அத்தியாயம் 17
வானம் அதிகாலையிலிருந்தே அழுது வடிந்து கொண்டிருந்தது. முணுக்முணுக்கென்ற தூறலில் ஆரம்பித்த மழை, இப்போது ஜோராக கொட்டிவிட நினைக்க, திருமண வீட்டிற்கு வாழ்த்த வந்தவர்களெல்லாம் மழையை வைதபடி வர, உங்களைப் போல் நானும் வாழ்த்தவே வந்தேனென்பதாக அமர்த்தலாக அமர்க்களம் செய்துகொண்டிருந்தது.
நேற்றிரவு பிரமோத் மனதளவில் முழுதாக இளகியிருந்தான். விழிகளைக் காண மறுக்கிறாளென்ற ஆற்றாமையில் இருந்தவனுக்கு அவ்விழிகள் காட்டிய காதலையும் பார்த்தபின்பு, இளகிய மனதினை இறுக்க இயலவில்லை. உல்லாசமாக இருந்த உள்ளத்திற்கு சல்லாபிக்க தோன்றியது. அந்த சின்ன பிரிவு கூட பேரவஸ்தையாய் இருக்க, கட்டுப்படுத்திக் கொள்ளவியலாமல் அர்த்தஜாமம் என்றும் பாராமல் அழைத்துவிட்டான்.
அவளும் வந்தாள்; நகைத்தாள்; தன் பேச்சிற்கு நாணமுற்றாள். திடுமென என்னவானது? இரவெல்லாம் தூங்காமல் எப்படியெல்லாமோ சிந்தித்துப் பார்த்தவன் தன் முத்தம்தான் அவளுக்கு பிடிக்கவில்லை என்ற முடிவிற்கு வந்திருந்தான்.
இதுவரை அலைப்பேசி வழியே பேச்சுத்துணையாக இருந்தவள், இன்னும் சிறிது நேரத்தில் அவன் வாழ்வின் வழித்துணையாகவும் உயிர்த்துணையாகவும் மாறப் போகிறாள். அவளுக்கு தன் முத்தம் பிடிக்கவில்லையாம். பூமியோடு இனிய போர் செய்ய வந்த மழையை ஜன்னலின் வழி பார்த்தபடி நின்றவனுக்கு ஏனோ மனம் மீண்டும் முரண்டியது.
‘இந்த திருமணம் சரியாக வருமா?’
மணமகள் அறையில் நிவர்த்திகா தன் நீண்ட தலைமுடியை, அழகுநிலையப் பெண்ணிடம் தந்துவிட்டு தேமே என அமர்ந்திருந்தாள். ஒப்பனைக்கு ஒத்துழைக்க மனம் வரவில்லை. எதிரிலிருந்த கண்ணாடியையே பார்த்திருந்தாள். அதில் அழகுச் சிற்பமாய் அமர்ந்திருந்த அவளுருவத்திற்கு பதில், சித்தாராவின் முகமருகே குனிந்த பிரமோத், திரும்பி இவளைப் பார்த்து, ‘ஃபர்ஸ்ட் டைம்’ என்று சொல்லும் காட்சியே தெரிந்தது.
அவளும் எத்தனையோ முறை விரட்டியடித்துதான் பார்க்கிறாள். அக்காட்சி மறைய மறுக்கிறது. அவன் நேற்று எதுவும் சொல்லாமல் இருந்திருந்தால் அவளும் மற்றதை மறந்து அவனோடு இழைந்திருப்பாளோ என்னவோ! ஆனால் பிரமோத் சொன்ன அந்தப் பொய் அவளை ஆட்டிப்படைத்தது. பூமியைக் குளிர்விக்க முடிந்த மழையால், பூப் பெண்ணின் மனதைக் குளிர்விக்க முடியவில்லை. அவள் மீண்டும் தனக்குள் குழம்பினாள். ‘இந்த கல்யாணம் சரியா வருமா?’
தன் தோழி முகத்தில் நேற்றைய உவகை இன்று இல்லை என்பதைக் கண்ட விஜி, நிவர்த்திகாவிடம் பேச சந்தர்ப்பம் பார்த்திருந்தாள். சுற்றிலும் உறவுப் பெண்கள், மாப்பிள்ளை வீட்டுப் பெண்கள் என்றிருக்க இவள் அருகில் என்றாலும் ஓரமாகவே இருக்க வேண்டியிருந்தது. அவ்வப்போது ஏதேனும் கேலி செய்து, கண்களில் ஜாடைக் காட்டி என நிவர்த்திகாவை சிரிக்க வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள்.
தோழியின் முயற்சி புரிந்தவளும் தன்னாலான மட்டும் புன்னகைக் கவசத்தை மாட்டிக்கொண்டாள். ஏற்கனவே நிவர்த்திகாவிற்கு உதட்டைக் கொஞ்சமாய் கோடிழுத்தாலே கன்னக்கதுப்புகள் விரிந்துகொள்ளும் பூ முகம்தான். அதனால் அகத்தின் அலைக்கழிப்பு முகத்தில் பெரிதாகத் தெரியவில்லை. அதனாலேயே அழுத்தக்காரி எனும் பெயர் பெற்றவள். ஆனால் அவளின் புன்னகைக் கண்களை எட்டவில்லை என்பது விஜிக்கு புரிந்தது.
மணப்பெண் மணமேடைக்கு அழைத்து வரப்பட, மணமகனின் முழு கவனமும் அவள்மீது மட்டுமே! நேற்று அவனை ஆலிவ் பச்சை சட்டையில் ரசித்த விழிகள் இன்று பட்டு வேஷ்டி, சட்டையில் இருந்தவனைப் பார்க்கவும் மறுத்திருந்தன. அவனுமே அவள் அணிந்திருந்த சேலையின் நிறத்திலும் ஈடுபாடு காட்டவில்லை. திருமண ஆடைகள் அனைத்தும் இரு வீட்டுப்பெண்கள் முன்னின்று எடுத்தாலும், நிவர்த்திகாவுக்கு தேர்ந்தெடுத்தது எல்லாம் இவன்தான்.
இருந்தும் இப்போது அவள் அதை அணிந்திருக்கையில் எப்படியிருக்கிறது எனப் பார்க்கவும் தோன்றவில்லை. ஒருமுறை அவள் இமை மலர்த்தினால் போதுமென்றிருந்தது. ஏனோதானோவென்று யாகத்தின் முன்னேயிருந்த ஐயர் சொன்னதைத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான்.
“ஊற வச்ச அரிசி நிறைய தின்னுட்டியா நிவர்த்தி? இந்த அடைமழைல அடங்காத மாப்பிள்ளையை அடைகாக்க முடியுமாடீ உன்னால?” என்றொரு துடுக்குப் பெண்ணின் கேலியிலும், அதற்கு வெளியே பெய்த மழைச் சப்தத்தையும் மீறி எழும்பிய உறவுகளின் ஆர்ப்பாட்டத்திலும், சஞ்சலம் மறந்து, வெட்கம் படர்ந்த முகத்தை நிமிர்த்தவேயில்லை அவள்.
‘இங்கே முத்தத்துக்கே மூக்கால அழறோமாம். இந்தம்மா அடைமழை, அடைகாக்க’ன்னு ரைமிங் பேசிட்டு இருக்குது.’ என மனதுக்குள் தாளித்த பிரமோத் கேலி செய்த பெண்மணியை முறைக்க,
“இந்த மழை இல்லைன்னாலும் எம் பேரன் மன்மதனுக்கே மஞ்சத்தண்ணி அடிச்சிப் போடுவான்ம்மோவ்!” என்று சங்கரனும் கலாட்டாவில் இணைய, பிரமோத்திற்கு எங்காவது முட்டிக்கொள்ளலாம் போலிருந்தது.
“தாத்தனுக்கு குசும்பு பாரேன்’டி… எங்கப் பொண்ணு இருக்க அழகுக்கு உம்ம பேரனுக்கு மழையெல்லாம் தேவையில்லைதான் தாத்தா.”
“என் பேரன் மட்டும் என்ன அழகுல குறைஞ்சவனா? கதாநாயகன் கணக்கா அவன் வண்டில போகும்போது அந்த மன்மதனே என் பேரன்கிட்ட பிச்சை வாங்கணுமாக்கும்.”
‘இப்டி உசுப்பேத்தி உசுப்பேத்தியே என் மனசை ரணகளாமாக்குது இந்த சங்கர்.’
அதற்குள் அங்கு வந்த வசந்த் ஏதோ சொல்ல, பாலா அவனுக்கு பதிலடி கொடுக்க, அவர்களைக் கவனிக்காமல், தன்னருகே அமர்ந்திருந்தவளை யாருமறியாமல் சாதாரணமாக அழைத்தான். “நிவர்த்திகா.”
“என்னங்க?” என்றவளின் ஜடையலங்கரமும் கழுத்திலிருந்த மாலையின் கனமும் தந்த இடைஞ்சலால் தலையை மட்டும் அவன்புறம் சாய்க்க, அவன் பார்வைக்கு அவளின் நெற்றிச் சுட்டியும் அதன் மேற்புறத்திலிருந்த சந்திர, சூரிய பிறைகளும்தான் தெரிந்தது.
ஆனாலும் பிடிவாதமாய்க் கேட்க நினைத்ததைக் கேட்டான். “நிஜமா உனக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டமா?”
ஏற்கனவே மனம் சரியில்லாத நிலையில் மணமேடையில் வைத்துக் கேட்கப்பட்ட அவனின் பிசுபிசுத்த கேள்வி சுறுசுறுவென்ற கோபத்தைக் கிளப்பியது. கழுத்து வலியோடு நிமிர்ந்து அவனை உஷ்ணமாய் முறைக்க, அவன் அதனைக் காண்பதற்குள்,
அவனருகே நின்றிருந்த பாலா, நண்பனின் தோளைத் தட்டி, “கல்யாணம் முடிஞ்சதும் காலம் பூரா பேசிக்கிட்டே இரு மச்சான். இப்போ தாலியை வாங்கிக் கட்டு.” எனவும், நண்பர்கள், உறவினர்களின் ஆர்ப்பரிப்பும் கெட்டிமேளச் சத்தமும் மண்டபத்தை அதிரச் செய்ய, ஐயர் நீட்டிய மங்கலநாண் பூட்டிய தங்கச்சங்கிலியை வாங்கி நிவர்த்திகாவின் கழுத்தில் அணிவித்தான் பிரமோத்.
அவள் கழுத்தில் மங்கள நாண் சூட்டும் பொழுதும், அவள் தலையைச் சுற்றி உச்சி வகிட்டில் குங்குமம் வைக்கும் பொழுதும் பார்த்தான். அவளின் அகன்ற இமைகள் அப்போதும் இப்போதும் தாழ்ந்தேயிருந்தன. அத்தனைப்பேர் செய்த கலாட்டாவில் கலந்துகொண்டு புன்னகை முகமாகவேதான் இருக்கிறாள். ஆனால் தன் முகத்தை மட்டும் பார்க்கவே இல்லை. ஏனோ அதனை சாதாரண நிகழ்வாக எண்ணி அவனால் கடக்க முடியவில்லை. ஆழ்ந்த செறிவுடையவர்கள் விருப்பமான விடயங்களில் அப்படித்தான் இருப்பார்களோ என்னவோ! ஆக, அப்போதைக்கு பல்லைக் கடிப்பதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை அவனால்.
ஐயர், சாரலடிக்கும் வாசலருகே அழைத்துச் சென்று மழை வானத்தைச் சுட்டிக்காட்டி, ‘அருந்ததி நட்சத்திரம் தெரிகிறதா என்று உன் ஆம்படையாளைக் கேள்!’ என்று அவனையும், ‘தெரிகிறதென்று சொல்லவேணும்’ என்று இவளையும் சொல்ல, உறவினர்கள் அனைவர் முகமும் சிரிப்பில் பொங்க,
சற்றே அவள்புறம் குனிந்தவன், “அங்கே அருந்ததி நட்சத்திரம் தெரியுதா?’ன்னு நான் கேட்பேன். எனக்கு பிரமோத்தைத் தவிர வேற ஒண்ணும் தெரியல’ன்னு நீ சொல்லணும். என்ன?” எனவும், அவன் எதிர்பார்த்தைப் போலவே அவனை விழி மலர்த்திப் பார்த்தவள், கூடுதலாக அழகான வெட்கப் புன்னகை வேறு பூத்தாள்.
உறவினர்களின் ‘ஹோ’வென்ற கூச்சலிலும், பாலாவின், “டேய் டேய் பொண்டாட்டிக்கு பிராக்கெட் போடற மொதோ ஆள் நீதான்டா.” என்ற கேலியிலும் தன் பிரத்யேகமான மிதப்பு பார்வையில் சிரித்தான் பிரமோத். ஒவ்வொரு சின்னஞ்சிறு அழகிய தருணங்களையும், அழகியல் மாறாமல் தங்கள் பெட்டிக்குள் அடக்கிக் கொண்டனர் புகைப்படக் குழுவினர்.
மேடையில் சிறிது கூட்டம் கலைந்ததும், யாரோ ஒரு உறவினரிடம் பிரமோத் பேசிவிட்டுத் திரும்ப, விஜி நிவர்த்திகாவிடம் ஏதோ கேட்டபதும், அதற்கு அவள், “பயமா இருக்குது விஜி.” என்பதும்,
விஜி ஒப்பனையை சீராக்கும் பாவனையில், “முதல்ல கண்ணைத் துடை! யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க? தாலி கட்டினதுக்கப்புறம் என்ன பயம் உனக்கு?” என அதட்டுவதும் தெரிந்தது.
நிவர்த்திகாவின் இனிய மென்குரலில் அப்படியோர் பரிதவிப்பு! பிரமோத் அவளோடு அலைப்பேசியில் பேசிய தருணங்களையெல்லாம் நினைத்துப் பார்த்தான். ஆரம்பநிலை தவிர்த்து எப்போதும் இவனிடம் சிரித்து கண்களைப் பார்த்தேதான் பேசியிருக்கிறாள். தன்னை அவளுக்கு மிக மிகப் பிடித்தேயிருக்கிறது என்பதும் இவனுக்கு நிச்சயம்!
ஆக, நேற்று முத்தமிட்டதுதான் பிடிக்கவில்லை. சரி, ஒரு ஆடவனுடனான திருமணம் என்பது வாழ்வின் சுக, துக்கங்களிலிருந்து அனைத்தையும் பகிர்ந்து கொள்ளுதல் என்றும், அந்த அனைத்திலும் ‘முத்தம் முதல் மொத்தமும்’ அடக்கம் என்பதும் தெரியாத பச்சைப் பாப்பாவா என்ன? தெரிந்துதானே இவ்வளவுதூரம் வந்திருக்கிறாள்? பிறகென்ன பயம் என்று கண்ணைக் கசக்குகிறாள்?
அவளைக் கன்னம் கன்னமாய் அப்பி, ‘உனக்கு என்ன தான்’டி பிரச்சினை?’ என்று கேட்கும் வேகத்தை முயன்று தன்னுள் அடக்கிக்கொண்டான். தாலி கட்டிய, தான் அருகில் இருக்க ஆறுதலுக்காக வேறொருத்தியை நாடுகிறாள் இவள்! இடியட்!
பொறாமையாம். கோபமெனும் பெரும் ஈட்டி அவள்மேல் பாய தருணம் பார்த்திருந்தது.
புகைப்படக்காரரின் ஆணைக்கேற்ப, மனதை மறைப்பதைக் கைவரப் பெற்றிருந்தவள் சரியாக ஒத்துழைக்க, அன்று அவரைப் பெரும் சோதனைக்குள்ளாக்கியது பிரமோத் தான். “அண்ணே, கொஞ்சம் ஸ்மைல்…” என ஒவ்வொரு புகைப்படத்திற்கும் கெஞ்ச வைத்தான்.
நேற்றிரவு தூங்காதது, அதிகாலையிலிருந்தே ஆரம்பித்த கல்யாண பரபரப்பு, அதைத் தொடர்ந்த சடங்கு, சம்பிரதாயங்கள், பெண்வீடு, மாப்பிள்ளை வீடு என அலைந்தது எல்லாம் சேர்ந்து மதியம் பெண் வீட்டிற்கு வரும்போது இருவருமே களைத்திருந்தனர்.
நிவர்த்திகாவின் வீட்டில் இருந்தது இரண்டே படுக்கையறைகள். ஆர்த்தி இருந்தபோது பெண்கள் இருவரும் ஒரு அறையிலும் பெற்றோர் ஒரு அறையிலும் இருக்க, ஆர்த்தியின் திருமணத்தின் பின் அது நிவர்த்தியின் அறை என்றானது. இப்போது அங்கே பிரமோத் ஓய்வெடுக்க, அடுத்த அறையில் நிவர்த்திகா மற்றும் சில உறவினர்கள்.
அநேகம் பேர் உள்ளூர், விருதுநகர், சிவகாசி மற்றும் அவைகளைச் சுற்றியுள்ள சின்ன ஊர்கள் என்பதால் திருமணம் முடிந்ததுமே கிளம்பியிருந்தார்கள். அதனால் பெரிதான இடப்பற்றாக்குறை இருக்கவில்லை. இருந்தும் நிவர்த்திகாவிற்கு தனிமையும் கிடைத்தபாடில்லை. ஆக பிரமோத்தை விட அவள் பாடுதான் திண்டாட்டம்.
ஆர்த்திதான் உறவினர்களிடமிருந்து தங்கையைக் காப்பாற்றினாள். “அத்தை, பின்னாடி வீட்டுல இருக்க பொன்மணி பெரியம்மா உங்களைக் கூப்பிட்டாக. ஏ பிள்ள வைசூ, கிருத்தி… எல்லாரும் அங்கே போய் ரெஸ்ட் எடுங்க.”
அவர்கள் இடத்தைக் காலி செய்ததும், “தாங்க்ஸ்கா.” என்ற நிவர்த்திகா சற்றே கண்ணயர, கனவில் இவளை முத்தமிட வந்த பிரமோத், ‘ஃபர்ஸ்ட் டைம். அட்ஜஸ்ட் பண்ணிக்கோ.’ என்றதில் பதறியடித்து எழுந்தமர்ந்தாள்.
இரவில் அறையின் குறுக்கே நடந்து கொண்டிருந்தான் பிரமோத். சிந்தனையில் அவனவள் என்று சொல்லவும் வேண்டுமோ?
அவளின் விழிகளுக்குத்தான் என்ன ஒரு மகிமை! தன்னை இப்படி ஆட்டி வைக்கிறதே! அவைகள் விரிந்தால் தன் முகம் விரிவதும், அவைகள் கவிழ்ந்தால் தன் மனம் கவிழ்வதும்… என்ன அவஸ்தையடா சாமி!
பேசாமல் சரிதான் போடி என்றுவிட்டு போய்விடலாமா? அப்படி போய்விட தன்னால் முடியுமா? அழகாக வேறு இருந்து தொலைக்கிறாளே… அய்யகோ! முத்தத்திற்கே முகத்தைத் திருப்பிக்கொள்பவள், மற்றதற்கு தன்னை முற்றும் துறந்த முனிவராக்கி விடுவாள் போலவே…
எல்லாம் இந்த சங்கரால் வந்தது. நானும் என் டியூக்கும் எனச் சுற்றிக்கொண்டிருந்தேன். என் மனதையும் கலைத்து, சொந்தம் விட்டுப் போகக்கூடாது என்ற பெயரில் என் அப்பாவையும் ஏமாற்றி, வேண்டுமென்றே என்னைப் பற்றி எல்லாம் தெரிந்த ஒருத்தியை பார்த்து முடித்திருக்கிறார். அவளானால் முத்தம் தந்ததற்கே முகம் பார்க்க மறுக்கிறாள்; பயம் என்று அழுகிறாள்.
தான் முட்டாளாக்கப்பட்டு விட்டோம். அவர் நினைத்ததைப் போலவே தன்னைப் பழிவாங்கிவிட்டார் என்று கோபம் மொத்தமும் தாத்தாவின்புறம் திரும்பியது. ‘சங்கர்ர்… அவளை வைத்தே உமக்கு பதிலடி கொடுக்கிறேன், இரும் ஐயா!’
அளவுக்கதிகமாக கேலி செய்து கடுப்பைக் கிளப்பிய உறவுப்பெண்களை விரட்டியடித்துவிட்டு, தங்கையைத் தானே அலங்கரித்தாள் ஆர்த்திகா.
அவளும் இந்தக் கொடுமையெல்லாம் அனுபவித்திருக்கிறாளே!
“ரிலேட்டிவ்ஸ் அப்டித்தான் இருப்பாங்க நிவர்த்தி. நீ டென்ஷன் ஆகாதே.” என்றவள் தங்கையின் மனதை சமன்செய்யும் பொருட்டு, இந்நிலையில் அவள் எப்படி பயந்தாள் என்றும், பின்னர் வசந்த்துடன் பழகியபின், அவனன்றி வேறெதுவும் பெரிதாக தெரியவில்லை என்றும், உனக்கும் பிரமோத் அப்படித்தான் இருப்பார் என்றெல்லாம் தைரியம் சொல்லி அவளை அறைக்குள் விட்டுச்சென்றாள்.
பிரமோத் காலையில் அருந்ததி நட்சத்திரம் பார்க்கும்போது செய்த கலாட்டாவில் நிவர்த்திகாவின் மனம் அதுவரையிருந்த சஞ்சலத்தை மறந்ததென்னவோ நிஜம். அதனாலேயே அப்போது அவன் முகம் பார்த்து புன்னகைக்க முடிந்தது. ஒரே மனிதனின் அண்மை ஒருமுறை சில்லென்ற சாரலையும், மறுமுறை சித்ரவதையான சஞ்சலத்தையும் தர முடியுமா என மலைத்துப் போயிருந்தாள்.
மேலும், சித்தாராவிற்கு திருமணமாகிவிட்டது. பிரமோத்தும் அவளை நினைக்கவில்லை. தன்னிடம் ஒரு தோழனைப் போல் நன்றாகவே பேசுகிறான். அடிக்கடி கணவன் பார்வையும் பார்க்கிறான். தன்னைப் பிடித்துதான் திருமணம் செய்திருக்கிறான். ஆக இனி அவர்களின் பழையக் காதலை(?) நினைத்து வருந்தக்கூடாது. மனமுவந்து மகிழ்ச்சியுடன் பிரமோத்துடனான வாழ்வை ஆரம்பிக்கவேண்டும் என்றும், விஜியின் அறிவுரையிலும் அவன்மேல் கொண்ட காதலிலும் முயன்று பழையதை மறந்துவிட்டு, மனதைத் தயார்படுத்திக் கொண்டுதான் வந்திருந்தாள் நிவர்த்திகா.
உள்ளே வந்தவளைக் கண்டு நடந்துகொண்டிருந்தவனின் கால்கள் நின்றன. இளமஞ்சள் ஜார்ஜெட் சேலையில் அப்போதே அள்ளிக்கொள்ளலாம் போலிருந்தாள் அவன் மனைவி.
வாட்ஸ்ஆப்பில் டெலிட் செய்யப்பட்ட சேதி அழிந்துப் போய், ‘மெசேஜ் டெலிடட்’ என்று காட்டிக் கொடுப்பதைப் போல், அவளருகே போனால், எங்கே அவள் மேலுள்ள கோபமனைத்தும் அழிந்துப் போய் ‘நீ கோபம் கொண்டாய்’ என்ற நினைப்பை மட்டும் இந்த மூளை சேமித்துக் கொள்ளுமோ என்றஞ்சினான் பிரமோத். தன் மனமே தன்னை எள்ளல் செய்வதாக தோன்றியது. முயன்று தன்னைச் சமன்செய்து கொண்டான்.
நிவர்த்திகா அவனைக் கண்டு புன்னகைக்க முயன்றாள். அந்தப் புன்னகை முகத்தாளுக்கு அப்போது அது பிரம்ம பிரயத்தனமாக இருந்தது. ஓர் இனிய படபடப்பில் நெஞ்சம் விம்மியது.
“வா!”
வந்தாள். கையிலிருந்ததை அவனிடம் நீட்டினாள். “இது…”
“எனக்கு வெறுமனே பாலைக் குடிக்க பிடிக்காது.”
அது உண்மையும் கூட! ப்ரூ, பூஸ்ட், ஹார்லிக்ஸ், இல்லையெனில் அமலா சித்தி தரும் ஃபில்டர் காபிதான் பிரமோத்தின் பிடித்தங்கள்.
“அத்தை சொன்னாங்க. ஆனா இது சம்பிரதாயம்னு…”
“நாம சம்பிரதாயத்துக்காக எதுவும் செய்ய வேணாம்.” ஏதோ ஒரு மறைபொருளுடன் பேசுகிறானோ? நன்றாக விழியுயர்த்தி கேள்வியாகப் பார்த்தாள்.
அவனின் வெற்றுப் பார்வையில் இவளுக்கொன்றும் புரியவில்லை. சரியென தலையாட்டிவிட்டு ஓரமாக இருந்த டீப்பாயில் பால் சொம்பை வைக்கப் போக,
“எனக்காக நீ பார்க்க வேணாம். உனக்கு பிடிச்சதை நீ செய்யலாம்.” எனவும், மீண்டும் ஏதோ பொடி வைத்துப் பேசுகிறானென இவள் புருவம் நெளித்துப் பார்த்தாள்.
அத்தனை நேரம் அமைதியாக பேசிக்கொண்டிருந்தவன் பட்டென வெடித்தான். “இப்டி பார்த்து பார்த்து மனுஷனைக் கிளப்பிவிட வேண்டியது… அப்புறம் மூஞ்சியை ஏழு முழத்துக்குத் தூக்கி வச்சிக்கிட்டு ‘பயமா இருக்குது விஜி’ன்னு உருட்ட வேண்டியது. உங்க கண்ணு உங்க உருட்டா டோலி?”
‘அய்யோ! விஜியிடம் பேசியதைக் கேட்டுவிட்டானா? அதனால்தான் இத்தனைக் கோபமா? இதை எப்படி சரிசெய்வது?’
“பிரமோத்…”
“எத்தனைவாட்டி கேட்டேன் பிடிச்சிருக்கா பிடிச்சிருக்கான்னு? அப்போல்லாம் ஊமைக்கோட்டான் மாதிரி இருந்துட்டு இப்ப என்னடி பயம் உனக்கு? ஹான்?”
“பிரமோத், ப்ளீஸ் கத்தாதீங்க. வெளியே எல்லாருக்கும் கேட்கும்.” என்றாள் இறைஞ்சலாக. அது அரண்மனையோ, கதைகளில், சினிமாக்களில் வரும் பங்களாவோ இல்லையே! நிவர்த்திகாவின் இரண்டே அறைகள் கொண்ட வீடு.
நேற்றிரவு அவள் தன் முகம் பாராமல் ஓடிப்போனதும், இன்று காலை விஜியிடம் அழுததும், அதனால் விழைந்த கடுகடுப்பு தற்போது தன் புத்தம்புது மனைவியை அணைக்க தடுப்பதும் என கலவையான, கடுமையான மனநிலையில் இருந்தான் பிரமோத்.
இப்போது பேசினால் அவளைக் காயப்படுத்திவிடுவது நிச்சயம். தனக்குமே சற்று நேரம் தேவை என்பதெல்லாம் புரிந்தாலும், ஏமாற்றத்தை விழுங்கிவிட்டு நல்லவனாகவும் இருக்க முடியவில்லை. “அப்போ ஆரம்பிக்கலாமா?” என அலங்கரிக்கப்பட்டிருந்த மெத்தையைக் கண்களால் காட்டிக் கேட்க, மிரட்சியை வெளிப்படுத்தின இவள் விழிகள்.
புரிதலோடும் மகிழ்வோடும் காதலுடனும் ஆரம்பிக்க வேண்டிய நிகழ்வைக் கழுத்தை நெறிப்பதைப் போல் கேட்டதில் வந்த மிரட்சி அது! இருந்தும் சரியென தலையாட்டினாள்.
“காலைல பயம்னு உன் ஃப்ரெண்ட்கிட்ட போய் அழுவியா?” அமைதியாக தான் கேட்டானென்றாலும், அதில் மறைந்திருந்த ஆத்திரம் நன்றாகவே தாக்கியது அவளை!
தான் விளக்கம் சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம் எனப் புரிந்தவளுக்கு அவனின் கோப முகத்தைப் பார்க்கவே பயமாக இருந்தது. தனக்குள் எழுந்த பதற்றத்தை மறைத்து, புன்னகைக்க முயன்றபடி சொன்னாள். “நான் பயந்தது… நீங்க… அது ஃபர்ஸ்ட் டைம்ன்னு…”
நேற்றிரவு, தான் சொன்னது அவனுக்கு நினைவில்லை. “எது? கல்யாணமா?”
நல்லவேளை அவனே காரணத்தை எடுத்துக் கொடுத்துவிட்டான் என்று நினைத்து, “ஆங்? ஆஆமா!” என்று தலையாட்டி வைத்தாள்.
“ஃபர்ஸ்ட் டைம் கல்யாணம் பண்றதால பயமா இருக்குதா?”
“ம்ம்!”
மெதுவாக அவளை நெருங்கி நின்றவன், “ஊர்ல இருக்கவனெல்லாம் ஏழெட்டு பண்ணிக்கறான், என்ன?” எனக் கேட்க,
“ம்ம்!” என்றவள், படக்கென சுதாரித்துக்கொண்டு, “பிரமோத்…” என்றாள் அழுதுவிடும் சிறுமியாக!
சில நொடிகள் அவள் கண்களையே பார்த்திருந்தான். காதலோ கலக்கமோ, பாசமோ பதட்டமோ… எந்நிலையிலும் அவைகள் இவனை ஈர்க்கவே செய்தன. இன்னும் நெருங்கி அவைகளில் முத்தமிட்டான். “இந்த கண்ணு நீ பொய் சொல்ற’ன்னு சொல்லுது. வாழ்க்கையைப் பொய்ல ஆரம்பிக்க நான் விரும்பல.”
அவள் ஏதேனும் மறுத்து சொல்லுவாள் என அவனின் இளமை எதிர்பார்த்தது. ஆனால் அவள் முகத்தில், சிறு மூச்சுக்காற்றில் நிம்மதியுணர்வைக் கண்டதும் வெறித்தனமான கோபம் வர, தன் மீதே நம்பிக்கையில்லாதவன் விருட்டென அங்கிருந்து வெறியேறப் போனான்.
வேகமாக வந்து அவன் கைப்பிடித்து, “மழை பெய்யுது. இப்போ வெளியே போக வேண்டாமே…” என்றாள் அதே இறைஞ்சல் பார்வையோடு!
மழையடிப்பதோடு, வீட்டினர் மட்டுமல்லாது, அது சின்ன ஊர் என்பதால் இன்றைய புது மாப்பிள்ளை வெளியே சுற்றுவது கண்டு, யாரும் ஏதேனும் சந்தேகத்தைக் கிளப்பக்கூடும். ஆனால் அதைப் பற்றியெல்லாம் சிந்தியாது, தன்னைப் பிடித்திருந்த அவள் கரத்தையே பார்த்தான்.
அவளும் மெதுவாக விட்டுவிட்டு, “நான் உங்களைத் தொந்தரவு பண்ணமாட்டேன். இங்கேயே தூங்கலாம்.” எனவும்,
அதற்கும் முகங்கடுத்து ஏதோ சொல்ல வந்து, பின் தன்னையே கட்டுப்படுத்திக் கொண்டவனாக, அவளைக் கூர்மையான பார்வையால் அளந்துவிட்டு, திரும்பிப் பாராமல் போய் படுத்துக்கொண்டான்.
நிர்மானுஷ்யமான இடத்தில் நிற்கதியாக நிற்பதாக உணர்ந்தாள், நிவர்த்திகா! மழையும் மங்கையும் தனிமைக்கு மௌனக் கண்ணீர் வார்த்தனர்.
தூறல் தூறும் 🌧️🌧️ 🌧️