Loading

அத்தியாயம் 20

நேற்று வீட்டில் அனைவரும் சேர்ந்து பிரமோத்தின் மனதைக் கவர்வதற்கு, நிவர்த்திகாவை தாத்தாவிற்கு பிடிக்காத காரியத்தைச் செய்யும் திட்டத்தை முன்வைக்க, அலமலந்து நின்றாள் பெண். அனைவரும் அவரவர் வேலைக்கு சென்ற பின்னும் அவள் முகம் தெளியாததைக் கண்டு, “ஸ்ரீதரா, இன்னிக்கு தேங்காய் இறக்கணும்டா. உன் தம்பியைத் தென்னந்தோப்புக்கு போகச் சொல்லு.” என்றார் சங்கரன்.

“சொல்றேன் தாத்தா. வாங்க, உங்களையும் போகும்போது கரும்புக் காட்டுல விட்டுடறேன்.”

“அதையும் அவனையே பார்க்க சொல்லுடா. தறுதலைக்கு வேற என்ன வேலை இருக்குது? நான் இன்னிக்கு என் பேத்தி கூட வீட்டுல இருக்கப் போறேன்.” என்றவர் வீட்டுத் தாழ்வாரத்தில் அமர்ந்துகொண்டு, நிவர்த்திகாவையும் அழைத்து தன்னருகே அமருமாறு பணித்தார்.

அவர் தன் கணவனைத் தறுதலை என்று விளித்ததில் ஏற்பட்ட மனச்சிணுக்கத்துடனே அவரருகே அமர்ந்தாள் நிவர்த்திகா. அவரும் மெதுவாக பேச்சை ஆரம்பித்தார்.

“உனக்கு நம்ம வீட்ல எல்லாம் பிடிச்சிருக்கா தாயி?”

“ரொம்பப் பிடிச்சிருக்கு தாத்தா. அத்தைங்க, பிரியாக்கா, அர்விந்த் ப்ரோ’ன்னு இங்கே எல்லாரும் என்கிட்ட ஃப்ரெண்ட்லியா இருக்காங்க.” என்று மலர்ந்த முகம்,

“உன் புருசனும் பழகிட்டா நட்பா பேசுவான்மா.” என்றதில் மெதுவாக சுருங்கியது.

ஆனாலும் உதடுகளை இழுத்து வைத்தவாறு சொன்னாள். “ம்ம், தெரியும்.”

அவள் முகத்தைப் படிக்க முயன்ற பெரியவர் ஒரு பெருமூச்சுடன் பேரனைப் பற்றி பேசலானார். “சரவணன் பிள்ளைங்க, அசோகன் மகன் அரவிந்தனைச் சேர்த்து எனக்கு சிங்கம் மாதிரி நாலு பேரனுங்க. நாலு பேர்லயும் கெட்டிக்காரன் உன்‌ புருசன்தான்.”

மூச்சுக்கு மூச்சு ‘தறுதலை’ எனும் வாய், கெட்டிக்காரன் என்றதை சிறு கர்வத்துடனும் பெரும் வியப்புடனும் பார்த்தாள் நிவர்த்திகா.

“பள்ளியோடத்துல படிப்பு, விளையாட்டுன்னு எல்லாத்துலயும் முதல் வந்துடுவான். தங்கமீனு… அதான் உங்க பாட்டி போன பிற்பாடுதான் பயல் குணம் மாற ஆரம்பிச்சது. அது நான் நாத்தங்கால், விவசாய கூட்டம், பண்ணைன்னு பரபரன்னு சுத்திட்டு இருந்த காலம். அதனால நான் முதல்ல இந்தச் சின்னப்பயலைக் கவனிக்கல. காஞ்சனாவுக்கு ஆபீஸ் வேலைல ரொம்ப ஆர்வம். படிச்ச பிள்ளைய வீட்ல முடக்கக்கூடாதுன்னு நானும் தங்கமீனும் அவ விருப்பப்படியே விட்டுட்டோம்.

இவனும் மத்த நேரமெல்லாம் நல்லாத்தான் இருப்பான். நான் ஏதும் சொல்லிட்டா மட்டும் அதுக்கு ஏட்டிப் போட்டியா பேசுவான். ஒரு வேலை சொன்னா, செய்ய முடியாதுன்னு எனக்கு நேராவே சொல்லிடுவான்‌. விஷயம் புரியாம கோவம் வந்து ஒரு தரம் நான் கையை நீட்டிட்டேன். அதுல காஞ்சனாவுக்கும் எம்மேல கோவம்.

தங்கமீனு இருந்திருந்தா சங்கதியோட அடிநுனியைப் பிடிச்சு அப்போவே பிரச்சினையை முடிச்சிருப்பா! பிற்பாடு அமலாதான் அவன் ஏன் தாத்தன்கிட்ட முரட்டுத்தனமா நடந்துக்கறான்னு கண்டுபிடிச்சா!

“என்ன காரணம் தாத்தா?” கவலையும் திகைப்புமாக கதைக் கேட்டாள் பேத்தி.

“மூத்தவன் ஒருத்தன் இருக்கான்னு சொன்னேனுல்ல?”

“ஆமா, மனோ மச்சான்.”

“ஆம்’ம்மா, அவனுக்கு ‘தாத்தன் தான் இந்த வீட்டை அதிகாரம் பண்றான். நம்ம அப்பா, அம்மாவுல இருந்து எல்லாரும் அவனுக்கு அடங்கியே இருக்கணும்’னு ஒரு விச விதை மனசுல விழுந்துருக்குது. யாராவது வவுத்தெரிச்சல் பிடிச்ச சொந்தக்காரவிங்க பேசறதைக் கேட்டிருப்பான். மத்தபடி எம்பேரனுக்கு அப்படியெல்லாம் யோசிக்க வருமா?”

நிவர்த்திகா புன்னகைத்துக் கொண்டாள்.

“பையன் மனசு கெட்டுப் போச்சு. ஆனா பாரு, யார்க்கிட்டேயும் அவன் இதைப் பத்தி பேசல. அதனால எங்களுக்கும் அவன் மனசு புரியல. அப்போ அவனுக்கு பேச தோதா இருந்தது அவனுக்கு பிடிச்ச சின்னத்தம்பி. சின்னப் பையனுக்கு பதிலுக்கு அறிவுரை சொல்ல தெரியுமா? இல்லையில்ல? இவனும் அவன் சொல்றதையெல்லாம் பிஞ்சு மனசுல ஏத்திக்கிட்டான். அதுல இருந்து என் செல்லப் பேரனுக்கு இந்த தாத்தன் பொல்லாதவனாகிட்டேன்.

அப்புறம் மனோ பய ஒருநாள் காதல்னு ஒரு வடநாட்டுக்கார பிள்ளையைக் கூட்டிட்டு வர, இந்த குடும்பத்துல வாக்கப்பட்டு வந்தா நீ இப்பிடி இப்பிடி இருக்கணும் தாயி’ன்னு நாஞ்சொல்ல, அது பாவம் கோச்சுக்கிட்டு போயிடுச்சு. அதை மனோ இவனுக்கு எப்டி சொன்னானோ தெரியல… அப்புறம் இந்த பொல்லாத தாத்தா காதலுக்கும் வில்லனாகிட்டான். ஒரு கட்டத்துல மனோவுக்கு வேலை கிடைச்சு, வடநாட்டு பக்கம் போறதா சொன்னான். எம் பேரனை அவ்ளோ தொலைவு அனுப்பிட்டு பார்க்காம கிடக்க மனசில்லாம, இங்கன விருதுநகர்லயோ மதுரைலயோ பாருய்யான்னு சொன்னேன். ‘இனியும் உம்ம பேச்சைக் கேட்டுக்கிட்டு கிடக்க முடியாது போய்யா’ன்னு பையைத் தூக்கிட்டு கிளம்பிட்டான். அன்னிக்கு சரவணனும் பொறுமையா பேசாம புள்ளைய அடிக்கப் போய், பெரிய சண்டையாகிடுச்சு.

ஒண்ணாந்தரமா இருந்த பிரமோத் மண்ணாந்தரமா போனது அவன் அண்ணன் போனதுக்கு அப்புறம் தான்மா. இவனைப் பொறுத்தவரை எல்லாத்துக்கும் காரணம் யாரு? இந்த கிழவன்தானே? தன் அண்ணே மனசொடிஞ்சு ஊரை விட்டு போக, இந்தக் கிழம் மட்டும் ஊருக்குள்ள தலை நிமிர்ந்து நடக்கவா? விடக்கூடாதே? அப்டின்னு கிறுக்குத்தனமா வேலையத்த வேலையெல்லாம் பார்த்துக்கிட்டு கிடப்பான். எம் பேரன்கூட வெளையாட எனக்கு மட்டும் பிடிக்காம போகுமா? நானும் அவனுக்கு சமமா இறங்க, இப்டி போகுது எங்க உறவு… ப்ச்! என்ன… பயலுக்கு இந்தக் கிழவன் மேல சொட்டு பாசங்கூட இல்லாம போச்சேன்னு தான் எனக்கு வருத்தம்.”

இத்தனை நேரம் அமைதியாக செவிமடுத்த நிவர்த்திகா இப்போது வேகமாக சொன்னாள். “அப்டிலாம் இல்லை தாத்தா. பாசம் இருக்கறதுனால தானே நீங்க உருவாக்கின காட்டுக்கு போறார்? நாத்துநடவுல இருந்து அறுவடை வரை கூடவே இருந்து பார்க்கறார்?”

“பரவால்லயே பத்து நாள்லயே புருசனைப் பத்தி தெரிஞ்சு வச்சிருக்கே!” என உவகைப் பொங்க சொன்னதில், கூச்சமடைந்தாள் திருமதி பிரமோத்.

“அதெல்லாம் எனக்காகவா செய்றான்னு நினைக்கற? ம்ஹூம்! அவன் அப்பங்காரன் மேல இருக்க மரியாதைலயும், ஸ்ரீ மேல இருக்க பாசத்துலயும் செய்றதும்மா.”

“உங்க மேலயும் அவருக்கு நிறைய மரியாதையும் பாசமும் நெருக்கமும் இருக்குது தாத்தா. இல்லைன்னா மாமாவை (சரவணன்) விட உங்கக்கிட்ட ஃப்ரெண்ட்லியா விளையாடுவாரா?”

அடர் மீசைக்கடியில் சின்னதாய் முறுவலித்தார் பெரியவர். “நீ இப்டி உம் புருசனை விட்டுக் கொடுக்காம பேசறதைப் பார்க்க தங்கமீனு இல்லாம போயிட்டா பாரு தாயி. அவளும் இப்டித்தான். நான் என்ன செஞ்சாலும் நாலு சுவத்துக்குள்ள வச்சு மிதிப்பாளே தவிர, வெளியே யார்க்கிட்டேயும் விட்டுக் கொடுக்கமாட்டா.”

சற்றுநேரம் பெரியவர் மனைவியின் நினைவில் லயித்திருந்தார். நிவர்த்திகா அவரைக் கலைக்காமல் அவரின் முகத்தில் கசிந்த காதலை ரசனையுடன் வேடிக்கைப் பார்த்தாள்.

“என் கூட காட்டுல இறங்க ரெண்டு ஆம்பளைப் பிள்ளையைப் பெத்துருக்கேன்னு நான் இறுமாந்து கிடக்க, நகை பூட்டி அழகு பார்க்க பொம்பளைப் பிள்ளை இல்லன்னு தங்கமீனுக்கு ரொம்ப வருத்தம். அசோகனுக்கு அப்புறம் எங்களுக்கு வேற பிள்ளைங்களும் இல்லாம போச்சு.”

“பாட்டி பேரு தங்கமீனா தாத்தா?”

“ஹாஹா… தங்கமீனாட்சி! எனக்கு மட்டும் தங்கமீனு.”

“ஸ்வீட்!”

“ஆமா, உம் புருசனுக்கு நீ சாக்லேட்டுல்ல? அதுமாதிரி.”

கன்னத்தைத் தேய்த்துவிட்டுக் கொண்டு, “அப்புறமென்ன தாத்தா? பாட்டி பொண்ணில்லைன்னு ரொம்ப ஃபீல் பண்ணாங்களா?” எனக் கேட்க, அவரும் தொடர்ந்தார்.

“ஆமா, நாலு தலைமுறைக்கு பிறகு இந்தக் குடும்பத்துல ஸ்ரீக்கு தான் பொம்பளைப் பிள்ளை பிறந்திருக்குதும்மா. அப்டி வெறும் ஆம்பளைங்களா வளர்ந்தாலும், வீட்டுக்கு வார பொம்பளைங்களை என்னைக்குமே, நாங்க யாருமே மரியாதை குறைவா நடத்துனதில்ல தாயி.” என்றவர் தற்போதைய பிரச்சினைக்கு வந்தார்.

“என் வம்ச வாரிசு பிரமோத்தும் அப்படிப்பட்டவனில்ல. ஆனா இப்போ உன்மேல கோவப்படுறான்னா… இதுக்கும் நான்தான் காரணமா? இல்ல… உங்களுக்குள்ள ஏதாவது பிரச்சனையாம்மா? நேத்து நீ உன் ஆத்தா வீட்டுக்கு போறேன்னு சொன்னதைக் கேட்டு மனசே ஆறலை. உனக்கு என்ன பிடிக்கலன்னு சொல்லு. அந்தப் பயலை இழுத்துட்டு வந்து என்னன்னு கேட்கறேன்.”

“அப்டிலாம் ஒண்ணுமில்ல தாத்தா.”

“அப்போ நான்தான் காரணம் போல… நான் பார்த்த பொண்ணுன்னு தான் அந்த கிறுக்குப்பய உன்னைய பாடாபடுத்துறானோ? இப்போ நான் உன்னைச் சத்தம் போட்டதும் என்னமா கொஞ்சிக்கிட்டு வர்றான்?” என தன் போக்கில் பேச,

இவளுக்கு ஒரு பக்கம் கூச்சமும், தாத்தாவின் தவறான புரிதலில் கவலையும் எழுந்தது. “நீங்க எந்த விதத்திலும் காரணமில்ல தாத்தா. கல்யாணமாகி வேற வீட்டுக்கு போறதை நினைச்சு, முன்னாடி எனக்கு கொஞ்சம் பயமிருந்தது. அதை கல்யாணத்தன்னிக்கு என் ஃப்ரெண்ட் கிட்ட சொன்னதை இவர் கேட்டுட்டு, அவரைப் பார்த்துதான் பயம்னு தப்பா புரிஞ்சிக்கிட்டார் போல. அதான் என்மேல கோவம்.” என்றாள் சமாதானமாக!

“அப்டியா? என யோசனையுடன் தாடையைத் தடவினார். பயமென்றால் அவள் பயத்தைப் போக்க முற்படாமல், எந்த கிறுக்கன் பொண்டாட்டியை தள்ளிவைப்பான்? நிச்சயம் தன் பேரன் அப்படிப்பட்ட கிறுக்கனல்ல! அவன் அவளுடன் இணங்கியிராமல் பிணங்கிக்கொண்டிருக்க வேறு ஏதோ காரணம் இருக்கவேண்டும். அதை நிச்சயம் புருசனை விட்டுக்கொடுக்காத இவள் சொல்லப் போவதில்லை‌.

இப்படியாக பெரியவரின் அனுபவ அறிவு எடுத்துரைக்க, “எதுக்கும் நான் உங்கிட்ட கோவமாவே நடந்துக்கறேனாத்தா. நீ ஒண்ணும் மனசுல வச்சுக்காதே!” என்று வழக்கம்போல் பேரனுக்கெதிரான விளையாட்டிற்கு அவளை ஒத்துழைக்கக் கோரினார். அப்படியாவது பேரன் அவளை நெருங்குவானென நினைத்தார்.

நிவர்த்திகாவிற்கு ஆரம்பத்தில் பிரமோத் தாத்தாவைப் பெயர் சொல்லி அழைத்ததிலும் அவரிடம் ஏட்டிக்குப் போட்டியாய்ப் பேசியதிலும், ‘என்ன இவர் இப்டி பேசறார்?’ எனும் சிறு திகைப்பு இருந்தாலும், முன்பே அவர்களைப் பற்றி கேள்விப்பட்டிருந்ததால் உடனேயே அதிலிருந்து மீண்டுவிட்டாள். ஆனாலும் தாத்தாவும் பேரனும் முறுக்கிக் கொண்டிருக்கும் இந்த விளையாட்டு பிடிக்கவில்லை. சித்தாரா விஷயத்திலும் அவளுக்கு இதுவே சொல்லப்பட்டதும் ஒரு காரணம்.

ஆக, “அதெல்லாம் ஒண்ணும் வேணாம் போங்க. இன்னைல இருந்து நீங்க தான் என் தோஸ்த்து சொல்லிட்டேன். இத்தனை நாளும் உங்களை மட்டுமே ஜெயிச்ச உங்க பேரன், இப்போ என்னையும் ஜெயிக்கட்டுமே?” எனக் கேட்டதில்,

“சபாஷ்! அவனுக்கேத்த பொண்டாட்டிதான் நீ! ஆனா ஒண்ணு சொல்றேன்மா… நிவர்த்தி’ன்னா எல்லா குறையையும் நிவர்த்தி செய்யறவ… புரிஞ்சு நடந்துக்கோம்மா. இனி இந்த வீட்டை விட்டு போறதைப் பத்தி நீ பேசவே கூடாது. எங்கே சத்தியம் செய் பார்ப்போம்.” என உறுதிப்படுத்திக்கொள்ள விழைய,

“தாத்தா, நீங்க இவ்ளோ எக்ஸ்ட்ரீமா ஃபீல் பண்ண தேவையே இல்ல. பிரமோ… அது… அவரை எனக்கும் பிடிக்கும். நான் அப்டியெல்லாம் போகமாட்டேன் தாத்தா. ப்ராமிஸ்.” என நீட்டிய அவர் கையில் அடிக்கப் போக,

“போதும் மாமா. சின்னப்பிள்ள கிட்ட போய் சத்தியம் கித்தியம்னு பேசிக்கிட்டு… நிவர்த்தி, உன் ரூமைத் துடைக்க முத்தம்மா போயிருக்கா. போய் ஒரு பார்வை பார்த்துக்கோ!” என மாமனாரைக் கடிந்து, மருமகளுக்கும் வேலை கொடுத்து அனுப்பிய அமலா, மாமியாராய், “முதல்ல இந்த டிரெஸ்ஸை மாத்து!” என்று சொல்லவும் மறக்கவில்லை.

நேற்று தாத்தாவுடன் பேசியபின் நிவர்த்திகாவின் மனதில் சிறு தெளிவு வந்திருந்தது. தானும் இக்குடும்பத்தில் ஒரு அங்கம் எனும் பிணைப்பு தோன்ற, அதனாலேயே இன்று காலை கோவிலில் பிரமோத்திடம் இணக்கமாக இருக்க நினைத்தாள். அவனை நெருங்கியும் நின்றாள். ஆனால் பாலாவின் பேச்சு பிரமோத்தின் பழைய காதலைக்(?) கிளறிவிட, மீண்டும் மனம் முரண்ட ஆரம்பித்துவிட்டது.

ஆனால் அதை எப்படி தன்னவன் இனங்கண்டான் என்பதே வியப்பிற்குள் அடங்காமலிருக்க, அவன் இன்னுமாய்த் தன்‌ மனதினைத் தோண்டியெடுத்தாற் போல், கல்யாணத்திற்கு முன்பு இவள் அவனை தவிர்த்தாள் என்பது வரை அறிந்து, அதற்கு பதிலும் கேட்கிறான். நிவர்த்திகாவிற்கு ஒரு கணம் உலகமே ஸ்தம்பித்துதான் போயிற்று.

தோழி விஜிக்கும் கூட இவள் மனம் திருமணத்திற்கு சிறிது நாட்கள் முன்புதான் தெரிந்திருந்தது. ஆனால் இவன்!?

பிரமோத் ஏதோ ஒரு யூகத்தில்தான் அப்படிக் கேட்டான். ஆனால் இவன் அவளைத் தூக்கியதும் பதற்றம் கொண்டிருந்த விழிகள் இவன் கேட்ட கேள்வியில் வியப்பில் விரிந்ததும், இரு முத்துக்கள் தரிசனம் தரும் பிளந்த அதரங்களும் அதுதான் உண்மை என்பதை அடித்துக் கூறியது.

அமுதினி தன் அப்பா ஸ்ரீதரனை அழைத்து வருவது தெரிய, “ஸ்ரீ வர்றான். சீக்கிரம் சொல்லு நிதி.” என இவன் தூக்கியிருந்தபடியே உலுக்கியதில் நடப்பிற்கு வந்தவள்,

“அப்டிலாம் இல்லை. நான் ஏன் உங்களை அவாய்ட் பண்ணனும்?” என்றவள் துள்ளியும் நெளிந்தும் அவன் கைகளிலிருந்து இறங்கி, ஸ்ரீ அவ்விடம் வரும்முன், விநாயகரை அடுத்திருந்த துர்க்கை சன்னதியின் பின்னால் போய் நெகிழ்ந்திருந்த புடவையைச் சரிசெய்து கொண்டாள்.

அப்படியே சுவரில் சாய்ந்து நின்றவளுக்கு இன்னுமே அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை. ‘எப்படி யூகித்திருப்பான்?’ என்ற ஒரே கேள்வியில் உழன்றவள், மீண்டும் மணிச்சத்தம் கேட்டு,‌ தன்னைச் சமன் செய்துகொண்டு தன்னுணர்வுகளைப் புன்னகையின் பின்னால் நன்றாக புதைத்து மறைத்து வைத்துவிட்டு வெளியில் வந்தாள்.

ஸ்ரீதரன் மகளைத் தூக்கி மணியடித்துக் கொண்டிருக்க, பிரமோத்தின் பார்வை துர்க்கை சன்னதியை விட்டு அகலவில்லை. கவனமாக உணர்வுகளை மறைத்துவிட்டு வந்தவளின் கண்ணாமூச்சி இவனுக்கு சுவாரஸ்யத்தைக் கொடுத்தது. அவளருகே போய், “விளையாடு மங்காத்தா
விடமாட்டா எங்காத்தா
வெளிவேசம் போடாட்டா
இந்த வெற்றி கிட்ட வராதா…” எனப் பாடியபடி கடந்துபோனான்.

அவனின் பாடலிலும் கேலிப் பார்வையிலும் இவளுக்கு வயிற்றைக் கலக்கியது. எங்கே தன்‌மனம் வெளிப்பட்டு விடுமோவென அஞ்சியவள் அப்போதிருந்து கணவனைத் தவிர்க்க ஆரம்பிக்க, மனைவியின் மனதிற்குள் பதுங்கிக்கிடக்கும் விடையைச் சலித்து எடுத்துவிட வேண்டி, அவன் இவளை நெருங்க ஆரம்பித்தான்.

கதிரவன் தம்பதியர் விடைபெற ஆயத்தமாக, விடைகொடுக்க மருமகன் பின்னோடு போனான். “வீட்டுக்கு வரவேயில்லையே தம்பி? இந்த வாரம் ஃப்ரீயா இருந்தா நிவர்த்தியைக் கூட்டிட்டு கல்யாண விருந்துக்கு வரணும்.” என்ற மல்லிகா மகளுக்கான ஏக்கத்தை மறைத்துச் சொல்ல,

கதிரவனும் கேட்டார். “நானே சொல்லணும்னு நினைச்சேன். நீங்க வர்றதா இருந்தா பெரிய மாப்பிள்ளையையும் கூப்பிடலாம்னு நினைக்கறேன் தம்பி. உங்க வசதி பார்த்து சொல்லுங்க.”

பிரமோத், “இந்த வாரம் ஃப்ரீ தானே தாத்தா?” என சங்கரனிடம் அனுமதி போல் கேட்டு அவருக்கு மட்டும் தெரியும்படி ஒற்றைக் கண் சிமிட்ட,

“ஹும் ஹும்! போயிட்டு வா!” என அவரும் பகுமானம் குறையாமல் சொல்ல, பார்த்திருந்த வீட்டினருக்கு இருதயக் கோளாறு ஏற்படாதது அந்த மாரியம்மனின் மகிமையன்றி வேறென்ன இருக்க முடியும்? கதிரவன், சரவணனின் தோழன் என்பதால் காட்டும் மரியாதை இது என முதல்முறை இந்த திகில் காட்சியைப் பார்க்கும் அவர்களுக்கு எப்படி தெரியும்?

“பர்மிஷன் கிராண்டட்! அப்போ சண்டே வர்றோம் மாமா.”

இப்போதுதான் திருமணத்திற்கு முன் தன் பெற்றோர் பிரமோத்தை அப்படி புகழ்ந்தது ஏனென்று நிவர்த்திகாவிற்கு புரிந்தது. கல்யாணத்தின் போதும் அதன்பின்னான சம்பிரதாயங்களின் போதும் தாத்தா – பேரன் இருவரையும் தன் பெற்றோருடன் சேர்த்து பார்க்கவில்லை அல்லது பார்த்தும் இவர்கள் கூத்தை இவள்தான் கவனிக்கவில்லையோ என்னவோ!

இப்போது பாட்டனையும் பேரனையும் குறித்து மனதில் நினைத்துக்கொண்டாள். ‘டேன்ஞ்சரஸ் ஃபெல்லோஸ்!’

தூறல் தூறும் 🌧️🌧️🌧️

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
12
+1
60
+1
4
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்