தேன். உங்கம்மா என்ன செய்றா?”

“இருக்காங்கக்கா. சாயங்காலம் இங்கே வருவாங்க.” என சொல்லிக் கொண்டிருக்கையில்,

“விஜீஈஈ…” என்ற கூவலுடன் இறங்கி ஓடி வந்தாள் நிவர்த்திகா. “இன்னிக்கு என்ன காலேஜ்’க்கு மட்டம் போட்டுட்டியா? என்ன சாப்பிடற? அத்தை…”

“காபி போடறேன் நிவர்த்தி. நீ பேசிட்டு இரு.”

“அதெல்லாம் வேணாம்கா. நீங்களும் இருங்க.” என்றாலும், வீட்டில் உதவிக்கு இருக்கும் பெண்ணிடம் மென்பானம் வாங்கிவர பணித்தாள் நிவர்த்திகா.

“சொல்லு விஜி. இன்னிக்கு லீவா?”

“ஆமாடீ, நாளைக்கு பூ வைக்க வர்றாங்களாம்.” என்றவளின் முகத்தில் வெட்கத்தின் சாயல்.

ஏற்கனவே விஜியைப் பார்த்ததில் உற்சாகமாக இருந்தவள், இப்போது இன்னும் உடலைக் குலுக்கி ஆர்ப்பாட்டம் செய்தாள். “வா…வ்வ்! நீயும் மாட்டிக்கிட்டியா? ஆமா எந்த சிட்டில போய் குப்பை அள்ளப் போற?” என தாங்கள் முன்பு பேசியதை வைத்து வேடிக்கையாகக் கேட்டவள், மேலிருந்து ஒருவன் தன்னை அங்குலம் அங்குலமாக அளவெடுத்துக் கொண்டிருப்பதை அறியவில்லை.

நேற்றைய தன் கேள்விக்கு பதில் சொல்லாமல் ஓடியவளை இரவிலிருந்து பார்வையாலேயே கூறு போட்டுக் கொண்டிருந்தவன், இவன் பார்வையில் அவள் விழிகளின் அலைபாய்தலை‌ இனம் கண்டிருந்தான். எதையோ மறைக்க நினைக்கிறாள் என்றது அப்பார்வை.

காலையில் மதுரைக்கு போகவேண்டும் என்று ஸ்ரீதரன் சொன்னதால் தாமதமாக கிளம்பிக் கொண்டிருந்தவன் கேட்டான். “பதில் சொல்ல மாட்டியா?”

“ஏதாவது இருந்தாதானே சொல்றதுக்கு?” என மழுப்பிக் கொண்டிருக்க, அப்போதுதான் அமலா அழைத்தார்.

அவர் சொன்னதிலேயே தன் மனைவிக்கு வேண்டப்பட்ட யாரோ வந்திருக்கிறார்கள் என்றறிந்தவன், அவளின் துள்ளலைக் கண்டு துணுக்குற்றான். ‘இவ்ளோ சந்தோஷப்படுறளவுக்கு யாரு வந்திருக்கா?’

குதித்துக்கொண்டு ஓடிய மனைவியைத் தொடர, கீழிறங்கும் படிக்கட்டின் திருப்பத்திலிருந்தே கீழே பார்த்தான். சுவரையொட்டிய படிக்கட்டுகள் என்பதால் கீழிருப்பவர்களுக்கு இவன் நிற்பது தெரியாது. அவளின் கூச்சலில் வந்திருப்பது விஜி என்றறிந்தவனின் நெஞ்சில் பொறாமைத் தீ பற்றிக்கொண்டது. ‘பெரிய இவ… அவளுக்கு எங்க சித்திம்மா காஃபி தரணுமோ?’

‘அந்த மேடம் வேண்டாம்னு சொன்னாலும் இந்த மேடம் கூல்டிரிங்க்ஸ் வாங்கி வாய்ல ஊத்தி விடுவாங்க போல.’

‘நீயும் மாட்டிக்கிட்டியான்னா என்ன அர்த்தம்? ஓஹோ! இவ என்கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கறாளாக்கும்? என்னைக் கட்டிக்கிட்டதுல அவ்ளோ கஷ்டம் போலருக்குது.’

தோழிகளின் பிணைப்பைக் கண்டு, நக்கலும் நையாண்டியும் குத்தலும் குதர்க்கமுமாக மனதினுள் அடுப்பைப் பற்ற வைத்து இருவரையும் வறுத்துக் கொண்டிருக்க, அதையறியாமல் கீழே பேச்சு தொடர்ந்தது.

விஜி சொன்னாள். “சிவகாசிதான் நிவி. அதுவும் சிட்டிதானே? க்ராக்கர்ஸ் சிட்டி!”

“ஆ… ஆ! சரிதான். ஹேப்பி ஃபார் யூ விஜி.”

“நாளைக்கு கண்டிப்பா வந்துடணும் நிவி. அமலாக்கா, நீங்களும்தான். அம்மா பெரியவர் இருக்கும்போது சாயங்காலம் வர்றதா சொன்னாங்க.”

“வர்றேன்மா. நிவர்த்தியும் வந்ததுல இருந்து எங்கேயுமே போகல.”

“நாளைக்கு மதியமே நிவியை அனுப்பிடுங்கக்கா. முக்கியமா நான் அதைச் சொல்லத்தான் வந்தேன். என் க்ளோஸ் ஃப்ரெண்ட் நிவி மட்டும்தான்.”

“கட்டாயம் வருவாம்மா. முன்னக்கூட்டியே முத்தம்மா கூட அனுப்பிவிடறேன், சரிதானா?”

‘நானொருத்தன் இங்கே இருக்கும்போது இந்த சித்தம்மா வாக்குறுதியை அள்ளிவிடுது பாரு!’ என்றவன், வறுத்துக்கொண்டிருந்த சட்டியிலிருந்து கரும்புகைக் கிளம்பியது.

வாங்கி வரப்பட்ட பானத்தை விஜியிடம் தந்தவள், அவளுக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளையின் புகைப்படத்தைக் கேட்டு, அவளின் அலைப்பேசியில் பார்த்து அபிப்பிராயம் சொல்லிக்கொண்டிருந்தாள். அதற்குமேல் அந்தக் கொடுமையைக்(?) காணும் சக்தியில்லாமல் விருட்டென மேலே போய்விட்டான் பிரமோத்.

மறுநாள் காலையிலேயே பீரோவைத் திறந்து வைத்துக்கொண்டு, ஒவ்வொரு புடவையாக எடுத்துப்‌ பார்த்து தனக்குள்ளாகவே தீவிர ஆலோசனையிலிருந்த மனைவியை விசித்திரமாக பார்த்த பிரமோத், “எல்லாத்தையும் பழைய துணிக்கு போடப் போறியா?” எனக் கேட்டுவைக்க,

தீப்பார்வை பார்த்தாள் மனைவி. “இன்னிக்கு என் ஃப்ரெண்ட் விஜிக்கு பூ வைக்க வர்றாங்க. அதுக்கு போடறதுக்கு நல்ல சாரி செலக்ட் பண்ணிட்டிருக்கேன்.”

“அப்டியா? ஃபங்ஷன்னு என்கிட்ட சொல்லவேயில்ல?

அவள், “உங்ககிட்ட ஏன் சொல்லணும்?” என்றதில் இவனுக்கு திக்கென்றது.

“நான்‌ உன்‌ புருஷன்டீ…”

“ஆமால்ல, மறந்தே போயிட்டேன்.” என்று அசட்டையாக சொல்லிவிட்டு இளஞ்சிவப்பு புடவையைக் கையிலெடுத்துப் பார்வையிட,

“தப்புதான்.” என்றான் இவன்.

“என்ன தப்பு?” புடவையை விட்டு கணவனைப் பார்க்க,

“மறக்க முடியாதபடி ‘சம்பவம்’ பண்ணாம விட்டு வச்சிருக்கேன்ல? அது என் தப்புதான்!” என்றவன், “அது வேணாம். இந்த க்ரீன் கட்டிக்கோ!” என ஒரு தளிர் பச்சைநிற டிசைனர் சேலையை அவள் தோளில் வைத்துவிட்டு போனான்.

அவன் சொன்னதைக் கேட்டு விழித்து, பின் புரிந்து, வெட்கம் கொண்டு, ‘இந்த பிரமோத் இப்டிலாம் கூட பேசுவானா?’ என முறுவல் பூத்து, பின் அம்முறுவலும் வாடி, ‘அப்போ சித்தாரா கிட்டேயும் இப்டித்தானே பேசிருப்பான்?’ என்ற ரீதியில் சென்றது பெண்புத்தி.

அன்று அவன் தேர்ந்தெடுத்த புடவைதான் அவளுடலைத் தழுவிக்கொண்டது. இதுவும் பெண்புத்தியே!

விஜியைப் பார்க்க வந்தவர்கள் நல்ல மாதிரியாக பழகினார்கள். மாப்பிள்ளை ஜீவா தோழமையுடன் பேசியதில், வெளியாட்களுடன் அதிகம் பேசாத நிவர்த்திகாவே இலகுவாக பேசினாள். ஜோடிப் பொருத்தம் அபாரம் என மனதினுள் இருவரின் பொருத்தத்திற்கும் ‘ரேட்டிங்’ கொடுத்தாள்.

விஜியின் வீடு இவர்கள் வீட்டிலிருந்து மூன்று தெருக்கள் தாண்டியிருந்தது. இவள் காஞ்சனாவுடன்தான் வந்திருந்தாள்.

பூ வைத்து முடிந்ததும், விஜிக்கு துணையாக இருந்த மருமகளிடம், “நீ இருந்து வா நிவர்த்திம்மா. உன்னைக் கூப்பிட பிரமோத்தை வர சொல்றேன்.” என்றவரிடம் இவளால் மறுக்க முடியவில்லை.

அலுவலக களைப்பில் இருந்தவரை சரியென்று அனுப்பி வைத்தாள். பிரமோத்திடம் தகவல் சொல்லப்பட, அவனும் மணி எட்டைத் தாண்டும்போது மனைவியை அழைத்துப் போக வந்தான். வந்தவனை அடையாளம் கண்ட விஜியின் அம்மா, உள்ளே அழைக்க, “இல்லக்கா… நிவர்த்திகாவை கூப்பிட வந்தேன்.” என்றான்.

“அதனாலென்ன? இவ்ளோ தூரம் வந்துட்டு காபியாவது குடிச்சிட்டு போய்யா.” விருந்தினரை கவனிக்கும் பரபரப்பிலும் அவர் இவனையும் உபசரிக்க, வேண்டாவெறுப்பாக உள்ளே சென்றவனுக்கு உள்ளூர எரிச்சல் கிளம்பியது.

விஜியையும் ஜீவாவையும் புகைப்படம் எடுக்கும் படலம் நடந்துக்கொண்டிருக்க, திருமதி பிரமோத் அத்தனைப் பற்களையும் காட்டி இருவரையும் கேலி செய்து கொண்டிருந்தாள். அதற்கு ஜீவா ஏதோ சொல்ல, இவளும் அவனருகே நின்று அவனுக்கு இணையாய்ப் பேச, பார்த்திருந்த நிவர்த்திகாவின் கணவன் பல்லைக் கடித்து கடித்தே அவற்றைக் கழற்றிவிடும் உத்தேசத்தில் இருந்தான்.

‘ஒரு தடவையாவது என்கிட்ட இப்டி பேசிருப்பாளா? அட்லீஸ்ட் இப்டியொரு ஸ்மைல்? அவ ஃப்ரெண்டுன்னா மட்டும் வாய் கரிசகொளம் வரைக்கும் போயிட்டு வருது.’ இவனின் புகைச்சல் அவளை எட்டிவிட்டதோ என்னவோ!

ஏதேச்சையாக இவன் பக்கம் திரும்பிப் பார்த்தாள். தன்னையே பார்த்தபடி இருந்தவனிடம், ‘ரெண்டு நிமிஷம்!’ என கண்களின் வழி பாவனையாக சொல்ல, இவனுக்கு இதயம் ஒருமுறை எம்பியது.

விஜி அவனையும் புகைப்படம் எடுக்க அழைக்க, தயங்கி நின்றவனை, அவளின் அப்பா, “அட வாப்பா! எதுக்கு தயக்கம்? நீங்க எல்லாரும் ஒரே செட்டுதானே?” எனவும்,

வேகமாக இவனருகே வந்து இயல்பாக கரம்பற்றி இழுத்த மனைவி புதியவளாக தெரிந்தாள். ‘விஜி அருகே இருப்பதால் தன்னிடம் தோழமையுடன் இருக்க நினைக்கிறாள்’ என நினைத்தபடி, அவளுடன் போய் புகைப்படம் எடுத்துக்கொண்டான்.

அவர்கள் தந்த கேக்கை சாப்பிட்டு, மென்பானம் அருந்தி விடைபெற்று வெளியே வர, டியூக் நிவர்த்திகாவை மிதப்பாகப் பார்த்தது. கல்யாணம் ஆனதிலிருந்து இருவரும் கோவிலுக்குக் கூட ஒன்றாக போகவில்லை. பெரியவர்கள் சொன்னபோதும் இருவருமே ஏதோ ஒன்றைச் சொல்லி தட்டிக் கழித்தனர்.

‘இப்போது என் மீதேறி பவனி வரத்தானே வேணும்?’

“இதுல உட்கார்ந்தா விழுந்துட மாட்டேனா?”

“விழாத மாதிரி இறுக்கமா பிடிச்சுக்கோ!”

“எங்க?” வண்டியைச் சுற்றி வந்து பார்த்தாள்.

அவளை கேலியாக பார்த்தவன் சொன்னான். “உனக்கு முன்னாடி இருக்க உன்னோட ப்ராப்பர்ட்டி’அ!”

“…….”

“சரி, அவ்ளோ நம்பிக்கை இல்லைன்னா நடந்து வா.”

“இல்லல்ல! ப்போ… போகலாம்.”

இவள் ஏறியதும் வண்டி சீற, பின்னிருந்து அவன் சட்டையை இறுக்கிக்கொண்டாள். அவளை வீட்டு தலைவாசலில் விட்டுவிட்டு விருட்டென திரும்பிப் போய்விட்டான்.

திரும்பியும் பாராமல் போனவனைக் கண்டு, ‘இப்போ நான் என்ன செஞ்சேன்னு இவ்ளோ கோவம்?’ என இவள் மனம் சிணுங்கியது.

பிரமோத் நேரே சென்று நின்றது பாலாவின் இன்ஸ்டிட்யூட்டிற்கு! அலைப்பேசியில் காதலி வித்யாவுடன் அளவளாவிக் கொண்டிருந்த பாலா, இவனைக் கண்டதும், “சரி சரி என்னைப் பத்தி கனவு கண்டுக்கிட்டே போய் தூங்கு.” என அவசரமாக அழைப்பைத் துண்டித்தான். நண்பன் என்ற பெயரில் இருக்கும் நாரதன் எதையாவது சொல்லி இவன் காதலை நசித்துவிட்டால் என்ன செய்வது? அனுபவமல்லவா?

பெரிய பெரிய மூச்சுக்களை இழுத்து விட்டுக் கொண்டிருந்த நண்பனை, பாலா உதட்டைக் குவித்து கூர்பார்வையில் அளவிட்டபடி நெருங்க, “எவ்ளோ திமிர் தெரியுமா மச்சான்? ஒரு நாளாவது என்கிட்ட இப்டி சிரிச்சிருப்பாளா? இன்னிக்கு எவனோ ஒருத்தன்கிட்ட இளிச்சு இளிச்சு பேசறா! எனக்கு வந்த ஆத்திரத்துக்கு… அவளை அப்டியே…” என மேஜை மேல் குத்தினான்.

“கூலாகு மாப்ள… எவ சிரிச்சா’ன்னு இப்டி கதறிட்டிருக்கே?”

“அவதான். பொண்டாட்டிங்கற பேர்ல என் உசுரை வாங்க வந்தவ!”

பாலா அவனை மேலும் கீழுமாக பார்க்க, அதைக் கூட கவனிக்காமல் தன் போக்கில் அங்கலாய்த்துக் கொண்டிருந்தான் பிரமோத். “இன்னிக்கு காலைல சொல்றா… நீதான் என்‌ புருஷனா? மறந்தே போச்சுன்னு!”

“ஹஹ்ஹஹா… தெறி மச்சான்! நீதான் எப்பவும் எங்க எல்லார் ஆவியையும் குறைப்ப! இன்னிக்கு உன்னையே ஒருத்தி புலம்ப விட்ருக்கான்னா… அவளுக்கு ஹேட்ஸ் ஆஃப் பண்ணியே ஆகணும்டா!”

“மகனே கொலவெறில இருக்கேன். ஜாக்கிரதை!”

“சரி சரி! இப்போ என்னாச்சுன்னு நீ இப்டி கிடந்து வெம்பிக்கிட்டு இருக்கே?”

விஜி வீட்டில் நிவர்த்திகா ஜீவாவுடன்‌ பேசியதைச் சொல்லி மீண்டும் மூக்கில் காற்றடிக்க, பாலா கேட்டான்.

“அவ கூட வேற எவனும் பேசினா உனக்கு ஏண்டா பொறாமை பொங்குது?”

“ஆங்… பொறாமைலாம் ஒண்ணுமில்ல. என்னவோ தெரில இரிட்டேட் ஆகுதுடா.”

“நமக்கு சொந்தமானவங்க நம்மக்கிட்ட சரியா பேசாம மத்தவங்க கிட்ட மட்டும் நல்லா பேசும்போது தான் நமக்கு இர்ரிட்டேட் ஆகும் பிரமோத். நிவர்த்தி உனக்குதான் சொந்தம். அதான் எரியுது உனக்கு.”

“ச்ச ச்ச… அப்டிலாம் ஒண்ணுமில்ல…” என்றவனின் குரல் நலிந்திருந்தது.

“அப்போ ஏன் இப்டி தவிக்கற?”

“ப்ச்!” புருவங்கள் நெளிந்து கிடக்க, நெற்றி பல வரிகளை வரைந்தது.

“ஏன்னா இப்போ உன் மனசு முழுக்க ரூலிங் பண்றது நிவர்த்திதான்’டா என் சிப்ஸு!”

சிறிதுநேரம் பாலா சொல்வதை உள்வாங்கி அசைபோட்டவன் தயக்கமாகக் கேட்டான். “அப்டீன்னா?”

“அப்டித்தான்!”

“அப்… அப்போ அதுதானா ப்ரோ?”

“கன்ஃபர்ம்! அதே தான்.”

“அப்போ சித்தாரா?”

“அடிங்கொய்யால! இன்னும் என்னடா சித்தாரா… அவங்கய்யன் செத்தாரா’ன்னுகிட்டு… அவ கல்யாணத்தன்னிக்கு பிஸ்மி கடைல நல்லி எலும்பு சூப்பும் குடல் குழம்பும் வாங்கி தின்னவன்தானேடா நீ? இப்ப இந்த பிள்ள கூட அவ ஃப்ரெண்ட் பேசுனதுக்கே சோத்தையும் மறந்து இங்கே வந்து புலம்பிட்டு இருக்கே. இதுல இவருக்கு பொறாமையே இல்லையாமாம்.”

அவன் சொல்வதென்னவோ உண்மைதான் என இவனுள்ளம் ஒப்புக்கொண்டது. சித்தாரா வேறு ஒருவனை முழு மனதுடன் திருமணம் செய்யவிருக்கிறாள் என்று தெரிந்தபோது எத்தனை மனநிம்மதி அடைந்தான் இவன். இப்போது அதே மனம், நிவர்த்திகா தன்னைத் தவிர்த்துவிட்டு வேறொருவனிடம் – ஏன் விஜியிடமோ தன் வீட்டினரிடமோ கூட சிரித்து பேசினால் கொந்தளிக்கிறதே!

“ஒழுங்கா அந்தப் பிள்ள கூட வாழற வழியைப் பார் பிரமோத்! இனி ராப்பிச்சைக்காரன் மாதிரி ராத்திரில இன்ஸ்டிடியூட் பக்கம் வந்துராதே! கிளம்பு கிளம்பு!” என எச்சரித்தான் பாலா.

இவன் மனம் தெளிய ஆரம்பித்தது. தன்னைப் பார்க்கும்போது அமர்த்தலாய், அதகளம் செய்யும் விழிகளும், இறுக்கமாய் மூடியிருக்கும் இதழ்களும் இன்று வேறொருவனிடம் மலர்ந்து புன்னகைத்தது இவன்‌ மனதில் மலையளவு எரிச்சலை மூட்டிய அதேநேரம், நிவர்த்திகாவின்மீது காதல் என நினைக்கையிலேயே குளுமையைக் கொட்டி பரப்பியது.

************

நிவர்த்திகா அந்த வீட்டில் பிரமோத்தைத் தவிர மற்ற அனைவரிடமும் உரிமையுடன் பழகினாள். அவ்வீட்டில் எல்லா இடத்திலும் வலம் வந்தாள். அவர்களின் இலகுவான பேச்சும், ஈடில்லா பாசமும் கூடுதலாக தாத்தாவிடம் கிடைக்கும் சலுகையும் அவளின் ஒட்டாத தன்மையை ஓட வைத்திருந்தது.

“அத்தை, உங்க துணியை இங்கே வைக்கறேன்.” என்றவள் உலர்ந்த துணிகளை மடித்து அமலாவின் அறையில் வைத்துவிட்டு திரும்ப, அங்கே மேசையின் ஓரமாய் இருந்த வித்தியாசமான ஒரு பொருள் அவளைக் கவர்ந்தது.

“என்னதிது? அம்முவோட விளையாட்டுச் சாமானா?” என்ற முணுமுணுப்புடன் கையில் எடுத்துப் பார்த்தாள்.

அது ஒரு கனசெவ்வகப் பெட்டகத்தின் முன்புறத்தில் இரண்டு கைகளும் அடிப்புறத்தில் இரண்டு கால்களுமாக அரையடி உயரத்தில் இருந்தது. அந்த கைகளில் மனித விரல்கள் போலவே இருந்ததை அழுத்திப் பார்த்தாள். அதன் உறையில் சின்ன சின்ன குமிழிகளிட்ட ரப்பர் ஷீட் போடப்பட்டிருந்தது. உள்ளே என்ன இருக்கிறதோ தெரியவில்லை. கால்களுக்கு உயர்தர, உறுதியான பிளாஸ்டிக். மொத்தத்தில் அந்தப் பொருள் சாவி கொடுத்தால் நகரும் பொம்மை போலிருந்தது.

‘சாவி எங்கே போடவேண்டும்?’

அதனை முன்னும் பின்னும் திருப்பிப் பார்க்க, அதன் முதுகில் குட்டி சொடுக்கி (switch) இருந்தது. போட்டுப் பார்த்தாள். பழுதாகி இருப்பது தெரிந்தது. தூக்கிக்கொண்டு அமலாவிடம் காட்டி அது என்னவென்று விசாரிக்க, அவர் சொன்னார். “இதுவா? இது உன் வீட்டுக்காரன் எனக்கு செஞ்சு கொடுத்த ரோபோ பொம்மை.”

“என்ன? ரோபோவா?!” ஆச்சரியமும் ஆவலுமாக திருப்பிப் பார்த்தாள்.

“ஆமா, நம்ம வீட்ல வேலைக்கு ஆளுங்க இருந்தாலும் நாம நின்னு பார்த்தா தானே ஒழுங்கா வேலை நடக்கும்? முன்னாடி ஓடியாடி எல்லாம் பார்த்தேன். உடம்புக்கு ஏதாவது நோவு வந்தாதான் நமக்கு வயசாகுதுன்னே தெரியுது நிவர்த்தி. அப்டி ஒருதரம் கால் பாதத்துல வலியை இழுத்து வச்சிக்கிட்டேன்.

ராத்திரியெல்லாம் தூங்க முடியாம வலி நோவெடுத்துடுச்சு. காலைல எந்திரிக்கைல தரைல காலை வைக்கவே முடியாது. ஆஸ்பத்திரிலயும் காட்டியாச்சு. ரெண்டு நாள் நல்லா இருப்பேன். அப்புறம் ஊருக்கு போன மாமியா(ர்) திரும்பவும் வந்த கதைதான். அப்போதான் பிரமோத் பார்த்துட்டு இதை செஞ்சு கொடுத்தான்.

இதை நம்மளோட பாதத்துக்கு நேரே வச்சுக்கிட்டு ஆன் பண்ணா போதும். இதுல இந்த விரல் இருக்குது பாரு! அது நம்ம பாதத்துல அழுத்திக் கொடுக்கும் பாரு… அப்டி இருக்கும்.”

“மசாஜரா அத்தை?”

“ஆங்… அப்டித்தான் நினைக்கறேன். சும்மா சொல்லக்கூடாதும்மா… எத்தனை நாள் ராத்திரி இதை காலுக்கு பக்கமா வச்சி தூங்கிருக்கேன் தெரியுமா? அது அழுத்த அழுத்த எனக்கு கண்ணு தானா சொருகிடும். உங்க மாமா தான் ஆஃப் பண்ணி வைப்பார்.”

“இப்போ வொர்க் ஆகலையா என்ன?”

“ம்ம், ஒருநாள் காலுக்கு பக்கமா வச்சிட்டு இப்டி சோபால உட்கார்ந்திருந்தவ, அது விரல்படவும் தூங்கிட்டேன். அப்புறம் பால் வண்டிக்காரன் சத்தம் கேட்டு, எழுந்த வேகத்துல அதை மிதிச்சிட்டேன். வேலையெல்லாம் போட்டது போட்டபடி கிடக்குதே… இப்டி தூங்கிட்டோமேன்னு பதட்டத்துல எழுந்து இப்டி ஆகிடுச்சு.” என வருத்தம்கொண்டார்.

“அவர்கிட்ட சரி செஞ்சு தர சொல்லலாம்ல?”

“அவனுக்கு அவன் தாத்தா கூட மல்லுக்கு நிற்கவே நேரம் சரியா இருக்கும் போவியா…”

அவர் சொன்னதைக் கேட்டதும், அன்று தாத்தாவிடம் பேசியது நினைவிற்கு வந்தது. தன் கணவன் எதிலும் முதல் வருபவன் என்றும், கூடவே அவரின் தறுதலை என்ற விளிப்பும், அவனுக்கு தன்மேல் பாசமேயில்லை என்று சொன்னதையும் நினைத்தவள், தனக்குள்ளாக ஏதோ கணக்குப் போட்டாள்.

அமலா அந்தப்பக்கம் எழுந்து போக, அந்த இயந்திரத்தைத் தன்னறைக்கு எடுத்துப் போனவள், மறுநாள் பிரமோத் அறையில் இருந்த நேரம் அதை எடுத்து பிரித்துப் போட்டு ஏதோ செய்தாள். திருமணமான இந்த இருபது நாட்களில் காலை நேரத்தில் பிரமோத் குளித்து கிளம்பும்போது, இவள் கீழே இருப்பாள்.

இன்றென்னவோ அதிசயமாக அறையில் இருப்பவளைக் கண்டு, ‘கூச்சத்தையெல்லாம் கரிசகொளத்துக்கு அனுப்பிட்டா போல! எல்லாம் இந்த சங்கர் கொடுக்கிற இடம்!’ என மனைவிக்கு மட்டுமல்லாது தாத்தாவின் பெயருக்கும் சேர்த்தே அர்ச்சனை செய்தான்.

அன்று இவனிடம் ஸ்ரீதரன் கரும்புக் காட்டை மேற்பார்வையிட போக சொல்ல, இவன் சங்கரன் எங்கே எனக் கேட்க, அப்போதுதான் ஸ்ரீ சொன்னான். “நிவர்த்தி நம்ம வீட்டுப் பிள்ள’டா! ஆனா வந்ததுல இருந்து என்னவோ அகதி மாதிரி யாரோடயும் ஒட்டாம இருக்கா. அதுதான் தாத்தா இன்னிக்கு நிவர்த்தி கூட பேசணும்னு வீட்டுலயே இருந்துட்டார்.”

“ஆங்! அகதி மாதிரி இருக்கறவதான் அல்டாப்பா டிரெஸ் பண்ணிக்கிட்டு ஆட்டோகிராஃப் போடறா போல… போடா வேற எவன்கிட்டயாவது அட்வைஸ்ல ஊசி ஏத்து! வந்துட்டான் பேச!” எனக் காரமாக பேசி அழைப்பைத் துண்டித்திருந்தான் இவன்.

அதிலிருந்து மனைவி மீதான பொறுமல் கூடியிருந்தது. ‘சங்கர் கூட கூட்டு சேர்ந்திருக்கியாடீ? பார்த்துக்கறேன். எத்தனை பேர் வந்தாலும் ஒத்தையா சமாளிப்பான் இந்த பிரமோத்!’ என மனதினுள் சூளுரைத்துக்கொண்டவன் அப்போதுதான் அவள் தனக்கு பரிச்சயமான பொருட்களை வைத்து ஏதோ செய்து கொண்டிருப்பதைக் கவனித்தான்.

“என்ன செய்ற?”

“இது ரிப்பேர்னு சின்னத்தைச் சொன்னாங்க. அதான் சரி பண்ண முடியுமான்னு பார்க்கறேன்.”

“ஓ! பண்ணுங்க பண்ணுங்க.” என்றுவிட்டு குளிக்க போய்விட்டான்.

தன்னிடம் சிக்காமல் செல்பவனின் மேல் கோபம் பிறக்க, குளியலறைக் கதவை முறைத்தவள் அவன் குளித்து முடிக்கும்வரை சும்மா இருந்துவிட்டு, கதவைத் திறந்த நொடியில் இயந்திரத்திலிருந்த முக்கியப் பகுதியைப் பிய்த்தெறிந்தாள்.

“ஏய்! ஏய்! அறிவிருக்காடீ?” என பதறியபடி ஓடிவந்தவன் அந்தப் பகுதியைக் கையில் எடுத்து இப்படியும் அப்படியுமாக ஆராய்ந்து நிம்மதி மூச்சுவிட்டு, “தெரியலைன்னா கம்முன்னு கிடக்க வேண்டியதுதானே? இப்டித்தான் பிச்சு போடறதா? தள்ளு!” என அவளை இடித்து நகர்த்தினான்.

அவள் அறையில் இருந்ததால் குளியலறையில் இருந்து வரும்போதே இலகுவான ஷார்ட்ஸ் ஒன்றை அணிந்து வந்திருந்தான். துவட்டிய துண்டை முதுகில் போர்த்தினாற் போல் மூடியிருந்தான்‌. கழுத்துபாகம் தலைமுடியிலிருந்து சொட்டு சொட்டாய் விழுந்த திவலைகளில் நனைய, இவளின் இமைகள் மனசாட்சியே இல்லாமல் தாழ்ந்துகொண்டன. ஆனால் சுவாசத்தை இம்சை செய்த மெடிமிக்ஸைத் தவிர்க்க முடியவில்லை.

இப்படியோர் நிலையில், இப்படியோர் நெருக்கத்தில் இவள் பிரமோத்தின் அருகே அமர்ந்திருப்பதை நம்பவும் இயலாமல் திணறினாள். முன்பு, தான் சிற்றுந்தில் பார்த்த பிரமோத்தும் இவனும் வேறு வேறு என‌ மனம் கூவியது‌.

பிரமோத் அரைமணி நேரம் அதனோடு விரல் பாஷை பேசினான். பின் நிமிர்ந்து தன் கைகளையேப் பார்த்தவாறு அமர்ந்திருந்தவளிடம், “பேட்டரி வேற வாங்கி சார்ஜ் போட்டு பார்க்கலாம். அதுவரைக்கும் கையை வச்சிக்கிட்டு சும்மா இரு! மெஷினைத் தொட்ட… மொதோ டெட்பாடி நீதான்!” என எச்சரித்து நகரும் கணவனை இதழில் குறுஞ்சிரிப்போடு பார்த்திருந்தாள் நிவர்த்திகா.

தூறல் தூறும் 🌧️🌧️🌧️

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
58
+1
5
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்