Loading

அத்தியாயம் 19

புருவங்கள் உச்சிமேட்டிற்கு ஏற அழகானதொரு புன்னகையுடன் இன்ஸ்டிடியூட்டின் முதல்மாடி வராண்டாவில் நின்றிருந்தான் பாலா. சிலுசிலுவென்ற காலை நேரக் காற்றில் பறந்த சிகையை அவ்வப்போது கோதிவிட்டுக் கொண்டு, தனக்கு வலப்புற வகுப்பின் வாசலில் நின்றிருந்த ஒரு பெண்ணிடம், “என்னால இதுக்கு மேல வெய்ட் பண்ண முடியாது விதும்மா.” என்று குழைந்தான்.

“உடனே எப்டிங்க? எனக்கு பயமா இருக்குதே…”

“அப்பா, அம்மாவைக் கூட்டிட்டு பொண்ணு கேட்க தானேடி வர்றேன்னு சொல்றேன். இதுக்கு எதுக்கு பயம்?”

“இல்ல… நாமளே இன்னும் புரிஞ்சுக்காதப்போ…

“இன்னுமா புரிஞ்சிக்கணும் விது? உனக்கு இன்னும் என் மேல நம்பிக்கை வரலையோ?”

“அச்சோ! அப்டிலாம் இல்லைங்க…”

“டேய் மச்சான், வந்து வண்டில ஏறு!” என்ற பிரமோத்தின் உரத்த குரலில் இவன் திரும்பி கீழேப் பார்க்க, பிரமோத் டியூக்கைத் திருப்பி நிறுத்திக் கொண்டிருந்தான். கீழே இருக்கும் அவனுக்கு, மேலே இந்தப் பக்கம் வகுப்பின் வாசலில் வித்யா நின்றிருப்பது தெரிய வாய்ப்பில்லை. அத்தோடு இந்த காலை பத்து மணி என்பது வகுப்புகள் நடைபெறும் நேரமுமில்லையே?

“டேய், அதான் கல்யாணம் ஆகிடுச்சுல்ல? வண்டில பொண்டாட்டியைக் கூட்டிட்டு போகாம இன்னும் ஏண்டா என் தாலியை அறுக்கற?” என இவன் மேலிருந்து கத்த,

அவனும் கீழிருந்து இரைந்தான். “என்ன மச்சான் இப்டி சொல்லிட்ட? இருபத்தேழு வருஷமா சேர்ந்திருக்க நம்மளை நேத்து வந்தவ பிரிச்சிட முடியுமா? நான் பாதிநாள் ராத்திரி உன் கூட தானேடா தூங்கிருக்கேன்? அப்டிப் பார்த்தா நீதான் மச்சி என்‌ முதல் பொண்டாட்டி.”

அவன் பேச பேச இங்கே இருந்த வித்யாவின் முகம் அஷ்ட கோணலானதோடு, கோபமடைவதற்கும் ஆயத்தமானது.

“டேய் **** வாயை மூடு!”

“காலங்காத்தாலயே கெட்ட வார்த்தை பேசாத வ்ரோ! கோவிலுக்கு போகணுமாம். சங்கர் உன்னையும் கூட்டிட்டு வர சொன்னார். வாடா, ‘தீர்க்க சுமங்கலன் பவ’ன்னு சொல்லி உன் தாலில குங்குமம் வச்சு விடறேன்.”

அதற்கு மேல் அவன் பேச்சைப் பொறுக்க முடியாமல் பாலா கைப்பிடித்து இழுத்தும், உதறிக்கொண்டு விருட்டென இருந்த இடத்தைவிட்டு வெளியேறினாள் வித்யா. அப்போதுதான் அவளைப் பார்த்தான் பிரமோத். அவள் நகர நகர அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தவனின் ஹெல்மெட் தலையும் அவள்புறமே திரும்பியது. விடுவிடுவென கீழே இறங்கியவளின் நடையிலிருந்த கோபமும் புரிந்தது.

‘ஆஹா! ராங் டைம்ல என்ட்ரி போட்ருக்கடா பிரமோத். நிஜமாவே தாலியை அறுத்துட்டோம் போலயேடா… இருக்கட்டும். நான் மட்டும் கல்யாணமாகியும் இன்னும் சிங்கிளா சுத்திட்டிருக்க, இவன் மட்டும் கடலை உடைப்பானாமா?’

அவள் பின்னேயே, “விது, விது!” எனக் கெஞ்சியபடி வந்த பாலா, அவள் போனதும் கீழே கிடந்த சிறு செங்கல் ஒன்றை எடுத்து பிரமோத்தின் ஹெல்மெட் தலையில் அடித்தான். “**** நல்லா இருப்பியாடா நீ?”

குபீரென கிளம்பிய சிரிப்பை அடக்கிய பிரமோத், “பட்டப்பகல்ல க்ளாஸ் ரூம்ல வச்சு என்ன காரியம்டா செஞ்சிட்டிருக்க?” அநியாயத்திற்கு பதறியவனாக ஏற்ற இறக்கத்துடன் கேட்க,

“அதான் கிழவனும் பேரனுமா சேர்ந்து என் வாழ்க்கைல செய்யோ செய்ன்னு செய்றீங்களே… இதுல நான் என்னடா செஞ்சிட போறேன்?” கபகபவென வயிறெரிந்தது பாலாவுக்கு.

“சரி, ஆனது ஆச்சு விடு மச்சான். நான் அப்புறமா வந்து சமாதானப்படுத்தி உன் கூட சேர்த்து வைக்கறேன்.”

“நீ ஒண்ணும் நொட்ட வேணாம். உன்னையும் உன் தாத்தனையும் நாடு கடத்தினாதான் நான் நிம்மதியா வாழ முடியும்.” என்று திட்டியபடி வண்டியில் ஏறி அமர்ந்தான்.

“நல்லா பிடிச்சுக்கோ மச்சி. அப்புறம் நான் வாழா வெட்டன் ஆகிடுவேன்.” என்று சிரிக்க,

அவன் கழுத்தை நெறிப்பதாக பாவனை செய்த பாலாவுக்கும் சிரிப்பு வந்தது. “அது விதவன்’டா.”

“ஹாஹா…”

“என்ன மாப்ள திடீர்னு கோவில்? எந்தக் கோவில்?”

“மாரியம்மன் கோவில். தங்கமீனாட்சி அம்மையார் எப்பவோ வேண்டிருந்த நேர்த்திக்கடனைச் செலுத்தாம விட்ருக்குமாம். அதான் நான் உருப்படாம சுத்தறேனாம். கிழம் சொல்லுது.”

தங்க மீனாட்சி, சங்கரனின் மனைவி. பிரமோத்தின் ‘லேட்’ பாட்டி.

“இதெல்லாம் ஓவர்டா. உங்க பாட்டிம்மா இறந்தே இருபது வருஷத்துக்கு மேல இருக்கும். அப்போ நேர்த்திக்கடனும் எக்ஸ்பயர் ஆகிருக்கும்”

“அதான் மச்சான், வயசாகிட்டாலே மண்டைக்குள்ள இருக்க மூளைக்கு மஞ்சக்காமாலை வந்துடும் போலருக்குது.” இருவரும் சங்கரனுக்கு சங்கராபரணம் பாடியபடி அந்த மாரியம்மன் கோவிலுக்கு வந்து சேர்ந்தனர்.

வெளியே வாகனங்கள் நிறுத்தும் இடத்திற்கு சற்று தள்ளிதான் பொங்கல் வைக்குமிடம். கோவிலினுள் பொங்கல் வைக்க அனுமதியில்லை. வெளியே தயாரானதை எடுத்துக்கொண்டு போய் தந்தால் அம்மனின் திருவடியில் வைத்து பூஜித்துத் தருவார்கள்.

பிரமோத் வீட்டுப்பெண்கள் அங்கே பொங்கல் வைப்பதற்கான ஆயத்தத்தில் ஈடுபட்டிருக்க, வண்டியை நிறுத்தி ஹெல்மெட்டை கழற்றியவன் கீழிறங்காமல் அப்படியே நின்றான். பாலா அவன் பார்வை போன திக்கைப் பின்பற்ற, அங்கே பிரியா ஏதோ சொல்லியதற்கு தாமரையாய் மலர்ந்து சிரித்துக்கொண்டிருந்தாள் நிவர்த்திகா.

பாலாவுக்கும் தன் பயிற்சி கூடத்திலேயே இரவில் தங்கும் நண்பனின் நிலை தெரியாதா என்ன? எனவே இன்று அவனுக்கு வேப்பிலை அடித்துவிட நினைத்து, விளையாட்டுப் போல் சொன்னான்.”காலண்டர் மகாலட்சுமி சிரிக்கறதை சைட்டடிக்கறான்டா இவன். கிறுக்குப்பயலே, இப்ப அவ உன் பொண்டாட்டிடா…”

“ப்ச்! வீட்ல எல்லார்கிட்டயும் சிரிப்பா. என்கிட்ட மட்டும் உயரத்துல இருக்க பல்லியைப் பார்த்த மாதிரி மூஞ்சியை வச்சிக்குவா.” என்றவனின் குரலில் டன் கணக்கில் ஏக்கம்.

“அப்போ நீ அந்தளவுக்கு பயமுறுத்திருக்க?”

“டேய்…”

“பின்ன என்னடா? கல்யாணத்துக்கு முன்னாடி நிமிர்ந்து பார்க்க மாட்டேங்கறான்னு மூக்கால அழுத. இப்ப சிரிக்க மாட்டேங்கறான்னு ஒப்பாரி வைக்கற. மச்சான் உனக்கு லவ் மூட் ஸ்டார்ட் ஆகிடுச்சுடா. அது இன்னுமா புரியல உனக்கு?

“லவ்வா? கல்யாணத்துக்கு அப்புறமா?”

“ஏன் வரக்கூடாதா? இன்னும் அந்தக் கிழவிக்கு பாட்டு போட்டதைத் தான் லவ்ன்னு நம்பிட்டு இருக்கியா நீ?”

பத்து விநாடிகள் எடுத்துக்கொண்ட பிரமோத் புருவங்கள் இடுங்கக் கேட்டான். “யூ மீன் சித்தாரா?”

அவனுக்கு ஏதோ பூர்வ ஜென்ம கதையைக் கேட்பதைப் போலிருந்தது. ஒரு வருடத்திற்கும் மேல் இருக்குமல்லவா? இப்போது பாலா சொல்லும்வரை அவள் நினைவின் கீற்றும் இவனை அணுகவில்லையே! அப்படியானால் அது காதலில்லையா என்ற ரீதியில் சிந்தித்தான்.

மேலோட்டமாய் வாழ்க்கையைச் நகர்த்திக் கொண்டிருந்த பிரமோத், என்று நிவர்த்திகாவின் விழிகளுக்கு ஆழமாய் அர்த்தம் படிக்க ஆரம்பித்தானோ, அன்றிலிருந்து அவளையும் அவளின் உணர்ச்சி வெளிப்பாட்டையுமே நினைவடுக்கில் சேமித்துச் சுவைக்கிறான். ஆனால் அதை அலசிப் பார்த்து ஒப்புக்கொள்ள தான் அவன் முனையவில்லை.

பிரமோத்தின், ‘யூ மீன் சித்தாரா?’ என்ற வார்த்தைகளில் அவனுக்கு பின்னால் இருந்த சுள்ளிகளை எடுக்க வந்த நிவர்த்திகா ஒரு கணம் தேங்கி, பின் நகர்ந்தாள். பாலாவும் அவளைக் கவனிக்கவில்லை. அதனால் அவள் விழிகளில் அந்தக் கணத்தில் வெளிப்பட்ட வெறுமை நண்பர்களுக்கு தெரியாமல் போனது.

“அட! உனக்கே மறந்துடுச்சா? நான்தான் வேண்டாததை ஞாபகப்படுத்திட்டேனா? அப்போ நீ தெளிவாதான் இருக்க பிரமோத்! உன் மனசைக் கேளு.” – பாலா.

மீண்டும் பிரமோத்தின் பார்வைத் தன்னவளைத் தீண்டியது. இப்போது உலைப் பொங்க ஆரம்பித்திருக்க, காஞ்சனாவும் அமலாவும் குலவையிட, இரு மருமகள்களும் அமுதினிக்கு இணையாய் ஆர்ப்பரித்தனர். பிரியாவுடன் சேர்ந்து பச்சரிசியை உலையில் இட்டுக் கொண்டிருந்தவளின் விரிந்த சிரிப்பிற்கு எந்தப் பூவின் பெயரை வைக்கலாமென, சுற்றமும் மறந்து பார்த்துக் கொண்டேயிருந்தான்.

“டேய் உன் வீட்டுக்காரியை அப்புறம் சைட்டடி! இப்போ வந்தவங்களைக் கவனி!” என்று பின்னந்தலையில் பாலாவின் அ(இ)டியை வாங்கியவன் திரும்பிப் பார்க்க, கதிரவனும் மல்லிகாவும் வந்திருந்தனர்.

“ஹான்! வாங்க மாமா, வாங்கத்தை.” உடனடி கம்பீர உடல்மொழியுடன் மரியாதையாக வரவேற்று கோவிலினுள் அமர்ந்திருந்த வீட்டு ஆண்களிடம் அழைத்துச் சென்றான்.

அவனைத் தொடர்ந்த தம்பதியர் தத்தம் பார்வையைப் பரிமாறிக்கொண்டனர். தங்கள் மகளின் மீதான பிரமோத்தின் நேசத்தைக் கண்கூடாக கண்டதில் வந்த திருப்தி பார்வை அது.

“நிவர்த்தி வீட்ல நல்ல பிள்ளையா இருக்காளா தம்பி? வீட்டு வேலையெல்லாம் ஒழுங்கா செய்றாளா?” என்ற மல்லிகாவிற்கு புன்னகையுடன் கூடிய ஒரு தலையசைப்பைத் தந்துவிட்டு, சங்கரனின் அருகே போய் நல்ல பிள்ளையாய் நின்றுகொண்டான்.

அங்கே பிரியாவின் பிறந்த வீட்டினரும் இருக்க, வரவேற்புகள், நல விசாரிப்புகள் முடிந்து, ஊர் காரியங்கள் தொட்டு நாட்டு நடப்பு வரை பேசிக் கொண்டிருந்தவர்கள், பெண்கள் செய்த பொங்கல் வரவும் எழுந்து அம்மனைத் தரிசிக்கச் சென்றனர். சந்தன அலங்காரத்தில் ஜாஜ்வல்யமாய் மின்னிய அம்மனை, இன்றெல்லாம் பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போலிருந்தது. அனைவரும் மனதாரப் பிரார்த்தித்துக் கொண்டனர்.

அங்கே பெண்கள், ஆண்கள் என இரு வரிசைகள் இருக்க, தனக்கெதிரே பெண்கள் பகுதியில் இருந்த நிவர்த்திகாவைக் கண்கொட்டாமல் பார்த்தான் பிரமோத். இன்று ஏனோ அவள் புதியவளாக தெரிந்தாள். பாலா காதல் என்று சொன்னதால் இருக்கலாம்.

இந்த நேர்த்திக்கடனே பிரமோத்தின் நலத்திற்காக என்பதால், அவனை அவன் மனைவியுடன் சேர்ந்து நின்று ஆசி பெறச் சொன்னார் சங்கரன். இருவரும் அம்மனுக்கு நேரே வந்து, சேர்ந்து கரம் கூப்பி நிற்க, இருவர் மனதிலும் திருமணத்திற்கு முன் ஒருமுறை இதே போல் சிவன் கோவிலில் தோளுரச நின்ற ஞாபகம்!

பிரமோத் தனக்கு வலப்பக்கம் லேசாக திரும்பி சற்றே விழி தாழ்த்தி அவளைப் பார்க்க, அவளும் அதே நினைவில் இடப்பக்கம் திரும்பி விழியுயர்த்தி பார்த்தாள்.

அம்மனின் மகிமையோ அம்மன்னனின் மகிமையோ, நிவர்த்திகா ஒரு அடி பக்கவாட்டில் நகர்ந்து, நீயே சரணம் எனும் வகையில், அவன் புஜத்தில் இன்னுமாய் இடித்தபடி நின்றுகொண்டு, அம்மனைப் பார்த்து ஆழ்ந்த சுவாசத்துடன் விழிமூடி பிரார்த்தித்தாள்.

அதில் அவன் புருவங்கள் சுருங்கியது. ‘நம்மள மண்டைக் காய விடறதே பொழப்பா போச்சு.’

அம்மன் அருகில் வைத்துத் தந்த பொங்கலைக் காஞ்சனாவும் அமலாவும் சிறு சிறு தொன்னைகளில் எடுத்துத் தர, இரு மருமகள்களும் வீட்டாருக்கும் கோவிலுக்கு வந்தவர்களுக்கும் விநியோகித்தனர்.

பிரமோத்துக்கும் பாலாவுக்கும் கொடுக்க வந்த நிவர்த்திகாவை பாலா கேலி செய்தான். “என்ன காலண்டர் மகாலெட்சுமி, பானைல தங்கக்காசைத் தருவ’ன்னு பார்த்தா தொன்னைல பொங்க சோத்தைத் தர்ற?”

“அதென்ன’ண்ணே காலண்டர் மகாலட்சுமி? கல்யாணத்தப்பவும் இப்டித்தான் கூப்பிட்டீங்க?”

“இவன்தான் என்கிட்ட சொன்னான். கதிரவன் மாமா மகளைப் பார்த்ததேயில்ல, வீட்ல கேட்டா காலண்டர்ல இருக்க மகாலட்சுமி ரேன்ஞ்’க்கு பேசறாங்கன்னு… அன்னைல இருந்து நீதான் எங்களுக்கு காலண்டர் மகாலட்சுமி. என்ன மாப்ள?” என தன்னருகே இருந்த நண்பனையும் கூட்டுச் சேர்க்க,

இருவரையும் மென்முறுவலுடன் பார்த்திருந்த பிரமோத்திற்கு, இவன் அவளைக் குறித்து பாலாவிடம் அப்படி சொன்ன நாளும், அன்று அவளைப் பார்க்காமலேயே அவளை நினைத்து இன்ஸ்டிடியூட் மொட்டைமாடியில் படுத்துக் கிடந்ததும் நினைவிற்கு வந்தது.

இவளை அவன் பார்த்ததேயில்லை என்று பாலா சொன்னதைக் கேட்டவளின் உள்ளத்திலும், தன் மனம் பிரமோத்தின் பின் போனதும், அவன் வேறொருத்தியின் காதலன் என இவள் அலைபாய்ந்த மனதினை அடக்கியதும், அதைத் தொடர்ந்து அவனை நேரிடையாகக் காண நேரும் தருணங்களையெல்லாம் சாமர்த்தியமாக தவிர்த்ததுமென பழைய நினைவுகள் அலைமோதின.

அப்போது அவன் பார்வை இவளிருக்கும் திசையில் படியும்போது எப்படியெல்லாம் இவனிடம் முகங்காட்ட மறுத்தோமென நினைத்தவள் உள்ளூர சிரித்துக்கொண்டாள். முககவசம் அணியவில்லை, அது ஒன்றுதான் குறை. மற்றும்படி கை அல்லது புத்தகம் வைத்தோ, துப்பட்டாவின் நுனியை தூக்கிப் பிடித்தோ, விஜியிடம் பேசியபடியோ, வெளியே வேடிக்கை பார்த்தபடியோ… இப்படி நிறைய வழிகள்! அதனால்தான் பெண் பார்க்க வந்தபோது, அவன் ஏன் உன்னை அடையாளங்காண இத்தனை சிரமப்படுகிறானென விஜி கேட்டாள்.

அக்காவின் நிச்சயதார்த்தம், கல்யாணத்திலும் அப்படியே அவனைத் தவிர்த்ததும்…. பின்னர்….

அன்று சித்தாராவின் சிணுங்கலும், பிரமோத் அவளை முத்தமிட குனிந்ததும், இப்போதும் கூட அவன் அவள் பெயரைச் சொல்லி கொண்டிருந்ததும் சேர்ந்தே நினைவு வர, சட்டென ஏதோவொரு மாயவலையின் இழை அறுபட்டாற் போலிருந்ததில், சற்றுமுன் தான் அவனை நெருங்கி நின்று அம்மன் தரிசனம் செய்ததை அறவே வெறுத்தாள். மற்றதை நினைத்துப் பார்த்தவளுக்கு அவள் தோழி விஜி சொன்ன அறிவுரை மட்டும் அந்நேரம் மறந்துபோனது போலும்.

அரைநிமிடத்தில் அத்தனையையும் அசைப்போட்டதில், மிக கவனமாக பாலாவை மட்டும் பார்த்து புன்னகைத்தவள், “நீங்க எப்போ’ண்ணே கல்யாண சாப்பாடு போடப் போறீங்க?” எனப் பேச்சை மாற்றினாள்.

“தயவுசெஞ்சு நீ உம் புருஷனை முடிஞ்சு வச்சுக்கோம்மா. அவன் நெதமும் என் வாழ்க்கைல உப்புமா கிண்டி வச்சா நான் எங்கருந்து கல்யாண சாப்பாடு போடுறது?” எனவும், களுக்கென சிரித்தவாறு போய்விட்டாள்.

பாலாவிற்கு வேண்டுமானால் இந்த அழுத்தக்காரியைத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் பிரமோத்திற்கு அவளின் விழிமொழி அத்துப்படியல்லவா? ஆக, அவள் தன்னை மீண்டும் தவிர்க்கிறாள் என்பதை அரைநொடியில் கண்டுகொண்டான். இதுவரை சர்வ நிச்சயமாக நன்றாகத்தான் இருந்தாள். இப்போதென்ன? இவன் மூளை அவள் விழிமொழிக்கான குறுக்கெழுத்து விளையாட்டை ஆரம்பித்தது.

இப்போது என்னப் பேசிக் கொண்டிருந்தோம்? பாலா என்ன சொன்னான்?

‘காலண்டர் மகாலட்சுமி’

ம்ஹூம் அதில்லை!

‘கதிரவன் மாமாவின் மகளைப் பார்த்ததேயில்லை…’

அதுதானோ?

நான் இவளைப் பார்த்திருக்கவில்லை என்பதுதான் கோபமோ? ச்ச! அப்படியிருக்க முடியாது. அப்போது இருவருக்குமே பரிச்சயம் இல்லையே? ‘வேற… வேற…’ எனும் கோபிநாத்தாய் மாறிய அவன் மூளை இன்னும் ஆழமாக பதிலைத் தேடியது.

இவன் அப்போது ஐந்து மாதங்களாக, தினமும் வந்து போகும் சிற்றுந்தில் அநேகமாக அனைவரையும் பார்த்திருக்கிறான். இவளையும் பார்த்திருக்கிறான்தான் என்றாலும், அப்படி பார்த்த நேரங்கள் எவ்வளவு துழாவியும் நினைவடுக்கின்‌ படிமத்தில்கூட இல்லை.

என்னதான் விஜி இவன் ஊரைச் சேர்ந்தவள் என்றாலும் வீடு, கல்லூரி என்று மட்டும் இருப்பவளை ஊரில் வெளியிடங்களில் அதிகம் பார்த்ததில்லை. சிற்றுந்தில் பார்ப்பதுதான். ஆனாலும் விஜியின் முகம் நன்றாக நினைவிருந்ததே? அதனாலல்லவா கல்லூரியில் அவள் உதவியை நாடினான் இவன்? அப்படியானால்… மற்றவர்களைப் பார்த்த நினைவிருக்க, இவளைப் பார்த்த சுவடே தெரியவில்லை என்றால்… இவள்தானே என்னைத் தவிர்த்திருக்கவேண்டும்? வேறென்ன காரணம் இருக்கமுடியும்?

நூலின் முனையைப் பற்றியிருந்தவனுக்கு சிக்கலை விடுவிக்க அதுதான் சரியான முனையாக இருக்க வேண்டுமென தோன்றியது.

‘இவள் ஏன் பரிச்சயமே இல்லாத என்னைத் தவிர்க்கவேண்டும்? அப்போதிருந்தே என்மேல் கோபமா? ஏனாம்?’

பதில் வேண்டி இவன் அவள் பின்னோடு செல்ல,

பொங்கலை வழித்து சாப்பிட்டபடி அங்கே வந்த அரவிந்தன் கேட்டான். “என்ன பாலாண்ணே… முகத்துல அறிவுக்களைச் சொட்டுது? நீயும் இன்ஸ்டிடியூட்ல படிக்க உட்கார்ந்துட்டியா? டீச்சர் யாரு?”

“ஏண்டா உங்கண்ணன் கும்மயடிக்கறது பத்தாதுன்னு இப்ப நீயுமா?”

************

நிவர்த்திகாவின் பின்னால் சென்ற பிரமோத் சிரிப்பையடக்க படாதபாடு பட்டுக்கொண்டிருந்தான். அம்மனின் கருவறைக்கு நேர் பின்னால் மணல்வெளியில் அரச மரத்தடியில், பொழுதுபோகாமல் அமர்ந்திருந்த பிள்ளையாரின் முன்னால், கல்தூணில் உயரமாய் ஒரு பெரிய மணி கட்டி வைக்கப்பட்டிருந்தது. அமுதினி அதனை அடிக்க வேண்டுமென நிவர்த்திகாவிடம் அடம்பிடிக்க, அவள் சின்னவளைத் தூக்கி, முடிந்தமட்டும் உயரமாகப் பிடித்தாள்.

அந்தோ பரிதாபம்! மணி எட்டவில்லை. “இப்போ சித்தி எப்டி அடிக்கறேன்னு பாரு அம்மு. அப்புறம் அதேமாதிரி நீயும் செய்வியாம், என்ன?” என்றுவிட்டு இவள் சேலையை இழுத்து இடையில் சொருகிக்கொண்டு, கையை உயர்த்தியபடி குதிக்க, அடடா! எட்டவில்லையே…

இவள் அவளைப் பரிதாபமாக பார்க்க, அவள் அழுகைக்குத் தயாராக, சிரிப்பை வாய்க்குள் அடக்கியபடி அருகே போனான் பிரமோத். “பிமோ சித்தப்பா, தூக்கு!”

அவளைத் தூக்கி அவளின் ஆசையை நிறைவேற்றியபின் இறக்கி ஸ்ரீயிடம் அனுப்பிவிட்டவன், அங்கே அப்போது யாருமில்லையென தெரிந்து, கணநேரத்தில் தன்னவளையும் இழுத்து கல்தூணுக்கு நேராக தூக்கியிருந்தான்.

“ஆவ்! பிரமோத் இறக்கிவிடுங்க!” திடுமென ஏற்பட்ட அதிர்வில் அவள் அலற,

தலைக்கு மேலிருந்த அவள் முகத்தைப் பார்த்திருந்தவன், “பெல்!” என்றான்.

அதைப் பட்டென்று ஒரு அடி அடித்துவிட்டு, “இறக்கிவிடுங்க. யாராவது வந்துடப் போறாங்க.” என பதற்றத்தில் இருந்தவளிடம்,

அண்ணாந்து பார்த்தவாறே முகவுரை ஒன்றுமில்லாமல் நேரடியாகக் கேட்டான். “கல்யாணத்துக்கு முன்னாடி மினிபஸ்ல நீ ஏன் என்னை அவாய்ட் பண்ணின?”

தூறல் தூறும் 🌧️🌧️🌧️

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
66
+1
5
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்