Loading

அத்தியாயம் 18

இந்தியாவின் வடக்கேயுள்ள அரியானா மாநிலத்தின் குருகிராம் (Gurgaon/Gurugram) மாவட்டம். அங்கே அடுக்குமாடி குடியிருப்பொன்றில் இருந்த ஒற்றை படுக்கையறைக் கொண்ட வீட்டில், படுக்கையில் நெளிந்தபடி இந்தியில் கேட்டாள் அந்தப் பெண். “இன்னும் எவ்ளோ நாள் இந்த மாதிரி உன் வீட்டுக்கு வர்றது? ரொம்ப கில்ட்டியா இருக்குது. ப்ளீஸ்… கல்யாணம் பண்ணிக்கலாமே?”

“ஏற்கனவே சொல்லிருக்கேன்.‌ எனக்கு இந்த கல்யாணம் கண்றாவில எல்லாம் நம்பிக்கை இல்ல. வேலை முடிஞ்சதுல்ல? கிளம்பு.”

“விவாகரத்து ஆனதால நீ விரக்தில பேசற! உன் முதல் பொண்டாட்டி மாதிரி நான் இல்ல. உன்‌ மனசறிஞ்சு நடந்துக்கறேன். ப்ளீஸ் கல்யாணம் செஞ்சுக்கலாம்.”

“ஹஹ… இஸ் தட் சோ? ஒருத்தி பத்தலன்னு இன்னொருத்திக்கிட்ட போனது தெரிஞ்சதுனாலதான் அவ என்னை டிவோர்ஸே செஞ்சா! நீ எப்டி?” என ஏளனத்துடன் கேட்டவனுக்கு பதிலுரைக்காமல் உடைகளை அணிந்துக்கொண்டு,

“**** இனி என்னைக் கூப்பிடாதே!” என்று காறி உமிழ்ந்துவிட்டு வெளியேற,

பாக்ஸரை அணிந்துகொண்டு படுக்கையிலிருந்து எழுந்தவன், மேஜையின் இழுப்பறையைத் திறந்து, விழுங்க வேண்டிய மாத்திரைகளை எடுத்து விழுங்கிக்கொண்டான் – அவன் பிரமோத்தின் அண்ணன் மனோகரன்.

         *********

பிரமோத் வீடு.

பழமையும் புதுமையான அந்த சமையலறையில், இடையில் சேலைத் தலைப்பைச் சொருகிக்கொண்டு, மோவாயில் பொடித்திருந்த வியர்வையோடு மிகத் தீவிரமாக, அடுப்பில் கொதிக்கும் டிகாஷனையே பார்த்திருந்தாள் நிவர்த்திகா.

“அது கொதிக்கட்டும் நிவர்த்தி. அதுக்குள்ள இந்த பாலை இறக்கிட்டு, உருளைக்கிழங்கைக் குக்கர்ல போடு.” என்ற தன் சின்ன மாமியாரின் ஆணைக்கிணங்க வேலை செய்தாள் நிவர்த்திகா.

இருந்தும் அவளின் கவனம் கொதிக்கும் அந்த குழம்பி டிகாஷனிலேயே இருந்தது. உதவிக்கு இருக்கும் பெண்ணை ஏதோ சொல்லி பணித்துக் கொண்டிருந்த அமலா, இவளைப் பார்த்துவிட்டு தனக்குள்ளாக மந்தகஸித்துக் கொண்டார். நிவர்த்திகா காபி தயாரிப்பது அவள் கணவனுக்காக! அவனுக்கு அமலா தயாரித்து தரும் காபிதான் பிடித்தமாம். ஆக, அவரின் கைப்பக்குவத்தைக் கற்றுக்கொள்ள இவள் பிரயத்தனப்படுவது மூத்தவருக்கு நிறைவானதொரு முறுவலைத் தந்தது.

காபி தயாரித்தானதும், “சரி, நீ போய் அவனுக்கு கொடு.” என்றவர், மற்றவர்களுக்கும் என்னென்ன தரவேண்டும் என சொல்லி பெரிய தட்டில் வைத்துக் கொடுத்தார்.

தன்னிடம் பெரிய பொறுப்பைத் தந்துவிட்டதாக எண்ணி மகிழும் சிறுமியின் மனநிலையுடன் வந்தாள், நிவர்த்திகா. பிரியா பழைய சாதத்தைப் பசுந்தயிர் விட்டு, வெங்காய வத்தலுடன் உண்டு கொண்டிருந்தாள். அது அவளுக்கு விருப்பமான காலை உணவு. இந்த வாரம் அவளுக்கு பகல் நேர வேலை என்பதால் காலையிலேயே தயாராகி கீழே வந்திருந்தாள்.

அரவிந்தன் கல்லூரி விடுமுறையென சாவகாசமாக அமர்ந்திருக்க, தனக்கு வந்த ஹார்லிக்ஸை வாங்கிக்கொண்டு, “தாங்க்ஸ் அண்ணி.” என்றான்.

“வெல்கம் ப்ரோ.”

நிவர்த்திகா அவனைவிட ஒரு வயது இளையவள் என்றாலும், அண்ணன் மனைவிக்கு தர வேண்டிய மரியாதை என அமலாவால் அறிவுறுத்தப்பட்டிருந்ததால் அண்ணி என்றே அழைத்தான். ஆனால் அவ்விளிப்பு நிவர்த்திகாவிற்கு கூச்சத்தைத் தர, இரண்டொரு முறை சொன்னாள்.

“அதெல்லாம் தாத்தாவுக்கு பிடிக்காது நிவர்த்தி.” என்ற சின்ன மாமியாரின் கூற்றில் அமைதியாகிவிட்டாள். அத்தோடு அவனை சிலமுறை பெயர் சொல்லி அழைத்ததையும் யாரும் சொல்லாமலேயே மாற்றிக்கொண்டாள். தன்னைவிடப் பெரியவனை கொழுந்தன், தம்பி என்றெல்லாம் விளிக்க பிடிக்கவில்லை. மாறாக இந்த ‘ப்ரோ’ என்ற அழைப்பு எல்லா வகையிலும் வசதியாக தெரிந்தது.

தாத்தாவுடன் ஸ்ரீதரனும் காலையிலேயே நெல் அறுவடை என்று போயிருக்க, புது மாப்பிள்ளை என்பதால் பிரமோத்தைக் காலையில் அழைத்துச் செல்லவில்லை. நிவர்த்திகாவின் வீட்டிலிருந்து நேற்று மாலையில்தான் இங்கு வந்திருந்தனர்.

சாம்பல் நிற த்ரீ ஃபோர்த் ஸ்டைலிஷ் ஷார்ட்ஸ் அணிந்திருந்தவன் தன் கருநீல டீ ஷர்ட்டின் காலரை மடித்தபடி இறங்கி வர, அவனுக்காக தான் பிரத்யேகமாக தயாரித்த காபியை நீட்டினாள் அவன் மனைவி.

“அப்பா எங்கேம்மா?” என காஞ்சனாவிடம் கேட்டபடி அவள் தந்ததை வாங்கிக்கொண்டான்.

“குளிக்கறார். என் கூடவே ஆஃபீஸ் வர சொன்னேன். ஃபயர் வொர்க்ஸ் போயிட்டு வர்றதா சொன்னார்.”

தன் மடியில் பள்ளிச் சீருடையில் அமர்ந்திருந்த அமுதினிக்கு இட்லியை ஊட்டியபடி அசோகன் சொன்னார். “தரைச் சக்கரத்து அடிப்பெட்டி நிறைய குறையுது மதினி. பொம்பளைங்க ஒட்ட (மடித்து‌ ஒட்டுதல்) வாங்கிட்டு போய், அந்தப் பக்கம் வித்துடறாங்க போல. புதுசா வந்திருக்க சூப்பர்வைசர் சரியா கவனிக்கறதில்லன்னு அங்கே பெட்டி கணக்கு பார்க்கற பிள்ளை, மேனேஜர்கிட்ட சொல்லுச்சாம். நான் போன வாரம் அந்தாளைச் சொல்லிட்டு வந்தேன். எதுக்கும் அண்ணனும் வந்து ஒரு வார்த்தை சொன்னா அவனுக்கும் பயமிருக்கும். அம்முக்குட்டியை ஸ்கூல்ல விட்டுட்டு நானும் அண்ணனும் ஒரு எட்டு போயிட்டு வர்றோம்.”

“டெஸ்பாட்ச் ஆகறதுல சில பில்ஸ் மிஸ்ஸாகறதா தெரியுது தம்பி. அதையும் விசாரிங்க.” எனவும் அதற்கு அசோகன் ஆமோதித்துக் கொண்டிருக்கையில், சங்கரன் தலைப்பாகையை உதறியபடி வர, அவரைத் தொடர்ந்து ஸ்ரீதரனும் வந்தான்.

நிவர்த்திகா, “குட்மார்னிங் தாத்தா.” என்று மலர்ச்சியுடன் தனக்கென வைத்திருந்த தேநீரைத் தாத்தாவிடம் நீட்ட, சிவப்பு நிற புடவையில் இறைதீபமாய்த் தெரிந்த முகத்தாளிடம் இருந்து வாத்சல்யத்துடன் வாங்கிக்கொண்டார்.

“த்தூ! காஃபில சீனி போட்டியா? இல்ல சீனில காஃபி போட்டியாடீ?” என்ற பிரமோத்தின் எரிச்சல் குரலில் அதிர்ந்து திரும்ப, அவன் காபி கோப்பையை அரவிந்தனின் முன்னிருந்த டீப்பாயில் நங்கென வைத்துவிட்டு வெளியே செல்ல எத்தனித்தான்.

“பிரமோத்! நல்லாத்தான் இருக்குது. நானும் அதைத்தானே குடிக்கறேன்?” என்ற காஞ்சனாவிடம்,

“எனக்குப் பிடிக்கலம்மா.” என அசட்டையாக சொல்லிவிட்டு நிற்காமல் போய்விட்டான்.

அத்தனை பேர் முன்னிலையில் கணவனின் செயலில் மனதளவில் துவண்டு போன நிவர்த்திகாவின் கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது.

“தறுதலைக்கு, கிடைச்ச பொக்கிஷத்தை அனுபவிக்க கொடுத்து வைக்கலம்மா.” -ஆத்திரத்தில் சங்கரனின் குரல் நடுங்கியது.

“தாத்தா! டென்ஷன் ஆகாதீங்க. பிரஷர் ஜாஸ்தியாகிடும்.” என்றபடி வந்த பிரியா, அவரை சோபாவில் அமரச் செய்துவிட்டு ஸ்ரீதரனுக்கு கண்ணைக் காட்ட, அவன் தாத்தாவையும், அரவிந்தன் நிவர்த்திகாவையும் சகஜமாக்க முயன்றனர்.

குளித்துவிட்டு வந்த சரவணனிடம் காஞ்சனா, மகன் மீதான பிராது பத்திரத்தை வாசித்தார். சரவணனின் முகம் சிந்தனையைத் தத்தெடுத்துக் கொண்டது.

“காய்ஞ்சி போய்க் கிடக்கற
புருஷனுக்கு காபியைக் கொண்டுவந்து நீட்டுறா, கிராதகி. இந்த சங்கர் என்னடான்னா கோவில்ல இருக்க மாரியாத்தாவே நேர்ல வந்து கூழ் ஊத்தற மாதிரி ஸீன் காமிக்குது. வாட் அ கிரின்ஞ்சி!” சிலம்பத்தைச் சுற்றி ஓய்ந்துபோய், பாலாவின் இன்ஸ்டிடியூட் மொட்டை மாடியில் படுத்திருந்த பிரமோத் பொருமிக் கொண்டிருந்தான்.

நிவர்த்திகா தன்னிடம் காபியை தந்த போதே அவள் முகத்தின் ஆவல், அதை அவள்தான் தயாரித்திருக்கிறாள் என்பதைக் காட்டிக்கொடுத்தது. முதலிரவிற்கு பயந்தவளைப் போய், தனக்காக தேர்ந்தெடுத்த தாத்தாவிற்கெதிரான விளையாட்டினை ஆரம்பிக்க எண்ணியவன், அதனால்தான் அப்பா சரவணன் எங்கே என்று அன்னையிடம் கேட்டான். அவர் இருந்தால் தந்தைக்கு நல்ல பிள்ளையாக வேண்டுமே? நினைத்தாற் போல் அவளை வாட்ட முடியாதே?

எதிர்பாராமல் சங்கரனும் அங்கே வர, தன்‌ மனைவியும் தாத்தாவும் ராசியாக சிரித்துப் பேசியதில் காதில் புகைவிட்டவன் சற்றும் சிந்திக்காது அவளைக் காயப்படுத்திவிட்டான். என்றுமே தன் செயலுக்கு வருந்தாதவன் இன்றும் வருந்தவில்லை என்பதாக மனதினை ஏமாற்றினான். ஆனால் உள்மனம் எப்போதும் விழித்திருக்குமல்லவா? ஆக, அவளைக் காயப்படுத்தியப் பின்னும் மனம் ஆறாமல் பரிதவிப்பே மேலோங்கியிருந்தது. ஆற்றுப்படுத்த முயன்ற சிலம்பமும் தோற்றுப்போக, இதோ இன்னும் புலம்பிக்கொண்டிருக்கிறான்.

மறுநாளும் இதுவே தொடர்ந்தது. நேற்றைய தவற்றிற்கு தண்டனையாய் அவன் தட்டில் உப்புமாவை வைத்தார் அமலா. ஒரு வாய் வைத்ததுமே அவன் லொக் லொக் என்று இரும, அவசரமாக தண்ணீர் கொண்டு வந்தவளிடம், “என்னதுடி இது? உப்புமாவுல உப்பே இல்ல?” என்று காய,

“அதைச் செஞ்சது நானு.” என்று ஆஜரானார் அமலா.

“ம்ம்! இத்தனைநாள் நீங்க நல்லாதான் சமைச்சிட்டு இருந்தீங்க. இவ இந்த வீட்டுக்கு வந்த நேரம்தான் சரியில்ல. எல்லாம் மாறுது.” என அனைத்திற்கும் அவளையே பொறுப்பாக்க,

அமலாவிற்கே பிரமோத்தின் நடவடிக்கை மீது கோபம் வந்தது. “வீட்ல நாலு ஆம்பளை தடிமாடுங்களை வளர்த்து, பொம்பள பிள்ளக்கிட்ட எப்டி நடந்துக்கணும்னு சொல்லித்தராம விட்டது என் தப்புதான்!”

“நாங்க நல்லாதான் வளர்ந்தோம் சித்திம்மா. வந்தவ சரியா இருந்தா நாங்க ஏன் எப்டி நடந்துக்கணும்னு தெரியாம இருக்கப் போறோம்?”

வெடுக்கென ஏதோ சொல்ல வந்த அமலாவைத் தடுத்துவிட்டு அங்கிருந்து அகன்றாள் நிவர்த்திகா.

அவன் இரவு தாமதமாக வருவதும், இன்னும் அழைப்பு விடுத்த உறவினர் யார் வீட்டிற்கும் விருந்திற்கு செல்லாமல் தட்டிக்கழிப்பதும், நிவர்த்திகாவிடம் முகங்கொடுத்து பேசாததோடு அவளை அனைவர் முன்பும் காயப்படுத்துவதும் என திருமணமான இந்த ஐந்து நாட்களிலேயே இருவருக்குள்ளும் சிறுபிணைப்பும் ஏற்படவில்லை என்பது அவ்வீட்டில் பகிரங்க ரகசியமானது.

ஒருமுறை அமலா தயக்கத்துடன் இது பற்றி கேட்க, தன் புன்னகையின் பின்னே ஒளிந்து கொண்ட நிவர்த்திகா அவமானமாக உணர்ந்தாள். பேசாமல் விவாகரத்து வாங்கிக்கொண்டு போய்விடலாமா என யோசித்தது, அந்த ‘ஈராயிரத்து குழவி’!

அமலா, காஞ்சனாவிடமும் பிரியாவிடமும் வருத்தப்பட்டு சொன்னார். “நான் நிவர்த்தி கிட்ட உங்களுக்குள்ள எல்லாம் சரியா இருக்குதா’ன்னு கேட்டேன். அந்த பிள்ள சிரிச்சே மழுப்புது.”

பிரியாவுக்கு இந்தப் பெரியவர்கள் ஏன்தான் அந்தரங்கத்திற்குள் தலை நீட்டுகிறார்களோ என ஆற்றாமையாக இருந்தது. “இதெல்லாம் கேட்க வேணாம் அத்தை. ரெண்டு பேருக்கும் பிடிக்காம எல்லாம் இல்ல. நாமதான் கல்யாணத்தப்போவே பார்த்தோமே… லவ்வர்ஸ் மாதிரி ரெண்டு பேரும் எப்டி பார்த்துக்கிட்டாங்க? இப்போ ஏதாவது சின்ன மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்கா இருக்கும். இவளும் சின்னப் பொண்ணு. நம்ம பிரமோத்தைப் பத்தி சொல்லவே வேணாம். விடுங்க! கொஞ்சநாள்ல சரியாகிடுவாங்க.”

“நானும் அப்டித்தான் நினைச்சேன். அப்போ எப்பவும் போல மாமாவை வெறுப்பேத்த தான் இவன் இப்டி பண்றான் போல…” – அமலா.

“அப்டித்தான் இருக்கும் அமலா. நிவர்த்தி, மாமா பார்த்த பொண்ணுதானே?” – காஞ்சனா.

இப்படியாக பேசி பெண்கள் தங்களைச் சமாதானப்படுத்திக் கொண்டனர்.

அடுத்த மூன்று நாட்கள் காலையில் பிரமோத் வெளியே புறப்படும்போது அமலா, நிவர்த்திகாவை அவன் கண்ணிலேயே காட்டவில்லை. காலையில் பார்க்காததால் அவளைப் பார்க்க வேண்டியே இரவில் விரைந்து வீடு திரும்பியவனிடம், ‘அவள் வீட்டிற்கு விலக்கு, அதனால் தன்னோடு தூங்குவாள்’ என்ற தகவல் மட்டும் தெரிவிக்கப்பட, மூன்று நாட்கள் அவளைக் காணாததில் வெளியே சாதாரணமாக காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் பைத்தியக்காரனாகிக் கொண்டிருந்தான் பிரமோத்.

“பய மிரண்டுட்டான். இனி ஒரு வார்த்தை உன்னைப் பேச மாட்டேன் பாரேன்.” என்ற அமலாவைக் கண்டு புன்னகைத்துக் கொண்டாள் நிவர்த்திகா.

ஆனால் மூன்று நாட்களுக்கும் சேர்த்து வைத்து மறுநாள் ஆடப் போகிறானென, பாவம் அப்போது அவருக்குத் தெரியவில்லை‌. மூன்று நாட்கள் கணவனை அமலாவின் அறையிலிருந்து ஒளிந்திருந்து பார்த்தவள், அடுத்த நாள் அவன் முன்னே சாதாரணமாக நடமாடினாள். ஒரு வெள்ளைநிற தொளதொள குர்தியும் உயர்த்திப் போட்ட மெஸ்ஸி கொண்டையுமென இருந்தவளுக்கு உடல்நிலை சரியில்லையென்றால் அமுதினிக் கூட நம்ப மாட்டாள் என்று நினைத்தான் பிரமோத். ‘என்னைச் சுத்தல்ல விடுறியாடி?’

கொண்டையின் கீழ் கழுத்தோரமாய்ப் படிந்து, இவனைப் பித்தங்கொள்ள செய்யும் சின்ன முடிகள். கூடுதலாக அவளின் அழகிய முகத்திற்காகவே நெய்யப்பட்டது போன்ற புன்னகை. இவனுக்கு கிடைக்காத அந்தப் புன்னகை மற்ற அனைவருக்கும் கிடைப்பதில் மனம் முசுமுசுத்தது. முகம் அமைதியாக இருந்தாலும் கண்கள் சுருக்கி அவளை எரித்துவிடுவது போல் பார்த்துக் கொண்டிருந்தான்.

காஞ்சனாவே மகனின் பார்வையில் முதுகுத் தண்டில் சில்லிப்பை உணர்ந்தார். அந்தச் சின்னப் பெண்ணின் மேல் ஏன் இவனுக்கு இத்தனைக் குரோதம்? மகனுக்கு மனநலம் பிறழ்ந்துவிட்டதோ? அல்லது நாம்தான் அவனுக்கு திருமணம் செய்து தவறிழைத்துவிட்டோமோ என்றெண்ணியவர், அவளை அவனிடமிருந்து காக்கும் பொருட்டு, “நிவர்த்தி, இங்கே வா!” என்றழைக்க,

அதற்குள், “இதென்னடி டிரெஸ்ஸு? சாமியார் மடத்துல போய் உட்காரப் போறியா? தாத்தா கிட்ட இருக்க ஸ்படிகப் பாசிமாலையும் வாங்கிப் போட்டுக்கோயேன். பர்ஃபெக்ட்டா இருக்கும். நடு வீட்டுல கொண்டையும் கிண்டையுமா… சேலை எங்கேடீ?” என அவன் காய,

காஞ்சனா மருமகளின் சார்பில், “இந்த டிரெஸ்ஸுக்கு என்னடா? இப்பல்லாம் நம்மூர்லயே பிள்ளைங்க லெக்கின்ஸ், முக்கால் பேண்ட்ன்னு போட்டுட்டு சுத்துதுங்க. பெரியவங்க நாங்களே இதெல்லாம் ஒரு விஷயமா நினைக்கல. உனக்கென்ன வந்தது?” என எரிச்சல் மேலிட கத்திவிட,

கண்கலங்கி நின்ற நிவர்த்திகாவிற்கும் கோபம் வந்தது. இவன் தினமும் செய்யும் அட்டகாசத்தைப் பொறுத்துக்கொண்டிருக்க அவளென்ன சீரியல் கதாநாயகியா? மெல்லிய இசைமீட்டல் குரலில் என்றாலும் அழுத்தமாகவே கேட்டாள். “அத்தை, நான்… நான் எங்க வீட்டுக்கு போய்டவா?”

அவளின் கேள்வியில் வீடு நிசப்தத்தில் தோய்ந்தது. பிரமோத் மேலும் ஆத்திரம் அடைந்தான். “போயேன். மகாராணி இப்பவாவது வாயைத் திறந்து சொன்னீங்களே? இதை முதல்லயே சொல்லித் தொலைச்சிருக்கலாம்ல? நானாவது நிம்மதியா இருந்திருப்பேன்.”

“பிரமோத்த்!!” கண்கள் சிவக்க கர்ஜனையுடன் அங்கே பிரசன்னமானார் சரவணன். “கல்யாணம் ஆகி முழுசா பத்துநாள் ஆகல. அதுக்குள்ள தினமும் உன்மேல கம்ப்ளெய்ண்ட்! எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்குது தம்பி. கதிரவன் மக கண்ணு கலங்கி நின்னா பார்த்துக்கிட்டு சும்மா இருப்பேன்னு நினைச்சியா?”

எப்போதும் சரவணன் மகனைக் கண்டிக்கும்போது அவன் உரைக்கும், ‘ஸாரிப்பா’வைக் கூட இப்போது சொல்லாமல் மௌனமாக வெளியேறினான்.

அவன் போனதும் அமலா, நிவர்த்திகாவின் முதுகில் ஒரு அடி வைத்தார். “என்ன பெரிய வார்த்தையெல்லாம் பேசிக்கிட்டு? உனக்கு கோபம் வந்தா நீயும் அவனை ஆட்டி வைப்பியா… அதை விட்டுட்டு போறாளாம்! இன்னொரு வாட்டி இப்டி பேசின ஃபில்டர் காஃபி பக்குவத்தைச் சொல்லித் தரமாட்டேன் பார்த்துக்கோ!” எனவும், கண்ணீருடன் அங்குல அளவிற்கு இதழ் விரித்தாள்.

“ஒரு வாரம்தானே ஆகுது? போக போக அவனைப் பத்தி புரிஞ்சுக்குவ, நிவர்த்திம்மா!” என்றார் காஞ்சனா. என்ன இருந்தாலும் அவர் அவனின் அம்மாவாயிற்றே!

அவளருகே வந்த சங்கரன் வாஞ்சையோடு அவள் தலையைத் தடவி சொன்னார். “இதுதான்மா உன் வீடு. எப்பவும் நீ இங்கேதான் இருக்கணும், தெரிஞ்சதா?”

அன்றிரவு பிரமோத் வீட்டிற்கு வரவேயில்லை. இன்ஸ்டிடியூட்டில் இருப்பதாக பாலா, சங்கரனிடம் தகவல் சொல்லியிருந்தான். அவள் அண்மையின் தகிப்பும், விலகலின் வெறுமையும்தான் பேரனைப் பாடாய்ப்படுத்துகிறது என பாட்டன் என்பதையும் தாண்டி ஒரு ஆண்மகனாக சரியாக புரிந்துகொண்டார் சங்கரன். ஆனால் அதற்கான காரணம்தான் தெரியவில்லை. தெரிந்தாலும் அவர் இதில் என்ன செய்ய போகிறார்?

தான்‌ அவளைத் தீண்டினால் அவளுக்கு பிடித்தமில்லாமல் போகும் என அவனும், சித்தாராவை மறந்து, தன்னிடம் அவன் உண்மையாக இல்லை என்று அவளும் தவறான புரிதலிலிருக்க, இதில் சங்கரன் வந்து என்னதான் செய்துவிட முடியும்?

இரவில் பிரமோத் தூங்காமல் நட்சத்திரங்களில்லா வெற்று வானத்தைப் பார்த்தவாறு படுத்திருந்தான். மழைக்கால குளிர்ந்த காற்று காதோரம் ரகசியம் பேசி சிரித்தது. ஆனால் அதற்கு செவிமடுக்காதவன் செவிகளில், ‘நான் எங்க வீட்டுக்கு போய்டவா?’ என்ற மனைவியின் குரலே ஒலிக்க, அவளை இறுக்கி அணைத்துக்கொண்டு மனதைப் பிசையும் உணர்வினை மட்டுப்படுத்திவிட துடித்தான்.

‘ச்ச! இனி கோவப்படக் கூடாது. கால்ம் டவுன் பிரமோத்.’

            **********

 

நிவர்த்திகாவிற்கு மறுநாள் காலையில் எழும்போதே சோர்வாக இருந்தது. இன்னும் சற்றுநேரத்தில் வீட்டில் அனைவரும் கூடும் நேரத்தை எதிர்கொள்ளவே பயமாக இருந்தது.

நேற்றிரவு பிரமோத் வீட்டிற்கு வரவில்லை என்று தெரிந்தது. எப்போதும் இவள் தூங்க போகும்போது அவன் வந்திருக்க மாட்டான்தான். ஆனால் காலையில் எழும்போது கட்டிலின் மறுகோடியில் அவன் படுத்திருப்பது தெரியும். அவன் எழும்முன் இவள் குளித்து முடித்து கீழே போய்விடுவாள். மதியம் பெரும்பாலும் தாத்தா வீட்டிற்கு வந்துவிடுவார். ஸ்ரீதரன், பிரமோத் இருவரும் வெவ்வேறு இடத்திலோ அல்லது ஒன்றாக இருந்தாலோ அதற்கு தக்கபடி, மதிய சாப்பாடு வாங்க ஆட்கள் வருவார்கள்.

காஞ்சனா சரவணனுடன் வருவதாக இருந்தால் இரவு ஏழு மணியாகிவிடும். இல்லையெனில் மதியமே வந்துவிடுவார். வந்தும் ஓய்வெடுக்காமல் அமலாவுடன் வீட்டு வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வார். அதிலேயே இருவரும் மனஸ்தாபங்களின்றி எப்படி குடும்பத்தை வழிநடத்துகிறார்களென புரிந்தது. அவர்களுடனும், சில போது இரவு நேர வேலை இருந்தால் பகலில் வீட்டிலிருக்கும் பிரியாவுடனும் கழியும் இவள் பொழுது. இப்படித்தான் அவளின் திருமண வாழ்க்கை சென்றுகொண்டிருந்தது.

‘வெளியே சென்றிருப்பவன் இன்று வந்து என்ன செய்ய காத்திருக்கிறானோ!’ என்று எண்ணமிட்டபடியே மெதுவாகவே குளித்து முடித்தாள். ஏனோதானோவென்று ஒரு சுடிதாரை அணிய எடுத்தவள், நேற்று பிரமோத் இவள் உடைக் குறித்து அத்தனைபேர் மத்தியில் விமர்சித்ததில் சுறுசுறுவென கோபம் பொங்கியது. வேண்டுமென்றே தன்னிடமிருந்த ஒரே ஒரு த்ரீ ஃபோர்த் ஜீன்ஸையும் வெள்ளை நிற மேல்சட்டையையும் நேற்றைப் போலவே மெஸ்ஸிக் கொண்டையையும் அலட்சியமாக போட்டுக்கொண்டு கீழிறங்கினாள்.

இரவெல்லாம் இன்ஸ்டிடியூட்டில் இருந்த பிரமோத், காலையில் தங்கள் தென்னந்தோப்பில் குளித்துவிட்டு, அங்கே மோட்டார் அறையில் இருந்த இவன் சட்டை ஒன்றையும் தாத்தாவின் வேஷ்டியையும் அணிந்து வந்திருந்தான். அவன் டைனிங் டேபிளில் அமர்ந்து அமலா தந்த காபியை உறிஞ்சியபடி அலைப்பேசியைக் குடைந்து கொண்டிருக்க,

மற்றவர்கள் இறங்கி வந்த இவளையே இமைக்காமல் பார்க்க, அப்போது கல்லூரிக்கு ஆயத்தமாகி வந்த அரவிந்தன் சும்மா இருக்கமாட்டாமல், “ஹேய் அம்முக்குட்டி, நம்ம வீட்டுக்கு யாரோ ஒரு சினி ஆக்ட்ரெஸ் வந்திருக்காங்க பாரு. வா வா, நாம ஒரு செல்ஃபி எடுத்துக்குவோம்.” எனவும்,

அவன் குரலில் நிமிர்ந்து பார்த்த பிரமோத்திற்கு இதயம் சொன்ன பேச்சைக் கேட்காமல் ஸ்வரம் தப்பித் துடித்தது. இன்றும் மெஸ்ஸிக் கொண்டை; கழுத்தோர பேபி ஹேர்!

ஒருமுறை அதில் -என்
கன்னம் சாய வழிதந்து,
தறிக்கெட்ட என் ஆன்மாவிற்கு
கதி மோட்சம் தந்தாலென்ன?

நிவர்த்திகா தன்னவனின்புறம் சவாலான ஒரு பார்வையை வீச, அரவிந்தன் சொன்னதோடு நிற்காமல், அமுதினியைத் தூக்கிக்கொண்டு நிவர்த்திகாவின் அருகில் போய் செல்பி எடுத்தான்.

சங்கரனுக்கு இரத்தக்கொதிப்பு எகிறியது. முதல் காரணம் நிவர்த்திகாவின் உடை என்றால், அடுத்தது அரவிந்தனின் செய்கையிலும் அதற்கு அவளின் விரிந்த புன்னகை முகத்திலும், நெருப்பு பிழம்பாக உருமாறிக் கொண்டிருந்த பிரமோத். அவன் வெளிப்பார்வைக்கு அமைதியாக தெரிந்தாலும், உள்ளே வெப்ப மூச்சில் வெந்து கொண்டிருக்கிறானென புரிந்தது. இன்று என்னவாகப் போகிறதோ என்ற பதட்டத்துடன் அவர் வேடிக்கைப் பார்க்க,

பிரமோத்தை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு, “மேடம் மேடம்! ஒரேயொரு ஆட்டோகிராஃப் மேடம்…” என்ற அரவிந்தனுக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.

இவன் வேறு நிலைமை புரியாமல் விளையாடுகிறானே என்று நொந்த பெரியவர், “ஐயாவு…” என எச்சரிக்க,

அவர் குரலையும் மீறி, “டேய் அரைவிந்தா, உன்னைக் கால்விந்தா ஆக்க முந்தி ஓடிப்போய்டு!” என்றபடி விருட்டென இருக்கையில் இருந்து எழுந்தான் பிரமோத்.

இன்று இவனை இரண்டில் ஒன்று பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணத்திலிருந்த நிவர்த்திகா, “பிரமோத்!” எனக் கோபமாக அழைக்க,

சங்கரன் பிரச்சினை பெரிதாகிப் போகுமோ என அஞ்சி, இப்போதைக்கு நிவர்த்திகாவை அடக்கி வைக்க நினைத்தார். “அம்மாடி… நீங்க எல்லாம் நிறைய படிச்சவங்கம்மா. இந்தக் கிழவனுக்கு மண்ணையும் நாத்தையும் தவிர வேற ஒண்ணும் தெரியாது. ஆனா பாரும்மா, நம்ம பக்கம் புருஷனைப் பேரைச் சொல்லி கூப்பிடற பழக்கம் இல்ல… ஏன் சொல்றேன்னா…”

“ஏன் ஏன்? அதுல என்ன பிரச்சினை உங்களுக்கு?” என தாத்தாவின்முன் வந்து உள்ளங்கைக் குவித்து கேட்ட பிரமோத், “ஹே மை ஹாட் சாக்லேட் பொண்டாட்டி!” என இடக்கரம் நீட்டி அவளை இழுத்தணைத்திருந்தான்.

திடுமென வந்து தன் இடைவளைத்து நெற்றி முட்டியவனைக் கண்டு கிடுகிடுவென உடல் ஆடியது பெண்ணுக்கு. அவனின் முதல் அணைப்பு; ஒரு நொடியில் வேறு முகம் காட்டியவனின் வேகம். அதையும் அனைவரும் பார்த்துக் கொண்டிருப்பதில் உண்டான‌ லஜ்ஜை! அத்தோடு இத்தனை நாட்கள் நட்டநடு வீட்டில் தாத்தா, ஸ்ரீதரன், அரவிந்தன், அசோகன் என ஆண்களின் மத்தியில் தன்னை வார்த்தைகளால் வாட்டியெடுத்தவன், இன்று அதே நபர்கள் முன்பு சல்லாபமாய் அணைத்தால் பெண்ணவள் என்னத்திற்காவாள்?

“நீ என் பேரைச் சொல்லும் போது உள்ளுக்குள்ள என்னென்னவோ பண்ணுதுடி ஜாங்கிரி… நீ கோவமா பிரமோத்’னு கூப்பிடும் போது கூட செம கிக்க்கு யூ நோ? ப்ச், அதெல்லாம் சில மக்குக்கு புரியறதில்ல. நாங்க தான் ஓல்டுக்கு மாடலுன்னு சொல்லிட்டு திரிய வேண்டியது. சரி, அதைவிடு. இப்போ உன் லவ்வபிள் பிரமோத்’க்கு வேலை இருக்குதாம். ஸீ யூ அட் ஈவ்னிங், மை லவ் பக் (love bug)” என மீண்டும் நெற்றி முட்டி, அவளுள் ஒரு பூகம்பத்தை நிகழ்த்திவிட்டு போய்விட்டான்.

அவன் இன்றும் காலை உணவைச் சாப்பிடாமல் வெளியேறுவதைக் கூட யாரும் கண்டுகொள்ளவில்லை. அத்தனைக்கு இனிப்பாய்த் திகைத்திருந்தனர்.

அவன் விட்டதுமே மாடிக்கு ஓடிப்போக இருந்தவளை அமலா இழுத்துப் பிடித்துக்கொண்டார். “மாமா, இந்த ஐடியா வொர்க்அவுட் ஆகும் போல இருக்குது.”

“நானும் அதுதான்மா யோசிக்கறேன். இத்தனை நாள் இது தோணாம போயிடுச்சே…” என ‘யூடியூப் கேப்ஷனைப்’ போல் சொல்ல,

அரவிந்தன், “அவ்வ்… பெட் நேம் வைக்கறதுல நான் எங்கண்ணே கிட்ட டியூஷன் போகப் போறேன் தாத்தா. ஃப்யூச்சர்ல யூஸ் ஆகும்.” என சிரிக்க, இவள் முகத்தை அமலாவின் தோளில் புதைத்துக்கொண்டாள்.

அப்போது காஞ்சனா வந்தவர் என்னவெனக் கேட்க, பிரமோத்தின் செயல் அங்கே மீண்டும் ஒருமுறை கடை விரிக்கப்பட, லஜ்ஜையுற்றவள் அமலாவுடன் ஐக்கியமாவது போல் ஒட்டிக்கொண்டாள். அவர் இன்னும், பிடித்த அவள் கரத்தை விட்டிருக்கவில்லை.

“பிரமோத் இனி உன்மேல கோவமே படமாட்டான் நிவர்த்திம்மா.” -அமலா.

“ஆமா நிவர்த்தி, இந்த ப்ளான் கண்டிப்பா சக்ஸஸ் ஆகும் பாரேன்.” -பிரியா.

“இங்கே பாரும்மா, நீ செய்ய வேண்டியதெல்லாம் டெய்லி மார்னிங் தாத்தாவுக்கு பிடிக்காத எதையாவது செஞ்சிட்டு திருதிருன்னு முழிக்கறதுதான்.” -ஸ்ரீ.

“ஆமா, நாளைக்கு என்னை ‘அர்விந்த் அர்விந்த்’ன்னு ஏலம் விடுங்க.”

“பயப்படாதே நிவர்த்தி. தாத்தா உன்னைத் திட்டுற மாதிரி நடிப்பார். அப்போ பிரமோத்துக்கு உன்மேல ஒரு சாஃப்ட் கார்னர் வரும்.” -காஞ்சனா.

அவர்கள் அனைவரும் எப்போதும் பிரமோத்தை இவ்விதத்தில்தான் கையாள்வார்கள். அவனும் சில நேரங்களில் தெரியாமலும் பல நேரங்களில் தெரிந்தும், விரும்பியே அவர்கள் திட்டத்தில் சிக்கிக்கொள்வான். ஆனால் நிவர்த்திகாவிற்கு இதெல்லாம் புதிதல்லாவா?

ஆக அவள், ‘குடும்பமே லூசாடா?’ பார்வைப் பார்க்க,

அரவிந்தன் வெகு தீவிர முகபாவத்துடன், “சரியான லூசு குடும்பத்துக்கிட்ட வந்து மாட்டிக்கிட்டோமே’ன்னு பார்க்கறீங்களா அண்ணி?” என கேட்க,

“ஹான்!” என ஆமோதிப்பாய் தலையசைத்தவள் சட்டென சுதாரித்து, “ஆங்… இல்லல்ல…” என்று பதறிட, அங்கே ஓர் இனிய சிரிப்பலை பரவியது.

‘அவன் தாத்தா மேல் அல்ல; தன் மீதுதான் கோபத்தில் இருக்கிறானென இவர்களுக்கு எங்கே புரியப் போகிறது’ என்ற நினைவு இவளை அவர்கள் சிரிப்பில் கலந்துகொள்ள விடவில்லை.

வெளியே வந்த பிரமோத்திற்கு சிலிர்த்திருந்த உணர்வுகள் அடங்க வெகு நேரமானது. ‘நான் தொட்டா பிடிக்கலை இல்ல? அப்போ இனி கோவப்படாம தொட்டு தொட்டு பழி வாங்கினா என்ன?’ என தனக்குள் சிரித்துக்கொண்டவன், “ப்ச்! என்னை ரொம்ப மாத்திட்டா!” என டியூக்கிடம் புகார் செய்தான்.

தூறல் தூறும் 🌧️🌧️🌧️

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
60
+1
5
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்